நிஜமாக ஒரு உலகம்

’எதுக்கு இந்த மாபெரும் அறிவு, அங்குமிங்கும் ஓடல், ஓயாத தேடல். விடுறா.. பொல்லாத வாழ்க்கை. சாகாவரமா வாங்கிண்டு வந்துருக்கோம்? இன்னிக்கோ நாளைக்கோன்னு இடர்ற கேசு.. இதுக்குப்போயி எத்தனைப் ப்ரயாசை, எத்தனை அலட்டல்!’  எங்கோ பார்த்துக்கொண்டுத் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டான் விவேக்.  அவனையே பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக், கிளாசில் மேல்முட்டும் நுரையை லேசாக ஊதி ஒதுக்கிவிட்டு, சூடான ஃபில்டர் காஃபியில் எழும் வாசனையில் கொஞ்சம் லயித்தான். ஹ்ம்ம்..நல்லாத்தான் போடறான் காஃபி. மெல்ல உறிஞ்சினான். பிறகு நினைவுக்கு வந்தவனாய் ‘டேய்! ஒன்னக் கேக்காமலே  காஃபி வாங்கிண்டு வந்துட்டேன். வேற ஏதாவது சாப்டறயா? இட்லி, உப்புமா, வடை? காலைல இங்க வடை சூப்பரா இருக்கும்,’ என்று எழுந்தவனை விவேக் கையசைத்து உட்காரவைத்தான். கலைந்திருந்த தலைமுடி நெற்றியில் வழிய, அவனது அழகான கண்கள் நிலையற்றிருந்தன. காஃபியை எடுத்தவன், பரந்த வெளியையே பருக முயற்சிப்பதுபோல  நிதானமாகப் அருந்த ஆரம்பித்தான்.

கிழக்கு பெங்களூரின் குந்தனஹல்லி கேட் தாண்டி ப்ருக்ஃபீல்ட், குந்தனஹல்லி காலனி என்று நீளும் ஐடிபிஎல் மெயின் ரோட், ஐடிபிஎல்-ஐயும் தாண்டி காடுகோடி வரை செல்லும். அந்தப் பகுதியில் ஏகப்பட்ட கடைகள், ஸ்டோர்கள், மால்கள், ரெஸ்டாரண்ட்டுகள் முளைத்து எழுந்துவிட்டன. எல்லாம் பத்துப்பனிரெண்டு வருடத்தில் வந்த வாழ்வு. பெங்களூருக்கு ஐடி செய்த மாயாஜாலம். ப்ரூக்ஃபீல்டிற்கருகில் இந்த பிரதான சாலையின் ஓரம், புதிதாக முளைத்திருந்த அந்த ரெஸ்டாரண்ட்டில் தாழ்வாரக்கூரையின் கீழே, ஓரமாக அமைந்திருந்த வரிசையில் வெட்டவெளியைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள் நண்பர்கள் இருவரும். இரவெல்லாம் நசநசவென மழைபெய்திருக்க, அந்தக் குளிரான காலையில் கூட்டமில்லை. பக்கவாட்டில் இரண்டு டேபிள் தள்ளி, முதுகுப்பையையும் ஹெல்மெட்டையும் அடுத்த சீட்டில் வைத்துவிட்டு ஆவிபறக்கும் சாம்பாரில் முங்கிய இட்லியில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தாள் ஒரு இளங்கன்னி. 22-23 –ஐத் தாண்டவில்லை எனக் கணித்தான் கார்த்திக். பி.ஈ, பி.டெக் இப்படி ஏதாவது முடித்துவிட்டு ஏதாவதொரு ஐடி கம்பெனியில்,  சமீபத்தில்தான் சேர்ந்திருப்பாள். பிஜி -யில் ப்ரெக்ஃபாஸ்ட் தெண்டமாயிருக்குமாயிருக்கும். இட்லி சாம்பாருக்கு ஏங்கி இங்கே வந்திருக்கிறாள்.  சில டேபிள்கள் தள்ளி ஸ்கூல் யூனிஃபார்மில் ஒரு சிறுமி தன் மத்திம வயது அப்பாவுடன் அமர்ந்திருந்தாள். அம்மாவுக்கு எழுந்திருக்க நேரமாகிவிட்டதோ, பள்ளிசெல்லும் குழந்தைக்குக் காலை டிஃபன் செய்யமுடியவில்லையோ என்னவோ, மகளைக் கூட்டிக்கொண்டு ஸ்கூல் போகுமுன் ரெஸ்டாரண்ட்டுக்கு அழைத்துவந்திருக்கிறார் போலும். தோசை கவுண்ட்டரில் ரெடியான இளம்பழுப்பு சுருளாய் தோசையை எடுத்துவந்து சிறுமிக்குக் கொடுத்துவிட்டு, தான் ஒரு காஃபியுடன் அமர்ந்து மொபைலைப் பார்த்துக்கொண்டிருந்தார் அப்பா. சிறுமி நல்ல பசியோடு இருந்திருக்கவேண்டும். தோசையின் முறுகலான ஓரங்களை ஒடித்து வேக வேகமாக சாம்பாரில் தொட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.  தூரத்தில் ஒரு வயசான ஜோடி பேசிக்கொண்டே உப்புமாவை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தது. ஏற்கனவே துடைக்கப்பட்டுப் பளபளத்த தரையை மாப் வைத்து மீண்டும் நிதானமாக இழுத்தவாறு ஒரு பதின்ம வயது வேலைக்காரப்பையன் அங்குமிங்கும் போய்க்கொண்டிருந்தான். தரையின் ஈரம் காயவென, கவுண்ட்டரில் மேனேஜராக உட்கார்ந்திருந்த இளைஞன் மின்விசிறிகளை ஆன் செய்திருந்தான். அலுமினியம் ப்ளேடுகளுடனான டிசைனர் சீலிங்ஃபேன்கள் வேகமாகச் சுற்ற ஆரம்பித்ததில், சற்று அதிகமாகவே குளிர் தெரிந்தது. பக்கத்தில் நின்றிருந்த பெரிசும் சிறிசுமான  இரண்டு மரங்களின் கிளைகளில் கரும்பச்சை இலைகள், காலைக் காற்றில் அசைந்தாடின. கீழே விதவிதமான டூ-வீலர்கள் நிறுத்தப்பட்டிருக்க, புத்தும்புது ஆரஞ்சு டாடா டியாகோ ரெஸ்ட்டாரண்ட்டிற்கு முன் ஒய்யாரமாகத் திரும்பி ஓரமாகப் பார்க்செய்யமுயன்றது.  நீல யுனிஃபார்ம் செக்யூரிட்டி உதவினார். காரிலிருந்து ஒரு யுவனும் யுவதியும் இறங்கி ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்து கடைசிவரிசை சீட்டுகளில்  அமர்ந்து தலையைக்கோதிக்கொண்டிருந்தனர். மரங்களைத் தாண்டி காலை ட்ராஃபிக் சூடுபிடிக்க ஆரம்பித்திருந்தது தெரிந்தது. பச்சை, நீல யானைகளாய் ஊர்ந்துகொண்டிருந்த பி.எம்.டி.சி. பஸ்களைப் பின்னுக்குத்தள்ளி பைக்குகள், ஸ்கூட்டர்கள், கார்கள் என வாகனங்கள் சீறின. ஆங்காங்கே சாலைகளின் குண்டுகுழிகளைத் தடாலடியாகக் கடந்து முன்னேறி மறைந்தன. சாலையை ஒட்டி இருந்த எலெக்ட்ரிக் கம்பத்தில் ஒரு காகம் மேலும் மழை வருமோ என ஆகாயத்தைக் கவலையோடு பார்த்தவாறிருந்தது. ‘விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத, ஸதா வேங்கடேசம் ஸ்மராமி.. ஸ்மராமி…’ – திருப்பதி பெருமாள் படத்தோடு மூலையில் குறுகலாக அமைக்கப்பட்டிருந்த கேஷ் கவுண்ட்டரிலிருந்து ஸ்தோத்திரம் மெலிதாக எழுந்து காற்றில் படர்ந்தது. காலைச் சூழல் இதமாயிருந்தது..

காஃபி முடிந்தது. கார்த்திக்தான் மௌனத்தைக் கலைத்தான். ’ஏதாவது சாப்பிட்டியாடா காலைல?’

தன் உலகத்திலிருந்து திடுக்கிட்டுத் திரும்பியவனாய் கார்த்திக்கைப் பார்த்து முறுவலித்தான் விவேக். கண்களோடு உதடுகளும் சோகத்தைத் ததும்பவைத்தன. இவன் எங்கே தின்னுருக்கப்போறான் என நினைத்தவனாய் கார்த்திக் எழுந்து கவுண்டருக்குப்போனான். கொஞ்ச நேரத்தில் இட்லி-வடை காம்பினேஷனோடு வந்தான். ஒருதட்டை விவேக் முன் தள்ளி ’சாப்பிடு!’ என்றான். விவேக் தட்டைப் பார்த்துக்கொண்டு ஏதோ சிந்தனையிலிருக்க,  ’சாப்புட்றா! ஆறிடும்..’ என்றான் கார்த்திக். விவேக் இயந்திரகதியில் இட்லியை ஸ்பூனால் அழுத்தி எடுத்து சட்னியில் தோய்த்து வாயில் போட்டுக்கொண்டு வெளியே பார்த்தான். மரக்கிளைகளுக்கிடையே ஆகாயத் திட்டு நீலமும் வெள்ளியுமாய் ப்ரகாசித்தது. .

’ஏண்டா..நீ வர்றதுக்கு முன்னாடி சொல்ல மாட்டியா? நான் ஒன்னப் பார்க்காட்டி நீ இங்கே இருக்கேங்கிறதே எனக்குத் தெரிஞ்சிருக்காதே..ஏன்டா ஃபோன் பண்ணமாட்டேங்கிற?’ கார்த்திக் கேட்டான்.

’அதான் பண்ணினேனேடா..’ என்றான் விவேக்

’அது போன வாரம். வரப்போவதாச் சொன்னே. வந்தபின்னாடி ஏன் பண்ணலே?’

’மொபைல் இருந்தாத்தானே பண்றதுக்கு?’

’என்ன! எங்கேடா போச்சு உன் மொபைல்?’

’எறங்கி ஹோட்டலில் செக்-இன் பண்ணி ரூமுக்கு வந்தபின்னாடிதான் கவனிச்சேன்..டாக்ஸிலேயா..ஃப்ளைட்டிலேயோ போயிடுத்து…’

’இன்னும் ஏண்டா இப்டியே இருக்க.. திருந்தமாட்டியா நீ?’ – அலுத்துக்கொண்டான் கார்த்திக்

’நா நானாத்தானேடா இருக்கமுடியும் !’ விவேக்கின் உதடுகளில் அந்த மெலிதான  சிரிப்பு.

இவன் சிரிப்பிலிருக்கும் சோகம்போன்ற ஒரு உணர்வு, இயலாமை, ஒரு காலங்கடந்த தன்மை.எதுவோ ஒன்று. அதனை கல்லூரிக் காலத்திலேயே கவனித்திருந்தான் கார்த்திக். ஒருவேளை அதனால்தான் இவனோடு பேச ஆரம்பித்தானோ முதலில்? அப்புறம்தான் தெரிந்துகொண்டான் – விவேக்கிடம் காலேஜின் அலட்டல் கேசுகள்,  ஸ்டூடண்ட் அசோசியேஷன்வாலாக்கள் – எவனும் நெருங்குவதில்லை. பேராசிரியர்களும் இவனிடம் ஒரு ஜாக்ரதை காண்பிப்பது கார்த்திக்குத் தெரிந்திருந்தது. மிகக்க்குறைவாகவே வார்த்தையை அவிழ்க்கும் விவேக்கிடம் ஒரு அமைதியான கம்பீரம் குடிகொண்டிருந்தது. உயரம், ஆகிருதியோடு இவனிடமிருந்த அந்த நளினம், மென்மையான மேனரிஸம் எனக் கவரப்பட்டு பேச ஆரம்பித்த கல்லூரி யுவதிகளும், தூரத்தில் நிலைக்கும் இவனுடைய பார்வையையும், இந்த உலகத்தோடு சம்பந்தப்படாத மாதிரியான ரெஸ்பான்ஸுகளையும் பார்த்து, உடன் விலகிக்கொண்டதை கார்த்திக் அவதானித்திருந்தான். ஒவ்வொருவனும் நெருங்கத் துடிதுடித்த, கல்லூரியின் ஜிலுஜிலுவான ஸ்வப்னாவும் இவனால் கவரப்பட்டாள். நெருங்கப் பார்த்தாள்தான். இடம் கொடுத்தால்தானே. ஆகாசம் பார்ப்பவனை அழகி என்ன செய்துவிடமுடியும்?  நான்கு வருடமும் விவேக்கிற்கு நண்பன், பேசத் தகுந்தவன் என்றால்  கார்த்திக் மட்டும்தான். மரத்தடி, டீக்கடை, பார்க் என நேரம் கிடைத்தபோதெல்லாம் உட்கார்ந்து பேசினார்கள். வெளியே போவார்கள். வருவார்கள். கார்த்திக்கின் கொஞ்சம் கலகல சுபாவம் அவனுக்கு வேறுவித நண்பர்களையும், நண்பிகளையும் உருவாக்கியிருந்தது. அது ஒரு சராசரி வட்டம். ஆனால் ஏனோ கார்த்திக்கின் மனதில் விவேக் தனியாக வீற்றிருந்தான். விவேக்கைப்பற்றி  அசாதாரணமாகக் கவலைப்படுவதாக கார்த்திக்கின் மனம் அவனுக்கு அப்போதே சொல்லியது.

இருவரும் என்ஜினீயரிங் முடித்தனர். கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்வான விவேக் ஹைதராபாதில் ஒரு எம்.என்.சி.யில் சேர்ந்தான். அடுத்த மூன்று மாதங்களில் கார்த்திக்கிற்கு பெங்களூரில் கிடைத்தது வேலை. இதுதான் சாக்கென்று அவன் அப்பா ஒரு இரண்டு-ரூம் ஃப்ளாட்டை வாங்கிக்கொண்டு பிள்ளையோடு இருக்க பெங்களூருக்கே குடிபெயர்ந்துவிட்டார். அம்மாவுக்கு பெங்களூர் அவ்வளவு இஷ்டமில்லை. சென்னையில், மாம்பலத்திலிருந்த புராதன வீட்டை, அதுவரை வாடகை வீட்டில் இருந்துகொண்டிருந்த கார்த்திக்கின்  அக்கா, மாப்பிள்ளை வசிக்க என விட்டுவிட்டு பெங்களூர்வாசிகளாக ஆகிவிட்டிருந்தார்கள் அவர்கள்.

விவேக்கின் கதையே தனி. பரம்பரைப் பணக்காரர்கள் பெற்றோர்கள். சென்னையின் பெசண்ட் நகரில் வாசம். ஒரே பிள்ளை. அவன் வேலை பார்த்துத்தான் ஆகவேண்டும் என்கிற அவசியம் இல்லை. கேம்பஸ்இண்டர்வியூவின்போது கார்த்திக்கிடம் விவேக் சொன்னான்: ’கிடைத்தால் வேலை பார்ப்பேன். சில வருடங்களாவது. பிற்பாடு எப்படிப் போகுமோ பார்ப்போம்’. ஹைதராபாதில் இரண்டுவருஷம் ஓட்டிவிட்டு, புது வேலை, ட்ரெயினிங் என பெங்களூர் வந்துவிட்டான் இப்போது.

தன் பைக்கில் சுற்றிக்கொண்டிருந்த கார்த்திக், ஞாயிற்றுக்கிழமையிலும் குறையாத பெங்களூர்  ட்ராஃபிக் ஜாமைத் தவிர்க்க அந்த சர்வீஸ் ரோடை எடுக்கப்போய், விவேக் சாலையோரமாக நடந்து போய்க்கொண்டிருப்பதைப் பார்த்து ஒருகணம் திடுக்கிட்டான். பைக்கை அவன் முன்னால் நிறுத்தியும் விவேக்கிற்கு சில நொடிகள் பிடித்தன எதிரே கார்த்திக் எனப் புரிந்துகொள்ள. ‘என்னடாது? எப்படா வந்தே!’ என்ற கார்த்திக்கிற்கு பதில் சொல்லாமல் மெல்ல சிரிக்க ஆரம்பித்தவனைப் பின்னால் உட்காரவைத்துக் கூட்டிவந்திருக்கிறான் ரெஸ்ட்டாரண்டுக்கு.

இட்லி-வடை தேங்காய்ச் சட்னி நன்றாக இருந்தது. பருப்பின் வாசனை தெரியாத, லேசாகத் திதிக்கும் பெங்களூர் சாம்பார் கார்த்திக்கு அவ்வளவாகப் பிடித்தமில்லை. காரப் பிரியனான விவேக் அதை ரசிக்க சான்ஸே இல்லை. ‘இன்னொரு ரவுண்டு காஃபி அடிப்போம்’ என்றான் கார்த்திக். விவேக் மண்டையாட்ட, வாங்கிவந்தான்.

டிஃபன் –காஃபி முடிந்தும் சில நிமிடங்கள் நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர். கார்த்திக் சொன்னான். ’மணி ஒம்பதரைதான் ஆறது. உன்ன ஹோட்டலில் இப்ப விட்டுட்டு, பனிரெண்டரை மணிப்போல வந்து பிக்-அப் பண்றேன். எங்க வீட்டில் லஞ்ச். ராத்திரி சாப்பாடும் முடிந்ததும் ஹோட்டல்ல கொண்டுவந்து தள்ளிடறேன்.. சரியா?

’கார்த்திக் ! என்னடா இதெல்லாம்? ஒங்க அம்மாவ வேற சிரமப்படுத்திண்டு? இன்னொரு நாளைக்கு..’ என்று ஆரம்பித்த விவேக்கை அடக்கினான் அவனது நண்பன்: ‘சொல்றதைக் கேளுடா. நீ வர்ற! ட்வெல்-தர்ட்டிக்கு ரெடியா இரு’ என்றான்.

இருவரும் எழுந்து வெளியே வந்தார்கள். ஹோட்டலில் அவனை விட்டுவிட்டு வீடு திரும்பிய கார்த்திக் அம்மாவை கிட்ச்சனில் சந்தித்தான்

’அம்மா! லஞ்சுக்கு என் ஃப்ரெண்ட் வர்றான். ஏதாவது பண்ணு!’

’ஃப்ரெண்டா? யார்றாது? நீ சொல்லவேயில்ல. லஞ்ச்சுன்னா முன்னாடியே சொல்லவேண்டாம்!’

’காலேஜ்மேட். நீ பாத்திருக்கே… மாம்பலத்தில நம்ம வீட்டுக்கு ரெண்டொரு தடவை வந்திருக்கான்.விவேக்!’

’ஓ! உயரமா இருப்பானே..மாநிறமா? அவன் இங்கேயா இருக்கான்?’

’இப்பதான் ஜாயின் பண்ணியிருக்கான். முன்னாடி ஹைதராபாதிலே இருந்தான்.’

’கூட்டுண்டு வா. காரம், உப்பெல்லாம் நார்மல்தானேடா?’

’எல்லாம் நார்மல்தான். காரம் கொஞ்சம் தூக்கலா இருந்தாலும் அவனுக்குப் பிடிக்கும். அப்பா எங்கே?’

’வெளில போயிருக்கார். நாந்தான் கோவிலுக்குப் பக்கத்து சந்துல ஃப்ரெஷ்ஷா கீரை போட்டு விப்பான். அதுவும், கொஞ்சம் கொத்தமல்லியும் வாங்கிண்டு வாங்கோன்னு அனுப்பிச்சேன்.’

’ஹ்ம்..’

மதியம் பன்னிரண்டே முக்காலுக்கு ஹோட்டல் ரிசப்ஷனில் கார்த்திக் நுழைந்தபோது, லவுஞ்சில் உட்கார்ந்திருந்த விவேக், பக்கவாட்டு கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே பச்சைப்பசேல் என்றிருந்த செடிகொடிகளைப் பார்த்தவாறு  அமர்ந்திருந்தான். ’ஏய்..விவேக் கிளம்புடா !’ என்றான் கார்த்திக். இருவரும் கார்த்திக் வீட்டுக்கு வருகையில் மணி ஒன்னேகாலாகிவிட்டிருந்தது. அடுக்குமாடிக் கட்டிடத்தின் வளாகத்தினுள்ளே பார்க் செய்துவிட்டு விவேக்குடன் வீட்டினுள் நுழைகையில் ஸ்ரீனிவாசன் – கார்த்திக்கின் அப்பா வாசலில் எதிர்ப்பட்டார்.

’அப்பா.. விவேக்!’ என்றான் கார்த்திக்.

விவேக் ’நமஸ்காரம் மாமா..’ என்று கைகூப்பிக் குனிய, ’வாப்பா.. உள்ளே வா! எப்படி இருக்கே? நீயும் இங்க வந்துட்டது இவனுக்குத் தோதா போச்சு..அரட்டைக்கு, ஊர்சுத்த கம்பெனி வேணுமில்லையா!’ என்றார். விவேக் சிரித்துக்கொண்டே ஹாலினுள் நுழைய, எதிர்ப்பட்ட கார்த்திக்கின் அம்மாவுக்கு நமஸ்காரம் சொன்னான். ’வாப்பா! உட்கார்.. தீர்த்தம் சாப்ட்றயா?’ என்றாள் அம்மா.

இவன் ஏதும் சொல்லுமுன் எடுத்துவந்து கொடுத்தாள். ’ஊர்ல அப்பா, அம்மா சௌக்யமாப்பா?  ஹைதராபாத்ல தனியாவா இருந்தே?’

’சௌக்யம் மாமி..’ என்றான் மெதுவாக. ’ம்..பழகிடுத்து.’ அம்மாவும் அப்பாவும் கிட்சன் பக்கம் போனவுடன், தன் ரூமுக்கு அழைத்துப்போனான் கார்த்திக். அவனுடைய புஸ்தகங்களை விவேக் பார்த்துக்கொண்டிருக்கையில் அப்பா வந்து சொன்னார்: ‘வாங்கப்பா..சாப்டலாம்..’

சாப்பாடு நன்றாக இருந்தது. கீரை புடிச்சிருக்கா, காரட் கறிமீது இன்னும் கொஞ்சம் போடட்டுமா எனக் கேட்டுப் போட்டாள் அம்மா. கேரட்-உருளைக்கிழங்கு கறியை கொஞ்சம் விறுவிறுப்பாகப் பண்ணியிருந்தாள். ’ரெண்டும் நன்னாயிருக்கு!’ என்றான் விவேக். கார்த்திக் திருப்தியானான். ரசத்துக்கு சாதம் போட அம்மா வந்தபோது, ‘அம்மா..அப்டியே சரிச்சிப்பிடாதே. கொஞ்சமாத்தான் போட்டுப்பான்,’ என்றான் கார்த்திக். ‘நீ தட்டப் பாத்து சாப்ட்றா!’..என்றாள் அம்மா சிரித்துக்கொண்டே. விவேக் போதும் என்று கை காண்பிக்க அரைக்கரண்டியைத் தட்டில் தள்ளினாள்;  ’கொஞ்சம் போட்டுக்கோ..சாதம் இல்லாம ரசத்தை எதுல விடறது!’ என்றாள். மோர்சாதத்துக்கு ஊறுகாயுடன், கொஞ்சம் பச்சைமிளகாய்த் தொக்கும் போட்டாள் அம்மா. விவேக் தொக்கை ரசித்து சாப்பிடுவதைக் கவனித்தாள். சாப்பாடு முடிந்து கை அலம்பியபின், அப்பா ஹாலில் நின்று கொஞ்சம் பேசிவிட்டுத் தன் அறைக்கு போய்விட்டார்.

வாசலுக்கு வந்து ப்ளாஸ்டிக் நாற்காலிகளில் இருவரும் உட்கார்ந்தனர்.  சற்றுத் தள்ளி ஒரு இளம் பூவரசமரம் அடர்த்தியாய் உயர்ந்திருந்தது. அருகில் வரிசையாய் நின்ற செடிகளில் நெருக்கமாய் மஞ்சள் பூக்கள். மஞ்சளும், ஆரஞ்சுமாக சின்ன சின்ன வண்ணத்துப்பூச்சிகள் செடிகொடிகளின் மேலே வட்டமடித்துக் கொண்டிருந்தன. அபார்ட்மெண்ட்களின் பால்கனிகளில் சாம்பல்நிறப் புறாக்கள் இங்கும் அங்கும் பறந்தவாறிருந்தன. வானம் மேகமூட்டமாக ஆகியிருந்தது. கொஞ்ச நேரத்தில் கார்த்திக்கின் அப்பா ‘இதோ வர்றேன்!’ என்று சொல்லியவாறு வெளியே சென்றார். அவர் போவதைப் பார்த்திருந்தான் விவேக். ’ஸ்கூல் பஸ் வர்றநேரம். மஞ்சுவைக் கூட்டிண்டு வரப்போறார்’ என்றான் கார்த்திக். விவேக்கிற்குப் புரியவில்லை எனத் தெரிந்தவனாய் ‘என் அக்கா பொண்ணு. இங்கேதான் எங்களோட இருக்கா. கேஜி-ல படிக்கிறா.’ என்றான். ‘ஓ!’ என்றான் விவேக்.

சில நிமிஷங்களில் தாத்தாவுடன் பேசிக்கொண்டு வரும் பேத்தியின் குரல் கேட்டது. தாத்தா சொல்லியிருப்பார் போலிருக்கிறது. ‘யாரு? மாமா ஃப்ரெண்டா? எப்ப வந்தா,’ என சுவாரஸ்யமாகக் கேட்டவாறு வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தாள். அருகில் வந்தவுடன் சற்றுத் தள்ளி நின்று ஆச்சரியமாக விவேக்கைப் பார்த்தாள். தாத்தா ’ஹலோ சொல்லு’ என்றார். கொஞ்சம் தயங்கி ‘ஹாய்!’ என்றாள் மிருதுவாக. விவேக் ‘ஹாய்’ என்று மெல்லச் சிரித்தவனாய் அவளை நோக்கிக் கையை நீட்டினான். கிட்ட நெருங்கியவள், அவனைப் பார்த்துக்கொண்டே கையில் வேகமாகத் தட்டிவிட்டு ‘க்ளுக்’ என்று சிரித்தவாறு உள்ளே ஓடிப்போனாள். கிட்ச்சனில் பாட்டியிடம்போய், ’வாசல்ல ஒரு புது மாமா..’ என்றாள் சிரிப்பு பொங்க. ‘பாத்தாச்சோல்லியோ.. சேஞ்ச் பண்ணிண்டு, கை அலம்பிண்டு வா சாப்பிட. அப்பறமா பேசலாம்..’ என்றாள் மஞ்சுவின் பாட்டி. ரூமுக்குள் சென்று உடைமாற்றினாள் மஞ்சு. கைஅலம்பி சாப்பிட ஆரம்பித்தவள் ‘இந்த மாமா இன்னிக்கி இங்கதான இருப்பார்?’ என்றாள் குரலை சன்னமாக்கிக்கொண்டு.

’தெரியாது’ என்றாள் பாட்டி.

’ஏன், நீ கேக்கலயா?’

’வாயாடி! சாப்பிடும்போது என்ன பேச்சு? கீரை, கறிமீதல்லாம்  சேத்துண்டு சாப்பிடு. தட்டுல மிச்சம் வைக்கக்கூடாது’ என்றாள் பேத்தியிடம் கண்டிப்புடன்.

ஒருவழியாக சாப்பிட்டு நகர்ந்த மஞ்சு, ’ஹோம் ஒர்க் இருக்கு!’ என்று நோட்புக்குடன் உட்கார்ந்து சீக்கிரமே முடித்தாள்.  பாட்டியிடம் வந்து  ‘பாட்டி நா வெளயாடப் போறேன். மாமா இங்கதானா இருப்பா நா வர்ற வரைக்கும் ?’ என்றாள் சின்னமுகத்தை சீரியஸாகவைத்துக்கொண்டு. மஞ்சுவின் பாட்டிக்கு சிரிப்புதான் வந்தது. ’இங்கதாண்டி இருப்பா.  போய் வெளயாடிட்டு வா..ஓடாதே, மெதுவா போ!’ என்றாள்.

மஞ்சு விளையாடித் திரும்புகையில் கார்த்திக் விவேக்குடன் வெளியே போயிருந்தான். உள்ளே நுழைந்ததும் வீடு நிசப்தமாயிருப்பதை உணர்ந்து திடுக்கிட்டாள் குழந்தை. ரூமில் எட்டிப் பார்த்தால் மாமாக்களைக் காணவில்லை. அவளோட தாத்தா தன் ரூமில் எதையோ குடைந்துகொண்டிருந்தார்.  ‘தாத்தா! ரெண்டு மாமாவும்   எங்க போயிட்டா?’ என்றாள் பதற்றமாக.  தாத்தா மூக்குக்கண்ணாடியை இறக்கிவிட்டுக்கொண்டு மஞ்சுவைப் பார்த்தார். ‘தெரியல. பாட்டியக் கேளு..’ ’ஹ்ம்….ஒனக்கு ஒன்னுந்தெரியாது!’ என்று திரும்பிய மஞ்சு, பாட்டி கூடத்திற்கு வருவதைப் பார்த்ததும் ‘ இப்போ ரெண்டு பேரயும் காணும், பாத்தயா? நீ சொன்னயே இங்கதான் இருப்பான்னு?’ என்றாள் குற்றம் சாட்டுவதைப்போல். பாட்டிக்குப் பேத்தியைப் பார்க்கப் பாவமாயிருந்தது. ‘இங்கதாண்டி எங்கயோ போயிருக்கா. வந்துடுவா. கவலப்படாதே.’ என்றாள். பாட்டியை நம்பலாமா என்பதுபோல் பார்த்துவிட்டு தன் ரூமுக்குள் போனாள் குழந்தை. ஒரு மணி நேரத்திற்குப்பின் கார்த்திக்கின் பைக் சத்தம் கேட்டதும் பரபரப்பானாள். கார்த்திக்குடன் விவேக்கும் இறங்கி உள்ளே வருகையில், எதிர்வந்து ‘நீங்க போயிட்டீங்களோன்னு நெனச்சேன்..’ என்றாள் ஆவலாய் விவேக்கைப் பார்த்து. ஒரு சின்ன இன்ப அதிர்ச்சிக்குள்ளானான் விவேக். தன் வருகை இந்தச் சிறுமிக்கு இவ்வளவு சந்தோஷம் தருகிறதா என நினைத்தவன், ’அப்பிடியா!’ என்று சிரித்து அவளது பசுங்கன்னத்தை செல்லமாகத் தட்டிவிட்டு கார்த்திக்கின் ரூமுக்குள் போனான்.

 

இரவுச் சாப்பாட்டின்போதும் தன்னைக் குறுகுறுவென்று மஞ்சு பார்த்துக்கொண்டிருப்பதை ஓரிரு தடவை விவேக் கவனித்தான். அவனுக்குள் ஒரு முறுவல் நிகழ்ந்தது. சாப்பிட்டபின் கார்த்திக்கும் விவேக்கும் அறையில் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வெளியே உட்கார்ந்திருந்த அப்பாவோடு கார்த்திக் ஏதோ பேசுவதற்காக வெளியேபோக, அந்தப்பக்கம் வந்த மஞ்சு விவேக்கைப் பார்த்தவாறே நின்றாள். வெட்கமும் சிரிப்புமாய் குழந்தையின் முகம் மலர்வதை கவனித்தான் விவேக். ‘இங்க வா! என்ன படிக்கிறே நீ’ என்று அருகில் வந்தவளின் தலையை இதமாக வருடினான். ’யூகேஜி.. அடுத்த வருஷம் நா ஃபர்ஸ்ட்டுக்குப் போயிடுவேனே!’ சிரித்தாள் குழந்தை கண்களைப் பெரிதாக்கிக்கொண்டே. ’ஓ, நைஸ்!’ என்று புன்னகைத்தான் விவேக். அதற்குள் கார்த்திக் திரும்ப அங்கிருந்து குதித்தோடினாள் மஞ்சு.

கொஞ்சநேரத்தில் அம்மாவிடமும் அப்பாவிடமும் வந்தான் கார்த்திக். ‘விவேக்க ஹோட்டல்ல விட்டுட்டு வந்திடறேன்’ என்று தன் அறைக்குப் போனான். கார்த்திக்கின் அறைக்கு வந்த அப்பா அங்கு உட்கார்ந்திருந்த விவேக்கிடம் ’அடிக்கடி வந்துண்ட்ருப்பா!’  என்றார். விவேக் எழுந்து நின்று தலையாட்டினான். அம்மாவும் அங்கே வர, பாட்டியின் புடவையைப் பிடித்துக்கொண்டே வந்து நின்றாள் மஞ்சு. அம்மாவிடம் சொல்லிக்கொண்டபின் விவேக் குனிந்து குழந்தையைப் ப்ரியத்தோடு நோக்கினான். மஞ்சு அவனைத் துருதுருவெனப் பார்த்தாள். ’நீ அடுத்த சண்டே எங்க வீட்டுக்கு வர்றியா?’ என்று அவள் கேட்க, அம்மா சரிப்படுத்தினாள்: ’நீ-ன்னு சொல்லப்படாது. நீங்கன்னு சொல்லணும்’.

’சரி பாட்டி!’ என்றவள்,  ‘நீங்க அடுத்த சண்டே வர்றியா?’ என்றாள் குழந்தை அவனருகில் போய் ஆசையாய் நின்றுகொண்டு.

நெகிழ்ந்தவனாய் விவேக் அவளது கன்னங்களைத் தன் கைகளில் மெல்ல ஏந்தினான். ‘ட்ரை பண்றேன் மா..’ என்றான் தயக்கத்துடன் சிறுமியின் முகத்தைப் பார்த்துக்கொண்டே,.

‘ட்ரை-லாம் கெடயாது மாமா! ரியல்லா இங்க வரணும்!’ தலையை சாய்த்து, அவனை  உற்றுப் பார்த்து, குட்டி ஆட்காட்டிவிரலை ஆட்டினாள்.

பாட்டி சிரிக்க, குழந்தையை ஏமாற்ற விரும்பாதவனாக, ‘ஆகட்டும்.. வர்றேன் !’ என்றான் விவேக். சிறுமியின் மென்கூந்தலைக் கோதிவிட்டதில், அவளது காதை வருடியதில் அவன் மனம் லேசானது.

சந்தோஷம் தங்கநிறமெடுத்து மஞ்சுவின் முகமாய் மின்னியதைக் கவனித்தான்.

ஹோட்டலுக்குத் திரும்பிய விவேக், அன்றிரவு தன் படுக்கையில் தூக்கமில்லாது கிடந்தான். ஏதேதோ நினைவுகள். பின் மஞ்சுவின் நினைவு வந்தது. சின்னச் சித்திரமாய் மஞ்சள் முகம், கருவண்டுக் கண்கள், கன்ன மினுமினுப்புகள், சிறு கூந்தற் சுருள்கள்.. குட்டி விரல்கள், குதித்துக்கொண்டோ மெல்ல எழும்பிக்கொண்டோ இருக்கும் பிஞ்சுக்கால்கள். அவனது உதடுகள் மெல்ல மலர்ந்தன. மனவெளியில் மெலிதான தென்றல் சுகமாய் வீசுவதை உணர்ந்தான். ட்ரையெல்லாம் கெடயாது..ரியல்லா வரணும்.. Kids are real ! என்று உதிர்த்தன அவனது உதடுகள். குழந்தைகள் மட்டும்தான் இவ்வுலகில் நிஜம். அதுகள் மட்டும்தான். கண்களை மூடித் தூங்க எத்தனித்தான். கொஞ்சநேரம் கழித்து வந்த அரைகுறை நித்திரையினூடே, கனவின் மாயவெளி விரிந்தது. சின்னச் சின்னதாய் மஞ்சுவின் பிம்பம் பரவியது. குழந்தையின் குமிழ்ச்சிரிப்பும் வார்த்தைகளும் அலையலையாய் எழுந்து சிலிர்ப்பூட்டின. அவள்தானே என்னை அழைத்தவள்? அவளைப் பார்க்க ஞாயிறன்று அவர்கள் வீட்டுக்குப் போகவேண்டும் என அவன் மனம் சொல்லிக்கொண்டது. கனவு கலைய, கண்கள் நொடியில் ஈரமாயின. கண்ணீர்த்துளியொன்று தன் இடது பொட்டில் மெல்லச் சரிவதை குறுகுறுப்பாய் உணர்ந்தான் விவேக்.

2 Replies to “நிஜமாக ஒரு உலகம்”

  1. கதை நன்றாக இருக்கிறது. விவேக்கின் மனம் ஏதோ ஒரு சிக்கலில் இருக்கிறதோ? அதாவது யதார்த்த உலகிற்கு அவனாம் வர இயலாமல் என்று? ஆனால் ஒரு சிறு குழந்தை அவனது மனதை நெகிழ்த்துகிறது குழந்தைகள் உலகம் தான் நிஜம் பேசும் உலகம் என்பதையும் மற்றும் கொஞ்சம் இறுக்கமான எப்போதும் மூடியிருக்கும் மொட்டைப் போன்ற அவனது மனது குழந்தையின் அன்பில் பூவாய் விரியத் தொடங்குகிறது ஆனால் பூவைப் போன்று அது தற்காலிக மலர்ச்சியாக இல்லாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும் மனது சொல்கிறது.. அருமை…

    ஆனால் இப்படி விவேக்கைப் போன்றவர்கள் இவ்வுலகை எதிர்கொள்ள ரொம்பவும் கஷ்டப்படுவார்கள் அவனுக்கு ஏதோ உளவியல் ரீத்யாக ஏதோ ஒன்று அவனைப் பாதித்துள்ளதுபோல கதையில் தெரிகிறது. ஏதோ ஒன்று புரியுது ஏதோ ஒன்று புரியலை….மற்றபடி கதை நடை நன்றாக இருக்கிறது..

    கீதா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.