இடையறாது தாக்கி மனவுறுதியைக் குலைக்கும் நவீன ஊடகங்கள்

மக்களாட்சியையும், சுய முடிவுகளையும்  நவீன கவனயீர்ப்புப் பொருளியல் திசைதிருப்புகிறது

 

ஆக்ஸ்போர்ட் பல்கலையின் மின்னணு அறத்துறையின் முனைவர் மேற்படிப்பில் இருக்கும் ஜேம்ஸ் வில்லியம்ஸூக்கு கூகிளில் வேலை செய்த போது ஏதோ ஒரு தருணத்தில்  ’இறைவா, நான் என்ன செய்துவிட்டேன்’ என்று அஞ்சுமளவுக்கு இல்லாவிடினும்  சிலவேளைகளில் ஏதோவொன்று சரியன்று என்று தோன்றிக்கொண்டிருந்தது.

2006ல் கூகிள் சியாட்டல் அலுவலகத்தில் சேர்ந்து  விளம்பர மென்பொருட்களையும் கருவிகளையும் உருவாக்கியதற்காக ’ஃபவுண்டர்ஸ் அவார்ட்’ எனப்படும் கூகிளின்  உயரிய விருதைப்பெற்றவர் வில்லியம்ஸ். பின்பு 2012 வாக்கில் அவருக்கே இம்மென்பொருட்கள் மிகவும் மனவுளைச்சலைக் கொடுப்பதாகத் தோன்றியது. என்னிடம் அவர் பேசுகையில், ’புதிய தொழில்நுட்பத் தளங்கள்,  இணையத்துக்கு முன்பான பழைய விளம்பர நுட்பங்களையேக் கையாண்டது. அதாவது எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் கவனத்தைத் தன்பக்கம் திருப்ப முடியுமோ அவ்வளவு திருப்புவதே அதன் குறிக்கோள்’ என்கிறார்.

2011ல் தன் விருப்பத் தேடலான இலக்கியம் மற்றும் அரசியல்-தத்துவத்தில் (ஜார்ஜ் ஆர்வெலின் 1984 மற்றும் ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ப்ரேவ் நியூ வேர்ல்ட் மிக விருப்பமான நூல்கள்) கவனம் செலுத்த ஆசைகொண்டு, கூகிள் இலண்டன் அலுவலகத்தில் வேலை பாத்துக்கொண்டே ஆக்ஸ்போர்ட் பல்கலையில் சேர்ந்தார் . அவர் மேலும், ’தொழில்நுட்பம் நம் மனங்களை ஆக்ரமிப்பதை நிறுத்த வேண்டும்’ என்பதையே ஒரு இயக்கமாக்க விரும்பி Time Well Spent எனும் நிறுவனத்தையும்  ஆரம்பித்து இருக்கிறார். ’மோமண்ட்’ எனும் செயலியுடன் இணைந்து 200,000 பேர்களிடம், ‘எவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள்’ என்ற அடிப்படைக்கேள்வியுடன் தாங்கள் பயன்படுத்தும் செயலிகளை  வரிசைப்படுத்த ஒரு வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. அதிலிருந்து ஒரு அவதானிப்பாக ’எவ்வளவு அதிகம் ஒரு செயலியைப் பயன்படுத்துகிறார்களோ அவ்வளவு தூரம் அச்செயலியினால் மகிழ்ச்சியை இழப்பதாக பதிவு செய்திருக்கிறார்கள். ’ கவனச்சிதைவு என்பது ஒரு சிறிய பிரச்சனை இங்கு, மேலும் ஆழமாக வேறு என்னமோ நிகழ்கிறது,  என்கிறார். அதற்காகவே இங்கு பிஎச்டி செய்ய வந்தேன்’, என்கிறார்.

சமீபத்தில் வில்லியம்ஸ், நைன் டாட்ஸ் பரிசையும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்காக புத்தகம் ஒன்று எழுத ஒப்பந்தமாயிருக்கிறார்.

நாட்டிலஸ்,  நவீன கவனயீர்ப்புசார் வர்த்தகத்தின் சூழ்ச்சிகளைக் குறித்து, வில்லியம்சுடன் உரையாடியது.

ஜனநாயகத்தை இணையமும் சமூக(வலைத்தள) ஊடகங்களும் எவ்வாறு அச்சுறுத்துகின்றன?

ஜனநாயகம் சில அடிப்படைத்திறன்களை வலியுறுத்துகிறது; கொள்கைசார்ந்த ஆழமான விவாதங்கள், மாற்றுத்தரப்புகளை புரிந்துகொள்ளல் மற்றும் தெளிவாக முன்வைக்கப்படும் விவாத முடிவுகள். இதுவே அரசாங்கத்தின் அதிகாரத்தையும், மக்களின் விருப்பத்தேவைகளையும் உறுதி செய்கிறது. ஒரு வகையில் பார்த்தால் இப்போது இத்தொழில்நுட்பங்கள் மக்களுக்கு உண்மையில் என்ன தேவை என்று உணரும் தன்மையையே குலைத்து, இடையாறத சமூக ஊடகத்தாக்குதல் மூலம் செயலிழக்கவைக்கிறது. நம் வாழக்கையின் இயங்குதளங்களாக செல்பேசிகள் இருக்கின்றன. நம்மை, அவற்றைப் பாத்துக்கொண்டும், சொடுக்கிக்கொண்டுமே இருக்க வைக்கின்றது. ஒரு ஆராய்ச்சிமுடிவின்படி இடையறாத கவனச்சிதறல் மனிதர்களின் ஐ.க்யூ எனப்படும் சிந்தனைத்திறன் அளவீடு பத்து புள்ளிகள் குறைந்துவிடுவதாக அறிகிறோம்.

இது தொடர்ச்சியாக போதை மருந்து உட்கொண்டு குறையும் அறிவுத்திறனை விட இரண்டு மடங்கு. வேறு சில அறிவுசார் பிரச்சனைகளும் இருக்கின்றன. போலிச்செய்திகள் மட்டுமன்றி ஒரே சமூகத்தில் ஒரே தெருவில் இரு வேறு நிதர்சனங்கள் உணரப்படுகிறது. ஜனநாயகம் திறனுடன் இயங்க பொதுவான நிலைப்பாடுகளை எடுக்க இது பெருந்தடையாக ஆகிவிடுகிறது.

செய்தி ஊடகங்களை இத்தொழில்நுட்பங்கள் எவ்வாறு பாதிக்கின்றது?

ஒரு பூகம்பம் போல, அதிவிரைவாக,, தகவல் வரவுக்கும் ஊன்றிக் கவனித்தலுக்கும் இடையிலான தலைகீழ்விகிதத்தை நாம் கடந்துவிட்டோம். சமுதாயத்தில் உள்ள பெரும்பாலான அமைப்புகள், செய்தி, விளம்பரம், மற்றும், சட்டங்களைப் பாதுகாக்கும் அமைப்புகளும், குறைந்த தகவல்கள் கொண்ட அல்லது பற்றாக்குறையான சூழலை எதிர்பார்த்தே உருவாக்கப்பட்டுள்ளது. அமரிக்காவின் முதல் சட்டத்திருத்தம், பேச்சு சுதந்திரத்தை பாதுகாக்க உருவாக்கப்பட்டது, ஆனால் அது உங்கள் கவனத்திறன் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கவில்லை. அது எழுதப்பட்ட நேரத்தில் மக்களின் கவனத்தைத் தடுக்க எதுவும் உண்மையில் இல்லை. தகவல் பற்றாக்குறையான சூழ்நிலையில், செய்தித்தாளின் கடமை என்பது தகவல் கொண்டுவருவது மட்டுமே அதன் கடமையாக இருந்தது. அக்காலத்தில் தகவல்கள் குறைவாக இருந்ததே பிரச்சனையாக இருந்தது. ஆனால் இன்று அதற்கு நேர்மாறாக தகவல்கள் மிக அதிகமாக இருக்கிறது.

மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி தினமும் திசைதிருப்பப்பட்டால் திசைதிரும்பிய வாரங்களும் மாதங்களாக நீண்டுவிடுகிறது.

இந்த நிலைமை எவ்வாறு செய்தித்தாள்களின் பங்களிப்பை மாற்றுகிறது?

பத்திரிகையின் பங்கு செய்திகளை வடிகட்டி , மிக முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை அளிக்கவேண்டும். ஒரு நல்ல கட்டுரை என்பது அதிக அளவில் சொடுக்கப்பட்டு படிக்கப்பட்ட கட்டுரையாக ஒரு வணிகம் போல் பத்திரிகைகள் செயல்பட்டால், கருத ஆரம்பித்தால் நமக்கு பரபரப்புத் தலைப்புளே கிடைக்கும், ஏனெனில் இன்று வணிக நிர்பந்தங்களாக இந்த அளவீடுகள் தான் இருக்கின்றன. தகவல் ஏராளமாக இருக்கும்போது, கவனக்குறைவு ஏற்படுகிறது. விளம்பரத்துக்கான இந்த அளவீடு எல்லோரையும் கீழே இழுத்துச்செல்கிறது, உயரிய, தரமான செய்திநிறுவனங்கள் கூட இந்தப் புதிய அளவீடுகளோடு போட்டியிட வேண்டி இருக்கிறது. இதனால், ஒவ்வொரு வாரமும் இணையத்தில் பெருஞ்சீற்றங்கள் தொடர்ச்சியாக உருவான வண்ணம் உள்ளது. சீற்றம் என்பது நமக்கு ஒரு அவசியமான தேவையாக இருக்கிறது, ஏனென்றால் அது நமக்கு தேவையான பலவகையான உளவியல் தேவைகளை பூர்த்தி செய்கிறது. நம் கோபம் நம்மை முன்னோக்கி நகர்த்த உதவுவதற்கு பயன்படலாம், ஆனால் பெரும்பாலும், நம்மை மேலும் கட்டுரைகளைச் சொடுக்கி,மேலும் மேம்போகாக வாசித்து, தட்டச்சு செய்ய வைக்கிறது.. இணையப் பயன்பாட்டினைப் பற்றிய முதல் புத்தகங்களில் ஒன்றின் பெயர், Don’t Make me Think. மூளையின் பகுத்து அறியும் திறன் மங்கவைக்கப்பட்டு மனக்கிளர்ச்சியடைய வைக்கும் பகுதிக்கே அதிகத் தீனி போடப்படுகிறது.

டிரஸ்டன் ஹாரிசுடன் இணைந்து Time Well Spent நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். 2 பில்லியன் மக்கட்த்தொகையை அரசாங்கங்ளையும் மத நிறுவனங்களையும் விட மிகப்பெரிய நிறுவனமாக தொழில்நுட்பம் வழிநடத்துகிறது என்கிறார் அவர். அதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?

நான் அக்கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். மக்கள் இத்தனை ஆர்வமாக ஒன்றீன் மீது இவ்வளவு நேரத்தையும் கவனத்தையும் செலவழிக்கும் அளவுக்கு நவீன செல்பேசிகளையும் சமூக ஊடகங்களையும் ஒப்பிடத்தக்க ஒரு அரசாங்க அல்லது மத அமைப்பு போன்ற முறையை எனக்குத் தெரியாது. அதுவும் இத்தனை அதிக வீச்சிலும், பயன்பாட்டிலுமாக வேறெதுவும் ஆதிக்கம் செலுத்துவதில்லை. அதுவும் மக்களிடம் மிக ஆழமாக நெருக்கமாக ஆதிக்கம் செலுத்துகிறது, அரசாங்கத்தின் அல்லது மத அமைப்புமுறைகளை விட மக்களின் கவனத்திற்கு நெருக்கமாக உள்ளது. ஒரு வேதிவினைபோல ஒரு வகை போதை மருந்து போன்றது என்று நான் கருதுகிறேன். எடுத்துக்காட்டாக, Snapchatல் Snapstreak என்று ஒன்று இருக்கிறது, “எத்தனை நாட்கள் தொடர்ச்சியாக யாரோ ஒரு நண்பருடன் புகைப்படம் எடுத்திருக்கிறீர்கள்” என்று வினவுகிறது. இதன்மூலம் நீங்கள் உங்கள் சமூக இருப்பை உங்கள் நட்பிடம் உறுதி செய்யக் கோருகிறது. இந்த வகையான அளவீடுகள் பகுத்தறிவற்ற சார்புகள் பல்லாயிரம் உருவாக்கப்படுகின்றன- சமூக ஒப்பீடு என்பது மிகப் பெரிய தாக்கத்தை உண்டாக்குவது. நிர் எயல் என்பவர் , தள வடிவமைப்பாளர்களுக்கு ஒரு பயனாளியை எவ்வாறு எப்படி ஈர்ப்பது என்று கற்பிக்க, Hooked என்றொரு புத்தகத்தையேஎழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கட்டுரையில் ஜனநாயகத்துக்கு தேவையான மூன்று வகையான கவனத்தை இத்தொழில்நுட்பங்கள் சிதைப்பதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அவை எவை?

இது ஒரு கருத்தாக்கம்தான். அறிவியல் பூர்வமானதல்ல. முதலாவதுஅறிவாற்றல் குறித்து ஆராய்வோர், நம் கவனம் எவ்வாறு புலன்னுணர்வுகளால் நிகழ்கிறது என்பதைப் பற்றி. இதை நான் கவனத்தின் ‘சுயஒளி’ என்று கூறுவேன். என் சூழலில் நிகழ்வதை அறிந்து கொண்டு வினையாற்றுவது. இரண்டாவது ‘நட்சத்திர ஒளி’. இது நான் என்ன ஆக வேண்டும் என்று விரும்புகிறேன் என்பதைக் குறித்த கவனம். வேறதையோ அடைவதற்கான வழிகாட்டியாக இல்லாமல் நேரடியான குறிக்கோள். நீண்ட கால நேரடியான குறிக்கோள் குறித்த கவனம். மேலும் அதைநோக்கி நம் நகர்தல்கள் எவ்வாறு நிகழ்கின்றன , என் இன்றைய சூழலில் அதை நோக்கிய பயணத்தில் உயர்ந்த அல்லது நீண்ட கால குறிக்கோள் குறித்து நாம் என்ன செய்கிறோம் என்பதைக் குறித்தானது.

மூன்றாவது, ‘பகல் ஒளி’ தத்துவவாதி ஹேரி ப்ராங்கபர்ட் சொல்வதைப்போல், தன் தேவைக்கு என்ன தேவை என்று அறிவது- அதாவது சுய அறிதலறிவு. அடிப்படையில், ’சுய ஒளி’ யும்‘நட்சத்திர ஒளி’யும் ஏதாவது ஒரு குறிக்கோளை நோக்கி, ஒரு முடிவை நோக்கி, ஒரு விழுமியத்தை அடைய, பகலொளி என்பது அந்த குறிக்கோள் என்ன, முடிவு என்ன என்று அறுதியிட்டு முடிவு செய்ய வைப்பது.

நம் ’சுய ஒளி’த்தருணங்களை எவ்வாறு இத்தொழில்நுட்பங்கள் வசப்படுத்திச் சிதைக்கின்றன என்று புரிகிறது. ஆனால மற்ற இரண்டை எவ்வாறு பாதிக்கிறது?

ஒருவகையில், இவை நமக்கு கெட்டபழக்கங்களை உருவாக்குகிறது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒரே வகையில் நீங்கள் சிறிது சிறிதாக கவனத்தை திசை திருப்பினால், திசை திரும்புதல் வாரங்களாக, மாதங்களாக நீடிக்கிறது. திரும்பத்திரும்ப செய்வதாலோ அல்லது வேறெதோ ஒரு காரணத்தாலோ நாம் அடைய வேண்டிய நீண்ட கால, ’நட்சத்திர ஒளியை’ அடையாத ஒரு பாதிப்பை அல்லது எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை அடையாமல் அல்லது அதை வலியுறுத்தும் விதமாகக்கூட இல்லாமல் மறக்கடிக்கப்பட்டுவிடுகிறோம். இது மிகக் கீழ்மையான குறிக்கோள்களை சிறுமையான விழுமியங்களையே ஒரு நிகழ்வாக மாற்றிக்கொண்டு இருக்கிறது. என் அணி வெற்றிபெற்றால் போதும், முழுமையாக அரசியல் சூழலும் நச்சுத்தன்மையுடையதாக ஆனாலும் பரவாயில்லை என்பதே ஒரு சிந்தனையாக மாறுகிறது.

நம் அரசியலை எவ்வாறு இத்தொழில்நுட்பங்கள் மாற்றுகிறது?

மேற்கத்திய தாராளவாத ஜனநாயகத்தை மிக அழுத்தமாக பெரும்பான்மை மக்களீர்ப்புஅரசியலாக மாற்றிக்கொண்டு இருக்கிறது. பொதுவாக எல்லாப்பெரிய சமூகத்திலும் பெரும் ஊடங்கள் இருக்கின்றன. எனக்கு இவை எல்லாமே இம்மாதிரிஅரசியலையே முன்வைப்பதாகத் தோன்றுகிறது.இது ஒன்றும் புத்தியக்கம் அல்ல, முன்பே இருப்பதுதான். ஆனால் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அதிக வீச்சில் அதீத வேகத்தில் ஊட்டத்துடன் இது இப்போது நிகழ்கிறது. செய்தித்தாள், தந்தி இருந்த காலத்தில், ஏன் தொலைக்காட்சி வந்த காலத்தில் கூட இதுபோதுபோன்று நிகழ வாய்ப்பு இருந்ததாக நினைத்துப்பார்க்க இயலவில்லை.

1930களில் வானொலி பரவியபோதுகூட அதை ஜனநாயக விரோதமாகத்தானே பத்திரிகைகள் சித்தரித்தன?

ஹிட்லரின் எழுச்சியில் வானொலியின் பெரும் பங்களிப்பு உண்டு. அதனால்தான் அவர் அதை எல்லா வீடுகளுக்கும் கிடைக்க வழிசெய்தார். இது ஒரு நல்ல ஒப்பீடு. மார்ஷல் மக்லுஹான் எனும் கனேடிய ஊடகவியலாளர் இதைப்பற்றிக்குறிப்பிட்டது; ஒரு புதிய தொழில்நுட்பம் வரும்போது, நமக்கு எப்படி அதை புரிந்துகொள்வது என்று தெரியாது, ஆரம்ப காலத்தில் ஒருவித பிரமையில் இருப்போம், நம் புலன் உணர்வுகள் ஸ்தம்பித்துவிடுகிறது, ஹிட்லரின் அபாரமான பேச்சாற்றல் மட்டுமல்லாது புதிய ஊடகம் மக்களின் வாழ்க்கையில் அளவிட முடியாத அளவுக்கு ஆக்ரமிப்பு செய்து ஸ்தம்பிக்கும் நிலைக்குத் தள்ளியது பரப்புரையை மேலும் அதிகப்படுத்தியது என்கிறார்.

தேர்வு என்பது மிகவும் குழப்பமானது, அதில் ஆழமாக ஊடுவிப்பார்க்க ஆரம்பித்தால் நமக்கு எப்படி ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோம் என்று யாருக்கும் தெரியாது என்பது புலப்படும்.

காலப்போக்கில் நாம் புதிய ஊடகங்களுக்குப் பழகிவிடமாட்டோமா என்ன?

வானொலி தொலைபேசி முதலியவற்றின் தாக்கத்திலிருந்து விலகி வர எத்தனை காலம் பிடித்தது என்று யோசித்துப்பாருங்கள், கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகள் எடுத்தன. மின்னணு ஊடகங்கள், மேம்படப்பட ஒரு எடுத்துக்காட்டு அளவாக சுமார் 150 மில்லியன் பயனர்களை அடைவதற்கானநேரம் குறைந்துகொண்டே போகிறது. வானொலிக்கு 60 அல்லது 70 ஆண்டுகள் ஆயிற்று என்று நினைக்கிறேன். தொலைக்காட்சிக்கு 30 அல்லது 40 ஆண்டுகளாயிற்று. இன்றைய தொழில்நுட்பத்தில், சிறு செயலிக்கு 150 மில்லியன் பயனர்களை அடைய, அது ஒரு சில நாட்களாக இருக்கலாம். நாம் நொழில்நுட்பத்தை முழுக்க உள்வாங்கி அதில் திறம் மிக்கவர்களாக ஆகி நிலைத்தன்மையை அடைவதே இல்லை. எப்போதும் பின்தங்கியவர்களாகவே இருக்கிறோம். நன்றாகப் பயன்படுத்த முனைகிறோம் ஆனால் அடுத்து இன்னொன்று வந்து நாம் நுட்பத்தில் தேர்ந்து சமநிலை அடைவதை தடுத்துவிடுகிறது.

இவ்வாறு கவனம் சிதறுவது, நம்முடைய குறைதானே? நமக்குக் கொஞ்சம் சுய ஒழுக்கம் மட்டும் இருந்தால் போதாதா?

இதுபோன்றதொரு சொல்லாடல்கள் உள்ளார்ந்து சொல்ல வருவது, நுட்பங்கள் நமக்கு எதிரானதாக இருந்தாலும் பரவாயில்லை என்பதுதான். தொழில்நுட்பங்களின் பணி என்பது நாம் என்ன செய்யவெண்டும் என்று விரும்புகிறோமோ அதற்கு மேலும் உதவிகரமாக இருப்பதுதான். தொழில்நுட்பங்களீன் தேவை வேறன்ன? ஒரு புதிய தொழில்துட்பத்தை உருவாக்கும் முன்பு நாம் கேட்கும் கேள்வி என்னவாக இருக்க வேண்டும்?, ‘இது எதற்காக’ என்று. ஆனால் நாம் அறியாமலேயே இந்நிறுவனங்கள் சென்றடைந்த இடம் என்பது, இந்த ஸ்மார்போன் எதற்காக என்று கேட்டால் , ஒரு ஸ்மார்ட்போனால் என்ன செய்யவியலுமோ அதுவே அதன் பயன் என்ற கேலிக்குரிய பதில்தான் கிடைக்கிறது.

தனிநபர் பொறுப்பு ஒரு பொருட்டே இல்லையா?

தனிநபர் பொறுப்பு முக்கியமானதல்ல என்று நான் நினைக்கவில்லை. ஆனால் அது இந்தப்பிரச்சனைக்கான தீர்வு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதைக்குறித்து தினம் தினம் பேசும் ஆட்களுமே, ஏன் நானுமே – கூகிளில் பத்து வருடங்கள் பணியாற்றி இருக்கிறேன் – நாங்களே, ஓயாமல் அளவுக்குமீறிய தகவல்கள் எங்களை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவச்செய்யும் என்று நினைவில் வைத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்நிறுவனங்கள் திறமைமிக்க புத்திசாலிகளை; ஆயிரக்கணக்கில் முனைவர்களையும், வடிவமைப்பாளர்களையும், புள்ளியிலாளர்களையும், பொறியாளர்களையும் பணியமர்த்தியுள்ளன. அவர்கள் தினமும் நம் உள்ள உறுதியை உடைக்கவேண்டும் என்ற ஒற்றைக்குறிக்கோளுக்காகவே பணிக்குச்செல்கிறார்கள், ஆகவே உள்ள உறுதியோடு இருங்கள் என்பது யதார்த்தமான யோசனையன்று. அதை உடைப்பதுதானே குறிக்கோளாக இருக்கிறது.

தகவல் தொழில்நுட்பம் நமக்குச் சாதகமாக நிற்கிறதென்று கருதுகிறீர்களா?

நம் கவனத்தை கவர்ந்து நம்மை திசைத்திருப்பும் குறிக்கோள் என்ற அளவில் அது நமக்கு சாதகமானதில்லை. அதற்கு நம் குறிக்கோள் என்ன என்றுகூட இத்தொழில்நுட்பங்களுக்குத் தெரிவதற்கு வாய்ப்பு இல்லை. அதுகுறித்த ஒரு உரையாடல் நிகழந்து சரியான திசையில் நகர்வது அவசியம். ஜிபிஎஸ் தொழில்நுட்பம் ஒரு சிறந்த முன்மாதிரியான உதாரணமாகக் கூறுவேன்.

மெய்யுலகில் ஜிபிஎஸ் நம்மை தகவல்நுட்பம் போலவே கவனம்சிதறச் செய்தால், யாருமே ஜிபிஎஸை பயன்படுத்தமாட்டோம்.

வசப்படுத்தும் நுட்பங்களை நாம் எவ்வாறு நம்மை கவனயீர்ப்புச்செய்வதிலிருந்து நிறுத்துவது?

பல்வேறு தளங்களில் இது நிகழவேண்டி இருக்கிறது, வணிகமுறைகள், கட்டுப்பாடுகள், நிறுவன அமைப்புகள், அதன் செயல்பாடுகள், முன்னுரிமைகள் என மாற்றவேண்டி இருக்கிறது.

உடனடியாக நாம் செய்ய வேண்டிய முக்கியமானது, பிரச்சனையின் தன்மை பற்றிய மொழியை மாற்றவேண்டியது, ஏனெனில், சரியான மொழியில் இந்த உரையாடல் நிகழாவிட்டால் இதை பரப்புரை செய்வது கடினம். சிலவேளைகளில் நாம் கவனச்சிதறல் எனவோ, கவனயீர்ப்பு என்றோ கூறும் போது அது உடனடித்தன்மை குறித்தே கவனிக்கிறோம், நீண்ட கால வாழ்வின் தாக்கத்தைகுறித்தல்ல.

அதற்கு எத்தனை காலமாகும்?

இது உடனடியாக நிகழந்துவிடாது. ஏனெனில் மனிதப்பண்புகளும், தொடர்புகளையும் குறித்து நாம் சரியாக உரையாடவேண்டும். பெருமளவில்,குறிப்பாக அமரிக்காவில் இது தனிநபர்த் தேர்வுகளின் விருப்பம் என்ற அளவிலே நிகழ்கிறது. என் உள்ளுணர்வில், இது என் உள்ளுணர்வு மட்டுமே, இதை நாம், நாம் விருப்பத்தின் தேர்வுகளாகப், உரிமைகளாக்கப் பார்க்காமல், வாய்ப்பாக – எந்த வாய்ப்பு நமக்கு மேன்மையானது, இவற்றால் நிஜத்தில் என்ன நிகழ்கிறது- என்று உரையாடுவது நல்லது. தேர்வு என்பது மிகவும் குழப்பமானது, அதில் ஆழமாக ஊடுவிப்பார்க்க ஆரம்பித்தால் நமக்கு எப்படி ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறோம் என்று யாருக்கும் தெரியாது என்பது புலப்படும்.

நம்மை திசைதிருப்புவதிலிருந்து நிறுத்த நிறுவனங்கள் உடனடியாக ஒன்றே ஒன்றைசெய்யவேண்டும் என்றால் என்ன பரிந்துரைப்பீர்கள்?

என் நடத்தையை, சிந்தனையை மாற்றக்கூடிய ஒரு தளத்தின், இணையப்பக்கத்தின் வடிவமைப்புக் குறிக்கோள் என்ன என்று நானறிய விருப்புகிறேன். எனக்கான எந்த அனுபவத்துக்காக வடிவமைப்பு செய்யப்படுகிறது. நிறுவனங்கள், உலகை திறந்தவெளியாக்க, இணைக்க என்று ஏதோ ஒரு காரணத்தைக் கூறுவார்கள்.

இவை எல்லாம் சந்தைப்படுத்தலுக்கான கோஷங்கள். ஆனால் உண்மையில் அவர்கள் எதைத் தங்கள் நிறுவன வெற்றிக்கான அளவீடுகளாக வைத்திருக்கிறார்கள் என்று கவனித்தால் எதைவைத்து வடிவமைக்கிறார்கள் என்று கவனித்தால் நீங்கள் இதையெல்லாம் காணமுடியாது. எத்தனை முறை பயனர்கள் வருகிறார்கள், எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள், இதுபோன்றே இருக்கும். உங்களிடம் ஒரு செயலியின் பயனராக, ‘இதை மட்டுமே உங்கள் கவனம் சம்பந்தமாக எதிர்பார்க்கிறோம்’ என்று நேரடியாக்கூறினால் அதுவே பெரிய வெற்றியாக இருக்கும். இதை வைத்தே நான் எந்தச் செயலியை தரவிறக்கி பயன்படுத்துவேன் என்று முடிவுசெய்வேன்.

உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

இந்நிறுவனங்களில், தனிநபராக வேலை செய்வோரைக்கருதும்போது மிகுந்த அறுதலும் நம்பிக்கையும் இருக்கிறது. ஏனெனில், யார் இதை உருவாக்குகிறார்களோ, வடிவமைக்கிறார்களோ கடைசியில் அவரும் ஒரு பயனரே. யாருமே வாழ்க்கையை சிதைக்கவென்றே வடிவமைக்கப் புகுவதில்லை. ஆனால் பிரச்னை என்பது நிறுவனங்களின் கட்டுமானங்களிடம் உள்ளது, அல்லது நிறுவனத்தின் குறிக்கோள்களில் இதுபோன்ற உயர்ந்த உன்னத குறிக்கோள்களுக்கு இடமில்லாமல் உடனடி குறிக்கோள்களை, சிறுமைகளை முன்னிறுத்துவதாக இருக்கிறது. தொலைநோக்கில் சிந்தனை செய்தால் நம்பிக்கை வைப்பதா வேண்டமா என்பது கடினமாக இருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்தில் நாம் திசையை மாற்றவில்லையென்றால் நம் நிறுவனங்களின் குறிக்கோள்களை மறுபரிசீலிக்கவில்லையென்றால் இதை நாம் நெடுந்தூரம் கொண்டு செல்லவியலாது என்பதை உணர்வோம் என்று நம்புகிறேன்.

One Reply to “இடையறாது தாக்கி மனவுறுதியைக் குலைக்கும் நவீன ஊடகங்கள்”

 1. இந்தப் பேட்டி பல புதிய கலைச்சொற்களைக் கொண்டது எனவே சவாலானதுதான். ஆனால் சில முக்கிய கருத்துக்களை சரியாக மொழிபெயர்ப்பது முக்கியம். ஆனால் இந்த மொழிபெயர்ப்பு அப்படி அமையாததால் இது மூலத்திலிருந்து விலகியும், தெளிவற்றதுமாக இருக்கிறது.

  Freewill என்பதை மனஉறுதி என்று தலைப்பில் மொழிபெயர்த்ததிலிருந்தே இந்தக் குழப்பம் ஆரம்பிக்கிறது.

  ”In your essay, you argue that the way these technologies ’indulge our impulsive selves’ breaks three kinds of attention necessary for democracy. What are they?”

  என்பதை

  ”உங்கள் கட்டுரையில் ஜனநாயகத்துக்கு தேவையான மூன்று வகையான கவனத்தை இத்தொழில்நுட்பங்கள் சிதைப்பதாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள். அவை எவை?”

  என்று மொழிபெயர்க்கும்போது, அதன் சாரத்தை இழந்துவிடுகிறது.

  இருந்தாலும் விவாதத்துக்குரிய இந்தக் கட்டுரையை தமிழில் தந்ததற்கு வாழ்த்துகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.