பீட்டர், சூப்பிரண்டைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தான். ஊர்க்காவலன் அவனை ஒரேயடியாக விரட்டியிருந்ததால், அவர் எதிரே தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவன் எதற்காகவோ உட்கார்ந்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்ட ஊர்க்காவலன், “என்ன?..கெளம்பனும்னா கெளம்பு..” என்று அவனைப் பார்த்துச் சொன்னார். அவர் பேசியபோது பீடி வாசனை அடித்தது.
“இல்ல..அய்யாவப் பாக்கணும்…”
“எதுக்கு?..”
“இன்னைக்கிக் காலையில எனக்குக் குடுத்த அஸைன்மெண்டைப் பத்திப் பேசணும்..”
ஊர்க்காவலன் அவன் சொன்னது காதில் விழாதது போல, எதிரே இருந்த பேப்பர்களைப் புரட்டிக் கொண்டே இருந்தார். அந்த ஆபீஸில் அப்படித்தான். சக வேலைக்காரனை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். ஊர்க்காவலன் பீட்டரை மதிக்காததுபோல், ஊர்க்காவலை அறைக்குள் இருக்கிற சூப்பிரண்டு மதிக்க மாட்டான். அவரை அவருக்கும் மேலே உள்ள ஜாயிண்ட் கமிஷனர் மதிக்க மாட்டார். ஜே.சி.யை டி.ஐ.ஜி ஒரு பொருட்டாகவே கருதமாட்டார். இதை எல்லாம் சகித்துக்கொண்டுதான் டிப்பார்ட்மெண்டில் வேலை செய்ய வேண்டும் என்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ஊர்க்காவலனை மீறி நேராகவே போய் சூப்பிரண்டைப் பார்க்கவும் முடியாது. “என்ன மேன் மேனர்ஸ் இல்லையா?” நேரா உள்ளே வந்துட்டே?…” என்று சூப்பிரண்டே சத்தம் போடுவார். ஊர்க்காவலனின் மேஜை விளிம்பில் ஆள்காட்டி விரலால் தேய்த்துக் கொண்டிருந்தான் பீட்டர்.
“கதவுக்குப் பின்னாலே இருக்குற சுவிட்சைப் போட்டுட்டு வா…” என்றார் ஊர்க்காவலன். அவன் எழுந்து போய் கதவை ஒருக்களித்துத் திறந்து, பின்னால் சுவிட்ச் போர்டில் இருந்த சுவிட்ச்களை ஒவ்வொன்றாகப் போட்டான். வரந்தா விளக்கு, படிக்கட்டு விளக்குகள் எல்லாம் எரிந்தன. எதிர் மேஜையிலிருந்த சிகாமணி அவனை ஏறிட்டுப் பார்த்தான். கதவைத் திரும்பவும் பழையபடியே சுவரோடு சுவராகச் சாத்தி நிறுத்தும்போது கதவுக் கீல் நீளமாகச் சத்தம் போட்டது.
பேசாமல் அப்படியே கீழே படியிறங்கிப் போய் விடலாமா என்றிருந்தது. ஏதோ தன்னுடைய சொந்த வேலைக்காக சூப்பிரண்டைப் பார்க்க விரும்பியது போல் ஊர்க்காவலன் நடந்து கொள்கிறாரே என்று நினைத்தான். ஆபீஸ் வேலையாகத்தானே அவரைப் பார்க்க வேண்டும் என்று கேட்கிறோம். பார்க்கலாம், பார்க்க முடியாது, என்று பதில்கூட சொல்ல மாட்டேன் என்கிறாரே. மெதுவாக நடந்து சென்று அவர் எதிரே திரும்பவும் உட்கார்ந்தான். முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு ஊர்க்காவலன் சூப்பிரண்டு அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனார். போன வேகத்திலேயே திரும்ப வந்தவர், அவனிடம், “போ!… வரச் சொல்லுதாரு!…” என்றார். சட்டென்று எழுந்து, சூப்பிரண்டு அறைக்குள் நுழைந்தான். தூரத்தில் நின்றே அவருக்குச் சல்யூட் அடித்தான். பேப்பர் வெயிட்டைப் பையின் மீது வைத்துக் கொண்டே, “என்னப்பா?…” என்றார் சூப்பிரண்டு.
காலையில் தனக்கு கோயமுத்தூரிலிருந்து பாலு போன் செய்து சாரு மஜூம்தார் வருகிற தகவலைச் சொன்னது முதல் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு சாரு மஜூம்தார் சென்றது, பாண்டியன் எக்ஸ்பிரஸில் புறப்பட இருப்பது வரை எல்லாவற்றையும் விரிவாகச் சொன்னான். அவர் அவன் முகத்தைப் பார்க்காமல், பையைப் பார்த்துக்கொண்டே அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். சாரு மஜூம்தார் பேரைச் சொல்லும்போதெல்லாம் ‘சாரு மசும்தார்’ என்று சொன்னான்.
“கோபால் பிள்ளையை அவர் எதுக்காகப் பார்க்கணும்?” என்று அவனிடம் கேட்கிற மாதிரி தனக்குத்தானே கேட்டுக்கொண்டார் சூப்பிரண்டு.
“கோபால் பிள்ளை இப்பம் தொழில் சங்கம் அது இதுன்னு எதுலயாவது ஆக்டிவா இருக்காராப்பா?”
“இல்லைங்க அய்யா..”
“சரி..அவரைப் பாத்து எதுக்காக இந்த ஆளு அவரப் பார்க்க வந்தாம்ன்னு கேட்டு விசாரி… அந்த பாலகிருஷ்ணன் யாரு?..”
“காலேஜ் வாத்தியார்னு நெனைக்கேன்”
“சரி… அவங்க மூவ்மண்ட்ஸ் என்னன்னு வாச் பண்ணு… இவன் லேசுப்பட்ட ஆளு இல்லே. பெரிய புரச்சிக்காரன். அவன் மதுரைக்கு வந்துட்டுப் போயிருக்கான்னா சும்மா இருக்காது. க்ளோஸா எல்லாரையும் வாச் பண்ணு.., தங்கராஜையும் கூட்டிக்கோ… நாளைக்கு தங்கராஜ் உன்னை கான்டாக்ட் பண்ணுவான். ஊர்க்காவலன் கிட்டே சொல்றேன். உஷாரா இன்பார்ம்ஸ கலக்ட் பண்ணி இன்னும் இரண்டு நாள்லே எனக்கு ரிப்போர்ட் வரணும். ஜல்தி!…” என்றார்.
சல்யூட் அடித்துவிட்டு அறையை விட்டு வெளியே வந்தான் பீட்டர். ஊர்க்காவலன் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். அவரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
~oOo~
கூத்தியார் குண்டுப் பிள்ளையும் கற்பகமும் சீதா பவனத்துக்கு வந்து ஒரு மணி நேரமாகி விட்டது. மணி பதினொன்றிருக்கும். சீதையும் ராஜேஸ்வரியும் மத்தியானச் சமையலுக்கான வேலைகளில் மும்முரமாக இருந்தனர். மீனாட்சியும் கற்பகமும் பட்டாசலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். லெட்சுமண பிள்ளை அங்கே வடக்குச் சுவரோரத்தில் கிடந்த பெஞ்சில் உட்கார்ந்து இரண்டு மகள்களும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார். சோமு அறையில் உட்கார்ந்து ஏதோ தமிழ் நாவலை கட்டிலில் படுத்திருந்தவாறே வாசித்துக் கொண்டிருந்தான். லெட்சுமண பிள்ளை கற்பகத்திடம், “காலேஜுக்குக் கெளம்பலாமாம்மா?… மொதல்ல வந்த வேலைய முடிச்சிருவோம்… அக்கா எங்க போயிரப் போறா?… இன்னும் மூணு வருசம் இங்க மதுரயிலதான இருக்கப் போற… அப்பறம் பேசிக்கிடலாம்… பொறப்படு… மீனா என் சட்டைய எடுத்துட்டு வாம்மா…” என்றார்.
மீனாட்சி எழுந்து அவர்களுடைய அறைக்குள் போய் அவருடைய சட்டையை எடுத்து வந்தாள். கற்பகமும் அக்காவின் பின்னால் போய் டி.சி., எஸ்.எஸ்.எல்.சி. புக், அப்ளிகேஷன் எல்லாம் இருந்த பைலை எடுத்துக் கொண்டு வந்தாள். அந்தப் பைலை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு சோமுவின் அருகே போனாள். “ஊர்லே இருந்து கொழுந்தியா, மாமனார் எல்லாம் வந்திருக்கோம்… எங்களை என்ன ஏதுன்னு கேக்கலை. எப்பமும் பொஸ்தகம்தானா?…” என்று கேட்டாள்.
“அதான் வான்னு கேட்டாச்சில்லா…” என்றான் சோமு.
“வான்னு கேட்டா போதுமாக்கும்?…”
“வேற என்ன செய்யணும்ங்க?…” என்று சொல்லிக் கொண்டே புஸ்தகத்தைப் படுக்கையின் மீது வைத்தான். அவள் அவன் முகத்தருகே வேகமாகக் குனிந்து அந்தப் புஸ்தகத்தை எடுத்து தலைப்பைப் படித்தாள். “மயிலாடும் பாறையா?… மயிலாடும் பாறைன்னு ஒரு பேரா?” என்று அவள் சொன்னதற்குப் பதில் எதுவும் கூறாமல் சிரித்தான். “நீ படிச்சிருக்கியா?” என்று சிறிது நேரம் கழித்துக் கேட்டான். “நீங்க பெரிய படிப்பாளி… நான் பட்டிக்காட்டுல இருக்கவா… எனக்கு யாரு பொஸ்தகம் தாரா?…” என்று ரொம்பப் பெரிய மனுஷி மாதிரி சலித்துக் கொண்டாள். “வேணும்னா இதை எடுத்துட்டுப் போயிப் படி…” என்றான். அவள் அணிந்திருந்த பட்டுப் பாவாடை, தாவணியிலிருந்து லேசான தாழம்பூ வாசனை வீசியது.
“நீ ஒன்னோட துணிமணிகளை பெட்டியில வைப்பியா… பீரோவுல வைப்பியா?…”
“எதுக்கு?”
“தாழம்பூ வாசனை வீசுது…”
“ஒங்க மூக்கு துப்பறியும் மூக்குதான்…” என்று சொல்லிக் கொண்டே, கையிலிருந்த பைலால் அவன் தோளில் தட்டிவிட்டுப் பட்டாசலுக்குப் போனாள். கூத்தியார் குண்டுப் பிள்ளை சட்டைப் பொத்தான்களை மாட்டிக் கொண்டிருந்தார். அவர் எங்கோ கிளம்புகிற மாதிரி இருக்கவே உள்ளே இருந்து வேகமாக வந்த சீதை, “என்ன அண்ணாச்சி… எங்க வந்ததும் வராததுமாப் பொறப்பட்டுட்டீயோ?… சாப்பிடாண்டாமா?…” என்றாள்.
“எம்மா… எங்கயும் போகல… இவளக் காலேஜுல கொண்டு போயிச் சேக்கணும்லா… அந்த வேலய முடிச்சிட்டு வந்துருதேன்…”
“பத்து நிமிசத்துல சமையல் ஆயிரும் அண்ணாச்சி… சாப்பிட்டுப் போங்களேன்…”
“எம்மா.. இப்பந்தான மோர் குடிச்சேன்… போயிட்டு இங்கதான வரப்போறேன்…”
“சரி… சீக்கிரம் வந்துருங்க… அவுஹளும் சாப்பிட வந்துருவாஹ..”
“யாரு மச்சினப் பிள்ளதான?… வேலய முடிச்சுப் போட்டு ஒடனே வந்திருதேன்…” என்று சொல்லிக்கொண்டே வாசலை நோக்கிப் புறப்பட்டவர் மீனாட்சியிடம், “மருமகப் பிள்ளை கிட்டயும் சொல்லிரு…” என்றார். “சரிப்பா…” என்று சொல்லிக் கொண்டே அப்பாவையும், தங்கையையும் வழியனுப்ப வாசல் வரை போனாள். சரோஜா வாசல்படியில் உட்கார்ந்திருந்தாள். அடிபம்பில் தண்ணீர் அடித்துக்கொண்டிருந்த ஆசாரியின் பொஞ்சாதி, அவர்கள் இருவரும் சற்று தூரம் சென்ற பின்பு மீனாட்சியிடம், “என்ன மீனா! அப்பாவும் தங்கச்சியும் வந்திருக்காங்களா?” என்று கேட்டாள்.
“ஆமாக்கா! தங்கச்சி காலேஜ்ல சேரப்போறா…” என்றாள்.
“நடந்தே போறாங்களே?…”
“இல்லக்கா மேலமாசி வீதில போயி ரிக்ஷா பிடிச்சுக்குவாங்க…”, என்று சொல்லிவிட்டு சரோஜாவை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றாள். அவள் நடைக்கூடத்தில் வரும்போது பட்டாசலிலிருந்த டெலிபோன் மணி அடித்தது. வேகமாகச் சென்று போனை எடுத்தாள் மீனாட்சி. மறுமுனையில் யாரோ ஒரு ஆண்குரல், “சோமு இருக்கானா?…” என்று கேட்டது. “இருக்காங்க… கொஞ்சம் இருங்க…” என்று சொல்லிவிட்டுவிட்டு, “ஏங்க… உங்களுக்குத்தான் போன்…” என்று சத்தமாகச் சொன்னாள். புஸ்தகத்தை மூடி வைத்துவிட்டு சோமு வேகமாக வந்து அவளிடமிருந்து போனை வாங்கிப் பேசினான்.
“சோமு! நான் துரைப்பாண்டிப்பா!”
“சொல்லுப்பா…எப்படி இருக்கே?…”
“நல்லா இருக்கேன்…” என்று சொல்லிவிட்டு நேற்று சாரு மஜும்தார் வந்திருந்ததைப் பற்றி விபரமாகச் சொன்னான். அதைக் கேட்டு சோமு உற்சாகமானான்.
“நாளையிலே இருந்து பாலகிருஷ்ணன் சார் வீட்டிலே வகுப்புகள் நடத்தப் ப்ளான் பண்ணியிருக்கோம்… நீயும் வந்திரு… சபாபதியையும் கூட்டிட்டு வா…” என்றான் துரைப்பாண்டி.
“எத்தனை மணிக்கு?…”
“ஆறு மணிக்கு வந்துரு…”
“சரி வாரேன்…” என்றான் சோமு. துரைப்பாண்டி போனை வைத்ததும், உடனே சபாபதி வீட்டுக்குப் போன் செய்தான் சோமு. அவனுக்கு ஏதோ ஒரு பிடிமானம் கிடைத்தது போலிருந்தது. அடடா, இந்தத் துரைப்பாண்டி இப்போது செய்த போனை நேற்றே செய்திருக்கக்கூடாதா? அவரை நேரில் பார்த்திருக்கலாமே என்று ஆதங்கப்பட்டான். அவனிடமிருந்த மார்க்ஸியப் புஸ்தகங்களுக்கெல்லாம் உயிர்வந்த மாதிரி அவனுக்குத் தோன்றிற்று. புஸ்தக ஷெல்பிலிருந்து கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோவை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான். மயிலாடும் பாறை நாவல் கட்டிலின் ஒரு மூலையில் கிடந்தது.
சீதாபவனத்திலுள்ள வீட்டுப் பெண்கள் கூத்தியார் குண்டுப்பிள்ளையும், கற்பகமும் வந்திருக்கிற சந்தோஷத்தில் இருந்தனர். ராஜி அத்தையிடம், “அத்தை… சித்தப்பாவுக்கு முருக்க வத்தல் ரொம்பப் பிடிக்கும். மாமாவுக்குச் சுண்டவத்தல் பிடிக்கும். ரெண்டையும் வறுத்திரலாம் அத்தை” என்றாள்.
“ஓம் வீட்டுக்காரனுக்கு கூழ் வத்தல்னா புடிக்குமே… அதை விட்டுட்டியே…” என்றாள் சீதை. ராஜி தலையைக் கவிழ்ந்து சிரித்துக் கொண்டாள். “அத்தை… எல்லா வத்தலையுமே வறுத்திருங்க…” என்றாள் மீனாட்சி. “ஒன் வீட்டுக்காரனை விட்டுட்டியே?…” என்றாள் சீதா. “அவுஹ… எல்லாம் சாப்பிடுவாஹ…” என்றாள் மீனா. சரோஜா பட்டாசல் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு, டெலிபோனை எடுத்துக் காதில் வைத்து, யாரிடமோ பேசுகிற மாதிரி பாவனை செய்துகொண்டிருந்தாள். அடி பம்பில் யாரோ தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தார்கள். மேலமாசி வீதியில் டவுன் பஸ் போகிற சத்தம் கேட்டது.
கோபால் பிள்ளை வீட்டில் கீழே வண்டிக்காரன் மொட்டை சமையல் பாத்திரங்களை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தான். கோபால் பிள்ளையுடைய பெரிய மகன் ராமசாமி பிளாட்பாரத்தில் எடுத்து வைக்கப்பட்டிருந்த சமையல் பாத்திரங்களை திரும்பவும் ஒரு தடவை சரி பார்த்தார். அவை கோரிப்பாளையத்தில் ஒரு விசேஷ வீட்டுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.
“எத்தனை ஜாரிணிடா?…” என்று மொட்டையிடம் கேட்டார் ராமசாமி.
“ஒங்க முன்னாலேதானே எட்டு ஜாரிணியை தேக்ஸாவுக்குள்ளே போட்டேன்… நீங்க பாத்துக்கிட்டுத்தான இருந்தீங்கங்க?..” என்றான் மொட்டை.