அப்பா அன்புள்ள அப்பா…

அகால வேளையில் ஒலிக்கப்போகும் மொபைலை இத்தனை வருட வெளி நாட்டு வாழ்க்கையில், மன ஆழத்தில் எதிர்பார்த்தே இருந்திருக்கிறேன். இருந்தும் கடந்த டிசம்பர் 10ல் அதிகாலை ஐந்து மணியளவில் ஒலித்ததை ஏனோ எடுக்கவில்லை. தம்பி வாட்ஸப்பில் அழைத்ததும் காரணமாக இருக்கலாம். அல்லது வேறு ஒரு ஏனோ.
ஆறு மணியளவில் திரும்ப வந்த அழைப்பை இந்தியாவிலிருந்து என்று கவனித்து எடுத்த போது மறுமுனையில் கவின் வேறு ஒருவரிடம் “பந்தல் போடணும்” என்று சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டவுடனேயே எனக்கு இதுதான் அது என்று புரிந்துவிட்டது.
அதன் பிறகு நடந்தவையெல்லாம் மிக, மிக மெதுவாக நடந்ததாக பட்டது. ஒரு மணி நேரம் கழித்து கீழே வந்தபோது மனைவி ட்ராவல்ஸிடம் பேசிக்கொண்டிருந்தார். மதியம் 1:30 மணிக்கு கேட்விக்கிலிருந்து கிளம்பும் எமிரேட்ஸ்ஸில் இடங்கள் இருக்கின்றன என்றார். நான் நிதானமாக அவளிடமிருந்து போனை வாங்கி இடங்களை உறுதி செய்தேன்.
போனில் பேசிக்கொண்டே நந்து அறையிலிருந்து ஜன்னல் திரையை விலக்கி பனி புத்தம் புதிதாக அபத்தமாக பிர்ச் மர பச்சையை ஆங்காங்கே கொட்டிக் கொண்டு சிறிது நேரத்திற்கெல்லாம் நன்றாக நிறைத்துவிட்டதையும் கவனித்துக்கொண்டே இருந்தேன்.
இடையில் ஏர்போர்ட் டாக்ஸியை 10 மணிக்கு வருமாறு அழைத்துவிட்டேன்.
ஆனால் 8:30 மணிக்கு ஜெய் அழைத்து வெளியில் பனி பெய்துகொண்டிருப்பதால் ஏர்போர்ட் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக சொன்னதும்தான் கொஞ்சம் நிகழ்காலத்திற்கு திரும்பி வந்தேன். ஆனால் அப்போதே தாமதம்.
ஓட்டுனர் செம்ஸ்போர்டினுள் நுழையவே 10:30 மணி ஆகிவிட்டது. இரண்டு, மூன்று சாலைகளில் செல்ல முடியாமல் திரும்ப வந்து எப்படியோ A12 சாலையை பிடித்து இரண்டு மைல்கள் கூட போயிருக்க மாட்டோம். எங்கும் பனியும் சிக்கி நிற்கும் கார்களும். சற்று நேரத்தில் புரிந்துவிட்டது – 1:30 மணி விமானத்தைப் பிடிக்க முடியாது என. மறுபடியும் ட்ராவல் ஏஜென்ஸியிடம் பேசியதில் அடுத்த இடங்கள் இருக்கக் கூடிய விமானம், பர்மிங்ஹாமிலிருந்து இரவு 8:30 மணிக்கு கிளம்பும் ஏர் இந்தியா ஒன்று மட்டுமே… அதை விட்டால் அடுத்த நாள் இரவுதான். டிசம்பர் ஸீசன் என்பதால் அதற்கு முன்னால் இந்தியா செல்லும் எந்த விமானத்திலும் இடம் இல்லை. பர்மிங்ஹாம் ஏர்போர்ட் கிட்டதட்ட 140 மைல்கள் தொலைவில் இருக்கிறது. அதுவும் அச்சமயம் பனி பொழிவினால் மூடப்பட்டிருக்கிறது என்று நண்பர்கள் தெரிவித்தனர்…
அப்பாவிடம் பல முறைகள் விளையாட்டாகச் சொல்லியிருக்கிறேன், பிரிட்டிஷ் ஏர்வேஸ், லண்டனிலிருந்து சென்னை வந்தடைய 11 மணி நேரம் போதும் – நாகர்கோவிலிருந்து சென்னை வருவதற்குள் நான் இந்தியாவை தொட்டுவிடுவேன் என்று. …ஞாயிறு காலை 10 மணிக்கு செம்ஸ்போர்ட் வீட்டை விட்டு கிளம்பிய நாங்கள் ஈரோட்டு வீட்டை செவ்வாய் காலை 5:30 மணிக்கு அடைந்தோம்.
இதற்கு முன் எப்போது அழுதேன் என நினைவில்லை. பர்மிங்ஹாம் ஏர்போர்ட்டிற்கு செல்லும் வழியில் நண்பர் சந்துரு சர்வீஸ் சென்டரில் நிறுத்தியபோது சர்வீஸ் செண்டர் டாய்லெட்டில் சற்று அழுதேன். பின்னர், ஏர் இந்தியா கவுண்டரில், அத்தனை பெரிய வரிசையை ஒற்றை ஆளாக கவனித்து செக் இன் செய்து கொண்டிருந்த பெண்ணை நோக்கி வரிசை கடும் மெதுவாக நகர்ந்த போது அழைத்த கிரியுடன் பேசப் பேச தன்னிச்சையாக அழுததை கிரி கவனித்தாரா எனத் தெரியவில்லை.
பின்னர், ஈரோட்டில் வீட்டு வாசலில் உற்றாரும் உறவினரும் சூழ்ந்திருக்க, தன்னிச்சையாக ஷூவையும் சாக்ஸையும் கழற்றிவிட்டு, என் தோளை யாரோ சற்று பிடித்திருக்க, ஹாலைக் கடந்து, வழக்கமாக படுக்கும் இடத்தில் இல்லாது டைனிங் டேபிள் இருக்கும் இடத்தில் படுத்திருக்கும் அப்பாவை அடைந்த போது கண்ணீர் விட்டேன்.
அப்பா, ஸாரிப்பா, மன்னிச்சிருங்கப்பா என்று சொல்லிச் சொல்லி போட்டிருந்த கண்ணாடி நிறைய நிறைய கண்ணீர். எத்தனையோ விஷயங்களில் அவர் சொல்லை கேட்காதற்காக, அவரிடம் மறைத்ததற்காக, அவரை சந்தோஷப்படுத்தாதற்காக, இன்ன பிற, எனக்கும் அவருக்குமே இருந்த அந்தரங்க விஷயங்களுக்காக எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து மன்னிப்பு கேட்டேன். நன்றியும் சொன்னேன்.
சென்னையில் வசித்தபோதும் சரி, பின்னர் இங்கிலாந்து வசிக்கச் சென்ற போதும் சரி, விடுமுறைக்கு ஈரோடு வரும் போதெல்லாம் தூங்கப்போவதிற்கு முன் கால் பாதங்களில் காயத்திருமேனி எண்ணையை நன்கு அழுத்தித் தடவி விடுவேன். முதலில் முட்டி, பின் படம். தேய்க்க தேய்க்க அப்பா, கால் எரிச்சல் அடங்க, சுகமாக தூங்க ஆரம்பிப்பார். நான் டிவியைப் பார்த்துக்கொண்டே தேய்த்துக்கொண்டிருப்பேன். சில சமயங்களில் “ம், போதும், நீ போய் தூங்கு” என்று மெல்ல கண் திறக்காமல் சொல்வார். சில சமயங்களில் நானாக நிறுத்தியதும் ஓர் தலையசைப்பு. காலையில், “நேற்றிரவு நன்கு தூங்கினேன்” என்று புன்னகை போதுமானதாக இருந்தது.
கடைசி சில வருடங்களில் கால் பிடித்து விடல், எண்ணெய் தேய்ப்பு தேவையாக இல்லை. வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
நான் தேய்த்து, தேய்த்து வழவழப்பான பாதங்களை பார்க்க முடியவில்லை. வேஷ்டியைக் கொண்டு கால்கள் மூடப்பட்டிருந்தன. Freezer பெட்டி மேற்பாகத்தைத்தான் தடவினேன். நீர் மாலை எடுத்து பின் அப்பாவை அவருக்குப் பிடித்த செடிகள் அடர்ந்திருந்த போர்டிகோவில் கிடத்தி தலைக்கு எண்ணெய் வைத்தபோது அப்பாவின் உச்சி எப்போதும் போலத்தான் மென்மையாக, அதிகம் சில்லிடாமல் இருந்தது.
மின் மயான வேனில் கிடத்தும் போது வீட்டைப் பார்த்து அப்பாவை படுக்க வைத்தார்கள். மயானத்தை நெருங்கும் போது மாற்றி படுக்க வைத்தார்கள்.
இரண்டு மணி நேரம் கழித்து அப்பாவை இரு கலசங்களில் கொடுத்தார்கள். மிதமான சூடு. ஒன்றை காவேரியில் கரைத்தேன். மற்றொன்றை கன்யாகுமரியில். சங்கிலித் துறையை நெருங்க, நெருங்க, சூரிய உதயத்தை காண குழுமியிருந்த கூட்டம் மேகத்தை விட்டு மெல்ல சூரியன் விலகி மேலெழுவதைக் கண்டு உற்சாக ஆரவாரமிட்டது.
…அப்பாவிற்கு கடந்த 40 வருடங்களாக நீரழிவு குறைபாடு இருந்தது. 70களில் சேலம் நரசூஸ் காபி கடையின் அருகாமையில் இருந்த ட்ரெக் ஹவுஸ் எனும் மெடிக்கல் கடை உரிமையாளர், அப்பாவின் நண்பர். அவருக்கும் கடுமையான நீரழிவு. அன்றிலிருந்து, Euglucon போன்ற மாத்திரைகளோடு ஸ்பிரிட் அடுப்பில் டெஸ்ட் ட்யூப்பை வைத்து பரிசோதித்த காலங்களில் இருந்து இன்றைய க்ளூக்கோ மீட்டர் வரை அப்பாவும் நீரழிவும் வெகுகால பயணிகள்.
உணவில் கடுமையான சுய கட்டுபாடுகள் மற்றும் அம்மா என்ற ஒரு மகத்தான அவருடைய இன்னொரு பகுதியினால் அப்பா இத்தனை வருடங்கள் இந்த சகபயணியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவ்வப்போது அது அத்து மீறும். அம்மாவும் அப்பாவும் பின் கட்டுபாட்டிற்குள் கொண்டுவருவார்கள். கடந்த ஆறு மாதங்களில் சக பயணி அத்து மீறுவது சகஜமாகவிட்டிருந்தது.
நீரழிவைத் தவிர கடந்த 18 வருடங்களில் அப்பா பல முறைகள் மருத்துவமனைகள் தங்க நேரிட்டது. வாரக்கணக்கில் இருந்திருக்கிறார். கணையத்தில் கால்சியம் என்று ஆரம்பித்து ஏகப்பட்ட தொந்தரவுகளுக்காக. ஒவ்வொரு முறையும் மீண்டு வருவார். உபாதைகளை, உபாதைகளுக்கான நிவாரணங்களை தின வாழ்க்கையின் ஓர் பகுதியாக ஏற்றுக்கொண்டார். அவற்றுடன்தான், அந்த தினமும் இரண்டு வேளை இன்சுலின், மூன்று வேளையும் கொத்து, வண்ண வண்ண மாத்திரைகள், வாரத்தில் இரு நாட்கள் கிட்டினஸ் இவற்றுடன்தான், கிரிக்கெட்டும், சோவும், கருணாநிதியும் ஜெயலலிதாவும் மற்றும் மோடியும், பழம் திரைப்பட பாடல்களும் மற்றும் நாஞ்சில் காரர்களுக்கே உரிய தனி உணவுச் சுவையும்.
கடும் முன் கோபி. அலுவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி, முகத்தில் அடித்தாற் போல், யோசிக்காமல் எதிர்வினை. அவருடைய பலமும் பலவீனமும் ஒன்றுதான் – தீவிர ஞாபகசக்தி. சுற்றி இருப்பவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் ஞாபகசக்தி.
எல்லோரையும் போலவே எனக்கும் பதின்ம வயதில் அப்பா ஹீரோ இல்லை. சில குடும்ப விஷயங்களில் அவர் எடுத்த முடிவுகளில் எனக்கு உடன்பாடில்லை. மெல்லிய குரலில் எதிர்ப்பைக் காட்டியிருக்கிறேன்.
பொதுவாக, வார இறுதிகளில் பேசிவிடுவேன் – ஒவ்வொரு முறையும் குறைந்த பட்சம் ஒரு மணி நேரம். இது போக வார நாட்களில் தேவைக்கேற்ப. கிரிக்கெட் நாட்களில் இந்தியா வெற்றி பெற்றால் கூப்பிட்டுவிடுவேன். எனக்கு ஸ்கோர், தனிப்பட்ட வீரர்களின் ஓட்ட எண்ணிக்கை தெரியும் என்றாலும் அவர் டீவி திரையில் பார்த்து சொல்வதற்காக.
கடும் உடல் உபாதைகள் இருந்துகொண்டே இருந்தாலும், இத்தனை வயதிலும் தீவிரமாக வாழ்க்கையை, தன் உடலை அப்பா எதிர்கொண்ட விதம் ஓர் மிகப்பெரிய பாடம்.
அதற்கு அவரது இளம் வயது வாழ்க்கையும் (இரு வயதிலேயே தாயாரை இழந்து, தமக்கைகள் சூழ் வாழ்க்கை) காரணமாக இருக்ககூடும்.
உடல் சற்று இடம் கொடுக்கும் போதெல்லாம் மெதுவாக வீட்டு முன் பகுதிக்கு சென்று செடிகளுக்கு நீர் ஊற்றுவதிலும், சருகுகளை எடுப்பதிலும் கடும் உற்சாகம் காட்டுவார். வாழை, எலுமிச்சை, முல்லை, ரோஜா என்று அவருக்கு இனிமையான தருணங்கள் அளிக்க வீட்டில் பல தாவரங்கள் இருந்தன. எத்தனையோ பொருட்கள், இங்கிலாந்திருந்து வாங்கிச்சென்றிருக்கிறேன். அவற்றையெல்லாம் விட தோட்டவேலைகளுக்கான பொருட்கள், முக்கியமாக, கடினமான கிளைகளை சுலபமாக வெட்டக்கூடிய கத்திரியை உபயோகித்து மகிழ்ந்து போனார். கடந்த வருடத்தில் வீட்டு வாசலில் அப்பா வைத்த முல்லைச் செடி மரமாக வளர்ந்து இன்று வீட்டிற்குள் போக வர இருப்பவர்கள் மேல் உதிர்த்துக்கொண்டே இருக்கிறது.
நவம்பரில் அப்பாவை மருத்துவமனையில் அனுமதித்த பின் பல்மனரி இடிமா என்ற சிக்கலும் சேர்ந்து கொண்டதை அறிந்து துணுக்குற்றேன்.
அலுவலகத்தில், நான் சற்று பதட்டத்தோடு இருந்ததைக் கண்டு விசாரித்த டெல்லி காரரான என் அணி ஆர்க்கிடெக்கிடம் அப்பா உடல் நிலை குறைவாக இருப்பதைச் சொன்னேன்.
80 வயது ஆகி விட்டதா, அப்ப சரி என்ற பொருளில் பதிலுரைத்தார். பின்னர், நண்பர்களும் நிறைவாக வாழ்ந்திருக்கிறார், கல்யாணச் சாவு போல் என்று ஆறுதல் வார்த்தைகள் கூறினார்கள்.
எதுவும் சாஸ்வதமில்லை, யுதிஷ்ரனின் உலகின் மிகப்பெரிய ஆச்சரியத்திற்கான விளக்கத்திலிருந்து, நிலையாமையை பற்றி படித்த, பார்த்த எத்தனையோ விஷயங்கள் மனதில் வந்து போகின்றன. ஜெயமோகன் 2017ல் கோவையில் ஆற்றிய திருக்குறள் உரையில் குறிப்பிட்ட பின் வரும் குறளின் விளக்கத்தை அப்பாவிடம் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தது நினைவிற்கு வருகிறது.

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.

இதைப் போலவே இன்னொரு குறளான “முன் நின்று கல் நின்றவர்” வைத்து அசோகமித்திரன் நினைவு குறிப்பு எழுதியதும் நினைவிற்கு வருகிறது.
காலமெனும் மாபெரும் பகைவனுக்கு எதிராக நாம் அனைவரும் நிற்கிறோம். என்றாவது ஒரு நாள் நாம் அனைவருமே அச்சக்கரவர்த்தியிடம் தோற்று நடுகற்களாக நிற்க போகிறோம். இதோ இன்று அப்பா, இன்னொரு நாள் என்னுடையது என்று பற்பல சமாதானங்கள் துணைக்கு நிற்கின்றன.
இதே காலம் நண்பனும் கூட. இழப்பை தாண்டிச்செல்ல உதவப்போகிறது. காலம் செல்ல செல்ல, அப்பா அதிகாலை விழிப்பினூடே அல்லது சொப்பனங்களில் மட்டுமே இருக்கப்போகிறார். பின்னொரு நாள் தாண்டிச்செல்லத்தான் போகிறேன். ஆனால் இன்று அல்ல.

3 Replies to “அப்பா அன்புள்ள அப்பா…”

  1. இந்த கட்டுரை உங்கள் நிஜவாழ்க்கையின் ஒரு பகுதியின் நிலைப்பாடு என்று நினைக்கிறேன். படிக்க படிக்க என் கண்களை கலங்க வைத்த கட்டுரை. நன்றி.

  2. Wow! மிக அருமையான பதிவு குமார். மனதில் உள்ளதை ெவெளிப்படுத்துவது ஒரு கலை. உனது வரிகள மாமாவை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது. அருமை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.