முகப்பு » உடல் நலவியல், மருத்துவம், முதுமை

செவித் திறனிழப்பு

செவிக்கு உணவு இல்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்ற காலம் போய் கண்களுக்கெதிரே கணினி வரைப்பலகை இல்லாதபோது சிறிது செவிமடுப்போம் எனும் காலம் இது. சமீபத்தில் முதியோர்கள் அதிக அளவு நேரத்தை கணினி வரைப்பலகையில் செவழிப்பதற்கு, வயதினால் காது மந்தமாவதும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது. முதியவர்களை இளைய சமுதாயம் புறக்கணிக்கிறது எனும் குற்றச் சாட்டிற்கு காது மந்தத்தினால் கலந்துரையாடலில் சரியாக பங்கு கொள்ள முடியாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

காது மந்தமுள்ளவர்களை எல்லா விதமான மருத்துவர்களும் சந்தித்த போதிலும் இக்கோளாறைப் பரிசோதனை செய்வதிலோ, சரி செய்வதிலோ அதிக அக்கறை காட்டுவதில்லை என்பது உண்மையே. இதற்காக ஆகும் செலவு அதிகமாக இருப்பதினால் நோயாளிகளும் இச்செலவை ஏற்க முடியாமல் காலத்தை கடத்துகின்றனர்.

உலகளவில் காது கேளாமை, செயலிழப்பு பட்டியலில் நான்காவது இடத்தை வகிக்கிறது. நம் வயது ஒவ்வொரு பத்து வருடங்கள் கூடும்போதும்   கேட்கும் திறனிழக்கும் வாய்ப்பும் இரண்டு மடங்காக பெருகுகிறது. அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களில் 50 சதவீதத்தினரும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களில் 80 சதவீதத்தினரும் பிறர் பேசுவதைக் கேட்க இயலாமல் கஷ்டப்படுகின்றனர். இதனால், உறவினர் நண்பர்களுடன் உள்ள தொடர்பு சிறிது சிறிதாகக் குறைகின்றது. வேலை செய்யும் இடத்திலும் சக ஊழியர்களுடன் உறவாடுதலும் கடினமாகிறது.

குழந்தை பிறந்தவுடனேயே குழந்தையின் கேட்கும் சக்தியை நிர்ணயிக்கவேண்டும். இப்பரிசோதனைகளில் கேட்கும் சக்தி மங்கியிருந்தால் 3 மாதங்களுக்குள் மேற்பரிசோதனைகளுக்குட்படுத்த வேண்டும். இதன் மூலம் காது மந்தமாயுள்ள குழந்தைகளுக்கு வேண்டிய உபகரணங்களை 6 மாதங்களுக்குள் உபயோகிக்கத் தொடங்குவதின் மூலம் பேச்சும், மொழி வளர்ச்சியும் மற்ற குழந்தைகளுக்கீடாக அமையும். சிறு வயதிலேயே செவித்திறனிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள் படிப்பில் பின்தங்குவதால் பிற்காலத்தில் வேலை வாய்ப்புகளின்றி ஏழ்மைக்குள் தள்ளப்படுகின்றனர். இளம்வயதில் காது மந்தமானவர்கள் பொருளாதாரச் சிக்கல்களினாலும், சமூக உதாசீனங்களினாலும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் தெள்ள தெளிவு.

எனது தமையனாரின் நண்பர் ஒருவர் காது கேளாமையினால் பொறியியல் பட்ட படிப்பிற்குப் பின் ஒரு சிறிய பள்ளி ஆசிரியர் வேலையை ஏற்று கொள்ள வேண்டியதை நானறிவேன். காது கேட்காத முதியோரிடையே மருத்துவ மனையில் சேர்க்கை, இறப்பு, கீழே விழுதல், உடல் தளர்வு, ஞாபக மறதி, மனச்சோர்வு ஆகியவை அதிக அளவில் உள்ளதும் ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதனால், காது கேட்காதவர்களின் மருத்துவச் செலவு காது கேட்பவர்களுடன் ஒப்பிடும்போது பன்மடங்காக உள்ளது.

செவியின் உடற்கூறு

நம் செவியை வெளிச்செவி. நடுச்செவி, உட்செவி (காக்ளியா) என்று மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம். உட்செவியின் ஒரு பாகம் உரோம உயிரணுக்கள் (ஹேர் செல்ஸ்) எனப்படும். இவ்வணுக்கள் ஒலியை நரம்பு உணர்ச்சியாக மாற்றியமைக்கின்றன. இவ்வுணர்ச்சிகளை சுருளி நரம்புத்திரள் (ஸ்பைரல் கெங்ளியான்)  ஆல் பாக்டரி நரம்பின் மூலம் மூளைத்தண்டுப் (பிரெய்னஸ்டெம்) பகுதிக்குக் கொண்டு செல்கிறது.

காது கேளாமை மூவகையாம்.

1.வெளிஅல்லது நடுச்செவி பாதிப்பால் ஒலியை உட்கடத்துவதில் சிக்கல் (கண்டக்டிவ் ஹியரிங் லாஸ்)

2. உட்செவி பகுதிகளின் செயலிழப்பு (சென்சொரி நியூரல் ஹியரிங் லாஸ்)

3.இரண்டும் சேர்ந்தது (மிக்ஸ்ட் ஹியரிங் லாஸ்).

முதல் வகையில் வெளிஅல்லது நடுச்செவி அடைப்பினால் ஒலி உட்செல்லுவது தடைபடுகிறது. வெளிப்பாகத்தில் மெழுகடைப்பு, நடுப்பாகத்தில் நீர் அல்லது சீழ் சேர்தல், மத்திய பாகத்தில் உள்ள ஸ்டேபிஸ் எனும் சிறிய எலும்பு அசைவற்று போதல் (ஆடோஸ்கெலெரோஸ்) ஆகியவை சாதாரண காரணங்களாம். மருத்துவ அறுவை சிகிச்சைகளின் மூலம் இக்காரணங்களை நிவர்த்தி செய்து காது கேளாமையை முழுவதுமாகக் குணப்படுத்த முடியும்.

ரண்டாவது வகையில், உரோம உயிரணுக்களை உள்ளடக்கிய பகுதி பாதிக்கப்பட்டால் புலன்சார் செவித்திறனிழப்பு (சென்சரி லாஸ்) என்றும், சுருளி நரம்புத் திரளும் அதற்கப்பால் உள்ள நரம்புப் பகுதிகளும் பாதிக்கப்படும்போது, நரம்புசார் (நியூரல்) செவித்திறனிழப்பு என்றும் பிரிக்கப்படுகின்றன.  உரோம உயிரணுக்கள் எக்காரணத்தினால் அழிவடைந்தாலும் புதிய உயிரணுக்கள் உருவாகாததினால் இதனால் ஏற்படும் காது கேளாமை நிரந்தரமானது. அது மட்டுமல்லாமல் இவ்வுயிரணுக்களின் அழிவினால் இதனுடன் சம்பந்தப்பட்ட சுருளி நரம்பு திரளினுள்ளே நரம்பணுக்களும் சிதிலமடைகின்றன. ஆகவே சமீப காலத்தில் பிரபலமாகியுள்ள காக்ளியர் இம்பிளான்ட் எனும் சாதனம், அது தலையில் பொருத்தப்பட்டு சுருளி நரம்புத் திரளை முடுக்குவதின் மூலம் வேலை செய்வது என்பதால், பயன்படுத்த முடியாததாகிறது.  இரண்டாம் பிரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வார்த்தைகளைப் பிரித்தறிவது கடினமாம்.. இதனால் ஒலியுதவி சாதனங்கள் (ஹியரிங் எய்ட்ஸ்) முதற் பிரிவினற்கு உதவுமளவு இப்பிரிவினர்க்கு உதவுவதில்லை.

கேட்கும் சக்தியைக் கணித்தல் (அஸெஸ்மென்ட் ஆஃ ஹியரிங்)

உரையாடலுக்குத் தேவையான ஒலியளவின் அலைவெண்களை ( Frequency) காதிலும் காதிற்கு பின்னால் உள்ள எலும்பின் மேல் பொருத்தியும் கணிப்பதின்  மூலம் காதின் எப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. இன்னும் சிறந்த சோதனைகளின் மூலம் உட்செவியில் எப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் அறியலாம்.  நிசப்தமாயுள்ள ஓரறையில் வார்த்தைகளை ஒரே தொனியில் உச்சரிப்பதின் மூலமாகவும் கேட்கும் சக்தியைக் கணிக்கலாம்.

உட்செவித்திறனிழப்பு நிரந்தரமானதால் இதற்கான காரணங்களைப் பார்போம்.

மூப்பினால் ஏற்படும் செவிச் சிதைவு

வயதினால் ஏற்படும் செவியிழப்பிற்கு இது தலையாய காரணம். வயோதிகம் மட்டுமல்லாது காதை சேதப்படுத்தும் சப்தங்களும், மருந்துகளும் இதற்கு காரணமாம். இது இரண்டு காதுகளையும் ஒரே அளவிற்கு பாதிக்கின்றது.  2000க்கும் மேலுள்ள அலையெண் சப்தங்களை கேட்க முடியாமல் செய்கிறது. இதனால் ஒருவர் பேசும் வார்த்தைகளைக் கேட்பது கடினமாகிறது.

மரபணு மாற்றங்கள்

நூறுக்கும் மேலான மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்கள் காது கேளாமையை மட்டும் உண்டு பண்ணும் வாய்ப்புள்ளது. அதில் 30 மரபணுக்கள் இள வயதினரைத் தாக்குகிறது. இவ்வாறு மாறிய மரபணுக்கள் பெற்றோர்களில் ஒருவரிடமிருநதே அடுத்த வம்சத்தை தாக்கும் சக்தி படைத்துள்ளது. 25 லிருந்து 55 சதவீதம் பெரியோரின் செவிஇழப்பு மரபணு சம்பந்தப்பட்டது என்று கருதப்படுகின்றது. இம்மரபணுக்கள் காக்லியா எனும் உட்செவி பகுதியிலுள்ள உரோம உயிரணுக்கள் சரியாக வேலை செய்யத் தேவையானவை. இவைகளில் மாற்றம் ஏற்பட்டால் இவ்வுயிரணுக்கள் சீரிய முறையில் வேலை செய்ய இயலாமல் கேட்கும் சக்தி மலிகின்றது. மேலும் முதியோரின் காது கேளாமைக்கும், மிகுந்த ஒலியினால் ஏற்படும் செவியிழப்பிற்கும் உள்ள மரபணு சம்பந்தமும் சமீபத்தில் தெரிய வந்துள்ளது.

அளவுக்கு மீறிய சத்தம்

அமெரிக்காவில் 104 மில்லியன் மக்கள் காதை ஊனப்படுத்தும் சத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். நான்கிலொருவர் மிகுந்த ஒலியினால் செவித்திறனிழப்பை எய்துள்ளனர். காது நன்றாக கேட்கிறது என்று நினைப்போரிடையே 20 சவீதத்தினர் செவித்திறனிழப்பு உள்ளவர்களாக இருக்கின்றனர்.  தமிழகத் திருமணங்களில் காதைப் பிளக்குமளவில் ஒலிபெருக்கிப் பெட்டிகளை அமைப்பது சம்பிரதாயமாகிவிட்டது. இதனால் செவித்திறனிழப்பை அடைந்தவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்று நினைக்கிறேன். சென்னையின் தெருக்களில் வாகனங்களின் ஹார்ன் சத்தம் ஓய்வதேயில்லை. சினிமா கொட்டகைகளிலும், கலையரங்குகளிலும், சில சமயம் வீடுகளிலுமே காதை மந்தப்படுத்தும் அளவு சத்தம் நிரம்பியுள்ளது. தொழிற்சாலை ஊழியர்களும் மணிக்கணக்கில் இயந்திரங்களின் சத்தத்தில் இயங்க வேண்டியுள்ளது. தீது விளைவிக்கும் சத்தம் உரோம உயிரணுக்களை நேரடியாகவும் வேறு வழிகளிலும் தாக்குகிறது. இவ்விழப்பு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கலாம். தற்காலிகமாக இருந்தால், 2 வாரங்கள் வரை கேட்கும் சக்தி குறைந்தும் காது அடைத்திருப்பது போன்ற உணர்வுமிருக்கும்.

பொது இடங்களில் அளவுக்கு மீறிய சத்தம் ஏற்படுத்துவதை சமுதாய விழிப்புணர்ச்சியுள்ள அமைப்புகளும் அரசாங்கமும் அமல்படுத்தவேண்டும்.

மருந்துகள்

இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் வழக்கமாகக் கொடுக்கும் மருந்துகளினால் குணமாகாத காச நோய்க்கு ஸ்ட்ரெப்டோமைசின் எனும் ஊசி மருந்து கொடுக்கப்படுகிறது. இதைச் சார்ந்த பல மருந்துகள் எல்லா நாடுகளிலும் பல வியாதிகளுக்கு முக்கிய மருந்தாகவுள்ளன. அதைத் தவிர சிஸ்ப்ளட்டின் போன்ற புற்று நோய் மருந்துகளும் செவித்திறனிழப்பை ஏற்படுத்துவதாகவுள்ளவை.

மற்ற காரணங்கள்

புகை பிடித்தல், உடற் பருமன், சர்க்கரை வியாதி உள்ளவர்களிடையே செவித்திறனிழப்பு அதிகமாயுள்ளது என்பது ஆய்வுகள் மூலம் தெரிகிறது. இதற்கு மூல காரணம் உட்செவிக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் மாற்றங்களாக இருக்கக் கூடும் என்று கருதப்படுகின்றது.

திடீர் செவித்திறனிழப்பு

இது மற்ற செவித்திறனிழப்புகளிலிருந்து வேறுபட்டதாகும். இது மூன்றே நாட்களுக்குள் ஒரு காதையோ அல்லது இரண்டு காதுகளையும் தாக்கும். இதன் காரணம் சரிவரத் தெரியவில்லை. காது சிகிச்சை மருத்துவர்கள் இதற்கு ஸ்டெராய்டு மருந்தை உபயோகிக்கின்றனர்.

சிகிச்சை முறைகள்

செவித் திறனிழப்பை நிவாரணம் செய்ய பல புதிய மருத்துவ முறைகள் பரிசோதனைக் கூடத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவைகளில் முக்கியமானவை செவித்திறனிழப்பை உண்டுபண்ணும் மருந்துகளின் தாக்குதலை நிவர்த்தி செய்யும் மருந்துகளும், மரபணு மாற்றங்களால் செவித் திறனிழந்தவர்க்கு புதிய மரபணுக்களை உரோம உயிரணுக்களுக்கு வைரஸ் கிருமிகள் மூலம் உட்செலுத்துதல் ஆகியவையாம்.

ஒலி கூட்டும் கருவிகள் (ஹியரிங் எய்ட்ஸ்)

மேற்சொன்ன நவீன மருத்துவங்களுக்காகக் காத்திருக்கும்போது செவித்திறனிழப்பால் அவதிப்படுபவர்களுக்கு காது மருத்துவர்களால் இக்கருவிகள் பொருத்தப்படுகின்றன. ஆனால் இதை உபயோகிப்பவர்கள் அமெரிக்காவில் 15 சதவீதத்திற்கும் குறைவே. இதற்கு காரணங்கள் பல: விலை, நம்பிக்கையின்மை, தொடர்ந்து உபயோகிப்பதிலுள்ள செலவு, வெட்கம், மற்றவர்களின் அவமதிப்பு, சரியாகப் பொருந்தாததால்  ஏற்படும் தொல்லைகள் போன்ற பலவாம்.

உட்பொருத்திகள்

(காக்ளியர் இம்பிளான்ட்) உச்சச் செவித்திறனிழப்புற்றவர்க்கு, ஒலி  கூட்டும் கருவிகளினாற் பயனில்லை. ஏனென்றால், உரோம உயிரணுக்களால் ஒலியை உட்செலுத்த முடியாததேயாகும்.  இப்படிப்பட்டவர்களுக்கு, தலையில் பொருத்தப்படும் கருவிகளின் மூலம் சுருளி நரம்புத்திரளை நேரடியாகத் தூண்டி,  செவித்திறனிழப்பை குறைக்க முடிகிறது. இதனால் அவர்களது மன நலமும் சமூக நலமும் மேம்படுகின்றது என்பது தெரிய வந்துள்ளது .

செவித்திறனிழப்பைத் தடுக்கும் முறைகள்

1. வீட்டிலும், வெளியிலும், வேளையிலும் அதிக அளவு சத்தத்தைத் தவிர்த்தல்

2. புகை பிடிப்பதை நிறுத்தல்

3. எடை கூடுவதைத் தவிர்த்தல்

4. சர்க்கரை வியாதி, இதய வியாதிக்கான காரணங்களைக் கண்டறிந்து உடனுக்குடன் நிவாரணம் பெறல்

5. ஒலி அதிகமாயுள்ள இடங்களைத் தவிர்க்க இயலாவெனின், ஒலியை  கணிசமாகக் குறைக்கும் சாதனங்களை உபயோகித்தல்  ஆகியவையாம்.

6. குடும்ப மருத்துவர்களும் கேட்கும் சக்தியை சிறிய சோதனைகளின் மூலம் சரிபார்த்தல் மிக அவசியமாகும். இதன் மூலம் செவித்திறனிழப்பைத் தடுக்கவும் குறைக்கவும் நிவர்த்திக்கவும் இயலும்.

 

ஆதாரம்: Hearing Loss in Adults; Lisa L Cunningham, Ph.D., & Debarra L. Tucci, MD., MBA., New England Journal of Medicine 2017;377;2465-73

 

One Comment »

  • சங்கரனார் said:

    வந்தே மாதரம். பொதுவெளியில் மனிதர்கள் வாகனங்களில் ஒலிப்பானை தேவையில்லாமல் ஒலிப்பதை நிறுத்துவதாலேயே காதின் கேட்கும் திறன் சரியாக இருக்கும். அரசாங்கங்களும் இந்த மாதிரி விஷயங்களில் சரியாக கவனம் செலுத்த வேண்டும். வரும் முன் காப்பது மிகவும் அவசியமானதே. வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.

    # 7 February 2018 at 10:06 pm

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.