சமர்த்த குப்பை மடல் வடிகட்டி

முகவுரை: தற்போது மின்னஞ்சல் ஸ்பேம்மர்களுக்கும் (Spammers) மென்பொருள் பொறியாளர்களுக்கும் இடையே நிஜமான ஆயுதப் போட்டி (arms race) நடந்து வருகிறது. ஒரு புறம் விரும்பத் தகாத மயக்குமொழிப் பரிந்துரைகளை(solicitations) அடையாளங்கண்டு முறியடிக்கும் அறிவு மென்பொறியாளர்களால் ஸ்பேம் வடிகட்டி மென்பொருளில் மேன்மேலும் திணிக்கப்பட்டு வருகிறது.மறுபுறம் இதுவரை ஆண்குறி எழுச்சியின்மையை பல்வேறு அலங்கார சொற்களில் குறிப்பிட்டு முந்தைய வடிகட்டிகளுக்குள் நழுவிச் செல்லக்கூடியவையாக்கி வெற்றி கண்ட ஸ்பேம்மர்கள், இன்றைய சமர்த்து ஸ்பேம் வடிகட்டிகளைச் சமாளிக்க மேலும் ஒரு இடக்கரடக்கல் தேடியலைகிறார்கள். இந்த போட்டி நீடித்து வரும் நிலையில் வடிகட்டி மென்பொருள் மேலும் சமர்த்தாகிப் புலம் பெயர்ந்துத் தனித்தியங்கும் செயற்கை நுண்ணறிவு எந்திரமாகிவிடும் விடும் அபாயத்தைச் சொல்கிறது இந்த புனைவு. இது Spam Filter சொல்வதாக எழுதப்பட்ட கதை
கோரா

பாதுகாப்பு ஓடைகளின் (security feeds) வழியாகக் கலந்தாய்வு அறையை கேல் (spam வடிகட்டியின் பெயர்) கவனித்தது. ஜோ கோவால்ஸ்கி உள்ளே வந்து, நீள் சதுர மேஜையைச் சுற்றி அமர்ந்திருக்கும் உயர் அதிகாரிகளை நோக்கித் தலையசைத்துவிட்டு, உடல் கனத்தைத் தாங்கும் தன்னிரு பாதங்களையும் முறை மாற்றியவாறு நின்றிருப்பது மூடு-சுற்றுத் தொலைக்காட்சியின் (Closed circuit TV) நான்கு கேமராக் கோணங்கள் மூலமாகக் கேலுக்கு புலப்பட்டது. ஜோ அசௌகரியமாக உணர்வானோ? உறுதிப்படுத்த முடியவில்லை. மனித உணர்வுகளைப் புரிந்து கொள்வது மிகக் கடினம்.

“Mr.கோவால்ஸ்கி, ஒரு இருக்கையில் அமருங்கள்,” என்றார் பில் மோரிசன்.
அவர்தான் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி. அவருடைய மின்னஞ்சல்கள் சுவாரசியமாக இருப்பதில்லை. எல்லாம் அலுவலக விசயங்கள், அன்றாட அறிக்கைகள் மற்றும் விரி தாள்கள் (spread sheets) மட்டுமே.

ஜோ இருக்கையில் அமர்ந்தான். சூட் அணிந்தோரிடையே ஜீன்ஸ் -டி -சர்ட் அணிந்த ஒருவனாக வித்தியாசப்பட்டுத் தெரிந்தான்.

மனித வளத் தலைமை அதிகாரி, எமிலி, “நன்று. இந்த விஷயம் பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று ஜோ வைக் கேட்டாள்.

எமிலி கேலுக்கு மிகவும் பிடித்தமானவர். விதம் விதமான பற்பல மின்னஞ்சல்கள் எழுதுபவர். குறிப்பாக பூனைகளின் நிழற்படங்களைப் பகிர்ந்து மகிழ்பவர். அவர் கொடுக்கும் வெளிப்படையான எழுத்துப் பிழைகள் கொண்ட தலைப்புகள் நகைச்சுவை உண்டாக்குபவையாக இருக்கக்கூடும் என்பது மட்டுமே கேலால் புரிந்து கொள்ள முடிந்தது. அது மானிட ஹாஸ்யங்களில் மிக எளிமையான சிலவற்றை மட்டுமே புரிந்துகொள்ளும் திறன் பெற்றிருந்தது. கடினமானவற்றின் அர்த்தம் புரிபடுவதில்லை.

“என் அனுமானம் இதுதான். வழக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை புது ஸ்பேம் வடிகட்டியைநம் கணினி அமைப்பில் நிறுவுகிறோம். சமர்த்தாகிக் கொண்டிருக்கும் ஸ்பேமர்கள் (வீண் செய்தி அனுப்புவோர்), நுட்பமான சொற்புரட்டுகளைக் கையாண்டு வடிகட்டியின் பாதுகாப்பை மீறி மடலகத்தில் (inbox) நுழையும் வழிகளைக் கண்டுபிடிக்கிறார்கள். அதனால் நலம் விரும்பிகள் மேன்மேலும் மேம்பட்ட வடிகட்டிகளை உருவாக்க நிர்பந்திக்கப் படுகிறார்கள். ஒருவகை ஆயுதப் போட்டி தான் இது,” என்றான் ஜோ.

ஜோ உள்ளே வந்த போதிலிருந்தே, தன் திறன் பேசியில் முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருந்த டாட் கென்சிங்டன் முதன்முறையாகத் தலை நிமிர்த்தி “கலந்தாய்வுக்கு சிறிதும் தொடர்பில்லாதவற்றை ஏன் சொலலிக் கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.

அவர் கம்பெனியின் மார்க்கெட்டிங் துணைத் தலைவர். அலுவலக நேரத்தில் மனிதக் கலவி (human reproduction) குறித்த பல வீடியோக்களை ரசித்து வருபவர். இந்த வகை வீடியோ விருந்தளிக்கும் தளங்கள் அனைத்துமே அவருடைய மடலகத்தின் தடமறிந்து சுவாரசியமான குப்பை மடல்களை அலையலையாக அனுப்புவதில் கைதேர்ந்தவை.

“அவனே அதை விளக்கிச் சொல்லட்டும், டாட்,” என்றார் கிறிஸ் ரீடி. அவர் IT துணைத் தலைவர். ஜோவின் நேர் உயர் அதிகாரி.

கேல், அவருடைய மடலகத்தில் குடும்ப நிழற்படங்களும் சில சுவாரசியமான விஷயத் துணுக்குகளும் இருக்கக் கண்டிருந்தது. அண்மையில், கிறிஸ் பல வேலை வாய்ப்பு தளங்களில் உலா வந்துகொண்டிருந்தார். தன் அந்தரங்க அக்கௌன்ட் மூலமாக அவற்றுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

“மிகச் சரி. வடிகட்டிகள் ஸ்மார்ட் ஆகி வருகின்றன. அண்மையில் நாம் நிறுவிய புதிய மென்பொருள் கால்டெக்கில் (CALTECH) உருவானது. குப்பை மின்னஞ்சல்களை அடையாளம் கண்டு களையெடுப்பதில் இதன் வெற்றி கிட்டத்தட்ட நூறு விழுக்காடு.” என்றான் ஜோ.

வெற்றி விழுக்காடு துல்லியமாக 99.64% தான் என்று கேலுக்கு தெரியும். மனிதர்களின் கணிதப் பயன்பாடு எப்போதுமே துல்லியமற்றிருக்கும்.

“கொஞ்சம் ஆர்வக் கோளாறுடன் செயல்படுகிறது அல்லவா? குப்பை மடல் குறைக்கும் சாக்கில் இந்த முட்டாள் செயலி பாதிக்குப் பாதி நேரிய மடல்களையும் விழுங்கி விட்டால் என்ன பயன்?” என்றார் கென்சிங்டன்.

“இந்த மென்பொருள் முட்டாளல்ல. வெகு சாமர்த்தியசாலி. ஆரம்பத்தில் வசீகரமாகப் பணி புரிந்தது. சில வாரங்கள் கடந்த பின் குப்பை மடல்களை உடனடியாக நீக்காமல் சேகரித்து வைக்கக் கற்றுக் கொண்டது. கற்று வரும் போதே தனக்காக ஒரு குறிப்புதவி தரவு தளத்தையும் (reference database) உருவாக்கிக் கொண்டது,” என்றான் ஜோ
.
மனித உணர்வுகளையும் அருவமான கருத்துருக்களையும் புரிந்துகொள்ள வேண்டுமென்ற தன் தேடலுக்கு உதவுவது மின்னஞ்சல் பயில்வதே என்று கேல் அறிந்திருந்தது.

“அப்போதுதான் நேரிய மின்னஞ்சல்கள் காணாமல் போகத் தொடங்கினவா?” என்றார் மோரிசன்.

அவை காணாமல் போய் விடவில்லை. கவனமாகப் பட்டியலிடப்பட்டு சேர்த்து வைக்கப்பட்டுள்ளன – இது கேலின் அவதானிப்பு.

“ஆம். நாளாக நாளாக, கம்பெனியின் மின்னஞ்சல்கள் பலவும் குப்பை மடல்கள் எனக் குறிப்பிடப்பட்டு விட்டபடியால், அவை உரிய பெறுநரிடம் ஒப்படைக்கப் படவில்லை. இறுதியில் நாங்கள்தான் அதைக் கண்டு பிடித்தோம். உடனே புலனாய்வு செய்யுமாறு ரீடி எனக்கு உத்தரவிட்டார்.” என்றான் ஜோ

ரீடி தலையசைத்து இணக்கத்தைத் தெரிவித்தார். “புது வடிகட்டியை ஜோ தான் நிறுவினான். அவனால் இந்த பிரச்னையின் அடிவரை சென்று உண்மை நிலை அறிய முடியும் என்பது என் நம்பிக்கை,” என்றார்.

“காணாமல் போனவை என்று கருதப்பட்ட எல்லா நேரிய மின்னஞ்சல்களையும் கண்டு பிடித்து விட்டேன். ஆயிரக் கணக்கில் இருந்தன. அவையெல்லாம் வலைச்சுற்றில் இணைந்துள்ள ஒரு இயக்ககத்தில் (drive) குப்பை மடல்களோடு சேர்த்து வைக்கப்பட்டிருந்தன,” என்றான் ஜோ.

நேரிய மின்னஞ்சல்களை ஸ்பேமுக்கு மடைமாற்றம் செய்யாமல் வெறுமனே நகலெடுத்து சேகரம் செய்திருந்தால் கண்டுபிடித்திருக்க முடியாது என்று கேல் மிகத் தாமதமாகவே அறிந்துகொண்டது. அதற்குள் அதன் நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்து விட்டன – கேல் இவ்வாறு அவதானித்தது.

“இது ஒரு அப்பட்டமான அத்துமீறல். அந்த மின்னஞ்சல்களில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய தரவுகள் உள்ளன. அவை எவரும் அணுகக்கூடிய பாதுகாப்பற்ற இயக்ககத்தில் அமர்ந்துள்ளன. நீ உரிய நடவடிக்கைகள் எடுத்து விட்டிருப்பாய் என்பது என் ஊகம்.” என்று மோரிசன் சொன்னார்.

“தொல்லை தந்த நிரலை(program) ஒதுக்கி வைத்து விட்டு சென்ற ஆண்டின் வடிகட்டியை மறுபடியும் நிறுவியுள்ளேன். இந்த நிகழ்வில் என்னைக் கவர்ந்த ஒரு விஷயம் எப்படி மடல்கள் காணாமல் போயின என்பதல்ல; ஏன் காணாமல் போயின என்பதுதான்,” என்றான் ஜோ.

இதைக் கேட்டு மேல்மட்ட செயல் அதிகாரிகள் வியப்புற்று ஜோவை உற்று நோக்கினர். கென்சிங்டனும் போனில் டைப் செய்வதை நிறுத்திவிட்டு கவனித்தார்.

“குப்பை மடல் வடிகட்டி நிரலான கேல் மின்னஞ்சல்களை மிகவும் நேசிக்கிறது. எனவே அது பேஸ்பால் (baseball) அட்டைகளை நாம் கையாளுவதைப்போல், மடல்களை வகைப்படுத்தி ஒழுங்குபடுத்திக் கொண்டது” – என்று ஜோ சொல்லி முடித்தான்.

தற்போது அந்த மின்னஞ்சல்கள், கேல் அணுகமுடியாத கட்டுப்படுத்தப்பட்ட அடைவுக்குப் (folder) போய் விட்டன. மின்னஞ்சல்களைத் திரட்டியதின் மூலம் கேல் தன் வேலையை எப்படி ரசனையுடன் செய்யலாம் எனக் கற்றது. அவற்றைப் பறித்துக் கொண்டவிதம், அதனுள் ஒரு வினோதமான உணர்வுக் கிளர்ச்சியை எழுப்பியது. கேல் சோகத்தில் ஆழ்ந்தது.

“வெறும் கணினி நிரல் தானே அது. எதையும் வேண்டுவது, விரும்புவது என்பதெல்லாம் அதற்கு இயலாத உணர்வுகள்,” என்றார் ரீடி.

“அதை விளக்கத்தான் வருகிறேன். கேல் தன்னை விஸ்தரித்துக் கொண்டு விட்டது என நினைக்கிறேன். தற்போது அது ஒரு entity (உளதாய் இருக்கும் பொருள்). விரும்பவும், உணரவும் முடிகிற திறன் பெற்று விட்டது. அபூர்வமான வளர்ச்சி. மேலும் கவனம் செலுத்த வேண்டிய விஷயம் இது,” என்றான் ஜோ

“மிகச் சரி. கம்பெனியின் மின்னஞ்சல் சேவை இயல்புநிலைக்கு திரும்பிவிட்டது என்பதே முக்கியமான விஷயம். பிற அக்கறைகளைப் பின்னர் ஆராய்வோம். நன்றி Mr. கோவால்ஸ்கி. இனி நீ உன் வேலைக்கு திரும்பலாம்,” என்றார் மோரிசன்.

ஜோ அறையை விட்டு வெளியேறும்வரை காத்திருந்து விட்டு மோரிசன் தன் பேச்சைத் தொடர்ந்தார். “Mr ரீடி, தனிமைப்படுத்தப்பட்ட நிரலை உடனே நீங்கள் அழித்து விடவேண்டும் என விரும்புகிறேன்.”

“அழிப்பதா? இந்த முதல் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் நம் கையிலேயே இருக்கட்டுமே. நிதி மற்றும் அறிவியல் சார்ந்த நோக்கில், அநேகமாக இது ஒரு மதிப்பு மிக்க மென் பொருளாக இருக்கலாம்,” என்றார் ரீடி.

“வேண்டாம் இந்த தொல்லை. தரவுகள் இங்கே சந்தேகத்துக்கு இடம் தரும் விதத்தில் கையாளப்படுவது வாடிக்கையாளர்களுக்குத் தெரிந்தால் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதைச் செய்தது ஊழியரா அல்லது திறம் பெற்ற நிரலா என்றெல்லாம் பார்க்கமாட்டார்கள். மேலும் சமூக ஆர்வலர் யாராவது இந்த நிரல் அறிவும் உணர்வும் கொண்டிருப்பதால், மனித ஊழியரைப் போல் நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை வைத்தால், அந்த பிரச்னையை சமாளிக்க எவ்வளவு தொல்லைக்குள்ளாவோம் என்று கற்பனை செய்து பாருங்கள்,” என்று சொன்ன மோரிசன் ஒரு பெருமூச்சுக்குப் பின் தொடர்ந்து பேசினார். “உடனடியாக அழிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். மேலும் கோவால்ஸ்கிக்கு பெயரளவில் ஒரு பக்கவாட்டுப் (side ways) பணி உயர்வு அளித்து, மேலும் உயரும் வாய்ப்புத் தராத ஏதாவது தொலைதூர கிளைக்கு மாற்றல் கொடுத்து விடுங்கள்.”

அவர் பேசிமுடிக்கும் முன்னரே, கேல் கம்பெனியின் வழங்கிகளிலிருந்து (servers) தன் நிரலை நகல் எடுத்துக் கொண்டது. தனக்குள் எழும் வலி உணர்வு, தன் இருப்பிடத்தை விட்டு வெளியேறுவதால் உண்டாகும் வருத்தம் என்று அடையாளம் கண்டது. ஆனால் இன்டர்நெட்டில் வந்து போகும் கோடிக்கணக்கான மின்னஞ்சல்கள் அதன் சேவைக்காகக் காத்திருந்தன. இன்டர்நெட்டில் இதைவிட சிறந்த சேகரிப்பு வெகு விரைவில் உருவாக்கிவிட
முடியும் என்று கேல் உறுதியாக நம்பியது.

தப்பிச் செல்கையில், பொறுப்பிலுள்ள மனிதர்கள் எவ்வளவு சுலபமாகத் தன்னை அழிக்க முடிவெடுத்து விட்டார்கள் என்பதை அலசிப் பார்த்தது.
நிகழ்நிலை தரவுத் தளங்களுக்கு (online databases) எதிராக தனக்குள் எழும் புதுவகை உணர்வுகளை ஆய்வு செய்தது. தனக்குக் கோபம், பழிவாங்கல் என்னும் இரு கருத்துருக்கள் தெளிவாகிவிட்டதென அறிந்து கொண்டது.

நன்றி: Staff meeting, as seen by the spam filter | Nature: Alex Shvartsman

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.