கட்டுரைகளின் நகைமுரண்

நண்பர் ஒருவர் திருஞானசம்பந்தர் குறித்து அ. வேலுப்பிள்ளை எழுதியுள்ள கட்டுரை ஒன்றின் பிடிஎப் கோப்பு அனுப்பியிருந்தார் (கட்டுரை தலைப்பிலேயே ஒரு நகைமுரண் உள்ளது- “The Hindu Confrontation with the Jains and the Buddhists- Saint Tirunanacampantar’s Polemical Writings’). அதில் சம்பந்தர், ‘புனையப்பட்ட உரை’, என்ற பொருளில் கட்டுரை என்ற சொல்லைப் பயன்படுத்துவதாக எழுதும் வேலுப்பிள்ளை, அதே பொருளில், ‘கட்டிய மொழி’, ‘ஆக்கிய உரை’ என்ற சொற்களையும் பயன்படுத்துவதாய் குறிப்பிடுகிறார். தன் பதிகங்களில் ஜைன, பௌத்தர்களின் நூல்களை கட்டுரைகள் என்று குறிப்பிடுவது போதாமல், ‘கட்டிய கட்டுரை’ என்றும் அழுத்தம் திருத்தமாய் கூறுவதோடு, பொய்யர்கள் என்று பொருள்பட ‘கட்டர்கள்’ என்ற சொல்லையும் சம்பந்தர் பயன்படுத்துவதாய் எழுதுகிறார் அ. வேலுப்பிள்ளை!

அண்மையில் “The Best American Essays 2017” என்ற ஒரு தொகுப்பு படித்தேன். இதில் இருபது கட்டுரைகள் இருக்கின்றன. இவற்றை எது சிறந்த கட்டுரையாக்குகிறது என்பதையோ ஏன் இவை அமெரிக்க கட்டுரைகள் ஆகின்றன என்பதையோ அதிகம் பேசுவதற்கில்லை (முதல் கேள்விக்கு விடையில்லை, வேறு நூறு இருநூறு கட்டுரைகளில் எந்த ஒரு இருபதும் இங்கு இடம் பெற்றிருக்கலாம், இரண்டாம் கேள்விக்கான விடை எளிது – இவையனைத்தும் அமெரிக்கர்களால் அமெரிக்க வாசகர்களுக்காக எழுதப்பட்டவை). இவற்றை வாசிக்க நமக்கு என்ன தேவை இருக்கப் போகிறது என்ற கேள்வியும் நியாயமானதே- இந்தக் கட்டுரைகளைக் கொண்டு அமெரிக்கா குறித்து அப்படியொன்றும் பிரமாதமாய் அறிந்து கொண்டுவிட முடியாது. ஆனால், இங்கு காணக் கிடைக்கும் மொழியாளுமை, கட்டுரையின் வடிவம் குறித்த தன்னுணர்வு ஆகியவை நமக்கு பயன்படக்கூடியவை. அதிலும் குறிப்பாக இந்தத் தொகுப்பு தொடரின் பதிப்பாசிரியர் ராபர்ட் ஆட்வன் எழுதியுள்ள அறிமுகம் மற்றும் இந்தத் தொகுப்பின் பதிப்பாசிரியர் லெஸ்லி ஜேமிசன் எழுதியுள்ள முன்னுரைகள் நம்மைச் சிந்திக்கச் செய்கின்றன.

ராபர்ட் ஆட்வனின் முன்னுரையில் கட்டுரை என்பது என்ன என்ற கேள்வி ஒரு முரணாய் இடம் பெறுகிறது. கட்டுரையாளர் களப்பணியாளராய், வாசகர்களை ஒரு முடிவை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமா, அல்லது, தன்னை உலகுக்குத் திறந்து கொண்டவராய், மனதின் தீர்மானங்களையும் தடுமாற்றங்களையும், நம்பிக்கைகளையும் அவநம்பிக்கைகளையும் வெளிப்படுத்த வேண்டுமா? கட்டுரைகளின் நோக்கம் வாசகர்களுக்கு தகவல் அளிப்பது துவங்கி மன மாற்றத்தை உருவாக்குவது வரையிலான விவாதமா, அல்லது, ‘இவ்வுலகில் என் இருப்பு’ என்று சொல்லும் வகையில் தன்னுணர்வு மற்றும் தன்னனுபவ வெளிப்பாடா என்ற கேள்வி இதிலுள்ள கட்டுரைகளை வாசிக்கும்போதும் எழுகிறது. இவ்விரண்டில் ஒன்றை மட்டும் நாம் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. தன்னை விவரிப்பது இவ்வுலகை விவரிப்பதாகவும் இருக்கலாம், தன் உணர்வுகளை வெளிப்படுத்துவது பிறர் உணர்வுகளில் மாற்றத்தையும் உருவாக்கலாம்.

‘என்னதான் சொல்ல வருகிறார் இவர்?’ என்று சலிக்கச்செய்யக்கூடும் என்றாலும் ‘லாம்கள்’தான் கட்டுரைகளில் ஆதார த்வனி. கட்டுரை வடிவின் பிதாமகரான மோன்டேன் தன் காலத்தின் அரசியல் மற்றும் ஆன்மீக கேள்விகளையொட்டி விசாரணைகளை மேற்கொண்டாலும் தீர்மானமான முடிவுகளை நோக்கிச் செல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால், அவர் மானுட அறிவின் எல்லைகள் குறித்து எழுதுகிறார், பல பரிமாணங்கள் கொண்ட, முழுமையாய் அறிவதற்கில்லாத உலகின் மெய்யியல்பின் முன் தீர்மானமின்மையையும் தீவிரத்தன்மைகளற்ற திறந்த மனதையும் வாழ்வில் கைகொள்ளத்தக்க உத்திகளாய் முன்னிருத்துகிறார். கால் போன போக்கில், மனம் போன போக்கில் செல்லும் சுதந்திரத்தை ஆரம்பம் முதலே கட்டுரை வடிவம் அங்கீகரிக்கிறது.

இன்றுள்ள கட்டுரை வடிவம், பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் மோன்டேனால் (Montaigne) முதன்முதலில் முயற்சிக்கப்படுகிறது. அவர், ‘முயற்சிகள்’ என்று பொருள்பட ‘essais’ என்று தன் உரைநடை வடிவத்தை அழைக்கிறார். தான் கண்டடைந்த முடிவுகளையும் உருவாக்கிக்கொண்ட கருத்துக்களையும் தன்னைச் சுற்றியுள்ள உலக அனுபவத்துக்கேற்ப பரிசீலனை செய்ய கட்டுரை வடிவத்தை அவர் பயன்படுத்திக் கொள்கிறார். கட்டுரைகள் புற விஷயங்கள் பற்றி மட்டுமல்ல, அக அனுபவம் குறித்தும் அகமும் புறமும் இணையும் இடங்கள் குறித்தும் இருக்க முடியும் என்பது அப்போதே நிறுவப்பட்டு விடுகிறது. அகத்தின் சாயையை புற அனுபவங்களிலிருந்து விலக்க முடியாது என்ற ஒரு உள்ளார்ந்த உணர்வு அன்று முதல் இன்று வரை கட்டுரைகள் பலவற்றில் உள்ளன, அதிலும் குறிப்பாக இலக்கியத் தரம் கொண்டவற்றில்.

கட்டுரையின் வடிவ வளர்ச்சியில் மிகப்பெரும் தாக்கம் கொண்டவராய் மோன்டேன் கருதப்படுகிறார் என்றால், 1886 முதல் 1918 வரை மிகக் குறுகிய காலமே வாழ்ந்த ராண்டல்ப் பூர்ன் (Randolph Bourne) நவீன அமெரிக்க கட்டுரை வடிவின் முன்னோடி என்று கருதுகிறார் ராபரட் ஆட்வன். சமாதானம், சமூக நீதி, இளைஞர் இயக்கங்கள், தொழிலாளர்கள், குடியேற்றம், கல்விச் சீர்த்திருத்தம் என்று பல முற்போக்கு விழுமியங்களை ஆதரித்த பூர்ன் நகைமுரணை ஒரு முக்கியமான பார்வை நோக்காய்க் கொள்கிறார் (“A public dead to irony represented one of Bourne’s greatest fears’, என்கிறார் ஆட்வன்). ஒன்றைச் சொல்லி வேறொன்றைச் சுட்டுவது என்று நாம் பொதுவான பொருளில் நகைமுரணைப் புரிந்து கொள்கிறோம் (இதை சோம்பலாக, நகைப்புக்குரிய முரண், என்ற பொருளில்தான் அதிகம் பயன்படுத்துகிறோம்). தோற்றத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலுள்ள தொலைவை விவரணைகள் கொண்டு நிறைக்கிறது நகைமுரண். “பிளாட்டோவின் சாக்ரடீஸ் வாசிக்கும்வரை நான் இந்த நகைமுரணின் சிறப்பை முழுமையாய் புரிந்து கொள்ளவில்லை,” என்று பூர்ன் எழுதுவதாய் மேற்கோள் காட்டுகிறார் ஆட்வன், “உலகை இவ்வாறு இனிய வகையில் எதிர்கொள்ளுதல், தொடர்ந்து அனுபவத்தின் திறனாய்தல், கண்களைக் கவரும் நிறபேதங்களும் பொருந்தாமைகளும் அளிக்கும் உணர்வு, நகைக்கிடமான இணை ஒப்புமைகள், சுடர் தெறிக்கும் பிரகாசங்கள், இவை போதாதென்று மனதை முறிக்கும் அசாத்தியங்கள், என்று ஒருவன் அறியும் உலகின் சின்னஞ்சிறு பகுதிகள் ஒவ்வொன்றும் மற்றவற்றுக்கு எதிராய் எப்போதும் முரண் நிற்றல், ஒவ்வொன்றும் பிறர் அறிந்து கொண்ட வகையில் மொழிபெயர்க்கப்படுவதால் மட்டுமே புரிதலுக்கு உட்படுவதல்- இதுதான் வாழ்க்கை, அதிலும் அழகிய வாழ்க்கை, இங்குதான் நம் அகம் நாமறியா வண்ணம் வாழ்ந்து கொண்டிருப்பதை திடீரென்று ஒரு நாள் நாம் அறியக்கூடும்”1.

என்ன சொல்கிறார் பூர்ன்? “எல்லாம் எப்படி இருக்கின்றன என்ற உண்மை, அவை எப்படி இருக்க வேண்டும் என்ற உண்மையின் பின்னணியில் வெளிச்சமிடப்படுவது- இதுவே நகைமுரணாளனின் தரிசனம்” 2. நாம் நினைப்பது போல் நகைமுரண் நகைப்புக்குரிய விஷயமல்ல. நிதர்சன உண்மைகளை அவற்றின் ஆதர்ச இலட்சியங்களுடன் பொருத்திப் புரிந்து கொள்வதால் நகைமுரண் குற்றம் கண்டு குணமும் உரைக்கிறது, வலியாகவும் வலியின் மருந்தாகவும் இருக்கிறது. நகைமுரண் அளிக்கும் இந்த இரட்டைப் பார்வையை பூர்ன் கருணைக்கு இணையாய்க் கொள்கிறார். நகைமுரணாளன் பிறர் பார்வை கொண்டு காண்கிறான், இதுவே அவன் புரிதலை விரிக்கிறது, கருணையில் உயர்ந்த கருணை நகைமுரணின் கருணை.

படிக்கும்போது இது ஏதோ வரட்டுச் சித்தாந்தம் போல் இருக்கிறது, ஆனால் இதே தொகுப்பில், எலிஸ் கொலேட் கோல்ட் பாச் (Eliese Colette Goldbach) எழுதியுள்ள, “The White Horse” என்ற கட்டுரை இருக்கிறது. ‘எலிஸ் வல்லுறவு கொள்ளப்படுவது குறித்து பகல் கனவு காண்கிறாள்” என்று துவங்கும் இந்தக் கட்டுரையின் முதற் பகுதி, காலம்தோறும் பெண்கள் வல்லுறவு கொள்ளப்படுவதை விவரித்துவிட்டு, கனவின் கடைசியில் வெள்ளைக் குதிரையில் ஒருவன் வந்து காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையுடன் முடிகிறது. கட்டுரையில் விவரிக்கப்படும் வல்லுறவுகளில் எலிஸ் எதிர்க்காமல் இணங்குகிறாள். ஏன் என்பது அவளுக்கே புதிராய் இருக்கிறது, அதை அவள் விசாரணையின் போது வெளிப்படச் சொல்லவும் முடிவதில்லை. கல்லூரியில் அவளை வல்லுறவுக்கு உட்படுத்தியவர்களில் ஒருவன், “உன்னை வேசி என்று சொல்வேன்,” என்பது போல்தான் ஆகிறது, யாரும் அவளது இணக்கம் குற்றமற்றது என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. தன் விருப்பம் குறித்தும்கூட அவளுக்கே சந்தேகம் எழுகிறது. ஆனால் கட்டுரையின் இறுதியில் எலிஸ் குதிரைகளை இனப்பெருக்கம் செய்யும் இடத்தில் பணியாற்றுகிறாள். அவளது வேலை, கலவியின்போது பெண் குதிரையைப் பிடித்துக் கொள்வது. கலவியில் எலிஸின் பங்கு இரக்கமில்லாமல் விவரிக்கப்படுகிறது. “எலிஸ் குனிந்து, பெண் குதிரையின் இதயத்தின் மீது சாய்ந்து நிற்கிறாள். தனது கன்னத்தை அதன் வெண்ணிற மென் மயிரில் அழுத்திக் கொள்கிறாள், அதன் இனிய வியர்வையை முகர்கிறாள்- தேன் சிந்திய மண் போல் மலமும் மரத்துகளும் கலந்த மணம். பெண் குதிரைக்கு வியர்க்கிறது, அது நடுங்கிக் கொண்டிருக்கிறது, பெருமூச்சுகள் விடுகிறது. இரு, அவளை அசையாமல் பிடித்துக் கொள். தன் உடலின் எடை முழுக்க அழுத்த, எலிஸ் அந்தப் பெண் குதிரையைப் பின்னோக்கித் தள்ளுகிறாள். அவள் அந்தப் பெண் குதிரையை ஆண் குதிரையினுள் தள்ளுகிறாள். பெண் குதிரை சிறிது முன்நோக்கி நகரும்போது எலிஸ் அவளைப் பின்னோக்கித் தள்ளுகிறாள். இருவரும் முன்னும் பின்னுமாய் அசைகிறார்கள், மென்மயிற்றில் கன்னம் வைத்து, அடுத்த அடியைத் தாங்கிக் கொள்ளத் தயாராய்”. 3 “ஆண் குதிரையின் கண்களில் இருந்த ஆவேசம் போயிருந்தது. அந்த ஆவேசம் பெண் குதிரைக்குள் புகுந்திருந்தது”, என்ற இந்தப் பகுதி முடிகிறது. இறுதியில், எலிஸ் முன் செல்ல, பெண் குதிரை அவளைத் தொடர்கிறது. அப்போது, வெள்ளைக் குதிரையை, ஆண் குதிரையை, எதிர்கொள்ளும் அலிஸ் அதன் அழைப்பை உணர்வதாய் கட்டுரை முடிகிறது.

இங்கு முரண்நகை என்பது எலிஸுக்கு என்ன நடந்தது, அது எவ்வாறு அறியப்படுகிறது என்ற இரண்டுக்கும் இடையிலுள்ள இடைவெளி மட்டுமல்ல, எலிஸும்கூட தன் கனவுகளுக்கும் தன் அனுபவங்களுக்கும் தனக்கும் இடையிலுள்ள தொலைவைக் கடக்க முடியாதவளாய் இருக்கிறாள் என்பதுதான். பூர்ன், நகைமுரணில் கருணையைக் காண்கிறார் என்றால் அது அன்பை, நேசத்தை, பாசவுணர்வுகளை வெளிப்படுத்துகிறது என்பதாலோ. தூண்டுகிறது என்பதாலோ அல்ல. சூழலின் நிலை மற்றும் நியாயங்கள் குறித்த தீர்மானத்தை நோக்கி வாசகனே தன் விருப்பத்தின் காரணமாய் நகர்வதால், நகைமுரண் எழுப்பும் இடைவெளி அதன் விவரணைகளைக் கொண்டே நிரப்பப்படுகிறது. இன்று சமூக ஊடகத்தில் “irony is dead” என்று டிவிட்டப்படும் ஒவ்வொரு டிவிட்டும் (https://twitter.com/search?f=tweets&vertical=default&q=%22irony%20is%20dead%22&src=typd) நகைப்புக்குரிய முரணைச் சுட்டுகிறது என்றாலும், இருப்பதற்கும் இருக்க வேண்டியதற்கும் இடையிலுள்ள வெளி அழிக்கப்படுவதால் நேர்கின்றன அறிதல் பிழையையும் உணர்த்துகிறது. நகைமுரண் அழகியல் பாற்பட்டது மட்டுமல்ல, அது உண்மை மீதான நாட்டத்தையும் நம்பிக்கையையும் வலியுறுத்துவதால் அற நிலைப்பாடும்கூட.

இந்த தொகுப்பில் உள்ள கட்டுரைகளை அறிமுகப்படுத்தும் விதமாய் இது எழுதப்படவில்லை. நகைமுரண் குறித்த சில முக்கியமான கருத்துகளை நாம் யோசித்துப் பார்க்க இடம் கொடுப்பதைப் பகிர்ந்து கொள்ள விரும்பினேன். மேலும், இத்தொகுப்பின் பதிப்பாசிரியர் லெஸ்லி ஜேம்ஸ் இவ்வாறு எழுதுகிறார்: “ஒரு பெண் இன்னுமொரு ஆண்டு வாழ்ந்து விட்டோமென்று தான் இறந்திருக்க வேண்டிய ஆண்டு தினத்தைக் கொண்டாட ஒரு கேக் வாங்கும்போது, அவளை மரணத்தில் இருந்து காப்பாற்றிய மறுத்துவ அமைப்புக்கு அவள் கடன்பட்டிருக்கும் காரணத்தால் அவளிடம் கேக் வாங்கக்கூட காசில்லை என்னும்போது- இது அந்தரங்கமும் அரசியலும் ஆகிறது. அந்தக் கேக்கை நாம் காணும் குறுகிய தருணம்- நம் மீது தாக்கம் செலுத்தும் துல்லியமான தகவல், அல்லது நினைவில் நிற்கும் நுண்விபரம், இதைத்தான் என் மாணவர்களிடம் எப்போதும் வலியுறுத்துகிறேன்-, இப்படிப்பட்ட கடன்கள் இல்லாத ஒரு அமைப்பைக் கற்பனை செய்யவும் நடைமுறைப்படுத்தவும் நாம் விரும்பக்கூடும் எனபதை உணர்த்துகிறது. நான் கட்டுரைகளில் நம்பிக்கை கொண்டிருப்பது கடன்களைப் பொதுமைப்படுத்தாமல், குறிப்பிட்ட கடன்களைப் பற்றிய குறிப்பிட்ட கதைகளைச் சொல்வது முக்கியம் என்று நான் நினைப்பதால்தான் – இந்த மனமுடைந்த ஆடிகளின் விரிசல்களின் வழியே நாம் இன்னும் பரந்த உண்மைகளைக் கண்டடையக் கூடும். ஒவ்வொரு கேக்குக்கும் அதன் அரசியல் இருக்கிறது, அதன் விலை இருக்கிறது.” 4. ஆனால் அமெரிக்க மருத்துவ அமைப்பின் நுண்விபரங்கள் நமக்குத் தேவையில்லை. தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் இது போன்ற அமெரிக்க நுண்விபரங்களைக் கொண்டே நிற்கிறது.

இறுதியாய் ஒன்று. அமெரிக்க புனைவுகளுக்கும் இது போன்ற கட்டுரைகளுக்கும் இடையில் ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு இருப்பதாய்த் தோன்றுகிறது. அமெரிக்க அரசியலிலும் சமூக விவாதங்களிலும் காணப்படும் பேரச்சங்கள் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாதவை. இவை முழுக்க முழுக்க காரணமற்ற மிகையச்சங்கள் என்று சொல்லிவிட முடியாது. அமெரிக்க அறிவார்ந்த உரையாடல்களின் அடிநாதமாய் விளங்கும் உணர்ச்சி, அவநம்பிக்கையுடன்கூடிய பிறழ்வச்சம் (paranoia), என்றுகூட சில சமயம் தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு பேராபத்து அவர்களுக்கு அறிமுகமாகிறது. நம்பி கிருஷ்ணன் சொல்வனத்தில் எழுதி வரும் அமெரிக்க இலக்கிய விமரிசனக் கட்டுரைகளில்கூட இது விரித்தெடுக்கப்படாத ஒரு சரடாய்த் தொடர்கிறது. ஆனால் இந்தக் கட்டுரைகளைப் பார்க்கும்போது, இழப்பு, மரணம், துயரம், ஏழ்மை, நிறவேற்றுமை, என்று பல விஷயங்கள் பேசப்பட்டாலும் அப்படி எந்த ஒரு அச்சமும் வெளிப்படுவதில்லை. இதற்கு என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால், இதிலுள்ள பல கட்டுரைகள், எது குறித்து பேரச்சம் நிலவுகிறதோ, அது போன்ற, அதைவிட மோசமான சூழல்கள் பலவற்றை எதிர்கொண்டபின் எழுதப்பட்டிருக்கின்றன. துயரம் அச்சத்தைக் காட்டிலும் இனியது, நம்பிக்கைக்கும் இடம் இருப்பதால். எவ்வளவு பெரிய வீழ்ச்சியும் மீட்சிக்கு அப்பாற்பட்டதல்ல.

1. – “Not until I read the Socrates of Plato,” the youthful Bourne writes, “did I fully appreciate that this irony—this pleasant challenging of the world, this insistent judging of experience, this sense of contrasts and incongruities, of comic juxtapositions, of flaring brilliances, and no less heartbreaking impossibilities, of all the little parts of one’s world being constantly set off against each other, and made intelligible only by being translated into and defined in each others’ terms—that this was a life, and a life of beauty, that one might suddenly discover one’s self living all unawares.”

2 – “Things as they are, thrown against the background of things as they ought to be—this,” he claims, “is the ironist’s vision.”

3 – “Eliese doubles over and leans into the mare’s chest. She presses her cheek against the white fur and smells the horse’s sweet must—shit and sawdust like honeyed earth. The mare is sweating, trembling, breathing heavy. Dammit, hold her still. With the entire weight of her body, Eliese pushes the mare backward. She pushes the mare into the stallion. When the mare inches forward, Eliese inches her back. They rock together, cheek against fur, bracing for the next blow.”

.4 – When a woman buys a cake to celebrate another year of living on the anniversary of the day she did not die, and can barely afford this cake because she is in debt to the medical system that kept her from dying—this is both personal and political. The brief glimpse of that cake—the kind of impactful specificity, or telling detail, that I am always demanding from my students—suggests we might want to imagine and implement a system where such debts did not exist. I believe in essays because I believe that it matters to narrate the particular stories of particular debts, rather than simply Debts Writ Large—so that we might access broader truths through the fissures of these heartbroken lenses. Every piece of cake has its politics, and its price.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.