ஒரு துளி ஒரு நதி ஒரு கடல்

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் – ஒரு வாசிப்பனுபவம்

ஓஷோவின் உரைகளை, அவரது குரலில், அறையின் மென்வெளிச்சத்தில், கண்களை மூடி நெடுநேரம் கேட்டுக்கொண்டிருப்பது என் வழக்கம்; அந்த அற்புதமான பரவச மணித்துளிகள் என்னில் உண்டாக்கும் நெகிழ்வு, மாற்றம், சலனம், உணர்வு, போதை… வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு முன்னிரவில் படிப்பறையின் விளக்கை அணைத்துவிட்டு ஓஷோவின் ஏதோ ஓர் உரையைக் கண்களை மூடிக் கேட்டுக்கொண்டிருந்தேன். நேரம் கடப்பதை அறிந்திருக்கவில்லை; ஒன்றிரண்டு மணிநேரம் ஆகியிருக்கலாம். அந்த குரல் மனதை என்னவோ செய்திருந்தது. கண்கள் பனித்திருந்தன. உரையின் முடிவில் ஓஷோ “உங்கள் காதருகில் அந்தப் பெருங்கருணை தென்றலாய் மிக மெல்லிய ஒலியோடு கடந்துசெல்கிறது; உங்களுக்குக் கேட்கிறதா?” என்று கேட்டு “இன்றைக்கு இது போதும்” என்று முடித்தார். அவ்விருட்டிலேயே, அதன்பின்னான அமைதியில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேனோ தெரியவில்லை.
கிட்டத்தட்ட அதே மனநிலையை “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” உருவாக்கியது. சிரிப்போடு, மீசையை நீவிக்கொண்டு “உனக்கு கேட்கிறதா?…கேட்கிறதா?…” என்று ஜெகே கேட்பதுமாதிரியே இருந்தது. ஒவ்வொரு வாத்தியக் கருவியின் இசையும் கேட்கும்போது வெவ்வேறு மன உணர்வுகளை உண்டாக்கும்; புல்லாங்குழலோ, ஷெனாயோ, நாதஸ்வரமோ, வயலினோ…அததற்குண்டான… மனதில் அந்த இசை ஏற்படுத்தும் சலனங்கள் வேறுபாடுகள் கொண்டதாய்த்தான் இருந்திருக்கிறது. “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” வாசித்தபோது எனக்கு…மார்கழி அதிகாலையில், வெளியில் மென்பனி கவிந்துகொண்டிருக்க, ஷிவ்குமார் சர்மாவின் சந்தூர் இசையை கேட்பது மாதிரி இருந்தது. இனம்புரியாத ஏகாந்தம்; காரணமில்லாமல் எங்கிருந்தோ உள்ளுக்குள் ஊற்றெடுக்கும், பீறிடத் துவங்கும் மகிழ்ச்சி. பரபரப்பில்லாத, அமைதியான ஆனந்தம்.
நண்பர்கள்/நண்பிகள், ஹென்றியைப் பற்றி நிறையப் பேசியிருக்கிறார்கள். எனக்கு ஹென்றி அளவிற்கே நாவலின் மற்றவர்களும் மனதில் அழுத்தமாய் பதிந்துபோனார்கள். சபாபதிப் பிள்ளை, லாரி டிரைவர் துரைக்கண்ணு, க்ளீனர் பையன் பாண்டு, பள்ளி ஆசிரியர் தேவராஜ் (லாரியில் தேவராஜ் அறிமுகமாகும்போது “அட்லஸ் ஸ்ரக்டு” படித்துக்கொண்டிருக்கிறான்), கோபித்துக்கொண்டு அம்மா வீட்டிற்குப் போன தேவராஜின் மனைவி கனகவல்லி, தேவராஜின் அக்கா அபிராமி என்கிற அக்கம்மா, தேவராஜின் தாத்தா, அக்கம்மாவின் வளர்ப்புப் பையன் மண்ணாங்கட்டி, பேபி, மணியக்காரர் ராமசாமி கவுண்டர், அவர் மனைவி நாகம்மாள், மகள் கிளியாம்பாள், தர்மகர்த்தா கனகசபை முதலியார், அவரின் பேரன் குமார், போஸ்ட் ஆபீஸ் நடராஜ அய்யர், காபிக்கடை தேசிகர், கோவில் திடலில் வாரச் சந்தையில் மரவள்ளிக் கிழங்கு விற்கும் பெண், பஞ்சாயத்துக்களின் மௌன சாட்சி வேலுக்கிராமணி, துரைக்கண்ணுவின் மனைவி ஆறு குழந்தைகள் பெற்ற நவநீதம், நவநீதத்தின் அம்மாக் கிழவி பஞ்சவர்ணத்தம்மாள், துரைக் கண்ணுவின் பிள்ளைகள் வீரசோழன், சொக்கநாதன், சங்கிலியாண்டி, சபாபதி, நடராஜன்…நாவலை வாசித்து முடிக்கையில் எவருமே மறக்கவில்லை.
கிருஷ்ணராஜ புரமும், குமாரபுரமும் கூட, நான் பிறந்து வளர்ந்த கிராமங்களைப் போலவே மனதில் விரிந்தது.. கவனம் பெறாத, மனதின் வெளிச்சம் படாத ஒரு பாத்திரம் கூட, ஒரு சின்ன இடம் கூட இல்லை. முதல் அத்தியாயத்தின் முதல் காட்சியே – மலைப்பாங்கான சாலையில் செல்லும் லாரி – சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் ஒரு திரைப்படக் காட்சி ஷில்-அவுட்டில் துவங்குவதுபோல் மனதில் உயிர்பெற்றது. ஆலம்பட்டி கூட்டுரோடு ஜங்சன், கிருஷ்ணராஜபுரத்தின் திரௌபதி அம்மன் கோவில், கோவில் திடல், திடலில் கூடும் வாரச் சந்தை, தேசிகர் காபிக் கடையின் மர பெஞ்ச், தேவராஜன் வீடிருக்கும் தெரு, குமாரபுரத்தில் துரைக்கண்ணுவின் வீட்டுத் தெரு…எல்லாம் கண்முன்னே தெரிந்தது…காட்சிகளாயின.

​அப்போது பதின் வயதின் இறுதிகளில் இருந்தேன் என்று நினைக்கிறேன். வீட்டில் கருப்பு வெள்ளை டிவி-யில் ஒரு நாள் ஜெயகாந்தனின்​ நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. பங்கேற்பாளர் ஒருவர் பேசுகையில் “ஒரு இளவயது ஆணும் பெண்ணும்…” என்று ஆரம்பித்தபோது, ஜெகே குறுக்கிட்டு “நம்ம குழந்தைங்க…” என்றார் புன்சிரிப்புடன். ஜெகே எனும் ஆளுமையின், தாய்மையின் முதல் சுவை எனக்குள் விழுந்த கணம் அது. ஹென்றி ஜெகே அல்லாமல் வேறு யார்?. ஹென்றி… மொத்த உலகத்தையுமே தன் தாய்மையால், கருணையால், பேரன்பால் அணைக்க நினைக்கும் ஒரு விரிந்த கனிந்த அமைதியான மனம். படிக்கப் படிக்க அம்மனம் எனக்குள்ளும் விரிந்து வியாபித்துக்கொண்டே இருந்தது. எப்போதுமே புத்தகம் படிப்பது, விடுமுறை நாட்கள் தவிர, வேலை நாட்களில் இரவு மட்டும்தான்; ஆனால் “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” படிக்க ஆரம்பித்தபோது, காலை, மதியம் உணவு இடைவேளைகளில் பண்ணையிலிருந்து வீட்டுக்கு வரும்போதெல்லாம் படித்துக்கொண்டிருந்தேன். ஏதோ அமுதம் பருகுவது போலவே இருந்தது. அன்பென்ற உலக தத்துவம் கவிந்த அப்பெரு மனம் என்னை வசீகரித்துக் கொண்டே இருந்தது. என் கனவிலக்கின் ஒரு புற வடிவமாய், நிறைந்து கனிந்த ஹென்றி தோன்றிக் கொண்டேயிருந்தான்.
துரைக்கண்ணுவின் வீட்டுத் திண்ணையில் சாயங்காலங்களில், சூரியன் மறையும் நேரம், முழங்கால்களைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கும் ஹென்றியின் சித்திரம் மறுபடி மறுபடி மனதில் வந்துபோகிறது.
முதல்முறை தேவராஜன் வீட்டிற்குப் போகும்போது, கட்டிலில் படுத்திருக்கும் தேவராஜனின் தாத்தாவிற்கு இரண்டு ஆப்பிள்கள் கொடுத்து தன்னை அறிமுகப்படுத்திக்கொள்கிறான் ஹென்றி. தேவராஜன் இந்தக் காட்சியைப் பார்த்து வாய்க்குள் சிரித்துக்கொண்டே வந்து “தாத்தா யார் வந்திருக்கிறது?” என்று பரிகாசமாகத் தெலுங்கில் கேட்கிறான். “மா நாயனாரா” என்று ஒரு குழந்தை போல் சொல்கிறார் கிழவர். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. அன்பே உருவான அப்பா! மனதில் முதிர்ந்து பழுத்த அப்பா! எதிர்பார்ப்புகளில்லாத, எல்லோரும் குழந்தைகள்தானே, அவர்களின் செய்கைகளில் தவறு என்று ஏதேனும் இருக்க முடியுமா என்று நினைக்கும் அப்பா!

~oOo~

அக்கம்மாவிடம் வளரும் மண்ணாங்கட்டியைப் பற்றி தேவராஜன் ஹென்றியிடம் சொல்கிறான்…

”வெரி நைஸ் பாய்…பக்கத்துக் கிராமம். ரொம்ப ஏழைக் குடும்பம். தகப்பன் சரியில்லை…இவனை அநியாயமாக அடிச்சிக் கொடுமைப்படுத்தி இருக்கான். அவன் தாயார் ஒரு நாளு இவனை இழுத்துக்கொண்டு வந்து என் கையிலே ஒப்படைச்சு, ‘உங்க பிள்ளை மாதிரி வெச்சிக்குங்க…இந்த மாணிக்கத்தோட அருமை தெரியாம அந்தப் பாவி அடிச்சிக் கொன்னுடுவாம்போல இருக்கு…எம்புள்ளை எங்கேயாவது உசிரோட இருந்தாப் போதும். ஒருவேளை சோறு போட்டு வெச்சிக்குங்க ஐயா…’-ன்னிச்சு. அப்ப ரொம்பச் சின்னப் பையன்…அழுதுகிட்டு நின்னுக்கினு இருந்தான்…உடம்பெல்லாம் வார் வாரா அடிச்ச காயம். எனக்குக் கண்ணுலே தண்ணி வந்திடுச்சி…அக்கம்மாகூட அழுதிடுச்சு. அவங்க அம்மா அழுதுகிட்டே சொல்லிச்சு: ‘எம் புள்ளை பொய் சொல்லமாட்டான்; திருடமாட்டான்…கஞ்சி ஊத்திக் கண்ணெத் தெறந்து வுட்டீங்கன்னா புண்ணியமாப் போகும்’னு வந்து அழுதிச்சு…அப்ப இவன் எங்க பள்ளிக்கூடத்திலே அஞ்சாங் கிளாஸ் படிச்சிக்கிட்டு இருந்தான்…மூணு வருஷத்துக்கு முந்தி…இப்ப எட்டாவது படிக்கிறான். ரொம்பப் புத்திசாலி…அக்கம்மாவுக்கு, எனக்கு அப்புறம் இவந்தான் கொழந்தை. எப்பவாவது அவங்கம்மா வந்து பாத்துட்டுப் போகும்…” என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் தேவராஜன் விளக்கினான்.
ஹென்றி மனம் உருகிக் கேட்டுக்கொண்டு இருந்தவன், “காட் பிளஸ் யூ!” என்று தேவராஜனை வாழ்த்தினான்.

ஹென்றி மட்டுமில்லாமல் எல்லோருமே எனக்குப் பிடித்தமானவர்களாய் ஆனார்கள். இயல்பின், நேர்மறையின் மேட்ரிக்ஸ், எங்கும் வழிந்துகொண்டிருந்தது.
தேவராஜன் மேல், கிளியாம்பாளுக்கிருந்த, கோடிட்டு மட்டுமே காட்டப்பட்ட அவ்வுணர்வு ஒரு மென்கவிதை. கிளியாம்பாளை விட தேவராஜன் இரண்டு மூன்று மாதங்களே பெரியவன். அக்கம்மாளுக்கு கிளியாம்பாள் மேல் மிகப் பிரியம்.

கல்யாணம் பண்ணிக்கொண்டு இந்த ஊரைவிட்டுப் போகிறபோது அக்கம்மாளிடம் சொல்லிக்கொள்ள வந்தவள், அவளைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதாள். அப்போது தேவராஜனுக்குக் கல்யாணமாகியிருக்கவில்லை.
அவன் மாடிப்படியில் நின்று அவளையும் அவளோடு தொடர்ந்து வந்த சிறுவர் கூட்டத்தையும் பார்த்துக்கொண்டிருந்தான். தேவராஜனைக் கூப்பிடுமாறு அக்கம்மாள் காதில் ரகசியமாய்ச் சொன்னாள் அவள். அக்கம்மாளும் எதற்கு என்று புரியாமலேயே அழைத்தாள். அவன் முற்றத்தில் வந்து நின்றதும் கிளியாம்பாள் குனிந்து அவன் கால்களில் நமஸ்கரித்தாள். தேவராஜன் ஒன்றும் புரியாமல் பதைத்தபொழுது அக்கம்மாள் சிரித்துக்கொண்டே சொன்னாள்: “பெரியவந்தானே நீ?…ஆசீர்வாதம் பண்ணு…”
தேவராஜன், “நல்லபடியா இருக்கணும்” என்று சொல்லிப் பர்ஸிலிருந்து ஐந்து ரூபாய் பனமும் எடுத்துக் கொடுத்தான். அப்போதும் அவள் அழுதாள்

இப்போதெல்லாம், நல்ல நாவலோ, சிறுகதையோ எதைப் படித்தாலும் மனதின் ஆழத்திற்குப்போய் முன்பதிந்த நினைவுகளை கொக்கிபோட்டு இழுத்துவந்து மேல்தளத்தில் விட்டுவிடுகிறது. கிருஷ்ணராஜ புரத்திலும், குமாரபுரத்திலும் இருந்தபோதெல்லாம், என் பிறந்த கிராமமான ஓடைப்பட்டியிலும், விடுமுறைகளில் செல்லும் தாத்தா ஊரான வீரப்பெருமாள் புரத்திலும்தான் சுற்றிக்கொண்டிருந்தேன்.
கிருஷ்ணராஜபுரத் தெருவில் தந்திக் கம்பத்தில் முகம் புதைத்து “கண்ணாமூச்சி ரே…ரே…” விளையாடும் சிறுவர்களும், பம்பரம் விளையாட்டின் “அபீட்” எடுக்கும் சிறுவர்களும் என் பால்யத்திற்கு அழைத்துப் போனார்கள். ஓடைப்பட்டியில் நாங்கள் வசித்த தெருவின் நண்பர்கள் மட்டுமல்லாது, ஊர்க்கோடி காலனியின் நண்பர்களும் பசுமையாய் ஞாபகத்தில் மேலெழுந்தார்கள். சைக்கிள் கடை மாமா பெண் லதா, பெரியப்பா பெண்கள் அமுதாவும் பரிமளாவும், நாலைந்து தெரு தள்ளியிருந்த ஐந்து அக்காக்களுக்குப் பிறகு பிறந்த வெங்கடேஷ், ஊரின் நுழை வாயிலில் வீடிருந்த ஹேமா, நாராயணன், வாசு, தாமோதரன், குபேந்திரன், சீனி, காலனியிலிருந்த முருகேசன்…எல்லோர் முகங்களும் ஞாபகம் வந்து மனதை நெகிழ்த்தின. அந்தச் சின்ன வயதின் விளையாட்டுக்கள்தான் எத்தனை பரவசம் தந்தன…கலர் கலரான, வெவ்வேறு வண்ணக் கலவையில் மந்தை சேவுக் கடையில் கிடைக்கும் கோலிக்குண்டுகளைப் போலவே அந்த வாழ்வின் காட்சிகள் யாரோ ஒருவரால் வண்ணங்களால் தீட்டப்பட்டிருந்தன.
தேவராஜின் தோட்டத்துக் கிணற்றில் அந்த நிலா வெளிச்சத்தில் குளியல், வெங்கடாஜலபதி பெரியப்பாவின் தோட்டத்துக் கிணற்றை நினைவுபடுத்தியது. நான் சென்னம்பட்டியில் ஏழாவதோ, எட்டாவதோ படிக்கும்போது பெரியப்பா காரியாபட்டி போகும் தார் சாலையின் மிக அருகிலேயே பம்ப் செட்டோடு, கிணறிருந்த அந்த தோட்டத்தை வாங்கியிருந்தார். அதற்கு முன்னால் நாங்கள் குளிப்பதற்கு எல்லை கருப்பசாமி கோயில் தாண்டியிருக்கும் வெண்டர் ராஜ் மகன் பாஸ்கரன் கிணற்றுக்குத்தான் குளிக்கப் போவோம். பெரியப்பா தோட்டம் வாங்கியது வசதியாய் போயிற்று.ஞாயிறுகளின் முற்பகல்கள் எல்லாம், கிணற்றுத் தண்ணீரில்தான் கிடப்போம். கிணற்று விளிம்பிலிருக்கும் கமலைக் கல்லிலிருந்தும், பம்ப் செட் ரூமின் கூரையிலிருந்தும் நண்பர்கள் போட்டி போட்டுக் கொண்டு குதிப்பார்கள். இடையில் பசி எடுத்தால் பனம்பழமும், மஞ்சனத்திப் பழமும்.
திரௌபதியம்மன் கோவிலின் பஞ்சாயத்து ரேடியோ, ஓடைப்பட்டியின் மந்தை வேப்பமரத்திற்கு அருகில் காளியம்மன் கோவில் சுவற்றில் வைக்கப்பட்டிருந்த பஞ்சாயத்து டிவியை, வெள்ளிகிழமைகளின் ஒளியும் ஒளியை மலர்த்தியது.
சில இடங்களில் உரையாடல் சட்டென்று பிடித்து நிறுத்தி மின்னல் வெளிச்சம் காட்டிச் சென்றது.

தேவராஜ் ஹென்றியிடம், “ஆமா, பரியாரி. அவன் இந்த வீட்டுத் திண்ணையில்தான் எப்பவுமே கெடப்பான்…கொஞ்சம் பைத்தியம்”
“ஹூ இஸ் நாட் ‘கொஞ்சம் பைத்தியம்’…?” என்று லேசான சிரிப்புடன் அழுத்தம் தராமல் சொல்லிக்கொண்டான் ஹென்றி.#
**
#”உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?”
“உண்டு…என்னைத்தவிர எல்லாவற்றின் மீதும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது…”
“வாட் டூ யூ மீன்…?”
“ஐ மீன்…கடவுளை நம்பறதுக்கும் நம்பாமலிருக்கிறதுக்கும் ‘நான் யாரு’ன்னுதான் எனக்குத் தெரியலே. இந்த வாழ்க்கையைத்தவிர அதுவும் எனக்குத் தெரிஞ்ச ஒரு துளியைத் தவிர எனக்கு எதுவும் தெரியதே…”

“எனக்காக உங்கள் கொள்கையைத் தளர்த்திக்கொள்கிறீர்களா, என்ன?”
“நோ, நோ!எனது கொள்கையே ‘ஃபிளக்ஸிபி’’ளாக இருப்பதுதான்…” என்றான் ஹென்றி.

~oOo~

“சாவுன்னா என்னான்னு தெரியாதப்போ அதுக்கு வருத்தப்படலாமா?…”

~oOo~

“ஸ்டில் ஐ ஹாவ் நோ எனி ரிலிஜன்! எனக்கு மதம் இல்லே.”
“ஆனா சாமி கும்பிடுறியே…” என்று குறிக்கிட்டுக் கேட்டான் துரைக்கன்ணு.
“எஸ் அதுக்கென்னா? சாமிக்கும் மதத்துக்கும் என்னா சம்பந்தம்?” என்று ஹென்றி கேட்டான்.

ஹிந்தியில் சூரஜ் பர்ஜாத்யாவின் சில திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் – ஹம் ஆப்கே ஹேன் கோன், ஹம் சாத் சாத் ஹே போன்று. ஒருவித நேர்மறை மனநிலையை, உணர்வுகளை உண்டாக்குபவை. கொஞ்சம் மெலோடிராமாவாக இருந்தாலும், மென் உணர்ச்சிகளைத் தூண்டுபவையாக இருந்தாலும் அவை உருவாக்கும் நேர்மறை அலைகள், காலநிலை முக்கியமானதாகத்தான் தோன்றுகிறது. “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” வாசித்து முடித்தபோது ஒரு கனவு, ஒரு பூரணம் மனதை ஆட்கொண்டது. கணியனின் “பேரியாற்று​ ​நீர்வழிப் படூஉம் புணைபோல்​…” வரிபோல்…​
முன்னுரையில் ஜெகே இப்படி குறிப்பிடுகிறார் – “நதியும் கடலும் மட்டும்தான் முழுமையா என்ன? தண்ணீரின் ஒவ்வொரு துளியும் முழுமையானதே ஆகும். நாடுகளும் கண்டங்களும்தான் உலகம் என்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம்தான்”. ஆம், பிரிந்ததும் பூரணம்தான்; இருந்ததும் பூரணம்தான்; பூரணத்திலிருந்து பூரணம் பிரிந்தபின் எஞ்சியதும் பூரணம்தான்.

One Reply to “ஒரு துளி ஒரு நதி ஒரு கடல்”

  1. இந்த கட்டுரை என்னையே நான் திரும்பி பார்ப்பது போல் உணர்ந்தேன் I enjoyed your article on Oru Manithan Or Veedu Or Ulagam I read this book about 30 years back , but till it is lingering in my heart whenever I thought of this Novel. Henry Devaraj every charterer alive till date.
    Thankyou, Thankyou Mr.Venkatesh -Padmanaban Coimbatore

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.