வில்லியம் காஸின் ஐம்பது இலக்கியத் தூண்கள்

பென் ஜான்சனின் ரசவாதி

என் மனப்பாங்கிற்கு ஏற்ற மனிதர்.  மத்தீஸின் துணிவான நேரடி ஓவியக் கோட்டைப் போல எளிமையான கவித்துவ உணர்ச்சி நீவல்களை அளிக்கும் திறன் கொண்டவர். அதே சமயத்தில் நபோகோவையே விஞ்சும் அளவிற்கும் மிகச் சிக்கலான நுணுக்கத்துடன் எழுதக் கூடியவர். ரெப்லேயையும் ஜாய்சையும் போல் அவர் ஒரு பெரும் சோதனையாளர். ‘ரசவாதி’யை (அவரது ‘தொப்பை”யே மிக அருமையானது) படிப்பது பூங்காவில் உலவுவது போல் சுலபமான காரியம் அல்ல. சொல்லப் போனால் அது உண்மையில் ஒரு கடுமையான, சில சமயங்களில் அருவருப்பாகவும் இருக்கக்கூடிய மலையேறும் முயற்சிதான். ஷேக்ஸ்பியர் இவரைக் காட்டிலும் புத்திசாலியாக இருக்கலாம். ஆனால் இவர் அளவிற்கு அவர் அறிந்திருக்கவில்லை. இப்போதெல்லாம், அதிகமாக தெரிந்து வைத்திருப்பது ஒரு போரடிக்கும் ஆசாமியின் அடையாளமாகவும், ஆளுமையின் குறைபாடாகவும், பணியிடத்தில்  முன்னேற்றத் தடையாகவும் கருதப்படுகிறது. ஜான்சன் அருமையான பட்டியல்களையும் உருவாக்கினார்.  எனக்கு பட்டியல்கள் என்றால் உயிர். அவரது பட்டியல்கள் ரபெலேயின் உச்சங்களை எட்டவில்லை என்றாலும் கணிசமான கலோரிகளை அளிக்கக்கூடியவை. உண்மையான ரசவாதிகள் ஈயத்தை தங்கமாக மாற்றுவதில்லை; அவர்கள் உலகை வார்த்தைகளாக மாற்றுபவர்கள்.
 

ஜேம்ஸ் ஜாய்சின் யுலிசிஸ்

மேல்நிலைப் பள்ளியிலிருந்தபோது ஒரு காலத்தில், தடை விதிக்கப்பட்டிருந்த, இன்னமும் “கில்மாவாக” தொனிக்கும் இந்த புத்தகத்தின் பிரதியொன்றை, என் பிறப்பிடத்தில், பிடிவாதமாக மதவொழுங்கை நிலைநிறுத்தும் நூலகரின் கண்களுக்குப் புலப்படாமல் எடுத்துச் செல்ல முயன்றேன். ஆனால் அப்படியொரு அதிர்ஷ்டம் எனக்கு கிட்டவில்லை. அவரது கருப்பைகளை சபித்திருப்பேன், எனக்கவை இருக்குமிடம் தெரிந்திருந்தால். ஆனால் டாக்டர் பேன்கிளாஸ் கூறுவது போல் அனைத்தும் நன்மைக்கே, ஏனெனில் அப்போது எனக்கு யுலிசிஸ் படிக்குமளவிற்கு வயாதாகியிருக்கவில்லை. அதனால் அதைப் படித்தபோது நான் அதிசயத்தில் வாயடைத்து நிற்கவில்லை. அதற்கு பதிலாக அதை நகலிக்கும் முயற்சிகளில் தள்ளப்பட்டேன். டாண்டேயைப் போல், மில்டனைப் போல், ப்ரூஸ்டைப் போல், காப்ரியல் கார்சியா மார்க்கெஸ்ஸைப் போல் ஜாய்சும் நகலிக்க முடியாத உயரத்தில் இருக்கிறார். அவர் பிடியிலிருந்து தப்பிப்பதற்கு எனக்கு பல வருடங்கள் எடுக்கும். இப்போதும் வேலை செய்கையில் யுலிசஸை நான் தவிர்க்கிறேன். “ஒய்யாரமான, கொழுத்த பக் முல்லிகன்…” இதைத் தொடர்ந்து வருவது ஜாய்சின் வார்த்தைகளாக மட்டுமே இருக்க முடியும்.

ஜேம்ஸ் ஜாய்சின் ஃபினிகன்ஸ் வேக்

…இருந்தாலும், ஆனா லிவியா ப்ளூராபெல், லிஃபி நதிக்கரையில் ஒரு பாறையின் மீது துணி துவைத்துக் கொண்டிருக்கையில் பாடும் பாடலின் வசீகரத்தை ‘சைரன்கள்’ பாடிய எந்த பாடலாலும் கைப்பற்ற முடியவில்லை. ஒரு காலத்தில் இலக்கிய மேட்டிமைவாதிகளாகிய நாம், அது ஏதோ கொள்ளை விலைக்கு விற்கும் அதிதீவிரமான புதுப்பாணியைப் போல், FW உடையணிந்து வளையவந்தோம். ட்ரிஸ்டாம் ஷேண்டியைப் போல் இதுவும் நிரந்தரமாக அவான்-கார் பட்டியலில் இடம்பெற்று வெகுஜனப்படுத்தலை எதிர்க்கும் தடுப்பாற்றல் கொண்டது. வேறு வழியின்றி பட்ட மேற்படிப்பு மாணவர்கள் அதைச் சீரழிக்க கட்டாயப்படுத்தப்படுவார்கள். இசைக்கும் அதன் இனிமை அடிக்குறிப்புகளால் மூழ்கடிக்கப்படும் என்பதிலும் சந்தேகமில்லை.
இப்படைப்பின் சில பகுதிகள் ஜாய்சின் குரலில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவரது ஆற்றுகை மறக்கமுடியாத வகையில் முற்றிலும் நம்பத்தக்கதாக அமைந்திருக்கிறது. பத்திகள் நினைவில் ரீங்கரிக்கின்றன.  நான் அறிந்தவரையில், உலகின் மிக நெகிழ்வான படைப்புகளுள் வேக்கை நிறைவு செய்யும் பகுதிகளும் அடங்கும். அது வெறும் வார்த்தை ஜாலங்களில் வெறித்திருக்கும் உறைந்த படைப்பு என்ற தலைகீழ் எண்ணம் முற்றிலும் தவறானதே. FW நவீனத்துவ உச்சங்களின் உச்சம். ஒரு எழுத்தாளர் அடிப்படையான வகையில் அதனால் பாதிக்கப்படாமல் இருப்பதென்பது  அவர் சமகாலத்தில் வாழாததற்குச் சமம். ஒருவர் தன் காலத்தில் வாழாமலிருப்பது ஒரு பாரதூரமான தார்மீகக் குறையே. ஆனால்  அதே காலத்திற்கு எதிர்க்குரல் ஆற்றாமலிருப்பதும் அதற்கு நிகரான, விழுமியம் மற்றும் அறிதல் சார்ந்த ஒரு குறையே.

ஃபிலான் ஓ பிரயனின் அட்-ஸ்விம்-டூ-பர்ட்ஸ்

பிரயன் ஓ நோலனிடத்தே ( ஃபிலான் ஓ பிரயன், மயில்ஸ் நா கோபலீன் என்று அவருக்கு இரு பட்டப்பெயர்கள்) எனக்குள்ள ஒரே பிரச்சினை அவருடைய அறிவமைதியையே சந்தேகிக்கும் அளவிற்கும் ஐரிஷ்காரரென்ற முத்திரையை அவர் மிகச் சந்தோஷமாகவே ஏற்றுக்கொண்டதுதான். கடந்த காலத்தில் எப்படி இருந்தோமோ அப்படியே இப்போதும் வாழ முயற்சி செய்யாது ஒருவர் அவரது சமகாலத்தில் வாழவேண்டும் என்று நான் நினைத்தேன். ஜாய்சையும் பெக்கட்டையும் போல் அவர் ஒரு திறமான மொழியியலாளர்; மேலும் அவர்களைப் போலவே இவரும் ஒரு இருண்மை நகைச்சுவை எழுத்தாளரும், நடைமாதிரிகளை பகடி செய்வதில் ஆசானும்கூட. இது வரையிலும் தன்பால் ஒரு மூர்க்கமான வழிபாட்டுக் குழுவை மட்டுமே அவரால் ஈர்க்க முடிந்திருக்கிறது. இது ஒரு துரதிருஷ்டமே, ஏனெனில் அவர் ஒரு சிறந்த மொழிப் புதின கண்டறிவாளரும் கூட. At-Swim-Two- Birds (பயண விடுதி, குடிமனை, பிரதிகளாலான குட்டை என்று பலவற்றை சுட்டும் பெயர்) 1939-ஆம் ஆண்டில் வெளிவந்தது. FW பதிக்கப்பட்ட மற்றும் இரண்டாம் உலகப் போர் வெடித்த வருடமும் இதுவே என்பதால், நவீனத்துவத்தின் உச்சமாகவும், அதன் மறைவிற்கான சாவுமணி ஒலிப்பாகவும் இதை அர்த்தப்படுத்திக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஓ பிரயனின் வார்த்தை வலையில் சிக்குண்டீர்களானால், அதிலிருந்து வெளியேறுகையில் சாறு உறிஞ்சப்பட்ட உலர்ந்த உமியைப் போல் அல்லாது ஊதிப் பெருத்து வெடிக்கும் அளவிற்கு செறிவூட்டப்பட்டிருப்பீர்கள். இதைக் காட்டிலும் நகைச்சுவையான புத்தகங்கள் அதிகம் கிடையாது. அருமையான நிருபரான அவர் ஒரு முழுக் குடிகாரனல்ல. சமகால இலக்கியத்தை ஐந்து மொழிகளில் படித்து, அதை இரண்டு மொழிகளில் படைத்தவர். சில சமயங்களில் சரிசமமற்றிருப்பதாக தோன்றினாலும், மேடுபள்ளங்கள் நிரம்பியிருக்கும் கடும்பாதையில் பயணிப்பதைப் போல் அல்லாது ரோலர்-கோஸ்டர் என்று அழைக்கப்படும் உருள் வண்டியில் செல்லும் சமநிலையற்ற களிப்பு அவருடையது.
 

பெக்கெட்டின் நிலைமை இவ்வாறே மற்றும் பிங்

ஒரு புனிதருடன் தனது பெயரை பகிர்ந்து கொண்டிருப்பவர். ரெல்க, வாலெரி, ஃபிளோபெர் ஆகியோருடன் எழுத்துக்கலையின் ஒரு துருவத்தின் உச்சப் பிரதிநிதி இவர். அவருடையது  முழுமையான அர்ப்பணிப்பு. அது அவர் இருப்பிற்கு அடிக்கடி பங்கம் விளைவித்தது. அனேகமாக நாமெல்லோருமே  சமரசம் செய்து கொள்பவர்கள். அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கும், தொழிலாளர் சச்சரவுகளை தவிர்ப்பதற்கும், மணவாழ்க்கையை தக்கவைத்துக் கொள்வதற்கும், போரில் பங்கெடுக்காமல் தப்பிப்பதற்கும் நமக்கும் இச்சமரசங்கள் தேவைப்படுகின்றன. கொள்கைகளும் கறைபடுகின்றன , துணிகளைப் போல் அவற்றையும் அடிக்கடி நாம் கழுவிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஷேக்கர்களைப் போல் பல விஷயங்களை கேளிக்கை, பயனற்ற அலங்காரம் அல்லது பகட்டு என்று கருதியதால் அவர், மினிமலிஸ்ட் என்று நாம் அழைக்கும் ஒரு சுருக்கவாதி. மேலும், சந்தேகமில்லாமல் அவர் சொல்வதே சரி. அவர் Nitty மற்றும் Gritty என்று இரு மொழிகளில் அருமையாக எழுதக்கூடியவர். பலவற்றை எழுதாமல் விடுவதாலேயே, எல்லாவற்றையும் சுட்டும் எழுத்துக்களில் அழுத்திக் குறுக்குவதாலேயே, அவர் ஒரு சுருக்கவாதி.  முற்றிலும் அதை தன் புத்தகத்திற்குள் கொண்டு வந்து உலகத்தை மீட்க ஜாய்ஸ் விரும்பினார். பெக்கெட்டோ நமது ஆன்மாக்களை சுத்திகரிக்க அதிலிருந்து பொருண்மையை முற்றிலும் அகற்றுவதற்கான இயலாத காரியத்தை செய்ய விரும்பினார். போர்ஹே மட்டுமே இவருக்கு நிகரான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார். எனக்குத் தெரிந்தவரையில் இவரைத் தவிர தன் கலையின் ஒளிர்வுமிக்க மகிமைக்காக தன் “உடம்பையே” தியாகம் செய்து தன் கொள்கைகளுக்காக போற்றப்படும் வகையில் ஒருவர் மட்டுமே உண்மையிலேயே “நின்றிருக்கிறார்”.  அவர் லுட்விக் விட்கன்ஷ்டைன்,  என் மிதமான மதத்தின் இரு புனிதர்களுள் ஒருவர்.
வாஷிங்டன் பல்கலை நூலகத்தில் ஒரு அருமையான பெக்கட் தொகுப்புள்ளது. ஆங்கிலத்தில் ‘Ping’, பிரெஞ்சில் ‘Bing’ போன்ற கையெழுத்துப் பிரதிகளில், கணித நுணுக்கத்துடன், இசை தோய்ந்த, எப்போதுமே ஐயப்படும், கார்டீசிய அறிவுப் பிரதியில் குறுக்கு கோடிட்டு, எழுதி, சுழியிட்டு, பக்க ஓரங்களில் எரிச்சல்படுவதை ஆசானின் கைவண்ணத்திலேயே நாம் கண்கூடாகக் காணலாம். “பிங்” பிரதியை முதன் முதலாக கையில் எடுத்தபோது என் கைகள் நடுங்கின. புனிதமான பழம்பொருட்களுக்கான மரியாதையால் அல்ல, அதன் பக்கங்களிலிருந்த அருள்மிக்க பிரசன்னத்திற்காக.

ஹோசே லெசாமா லீமாவின் பாரடீசோ

கிரகரி ரபாசாவின் மொழிபெயர்ப்பு பிரமாதமாக இருந்தாலும், காடு வெட்டவெளி ஆக்கப்பட்டிருப்பதும், இரவு விளக்கம் பெற்றிருப்பதும், சிடுக்குகள், ஒரு சிலவேனும், அவிழ்க்கப்பட்டிருப்பதையும் நம்மால் உணர முடிகிறது.  “நிலைமை இவ்வாறே” எனது சிறு இலக்கிய உலகின் ஒரு துருவமென்றால், பாரடீசோ அதன் எதிர்துருவத்தில் இருக்கிறது: இரண்டுமே அச்சுறுத்துவதாகவும், கடினமாகவும், முழு நிறைவாக, ஆனால் முற்றிலும் வேறுபடும் வகையில், படைக்கப்பட்டவை. பெக்கட்டிலும் அவர் படைப்புகளிலும் ஒரு மூர்க்கமான மிதமையை நாம் காணலாம். லெசாமா லீமா உருவத்தில் பெரியவர். அகலமான வெள்ளைத் தொப்பி (என் நினைவில்) அணிந்து க்ஃபேக்களில் கலகலவென்று பேசிக்கொண்டிருந்தவர். அன்பான அவரது கொழுத்த கரங்களைக் கொண்டு  இளம் வாலிபர்களை தொட்டபடியே அவர்களை தன் கவனத்தால் ஆசீர்வதித்தவர். “பூம்” என்று அழைக்கப்பட்ட லதீன் அமெரிக்க இலக்கிய மறுமலர்ச்சியில் பல பீரங்கி முழக்கங்கள் ஒலித்திருக்கின்றன. ஆனால் அனைத்தையும் விட என் காதுகளில் பாரடிசோவின் முழக்கமே இன்னமும் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. சந்தேகமில்லாமல், கார்லோஸ் ஃபுயெண்டஸ்ஸின் “டெர்ரா நாஸ்டிரா”, ஹூலியோ கொர்தஸாரின் “ஹாப்ஸ்காட்ச்”, காப்ரியல் கார்சியா மார்க்கெஸ்ஸின் “நூற்றாண்டு காலத் தனிமை”, காப்ரேரா இன்ஃபாண்டேயின் “பொறியுட்பட்ட மூன்று புலிகள்” – இவற்றுடன் இணைந்து அது ஒரு புதிய ஆண்டீஸ் மலைத்தொடரை  உருவாக்குகிறது. இப்போது நான் ஒரு மோசமான  ஜோக்கடிக்கப் போகிறேன்: “Sir Style” பரோக் பாணியின் ராஜாவென்றால், லிமாவே அதன் ராணி. பாண்டாகிரூயெல் கூறுவது போல் அவர்கள் குதம்வழியே காற்றை புறந்தள்ளியபடி  நீடூழி வாழட்டும்.

ஹூலியோ கொர்தஸாரின் ஹாப்ஸ்காட்ச்

பல அபாரமான லதீன் அமெரிக்க ஆசிரியர்களிருந்தாலும் ஒரு சிலரை மட்டுமே எனது ஐம்பதில் சேர்த்திருக்கிறேன். ஏனெனில் இவர்கள் மட்டுமே என்  எழுதும் கரத்தை குறிப்பிடும் வகையில் அசைத்திருக்கிறார்கள். ஆனால் ஃபுயெண்டஸ், பாஸ், நெரூடா, கார்பெண்டியர், வலேயோ, ரூல்ஃபோ, புயிக், டொனோஸோ, காப்ரேரா இன்ஃபாண்டே, சார்துயி, சாபடோ, கார்சியா மார்கெஸ், பார்கஸ் யோஸா இப்படி நீளும் பட்டியலில் உள்ளோரை நாம் ஒருக்காலும் அலட்சியப்படுத்த முடியாது . இன்றைக்கு இவ்வெழுத்தாளர்களே நாவல் கலையின் சொந்தக்காரர்கள். என்னைப் போல் அவ்வப்போது அக்கலையை முயற்சிக்கும்  மற்றெல்லோருமே வாடகைக்கு குடியிருப்பவர்கள்தான். சமகால இலக்கியத்தில் ஸ்பேனிஷ் மொழிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திற்கு ஹாப்ஸ்காட்ச்சும் ஒரு முக்கிய காரணம். செறிவான, புதுமையான, விஸ்தாரமான, நுண்ணறிவுமிக்க… இந்த வார்த்தையோடு நிறுத்திக் கொள்கிறேன், ஏனெனில் இந்த பிரத்தியேகத் தன்மையைக் வெகு சில எழுத்தாளர்களிடத்தேதான் என்னால் இனம்காண முடிந்திருக்கிறது. உதாரணத்திற்கு ஜாய்சையே எடுத்துக் கொள்ளுங்கள். உலர்த்தப்பட்டிருக்கும் துணிகளிலிருந்து, அவை பிரகாசமாக இருப்பதால், பொத்தான்களை காக்கை திருடிச் சென்று தன் கூட்டில் மிளிறும் இன்னொரு வெற்றிப் பதக்கமாக இருத்தி வைப்பதைப் போல்தான் அவர் புதுச் சிந்தனைகளை கண்டெடுக்கிறார். ஆனால் அவற்றின் உட்புறங்களை அவர் அறிந்திருக்கவில்லை. இறையியலின் மூர்க்கங்களையும், அதன் ஆடம்பரங்களின் அழகையும், அதன் அபாயமான மதவெறியையும் பற்றியெல்லாம் அவருக்குத் தெரியும். ஆனால் அதன் உள்ளார்ந்த அறிவுத்திறனின் ஆற்றலை அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால் பல பெரும் லத்தீனியர்களுக்கு இது தெரிந்திருக்கிறது. அவர்கள் புத்திசாலிகள். அவர்களுள் பலர் விரகர்களாக பணியாற்றி இருக்கிறார்கள். பதட்டமற்ற மெல்லமைதி வாய்ந்தவர்கள். அவர்கள் நாடுகள் அயலிட அரசியல்வாதிகளால் சீரழிக்கப்பட்டு, உள்ளூரில் முளைத்த சர்வாதிகாரிகளால் வறுமையாக்கப்பட்டதை அவர்கள் கண்கூடாக பார்த்திருந்தார்கள். அவர்கள் செம காண்டிலிருக்கிறார்கள்.
 

ஹோர்ஹே லூயி போர்ஹேயின் லாபிரிந்த்ஸ்

மற்றொரு அபார மூளை. இங்கே, அதைச் செய்ய முடியும் என்பதை நிரூபிப்பதற்காகவே, தன்னை நூலகத்தால் பண்படுத்தப்பட்ட ஒரு மனிதனின் விசுவாசமான,  விளையாட்டுத்தனமிக்க,  ஐவுற்றறியும் அறிவின்  விழிப்புணர்வின் மையத்தில் இருத்தப்படுகிறோம். என்ன ஒரு ருசிகரமான நகைமுரண்மிக்க விலகலிலிருந்து (வார்த்தைகளைக் கொண்டு) இவர் உலகின் மீது கவனம் செலுத்துகிறார். முழுப் பார்வையிருந்தும் நாம் எவ்வளவு குறைவாகவே தரிச்சிக்கிறோம் என்பதையே இக்குருட்டு தீர்க்கதரிசியும் தரிசிக்கிறார்; நமக்குத் தெரிந்தது என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதில் புரிந்து கொள்வதற்கு எவ்வளவு குறைவான விசயங்களே இருக்கின்றன. ஆனால் போர்ஹே விரக்தி அடையும் மனிதர் அல்ல;அதுவும்கூட ஒரு விதமான மமதையே. அதுமட்டுமல்லாது சூரியனுக்கு கீழே எதுவுமே புதிதல்ல, நமக்கு புதிதாக பார்க்கக் கிடைக்கும் காட்சியும்கூட: சூரியனே சந்திரனுடன் டிராக் ரேசிங் செய்து தன் அழிவிற்கு விரையும், எண்ணாமல் துணியும் இளைஞன் என்று; அது ஒரு வெம்மையான பாறை என்று; கடவுளின் மனதில் எழும் ஒரு சிந்தனை என்று; சுட்டெறிக்கும் புலனுணர்வு மூட்டை என்று; அதுவென்று; அதுவல்லவென்று; போர்ஹே அருமையான கவிஞரும்கூட, ஆனால் கதையையும் கட்டுரையையும் கலந்து வினோதப்படுத்தி அவற்றைப் பற்றிய நமது புரிதலில் ஒரு புரட்சியை அவர் ஏற்படுத்தினார். அதற்காகவே அவர் மன்னிக்கப்படவோ மறக்கப்படவோ மாட்டார்.
 

தாமஸ் மானின் மந்திர மலை

இரண்டு அல்லது மூன்றிற்கு மேற்பட்ட தொழில் சார்ந்த தரிசனங்களை கண்டடைவதற்கு நமக்கு ஒரு ஆயுள் போதாது. அனேகமாக எனது பதினைந்தாவது வயதில்தான் “ஒழுங்கின்மையும் பால்ய காலத்து வருத்தமும்” என்ற கதையை முதன்முதலாகப் படித்தேன் என்று நினைக்கிறேன். ஆனால் அதைப் படிக்கையில் அப்போது எனக்கு ஏற்பட்ட உணர்வெழுச்சியின் ஒரு பகுதி இப்போதும் என் நினைவிலிருக்கிறது. “தாம்ஸ் மானைப் போல்” இருக்க வேண்டும் என்று தீவிரமாக ஆசைப்பட்டேன். இது அவரைப் போல் ஆழமாகவும் தாக்கத்துடன் எழுதவேண்டும் என்பதாலோ அவருடையது போன்ற கலைத்திறனையும் அறிவாற்றலையும் நானும் பெற்றிருக்க வேண்டும் என்பதாலோ ஏற்பட்ட விழைவல்ல. அந்த நகலிக்கும் விழைவை புரிந்துகொள்ள முயற்சித்தது இன்னமும் நினைவிலிருக்கிறது. சிறிது காலத்திற்கு பிறகே அதற்கான உண்மையான காரணத்தை  என்னால் அர்த்தப்படுத்திக்கொள்ள முடிந்தது. அந்த கதையைப் போலவே– அதன் அளவான ஆழமும், அதன் நுண்மையும், ஆம், தன் சுயமுக்கியத்துவத்தை பற்றிய அதன் பிரக்ஞையும், ஏன், அதன் சிடுக்குகளும், அதன் கதைக் கருவும் என்னுள் நிலைத்திருக்க நான் விரும்பினேன். அதற்குப் பிறகு அவர் எழுதிய அனைத்தையும் பெரும் தீவிரத்துடன் புசித்தேன், குறிப்பாக “வெனிசில் மரணத்தை”. டாக்டர் ஃபாஸ்டஸும் அதற்கு நிகரான ஒரு போற்றத்தகும் நாவல்தான் என்று நினைக்கிறேன். ஆனால் வேறெந்த நாவலையும்விட “மந்திர மலையைத்” தான் அதிக முறை படித்திருக்கிறேன். இளைஞனாக இருந்தபோது அதை உன்னிப்பாக படித்து அதை ஒரு அதிநுட்பான பிரதி உலகமாக பார்ப்பதற்கு கற்றுக் கொண்டேன். அதில் பள்ளிக்கூட ஃபிரெஞ்சில் வரும் சுருக்கமான பத்திகளை படிப்பது எனக்கு ஒரு சுவாரஸ்யமான விசயமாக இருந்தது. செயிண்ட் லூயியில் ஆண்டுதோறும் நிகழும் புத்தகக் கண்காட்சியில் (அது அந்த சுற்றுவட்டாரத்தின் மிக முக்கியமான பண்பாட்டு நிகழ்வு)  சில வருடங்களுக்கு முன்னே ஈஜிப்டில் ஜொசெஃப்பின் அழகான பிரதியொன்று கிட்டியது. அதில் flyleaf என்று அழைக்கப்படும் முன்னே விடப்பட்டிருந்த வெற்றுப் பக்கத்தில் அவரை விருந்தோம்பிய பெண்மணிக்கு மான் கைப்பட எழுதியிருந்த ஒரு நன்றிக் குறிப்பு இருந்தது. அப்புத்தகத்திற்காக நான் செலவழித்தது: ஒரு டாலர்.

காஃப்காவின் நாட்டுப்புற டாக்டரும் பிற கதைகளும்

காஃப்காவே “பார்ட்டிக்கு வெகு தாமதமாக வருவதற்கான” சரியான உதாரணம். நான் வந்து சேர்வதற்கு முன்னதாக பல தசாப்தங்களாக காஃகாவைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன்; அவரை நகலிப்பவர்களையும் அவரை விமர்சிப்பவர்களையும் படித்திருந்தேன். அது ஏதோ கால்பந்து போல், அவரது பறதி மனநிலையோடு விளையாடிப் பார்த்திருந்தேன். வியப்பேன் என்ற எதிர்பாராமலே வியந்தேன், பெரிய அளவில். ஆனால் அப்போதும்கூட அவர் என் எழுத்தை “பாதிப்பவராக” மாறவில்லை. அதன் பின் காஃப்காவிற்கு – நான் பயிற்றுவித்துக் கொண்டிருந்த காஃப்காவிற்கு- நடுவே, அபாரமான கவித்துவ உரைநடையில், காஃப்காவில் ஒரு காஃப்காவாக உயிர்த்தெழுந்த ஒரு நாட்டுப்புற டாக்டரை எதிர்கொண்டேன். திடீரென்று காஃப்கா எழுதிய அனைத்துமே ஒரே சமயத்தில் ஒளிர்வு மிக்கதாகவும், உள்ளே நுழைந்து செல்லமுடியாததாகவும் என் முன் செறிவடைந்தன. காஃகாவே என் அடுத்த எழுத்துப் பணித்திட்டம், என்னால் அதைத் தொடங்க முடியுமானால்(ஆனால் ஒரு போதும் முடிந்ததில்லை). இப்போதெல்லாம் அவரது பறதி மன நிலையுடன் நான் விளையாடுவதில்லை. விளையாட்டும் இப்போது விளையாட்டாக இல்லை. பெரும் கடித எழுத்தாளரான அவர் ஒரு பெரும் நாட்குறிப்பாளரும் கூட.

Sources: A Temple of Texts, Essays by William Gass, Dalkey Archive, 2007
Further Reading

  1. Ben Johnson’s The Alchemist
    17. James Joyce’s Ulysses
    18. James Joyce’s Finnegans Wake
    19. Flann O’Brien’s At Swim-Two-Birds
    20. Beckett’s How It Is
    21. Beckett’s Ping
    22. José Lezama’s Paradiso
    23. Julio Cortázar’s Hopscotch
    24. Jorge Luis Borges’s Labyrinths
    25. Thomas Mann’s The Magic Mountain
    26. Franz Kafka’s A Country Doctor and Other Stories

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.