கண்கள் செவிக்க மறுக்குமோ? வில்லியம் காஸின் ஐம்பது தூண்கள்

எனவே, மீண்டும் இக்கேள்வி, ஏன் எழுத வேண்டும். காஸின் கனத்த பதில்: “அவன் செய்வது அனைத்தும் எந்தப் பொறுப்புமற்ற ஓர் உள்ளார்ந்த தேவையிலிருந்து எழ வேண்டும்.” பின்விளைவுகள் குறித்து கவலைப்படாத காஸின் இத்தகைய உந்துதலுக்கு நாம் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்- இனி கோழிக்குஞ்சுகள் கொட்டகைக்கும் வேலிக்கும் இடையில், “ட்யூபிலிருந்து பற்பசை போல்” பிதுங்கிச் செல்லலாம், மரமொன்றால் ” உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றாய் அழுக்கை” மாற்ற முடியும் (வாழ்க்கையின் அழுக்கில் வேர்கொண்டுள்ள எழுத்தாளன் அதன் கசடுகளை கலையின் பொன்மூச்சாய் மாற்றும் ரசவாதம் போல்), ஆங்கில மொழியின் இரண்டாம் எழுத்தான பி, “இண்டியானாவில் உள்ள ஒரு வயலோடு பிணைக்கப்பட்ட சிற்றூர்” ஆகலாம், ஊறுகாய்கள் “முதலைகள் போல் உறங்க”லாம், “ரப்பர் ஷூக்கள் அல்லது யாரோ ஒருவனின் இருமல் போன்ற தனிமை” மானுட உணர்வாகலாம். “பளபளக்கும் சிறுமணிகள்” போல் உவமைகள் திரு. காஸில் ஊஞ்சலாடுகின்றன என்பதைச் சொன்னேனா?