வில்லியம் கெல்லி- கலைஞனும் காலமும்

இலக்கியம் என்பது காலத்துடன் தொடர்புபடுத்தப்பட ஒரு காரணம் இருக்கிறது. உலகெங்கும் வரலாற்றினூடே படைக்கப்பட்ட இலக்கியத்தில் ஒரு கையளவு மட்டுமே நமக்கு வாசிக்கக் கிடைக்கிறது. சென்ற நூற்றாண்டில் படைக்கப்பட்ட இலக்கியத்தில் காலம் செல்லச் செல்ல பல படைப்புகள் மறக்கப்படும், பல நூற்றாண்டுகளுக்குப் பின் எத்தனை எஞ்சும் என்பதைச் சொல்வதற்கில்லை. ஒரு படைப்பு உருவாகும்போதே அதன் மறைவும் ஒரு நிழலாய் வளர்கிறது. எனவே எழுத்தாளர்களுக்கு காலம் கடந்து நிற்கும் படைப்பை உருவாக்குவதிலும் விமரிசகர்களுக்கு அப்படிப்பட்ட ஒரு படைப்பை அடையாளம் காண்பதிலும் ஒரு தீவிரமான நாட்டம் இருப்பது இயற்கையானதே. ஆனால், அப்படிப்பட்ட ஒரு படைப்பு தன் காலத்தில் படைக்கப்பட்ட பிற அத்தனை படைப்புகளைவிடவும் உண்மையானதாகவோ கலையம்சம் கொண்டதாகவோ புதுமையானதாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. நினைவில் கொள்ளப்படும் படைப்புகளைவிடச் சிறந்த படைப்புகள் பல வெகு விரைவில் மறக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. எழுத்தாளர்களும் இந்த விதியைத் தப்ப முடியாது.

அண்மையில் நியூ யார்க்கரில் காதரீன் ஷுல்ஸ் (Kathryn Schulz), வில்லியம் கெல்லி (William Kelley) என்ற மறக்கப்பட்ட எழுத்தாளர் பற்றி மிக அருமையான ஒரு கட்டுரை எழுதியுள்ளார் – “தொலைந்து போன அமெரிக்க இலக்கிய பேராளுமை” (The Lost Giant of American Literature) https://www.newyorker.com/magazine/2018/01/29/the-lost-giant-of-american-literature.

இந்தக் கட்டுரை அவர் எழுதியதை அடிப்படையாய்க் கொண்டது. தமிழுக்கு அந்நியமானவை பல நீக்கப்பட்டிருக்கின்றன, குறைந்தபட்ச குறிப்புரைகளே இணைக்கப்பட்டிருக்கின்றன.

ஆப்பிரிக்க அமெரிக்கரான வில்லியம் கெல்லியின் முதல் நாவல், ‘எ டிஃபரண்ட் ட்ரம்மர்மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. அதை எழுதும்போது அவரது வயது இருபத்து நான்கு. வில்லியம் ஃபாக்னர், ஐசக் பெஷவிஸ் சிங்கர், ஜேம்ஸ் பால்ட்வின் என்று மிகப்பெரும் எழுத்தாளர்கள் பலருடன் அவர் ஒப்பிடப்பட்டார். அவரது தலைமுறையின் மிகச் சிறந்த ஆப்பிரிக்க அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவர் என்றும்கூட கருதப்பட்டார்.

வில்லியம் கெல்லி ஒரு நிறுவன அமைப்பொன்றை உருவாக்கியவர். அதன் நோக்கம், வெண்ணிறம் குறித்து ஆய்வு செய்தல். அமெரிக்காவில் வெள்ளையராய் வாழ்வதன் இயல்பு என்ன, வெள்ளையர் ஆதிக்கத்தில் வாழ்வது அமெரிக்கர்கள் அனைவரையும் எப்படி பாதிக்கிறது, கலாசார பரிமாற்றங்களின் அன்றாட வெளிப்பாடுகளை உணரவும் உணர்த்தவும் முயன்றார்.

எ டிஃபரண்ட் ட்ரம்மர்என்ற முதல் நாவல் அமெரிக்காவின் தென் பகுதியில் நியூ மார்சாய்ல்ஸ் என்ற கற்பனை மாகாணத்தைக் களமாய்க் கொண்டு, 1957ல் நிகழ்கிறது. அதன் நாயகன், டக்கர் காலிபான் என்ற ஆப்பிரிக்க அமெரிக்க விவசாயி, தன் விளைநிலம் எங்கும்  உப்பு வீசிவிட்டு, குதிரையையும் மாட்டையும் வெட்டிப் போட்டுவிட்டு, தன் வீட்டை எரித்துவிட்டு, தன்  மாகாணத்தை விட்டு வெளியேறுகிறான்.  அந்த மாகாணத்தில் உள்ள ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் அத்தனை பேரும் அவனைப் பின்தொடர்ந்து வெளியேறுகிறார்கள்.

இந்தக் கதை ஒரு வெள்ளையனால் சொல்லப்படுகிறது. கதையின் துவக்கத்தில், ஆப்பிரிக்கன் என்று அழைக்கப்படும் ஒரு ராட்சத மனிதன், அடிமைக் கப்பலில் வந்திறங்குகிறான். அவன் கையில் ஒரு குழந்தை இருக்கிறது. அவன் கட்டி வைக்கப்பட்டிருக்கும் சங்கிலியை இருபது பேர் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் நகருக்குள் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறான். அடிமையான அடுத்த கணமே அவன் தன்னைக் கைப்பற்றியவர்களை தான் பூட்டப்பட்டிருக்கும்  சங்கிலிகளைச் சுழற்றி வீழ்த்துகிறான், அவனை ஏலமிடட்வனைச் சிரச்சேதம் செய்கிறான் (அந்தத் தலை ஒரு பீரங்கிக் குண்டு போல் கால் மைல் காற்றில் பறந்தது, இன்னொரு கால் மைல் தரையில் குதித்தோடி, யாரோ ஒருவன் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு குதிரையின் காலில் மோதி அதை ஊனமாக்கி நின்றது, என்று இது விவரிக்கப்படுகிறது). “ஒரு பெண் தன் பாவாடையை உயர்த்துவது போல்,” சங்கிலியை வாரிச் சுருட்டிக் கொண்டு அவன் அருகில் உள்ள ஒரு சதுப்புக் காட்டுக்குள் ஓடுகிறான். அங்கிருந்து பிற அடிமைகளை மீட்க போர் தொடுக்கிறான். இறுதியில் அவன் காட்டிக் கொடுக்கப்படுகிறான். அவனை விலைக்கு வாங்கியவன் ஆப்பிரிக்கனைச் சுட்டுக் கொன்று, அவனது குழந்தையை எடுத்துக் கொள்கிறான்: அவன்தான் டக்கர் காலிபானின் தாத்தாவின் அப்பா அது.

காலிபான் ஏன் அப்படி நடந்து கொள்கிறான் என்ற கேள்வி வெள்ளையர்களிடையே எழுகிறது. அவனுள் ஓடிய ஆப்பிரிக்க ரத்தத்தின் கொந்தளிப்பு காரணமாக்கப்படுகிறது. அவனைத் தொடர்ந்து ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வெளியேறுவதன் காரணம் தேடுகிறார்கள், அதன் பின்விளைவுகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்கிறார்கள். மக்கள் தொகை மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்ட நிலையில், கூலித் தொகை அதிகரிக்குமா குறையுமா என்று சிலர் விவாதிக்கிறார்கள். வேறு சிலர், “எங்களுக்கு அவர்கள் தேவையில்லை, அவர்களை நாங்கள் வரச் சொல்லவில்லை, அவர்கள் இல்லமால் நன்றாகவே இருப்போம்,” என்று அந்த மாநில ஆளுநர் சொல்வதை ஆமோதிக்கின்றனர். வேறு சிலர் தமக்கு துரோகம் இழைக்கப்பட்டது போல் உணர்கிறார்கள். ஏதோ ஒரு சமூக ஒப்பந்தம் மீறப்பட்டு விட்டது என்ற உணர்வு அவர்களுக்கு இருக்கிறது, அதை உன்னி வாசிக்காத காரணத்தால் அவர்களால் அது குறித்து பேச முடிவதில்லை.

இது குறித்து எழுதும் காதரீன் ஷுல்ஸ், இது மிக அருமையாக எழுதப்பட்ட நாவல். இருபத்து நான்கு வயதிலேயே கெல்லி குறிப்பிட்டுச் சொல்லத்தக்க தன்னம்பிக்கையுடன், ஃபிளானரி ஓகானரை நினைவுபடுத்தும் நகைச்சுவையுணர்வு கொண்டிருந்தார் என்று எழுதுகிறார். அவர் கூர்ந்து நோக்குபவர். அவரது கதை, ஒரு தொன்மத்தின் பரிமாணங்கள் கொண்டிருந்தாலும், அவரது வாக்கியங்கள் நிஜ வாழ்க்கையிலிருந்து எடுத்தது போன்ற உண்மை உணர்வு அளித்தது. இந்த நாவலை எழுதியபின் மேலும் நான்கு நாவல்களை எழுதியிருந்தாலும் அவர் மறக்கப்பட்டு விட்டார்.

இந்த நாவலுக்கு அடுத்து ஒரு சிறுகதை தொகுப்பையும்எ ட்ராப் ஆஃப் பேஷன்ஸ்என்ற நாவலையும் எழுதிய கெல்லியை அமெரிக்காவில் நிலவும் இனவாதம் தொல்லை செய்கிறது. அவர் தன் மனைவியுடன் ரோம் சென்று வாழ்கிறார். அடுத்த ஆண்டு அமெரிக்கா திரும்பியதும் குழந்தை பிறக்கிறது, மால்கம் எக்ஸ் கொலை செய்யப்படுகிறார். அதன் வழக்கு விசாரணையில் நிலவும் அநீதி அவரை அருவெருக்கச் செய்கிறது. பாரிஸில் சில காலம் வாழ்ந்தபின் (இங்கு அவர்களுக்கு ஒரு பெண்ணும் பிறக்கிறது), ஜமைக்கா செல்கிறார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் இவர்கள் அங்கு வாழ்கின்றனர். அங்குதான் அவர் யூத மதம் தழுவுகிறார், அடுத்த இரு நாவல்களை எழுதி முடிக்கிறார்.

அவரது மூன்றாவது நாவலானடெம்’, பேச்சு வழக்கை அப்படியே கைப்பற்ற முயற்சி செய்கிறது. இந்த நாவலில் மிட்சல் பியர்ஸ் என்ற வெள்ளையருக்கு தன் வேலை, கருத்தரித்திருக்கும் மனைவில், தன்னைப் பற்றிய மதிப்பீடு, யதார்த்தம் என்று எல்லாமே வெறுத்துப் போகிறது. இப்படிப்பட்ட ஒரு கதை செயல்களால் அல்லது செயலின்மையில் விரிகிறது. நாவலின் துவக்கத்தில் அவனுக்கு காலில் காயம் பட்டு அவன் படுத்த படுக்கையாய் இருக்க நேர்கிறது, அப்போது தொலைக்காட்சி தொடர்களுக்கு அடிமையாகும் அவன், அதன் நாயகிகளில் ஒருத்தியின் மீது காதல் வயப்படுகிறான். காதரீன் ஷுல்ஸ் இந்த இடத்தில் ஒரு அருமையான தரிசனத்தை அளிக்கிறார்மெலோடிராமா என்பது விழுமியங்களின் இடத்தில் உணர்வுகளை இருத்துகிறது, அதிக விலை தந்து பெறக்கூடிய அனுபவத்தின் இடத்தில் மலின த்ரில்களை அளிக்கிறது, யதார்த்தத்தின் இடத்தில் அதன் போலியைக் கட்டமைக்கிறது. தன் ஆதர்ச நடிகையைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது இந்நாவலின் நாயகனால் அவள் தான் ஆராதித்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி தொடர் பாத்திரமல்ல என்பதை உணர்வதில்லை, அது போதாதென்று, சந்தர்ப்பம் கிடைத்தபோதிலும்,  அவளோடு உடலுறவு கொள்ளும் வாய்ப்பைத் தவற விடுகிறான்.

இப்படிப்பட்ட ஒரு உருப்படாத கள்ள உறவில் இருக்கிறான் மிட்சல் என்றால் அவன் மனைவியோ கறுப்பர் ஒருவருடன் வெற்றிகரமாக உறவு கொள்கிறாள். நாவலின் துவக்கத்திலேயே அவள் இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரித்திருக்கிறாள்அவற்றில் ஒன்று கணவனுக்குப் பிறந்தது, மற்றொன்று கள்ளக் காதலனுக்குப் பிறந்தது. இந்த செய்தி கிடைத்ததும் கறுப்புத் தோல் கொண்ட குழந்தையைக் கொண்டு செல்ல தன் சக தகப்பனைத் தேடிச் செல்கிறான் மிட்சல்.  இதைத் தொடர்ந்து நாவல் கருப்பர்கள் வாழும் நியூ யார்க்கை விவரிக்கிறது. அதற்கு இணையாகவே, மிட்சலின் இனபேத கற்பனையும் கொடுநிலத்தையும் விவரிக்கிறது. இந்தப் பயணத்தில் அவன், பல கருப்பர்களைச் சந்திக்கிறான்விரும்பக்கூடிய ஒரு பெண், ஆனால் அவளோடு அவன் உறவு கொள்ளும் முயற்சியில் தோற்கிறான்; அவன் வேலையை விட்டு முன்னொரு காலம் அநியாயமாக நீக்கியிருந்த ஒரு பணிப்பெண்; ஹார்லம் சுற்றுக் காட்டுகிறேன் பேர்வழி என்று மிட்சலின் பணத்தை அபகரிக்கும் அவளது உறவுக்காரன்; அவனது தீவிர களப்பணியாளன், மான்ஸ் (அவன் மிட்சலைபிசாசுஎன்று அழைக்கிறான்); இறுதியில், தன் சக தந்தை கூலி, அவன் மிட்சலுக்கு அறிமுகமானவன்தான்.

இந்தப் பயண அனுபவங்கள் வெள்ளையர்களின் அச்சம், குற்றவுணர்வு, இரட்டை வேடம் ஆகியவற்றை இரக்கமின்றி பகடி செய்கின்றனவெள்ளையரை நோக்கித் திரும்பிய கூர்மையான மொழியில். அடிமைகளால் தமக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொள்ள முடியாது என்பதே அடிமைத்தனத்தின் யதார்த்தமான, உணர்வு வலிமை கொண்ட அடையாளம். ஒரு கருப்பனின் மகனை வளர்க்க வேண்டிய நிலையில் மிட்சல், தன் துயரம் ஒரு வகை வஞ்சம் தீர்த்தல் என்பதை உணர்ந்து, “எனக்கு ஏன் இப்படி நடக்கிறது?” என்று கேட்கும்போது, “ஏன் என் தாத்தாவின் தாத்தாவுக்கு அப்படி நடந்தது?” என்று பதிலுக்கு கேட்கிறான் கூலி. ‘எ டிஃபரண்ட் ட்ரம்மர்நாவலில் வருவது போலவே கறுப்பர்களால் மிட்சல் தண்டிக்கப்படுகிறான். இதில் வன்முறை இல்லை, ஆனால் இரண்டுமே, மிக ஆழமான வகையில் அமைதியிழக்கச் செய்கின்றன. ஏனெனில், வெள்ளை பாத்திரங்களையும் வாசகர்களையும் கடந்த கால அநீதிகளுடன் அது துணையின்றி விட்டுச் செல்கிறதுஅவர்களை எடை போடுவதற்கான தராசையும் அளித்து விட்டு.

கெல்லியின் நான்காவது நாவலானடன்ஃபோர்ட்ஸ் ட்ராவல்ஸ் எவ்ரிவேர்மிகவும் வினோதமான  ஒன்று. இதன் துவக்கத்தில் சிக் டன்ஃபோர்ட் பெயர் சொல்லப்படாத ஐரோப்பிய தேசம் ஒன்றில் இருக்கிறான். ஒவ்வொரு நாளும் அன்று உடுத்தும் உடுப்பைக் கொண்டு அந்த நாட்டு மக்கள் தம்மை நிரவாரியாய்ப் பிரித்துக் கொள்கிறார்கள்நீல ஆடை அணிபவர்கள் அட்ஜூர்யூர்சோஸ், மஞ்சள் ஆடை அணிபவர்கள் ஜூலோர்யூர்சோஸ். இவர்கள் ஒருவரையொருவர் விலகியிருக்க வேண்டும். அங்கு அவனுக்கு வெண்டி என்ற அமெரிக்க பெண்ணுடன் சிறிது காலம் உறவு ஏற்படுகிறது. தி ஃபேமிலி என்ற மர்ம கும்பலுக்குச் சொந்தமான கப்பலில் அமேரிக்கா திரும்பும்போது இருவரும் மீண்டும் இணைகின்றனர். அந்தக் கப்பலின் சரக்கு தளம் அடிமைகளால் நிறைந்திருக்கிறது.

நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் கதை ஐம்பதாம் பக்கத்தில் புரிந்து கொள்ள முடியாத மொழியை அடைகிறது. ஜாய்ஸின்ஃபின்னெகன்ஸ் வேக்பாணியில் எழுதப்பட்ட இந்த நாவல் மிகவும் கடினமான வாசிப்பு அளிக்கிறது. மொழியை அதன் விளிம்புகளில் பற்றி முடிந்த அளவு வளைத்து, படித்தவனான பூர்ஷ்வா நாயகனையும் ஏழையான, ஆனால், உலகநடப்பு தெரிந்த அவன் நண்பனையும் இருவருக்கும் பொதுவான தேசீய வரலாற்றாலான ஒற்றை பிரக்ஞையை அளிக்கிறது.

ஒரே மொழி பல்வகைப்பட்ட வகைகளில் திரிய இடம் கொடுப்பது போற்றி கெல்லிக்கு நீண்ட காலமாகவே அக்கறை இருந்தது. அவருக்கே, ஆங்கிலத்தின் நான்கு வட்டார வழக்குகள் தெரியும். அது போக, மொழிக்கும் அதிகாரத்துக்கும் உள்ள உறவை ஆய்வதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. அவரது முந்தைய நாவல் பாத்திரமான டக்கர் காலிபன் ஊமை போன்றவன், மனைவியுடன்கூட பேச மாட்டாதவன். பிற நாவல்களிலும் கருப்பின மக்கள் ஊமைகளாய் இருப்பவர்கள். ஆனால், ‘டன்ஃபோர்ட்ஸ்நாவலில் இவர்கள் அதிகம் பேசுகிறார்கள், ஆனால் ஓயாத இவர்களின் பேச்சு புரியாததாய் இருக்கிறது. இந்தப் பகுதிகள் உரத்து வாசிக்கத் தக்கவை. கெல்லி புத்திசாலித்தனமாகவும் வேடிக்கையாகவும் எழுதுகிறார். ஆனால், கடினமாக இருப்பதால், தலைதெறிக்க குதியாட்டம் போடும்  புத்தகத்தில் இது முட்டுக்கட்டையாய் இருக்கிறது. மாறாய், அவர் வழமையான ஆங்கிலத்தில் எழுதும் உரைநடை அலங்காரமின்றி இருந்தாலும் பிரகாசிக்கிறதுஒரு அடுக்குமாடி குடியிருப்பின் சன்னலில் பட்டுத் தெறிக்கும் சூரிய ஒளி போல். ஆனால் கடினமான பகுதிகளைத் தவிர்க்க முடியாது. கெல்லியின் தனிமொழி கடினமான ஒன்று என்றாலும் புத்தகத்தில் தேவையான ஒன்று. எனவே, அவற்றையும் வாசித்தேயாக வேண்டும்.

முப்பத்து இரண்டு வயதில் இந்த நாவலை எழுதிய கெல்லி, அடுத்த நாற்பத்து ஏழு ஆண்டுகள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்ஆனால் அவரது அடுத்த புத்தகம் பதிப்பிக்கப்படாமல் சென்ற ஆண்டு மறைந்தார். 1977ஆம் ஆண்டு நியூ யார்க் திரும்பியிருந்த கெல்லி அதன் பின் பல பத்தாண்டுகள் அங்குதான் வாழ்ந்தார். எழுத்து அவருக்கு பணமளிக்கவில்லை,  மிகக் கடினமான வறுமையான சூழலில்  அவரது குடும்பம் வாழ வேண்டியிருந்தது. ஆனால் தொரோவை முன்மாதிரியாய்க் கொண்ட கெல்லி ஏழ்மையைப் பொருட்படுத்தவில்லை. காலை முழுதும் எழுதிக் கொண்டிருந்தார். நள்ளிரவு, கடைகள் வெளியே வீசியிருந்த பொருட்களை குப்பைத் தொட்டிகளிலிருந்து பொறுக்கி வந்தார்அவரது பெண், “கொரிய மளிகைக்கடைகளின் குப்பைகளைக் கிளற அவர் சங்கடப்படவில்லை, ஏழ்மை அவரைச் சிறிதும் அச்சுறுத்தவில்லை,” என்கிறார்.

ஏழ்மை மட்டுமல்ல. வாசக ஊக்குவிப்பு இல்லாததும் அவரை அச்சுறுத்தவில்லைதொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார். இறக்கும்போது, பதிப்பிக்கப்படாத இரு நாவல்கள் உட்பட கணிசமான அளவு எழுதி வைத்திருந்தார். அவற்றில் ஒன்று, ‘டாடி பீஸ்ஃபுல்தன் குடும்பத்தை அடிப்படையாய்க் கொண்டது. மற்றொன்று, ‘டிஸ்/இன்டக்ரேஷன்மீபுனைவு வகைமையைச் சேர்ந்தது. ‘தி பிரதர்ஸ் கரமசோவ்’, மற்றுபேல் ஃபயர்நாவல்களைப் போலவே கதைக்குள் கதை பாணியில் எழுதப்பட்டதுஇந்த நாவலில் அதற்கு சம்பந்தமேயில்லாமல், ஹெமிங்க்வே போன்ற ஒரு வெள்ளையர் எழுதிய முழு நாவல் இடம் பெறுகிறது. ‘டெத் ஃபால்என்ற அந்த நாவலில் கருப்பர்கள் இல்லை. ஒரு புதிய, பழக்கத்துக்கு அடிமையாக்கும் போதை மருந்து ஒன்று ஊருக்குள் வந்ததும் சிதிலமடையும் கான்சாஸ் நகர் ஓன்றை அது விவரிக்கிறது. எவ்வளவு முயன்றும் கெல்லியால் தன் நாவல்களைப் பதிப்பிக்க இயலவில்லை.

கெல்லிக்கு ஏன் இப்படி நேர்ந்தது, என்ற கேள்விக்கு காத்ரின் ஷூல்ஸ் மிகச் சிறப்பான விடையளிக்கிறார். இதைச் சொல்வது  கடினம் என்கிறார் அவர்; இன்றைய புகழும் இறந்தபின் கிடைக்கும் மரியாதையும் கைப்பற்றக் கடினமானவை, நம்புவதற்கில்லாதவை, பல கூறுகள் கொண்டவை. அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றம் ஒரு காரணமாக இருக்கலாம். சிவில் ரைட்ஸ் இயக்கம் வேகம் குறைந்தபோது, யாரைப் பதிப்பிப்பது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டவர்களின் பார்வை வேறு பக்கம் திரும்பிவிட்டது. இதில் கெல்லியும் பலியானார்.

ஆனால் கோட்பாடுகள் மாறும்போது வெள்ளத்தில் கொண்டு செல்லப்பட கெல்லி வெறும் அரசியல் எழுத்தாளர் அல்ல என்கிறார் ஷூல்ஸ். கெல்லியின் படைப்பின் மையத்தில் ஒரு வினோத தலைகீழாக்கம் இருந்ததே பிரதான காரணம்கருப்பர்களைப் பற்றி வெள்ளையர்கள் எப்படி நினைக்கிறார்கள் என்பதை எழுதிய கறுப்பர் அவர். அந்தக் கோணம் கூர்மையானது, முக்கியமானது. ஆனால் அது கெல்லியின் வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விட்டது.  தம் எண்ணங்களை ஒரு கறுப்பர் வெளிப்படுத்துவதை வாசகர்களில் பல வெள்ளையர்களும் விரும்பவில்லை,அதிலும் அவர் எழுதியது இரக்கமற்றதாய்  இருந்தது என்கையில். இலக்கியத்தில் வெகு நாட்கள் இடம் பெறாத கருப்பின வாசகர்கள் இன்னும் தொடர்ந்து வெள்ளையர்களைப் பற்றி வாசிக்க விரும்பவில்லை. இதைவிட மோசமாக, நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் அமெரிக்காவை விவரிக்கும் கெல்லியின் பார்வையை அறிந்து கொள்ள யாருக்கும் விருப்பமில்லை. இதுவெல்லாம் போதாதென்று கதையின் தலைப்பு, ஆசிரியரின் இனம் என்பதற்கப்பால் பரிசோதனை முயற்சியாய் மேற்கொள்ளப்பட்ட உரைநடையில் யாருக்கும் ஆர்வமில்லை.

முத்தாய்ப்பாய் ஷூல்ஸ் இவ்வாறு எழுதுகிறார், இதில் கெல்லியின் எதிர்கால இடம் குறித்த நம்பிக்கை வெளிப்படுகிறது: “பழையனவற்றைக் கழித்து புதியனவற்றை பார்வைக்கு கொண்டு வரும் வாழ்வின் இடையறாத இயந்திரப் போக்கு கெல்லியை இறுதியில் பாதித்திருக்கலாம். காலமும்கூட நாம் அனைவரும் பின்செல்லும் அம்புக் குறியே. “எக்காலத்துக்கும் உரியதுஎன்பதை விமரிசகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் பல எழுத்தாளர்களும், அசாதாரண திறமை படைத்தவர்களில் பெரும்பாலானவர்களும், காலத்துக்கு உரியவர்கள்தான், தம் காலத்துக்கு உரியவர்களாய் இல்லாது போனாலும்

நன்றி : “தொலைந்து போன அமெரிக்க இலக்கிய பேராளுமை” (The Lost Giant of American Literature) https://www.newyorker.com/magazine/2018/01/29/the-lost-giant-of-american-literature.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.