முகப்பு » அறிவியல், கட்டுரை, சூழலியல்

சஹாராவில் இருந்து அமெரிக்காவிற்கு

இரு பெரும் அமெரிக்கக் கண்டங்களின் பெயரைக் கேட்டதுமே உங்களுக்கு என்ன ஞாபகம் வரும். தென்னமெரிக்கா என்றால் அமேஸான் மழைக்காடு. மத்திய அமெரிக்கா என்றால் உலகின் சர்க்கரைக் கிண்ணமான க்யூபா. வட அமெரிக்கா என்றால் பமீலா ஆண்டர்சன் புகழ் ப்ளோரிடாவின் கடற்கரைகள். அமெரிக்கப் பெருங்கண்டம் இப்படி செழிப்பாக இருப்பதற்கு முக்கியக் காரணம் ஆப்ரிக்கா. அட்லாண்டிக் பெருங்கடல் தாண்டி வந்து அந்த கண்டம் அமெரிக்கக் கண்டத்திற்கு அவ்வளவு செய்திருக்கிறது. அதன் பசுமையாகட்டும். சுற்றுலா செல்ல ஏதுவான இடங்களாக இருக்கட்டும். எல்லாவற்றையும் வளர்த்து எடுத்தது ஆப்ரிக்காதான்.

இந்தப் பத்தியைப் படித்தவுடன் உங்களுக்கு அட்லாண்டிக் அடிமை வியாபாரம் transatlantic slave trade என்ற வரலாற்றின் கருப்புப் பக்கங்கள் நினைவுக்கு வரலாம். கொத்துக்கொத்தாய் கரும்புத் தோட்டங்களுக்கும் வீட்டு வேலைக்கும் அடிமைகளாக ஆப்ரிக்கர்கள் அட்லாண்டிக் கடல் கடந்து பிடித்துச் செல்லப்பட்டனர். அமெரிக்காவின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்கு இன்றிமையாதது. ஆனால் இங்கு நாம் பேச இருப்பது ஆப்ரிக்க மண் பற்றி அல்ல. ஆப்ரிக்கப் புழுதி பற்றி.

ஆப்ரிக்கப் புழுதிக்கும் அமெரிக்கச் செழிப்புக்கும் என்ன சம்பந்தம். நிறைய இருக்கிறது. வடக்கு ஆப்ரிக்காவின் மூன்றில் ஒரு பகுதியை அடைத்திருக்கும் சகாரா பாலைவனம் முழுக்கக் கொட்டிக் கிடப்பது மண். அந்தப் பாலைவனம் ஒரு காலத்தில் மழை தொடர்ச்சியாகப் பொழியும் பகுதியாக இருந்தது. ஒரு காலம் என்றால் உடனே மில்லியன் கணக்கில் எல்லாம் எண்ணாதீர்கள். ஆராய்ச்சிகள் 6000 வருடத்திற்கு முன்னர்தான் சகாரா முழு பாலைவனமாக ஆனதாகச் சொல்கிறார்கள். ஆனால் செத்தும் கொடுத்த சீதக்காதி கதையாய் அது அட்லாண்டிக் தாண்டி அமெரிக்காவிற்கு கொட்டிக் கொடுக்கிறது.

சகாரா பாலைவன மண் வெறுமனே சிலிக்கான் டையாக்ஸைடு அல்ல. ஏற்கனவே இருந்த தாவரங்கள் மற்றும் உயிர்களின் சாம்பல் நிறைந்த மண். மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் என்று பல நுண் சத்துகள் அதில் அதிகம். உலகின் உரக்கிடங்கு என்று சொன்னால்கூட மிகையில்லை. நீர், ஈரப்பதம், தாவர வேர் என்ரு மண்ணைப் பிடித்து வைக்க ஏதுமின்றி வருடா வருடம் டன் கணக்கில் அந்த மண் புழுதிப் புயலாய் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கிறது. சுமார் ஒரு வார காலம் ஆகும் இந்தப் பயணத்தில் அது பல சூழியல் நிகழ்வுகளை நடத்திச் செல்கிறது. அவற்றில் பெரும்பகுதி அட்லாண்டிக் கடலிலும், குறிப்பிடத்தக்க அளவு தென்னமெரிக்காவின் வட பகுதி, மத்திய அமெரிக்கா மற்றும் அதைச் சுற்றிய தீவுகள், ப்ளோரிடா போன்ற வட அமெரிக்காவின் தென்பகுதியில் விழுகிறது.

இந்த மத்திய அமெரிக்கத் தீவுகள், பவளப் பாறை அடுக்குகளால் ஆனவை. வெறுமனே சுண்ணாம்புச் சத்து மட்டும் கொண்ட அதில் எதுவும் வளர்வது கடினம். ஆனால் ஆப்ரிக்க மண் விழுந்து, இந்தச் சத்துகளெல்லாம் கிடைக்கையில் அந்தத் தீவுகள் பசுமையாய் உயிர்த்து எழுகின்றன. அதேதான் ஃப்ளோரிடா போன்ற மாகாணங்களிலும். அந்த மரங்கள் அடர்ந்த கடற்கரைகளுக்கு ஆப்ரிக்க மண் தரும் சத்துகளும் காரணம். உலகத்துக்கே எர்வா மேட்டின் தயாரித்துத் தரும் அற்புத இடமான அமேஸான் மழைக்காடுகளுமே இந்த ஆப்ரிக்க மண்ணால் பயன்பெறுகின்றன. இது கேட்பதற்கு கோடீஸ்வரன் ஒருவன் மாதச்சம்பளக்காரனிடம் கடன் பெறுவதுபோல் தோன்றலாம்(உண்மையில் அவர்கள் மாக்தச்சம்பளக்காரர்களிடம் இருந்தும் கடன் பெறுகிறார்கள் என்பது வேறு கதை).

அமேஸான் மழைக்காடுகளின் பெரும்பான்மை ஊட்டச்சத்துச் சுழற்சி என்பது தற்காற்புடையது. தழைச்சத்தை பெரும்பாலும் மரங்களில் இருந்து கீழே விழுந்து அழுகும் இலைகளும் காய்களுமே கொடுத்துவிடும். மீதமிருப்பவை ஒரு சுழற்சி ஆனால் இந்த பாஸ்பரஸ் மரங்களின் உடல் பாகங்களில் தேங்கி விடும். மிச்சம் மீதி பாஸ்பரஸையும் ஆறுகள் அடித்துக்கொண்டு போய்விடும் அந்தப் பாஸ்பரஸ் குறைபாட்டை ஆப்ரிக்க மண் பூர்த்தி செய்கிறது. அந்த இடத்தின் வெயில் தரையில் விழாத அளவு மரங்களடர்ந்த பசுமைக்கு ஆப்ரிக்காவும் ஒரு காரணம்.

அதெல்லாம் சரி. இந்த மண் ஆப்ரிக்காவில் இருந்து தான் வந்திருக்க வேண்டுமா? அமெரிக்காவிலேயே இரு பாலை வனங்கள் உண்டே.தென் அமெரிக்காவில் அடகாமா பாலைவனம் மற்றும் வட அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணம் ஆகியவற்றை உள்ளடக்கிய மேற்கு அமெரிக்கப் பாலைவனம். இவ்வளவு இருக்க கடல் கடந்து இருக்கும் ஆப்ரிக்கச் சகாராவுக்கு புகழ் கொடுப்பானேன்?

ஆய்வுகள் அந்த மண் சகாராவில் இருந்து வந்ததாக மண்ணில் அறைந்து சத்தியம் செய்கின்றன. ஒவ்வொரு இடத்தின் மண்ணுக்கும் ஒரு குறிப்பிட்ட வேதிக்கலவை உண்டு. புவிவேதியியலில் இதை புவிவேதிக் கலவை அமைப்பு geochemical makeup என்கிறார்கள். அமேசான், மத்திய அமெரிக்கத் தீவுகள், ஃப்ளோரிடா பிரதேசங்களில் இருக்கும் மண்ணுக்கு ஆப்ரிக்க மண்ணின் புவிவேதிக் கலவை அமைப்பு இருக்கிறது.அதனால்தான் திட்டவட்டமாகச் சொல்கிறார்கள்.

நாசாவின் Cloud-Aerosol Lidar and Infrared Pathfinder Satellite Observation, சுருக்கமாய் கலிப்ஸோ CALIPSO என்ற செயற்கைக்கோளைக்கொண்டு புழுதிப் புயல்களின் முப்பரிமாண பிம்பத்தை நான்கு ஐந்து ஆண்டுகள் படமெடுத்திருக்கிறார்கள். அட்லாண்டிக்கின் மேல் பறந்து எடுத்த புகைப்படங்கள், துகள்களின் அதிகபட்ச உயரம் இவையெல்லாம் வைத்து போட்ட கணக்குப் படி வருடத்திற்கு ஏறக்குறைய 180 மில்லியன் டன் மணல் புழுதியாக அட்லாண்டிக்கைக் கடக்கிறது. (உபரித் தகவல்: இதேபோன்ற ஆனால் அதிக தூரம் பயணிக்காத புழுதிப் புயல்தான், வளைகுடாப் பகுதிப் பாலைவனங்களில் இருந்து புறப்பட்டு அக்கம்பக்கம் இருக்கும் ஆழமில்லாப் கடற்பகுதியில் விழுந்து பவளப் பாறைகள் மூலம் தனி சூழ்மண்டலத்தையே வாழ வைக்கின்றன).

இந்தப் புழுதிப் புயல்களால் அமெரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதிக்கு இன்னொரு நன்மையும் உண்டு. இந்தப் புயல்கள் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கையில் அங்கிருக்கும் காற்றின் ஈரம் உறிஞ்சும் தன்மையைக் குறைக்கின்றன. மேலும் காற்றில் பறக்கும் புழுதி கடலின் மீது விழும் சூரிய வெப்பத்தின் அளவைக் குறைக்கின்றன. கடல் வெப்பமாகி, காற்று மேலெழும்பி காற்றழுத்தம் உருவாவதால்தானே சூறாவளிகள் உருவாகின்றன. கடல் வெப்பமாகவில்லை என்றால் அமெரிக்கக் கிழக்குக் கடற்கரை நிம்மதி பெருமூச்சு விடும். அதிக அளவு புழுதி காற்றில் வந்த வருடங்களில், அமெரிக்கக் கடற்கரையைச் சவட்டிக் களைந்த சூறாவளிகளின் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகக் குறைந்தது.

ஆனால் இந்தப் புழுதிப் புயல்களுக்கு கொஞ்சம் அழுக்கான பக்கமும் உண்டு. கடல்பரப்பில் விழும் இவை திடீரென்று பாசிகளின் வளர்ச்சிக்குக் காரணமாகலாம். அந்தப் பாசிகள் அவற்றின் கீழிருக்கும் உயிரிகளுக்கு சூரிய ஒளி கிடைப்பதை மொத்தமாய் தடை செய்து உணவுச் சங்கிலியைச் சேதப்படுத்தலாம். அல்லது நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளைக் கடல்கடந்து கொண்டுவந்து சேர்க்கலாம்.

இப்படி கடல்கடந்து புழுதி பறக்கையில் தீவிர புறஊதாக்கதிர் தாக்கத்தால் நுண்ணுயிர்கள் இருந்தாலும் இறந்துவிடும் என்று நினைத்த விஞ்ஞானிகளின் ஊகத்தில் இந்தப் புழுதிப் புயல் மண்ணள்ளிப் போட்டது. காற்றில் இருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வகத்தில் சோதித்துப் பார்க்கையில் அவற்றில் உயிருள்ள நுண்ணுயிர்கள் இருந்தது தெரிய வந்திருக்கிறது. ஆகவே நிஜமாகவே இவை நோய் பரப்பும் சாத்தியக் கூறுகள் உண்டு.

மேலும் இவை பெரிய புழுதிப் படலமாய் வெகு நுண்ணிய துகள்களோடு வருவதால், சுவாசக் கோளாறு, ஆஸ்துமா உடையவர்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். சில நேரம் விமானப் போக்குவரத்து பாதிப்படைகிறது. அதெல்லாம் விடுங்கள். நமக்கு நாமே அள்ளிப்போட்டுக்கொண்ட மண் இதில் உண்டு.

சகாராவின் தெற்குப் பகுதியில் ஓரளவு விவசாயம் நடைபெறக் கூடிய இடங்களில், வயல்களில் இருந்து வரும் மண்ணும் இப்படிக் கடல் கடக்கிறது. அந்தப் புயலில் ஒட்டிக்கொண்டு விவசாயத்திற்குத் தெளிக்கப்படும் நச்சு நிறைந்த பூச்சிக்கொல்லிகளும் கடல்தாண்டுகின்றன. ஆப்ரிக்காவைப்போல சீனாவில் இருந்து கிழக்கு நோக்கி அடிக்கும் காற்றும் புழுதியை அமெரிக்கக் கண்டத்தில் சேர்க்கிறது. மின்சார உற்பத்திக்கு வருடத்திற்கு மில்லியன் டன் கணக்கில் நிலக்கரியை எரிக்கும் சைனாவில் இருந்து நிலக்கரி எரித்த சாம்பல், கொஞ்சம் பாதரசம் இவையும் அமெரிக்காவுக்கு வந்து சேர்கின்றன. சுற்றி இருக்கும் காற்றில் பூச்சிக்கொல்லிகளும், பாதரசமும் இருக்கிறதென்றால் நாமும் பீதியாவோம்தானே.

இந்தப் புழுதி சுழற்சி இப்படி பல முக்கியமான பின்னல்களை அவிழ்க்கவும், சில தனித்தனியாகக் கருதப்பட்ட விஷயங்களை ஒன்றாக முடிச்சிடுவதாலும் செயற்கைக்கோள் மூலம் உலகெங்கும் நிகழும் இந்தப் புழுதிச் சுழற்சியைப் பற்றி இன்னமும் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.

அமெரிக்காவை செழிப்புறச் செய்கிற கணக்கில் பார்த்தால் மண்மணம் கமழும் சினிமாக்களில் பெண்கள் மண் வாரித் தூற்றுவதும் வாழ்த்துதானே. ஜெய் காந்திமதி

One Comment »

  • சங்கரனார் said:

    வந்தே மாதரம்.அருமை. பாரதத்தின் ராஜஸ்தானில் உள்ள பாலைவனத்தினால் பாரதத்திற்குள்ளும் வெளியிலும் ஏற்படும் பாதிப்புகளை ஆராய்ச்சி செய்கிறார்களா?. நமக்கு இதனால் பலமும் பலவீனமும் இருக்கலாமோ?. வாழ்க பாரதம். ஜெய்ஹிந்த்.

    # 7 February 2018 at 9:45 pm

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.