ஆறாம் திணை

ட்!தட்!தட்! தட்!
உடலே காதாக, காலே மனமாக அவன் மரண பயத்தில் ஓடினான்.
அந்த நூற்றைம்பது கிலோ,ஆறரை அடி தடியன்கள் அவனை விடுவதாகத் தெரியவில்லை.
ஆயிற்று, இன்னும் பத்து அடியில் வலது புறம் திரும்பினால், சப்வே நிலையத்தில் நுழைந்து விட்டால் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது. நுழைந்து விட்டான்.
கூட்டம் நெரிபடுகிற நியூயார்க் நகர சப் வே நிலையங்கள் வாழ்க! ஓடிக் கொண்டே சட்டையைக் கழற்றி டீ ஷர்ட்டுக்குள்ளே திணித்துக் கொண்டான். அவர்கள் எலிவேட்டரின் மேல் பகுதியில் தென்படுவதற்குள் ஒளிய வேண்டும், எங்கே? எங்கே? பதறியபடி இடப் புற கடைகளை நோட்டம் விட்டுக் கொண்டே ஓடினான். மூன்றாவது, நான்காவது கடைகளுக்கு நடுவே இருந்த இருட்டான ஒரு அடி இடைவெளியை மறைத்த மரப் பலகையைத் தொட்டான். ஸ்பிரிங்க் வைத்தது போல  வழுக்கிக் கொண்டு திறந்தது. இவன் உள்ளே நுழைந்து இடைவெளி தெரியாமல் மூடிக் கொண்டான்.பலகையில் இருந்த சின்ன ஒட்டை வழியாக அவர்கள் எலிவேட்டரின் மேல் பகுதியில் நின்று கொண்டு சுற்றும், முற்றும் தேடுவதைக் கவனித்தான். பயமாக இருந்தது,
த்ஷ்… சோடா பாட்டில் திறந்ததைப் போல பின்னாலிருந்து சிரிப்பு சத்தம்.
தொண்டை வறண்டு, நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.
“யா …..யாரு?”அவன் குரல் கர கரப்பாக ஆரம்பித்து,கீச்சென்று முடிந்தது.
அவன் பக்கத்தில் மூக்குப் பொடிவாசனையும் , பஞ்சகச்சமுமாக ஒரு .கிழவர்!
“அவா கிட்டேருந்து தப்பிச்சுக்க ஒடி வந்தயா? அது முடியும்,ஆனா ஒத்தன் தன்கிட்டேருந்து தானே தப்பிச்சுக்க முடியுமோ?”
இது ஏதடா புது அவஸ்தை? இந்த இரவின் அபத்தங்கள்! தலை சுற்றியது.
அந்த தடியன்கள் கீழே வந்து விட்டனர். கிட்டத்தட்ட இவன் இருந்த மரப்பலகைக்கு அருகில் நின்று, அமெரிக்காவின் தேசிய வார்த்தையான அந்த நாலு எழுத்து வசவை ஆக்ரோஷமாக எச்சில் தெறிக்க கத்தினார்கள். இவர்கள் யார்? என்னை ஏன் துரத்துகின்றனர்?
பின்னாலிருந்து கிழவர் ”என் சொந்த ஊர் கும்பகோணம் பக்கத்துல…” இவன் திரும்பி “உஷ்”என்றான் வாயில் விரலை வைத்தபடி.அவர் சத்தம் வராமல் வாயை அசைத்து கையால் அப்புறம் சொல்கிறேன் என்று ஜாடை செய்தார்.“ரொம்ப அவசியம் இப்பொ” என்று வாய்க்குள் முனகினான்.
அதற்குள் மண்டை ஓடு டாலர் போட்டவன் எச்சிலை துப்பியபடி,
“அந்த அப்பன் பேர் தெரியாத பயலை கொல்லு” என்றான் முட்டியை இறுக்கியபடி.
‘எங்க அப்பா அனந்த நாராயணன்’ என்றான் மனதிற்குள்.
‘அபி வாதயே ,வாசிஷ்ட ,மைத்ராவருண, கௌண்டின்ய த்ரயா ரிஷேய..’ மனதிற்குள் ஓடியது.
பின்னாலிருந்து மறுபடியும் சோடா பாட்டில் சிரிப்பு. “கௌண்டின்ய கோத்ரமா? நாங்க பாரத்வாஜம்”.கொஞ்சம் திடுக்!
அவன் திரும்பி பார்க்காமல் வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். ”பிள்ளையாரப்பா!உனக்கு நூத்தியெட்டு தேங்காய் உடைக்கறேன், இந்த கண்டத்திலிருந்து தப்பிச்சா!”
அவர்கள் மெல்ல அங்கிருந்து நடக்க துவங்கினர். கண் பார்வையிலிருந்து மறையும் வரை பார்த்திருந்து விட்டு, மூச்சை இழுத்து சாவகாசமாக விட்டான்.
கிழவர் “ஐம் திருமலாச்சாரி ஃப்ரம் கொடவாசல்” என்றார்.
‘ஹூம்! இதே சுஜாதா கதையா இருந்தால் ஒரு பதினெட்டு வயசு குட்டி , குட்டை பாவாடையும் ,பர்ஃப்யூம் வாசனையுமா இங்கே ஒளிஞ்சுண்டு இருப்பா, நமக்கு கிடச்சது பழமையின் நெடி வீசுகிற ஒரு பொக்கை வாய் கிழவர்! நாம குடுத்து வச்சது அவ்வளவுதான்!
கஷ்டம் விலகிய அடுத்த நொடி மனசு தேடுகிற விஷயங்கள்!!’
“அதான் மனுஷ மனசு! நரக அவஸ்தையில் இருக்கும் போது கூட சொர்க்கத்துக்கு ஏங்கறதுதான் இயற்கை! இல்லையா? அந்த ஏக்கம் இல்லைன்னா மனுஷ வாழ்க்கை இவ்வளவு வளர்ச்சி அடஞ்சிருக்காது என்ன சொல்ற?”என்றார் கிழவர்.
வெளியில் ‘சலங்க் சலங்க்’ அணிகலன்களின் மெல்லிய ஓசை!
கதவின் இடை வெளி வழியே பார்த்தான். அங்கே குந்தவை தேவி, கம்பீரமும், குறும்பும், புத்தி சாதுர்யமும் நிரம்பிய தாமரை முகத்தை லேசாக உயர்த்தியபடி அழகாக நடந்து வந்து கொண்டிருந்தாள். திருமகளே உருவெடுத்து வந்தது போல இருந்தது.
‘ ஆஹா! இந்த இரவின் அதிசயங்களுக்கு முடிவேயில்லையா?’ என்று நினைத்தான்.உடனே ‘இது என்ன? இது வந்தியத்தேவனின் வரிகள் அல்லவா? நான் ஏன் இதை நினைத்தேன்?’
பின்னாலிருந்து கிழவர் “இடையை தொட்டுப் பார். முகத்தையும்.”
இடையில் இருந்த அரைக் கச்சையில் ஓலை நறுக்கும், குறு வாளும் இருந்தன.முகத்தில் அரும்பு மீசை!
மீண்டும் சோடா பாட்டில் திறந்த சிரிப்பு.
“என் மேல் பழமையின் நெடி என்று நினைத்தாய் அல்லவா? உன் மேல் ஆயிர வருஷத்து நெடி!” சிரித்தார்.
கதவைத் தொடப் போனவனைத் தடுத்தார்.
“உன் அவசர புத்தியினால் எத்தனை தடவை ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறாய்? வேண்டாம்!” என்றார்.
அவரின் சிரிக்கும் கண்களையும், பெரிய மூக்கையும், பஞ்சகச்சத்தையும்  ஒரு முறை பார்த்து விட்டு
“நன்றி ! பாட்டா!” என்றபடி கதவைத் தள்ளிக் கொண்டு வெளியே………

~oOo~

 
விழுந்தவனை “ஐயோ சாமி! பாத்து! பாத்து எளுந்திருங்க” என்றவனுக்கு ஐம்பது வயசிருக்கும்.தலையில் குச்சி, குச்சியாக கருப்பும் , வெளுப்பும் கலந்த முடி, கொஞ்சம் திடகாத்ரமான விவசாயி போல தோற்றம்.
எதிரே நீண்ட சாலையின் இரு மருங்கும் பெரிய பெரிய மரங்கள்.சாலை முடிந்த இடத்தில் ஒரு அரண்மனை போன்ற கட்டிடம், மேலே அரை கோள வடிவ குவி மாடத்துடன்.
இவன் பார்வை போன திசையைக் கவனித்து அவன் சொன்னான், ”அதுங்களா? அதுதான் ராணி மங்கம்மா அரமணை” என்றான்.
“நீங்க?”
“நானா சாமி? நான் பொலையப்பன். ஊமச்சிகுளம் போற வளியில நாரயணபுரம் கிராமம் இருக்கில்லே, அங்க டாக்டர் சாமி நிலத்தை நாந்தான் உளுகறேன் சாமி.இங்க அந்த வீட்டு சின்ன சாமி படிக்கறாங்க “ வலது பக்கம் பசிய மரக் கூட்டங்களுடன் கூடிய  அழகிய செங்கல் நிற கட்டிடங்கள்  நிறைந்த கல்லூரி வளாகத்தைக் காண்பித்தான்.
“வண்டியில காலேசு கொண்டு விட்டுட்டு வாரேன், உங்களைப் பாத்தேன் சாமி , அம்புட்டுதான்”
‘பார்த்தால் கார் டிரைவர் மாதிரி தெரியலயே?’அழுக்கு வேஷ்டியை தார் பாய்ச்சி கட்டிக் கொண்டிருந்தான், அதற்கு இணையாக அதை விட அழுக்கான துண்டை கஷ்கத்தில் சொருகிக்கொண்டிருந்தான்.
“காரா?” என்று கேட்டான்.
“ஹெ . ஹெ.. உங்களோட கூத்துதான் சாமி! அந்தா பாருங்க நம்ம வண்டியை “ என்றான். சற்று தூரத்தில் மர நிழலில் ஒரு மாட்டு வண்டி நிறுத்தப் பட்டிருந்தது.
அவனுக்கு தலை சுற்றுவது போல இருந்தது.
“சாமியை எங்கயொ பாத்த மாரி இருக்குங்களே” எத்தனை சாமிடாப்பா என்று நினைத்துக் கொண்டான்.
“ஹாங்க்! நினைப்பு வந்திருச்சு சாமி நீங்க யாருன்னு?”
“யாரு?” என்று ஆவலாகக் கேட்டான்.
“சின்னச் சாமி மட்டையும் ,பந்தும் வச்சுக்கிட்டு  மைதானத்தில விளையாடையிலே, உங்களையும் பாத்திருக்கேன்! அவங்களோட சினேககாரங்கதானே நீங்க! பஸ் கம்பனி முதலாளி வீட்டுப் பையன்தானுங்க நீங்க?”
யாருடா அந்த அதிர்ஷ்டக்காரப் பையன் ? என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே, அவர்களுக்கு முன்பக்கத்திலிருந்தும், பின் பக்கத்திலிருந்தும் , இரண்டு கோஷ்டிகள், கைகளில் ஆயுதங்களுடன், ஒன்றையொன்று நோக்கி கத்திக் கொண்டே ஒடி வர, பொலையப்பன் அவனைப் பிடித்து இழுத்தான், “சாமி! ஓடியாந்திருங்க !இவிங்க சண்டையிலே நம்மளை போட்டுத் தள்ளிடுவாய்ங்க!”. இருவரும் ஓடத் துவங்கினர்.
“யாரு இவங்க?”
“யாருக்குத் தெரியும்? பங்காளி சண்டை, சொத்து தகறாலு, பொம்பளை ஆளு விவகாரம் எதுனா இருக்கும்! ஒடியாங்க!ஒடியாங்க!”
மரத்துக்குப் பின்னால் ஒளிவதற்குள், அவனை நோக்கிப் பறந்து வந்த  கம்பு அவன் நெற்றியைப் பதம் பார்க்க, ஆவென்று அலறி..
 

~oOo~

நெற்றியை தடவியபடி நிமிர்ந்தான்.அந்த அழகிய வீட்டின் முன்னால் நின்று , திறந்திருந்த கதவின் வழியாக முற்றத்தைப் பார்த்தான். நடுவில் இருந்த மரத்தைச் சுற்றி ஓடிக் கொண்டிருந்த இளம் பெண்கள் இருவரும் இவனைக் கண்டதும் ஓடி வந்தனர். அவர்களின் ஆடை, அணி அலங்காரங்கள், அந்த வீடு, அதனைச் சுற்றி இருந்த தோட்டம் போன்ற அமைப்பு இவை யாவுமே அவன் அது வரை அறிந்திருந்த எது போலவும் இல்லையென தோன்றியது.ஆனால் அழகாக இருந்தன, அந்த பெண்களைப்  போலவே.
அவனைப் பார்த்து விழி விரிய நின்றிருந்தனர்.
“கொஞ்சம் தண்ணி குடுக்க முடியுமா?” என்றான், நெற்றியை தடவிக் கொண்டே.
அவர்கள் புருவத்தை உயர்த்தி ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். சரியாக கேட்கவில்லை போல இருக்கே!
“கொஞ்சம் குடிக்கற தண்ணி.” மறுபடியும் கேட்டான்.
…………..
“வாட்டர்?”
“சுடர் தொடீஇ!” கதாநாயகி மாதிரி இருந்தவள் அவள் தோழியைப் பார்த்து சொன்னாள். அதற்கு அவள் ”ம்?” எனக் கேட்டாள்.
இப்படி ஒரு பெயரா?
அவள் தொடர்ந்தாள்.
“சுடர் தொடீஇ! கேளாய் தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா,அடைச்சிய
கோதை பரிந்து, வரி பந்துகொண்டு ஓடினன் இவனே”
‘அடடா! இது ஏதோ தமிழ்ப் பண்டிதர் வீடு போலிருக்கே! இதுக்குத்தான் ஸ்கூல்ல தமிழ் வாத்தியார் சொல்லித்தரும் போது சரியா கவனிச்சுருக்கணும்! அப்ப கவனிக்காதது, இப்ப இவ்வளவு கஷ்டத்துலே கொண்டு வந்து விட்டுடிச்சே’
சரியாக முழுக்க புரியவில்லையே ஒழிய தன்னை ஏதோ குற்றம் சொல்கிறார்கள் எனப் புரிந்தது.
இவன் “அதெல்லாம் ஒண்ணும் இல்லீங்க! மன்னிச்சுகங்க!”
வீட்டினுள்ளிருந்து, அந்த கதாநாயகியின் நடு வயது அச்சு போலத் தோற்றம் அளித்த பெண்மணி,
“உண்ணு நீர் வேட்டுவன் காண்! உண்ணு நீர் ஊட்டி வா!” என்றாள்.
“அதாங்க! அதேதான்! உண்ணு நீர் வேண்டும்” என்றான்.
அவனைத் திரும்பி திரும்பிப் பார்த்துக் கொண்டே உள்ளே சென்று நீர் கொண்டு வந்தாள். நீரை வாங்கிக் கொண்டே மெதுவாக “தயவு செய்து இது என்ன இடம்னு சொல்லுங்க! ப்ளீஸ்! ஹெல்ப் மீ!”” லேசாக முன் கையைப் பற்றினான்.
“அன்னாய்! இவன் செய்தது காண்!” என குயிலினும் இனிய குரலில் கூவினாள். அம்மா ஓடி வந்து கொஞ்சம் கோபமாக பார்த்து “என்ன?’ என்றாள்.
பெண் கள்ளப் பார்வை பார்த்துக் கொண்டே“உண்ணு நீர் விக்கினான்” என்றதும் சிரித்து, இவன் முதுகை அன்பாக தடவிக் கொடுத்தாள். எவ்வளவு நல்ல அம்மா! யாரோ பையனை தன் குழந்தை போல் எண்ணுகிறாளே! “ ரொம்ப தாங்க்ஸ் அம்மா!” என்று சொல்லி விட்டு, பெண்ணைப் பார்த்து மன்னிப்பு கேட்பது போலவும் , நன்றி தெரிவிப்பது போலவும் சிரித்தான்.
அவள் நாணமும், மகிழ்ச்சியுமாய் கன்னங்குழிய சிரித்து விட்டு, மெதுவாக “கள்வன் மகன்!” என்றாள்.
மரங்களுக்கிடையில் இருந்து ஒரு பெரியவர் வந்தார். நடுத்தர உயரமும், கொஞ்சம் கட்டு குட்டான உடல் வாகும், சதுர முகத்தில், கறுப்பும் , வெள்ளையும் கலந்த சுருள்தாடியுமாக, அசப்பில் ஏ.பி. நாகராஜனை நினைவு படுத்துகிற மாதிரி இருந்தார்.
மூவரும் வணங்கினர்.அவர்களை ஆசிர்வதித்து விட்டு, கையில் இருந்த ஒலை நறுக்கை பார்த்து,
¹”சுடர் தொடீஇ! கேளாய்” என ஆரம்பித்து, ”நகைக் கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்!”  என அருவி² விழுகிற தாளத்தின் ஓசையில் படித்து முடித்தார். மூவரும் மகிழ்ச்சியோடு அவரை மறு முறை வணங்கினர்.
இப்போது அனைவரும் அவன் இருக்கும் திசையை நோக்கினார்கள்.
ஏ.பி நாகராஜன் ”ம்..! பாடும் ! கலிப்பா பாடல் ஒன்றை!” என்றார் இவனைப் பார்த்து.
“கலிப்பா?”
“ம்! கலிப்பா, வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா!…..”
அப்பப்பா!  இவை எல்லாம் என்ன? ஏதொ பாடல் சொல்லச் சொல்கிறார் என்று மட்டும் புரிந்தது. அவனுக்குத் தெரிந்த பாடல் எல்லாம் திரையிசைப் பாடல்கள்தான்.அதிலும் இப்போது நினைவுக்கு வருவது “எவண்டி உன்னை பெத்தான், பெத்தான்?” பாட்டுதான். அதை பாடிவிட்டு இங்கிருந்து உயிரோடு போவதற்கான சாத்தியக் கூறு இருப்பதாகத் தெரியவில்லை.
சட்டென்று மூளைக்குள் விளக்கு எரிந்தது. இது ஏதோ போட்டி சமாசாரம் ஆக இருக்குமோ? ராமன் வில்லை ஒடித்து சீதையை கை பிடித்தது போல்,  பழங்காலத்தில் காளையை அடக்கி, கன்னியை மணம் புரிந்தது போல், இந்த ஏதோ ஒரு பாட்டைப் பாடினால் , இந்த பெண்ணை எனக்கு மண முடித்து தருவார்களோ? அந்த பெண் வேறு இவனைப் பார்த்து அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள். உற்சாகமானான். கைகளை பரபரவென தேய்த்துக் கொண்டான். அவர்கள் நால்வரும் இவனைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஏ.பி, நாகராஜன் கொஞ்சம் விரோதமாக பார்ப்பது போல இருந்தது. அவரைப் பார்த்ததும்,’அடச் சே! இத்தனை நேரம் தோணாம போச்சே! அம்மாவும், அப்பாவும் அடிக்கடிப் போட்டுப் பார்த்து சிரிக்கும் திரு விளையாடல்  தருமி நகைச்சுவைக் காட்சி! அதில் கூட சிவாஜி விழிகளை உருட்டி, புருவங்களை நெறித்து, உதடுகளை  அதிகமாக குவித்தும் , விரித்தும் உரக்க ஒரு கவிதை சொல்லுவாரே? அது என்ன? என்ன அர்த்தம் என்பது நினைவில்லை, ஆனா  பெண்களின் கூந்தலின் நறு மணத்தைப் பற்றி இருக்கும் என்று லேசாக ஞாபகம்! இந்த பெண்ணின் கூந்தல் கூட நல்ல வாசனையாகத்தானே இருந்தது? அவ கையைப் பிடித்த போது தெரிந்ததே!’
ஆரம்பித்தான், “கொங்கு தேர் வாழ்க்கை”
அவர்கள் நால்வரும் சடக்கென முதுகை நிமிர்த்தி நேராக நின்றனர்.ஏ.பி. நாகராஜன் ஆவலாகப் பார்த்தார்.
“கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” அவர் சபாஷ்! என்பது போல பார்த்தார்.
“கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம்,…………, கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம்…….”
மழைக்கால சென்னை நகரத் தெருக்களில் சிக்கிக் கொண்ட ஆட்டோ மாதிரி, அதற்கு மேல் போக மறுத்தது.
“ம்….. கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி காமம்… காமம்,”
‘ஐயோ! எந்த வார்த்தையில் போய் சிக்கிக் கொண்டு நிற்கிறது? கடவுளே என்னைக் காப்பாத்து! காப்பாத்து!’
ஸ்…….ஸ்…… காதருகில் ஒரு வண்டு வேறு பறந்து இம்சித்தது. இடது கையை வீசி………..
 

~oOo~

ஃப்ரொஃபசர் மேல் அவன் கை பலமாக விழுந்தது. அவர் அதை லட்சியமே செய்யாமல், அவனை பரிசோதனை சாலை எலியை ஆராய்வது போலவும், தன் பெண்ணுக்கு  பார்த்திருக்கும் மாப்பிள்ளையை எடை போடுவது போலவும் ஒரு கலப்படமான பார்வையாகப் பார்த்தார்.
அவர்கள் இருவரும் , இருட்டி கொண்டு வருகிற ஒரு மாலைப் பொழுதில், கடற்கரையில் , கிட்டத்தட்ட கடலைத் தொட்டு விடுகிற தூரத்தில் அமர்ந்திருந்தனர்.
“சொல்லு பையா, என்ன உணர்கிறாய்?”என்று கேட்டார்.
அவன் பேசுவதற்குள் அவசரமாக குறுக்கிட்டு
“முதலில் நீ பார்த்ததை எல்லாம் வரிசையா சொல்லு , அப்புறம் நீ உணர்வதை”
சொன்னான்.
“இன்ட்ரஸ்டிங்க்! வெரி இன்ட்ரஸ்டிங்க்! இப்ப சொல்லு! இதப் பற்றி என்ன நினைக்கிறாய்? என்ன உணர்கிறாய்?”
“தலையை வலிக்கிறது! ஏதோ வினோதமான  உணர்வு கலவையா இருக்கு!  நீங்க இந்த கண்ணாடியை எனக்கு மாட்டினதை மட்டும் பாக்கலைன்னா  இது பாரலெல் யுனிவர்ஸா, டைம் வார்ப்பா? இல்ல டைம் மஷின்  பயணமா? புரியலயேன்னு குழம்பியிருப்பேன்” என்றான் , தலையை பிடித்துக் கொண்டே.
“ சபாஷ்! மேல சொல்லு!”
“ ஒரு சமயம் தோணித்து, இது கிளவுட் அட்லஸ் பாத்த ஞாபகத்தில வந்த  பல ஜன்மங்களைப் பத்தின எதாவது ஆழ்மன கனவுகளா?’
சந்தோஷத்தில் விசில் அடித்தார் “கொஞ்சம் சரியான திசையில வந்திருக்க! இன்னும் கொஞ்சம் யோசி!”
.”ம்……ஹும்…………….ஒண்ணும் தோனலியே ஃப்ரொஃபசர்!”
“நீ சயன்ஸ் ஃபிக்ஷன் படமெல்லாம் பாக்கறது உண்டா?”
‘இவரைப் பார்த்தால் சினிமாவெல்லாம் பார்க்கிற ஜாதியாகவே தெரியலேயே’(ஜாதி கெட்ட வார்த்தையாச்சே! வேற ஏதாவது யோசிக்கணும்!)
அவர் தொடர்ந்தார்.
“நான் ரொம்ப வருஷத்துக்கு மின்னாடி Forbidden Planet னு ஒரு படம் பாத்தேன்,  நம்மளை காட்டிலும் மில்லியன் வருடங்கள் முன்னேறி இருக்கிற ஒரு வேற்றுக் கிரக சமுதாயம், எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் எல்லாரும் அடையணும்னு நினைக்கிற ஒரு ஆகச் சிறந்த, இறுதி கனவு இலக்கை எட்டியிருக்கு. அதாவது மனது என்கிற மாபெரும் சக்தியை வைத்தே எதை வேண்டுமானலும் பண்ணலாம்னு கண்டு பிடித்திருக்கிறார்கள். அவர்கள் தொழில் நுட்பத்தில் எவ்வளவு முன்னேறியிருக்கிறார்கள் என்பதைக் காட்ட ஒரு சின்ன உதாரணமா ஒரு மெஷினைக் காட்டியிருப்பார்கள், அது உன்னுடைய எண்ணங்களை ஒரு முப்பரிமாண பிம்பங்களாக மாற்றிக் காண்பிக்கும். அதை தலையில் மாட்டிண்டு எதையாவது யோசித்தால், அதை ஒரு முப்பரிமாண படம் போல நீ பாக்கலாம். இதைப் பத்தி யோசிக்க யோசிக்க எனக்கு அதோட சாத்தியக் கூறுகள், சுவாரசியமாகவும், புதுமையாகவும், சாஹசங்கள் நிரம்பியதாகவும் தோணித்து.என் இளமை பூரா அதப் பத்தியே நிறைய யோசிச்சுருக்கேன்”
‘இளமையை வீணாக்கிட்டீங்களே ஃப்ரொஃபசர்’ என்று நினைத்துக் கொண்டான்.
“அப்புறம் நான் கொஞ்ச வருஷங்களுக்கு முன்னாடி டோக்கியோல ஃப்ரொஃபஸர் டாச்சியைப் பார்த்தேன். அவர் ஒரு ப்ரத்யேகமான கண்ணாடி ஒண்ணு வடிவமைத்திருந்தார், அதாவது  மெய்யையும், மெய் நிகர்சனத்தையும் கலக்கக் கூடியதாக. இப்ப ஃபேஸ்புக் வாங்கிருக்கே oculus rift அதோட முன்னோடி முயற்சி மாதிரி ஒண்ணு!
இந்த இரண்டையும் கலந்து  நான் ஒண்ணு பண்ணலாம்னு முடிவு பண்ணினேன். நம்முடைய எண்ணங்கள் முடிவிலி. நம்முடைய அனுபவங்கள், நம்மைச் சுற்றி இருப்பவரின் அனுபவங்கள், நாம் படித்த கதைகள், பார்த்த சினிமாக்கள், கேட்ட விஷயங்கள், பயணங்கள், நம்முடைய கனவுகள், நாம பார்த்தே இராத, கேட்டே இராத இடங்களைப் பற்றிய , விஷயங்களைப் பற்றிய நம் கற்பனைகள் இப்படி எல்லாமா சேந்து நமக்குள்ள பில்லியன்ஸ் அண்ட் பில்லியன்ஸ் ஆஃப் நினைவுகள்! இதோட கொஞ்சம் வர்சுவல் ரியாலிடி சேர்த்தா கிடைக்கிறது எண்ணிப் பாக்கறதுக்கே பிரமிப்பு தட்டக் கூடிய எண்ணிக்கை.
அததான் நான் செஞ்சுருக்கேன்”
திறந்த வாயை மூட கொஞ்ச நேரம் ஆயிற்று அவனுக்கு.
“ஸோ! இதுல நான் பார்த்த நியூயார்க் சப்வே உங்க ப்ரொக்ராம். நா பார்த்த தடியன் , கிழவர், குந்தவை என் எண்ணங்கள் இல்லையா?” மற்ற அனுபவங்களில் எது தன் நினைவுகள் அல்லது எண்ணங்கள், எது அவரது என யோசித்தவன்,
சட்டென்று தோன்ற கேட்டான், “ஆமா, நீங்க இத இது வரைக்கும் போட்டு பாக்கலையா?” .அவர் கீழ்ப் பார்வையாக பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்தார். பார்த்தால் அரை அசடு மாதிரி இருகிற ஃப்ரொஃபசர் தன்னை பரிசோதனை சாலை எலியாக பயன் படுத்திக் கொண்டிருக்கிற சாமர்த்தியம்  கொஞ்சம் போல எரிச்சலூட்டியது.
“அஃப் கோர்ஸ்! அஃப் கோர்ஸ்! பாத்தேன், பல தடவை பாத்தேன்! அதுல சில விஷயங்கள் சரியா ஒத்திசைவோட வரல.என்னுடைய எண்ணங்களும், நா தயார் பண்ணி வச்சிருக்கிற மெய் நிகர்சனமும் தாளம் பிசகி கசக்கு முசக்கு ஆகி, ஒரே களேபரம் ! அதான் உங்கிட்ட முயற்சி செய்து பாத்தேன்! நீ சொன்னதைக் கேட்டதும் அப்பாடான்னு இருக்கு”
நெஞ்சை நீவிக் கொண்டார்.
நீங்க ஜீனியஸ் சார்!” என்றான் பரவசமாக.
இவரை சர்வ சாதரணமாக தான் எடை போட்டதை நினைத்து குற்ற உணர்ச்சி மேலிட
“நான் ஏதாவது செய்யணுமா சார்!” என்றான்.
முகத்தில் வியர்வை பளபளக்க, உற்சாகமும்,பரவசமும்,பதற்றமும், தடுமாற்றமும் கலந்த ஒரு அபாயகரமான விளிம்பு நிலையில் இருப்பவர் போல இருந்தார். உத்வேகத்தின் உச்சத்தில் வருகிற பித்து நிலை அவர் கண்களில் தெரிந்தது. இவனுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது.
அவர் “ஒண்ணு பண்ணு! நான் இதைப் போட்டுப்பாக்கறேன்! நீ வெய்ட் பண்ணு” கையில் எடுத்தார்.
இவன் “வேண்டாம் சார்! வேண்டாம்! இப்ப என்ன அவசரம்? வீட்டுக்குப் போய் போட்டுப் பாக்கலாமே” என்றான்.
“இல்ல ! கொஞ்சம் வெய்ட் பண்ணு” அதை மாட்டியவாறே சொன்னார்.
அவரிடம் கேட்பதற்கு அவனுக்கு நிறைய சந்தேகங்கள் இருந்தன.
அவன் காத்துக் கொண்டிருந்தான்.

¹சுடர் தொடீஇ! கேளாய் –தெருவில் நாம் ஆடும்
மணல் சிற்றில் காலின் சிதையா. அடைச்சிய
கோதை பரிந்து,வரிப் பந்து கொண்டு ஓடி,
நோதக்க செய்யும் சிறு பட்டி, மேல் ஒரு நாள்
அன்னையும், யானும் இருந்தேமா ‘இல்லிரே!
உண்ணு நீர் வேட்டேன்’ என வந்தாற்கு,அன்னை
‘அடர் பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர் இழாய்!
உண்ணு நீர் ஊட்டி வா’என்றாள்; என, யானும்
தன்னை அறியாது சென்றேன்;மற்று ,என்னை
வளை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு
‘அன்னாய்!இவன் ஒருவன் செய்தது காண்’ என்றேனா
அன்னை அலறிப் படர்தர, தன்னை யான்
‘உண்ணு நீர் விக்கினான்’;என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பு அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக் கண்ணால்கொல்வான் போல் நோக்கி நகைக் கூட்டம்
செய்தான் அக்கள்வன் மகன்
ஒளிரும் வளை அணிந்த பெண்ணே! கேள்! முன்னே நாம் தெருவில் செய்த மணல் வீட்டை சிதைத்து, சூடிய பூக்களைப் பிடித்து இழுத்து, விளையாடிய பந்தை பிடுங்கிக் கொண்டு ஓடியவன், ஒரு நாள் நானும் , தாயும் வீட்டில் இருக்கும் வேளையில் வந்து “வீட்டில் உள்ளோரே! தாகமாக இருக்கிறது, தண்ணீர் கொடுங்கள்” என்றான். அம்மாவும் “ பொன் நகை அணிந்த பெண்ணே! தண்ணீர் கேட்கிறான் பார் கொடு” என்றாள்.அவன் எண்ணம் அறியாது நானும் நீர் கொண்டு சென்றேன், அவன் என் வளை அணிந்த முன் கை பற்றி அழுத்த நான் வலியில் “அம்மா! இவன் செய்ததைப் பார் “என்றேன்.. அம்மா ஓடி வர, நான் “அவன் நீர் குடிக்கும் பொழுது விக்கினான் “என்றேன். அம்மவும் அவன் முதுகை நீவி விட அந்த திருட்டுப் பயலோ என்னைக் கடை கண்ணால் கொல்வது போல் பார்த்து சிரித்தான்.
² கலிப்பா அருவி விழுகிற தாள ஓசை கொண்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.