முகப்பு » புத்தகப் பகுதி, பெண்ணியம், மகரந்தம்

மகரந்தம்


படித்ததை எழுதாமல் இருக்க வேண்டாம்

நாம் படிப்பது அல்லது தொலைக்காட்சியில் பார்ப்பது அனைத்தையும் நினைவில் வைத்திருப்போமா? சிலருக்கு முடியலாம். ஏன் அவர்களால் முடிகிறது எனும் ஆய்வில் ஈடுபட்டவர்கள், நினைவுக்கும் மனித இயல்புக்கும் இடையேயான இடைவெளியைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். தொடர்ச்சியாகத் தொலைக்காட்சி பார்ப்பவரால் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு என்ன பார்த்தோம் என நினைவுபடுத்த முடியாதாம். சிலர் அடுத்தடுத்து படிக்கும் புத்தகங்களுக்கு இடையே குழப்பிக்கொள்வதும், மீண்டும் படித்ததை அலசுவதற்கு நேரமில்லாமல் இருப்பதும் படித்ததை மறப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளன. மனப்பாடமாகப் படித்தால் மட்டும் போதாது அதை எழுதிப்பார்க்க வேண்டும் எனச் சொல்லி வளர்க்கப்பட்டவரா நீங்கள்? அதில் ஒரு அறிவியல் உண்மை இருக்கிறது. எழுதும்போது நாம் நினைவுகளை அடுக்குகிறோம், தருக்க எண்ணங்களுக்கு ஏற்ப அவற்றை ஒழுங்கு படுத்துகிறோம், பகுக்கிறோம். இவை அனைத்தும் நீண்ட கால நினைவுக்கான சாத்தியங்களை அதிகரிப்படுத்துகின்றனவாம்.

அடுத்த முறை ஒரு புத்தகத்தைப் படித்து முடித்தால், அதைப் பற்றி எழுதி எங்களுக்கு அனுப்பவும். எப்போதும் மறக்காது!

https://www.theatlantic.com/science/archive/2018/01/what-was-this-article-about-again/551603/


உரையாடல் கலை

நாம் பிறருடன் எப்படி உரையாடலை மேற்கொள்கிறோம் என்பது மிகப் பெரிய கலை. இந்த காலத்தில் நாம் கணினி வேகத்தில் முன்முடிவுகளை எடுத்துவிடுகிறோம். அதை எடுப்பதோடு மட்டுமல்லாது, நம் உரையாடல் அந்தப்பாதையில் செல்வதற்கான எல்லா வழிகளையும் தேர்ந்தெடுக்கிறோம். மின்னல் வேகத் தொடர்பு சாதனங்கள் வந்துவிட்ட இந்த காலத்திலும் பிறருடன் பேசுவதும், அவர் சொல்வதை சரியான வகையில் புரிந்துகொள்வதும் மேலும் பல சிக்கல்களை அடைந்துள்ளது என்பது நகைமுரண். தொடர்ந்த உரையாடலில் இருவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிட்டவர்கள் போலாகிவிடுகின்றனர். மூன்றாமவர் அந்த உரையாடலைக் கேட்கும்போது மிகவும் குழப்பத்துக்கு ஆளாகிறார்.

இந்த கட்டுரை அப்படிப்பட்ட ஒரு பேட்டியைப் பற்றி குறிப்பிடுகிறது. மிகவும் சுவாரஸ்யமான பேட்டி. பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே இருக்கும் ஊதிய வித்தியாசங்களைப் பற்றிய விவாதம். ஜோர்டன் பீட்டர்சன் ஒரு மனநல மருத்துவர். சமீபத்தில் பிபிஸி பெண் ஊழியரகள் ஆண்களை விட ஊதியம் குறைவாக வாங்கப்படுவதை எதிர்த்துப் போராடுகிறார்கள். அதைப் பற்றிய விவாதமாக இந்த பேட்டி உருமாறியது. ஒரு அறிஞராக அவர் முன்வைத்த கருத்துகளிலிருந்து மிக மேம்போக்கான கேள்வியை உருவாக்கி அவர் மீது வீசியபடி இருக்கிறார் இந்த அறிவிப்பாளர். பெண்கள் குறைவாக சம்பளம் வாங்குவதற்கு அவர்கள் பெண் என்பது பதினெட்டு காரணங்களில் ஒன்று என்கிறார் பீட்டர்சன். உடனடியாக அவர்கள் பெண் என்பதால் கம்மியாக சம்பளம் வாங்க வேண்டுமா என அடுத்த கேள்வி வருகிறது. அரைமணி நேரம் செல்லும் இந்த பேட்டியை கண்டு ரசியுங்கள்.

https://www.theatlantic.com/politics/archive/2018/01/putting-monsterpaint-onjordan-peterson/550859/


சீனா ரயில் நிலையம்

சீனாவில் ஒரு ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட வழித்தடத்தை ஓர் இரவுக்குள் பணியாளர்கள் சீர்திருத்திய காணொலி அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது. சுமார் 64 விநாடிகள் கொண்ட இந்தக் காணொலியில் 1500 பணியாளர்கள் பங்கேற்று சுமார் 8.5 மணி நேரத்திற்குள் இந்தப் பணியை நிறைவுசெய்தனர். ஒரு ரயில் நிலையமே இந்த நேரத்திற்குள் சீர்படுத்தப்பட்டுவிட்டது என்று முதலில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும், ஒரு மின் ஏணியைச் சரிசெய்ய ஒரு மாதமும், சாலை அமைக்க அனுமதி வழங்குவதற்கு 10 வருடங்களும் பிடிக்கும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இவ்வளவு குறுகிய காலத்தில் இது போன்ற பணிகளை மேற்கொள்ளுவது ஒரு அற்புத நிகழ்வாகவே உள்ளது.

ஆனால், சீனர்களுக்கு இப்போதெல்லாம் இது போன்ற பணிகளை மேற்கொள்ளுவது பழகிப்போய்விட்டது. சீனாவில் மட்டுமல்லாது மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் பெரும் கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளும் சீனா, தங்களால் வேகமாகவும் சிறப்பாகவும் இது போன்ற பணிகளை செய்துமுடிக்க இயலும் என்று தொடர்ந்து நிரூபித்துக்கொண்டு வருகிறார்கள். உதாரணமாக ப்ராட் குழுமம் என்ற சீன நிறுவனம், ஒரு 57 மாடிகள் கொண்ட கட்டடத்தை 19 நாட்களில் கட்டி முடித்திருக்கிறார்கள். இந்த குறிப்பிட்ட ரயில் வழித்தட சீர்படுத்தும் பணியைப் பொருத்த வரையில், எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் ரயில் நிலையம் என்பதால், இரவில் மட்டுமே இந்தப் பணியை செய்து முடிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. அதுவும் சீர்படுத்தப்படவேண்டிய இடம், ரயில்கள் தங்கள் வழித்தடத்தை மாற்றிக்கொள்ளும் இடம் என்பதால், அங்கே விரைவில் வேலையை முடித்துவிடவேண்டிய நிர்பந்தம் இருந்தது. எனவே முன்பே தயாரித்து வைக்கப்பட்ட பாகங்களைக் கொண்டு, இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. இது போன்று தயாரிக்கப்பட்ட பாகங்களைக் கொண்டு பணிகளை நிறைவேற்றுவது மற்ற நாடுகளிலும் நடைபெறும் விஷயம் என்றாலும், சீனா இதை வேறொரு தளத்திற்குக் கொண்டு சென்று விட்டது. இந்த அனுபவத்தைக் கொண்டு மற்ற பல திட்டங்களையும் விரைவாக நிறைவேற்ற விழைகிறது சீனா. மேலும் படிக்க:

https://slate.com/business/2018/02/the-story-behind-that-viral-chinese-train-station-video.html

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.