மதுரைக் காஞ்சி

சொந்த ஊர் என்பதுடனான நம் தொடர்பு என்ன? இடங்கள் உயிரற்றவை எனின் வளர்ந்த ஊர் எப்படி நம் உணர்வுகளில் உயிர்க்கிறது? நினைவுகளில் தொடர்ந்து உயிர்ப்புடன் ஏன் இருக்கிறது? தொன்மையின் தொடர் கண்ணிதான் அந்த உயிர்ப்பா? அப்படியெனின் அந்த தொன்மையின் நாடி காலமா? எனவே தான் காலத்தின் அடர்த்தியில் அந்த இடத்தின் உடனான தொடர்பின் செறிவு மெருகேறுகிறதா? “பாண்டவர் பூமி” திரைப்படத்தில் தன் ஊர் திரும்புபவர் மண் தொட்டு புல்லரிப்பது போன்று எனக்கு இதுவரை நேர்ந்ததில்லை எனினும், மதுரையில் இறங்கும் பொழுதெல்லாம் நீர்நிலை நோக்கிச் செல்லும் பிடியின்* கால்களிடையே ஆனந்தமாய் அசைந்து போகும் குட்டியானையில் குதூகலம் தோன்றுவதுண்டு…”மதுரைக்கு வந்தா இருபது வருஷம் குறைஞ்சிடுமே உங்களுக்கு” என்பதையும் என் மனைவி ஒவ்வொரு மதுரைப் பயணத்தின் போதும் சொல்லத் தவறுவதில்லை.

சிறுவயதில் நடைபெறும் “உன் ஊர் சிறந்ததா என் ஊர் சிறந்ததா” என்னும் சில்லறைத்தனமான சண்டைகளில் என் ஊரும் நானும் புறமுதுகிட்டு ஓடும் பொழுது தோறும் மதுரையின் சிறப்பு குறித்த தேடல் என்னையறியாமலேயே எனக்குள் விதைக்கப்பட்டிருக்கூடும்…சிறுவயதில் மதுரை தெருக்களில் அலறும் குழாய் ஒலிப்பெருக்கிகளின் வழியே “நான் படிச்சேன் காஞ்சியிலே நேற்று ‍ அதை நான் உனக்கு சொல்லட்டுமா இன்று” என்னும் கழகப் பாடலை கேட்டுக் கேட்டு “மதுரைக் காஞ்சி” என்பதற்கு “விபரீதமான” அர்த்தம் கொண்டிருந்தேன். அதிலிருந்து மீண்டு உண்மை பெயர் காரணம் அறிய பலவருடங்கள் கடக்க வேண்டியிருந்தது.

“மதுரைக் காஞ்சி” என்றால்? காஞ்சி என்பது திணைகளில் ஒன்று. ஆங்கிலத்தில் “literary genre” என்கிறார்களே அது போல, ஆனால் அதை விட பன்மடங்கு நுட்பாக பல காலம் முன்பாக‌ வரையறை செய்யப்பட்டது திணை. காஞ்சித் திணை நிலையற்ற வாழ்க்கையில் நிலையான புகழ் பெற செய்வன குறித்து பாடுவது. அன்றைய மதுரை மன்னன் தலையாணங்கானத்து செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு பாடியதால் இது “மதுரைக் காஞ்சி”. இதைப் பாடியது அவனின் அவைப் புலவர் மாங்குடி மருதனார். மன்னனும் லேசுப்பட்டவனில்லை. புறநானூற்றில் ஒரு பாடலை அவனே புனைந்துள்ளான்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மதுரை எப்படியிருந்தது? மாங்குடி மருதனார் அன்றைய மதுரைக்கு தரும் அட்டகாசமான அறிமுகத்தைப் பாருங்கள்…

“…வையை அன்ன வழக்குடை வாயில்
வகை பெற எழுந்து வானம் மூழ்கி
சில்காற்று இசைக்கும் பல்புழை நல் இல்
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்…”

வைகையையே மதுரைக்கு உவமையாக்கி, வற்றாது ஓடும் வைகை போல மதுரையின் நுழைவாயிலில் மக்கள் கூட்டம் எப்போதும் நகர்ந்து கொண்டே இருக்கும் என்கிறார். ஆற்றின் அகலம் போன்ற விரிந்த தெருக்களும் அதன் கரைகள் போல இருமருங்கிலும் வீடுகளும் இருக்குமாம். ரொம்ப பழைய காலம் என்பதால் சாதாரண மண் குடில் என்று நாம் நினைத்து விடக்கூடாது. “பல்புழை நல் இல்” என்கிறார் ‍ அதாவது பல சாளரங்கள் உடைய வேலைப்பாடுகள் உடைய வீடுகளாம் அவை!

“வைகை” போல் ஓயாது ஓடும் மக்கள் கூட்டத்திற்கு பசியும் ருசியும் உண்டே…அதற்கெனவே அன்றும் மதுரை முழுவதும் “பண்ணியம் பகர்நர்” நிறைந்து இருந்திருக்கின்றனர்.

யார் இந்த “பண்ணியம் பகர்நர்”?

இன்றும், மீனாட்சி அம்மன் கோயில் சுற்றி ஒரு கி.மீ சுற்றளவை நாம் சுற்றளவை நாம் கடக்கையில் குறைந்தபட்சம் நூறு காபி டீ கடைகளையேனும் காண இயலும். சாலையில் சந்திக்கும் இரண்டு மதுரைக்காரர்கள் சில நிமிடங்களுக்கு மேல் பேச நேர்ந்தால் “வாங்கண்ணே டீ அடிச்சுட்டே பேசலாம்” என்று அருகிலுள்ள கடைக்குள் நுழைவதற்கான நிகழ்தகவு தொண்ணூறு சதவீதத்திற்கும் மேல் என்பது இத்தனை கடைகள் இருப்பதற்கான காரணமாக இருக்கலாம். கண் முன்னே வடையும் பஜ்ஜியும் வாணலியில் பொரிந்தபடி சத்தமிட்டு அழைக்கும் போது வெறும் காபி டீயுடன் நிற்போமா நாம்? அத்தகைய கடைகள் அனைத்தின் முன்னும் முண்டா பனியன் அணிந்த ஒருவர் வேகவேகமாக பேப்பர் ஒன்றின் மேல் இலை கிழிசல் வைத்து பஜ்ஜியும் சட்னியும் போட்டுத் தருவாரே…அவர் ஒரு “பண்ணியம் பகர்நர்”. இருபதாண்டுகள் முன்பு வரைகூட அதிகாலை மூன்று மணிக்கு நீங்கள் பெரியார் பேருந்து நிலையத்தில் இறங்கினாலும், தாள லயத்துடன் பரோட்டா உங்களுக்காக “கொத்தப்பட்டு”க் கொண்டிருக்கும். பரோட்டாவின் கெடுதல் அறிந்தோர் “அக்கா கடை” “பாட்டி கடை” என்று அன்புடன் அழைக்கப்படும் தெருவோர கடைகளில் ஆவி பறக்கும் இட்லிகளை நாடுவதுண்டு. இந்த அக்காக்களும் பாட்டிகளும் பண்ணியம் பகர்நரே. பண்ணியம் என்றால் தின்பண்டம். அதை விற்போர் பண்ணியம் பகர்நர். “பண்ணிய” என்றால் “சமைத்த”, “செய்த” என்று பொருள். இன்றும் கூட “நீ என்ன பண்ணின?” என்று கேட்பது வழக்கத்தில் உள்ளது.

சங்க கால மதுரையிலும் “ஃபுல் மீல்ஸ்” உண்டு. இனிப்பு, பழ வகைகள், சோறு, இறைச்சி என்று “வெஜ்” “நான் வெஜ்” மீல்ஸ் வழங்கும் “மெஸ்” போன்ற கடைகள் இருந்ததை,

“சேறும் நாற்றமும் பலவின் சுளையும்
வேறு படக் கவினிய தேம் மாங்கனியும்

கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயின் நுகர…”

என்பதன் மூலம் அறிய முடிகிறது.

இக்கடைகள் மட்டுமல்லாது இன்னபிற பொருட்கள் விற்கும் கடைகளும் அல்லும் பகலும் அன்று தொட்டு இயங்கியிருக்கின்றன. “தூங்கா நகரம்” என்ற பெயர், இன்று போகிற போக்கில் வீசப்படும் பட்டங்கள் போல் மதுரைக்கு வழங்கப்படவில்லை. “இருபெரு நியமம்” என்கிறார் மருதனார். அதாவது பகலில் இயங்கும் கடைகளை நாளங்காடி எனவும் இரவில் இயங்கும் கடைகளை அல்லங்காடி எனவும் அன்றே வகைப்படுத்தியிருக்கின்றனர். இந்த அங்காடிகளில் என்னவெல்லாம் விற்றார்கள்?

“…கோடு போழ் கடைநரும் திருமணி குயினரும்
சூடுறு நன்பொன் சுடர் இழை புனைநரும்
பொன்னுரை காண்மரும் கலிங்கம் பகர்நரும்
….
செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும்
பூவும் புகையும் ஆயும் மாக்களும்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடி…”

என்று நீண்ட பட்டியல் போடுகிறது மதுரைக் காஞ்சி.

இதில் என்னைக் கவர்ந்தது

“…தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பகல்
குறியவும் நெடியவும் மடி தருஉ விரித்து…”

அதாவது புடவையை விரித்து கடலின் அலைமடிப்புகளை போல் காற்றில் வீசி வீசி காட்டி விற்பனை செய்வார்களாம்! இத்தனை அங்காடிகளும் நிரம்பிய தெருக்களில் கூட்டம் எப்படியிருந்தன தெரியுமா? “கால் உற நிற்றர” என்கிறார் மருதனார். அதாவது ஒருவர் கால் மற்றவர் கால் மேல் உரசும் வண்ணம் நெரிசல் மிகுந்ததாய் இருந்தனவாம்…! எங்கெல்லாம் இந்த கூட்டம் மிகுந்த கடைகள் உடைய தெருக்கள் இருந்தன? “நால் வேறு தெருவினும்” என்கிறது மதுரைக் காஞ்சி. இது நான்கு சித்திரை வீதிகளாக இருக்கலாம் அல்லது ஆடி, சித்திரை, ஆவணி, மாசி வீதிகளாக இருக்கலாம் அல்லது வணிகர் தெருக்களாக இருக்கலாம். ஆயிற்று ஆயிரமாயிரம் ஆண்டுகள்…இன்றும், தீபாவளிக்கு முந்தைய நடுநிசியில், எள் போட்டால் எண்ணெயாகும் மக்கள் கடலில் “துடுப்பு” போட்டு விளக்குத் தூண் பகுதியை அடைந்தீர்கள் எனில், எதன் மீது ஏறி நிற்கிறார் என்று தெரியா வண்ணம் உயரத்திலிருந்து பலநிறப் புடவைகளை “அக்கா வாங்க‌ அம்மா வாங்க” என்று “.தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பகல் குறியவும் நெடியவும் மடி தருஉ விரித்து…” விற்கும் காட்சிகளை காணலாம்…
இப்போது ஒரே கோர்வையாய் இந்தப் பாடலை வாசித்துப் பாருங்கள்…!

“தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பகல்
குறியவும் நெடியவும் மடிதரூஉ விரித்து
சிறியவரும் பெரியவரும் கம்மியர் குழீஇ
நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர…”

இப்படியொரு பரபரப்புடன் இயங்கிய நான்மாடக்கூடலின் தெருக்களில் இளம்பெண்களும் மூதாட்டிகளும் இல்லாமலா? இளமையின் வனப்பு குறித்து இலக்கியங்கள் தேவைக்கு அதிகமாக பாடியிருப்பது நாம் அறிந்ததே. ஆனால் மதுரைக் காஞ்சியில்

“செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை
செல்சுடர் பசுவெயில் தோன்றியன்ன‌”

என்று மதுரை இளம்பெண்களை வர்ணிக்கிறார் மருதனார். அதாவது சிவந்த பசும்பொன்னில் செய்யப்பட்ட பாவைச் சிற்பத்தின் மேல் பசுவெயில் படுவது போன்ற எழிலாம்…மீனாட்சியின் ஆதி பிரதிகள் அப்படித்தானே இருந்திருப்பார்கள்?

அதென்ன பசுவெயில்? பச்சை வெயில் என்றே பொருள் கொள்ள விரும்புகிறேன் நான். தவறு எனின் தமிழ் சான்றோர் மன்னிப்பார்களாக. எனக்கு பசுவெயில் பச்சை வெயிலே…ஏன் அப்படி? அதற்கு பச்சை வெயிலின் அழகை நாம் பார்க்க வேண்டும். எங்கு பார்ப்பது? அந்திக்கு ஒரு மணி நேரம் முந்தி திருப்பரங்குன்றம் மலை மீது, சூரியன் நம் முதுகு பார்க்கும் வண்ணம் அமர்ந்தால், அதன் நேர் எதிர் திசையில் வெகு தொலைவில் நகரத்தின் நடுவே மீனாட்சி கோயிலின் கோபுரங்கள் விண்ணைத் தொடுவது போலத் தெரியும். நேரம் மெல்ல நகர, பின்னிருக்கும் சூரியன் பாறைகளின் மறைவில் நழுவத்துவங்குகையில், பழுப்புக்கும் பச்சைக்கும் இடைப்பட்ட நிறத்தில், மாபெரும் நிழல் திட்டுக்கள் கோபுரங்களிலிருந்து புறப்பட்டு சத்தமற்று நடக்கும் யானைக் கூட்டம் போல் நம்மை நோக்கி நகர்ந்து வரும். அக்கூட்டத்தின் விளிம்புகளில் தெரியும் அந்திச் சூரியனின் ஜொலிப்பே நானறிந்த பசுவெயில்.

பசுவெயில் இளமையின் மீது மட்டும்தான் தெறித்து எழில் காட்டுமா என்ன? முதுமையின் மீதும் படும். முதுமையின் எழிலையும் காட்டும். கடந்த சில வருடங்களாய் மதுரைக்கு செல்லும் போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட பாட்டியிடம் காய்கறி வாங்குவதை வழக்கப்படுத்தி வைத்துள்ளேன். மாங்குடி மருதனார் மொழியில் சொல்வதானால், அவர் “நன்னர் நலத்தர் தொல் முதுபெண்டிர்”களில் ஒருவர் . கருக்கல் பொழுதில் கட்டபொம்மன் சிலைக்கு பின்புறம் தொடுவானில் இறங்கும் பரிதி, நேதாஜி ரோட்டிலிருந்து நன்மை தருவார் கோயில் தெரு திரும்பும் முனையில் சாக்கில் அமர்ந்து காய்கறிகளை “கூறு”களாய் விற்கும், கொசுறு தரத் தவறாத‌ பாட்டியின் நரையில் வெள்ளியை மினுக்கி விட்டு கீழிறங்கி கன்னத்து தசை சுருக்கங்களின் வயதேறிய வரிகளுக்கிடையில் தேங்கி நிற்கும் பொழுதில் “செல்சுடர் பசுவெயில் தோன்றியன்ன‌” முதுமைக்கும் பொருந்தும் என‌ நான் உணர்ந்து கொண்டேன். “corporate வாழ்க்கை” முறையிலிருந்து விட்டு விடுதலையாகி சங்க காலக் கூடலின் “பசு வெயிலை” பாட்டியிடம் கண்டு களிக்கும் நொடிகள் அவை.

மதுரை வீதிகளில் அம்மும் கூட்டத்தின் இடையே சில சமயம் பாண்டியனின் படையில் இருந்த யானைகளும் வந்து விடுமாம். மேம்போக்காய் எதையும் சொல்வது இலக்கியமல்லவே…எனவே மருதனாரும் அந்த யானைகள் எப்படிப்பட்டது என்பதை ஐம்பது அறுபது வரிகளில் விலாவாரியாக சொல்லிவிட்டுத்தான் அவற்றை வீதிகளில் உலா விடுகிறார்…மதுரைக் காரர்கள் அப்போதே “ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ” என்று (நல்ல விதத்தில்) நினைக்கும் வண்ணம் செயல்பட்டிருக்கிறார்கள்! இக்காலத்தில் கார்களை பின்னோக்கி செலுத்தும் போது “ரிவர்ஸ் ஒலிப்பான்” இருப்பதை பார்க்கிறோம். அப்போதே யானைகளுக்கான “ரிவர்ஸ் ஒலிப்பான்” இருந்ததை மதுரைக் காஞ்சி சொல்கிறது.”இரு தலைப் பணிலம்” அதாவது இருபுறம் முழங்கும் சங்கு இருந்திருக்கிறது. மக்கள் கூட்டத்தில் திடீரென்று மதம் கொள்ளும் யானை அப்படியே U turn அடித்து ஓடத் துவங்கினால் பின்பக்கத்து சங்கை ஊதி மக்களை அலர்ட் செய்வார்களாம்! சித்திரை திருவிழாவில் கடவுளர்களின் வீதியுலாவின் போது யானைக்கும் வாகனத்திற்கும் இடையே சங்குடன் ஒருவர் இன்றும் போவது “இரு தலைப் பணிலத்தின்” நீர்த்துப் போன நீட்சியோ?

புலவர் தானே… கவித்துவம் மிக்க வர்ணனைகளைத் தவிர‌ வேறென்ன பாடிவிடப் போகிறார் என்று நினைத்து விடாதீர்கள்…”Market economy” “Demand-Supply equation” என்ற வார்த்தைகளெல்லாம் வருவதற்கு முன்னரே சங்க கால‌ மதுரை சந்தைகளில் அவற்றினை கண்டறிந்து பாடியிருக்கிறார் மருதனார்:

“…மழை கொளக் குறையாது புனல் புக மிகாது
கரை பொருது இரங்கும் முந்நீர் போல‌
கொளக் கொளக் குறையாது தரத் தர மிகாது…”

மேகம் நீரைப் பெற்றுக் கொள்வதால் கடல் நீர் குறையாது ஆற்று நீர் வருவதால் கடலொன்றும் நிரம்பாது அப்படித்தான் மதுரை அங்காடிகளில் கிடைக்கும் பொருட்கள் பலரும் வந்து பெற்றுக் கொண்டாலும் குறையாமலும் பலரும் விற்பனை செய்தாலும் மீதமில்லாமலும் இருக்கிறதாம்…”Demand-Supply”க்கு என்னே ஒரு விளக்கம்!

உலகின் முக்கால் வாசி நாடுகளும் நகரங்களும் உருவாவதற்கு முன்னரே எப்படியெல்லாம் “அலப்பறை”யாய் வாழ்ந்திருக்கிறது மதுரை!

நிலம், நதி, கடல், மலை என இயற்கையின் அம்சங்கள் அனைத்துமே தொன்மையானவைதான். இருப்பினும் தொன்மை என்றவுடன் மனதில் தோன்றுவது மலைகளே…ஆகிருதியும் அசைவின்மையும் அதனுள் ஒன்று சேர்ந்து இருப்பதனால் மலைகளுக்கு தொன்மையின் எடை அதிகமோ என்னவோ…மலை போன்றே தொன்மையும் அசைவற்று உறைந்திருப்பது போலத்தான் தோற்றமளிக்கிறது. ஆனால், மலையின் மேல் விழும் மழையின் துளிகளினால் பாறைகள் முழுவதும் பிசுபிசுத்து, நீர்த்துளிகள் இடுக்குகளில் வழிந்தோடும் போது மலையே சற்று உயிரோட்டம் பெற்று அசைவது போல் தோன்றுவ்தில்லையா? அப்படித்தான் நம் இக்கால இருப்பின் அடியில் மீதமுள்ள நினைவுகள் தொடும் தொன்மமும் உயிர்த்தெழுந்து அசைந்து கொடுக்கிறதோ? தொன்மத்திற்கும் நமக்குமான தொடர்ந்து வரும் உணர்வு இப்படித்தான் சாத்தியம் ஆகிறதோ? இலக்கியமே அதற்கு பாத்தியம் ஆனதுவோ…?

*பிடி ‍ – பெண் யானை

One Reply to “மதுரைக் காஞ்சி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.