பொய்கள்

அன்புள்ள நார்மா,
இதை நான் சான் யுவானிலிருந்து – இங்கிருக்கும் ஒரே தங்கும் விடுதியிலிருந்து – எழுதுகிறேன். இன்று மதியம் கரடு முரடான பாதையில் அரை மணி நேர பயணத்தின் பின் அம்மாவின் வீட்டை சென்றடைந்தேன். அவளது நிலைமை நான் எதிர்பார்த்ததைவிட மோசமாக இருந்தது. நடை மிக தளர்ந்துவிட்டது. கைத்தடி இல்லாமல் அவளால் நடக்க முடியவில்லை. ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பி வந்ததிலிருந்து அவளால் மாடி ஏற முடியவில்லை. இப்போதெல்லாம் கீழ் அறையிலுள்ள சோஃபாவில் தூங்குகிறாள். ஆட்களை வைத்து கட்டிலை கீழே கொண்டு வர முடியுமா என்று பார்த்தாள். ஆனால் அவள் அறையில் அது நிரந்தரமாக பொருத்தப்பட்டிருந்ததால், அதை பிரிக்காமல் கீழே கொண்டு வர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். (ஹோமரின் பெனிலோபியிடமும் இப்படியொரு கட்டில் இருந்ததுதானே?).
அவளது புத்தகங்களும் பேப்பர்களும் மேலேயே இருக்கின்றன. கீழே அவற்றிற்கு இடமில்லை. அவளது மேசைக்குப் போகமுடியவில்லையே என்று அவளுக்கு வருத்தம்.
வீட்டில் பாப்லோ என்று ஒரு தோட்டக்காரன் இருக்கிறான். கடை கண்ணிக்கு யார் போய் வருகிறார்கள் என்று கேட்டேன். அதிகம் தேவையில்லை, தோட்டத்தில் கிடைப்பவைகளுடன், ப்ரெட்டும் சீஸும் இருந்தால் போதுமென்கிறாள். சமையலுக்கும் வீட்டு வேலைக்கும் அவளிருக்கும் கிராமத்திலிருந்து பெண் யாரையாவது வேலைக்கு அமர்த்திக் கொள்வதுதானே என்றேன். காது கொடுத்துக் கேட்க மறுக்கிறாள் – ஊரில் யாருடனும் அவ்வளவு சுமுகமான உறவில்லை என்கிறாள். பாப்லோவும் அதே ஊர் தானே என்று கேட்டால், அவன் என் பொறுப்பு. அவன் ஊர்க்காரனில்லை என்கிறாள்.
எனக்குத் தெரிந்த வரையில் பாப்லோ சமையலறையில் தூங்குகிறான். அவனைப் பார்த்தால் கொஞ்சம் மந்த புத்திக்காரன் போல் தெரிகிறது. சூட்டிகை பத்தாது.
இங்கே வந்ததற்கான முக்கிய காரணத்தை பற்றி அவளிடம் பேச இன்னும் தைரியம் வரவில்லை. அதைப் பற்றி நாளைக்கு அவளிடம் பேசப்போகிறேன். என்னிடம் நன்றாக நடந்து கொள்கிறாள். நான் வந்த காரணத்தை அவள் யூகித்திருப்பாள் என்று நினைக்கிறேன்.
போய் நன்றாகத் தூங்கு. குழந்தைகளுக்கு என் அன்பு முத்தங்கள்.

ஜான்

“அம்மா இனிமே நீ எங்க இருக்கப் போறன்றதப் பத்திப் பேசலாமா? இனி என்ன செய்யரதுன்னு பேசணுமே?”
பதில் பேசாமல் நாற்காலியில் (நகர்த்த முடியாத பழைய கட்டிலை செய்த அதே ஆசாரியால் செய்யப்பட்டிருக்க வேண்டும்) விறைப்பாக உட்கார்ந்திருந்தாள் அவரது அம்மா.
“ஹெலனும் நானும் உன்னப் பத்தி எவ்வளவு கவலப்படறோம்னு உனக்கே நல்லா தெரியும். ஒரு தடவ கீழ விழுந்து நல்லா அடி பட்டுடிச்சி. இன்னொரு தடவ கீழ விழ மாட்டென்றது என்ன நிச்சயம். நாளாக நாளாக உனக்கு வயசு கூடிட்டே போகுது. கிராமத்துல, அதுவும் உனக்கு யாரும் சுமுகமா இல்லாத இடத்துல, நெட்டுக்குத்தா மாடிப்படி இருக்குற வீட்ல தனியா இருக்கறது எனக்கென்னமோ சரியா வரும்னு தோணல.”
“நான் ஒன்னும் இங்க தனியா இல்ல. உதவிக்கு பாப்லோ இருக்கான். பாப்லோவை நம்ப முடியும்,” என்றாள் அவரது அம்மா.
“சரி…பாப்லோ இங்கதான் இருக்கான்… ஒத்துக்கிறேன். ஆனா ஏதாவது அவசரம்னா அவன நம்ப முடியுமா? போன தடவ அவன் என்ன உதவியா இருந்தான்? அப்ப மாத்தரம் உன்னால ஆஸ்பத்திரிக்கு போன் பண்ண முடியாம இருந்திருந்தா உனக்கு என்ன ஆயிருக்கும்?……”
வார்த்தைகள் வாயிலிருந்து வருவதற்குள் தான் செய்கின்ற தவறை உணர்ந்து விட்டார்.
“என்ன ஆயிருக்கும்? உனக்குதான் பதில் தெரிஞ்சிருக்கே, என்ன ஏன் கேக்கற? மண்ணுக்கு அடீல புழு பூச்சிக்கு விருந்தாயிருப்பேன். இந்த பதிலத்தான எதிர்பார்த்த?”
“அம்மா…தயவுசெஞ்சு கொஞ்சம் நிதானமா கேக்கறயா. ஹெலன் அவ இருக்கற எடத்துக்கு பக்கத்துல ரெண்டு எடம் பாத்து வச்சிருக்கா . நல்ல எடங்க. சொந்த வீட்ல இருக்கற மாதிரியே இருக்கும். அந்த எடங்களப் பத்திச் சொல்லட்டுமா?”
“ரெண்டு எடங்களா! எடம்னா? வயசானவங்கள உடுவாங்களே, முதியோர் இல்லங்கள், அந்த மாதிரி எடங்களா? அங்கயா என் வீட்ல இருக்கற மாதிரி இருக்கும்னு சொல்ற?”
“அம்மா நீ எது வேணா சொல்லிக்கோ, எம்மேலயும் ஹெலன் மேலயும் எரிஞ்சு விழுந்துக்கோ, ஆனா எதுவும் உண்மைங்கள, வாழ்க்கையோட நிதர்சனங்கள மாத்தப் போறதில்ல. ஏற்கனவே ஒரு தடவ கீழ விழுந்து பெரிய அடி பட்டுடிச்சு. அதனால இன்னும் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கே. போகப் போக நெலம இன்னும் மோசமாத்தான் போகப் போகுது. பாப்லோ தொணய மாத்தரம் வச்சுக்கிட்டு இந்த அத்துவான கிராமத்துல படுத்த படுக்கையா கெடந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சு பாத்தயா? உனக்கு உதவி தேவயாயிருந்தும் உதவி செய்ய முடியாத ஹெலனையும் என்னையும் பத்தி நெனச்சுப் பாத்தயா. ஒவ்வொரு வாரக் கடைசியிலும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் கடந்து இவ்வளவு தூரம் எங்களால பறந்து வர முடியுமா?”
“நீங்க வரணுன்னு நான் எதிர்பார்க்கல.”
“நீ எதிர்பாக்கலங்கிறதுன்னால நாங்க வராம இருக்க முடியுமா. ஒன் மேல இருக்கற அன்புதான் எங்கள வரச் செய்யுது. தயவு செஞ்சு நான் சொல்றத கொஞ்சம் அமைதியாக் கேளு. நாளைக்கு இல்ல, நாளன்னைக்கு நம்ப ரெண்டு பேரும் கெளம்பி நீஸுக்கு, ஹெலன் வீட்டுக்கு போவோம். கெளம்பறதுக்கு முன்னாடி உன்னொட முக்கியமான சாமானையெல்லாம், எத எத வெச்சுக்கணும்னு நெனைக்கிறியோ, அதயெல்லாம் பொட்டி கட்ட உதவி பண்றேன். பொட்டி கட்டி வெச்சிடுவோம். நீ அங்க போய் செட்டிலானப்பறம் இங்கேர்ந்து அனுப்பிச்சுடலாம்”
“நீஸ்லேர்ந்து ஹெலனும் நானும் அந்த ரெண்டு வீடுங்களையும் பார்க்க கூட்டிட்டுப் போறோம். ஒரு வீடு ஆண்டீப்ல இருக்கு இன்னொன்னு க்ராஸ்ல இருக்கு. ரெண்டயும் பாரு. பாத்து எப்படி இருக்குன்னு சொல்லு. நாங்க ஒன்ன கட்டாயப்படுத்தவே மாட்டோம். உனக்கு ரெண்டுமே புடிக்கலன்னாலும் பரவாயில்ல. ஹெலென் வீட்டுல தங்கிக்கோ. நாங்க உனக்கு வேற வீடு பாக்கறோம். அவசரமேயில்ல.
“நீ சந்தோஷமா, பத்திரமா இருக்கணும்னுதான் நாங்க ஆசப்படறோம், அதை நெனச்சுதான் இவ்வளவும் செய்யறோம். ஏதாவது ஏடாகூடமா நடந்துச்சுன்னா உன்ன பாத்துக்க உனக்கு பக்கத்துல யாராவது இருக்கணும்னு நெனைக்கிறோம்.
“உனக்கு முதியோர் இல்லம் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும். எனக்கும் பிடிக்காதுதான். ஹெலனுக்கும் பிடிக்காது. ஆனா நம்ம வாழ்க்கையில ஒரு கட்டத்துல நமக்கு எது நல்லதோ அதுக்காக நாம ஆசைப்படறத விட்டுக் கொடுக்க வேண்டி வரும். பாதுகாப்புக்காக சுதந்திரத்த விட்டுக் கொடுக்க வேண்டி வரும். இந்த ஸ்பெயின் கிராமத்துல, இந்த வீட்டுல உனக்கு ஒரு பாதுகாப்பும் இல்ல. நீ ஒத்துக்க மாட்டேன்னு தெரியும். ஆனா அதுதான் மறுக்க முடியாத உண்மை. உனக்கு உடம்பு சுகமில்லாம போனா யாருக்கும் தெரியாது. நீ மறுபடியும் கீழ விழுந்து சுய நினைவு இல்லாம போகலாம். இல்ல கால ஒடச்சிக்கலாம். ஏன் செத்துக் கூட போகலாம்.”
அவர் சொன்னவை எதுவும் நடக்க சாத்தியமில்லை என்று குறிக்கும் வகையில் கையை ஆட்டி மறுத்தாள் அவரது அம்மா.
“ஹெலனும் நானும் சொல்ற இடமெல்லாம் பழய காலத்து முதியோர் இல்லம் போல இருக்காது. பாத்து பாத்து கட்டியிருக்காங்க. நல்ல மேற்பார்வையோட நல்லா பராமரிக்கறாங்க. காசு கொஞ்சம் அதிகம்தான், ஆனா அங்க வரவங்கள நல்லா பாத்துக்கறதுக்காகத்தான் அதிகமா சார்ஜ் பண்றாங்க. கொடுத்த காசுக்கு ஏத்த பர்ஸ்ட் கிளாஸ் உபசரிப்பு. உனக்கு காசு அதிகம்ன்னு தோணிச்சுன்னா நானும் ஹெலனும் சந்தோஷமா பணம் தறோம். க்ராஸ்ல உனக்குன்னு தனி அபார்ட்மெண்ட் இருக்கும். அதுல சின்ன தோட்டம் கூட இருக்கு. அங்க பொது இடத்துல ரெஸ்டாரண்டுல சாப்பிடலாம் இல்லாட்டி உன் ரூமுக்கே சாப்பாடு கொண்டு வர ஏற்பாடு செய்யலாம். நாங்க பாத்த ரெண்டு எடத்துலயும் ஜிம்மும் நீச்சல் குளமும் இருக்கு. எப்ப வேணுன்னான்லு மருத்துவ வசதி கிடைக்கும், பிசியோதெரபிஸ்ட்கூட இருக்காங்க. சொர்க்கமா இல்லாட்டாலும் இப்ப இருக்கற உன் நிலமைக்கு அந்த ரெண்டு இடமும் சொர்க்கத்துக்கு ஒரு படி கீழ அவ்வளதுதான்.”
“என் நிலம …. ஒன்னப் பொறுத்த வரைக்கும் எது என் நிலமன்னு நெனக்கிற?”
சலிப்பாக கையை மேலே தூக்கியவாறு “உன் நிலமயப் பத்தி சொல்லட்டுமா? நிஜமாவே என் வாயால அத சொல்லச் சொல்றியா?” என்றார்.
“ஆமா. ஒரு மாத்தத்துக்காக, ஒரு பயிற்சி மாதிரி உண்மையச் சொல்லு.”
“நீ ஒரு வயசான, உதவி தேவப்படற பொம்பள. . அதுதான் உண்ம. பாப்லோ போல ஆளாள உனக்கு உதவி செய்ய முடியாது.”
தலையை ஆட்டி மறுத்தாள். “அந்த உண்மை இல்ல…மத்த உண்மைய பத்தி…நிஜமான உண்மையப் பத்தி சொல்லு.” என்றாள்.
“நிஜமான உண்மையா?”
“ஆமாம், நிஜமான உண்மை?”

~oOo~

ன்புள்ள நார்மா,
“நிஜமான உண்மை”: அதைத்தான் அவள் வேண்டினாள். இல்லை, கெஞ்சினாள்.
அவளுக்குத் தெரியும் எது நிஜமான உண்மையென்று. எனக்கும் நிஜமான உண்மை எதுவென்று தெரியுமாதலால் வார்த்தைகளால் சொல்ல அவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கக் கூடாது. ஆனால் எனக்கு ஆத்திரம் – கடமையை, அதை செய்வதால் உனக்கோ எனக்கோ ஹெலனுக்கோ எந்த செய்நன்றியும் கிடைக்காத கடமையைச் செய்ய இவ்வளவு தூரம் வந்ததற்காக ஆத்திரம்.
ஆனால் என்னால் முடியவில்லை. அவள் முகத்திற்கு நேரே என்னால் சொல்ல முடியாதவற்றை இங்கே இப்போது உனக்குச் சுலபமாக எழுதுகிறேன்: நிஜமான உண்மை என்னவென்றால் நீ இறந்து கொண்டிருக்கிறாய். நிஜமான உண்மை என்னவென்றால் நீ சுடுகாட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறாய். நிஜமான உண்மை என்னவென்றால் இந்த உலகத்தில் உன்னை நீயே பார்த்துக் கொள்ள முடியாதவளாக இருக்கிறாய், நாளாக நாளாக இந்த நிலைமை இன்னும் மோசமடையும். யாரும் உன்னைக் கவனித்துக் கொள்ள முடியாத அளவு நிலைமை மோசமடையும். நிஜமான உண்மை என்னவென்றால் யாரிடமும் நீ நினைப்பதை பேசி நல்ல முடிவெடுக்கும் நிலைமை உனக்கு இல்லை. நிஜமான உண்மை என்னவென்றால் உன்னால் ‘இல்லை’ என்று சொல்ல முடியாது.
மணித்துளிகளை கடத்தும் கடிகாரத்தை பார்த்து உன்னால் இல்லை என்று சொல்ல முடியாது. சாவைப் பார்த்து உன்னால் இல்லை என்று சொல்ல முடியாது. சாவு ‘வா’ என்று கூப்பிடும்போது தலைகுனிந்து மரியாதையாக போய்ச் சேர வேண்டியதுதான். ஒத்துக்கொள். சரி என்று சொல்ல பழகிக்கொள். நான் கூப்பிடும்போது, ஸ்பெயினில் உனக்காக நீ கட்டிக் கொண்ட வீட்டை விட்டுவிட்டு, நீ சேகரித்த பொருட்களை விட்டுவிட்டு, இங்கே வா – ஆம் – அந்த இல்லத்தில் தினமும் காலையில் குவாடல்லூப்பிலிருந்து வந்திருக்கும் ஒரு செவிலி உன்னை மகிழ்ச்சி பொங்கும் விளிப்புகளுடன் (‘என்னவொரு அருமையான காலை, மேடம் காஸ்டெல்லோ !’) எழுப்பி ஆரஞ்சுப் பழச்சாறு தருவாள். முகம் சுளிக்காதே. பிடிவாதம் பிடிக்காதே. சரி என்று சொல். ஒத்துக்கொள்கிறேன் என்று சொல். உன் கையில் என்னை ஒப்படைத்தேன் என்று சொல். இருப்பதை சிறப்பாக்கிக் கொள்.
அன்புள்ள நார்மா, உனக்கும் எனக்கும் உண்மையை, நிஜமான உண்மையை சொல்ல வேண்டிய ஒரு நாள் வரும். ஆதலால் நமக்குள் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்வோமா ? ஒருவருக்கொருவர் பொய் சொல்லிக் கொள்ள மாட்டோம் என்று சத்தியம் செய்து கொள்வோமா. அந்த வார்த்தைகள் சொல்வதற்கு எவ்வளவு கடினமாக இருந்தாலும் பரவாயில்லை, நாம் அவற்றை சொல்லிக் கொள்வோம் – நாட்கள் போகப் போக வார்த்தைகள் எளிதாகப் போவதில்லை, மாறாக அவை மோசமாகப் போகின்றன. எவ்வளக்கெவ்வளவு மோசமாகுமோ அவ்வளவுக்கு மோசமாகப் போகிறது. இதைவிட மோசமாக முடியாது, இதுதான் மகா மோசம் என்கிற அளவுக்கு ஒரு நாள் மோசமாகப் போகிறது.

உன் அன்புக் கணவன்,
ஜான்.

நன்றி: Lies | by J.M. Coetzee | The New York Review of Books

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.