தனிமை – கு.அழகர்சாமி கவிதை

தனிப்
பனை.

ஓர் ஆட்டை
அதில் யாரோ கட்டி விட்டுப் போயிருக்கிறார்கள்.
வெயிலில்
தனிப் பனையின்
சொற்ப நிழல்.
அது
போதும்;
ஆடு சுகம் காணும்.
எங்கிருந்தோ பறந்து வந்து
ஒரு பருந்தமரும் பனையின் மேல்.
தனிப் பனை
இனியும் உயர்ந்து
தெரியும்.
சூரியன்
பனையின்
தலை மேல் தங்குவான் சிறிது.
பனை செய்யும் தனித்தவத்தில்
சிவந்து மேலும் ஒளிர்வான்.
தனிப் பனையைப் பார்க்கப் பார்க்க
எனக்குப்
புரியும்.
என்
தனிமை
நெட்டுக்குத்தலாயிருப்பது.