முகப்பு » கட்டுரை, தொழில்நுட்பம், பொருளாதாரம்

சிகப்பு ரோஜாக்கள் – ஒரு வளர்ப்புக் காதல் பயணியின் பயணக் குறிப்புகள்

ஐந்தாம் வகுப்பு வரை ஊரிலிருந்த ஆரம்பப் பள்ளியில் படித்துவிட்டு, ஆறாம் வகுப்பிற்கு பக்கத்து ஊரின் நாடார் நடுநிலைப் பள்ளியில் சேர்ந்திருந்த எண்பதுகளின் முற்பகுதி. பள்ளியின் முன்னாலிருந்த பெட்டிக் கடையில் காமிக்ஸ் புத்தகங்களும், சிறிய கதைப் புத்தகங்களும், அம்புலி மாமா, ரத்னபாலா, பூந்தளிர் புத்தகங்களும் நாள் வாடகைக்கு கிடைக்கும். எங்கள் பள்ளியின் சத்துணவு டீச்சரின் அப்பாதான் அந்தக் கடைக்காரர். பாட்டுப் புத்தகங்களும் விற்பார். ஒருநாள் சுந்தரராஜ் மாமா, ஸ்கூல் விட்டு வரும்போது ஒரு தலை ராகம் பாட்டுப் புத்தகம் இருந்தால் வாங்கி வரச் சொன்னார் (சுந்தரராஜ் மாமா ஊரில் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர்; மாலை வேளைகளில் நாங்கள் மொட்டை மாடியில் உட்கார்ந்து சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, நடிகர்கள் சுதாகர், ரவீந்தர் போல் மிமிக் செய்து காண்பிப்பார் – நடந்தும், நடித்தும்). வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வரும்பொழுது பின்னட்டையிலிருந்த அந்தக் கதையைப் படித்தேன். தான் சிகப்பாக மாறினால் காதலிப்பதாகச் சொன்ன வெள்ளை ரோஜாவின் முள்மேல் தன் உடலைக் குத்தி தன் இரத்தத்தால் அதனை சிவப்பாக்குகிறது குருவி. அது முழுச் சிவப்பாய் மாறிய நேரம், குருவி இறந்து விடுகிறது. வளர்ந்தபின்னான நாட்களில்தான் புரிந்தது மாமா ஏன் அப்போது அதை வாங்கிவரச் சொன்னார் என்று. மாமா அப்போது ஊரின் எல்லையிலிருந்த காலனியில் என்கூடப் படித்த முருகேசன் வீட்டிற்குப் பக்கத்து வீட்டிலிருந்த தங்கம் அக்காவைக் காதலித்தார் என்று நினைக்கிறேன். ஆனால் இருவரும் பேசி நான் பார்த்ததில்லை. தங்கம் அக்கா அழகாகப் படங்கள் வரைவார். சிலமுறை வரைந்த படங்களை என்னிடம் கொடுத்து மாமாவிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார் (அதில் ஒன்று சிகப்பு ரோஜாக்கள் நிறைந்த தோட்டமும், ஓட்டு வீடும், மான் குட்டியும் கொண்டது). ஒரே ஒரு முறை, திருமணம் நிச்சயமான பின் (மாமாவுடன் அல்ல), ஊர்விட்டுப் போகுமுன், வீட்டிற்கு வந்து மாமாவுடனும், அம்மாவுடனும் பேசிவிட்டுப் போனார்கள்.

நாம் இக்கட்டுரையில் பார்க்கப் போவது தங்கம் அக்காவின் காதலைப் பற்றி அல்ல. சிகப்பு ரோஜாக்களைப் பற்றி.

2018 பிப்ரவரி 14 காதலர் தினம், எனக்கு கொய்மலர் வளர்ப்பில் இணைந்த வாழ்வின் 23-ம் வருட காதலர் தினம்.

கொய்மலர் ஏற்றுமதி வணிகத்தில் பன்னாட்டு அன்னையர் தினம், மகளிர் தினம், கிறிஸ்துமஸ் தினம், வருடப் பிறப்புகள், மலர்கள் பயன்படுத்தும் நாடுகளின் சுதந்திர தினங்கள் மற்றும் அந்தந்த நாடுகளின் மலர்களின் உபயோகம் அதிகமிருக்கும் விசேஷ தினங்கள் (உதாரணத்திற்கு ரஷ்யாவில் பள்ளிகளில் கல்வியாண்டு துவங்கும் மாதம் செப்டம்பர்; செப்டம்பரில் முதன்முதலாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அவர்களின் ஆசிரியர்களுக்கு மலர் கொடுப்பது அங்கு வழக்கம்) எல்லாமே முக்கியமானவை என்றாலும் கொய்மலர் வர்த்தகத்தின் மிக முக்கியமான பருவம் என்றால் பிப்ரவரியில் வரும் காதலர் தினம்தான். பல வளர்ப்புப் பண்ணைகள் காதலர் தின வணிக வருமானத்தை வைத்துத்தான் வருடத்தின் மீதமுள்ள மாதச் செலவுகளை நிர்வகிக்கும்.

இருபது/இருபத்தைந்திற்கும் மேலான தொட்டிச் செடி வகைகளும், முப்பதிலிருந்து/முப்பத்தைந்திற்கும் அதிகமான கொய்மலர் வகைகளும் கொண்ட பன்னாட்டு கொய்மலர் வர்த்தகத்தில் முதலிடம் ரோஜாவிற்குத்தான். ரோஜாக்களிலும் சிகப்பு ரோஜாக்கள் வணிகத்தில், வளர்ப்பில் கிட்டத்தட்ட 30 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடு வரை. வளர்ப்புப் பண்ணைகள் சில, முழுதுமாக சிகப்பு ரோஜாக்களையே வளர்ப்பதுண்டு. சிகப்பு ரோஜாக்களில் பல்நூறு வகைகள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் ஒரு குறிப்பிட்ட வகை சிகப்பு ரோஜாக்களை மட்டுமே வளர்க்கும் பண்ணைகள் பல உண்டு. உதாரணத்திற்கு “ரெட் நவோமி” என்ற “ஸ்ரூவர்ஸ்” இனப்பெருக்க நிறுவனத்தின் வகையை மட்டுமே பத்து ஹெக்டருக்கும் மேல் வளர்க்கும் பண்ணைகள் ஹாலந்தில் உண்டு. ஸ்பெயின், ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளிலிருக்கும்  எல்லா ரோஜா இனப்பெருக்க நிறுவனங்களும், தங்களின் ஆராய்ச்சியில் புதிய சிகப்பு வகையைக் கண்டுபிடிப்பதற்கே முன்னுரிமை அளிக்கும். வளர்ப்புப் பண்ணைகளும், தங்களின் வளர்ப்புப் பரப்பளவில் 30 சதவிகிதம் சிகப்பு வகைக்கே ஒதுக்குவார்கள்.

ஐரோப்பிய நாடுகள், கென்யா, எத்தியோப்பியா, உகாண்டா, இந்தியா (குறைந்த அளவில்), கொலம்பியா, ஈக்வடார் போன்ற கொய்மலர் வளர்ப்பில், வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் எல்லா நாடுகளுக்கும் பிப்ரவரியின் காதலர் தினம் என்பது அந்நியச் செலாவணி ஈட்டிக்கொடுக்கும் மிக முக்கியமான மாதம்தான்.

~oOo~

 

பசுங்குடிலில் சிகப்பு ரோஜாக்கள்

கொய்மலர் வளர்ப்புப் பண்ணைகளில், காதலர் தினத்திற்கான ஆரம்பகட்ட வேலைப் பரபரப்புகள் நவம்பர் மாதமே துவங்கிவிடும். நிறுவனங்களின் விற்பனைப் பிரிவிற்கு, அப்போதே காதலர் தினத்திற்கான ஆர்டர்கள் வர ஆரம்பித்து விடும். விலையும் அப்போதே நிர்ணயிக்கப்பட்டு விடும். புத்தாண்டின் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திலேயே, வளர்ப்புப் பிரிவிற்கும் தரப் பிரிவிற்கும், பேக்கிங் பிரிவிற்கும் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களின் பெயர்களும், யாருக்கு எத்தனை பெட்டிகள் என்றென்று அனுப்ப வேண்டும் என்ற தெளிவான பட்டியலும் வந்துவிடும். இதுதவிர பிப்ரவரி ஐந்திலிருந்து பத்த்தாம் தேதி வரையிலான கடைசி நேர விற்பனையும், சூடுபிடிக்கும்.

ஒரு சிகப்பு ரோஜா பசுங்குடிலின் சூப்பர்வைசர் டேவிட்டுடன்

எல்லா ஆண்டுகளும் ஒரே வகை சிகப்பு ரோஜாக்கள்தான் அதிகம் விற்கும் என்று சொல்லமுடியாது; ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு சிகப்பு வகைகள் முதலிடம் பிடிக்கும். சென்ற ஆண்டு “டிருய்டர்” இனப்பெருக்க நிறுவனத்தின் “ரோடஸ்”-ம் “எவர் ரெட்”-டும், “இண்டர்ப்ளாண்ட்” நிறுவனத்தின் “எக்ஸ்ப்ளோரர்”-ம் சக்கை போடு போட்டன. கொய்மலர் ரோஜாவின் விலை அதன் நீளத்தைப் பொறுத்து அமையும். பொதுவாக, பண்ணையிலிருந்து நேரடியாக வாங்கும் வாடிக்கையாளருக்கான பண்ணை விலை ஒரு செண்டி மீட்டருக்கு ஒரு டாலர் செண்ட் என்ற அளவில் இருக்கும்; உதாரணத்திற்கு 80 செமீ நீளமுள்ள சிகப்பு ரோஜா 80 டாலர் செண்ட். பண்ணைக்குப் பண்னை, சிகப்பு ரோஜாக்களின் வகைக்கேற்ப இவ்விலை மாறுபடும். மொத்த வியாபாரிகளிடமிருந்து, சில்லறை வியாபாரிகளுக்கும், அவர்களிடமிருந்து கடைசி உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் வரை செல்லும்போது நான்கைந்து மடங்கு விலை ஏற்றமிருக்கும். சில சமயம் பத்து மடங்கு வரை செல்வதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இது நாட்டுக்கு நாடு மாறுபடும். உதாரணத்திற்கு ரஷ்யாவில், ரூபிள் மதிப்பு சரியும் முனபான மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை நல்ல விலை கிடைத்து வந்தது; ஹாலந்தைக் காட்டிலும் அதிகம்.

~oOo~

சிகப்பு ரோஜாக்களின் வளர்ப்பிலும் சவால்கள் உண்டுதான்.

ரோஜா செடிகள், பசுங்குடிலில் ஒருமுறை நடவு செய்தால் அவற்றின் ஆயுள், பராமரிப்பிற்குத் தகுந்தவாறு, ஐந்திலிருந்து எட்டாண்டுகள். பொதுவாய் ஐந்திலிருந்து ஆறாண்டுகள்தான் கணக்கு. வகைக்குத் தகுந்தவாறு, ஒரு சதுர மீட்டரில் 7 முதல் 9 செடிகள் வரை நடவு செய்யலாம். ஒரு வருடத்தில் ஒரு சதுர மீட்டரில் 100-லிருந்து 200 பூக்கள் வரை அறுவடை செய்ய்லாம் (இது கடல் மட்டத்திலிருந்து எத்தனை உயரத்தில் வளர்ப்புப் பண்ணை அமைந்திருக்கிறது என்பதைப் பொறுத்தது).

“எவர் ரெட்” சிகப்பு ரோஜா வகை

காதலர் தினத்திற்கான ஏற்றுமதி தோராயமாக ஜனவரி 28ம் தேதி துவங்கி, பிப்ரவரி 9ம் தேதி வரை இருக்கும். அதற்குத் தகுந்தவாறு கணக்கீடு செய்து 60-லிருந்து 75 நாட்களுக்கு முன்னதாக (வகைக்குத் தகுந்தவாறு), செடிகளில் கவாத்து/கத்தரிப்பு செய்யவேண்டும். கத்தரிப்பு முடிந்ததும், வழக்கமாய் சொட்டுநீர்ப் பாசனத்தோடு செல்லும் உரங்களின் அளவை 10 முதல் 15 சதவிகிதம் அதிகரித்தல் நல்லது. 19:19:19 போன்ற உரங்களை மேலுரமாகவும் இடலாம். இரும்புச் சத்துக் குறைபாடு இப்பருவத்தில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. தண்ணீரில் எளிதாகக் கரையும் கீலேட் செய்யப்பட்ட EDDHA போன்ற இரும்பு உரங்களை கரைத்து பாத்திகளின் மேல் ஊற்றலாம்.

காதலர் தினம் வரை பூச்சி மற்றும் நோய்களிலிருந்தும் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். இதுதவிர இயற்கை இடையூறுகள் குறுக்கிடாமல் இருக்கவேண்டும். மழை, மேகமூட்டம் கொண்ட நாட்கள், இரவு வெப்பநிலையில் அதீத மாறுதல்கள்…இவைகள் ஏற்பட்டால் கணக்கீடு செய்த நாட்களில் தவறு ஏற்பட்டு எதிர்பார்த்த நாட்களில் மலர்கள் அறுவடைக்குத் தயாராகாமல், தாமதாக வரும். அல்லது எதிர்பார்த்ததை விட இரவு மற்றும் பகல் வெப்பநிலைகள் வழக்கத்தைவிட அதிகமானால் முன்னதாகவே பூக்கள் அறுவடைக்குத் தயாராகிவிடும் ஆபத்து உள்ளது.

கடைசிநேர விற்பனை விலையிலும் ஆபத்துக்கள் உண்டு. எதிர்பாரா விதமாக சந்தையில் வரத்து அதிகாமாகி விட்டால் விலையில் எதிர்பாரா சரிவுகள் ஏற்படும். மலர் ஏல மையங்கள் மூலம் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு இந்த ஆபத்து அதிகம். பிரிட்டனின் டெஸ்கோ போன்ற சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு விநியோகிக்கும் பண்ணைகளும் விலை மாற்றங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.  சில பண்ணைகள் வருட முழுமைக்குமான விலை ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதுண்டு.

கொய்மலர் வர்த்தகத்தில் எண்பதுகளில் பொதுவாக ஒரு பேச்சு வழக்கு உண்டு – “இயற்கை, மலர்களுக்கு வேர்களைத் தந்தது; ஆனால் அதற்கு சிறகுகள் தந்தது நெதர்லாந்துதான்” என்று. உண்மைதான். 2017-ம் ஆண்டின் ”ராயல் ஃப்ளோரா ஹாலந்து” நிறுவனத்தின் வருட வர்த்தக மதிப்பு 4.7 பில்லியன் யூரோக்கள். இது 2016-ஐ விட 1.2% அதிகம்.

கொய்மலர் பெட்டிகளைக் கையாளும் கார்கோ விமானங்கள்

கென்யாவைப் பொறுத்தவரை, அதன் மொத்த விற்பனையில் காதலர் தின விற்பனை மட்டுமே 30 சதவிகிதம் இருக்கும் என்றுதான் நினைக்கிறேன். கொய்மலர் ஏற்றுமதியில் மூன்றாமிடத்தில் இருக்கும் நாடு கென்யா. ஐரோப்பிய கொய்மலர் சந்தையில் கிட்டத்தட்ட 38 சதவிகிதப் பங்கு கென்யாவினுடையது. ஜப்பான், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா உட்பட கிட்டத்தட்ட 60 சேரிடங்களுக்கு கொய்மலர்களை ஏற்றுமதி செய்கிறது.

கொலம்பியாவின் மலர் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு அமெரிக்காவிற்குத்தான் செல்கிறது. இது 2016-ன் கணக்கு. 2016-ல் ஏவியான்கா என்ற ஒரு விமான கார்கோ நிறுவனம் மட்டுமே காதலர் தின ஏற்றுமதியாக பத்து நாட்களில் 9600 டன்னுக்கும் மேலாக அனுப்பியிருக்கிறது.

ஈக்வடாரின் பெரும்பாலான கொய்மலர்ப் பண்ணைகள் அமைந்திருப்பது, அதன் மத்தியில் ஆண்டஸ் மலைகளில், 9000 அடிகளுக்கு மேல் கொடபாக்ஸி எரிமலைக்கு அருகில். அதன் மொத்த ஏற்றுமதியில் 27 சதவிகிதம் ரஷ்யாவிற்குச் செல்கிறது. 4000 ஹெக்டர்கள் வளர்ப்புப் பண்ணைகளில் வருடத்திற்கு 160,000 டன்கள் கொய்மலர்களை உற்பத்தி செய்கிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கிறது. 2017 காதலர் தின பருவத்தின் சிகப்பு கொய்மலர்களின் மொத்த ஏற்றுமதி  13766 மெட்ரிக் டன்கள் என்கிறது ஈக்வடாரின் குய்டோ பன்னாட்டு விமான நிறுவனம். காதலர் தின பருவத்திற்கு 2016-ல் குய்டோ பயன்படுத்திய கார்கோ விமானங்களின் எண்ணிக்கை 201. 2017-ல் அதனை 235-ஆக அதிகரிக்க வேண்டியிருந்தது என்று தெரிவிக்கிறது.

~oOo~

நான் தற்போது பணிபுரியும் நிறுவனத்தின் அடையாள நிறம் சிகப்பு. அலுவலகம், பணிபுரிபவர்களின் உடைகள், தரக் கட்டுப்பாடு, தரம் பிரிக்கும் அறைகள், விமான நிலையம் செல்லும் குளிரூட்டப்பட்ட டிரக்குகள் அனைத்துமே சிகப்பு வண்ணம் கொண்டவை. நிறுவனத்தின் அடையாள வாசகம் “Pure Expressions” (தூய வெளிப்படுத்துதல்கள்”?). காதலர் தினத்திற்கு மட்டுமல்ல, எல்லா சமயங்களுக்கும் சூழ்நிலைகளுக்குமான வாசகம்தானே?.

2012-ன் பிப்ரவரியின் முதல் நாள். அப்போது கென்யா வந்து ஏழெட்டு மாதங்கள்தான் ஆகியிருந்தன. “நியூ ஹாலந்த் ஃப்ளவர்ஸ்” என்ற வளர்ப்புப் பண்ணையில் உற்பத்திப் பிரிவில் மேலாளராயிருந்தேன். பண்ணை அமைந்திருந்தது கடல் மட்டத்திலிருந்து 2400 மீட்டர்கள் உயரத்தில். ஏனோ அவ்வருடம் குளிர் அதிகமிருந்தது. இரவின் குறைந்த வெப்பநிலை மைனஸ் ஒன்று/இரண்டிற்கு இறங்கியது. காதலர் தின ஏற்றுமதிக்கு எங்கே சிகப்பு ரோஜாக்கள் சரியான நேரத்திற்கு வராமல் போய்விடுமோ என்ற பயம் வந்தது. விடிகாலை நான்கு மணி அளவில்தான் வெப்பநிலை மிகக் குறைவதால், அந்நேரத்தில் பசுங்குடில்களுக்குள் பெரிய பெரிய டின் ட்ரம்களை வைத்து சருகுகள்/விறகுகள் கொண்டு புகையெழுப்பலாம் என்று முடிவு செய்தோம் – பசுங்குடிலின் வெப்பநிலையை கொஞ்சமாவது உயர்த்துவர்க்கு.

விடிகாலை நான்கு மணி. ஒரு சிகப்பு ரோஜா பசுங்குடிலினுள். பணியாளர் புகை மூட்டுவதற்கு தயாரிப்புகள் செய்துகொண்டிருந்தார். வெளியில் குளிர் கவிந்திருந்தது. வெளிப்பாதையின் விளக்கு வெளிச்சம் உள்வரை விழுந்திருந்தது. சிகப்பு மலர்கள் அமைதியாய் அழகாய் நின்றிருந்தன; அவை நடப்பட்டு ஒன்றரை வருடங்கள்தான் ஆகியிருந்தது. பின் பதின்ம வயதுகளிலிருக்கும் பெண் குழந்தைகள் போன்றிருந்தன. கென்யாவிற்கு வந்த புதிதென்பதால் அப்போதெல்லாம் இளையராஜாவின் பாடல்கள்தான் “ஹோம் சிக்”-கிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்தன. இந்த சூழ்நிலைக்கு, இந்த நொடிக்கு இளையராஜாவின் எந்த பின்னணி இசை பொருத்தமாயிருக்கும் என்று மனது யோசித்தது. சட்டென்று “இதயத்தைத் திருடாதே”-யின் பனியோடு பயணிக்கும், கேட்டுக் கேட்டு மனதிலே ஒவ்வொரு பகுதியும் பதிந்துபோன அப்பின்னணி இசை துவங்கியது. அதன்பின் கென்யாவில் பசுங்குடிலில் இருக்கிறோம் என்ற நினைவு நழுவியது.

One Comment »

  • Rajkumar said:

    Hi Vengadesh, Nice. Have an image substantiate the writing.

    # 5 February 2018 at 1:01 am

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.