நன்கு தணிய ஆரம்பித்திருந்த ஆகஸ்ட் மாதத்தின் வெய்யில். சிறிய சாலைதான் என்றாலும் வழக்கத்தை விட அதிகமான நெரிசல்.
இதே திசையில் நியூயார்க் நோக்கி செல்லும் மாநில நெடுஞ்சாலை சமீபத்தில் பராமரிப்புக்காக மூடப்பட்டது மட்டும்தான் காரணமா. அல்லது புதன்கிழமை மதியம் மூன்று மணிக்கு எப்பவும் இப்படித்தான் இருக்குமா?
முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை இடப்புறமாக முந்திசெல்ல முயன்றபோது கைபேசி சிணுங்கியது. வேகத்தை குறைக்காமலேயே புளூடூத் ஒலிபெருக்கியில் அழைப்பை ஏற்று பதிலளித்தான்.
குழந்தைகள் காப்பகத்திலிருந்து அழைப்பு. விளையாடும்போது சறுக்கி விழுந்து காலில் காயத்துடன் சிராய்ப்பு. முதலுதவி செய்தபிறகும் சூர்யா நிறுத்தாமல் அழுது கொண்டிருக்கிறான், உடனே வந்து அழைத்து செல்லவும் என்று. வேகத்தை குறைத்து சாலையின் வலப்புற விளிம்புக்கு வந்து காரை நிறுத்தினான்.
“ஆல்ரைட். வில் பி தேர்,” என்று தொலைபேசியை அணைத்துவிட்டு சலிப்புடன் ஒரு நிமிடம் அமர்ந்திருந்தான். பிறகு நிதானமாகி, காரைத் திருப்பி எதிர் திசையில் செலுத்தினான்.
தலையை சற்றே வலப்பக்கமாக சாய்த்துக்கொண்டு சிரிக்கும்படியான மார்பளவு படம்.
மவுஸின் விசையை அழுத்தி திரையில் இழுத்து பெரிதாக்கி மீண்டும் ஒரு முறை புகைப்படத்தை உற்றுப் பார்த்தான். சவரத்தை மீறிய கரும்பச்சைப்பூசல். நடுவே உதட்டுக்குக்கீழே முகவாயில் துருத்திக்கொண்டு தெரியும் வெள்ளை முட்கள்.
சவரம் செய்யவில்லை என்பதால் அது ஒரு விடுமுறை நாளாக இருந்திருக்க வேண்டும். சாந்தா எடுத்த படம் என்பதால் குவியம் சற்று குறைவு. அவன் அமர்ந்திருந்த நாற்காலியின் மரவரிகளின் நுட்பம் துலக்கத்துடன் இருக்க கண்களும் மூக்கும் மங்கலாகத் தெரிந்தன.
நவீன காமிராவின் நுட்பங்களைக் கவனிக்கும் பொறுமை அவளுக்கு ஒருநாளும் இருந்ததில்லை. காமிராவை எடுத்து முகத்துக்கு நேரே வைத்துக்கொண்டு விசையை உடனே அழுத்தி விடுவாள். சிறுகதைத் தொகுப்பின் பின் அட்டையில் ஆசிரியரை அறிமுகப்படுத்தும் குறிப்புக்காக இந்தப்படத்தை நிச்சயமாக அனுப்ப முடியாது.
அவன் திட்டப்படி இன்று மதியம் ஸ்டூடியோவுக்குப் போய் படம் எடுத்திருக்க வேண்டும். ஒருவாரம் முன்னரே பதிவு செய்தது. ஆனால் பாதி வழியில் சென்று கொண்டிருக்கும்போதே எதிர்பாராத விதமாக திரும்ப வேண்டியதாகி விட்டது.
சாந்தாவிடம் கேட்டிருக்கலாம்தான். இந்த வார ஏற்பாட்டின்படி குழந்தையை காப்பகத்தில் விடுவதும் அழைத்து வருவதும் அவனின் பொறுப்பு. சாந்தா வேலையில் தீ்விரமாக இருப்பாள். அவளால் வர முடியாது என்பது மட்டுமல்ல, ‘கல்யாணமாகி இத்தனை வருஷமாகியும் இன்னும் கூட உனக்கு பொறுப்பே வரலையே!’ என்ற வசையையும் கேட்க வேண்டி வரும்.
அலுவலகத்திலிருந்து குழந்தைக் காப்பகம் வழக்கமாக பத்து நிமிடப் பயண தூரம்தான். ஆனால் இன்று குழந்தையை அழைத்துக்கொண்டு வந்தபோது ஸ்டூடியோவுக்கு செல்லவேண்டிய நேரத்தில் முக்கால்மணிக்கும் மேல் பிந்திவிட்டது.
மாலை வீட்டுக்கு வந்ததும் புகைப்படநிலையத்தை தொலைபேசியில் அழைத்து தாமதமானதை விளக்கி நேரத்தை மாற்ற முடியுமா என்று கேட்டுப்பார்த்தான். இல்லை, முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
பிறகு அன்றைக்கு செய்தே ஆக வேண்டிய வேலைகளின் கட்டாயம். மாலை சாந்தா வந்ததும் சமையலில் உதவும் வீட்டு வேலைகள். இரவு உணவு. பிறகு குழந்தைகளை படுக்கைக்கு தயார்படுத்தி தூங்கவைத்து, சாந்தாவுடன் பாத்திரங்கள் கழுவி சமையலறையை சுத்தம் செய்தபிறகு, இப்போதுதான் அவகாசம் கிடைக்கிறது.
ஏற்கனவே இரவு பத்துமணிக்குமேல் ஆகிவிட்டது. ஏற்கனவே ஒத்துக்கொண்ட முக்கியமான அலுவலக சந்திப்புகள் இருப்பதால் காலையில் தேடிப்பார்க்க நேரமிருக்காது. விடிவதற்குள் எப்படியாவது ஒரு புகைப்படத்தை தேடி எடுத்தால்தான் உண்டு.
புகைப்படம். ஆம், நல்ல ஒரு புகைப்படம் வேண்டும்.
மடிக்கணிகள், படியெடுத்து சேமித்து வைக்கும் ஹார்ட் டிஸ்குகள் எல்லாவற்றிலும் தேடியாகிவிட்டது.
கிடைத்ததெல்லாம் பல வருடங்களுக்கு முன் எடுத்தவை. நண்பர்களுடன் கூட்டமாக நெருக்கியடித்துக்கொண்டு நிற்கும் சில படங்கள். யாரோ ஒரு நண்பர் ஊர் மாற்றிச் செல்லும்போது அவருக்கான பிரிவு உபச்சார விருந்தில் எடுத்த படமாக இருக்கவேண்டும். அநேகமாக அந்த படத்திலிருந்த நண்பர்கள் அனைவருமே பாஸ்டனை விட்டுச் சென்றுவிட்டதால் யாருடைய பிரிவின்போது எடுத்தது என்பதுகூட உடனே நினைவுக்கு வரவில்லை.
காமிராவுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு குழந்தைகள் மற்றும் நாய்க்குட்டியுடன் விளையாடும் படங்கள். தனியாக இருக்கும் படம் என்று தெரிவு செய்யும்படி ஒன்று கூட இல்லை.
எப்போதும் மற்றவர்களை படம் எடுத்துக்கொண்டிருப்பவனின் கஷ்டம், அவனை எப்போதும் யாருமே படம் எடுப்பதில்லை என்பது. கிடைத்த ஒரே தனிப்படமும் முள்தாடியுடனும் குவியமில்லாமலும்.
அச்சு வேலைகள் முடிந்து விட்டதையும், புத்தக வெளியீட்டுக்கான தேதியையும் நினைவுறுத்தி பின் அட்டைக்கான படத்தை அனுப்பக்கோரி பதிப்பகம் அனுப்பிய மின்னஞ்சலை மீண்டும் படித்துப்பார்த்தான்.
இறுதிக்கெடு நாளைதான் என்பதை உறுதிப்படுத்துக்கொண்டதும் இன்று வரை இதை ஞாபகம் வைத்துக்கொண்டிருந்தும் அதற்காக எதுவுமே செய்யாமல் இருந்ததற்காக மீண்டும் தன்னைத்தானே கடிந்துகொண்டான்.
எந்த வேலையையும் கடைசிநேரம் வரை ஒத்திபோட்டு வைப்பது அவன் வழக்கமே அல்ல. என்றாலும் தொடர்ந்து அலுவல்களின் இறுதிக்கெடுக்கள், வேலைப்பளு, குழந்தைகள். கடந்த ஒரு மாதமாக இவைகளுக்கு சம்பந்தமில்லாத வேறு எதையுமே அவனால் செய்ய முடியவில்லை.
தான் மிகவும் விரும்பும் எளிய விஷயங்களைக்கூட பல நெருக்கடிகளுக்கு மத்தியில் மிகவும் பிரயத்தனப்பட்டுதான் செய்யமுடிகிறது, என்ன விதமான வாழ்க்கை இது என்று சலித்துக்கொண்டான்.
தன்மீது எழ ஆரம்பித்த கழிவிரக்கத்தை மேற்கொண்டு வளர விடாமல் எண்ண ஓட்டத்தை வேறு திசையில் திருப்பிக்கொள்ள முயன்று, கணினித்திரையில் விரிந்திருந்த புகைப்படத்தை அனிச்சையாகத் திரும்பவும் ஒருமுறை பார்த்தான். நிச்சயமாக இதைப் பயன்படுத்த முடியாது என்ற எண்ணம் உறுதிப்பட்டதும் எழுந்த சலிப்பில், திரையில் தெரியும் அவன் முகம் அவனுக்கே எரிச்சலூட்டுவதாக இருந்தது.
காமிராக்கள் வீட்டில் மூன்றாவது உண்டு. நிறுத்தியின் மேல் பொருத்தி ரிமோட்டை வைத்து இப்பொழுது கூட உடனடியாக ஒரு படத்தை எடுத்துவிட முடியும்தான். ஆனால் அப்படி ஒரு எண்ணமே எழவில்லையே ஏன்?
கடந்த ஒரு வாரமாக கடுமையான வேலை என்பதால் கண்களைச்சுற்றியுள்ள கருவளையங்கள் வழக்கத்தை விட அடர்ந்து விரிந்து மாயாவின் முகமூடி போல கண்களை சூழ்ந்திருப்பது நினைவுக்கு வந்தது. காலையில் ஷூவை மாட்டிவிடும்போது சூர்யா தடவிக்காட்டி மழலைக்குரலில் ”அப்பா பூபூ?” என்று சொன்னபோது என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாக குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தான்.
காலையில் சவரம் செய்யும்போது வேறு நினைவுகளின் இடையே கருவளையங்களின் நிறம் அடர்ந்த முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, அது தன்னுடைய முகம்தான் என்பது நினைவுக்கு வந்து திடுக்கிட்டதும் ஞாபகம் வந்தது.
அது இப்போது நினைவுக்கு வரக்காரணம் என்ன? படம் எடுக்க ஏற்ற பொலிவுடன் முகம் தற்சமயம் இல்லை என்று நினைத்திருந்ததுதான் காரணமா?
அப்படியென்றால் எல்லா மனிதர்களையும் போலவே புகைப்படத்தில் அழகாகத் தோன்ற வேண்டும் என்று நானும் விரும்புகிறேனா?
ஒரு வகையில் எவ்வளவு அற்பமான சிற்றாசை இது? அப்படியென்றால் எல்லாரையும் போல நானும் சராசரியான ஒரு மனிதன்தானா?
அப்படி ஒரு நிலையில் தன்னை வைத்துப்பார்க்க ஏமாற்றமாகவும், சற்று அதிர்ச்சியாகவும் இருந்தது.
கணினியை அணைத்துவிட்டு சக்கரங்கள் உருள நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளி மேசையை விட்டு தள்ளி நகர்ந்தான்.
நாளை காலைக்குள் ஒரு படத்தை எப்படியாவது தேடி எடுத்துவிட வேண்டும் என்ற நினைவு மேலும் ஆயாசமூட்டியது.
களைப்பில் இமைகள் ஒருகணம் தாமாகவே மூடிக்கொண்டன. இமைகளில் எடை கொண்டு அழுத்திய தூக்கம். அதைச் சமாளிப்பதற்காக. புருவங்களை உயர்த்தி நெளித்து சுழித்தபடி, கண்களை வலுக்கட்டாயமாக விரியத்திறந்துகொண்டு சில முறைகள் சிமிட்டிக்கொண்டான். கைகளை தலைக்குமேலே உயர்த்தி தலையைப் பின்னோக்கி சாய்த்து உடலை முறுக்கிக்கொண்டபோது நீண்ட கொட்டாவி ஒன்று முழுமையாக ஆட்கொண்டது.
கைகளை தாழ்த்திக் கொண்டு உடலைத் தளர்த்தி ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.
தனக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையை உள்ளூர கசந்துகொண்டபோது பெரும் தனிமையை உணர்ந்தான். இவ்வுலகத்தில் நாற்பது வருடங்கள் வாழ்ந்திருந்தும்கூட தன்னுடைய நல்ல புகைப்படம் ஒன்று கூட கைவசம் இல்லையே என்பதை நினைத்துக்கொண்டபோது பெரும் சுயஇரக்கம் எழுந்தது. அவனைச்சூழ்ந்திருந்த அரவமின்மையும் இரவின் நிசப்தமும் அவனுடைய தனிமை உணர்வை பலமடங்கு பெருக்கிவிட்டதைப்போல இருந்தது.
திடீரென உலகத்தின் எல்லாவற்றின் மீதும் ஆழமான வெறுப்பும் கோபமும் எழுந்தது.
பொங்கி எழுந்த உணர்வெழுச்சியைத் தணித்து நிதானப்படுத்த முயன்றான்.
சமீபமாக தன் ஒவ்வொரு எண்ணத்தையும் உற்றுக் கவனித்து ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்திருந்த வழக்கத்தில், அது கோபமா அல்லது வெறுப்பா என்று எண்ணிக்கொண்டு, இரண்டுக்கும் உள்ள தொடர்பை யோசித்துப்பார்க்க முயன்றான். நின்றுவிட்டிருந்த தலைவலி மீண்டும் ஆரம்பிப்பதுபோல இருந்தது.
சிகரெட் பெட்டியை எடுத்துக்கொண்டு, வெளிக்கதவை சாத்தி மூடிவிட்டு முற்றத்துக்கு வந்தான்.
முற்றிலும் மரத்தாலான வீட்டின் முன்முற்ற வாசல். கண்ணை உறுத்தாத மெல்லிய மஞ்சள் ஒளி சிதறிய முற்றம். விளக்கின் கீழிருந்த ஒற்றை மர நாற்காலியில் அமர்ந்து சிகரெட்டை பற்ற வைத்தான்.
நள்ளிரவைத் தாண்டி விட்ட பின்னிரவு.
அவன் அமர்ந்திருந்த நான்கடி உயர முற்றத்திலிருந்து இறங்கி, இருளில் சென்று மறையும் மரத்தாலான படிக்கட்டு. கீழே அடர்த்தியாக வளர்ந்து, அளவாக கத்திரிக்கப்பட்ட விசாலமான கரும்பச்சைப் புல்தரை தெரு வரை விரிந்திருந்தது. அதன் எல்லையில் வெள்ளை வண்ணமடித்து, கோபுர வடிவிலான முனைகள் கொண்ட மரப்பட்டைகளின் வேலித்தடுப்பு. அதைத்தாண்டி தெருவின் எதிர்வரிசையிலும் பக்கங்களிலும் மங்கலான மஞ்சள் விளக்கொளி வீசும் முற்றத்துடன் நிற்கும் ஆள் அரவமற்ற வீடுகள். தவிர எங்கும் முழு இருட்டும் கடும் நிசப்தமும்.
ஆழமாக இழுத்துக்கொண்டு புகையை ஊதத் தலையை உயர்த்தியபோது யதேச்சையாக மேலே தெரிந்த வானத்தைப்பார்த்தான். புகையை மெதுவாக ஊதிக்கொண்டே நிலவு தென்படுகிறதா என்று தேடினான்.
கருமேகங்கள் அடைத்துக்கொண்டு வானம் முழுக்க கும்மிருட்டாக இருந்ததில் நிலவின் சுவடே தெரியவில்லை. ஒருவேளை வீட்டின் மறுபுறம் உதித்திருக்குமோ. அல்லது இன்று அமாவாசையா? இந்த வீட்டுக்கு குடி வந்த பிறகு நிலவை வானத்தில் பார்த்தது எப்போது என்று எண்ணிப்பார்க்க முயன்றான். நிச்சயம் ஆறு மாதத்துக்கும் அதிகமாகவே இருக்கும் என்று தோன்றியது.
அப்போது திடீரென வட திசையிலிருந்து குளிர்காற்று வீச, காற்றின் வேகத்தில் அவன் தலைக்குமேலே முற்றத்தின் உட்கூரையில் தொங்கிக்கொண்டிருந்த உலோகக் குழல்களிலான மணி குலுங்கி ஒலித்து அவன் கவனத்தைக் கலைத்தது. புதிதாக இந்த வீட்டுக்கு குடிவந்தபோது நண்பர்கள் யாரோ பரிசாகக் கொடுத்தது. பாண்டிச்சேரி ஆரோவிலில் வாங்கியதாக இருக்க வேண்டும்.
திரும்பத்திரும்பக் குலுங்கி ஒலிக்கும் ஐந்து ஸ்வரங்களிலான இசை. தோராயப்படுத்தினால் ஏறக்குறைய மோகனத்தின் சாயல். ஆனால் நிச்சயம் மோகனம் அல்ல. ஏதோ ஒரு ஸ்வரம் பிழையாக, தெளிவில்லாமல் ஒலித்தது. அதே சமயம் ஹம்ஸத்வனியின் ஒரு இழையும் கேட்கிறது. அப்படியானால் நிஷாதத்தையும் கூட இழுத்துக்கொண்டு ஒலிப்பது அநேகமாக, தவறான தைவதமாக இருக்கவேண்டும்.
கேட்கும் எல்லாவற்றிலும் இசையையும் இதைப்போல ஏற்கனவே தெரிந்த ராகத்தின் சாயலைக்கொண்டு பகுத்து ஆராயக்கூடாது என்று எத்தனையோ தடவைகள் நினைத்துக்கொண்டதுண்டு. ஆனால் ஒருமுறை கூட அதைப்போன்ற நினைவுகளிலிருந்து தப்ப முடிந்ததில்லை. கேட்கும் சப்தங்கள் எல்லாவற்றிலும் ஸ்வரங்களின் நிர்ணயித்த அலைநீளத்தையும் அதிர்வு எண்களையும் தேடுவது எவ்வளவு பெரிய மடத்தனம். கையில் கரண்டி இருக்கிறதே என்பதற்காக கடலை அளந்து பார்த்துவிட நினைப்பதைப்போல.
புகையை இன்னும் சில முறைகள் ஆழமாக இழுத்துவிட்டான். அந்த அரை இருட்டில் அவன் சுவாசத்தின் குவியமாக ஆகிவிட்டதைபோல சிகரெட்டின் சிவப்பு நுனி நிதானமாக விரிந்து சுருங்கியது.
இதைப்போன்ற யோசனைகள் நெருக்கடியான நேரங்களில் அதிகமாக வருவது ஏன்? உள்ளுக்குள் ஏற்பட்ட வெற்றிடத்தை இதைப்போன்ற தகவல்களைக்கொண்டு நிரப்பிக்கொள்ள முயல்கிறதா மனம்?
ஆழமாக உள்ளிழுத்துக்கொண்டு, வழக்கத்தை விட சற்றே தாமதித்து மெதுவாக புகையை ஊதினான். நள்ளிரவின் அமைதியா, சிகரெட்டா, காற்றின் குளுமையா தன்னை ஆசுவாசப்படுத்தியது எதுவாக இருக்கும்?
ஏறக்குறைய பாதி சிகரெட்டை புகைத்த பிறகு மன அழுத்தம் சற்று குறைந்து விட்டது போல இருந்தது. நினைவு ஒருமைப்பட்டபின் சம்பந்தமில்லாத விஷயங்களை நினைத்துக்கொண்டு எதற்காக இப்படி இருளில் தனியாக உட்கார்ந்திருக்கிறோம் என்று கேட்டுக்கொண்டான்.
புகைப்படம்… ஆம் புகைப்படம். என் புகைப்படம் ஒன்றைத் தேடி எடுக்கவேண்டும்.
பழைய புகைப்படங்கள் மற்றும் கோப்புகள் நிரம்பிய பெட்டியை ஒரு முறை நிலவறையில் பார்த்திருந்தது நினைவுக்கு வந்தது. ஒருவேளை அந்தப்பெட்டியில் நல்ல படம் ஒன்று இருக்கக்கூடுமோ என்று நினைத்துக்கொண்டு ஆறுதலடைய முயன்றான்.
சிகரெட்டை அணைத்துவிட்டு முன்கதவை திறந்து கொண்டு வீட்டுக்குள் வந்தான்.
ஓரிரு படிகள் வேகமாக இறங்கியபின் குழந்தைகளும் சாந்தாவும் உறங்கிக்கொண்டிருப்பது நினைவுக்கு வர வேகத்தைக் குறைத்து, அடிகளை ஒலியெழுப்பாமல் மெதுவாக வைத்து படி இறங்கினான்.
மரவேலைகள் செய்வதற்கான இரும்பு இறுக்கி மற்றும் அறுக்கும் கருவிகள் கொண்ட உறுதியான பெரிய மேசை. நிலவறையின் மூலையில் சென்று பழைய பெட்டியை அடையாளம் கண்டு எடுத்து மேசைமீது வைத்தான். பல வருட பயன்பாட்டில் சக்கரங்கள் தேய்ந்து சரியாக வேலை செய்யாததால் பயணங்களிலிருந்து ஒதுக்கப்பட்ட பழைய பயணப்பெட்டி.
மூடியை அகலத்திறந்து படிய வைத்து பெட்டிக்குள் இருந்தவற்றை ஒவ்வொன்றாக கலைத்துப்பார்த்தான். பழைய புத்தகங்கள். அப்பாவின் யாஷிகா எஸ் எல் ஆர் காமிராவினால் எடுத்த, அளவாக வெட்டப்பட்டு பாலித்தீன் உறையில் பாதுகாப்பாக மடித்து வைக்கப்பட்ட நெகடிவின் சரங்கள். புகைப்படங்களின் ஆல்பங்கள். பெரும்பாலும் கல்லூரி காலத்தில் எடுத்தவை. மீதி விளக்குகளையும் எரியச்செய்து வெளிச்சத்தை அதிகமாக்கினான்.
ஆல்பங்களுள் ஒன்றை எடுத்து திறந்தான். குழந்தைகள் பிறந்ததிலிருந்து அநேகமாக ஒவ்வொரு மாதமும் பல விதமான உடைகளில் கோணங்களில் எடுக்கப்பட்ட படங்கள்.
கல்யாணமான பிறகு ஊருக்குப்போயிருந்தபோது விருந்தினர்கள் வீடுகளில் எடுத்த படங்கள். கல்லூரி ஆண்டுவிழாப் போட்டிகளில் வென்றதற்காக, மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் உள்ளூர் பிரமுகரிடமிருந்து சிரித்தபடி பரிசு வாங்கும் படங்கள்.
முதலாண்டு மாணவனாக இருக்கும்போது முதல் முறை கடலைப்பார்த்த பரவசத்தின் பெருக்கை புன்னகையாக மாற்றிக்கொண்டு, பொன்னிற அலையடிக்கும் கடலின் முன்னால் நிற்கும் பெரிய படம்.
அந்த புகைப்படத்தில் பதிவாகியிருக்கும் காலத்துக்குள் சென்று, அதன் அனுபவத்தில் திளைத்துக்கொண்டிருந்தான் கொஞ்சம் நேரம். பழைய படங்கள் அனைத்திலும் ஏதோ ஒருவித அசட்டுத்தனமான பாவனையுடன் இருப்பதாகத் தோன்றுகிறதே ஏன்?
ஒவ்வொரு படமாக பார்த்துக்கொண்டே வந்தான். ஆல்பத்தில் கடைசி இலையின் கால்வாசியை மட்டும் அடைத்துக்கொண்டு கோணலாக சொருகப்பட்ட அழகிய இளம்பெண்ணின் படம். அதிர்ச்சியில் தன்னை மறந்து, “..மீரா..” என்று கூவினான்.
உற்றுப்பார்த்தபடி அந்தப்படத்தை உடனடியாக எடுத்து கையில் வைத்துக்கொண்டான். அவன் படத்தைப் பற்றியிருந்த விதம் முட்டையிலிருந்து சற்றுமுன் வெளிவந்த ஒரு பறவையின் குஞ்சை ஏந்தியிருப்பதைபோல இருந்தது.
பூக்கள் நிறைந்த மஞ்சள் நிற சுடிதார். கருநீல பூவரிசையுடன் கூடிய கழுத்துப்பட்டையிருந்து நீண்டு மேலெளும் சுருள்முடிகள் பாவிய பின்கழுத்து. சுடிதாரின் குட்டைக்கையிலிருந்து நீண்டு பளீரிடும் மஞ்சள் நிறக் கைகள். கழுத்தைத் தொட்டும் தொடாமலும் தோளில் படர்ந்திருக்கும் கருநீல நிற துப்பட்டா. பூனை முடிகளுடன் கீழிறங்கும் இடது முன்கையில் பின் மதியத்தைக்காட்டிக்கொண்டிருக்கும் கைக்கடிகாரம், அதன் பின் மறைந்திருக்கும் வலக்கையில் கும்பகோணத்தின் மருதாணியில் சிவந்த ஈரப்பதமான விரல்கள் அவற்றின் பற்றில் நிற்கும் வெண்ணிற கைக்குட்டை.
அந்தப்படம் மீராவே அவனிடம் கொடுத்தது. கல்லூரி மூன்றாம் ஆண்டில் தஞ்சாவூர் பெரியகோயிலுக்கு குடும்பத்துடன் அவள் சென்றிருந்தபோது அவள் அக்கா எடுத்தது.
அநேகமாக இருபது வருடங்கள் இருக்கலாம். பழையதாகி நிறம் சற்றே மங்கியிருந்தது. ஆனால் அதே முகம், அதே சிரிப்பு. இடது புருவத்தின் கீழ் விளிம்பில் தெரியும் சிறிய தழும்பு. அவள் ஐந்தாம் வகுப்பு படிக்கையில் சைக்கிள் ஓட்டப்பழகும்போது விழுந்ததில் ஏற்பட்ட காயம் என்று சொல்லியிருக்கிறாள்.
முதல் முறையாக மீரா வீட்டுக்குப் போயிருந்த நாள் நினைவுக்கு வந்தது. டிராக்டர் நிறுத்தும் அறையில் மீராவின் அப்பாவும், அம்மாவும் சிரிப்புடன் பாட்டியை பார்த்துக்கொண்டிருக்க அங்கிருந்த பழைய சைக்கிளைக்காட்டி மருத்துவமனையில் இருந்து திரும்பிய பிறகு இனி அதில் ஏறவே மாட்டேன் என்றும் அவள் எப்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள் என்பதை மீராவின் பாட்டி விரிவாக நடித்துக்காண்பித்தாள். பாட்டியின் நடிப்பும், அப்போது நாணத்தில் மீராவின் முகம் போன போக்கையும் நினைத்து தன்னை மறந்து வாய் விட்டு உரக்கச் சிரித்துக்கொண்டான்.
எத்தனை கடிதங்கள், சந்திப்புகள், உரையாடல்கள், சம்பவங்கள்.. அவமானங்கள்!
ஒருகணம் மீராவின் மீது கடுமையான வெறுப்பும், கோபமும் எழுந்தது. திடீரென ஆற்றுக்குள் இறங்கி மார்பளவு நீரில் நின்று கொண்டிருப்பதைப்போல பழைய நினைவுகள் சுற்றிச்சூழ்ந்து கொண்டன.
பிறகு பெருக்கெடுத்து வந்த உணர்வுப்பெருக்கில், அதன் இனிமையின் நிறைவுக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்து, அதன் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்படும் ஒரு சிறு துரும்பைப் போல தன்னை மறந்து செயலற்றுப்போய், வேறெதுவும் செய்யமுடியாதவனாக நின்று கொண்டிருந்தான்.
அவளை அந்த மஞ்சள் நிற சுடிதார் உடையில் நினைத்துக்கொண்டதும் செண்பகப்பூ வாசம் வீசும் அவள் சருமத்தின் மணம் நினைவில் வந்து அவனுக்குக் கிளர்ச்சியூட்டியது.
இருபது ஆண்டுகள் பின்னோக்கிச்சென்று அந்த நாளின் இயல்பான பிரிக்க முடியாத ஒரு பகுதியாக தான் ஆகிவிட்டதைப்போல உணர்ந்தான். அந்த நாளின் மணம் பெருக்கெடுத்து திடீரென அந்த அறைமுழுக்க நிறைந்து விட்டதைப்போல இருந்தது.
காற்றில் கலந்திருக்கும் அந்த மணத்தை முழுவதுமாக உறிஞ்சி கைப்பற்றி என்றென்றைக்குமாக தனக்குள் வைத்துக்கொள்ள முயல்வதைப்போல. நாசியை விரியத்திறந்து சுவாசத்தை ஆழமாக உள் இழுத்து நிறைத்துக்கொண்டு அதில் மீராவின் மணத்தைத் தேடமுயன்றான்.
நிலவறையின் உட்சுவர்களிலும், உட்கூரையில் வேயப்படிருந்த வண்ணம் அடிக்கப்படாத புதிய பைன் மரப்பலகைகளின் வாசனை மூக்கை நிறைத்தது. வேறெந்த மணமும் இல்லை.
வெறுமையில் தாக்கப்பட்டு, அக உலகத்தின் தொடர்பு அறுபட்டு அது ஒரு கடந்தகால நினைவு மட்டுமே என்பது உறைத்தது. இப்படி தனிமையில், இரவில், நிலவறையில் நின்று கொண்டிருப்பதன் வெட்கத்தில் தன் மடமையை நாணி தன்னைத்தானே நகைத்து சிரித்துக்கொண்டான்.
இந்தப் படத்தைப் பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டது என்பதையும் நினவுபடுத்திக்கொண்டான். மீராவின் அழகிய உருவம், அவள் சம்பந்தப்பட்ட நினைவுகள், சம்பவங்கள் அனைத்துமே நிறம் மங்கிய ஒரு பழைய புகைப்படமாக ஆகி நிலவறையின் இந்தப்பெட்டிக்குள் எஞ்சி விட்டதோ?
இந்நேரம் மீரா எங்கே இருப்பாள், என்ன செய்து கொண்டிருப்பாள்?
தன்னைப்போலவே குடும்பம் குழந்தைகளுடனும் சகல செளகர்யங்களுடனும் உலகின் ஏதோவொரு மூலையில் சந்தோஷமாகத்தான் வாழ்கிறாள்.
ஆனால் இவ்வளவு தாமதமாக விழித்துக்கொண்டிருக்கும்படியான எந்த இருத்தலியல் நெருக்கடிக்குள்ளும் அவள் நிச்சயமாக வரமாட்டாள் என்று மட்டும் உறுதியாக நம்பத்தோன்றியது.
உறங்கும் குழந்தையின் கழுத்தை கட்டிக்கொண்டோ கணவனின் முதுகைப்பார்த்துக்கொண்டோ ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பாள்.
மேலும் அவள் மிகவும் நன்றாக உறங்கக்கூடியவள் வேறு. வீட்டின் கும்பகர்ணி என்று அவளின் பாட்டி கேலிசெய்வாள் என்பதையும் வாஞ்சையுடன் நினைத்துக்கொண்டான்.
அவள் ஒரு அதிசயமான அரிய பிறவி என்று எண்ணிக்கொண்டிருந்த நாட்கள் அவை. அவளுடன் மேற்கொண்ட எண்ணற்ற அறிவு பூர்வமான் விவாதங்கள், மயிர் பிளக்கும் உரையாடல்கள் நினைவுக்கு வந்தன.
ஆனால், இப்போது எண்ணிப்பார்க்கையில் எந்த விதமாகவும் சிறப்பாகச்சொல்ல முடியாத, மிகவும் சாதாரணமான ஒரு எளிய அசடு மட்டுந்தான் அவள் என்று நினைக்கத்தோன்றியது. அதற்காக அவளின் மீது ஆழமானதொரு கழிவிரக்கமும் சற்று பரிதாபமும் கூட ஏற்பட்டது.
அவளின் மீதான நேயம் முன் எப்போதை விடவும் இன்னும் அதிகமாகி விட்டது போல அவளின் மீது கனிந்த புன்னகையொன்று தோன்றியது.
அந்தப்படத்தில் அவளின் அழகிய முகத்தை இன்னொருமுறையும் பார்த்துக்கொண்டான். அவள் இப்போது எப்படி இருப்பாள்? அவளின் முகம், உருவம் இப்போது எப்படி இருக்கும்?
இன்னமும் இந்த புகைப்படத்தில் இருப்பதைப் போலவேதான் இருப்பாளா? அல்லது வியர்வையில் கசகசத்து சிந்தனை கவிந்த முகத்துடன் கடந்து செல்லும் ஒரு சராசரி நடுவயது பெண்மணியைப் போலவா?
நாளையே கூட காய்கறிக்கடையிலோ அங்காடியிலோ சந்திக்க நேர்ந்தால் எப்படி இருக்கும்? பக்கத்தில் நிற்கும் சக மனிதனை பற்றி எவ்வித அக்கறையும் இன்றி கையில் கனக்கும் பையின் எடையுடன் அனிச்சையாக தாண்டிச்சென்று விடும் எண்ணற்ற முகங்களுள் ஒன்றாக அவளின் முகமும் மாறியிருக்குமோ?
மேலும் எப்போதுமே சற்று கவனம் குறைவான ஒரு அசடுதான் அவள் என்று எண்ணிக்கொண்டபோது அவள் மீதிருந்த நேயம் மேலும் ஒருபடி கனிந்து விட்டதைப்போல இருந்தது.
இப்போது என்னுடைய முகத்தை பார்க்கும்போதும் அவளுக்கும் அப்படித்தானே தோன்றுமா? என் முகம் என்பது கூட்டத்தில் கசங்கிச்செல்லும் ஏதோ ஒரு நடுவயது மனிதனின் முகம் மட்டும்தானா மீராவுக்கு என்ற நினைவு ஏற்பட்டு அதன் அதிர்ச்சியில் மனம் ஒரு கணம் நடுங்கி இருண்டது.
பலவித எண்ணங்களினாலும் அழைக்கழிக்கப்பட்டவனாக, படத்தைப் பார்த்துக்கொண்டு நெடுநேரம் உட்கார்ந்திருந்தான். பிறகு இருந்ததைப்போலவே படத்தைச் செருகி வைத்துவிட்டு ஆல்பத்தை மூடி பெட்டிக்குள் வைத்துப் பூட்டினான். நீண்ட தூக்கத்திலிந்து விழித்துக்கொண்டது போல மனம் வெறுமையாக, மாறிக்கிடந்தது.
என்ன இருந்தாலும் மீராவின் முகம்தான் எவ்வளவு அழகானது! அந்தரங்கமானது, பிரியமானது, கிளர்ச்சியூட்டக்கூடியது. அதில் அவனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு அம்சம், அவனுக்கு மட்டுமே புரியக்கூடிய ஒரு ரகசியம் எப்போதும் இருக்கும் என்றுதான் நினைக்கத்தோன்றியது.
அப்படியென்றால் அதைப்போலவே தன் முகத்திலும் அவளுக்கென்றே உரிய ஏதோ ஒரு வசீகரம் இன்னும் மீதமிருக்கும் அல்லவா? இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மூப்படைந்து கூனிக் குறுகினாலும் தன் முகத்தில் மீராவுக்கே சொந்தமான, அவளுக்கு மட்டுமே புரியக்கூடிய ஒரு ரகசியம் என்றைக்கும் இருக்குமா…..?
சிறிது நேர யோசனைக்குப்பின், ஆம், நிச்சயமாக இருக்கும் என்று முடிவாக எண்ணிக்கொண்டபோது எழுந்த உவகையில் அவன் மனம் நிறைந்து மிதந்தது.
அன்றைய இரவில், முன் அது வரை இல்லாத எதோ ஒரு ஒன்றின் புதிய வலிமை ஒன்று அவனுள் கூடிவிட்டிருந்தது. மனம் நிறைந்த வாழ்க்கையை வாழும் அதிர்ஷ்டசாலிகளுள் ஒருவனாக, மிகவும் மகிழ்ச்சியான ஒரு மனிதனாகத் தன்னை எண்ணிக் கொண்டான். உற்சாகத்தின் வேகத்தில் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தான். மூன்று காலியையும் ரிமோட்டையும் வைத்து ஒரு புகைப்படத்தை இப்பவே எடுத்துவிட்டால் என்ன என்று தோன்றியது.
அப்படியே செய்துவிடலாம் என்று உடனே முடிவெடுத்துக்கொண்டு, மூலையிலிருந்த வாஷ்பேஸினை வேகமாக அடைந்து, குளிர்ந்த நீரால் முகத்தை அறைந்து கழுவிக்கொண்டான். துவாலையால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு கைக்கடிகாரத்தைப் பார்த்தான்.
மணி அதிகாலை மூன்றைத் தாண்டியிருந்தது. உறங்கவே இல்லை என்றாலும் ஏதோ ஒரு குதூகலத்தின் புத்துணர்வில் மனம் லேசாகி இருந்தது.
புதியவேகம் பெற்றவனாக ஒரு புகழ்பெற்ற ஒரு காதல் பாடலின் வரிகளை தன்னை மறந்து வாய்விட்டுப் பாடிக்கொண்டு தடதடத்து ஒலியெழுப்பியபடி, நிலவறையிலிருந்து மேற்செல்லும் படிகளில் உற்சாகமாக மேலேறிச்சென்றான்.
***
nicely written..