எஞ்சும் சொற்கள்

எட்டு பேர் காகிதங்களுக்கும் மேசை நாற்காலிகளுக்கும் இடையே மனிதர்களும் சிலர் உலாவிய அந்த சிறிய அறைக்கு வெளியே அமர்ந்து கொண்டும் நின்று கொண்டும் நடந்து கொண்டும் காத்திருந்தோம். பத்து மணிக்கு முன்னதாக மெலிந்து சிவந்த உயரமான பெண் ஒருத்தி வலக்கையின் விரல்கள் மதிய உணவிற்கான பையையும் இடக்கையின் தோள் மற்றொரு பையையும் பிடித்திருக்க எங்களை நோக்கிப் பதற்றத்துடன் வந்து கொண்டிருந்தாள். இடைநாழியில் தூரத்தில் இருந்தே மாவட்ட ஆட்சியரின் அறையும் அதையடுத்த ஆதிதிராவிட நலத்துறை அலுவலரின் அறையும் சாத்தியிருப்பதை உறுதி செய்து கொண்ட பின் ஆசுவாசம் கொண்டவளாய் நடையில் துள்ளல் தெரிய ஆதிதிராவிட நலத்துறை அலுவலரின் அறைக்கு எதிரே இருந்த சிறிய அறையில் போய் அமர்ந்தாள். அங்கு உலாவிய சிலர் அவள் வந்ததும் ஒரு புன்னகையை அவளுக்குத் தந்துவிட்டு வெளியேறினர். ஏதோவொரு பாடலை முணுமுணுத்தவாறே அறையின் கணினிகள் ஒவ்வொன்றாக உயிர்கொடுக்கத் தொடங்கினாள்.

நாங்கள் இருப்பதை அப்போதுதான் கவனித்தவளாய் மொத்தமாக ஒரு சிரிப்பினை அனைவரையும் நோக்கி வீசிவிட்டு “உள்ள வந்து உக்காந்து இருக்கலாமே” என்றவாறே எங்களை வரவேற்றாள். ஒரு அரசு அலுவலக அறையில் அதிலும் சிறிய அறையில் யாரும் அழைக்காத போது சென்று அமரும் அளவிற்கு எங்களில் யாருக்குமே வயதாகி இருக்கவில்லை. என்னுடன் அதுவரை பேசிக்கொண்டிருந்த பையன் “தேங்க்ஸ்க்கா” என்று அவளைப் பார்த்து சிரித்தபடி உள்ளே ஓடினான். அக்கா என்று அவன் அழைத்ததற்காக அவள் முறைப்பாள் என நினைத்தேன். ஆனால் அவளும் சிரித்தபடியே அவனுக்கு ஒரு மரநாற்காலியை இழுத்துப்போட்டு “உட்காரு” என்றாள். அவனும் அமர்ந்தான். அமர்ந்த மறுகணம் அலைபேசியை எடுத்து ஏதோ அடிக்கத் தொடங்கினான்.

“படிக்கிறியா” என்றாள் அப்பெண்.

அவன் அவளை நிமிர்ந்து கண்கள் விரிய மேல்கீழாக தலையசைத்து “ஆமாக்கா மெடிக்கல்” என்று சொல்லிவிட்டு சில கணங்கள் கழித்து “செகண்ட இயர்” என இரு விரலை உயர்த்திக் காட்டினான். அச்செய்கை அவளுக்குப் பிடித்துவிட்டது போல. மீண்டும் சிரித்தாள்.

“நீக்கா?” என்றான் அவன்.

“நான் இங்க டெம்ப்ரரியா வேலை பாக்குறேன். கம்ப்யூட்டர்ஸ மேனஜ் பண்றதுக்காக வெச்சிருக்காங்க. குரூப் ஒன் பிரிப்பேர் பண்ணிட்டு இருக்கேன்” என்றாள்.

“சூப்பர்க்கா சூப்பர்க்கா அப்ப கொஞ்ச நாள்ல எதுத்தாப்ல இருக்கிற ரூம்ல உன்ன பாக்கலாம்ல” என்றான் மருத்துவ மாணவன். அவள் மீண்டும் சிரித்தாள். எனக்கு ஆதிதிராவிட நல அலுவலர் பணி குரூப் ஒன்றா இரண்டா என்று சந்தேகம் எழுந்தது. கேட்கவில்லை. விண்ணப்ப படிவம் போன்ற ஒன்றை அப்பெண் எங்கள் ஒவ்வொருவரிடமும் கொடுத்தாள். என் அருகில் சிகையை விரித்துப் போட்டிருந்த பெண்ணொருத்தி அதனை பின்னே தள்ளியவாறு விண்ணப்பத்தை நிரப்புவதும் என்னைப் பார்ப்பதுமாக இருந்தாள்.

“நீங்க எங்க வொர்க் பண்றீங்க?” என்று சட்டென கேட்டாள்.

“இன்கம்டாக்ஸ் டிபார்ட்மெண்ட்”

“நான் கஸ்டம்ஸ்ல. இந்த கேஸ்ட் வெரிஃபிகேஷன் முடிஞ்சாதான் கன்ஃபர்மேஷன் கிடைக்கும். என் அம்மா எஸ்.சி இல்ல. அதுதான் கொஞ்சம் நர்வஸா இருக்கு” என்றாள்.

பெண்களால் ஆபத்தற்றவனை எளிதாக அடையாளம் காண முடிகிறது என்றும் அவனிடம் தன்னுடைய குழப்பங்களைக்கூட முதல் சந்திப்பிலேயே பகிர்ந்து கொள்ள முடிகிறது என்றும் நினைத்துக் கொண்டு அந்த எண்ணத்தை கலைத்தபடி “அது ஒன்னும் பிராப்ளம் இல்ல. உங்க அப்பாவோட கேஸ்ட் செர்டிஃபிகேட் கொண்டு வந்துருக்கீங்கல்ல” என்றேன். ஆமோதிக்கும் விதமாக தலையசைத்தவள் முகம் மாறுபட “ஒரு மார்க் கூட எடுத்திருந்தா இங்க வந்தே தொலைச்சிருக்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டு “சூழ்நிலை தன்னை புணர்கிறது” என எனக்கு கேட்காது என்று நினைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் முணுமுணுத்தாள்.

ஒவ்வொரு அலுவலராக அறையினுள் நுழையத் தொடங்கி இருந்தனர். எங்களை ஆர்வமில்லாமல் பார்த்துவிட்டு கண்ணாடியை சரிசெய்தபடியும் பெருமூச்சுவிட்டபடியும் அவரவர் இருக்கைகளில் சென்று அமர்ந்தனர். முதலில் வந்த பெண் ஒவ்வொருவரிடமும் ஏதாவது சொல்லி சிரித்தாள். திறம்பட வேலை செய்கிறவர்களிடம் ஏற்படும் பிரியம் அங்கு வந்த எல்லோருக்குமே அவள் மீது இருந்தது. ஒரு இளைஞன் மட்டும் அவளை முறைத்தபடியே கடந்து சென்று எங்களையும் கடுமையாக பார்த்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தான். அவனைப் பொருட்டாக எண்ணாத ஒரு பாவம் பெண்களுக்கே உரிய அலட்சியத்துடன் கலந்து அவளிடம் எழ வேண்டும் என விரும்பினேன். ஆனால் அவள் கொஞ்சம் குன்றி மீண்டும் நிலை மீண்டது அவள் மீது வெறுப்பினைத் தூண்டிய அதேநேரம் என்னை விட சற்று மூத்தவனாக இருக்கும் அந்த இளைஞனை மூர்க்கமாக அடிக்க வேண்டும் என்றும் எண்ண வைத்தது. மருத்துவ மாணவனும் தன் சகஜ பாவத்தை கொஞ்சம் இழந்திருந்தான். விரிந்த சிகைப்பெண் முறைத்துக் கடந்து சென்ற அந்த இளைஞனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். திருச்சி பெல்லில் வேலை பார்ப்பதாகச் சொன்ன இருவர் தங்களுக்குள் சிரித்துப் பேசியபடி அமர்ந்திருந்தனர். அவர்களால் பிறருடன் சகஜமாக உரையாட முடியாது என்பதை அவர்களின் நெருக்கம் காட்டியது. படிவத்தை நிரப்பும் போது இருவருக்குமே தெரியாத பகுதிகளை மட்டும் அவர்களில் அடர்கறுப்பு நிறத்துடன் கைகளில் அதிகமாக முடியும் பரவியவன் என்னைப்பார்த்து “பாஸு குலச்சடங்குன்னு போட்டுருக்காங்களே அதுல என்ன பாஸு போடறது” என்றான்.

“நீங்க கோவில்ல வெச்சு காது குத்துவீங்களா” என்றேன்.

“ஆமா பாஸு”

“அதப்போடுங்க. அப்புறம் பொங்கல் வெக்கிறது கிடா வெட்றது இதெல்லாம் கூட போடலாம்” என்றேன்.

“ஓகோ ஓகே பாஸு தேங்க்ஸ்” என அவன் நண்பனை நோக்கித் திரும்பிக் கொண்டான்.

விரிந்த சிகைப்பெண்ணும் நான் பேசுவதை கவனித்தப்பிறகு படிவத்தில் தயங்கித் தயங்கி ஏதோ எழுதினாள். பின்னர் நிமிர்ந்து என்னைப் பார்த்து “இதெல்லாம் நாங்க செஞ்சதே கெடையாது” என்று எரிச்சலுடன் சொன்னாள். எனக்கு கோபம் வந்தது. அவளுக்கு பதில் சொல்லாமல் இருந்துவிட்டேன். அரசு அலுவலகங்களில் காத்திருக்கும் போது அந்த நாள் வீண்தான் என்ற எண்ணம் எப்படியோ எழுந்துவிடுகிறது. புது இடம் கொடுக்கும் மென் பரவசம் நீங்கி தங்களை புத்தம் புதியவர்களாக காட்டிக் கொள்ள விழையும் உற்சாகம் மங்கி அங்கிருந்தவர்களும் நாங்களும் நாங்கள் யாரோ அதுவாகவே மாறிக் கொண்டிருந்தோம். சிவந்து மெலிந்தவளுக்கு மட்டும் தன்னை இன்னமும் வேறுவேறாக காட்டிக் கொள்ள முடிந்தது. அந்த இடுங்கலான அறையைவிட்டு நான் எழுந்து வந்து விட்டேன். அவ்வறைக்கு தொடர்பே இல்லாததாய் இடைநாழி இருண்டு விரிந்து கிடந்தது. இருளான பெரிய இடங்களில் தோன்றும் குளிர் உணர்வு ஏற்பட்டது. உடலின் இரைச்சல்களுக்கு தொடர்பற்றதாய் வாய்க்கு வெளியே நீண்டு கிடக்கும் ஈரம் சொட்டும் நாயின் நாக்கு போல அறைகளின் இடுங்கல்களுக்குத் தொடர்பற்றதாய் அந்த இடைநாழி சுத்தமாக இருந்தது. அவ்வளவு சிறிய அறைகளுக்கு வெளியே அவ்வளவு பெரிய வராண்டா ஏனென்று எனக்குப் புரியவில்லை. ஒப்பந்தக்காரர்கள், ஓய்வூதியர்கள், விவசாயிகள் என அங்கிருக்கும் அனைவரையும் அக்கட்டிடம் முறைத்துக்கூர்ந்து பார்ப்பது போல இருந்தது. ஆட்சியரின் அறை பூட்டிக் கிடந்தது. மலைப்பாம்பின் உடல் போல அவ்வறையின் கதவு நெளிவது போலிருந்தது. மீண்டும் அந்த ஒடுங்கிய அறைக்கே திரும்பியது போது மனதில் ஆசுவாசம் பரவியது. ஆனால் சிவந்து மெலிந்த பெண்ணை இப்போது பார்க்கத் தோன்றவில்லை. சற்று நேரத்தில் ஒடுங்கிய அறைக்கு எதிரே இருந்த ஆதிதிராவிட நலத்துறை அலுவலரின் அறை திறக்கப்பட்டது.

உஷா உதுப்பை நினைவுறுத்தும் பெரிய வட்டப்பொட்டு வைத்த மத்திய வயது கடந்த கண்ணாடி அணிந்த பெண்மணி அவ்வறையில் சென்று அமர்ந்தார். விசாலமான அறை காலியாகக் கிடந்தது. நாங்கள் அமர்ந்திருந்த இடுங்கிய அறையில் அமர்ந்திருந்தவர்களுக்கு எதிரே இருக்கும் அறை காலியாக கிடப்பது குறித்து குறைகள் ஏதும் தோன்றவில்லை.

“ஆந்த்ரோபாலஜிஸ்ட்ண்ணா” என்று மருத்துவ மாணவன் என்னிடம் கூறினான். ஒவ்வொருவராக கையிலிருந்த விண்ணப்ப படிவத்துடன் அவரிடம் செல்ல வேண்டும். எங்கள் சாதி உண்மையானது தானா எனக் கண்டுபிடிக்க அவர் அழைத்து வரப்பட்டிருக்கிறார். அவர் முகத்தில் ஒரு சுழிப்பும் ஆர்வமின்மையும் அப்பட்டமாகத் தெரிந்தன. அவ்வுணர்வுகளை சற்று கொதிக்கவைத்தால் அற்புதமான வெறுப்புணர்வை அவரிடம் தூண்ட முடியும் என எண்ணினேன். வட்டப்பொட்டுக்கும் பெரிய கண்களுக்கும் கூர்மையான நாசிக்கும் அவர் முகத்தில் வெறுப்பு பரவினால் பேரழகிகளை வெறுத்துவிட வைக்கும் பரிசுத்தமான எதிரீடாக அவர் மாறுவார் என எண்ணிக் கொண்டேன். மருத்துவ மாணவன் தான் முதலில் உள்ளே சென்றான். அவனை அவர் எதிர்கொண்ட விதமே என்னுள் எதையோ கிளறியது. வட்டப்பொட்டுடைய அந்த முகத்தில் அவர் அணிந்திருந்த கண்ணாடியில் சரியாக மிதிக்க வேண்டும். உடையும் சில்லுகள் அவரது பெரிய கண்களில் இறங்கும் படி எனது கால் கட்டைவிரலின் நகத்தால் பக்குவமாக உள்ளே தள்ள வேண்டும். ஒரு சிறு பொட்டு கண்ணாடி கூட கண்களுக்கு வெளியே செல்லக்கூடாது. அவ்வளவும் உள்ளே சென்ற பிறகு மிகக்கவனமாக அவர் கண்களின் இமைகளை மூடி கைகளின் கட்டை விரலால் ஒத்தடம் கொடுக்க வேண்டும் என எண்ணி முடிக்கும் போது அதே ஏளனமோ அலட்சியமோ நிறைந்த அவரது உணர்வுகளை எதிர்கொண்டு வெளியே வந்து அமர்ந்தேன்.

ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே மலமும் மூத்திரமும் கலந்த சாக்கடை மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. அவ்விடத்தை பார்க்கும் உந்துதல் எழுந்து வெளியே ஓடினேன். பச்சையாக மாறியிருந்த உவர்நீரும் நரகலும் கழிவுநீர்த் தொட்டியைக் கடந்து அழுத்தமாக நகர்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்து பார்க்கும் தொலைவில் அரசுப்பிணவறை இருந்தது. கருப்புநிற வண்டியில் ஒரு உடலை சலிப்புடன் ஏற்றிக் கொண்டிருந்தனர். ஆண் உடல் தான் என்பது முகத்தில் மீசை இருப்பதால் தெரிந்தது. சலிப்பும் கோபமுமாக ஒரு பெண் அவ்வண்டியில் ஏறி வண்டி நகரும் போது “நா அம்மா வீட்ல இறங்கிக்கிறேன். ஏன் புருசன் கூட தான் போய் இறங்கணுமின்னு எழுதியா வெச்சிருக்கு. இவன் போய் தொலைஞ்சதும் நல்லதுதான் சித்தப்பா. நீ சிங்களாஞ்சேரில வந்து வண்டில ஏறிக்க” என்று அலைபேசியில் உரையாடுவது கேட்டது. சாக்கடை நாற்றம் எனக்குப் பசியை கிளறிவிட்டது. எதிரே தியான நிலையில் ஒரு மனிதரின் படம் போட்ட சைவ உணவகம் தென்பட்டது. அங்கிருந்து அசைவ உணவகங்களுக்கு வெகுதூரம் நடக்க வேண்டும். சைவ உணவகத்தில் புகுந்து உண்டேன். முழுதாக உண்டு முடித்ததும் வயிற்றில் ஏதோ புரள்வது போல இருந்தது. அந்த சாக்கடை நினைவிற்கு வரவே எழுந்து சென்று உண்ட அனைத்தையும் முழுதாக வாந்தி எடுத்தேன். பையில் இருந்த தண்ணீர் பாட்டிலைக் கொண்டு வாய் கொப்பளித்ததும் மீண்டும் பசியெடுத்தது. பரிமாறியவர் சற்று விலக்கத்துடன் பார்த்தபடி மீண்டும் பரிமாறினார். உறங்க வேண்டும் போல இருந்தது. பிணவறைக்கு பின்பக்கம் காலியிடம் தெரிந்தது. கோரைப்புற்கள் நீண்டு வளர்ந்து அவ்விடத்தை மறைத்திருந்தன. படுத்துக் கொண்டேன். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் தூக்கம் உள்ளிருந்து கிளம்பி உடல் முழுவதும் பரவியது. விரல்களை மடக்கி நெளித்தபோது ஏற்பட்ட மெல்லிய வலியுணர்வு சுகமாக இருக்கவே அப்படியே தூங்கிப்போனேன். விழிப்பு வந்த கணம் இவ்வளவு நேரம் தூங்கியதன் இனிமையை உடல் அனுபவித்திருப்பதை உணர முடிந்தது. மனம் சலனமற்று இருந்ததால் சூழல் குறித்து தெளிவான பிரக்ஞையை உடனே அடைய முடிந்தது. ஆழ்ந்த பயமொன்று வயிற்றைக் கவ்விப் பிடிக்கவே கை அனிச்சையாகச் சென்று பையைத் தொட்டது. அதனுள் போட்டிருந்த பர்ஸ் இருக்கிறதா என மேலோட்டமாகத் தடவிப்பார்த்தேன். இருந்தது. அதன்பிறகே வந்திருக்கும் இடம் நினைவுக்கு வந்தது. அலைபேசியில் நேரம் பார்த்தபோது பதினைந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்கவில்லை. மனம் அவ்வளவு நேரம் கொண்ட பரபரப்பின் இன்பம் விலக மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய நொடி எதிர்பாராமல் குத்திய முள் போல வட்டப்பொட்டு முகத்துடன் நினைவில் எழுந்தது. பின்மண்டையில் அடி விழுந்தது போன்ற உணர்வெழவே திரும்பிப் பார்த்தேன். யாரும் அடிக்கவில்லை. முதன்முறையாக ஒரு உணர்வினை வெளிப்புறத் தொடுகையாக அவ்வளவு ஸ்தூலமாக உணர்ந்தேன்.

மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இடைநாழியில் நடந்த போது ஒவ்வொரு போர்வையாக உடலில் வந்து படிவது போல இருந்தது. மானுடவியலாளர் யாருடனோ அலைபேசியில் சத்தமாக சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். மருத்துவ மாணவன் முகத்தில் சலிப்பு அப்பட்டமாகத் தெரிய அமர்ந்திருந்தான். விரிந்த சிகைப்பெண் அலைபேசியை பார்த்தவாறிருந்தாள். மறுபடியும் உதட்டுச்சாயம் பூசி முகத்தை சீரமைத்திருக்கிறாள் என்பது தெரிந்தது. மெலிந்த சுடிதார்ப் பெண் தண்ணீர் குடித்தாள். அவள் முகத்தில் நீர் சற்று வழிந்து தாடையில் சொட்டாமல் நின்ற துளி மன அதிர்வைக் கொடுக்க தலையை இரட்டையர்கள் பக்கம் திருப்பினேன்.

நான்கு மணியைக்கடந்த போது நிறைய எண்ணெய் தடவி தலை சீவி நேர்த்தியாக கண்ணாடி அணிந்த காதோரங்களில் நரை தென்படும் ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் எங்களைப் பார்த்துக் கொண்டே அவர் அறையில் நுழைந்தார். உதவியாளரைக் கொண்டு கதவை சாத்தச் சொன்னார். சற்று நேரம் கழித்து வெளியே வந்து “கலெக்டர் சார் மீட்டிங்ல இருக்காங்க. வர எப்படியும் ஏழு மணிக்கு மேல ஆகிடும். நீங்க வெளில போறதுனா போயிட்டு வாங்க” என்று சாதாரணமாக சொன்னார். எனக்கு கோபம் வந்தது. பிறருக்கு கோபம் வரவில்லை என்பதை அவர் விழிகள் கடுமையாக என் மீது நிலைப்பதையும் என் மீது கொண்ட அதீத கருணையால் அக்கடுமையை அவர் குறைத்துக் கொள்ள எத்தனிப்பதையும் கண்டு உணர்ந்து கொண்டேன்.

ஏழரை மணி வாக்கில் அனைவருமாக அழைக்கப்பட்டு மாவட்ட ஆட்சியரின் அறைக்கு வெளியே கிடந்த ஒரு ஸ்டீல் சோபாவில் அமர வைக்கப்பட்டோம். சிவந்த பெண் ஏதோ பாடலை முணுமுணுத்தபடி அதே கைப்பையுடனும் சாப்பாட்டுப் பையுடனும் எங்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு மருத்துவ மாணவனுக்கு மட்டும் டாட்டா காண்பித்துவிட்டு கடந்து சென்றாள். ஒரு மணி நேரம் கழித்து நெஞ்சிலிருந்து பதினைந்து முதல் இருபத்தைந்து சென்டிமீட்டர் வரை வயிறு வெளித்தள்ளியிருக்கும் மென்மையான கேசம் கொண்ட அடர்நிற கண்ணாடியும் வெள்ளைச் சட்டையும் நீல நிறப் பேண்டும் அணிந்திருந்த கருநிற மாவட்ட ஆட்சியர் டாவலியைப் பின்தொடர்ந்து கோட் அணிந்த சிலருடன் பேசிக் கொண்டு தன் அறைக்குள் சென்றார்.

கோட் அணிந்தவர்கள் வெளியேறி மேலும் அரைமணி நேரம் கடந்த பிறகு மானுடவியலாளரும் ஆதிதிராவிட நலத்துறை அலுவலரும் பவ்யமான உடல் அசைவுகளுடன் உள்ளே சென்றனர் .மருத்துவ மாணவன் உள்ளே அழைக்கப்பட்டான். ஐந்து நிமிடம் கழித்து வெளிவந்தவன் “வரேண்ணா” என்று என்னிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான். மாவட்ட ஆட்சியர் எங்கள் முகத்தை நாங்கள் இன்ன ஜாதிதான் என்பதை உறுதி செய்யவே அங்கு அழைக்கப்பட்டிக்கிறோம் என அப்போதுதான் புரிந்தது. விரிந்த சிகைப் பெண்ணும் சிரித்தவாறே உள்ளே சென்று சிரித்தவாறே வெளியே வந்தாள். என்னருகே அமர்ந்திருந்த இரட்டையர்கள் உள்ளே கொண்டு செல்வதற்காக நான் வெளியே எடுத்த ஜாதிச் சான்றிதழைப் பார்த்தனர்.

“கலெக்டர் உங்க ஜாதிதான் போல” என்றான் அதில் ஒருவன். நான் சங்கடமான உணர்வொன்றை அடைந்தேன். சிவந்த மீசையில்லாத முகம் கொண்டவன் அடுத்ததாக அழைக்கப்பட்டான். அவன் உள்ளே சென்ற சில நொடிகளில் ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் பதற்றத்துடன் வெளியே வந்து “நீ உள்ள வா” என என்னை அழைத்தார். அப்பதற்றம் என்னிடமும் தொற்றிக்கொள்ள காலில் மாட்டியிருந்த செருப்பு சிதறிப் பறக்க எழுந்தேன். ஆட்சியரின் விசாலமான அறை மஞ்சள் நிறத்தில் ஒளியூட்டப்பட்டிருந்தது. சாக்லெட் நிறத்தில் பொசுபொசுவென இருபது இருக்கைகள் ஆட்சியரின் மேசை எதிரே கிடந்தன. இரண்டு பேருடல் கொண்டவர்கள் கட்டிப்புரளும் அளவு பெரிதாக இருந்த மேசையின் பின்னே அலட்சியப் பார்வையுடன் ஆட்சியர் அமர்ந்திருந்தார். எனக்கு கால்கள் நடுங்கத் தொடங்கின. மீசையற்றவனைப் பார்த்து என்னை சுட்டிக்காட்டி “இவனும் எஸ்சி தான? இவனுக்கு மீசை இருக்கு பாரு. உனக்கு ஏன் இல்ல?” என்றார். அவன் தலைகுனிந்து நின்றான்.

அலைபேசியை எடுத்து எதையோ பார்த்தபடி “சொல்லுப்பா நீ எஸ்சின்னு எப்படி நம்புறது. உனக்கு மீசையே இல்லையே நீ என்ன பிராமினா மீச வெக்காம இருக்க?” என்றார். எனக்கு கால்கள் கடுக்கத் தொடங்கின. இடக்கையின் ஆட்காட்டி விரலை உயர்த்தி நான் வெளியே செல்லலாம் என சைகை செய்தார். சற்று நேரத்தில் மீசையற்றவன் தொங்கிய முகத்துடன் வெளியே வர நான் உள்ளே அழைக்கப்ட்டேன்.

மானுடவியலாளர் ஆட்சியர் எதிரே அமர்ந்திருக்க ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் நின்று கொண்டிருந்தார்.

“அப்பா பேரென்ன?” என்றார் ஆட்சியர்.

சொன்னேன். அதன்பிறகு தாத்தாவின் பெயரையும் கொள்ளுத்தாத்தாவின் பெயரையும் கேட்டார். கொள்ளுத்தாத்தாவின் பெயரைச் சொல்லும் போது அவர் அப்பாவின் பெயரையும் சேர்த்து சொன்னேன். ஆட்சியர் என்னை நிமிர்ந்து பார்த்தார். பிறகு புன்னகையுடன் “பரவாயில்லியே உனக்கு அவ்வளவு தூரம் தெரியுதே” என்றார். நான் லேசாக சிரித்தேன்.

“என்ன படிச்சிருக்க” என்றார்.

“இன்ஜினியரிங்”

“அப்புறம் இன்கம்டாக்ஸ்ல என்ன வேலை”

“இல்லசார் இதிலேயும் நல்ல ஸ்கோப் இருக்கு” என உளறினேன்.

ஆட்சியர் சட்டென குரல் மாறி “ஓகோ ஸ்கோப் இருக்கோ” என்றார்.

அந்த வார்த்தை மெல்லிய தன்னம்பிக்கை அளிக்க இயல்பாக புன்னகைத்தேன். இயல்பான புன்னகை அவருக்கோ அவ்வறைக்கோ அவர் எதிரே அமர்ந்திருக்கும் மானுடவியலாளருக்கோ என் அருகே நிற்கும் ஆதிதிராவிட நலத்துறை அலுவலருக்கோ சற்றும் அந்த தருணத்தில் உரித்தானது அல்ல என நான் உணர்ந்த போது நிலைமை கைமீறியிருந்தது.

ஆட்சியர் முகம் கல்லென இறுகியது.

“இதுவே உங்களுக்கு சாசுவதம் தான” என்றார். அக்குரலுக்கு பதில் எதிர்பார்க்கும் தன்மை இல்லை.

“நீங்களெல்லாம் பன்னி மேய்க்க தாண்டா லாயக்கு. இத்தன தலமுறையா பன்னி மேச்சது பத்ததா. மறுபடியும் கூலக்கும்பிடுபோடற வேலையதான் பாக்க போறியா இடியட். நெக்ஸ்ட் டைம் ஆஃபீசரா தான் இங்க வரணும்” என்றார்.

ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் நான் பாராட்டப்பட்டதைப் போல என்னைப் பார்த்து “ஆஃபீசரா வருவேன்னு சொல்லுப்பா” என்றார். தொண்டையில் கனமாக ஏதோ அடைபட்டது போல எனக்கு மூச்சுமுட்டியது. ஆட்சியரின் முகத்தின் கல் தன்மை அப்படியே இருந்தது.

“நெக்ஸ்ட்….நெக்ஸ்ட் டைம்….நெக்ஸ்ட் டைம் ஆஃபீசரா உங்கள மீட் பண்றேன் சார்” என்ற குரல் என் உடலில் இருந்து வெளியேறியதும் கழிவு கொட்டப்பட்டது போல என் உடல் சுருங்கிக் குளிர்ந்தது.

உடனே ஆட்சியர் முகம் மலர்ந்தார்.

“போய்ட்டு வா” என்றார்.

அவரிடம் சொல்ல எனக்கு இரண்டு செய்திகள் இருந்தன. ஒன்று அவ்வறையில் உணர்ந்த அருவருப்பை அதற்கு முன்னும் பின்னும் நான் உணர்ந்ததில்லை. என் குடும்பத்தில் நன்றாகவே விசாரித்துவிட்டேன் அவர்களில் யாரும் பன்றி மேய்த்திருக்கவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.