அவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து அனேகமாக சாரு மஜும்தாரை ராத்திரி பாண்டியன் எக்ஸ்ப்ரஸில்தான் அனுப்பி வைப்பார்கள் என்று தெரிந்தது. இரவு வரை பாலகிருஷ்ணன் வீட்டில்தான் சாரு மஜும்தார் இருப்பார் என்று பீட்டர் முடிவு செய்தான். வீட்டுக்குப் போய் குளித்துச் சாப்பிட்டு விட்டு ஆபீஸுக்குப் போய் ரிப்போர்ட் கொடுக்கலாம் என்று பீட்டர் நினைத்தான். வீட்டுக்குப் புறப்பட்டான்.
பாலகிருஷ்ணன் வீடு நீளமாகத் தட்டு தட்டாக உள்ளே போய்க் கொண்டே இருந்தது. பாலகிருஷ்ணனும், அவருடைய தம்பி கோலப்பனும் அந்த வீட்டில் வாடகைக்குத்தான் குடியிருந்தார்கள். அவர்களுக்கு அந்த வீடு தாராளமாகப் போதும். தெருவாசல்லிருந்து உள்ளே போனதுமே சதுரமான ஒரு நடைக் கூடம் இருந்தது. கீழ்ச் சுவரோரத்தில் ஒரு திண்ணை. திண்ணையில் பாலகிருஷ்ணனுடைய அம்மா இருந்தாள். அவளுக்குத் தலை நிற்காது லேசாக ஆடிக் கொண்டே இருக்கும். நரம்புத் தளர்ச்சி. இரண்டு காதுகளையும் வளர்த்துப் பாம்படம் போட்டிருந்தாள். முன்னத்தம் பல்லெல்லாம் விழுந்து விட்டது. ஒன்றிரண்டு கடவாய்ப் பற்கள் ஆடிக் கொண்டிருந்தன. இருக்கிற பற்களிலும் உதடுகளிலும் வெற்றிலைக் காவியேறிச் சிவந்து கிடந்தன.
வீட்டினுள் நுழையும்போதே சாரு மஜும்தார் சட்டையைக் கழற்றித் தோளில் போட்டுக் கொண்டார். பாலகிருஷ்ணன் அம்மாவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். மஜும்தார் லேசாகப் புன்முறுவல் செய்தார்.
“அம்மா, ..இவங்களுக்குக் கல்கத்தா பக்கம்…” என்று அவரைக் கை காட்டி அம்மாவிடம் சொன்னார்.
“ஒனக்குத் தெரிஞ்ச ஆளா?” என்று கேட்டாள் மாரியம்மாள்.
“ஆமா… நம்ம வீட்டுக்குச் சாப்பிடக் கூட்டி வந்திருக்கேன்..”
“மவராசனாச் சாப்புடட்டும். ..ஒன் தம்பி பொஞ்சாதி சமையல் எல்லாம் முடிச்சிருப்பா… உள்ள கூட்டிட்டுப் போ..”
“அய்யா! இது ஒங்க வீடு மாதிரி…. கூச்சப்படாம இருங்க, சாப்புடுங்க…” என்று சாரு மஜும்தாரைப் பார்த்துச் சொன்னாள்.
தலை மட்டும் நிற்காமல் ஆடிக் கொண்டே இருந்தது. அம்மா உபசாரம் செய்ததை பாலகிருஷ்ணன் அவரிடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார். துரைப்பாண்டி பற்கள் தெரியச் சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டே மாரியம்மாளைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
பெரும்பாலான மேலமாசி வீடுகளுக்கு, முன்புற, பின்புற வாசல்களைத் தவிர ஜன்னலே இருக்காது. ஒரு வீட்டுக்கும், அடுத்த வீட்டுக்கும் இடையே இடைவெளியே இருக்காது. நீளமான வீடுகள். பக்கவாட்டில் இடமே விடாமல், நெருக்கமாகக் கட்டப்பட்ட அந்தக் காலத்து வீடுகள். ஜன்னல்கள் இல்லாததால் வீட்டினுள் எப்போதும் இருட்டாகவே இருக்கும். பாலகிருஷ்ணன் ஒவ்வொரு அறைக்குள் நுழையும்போதும் சுவிட்ச்சைப் போட்டு வெளிச்சத்தைப் பரவ விட்டுக் கொண்டே சென்றார். அந்த வீடு கல்கத்தாவிலுள்ள வீடுகளைப் போலவே இருப்பதாகப் பட்டது சாரு மஜும்தாருக்கு.
“முகம் கழுவிக் கொள்கிறீர்களா?” என்று அவரிடம் கேட்டார். சாரு மஜும்தார் தலையை அசைத்தார். அவரைப் பின்புறம் கிணற்றடிக்கு அழைத்துச் சென்றார். துரைப் பாண்டி ஹால் போல இருந்த பெரிய அறையிலேயே நின்று கொண்டான். ஒன்றிரண்டு முறை அந்த வீட்டுக்கு அவன் வந்திருக்கிறான். அடுப்படிப் பக்கமிருந்து கோலப்பனின் மனைவி வெங்கம்மா வந்தாள். அவனை உட்காரச் சொன்னாள். அந்த அறையின் கீழ்ச்சுவரிலும், மேலச் சுவரிலும் வரிசையாக ஃபோட்டோ பிரேம்கள் மாட்டியிருந்தன. குடும்ப உறுப்பினர்களின் படங்கள், தேசத் தலைவர்களின் படங்கள். எல்லாம் அந்தக் காலத்துப் படங்கள். குழம்பு கொதிக்கிற வாசனை வந்தது.
சாரு மஜும்தார் முகம் கழுவிக் கொள்ள கிணற்றிலிருந்து பாலகிருஷ்ணன் தண்ணீர் இறைத்துக் கொடுத்தார். குழாய் தண்ணீர் வராதா என்று மஜும்தார் கேட்டார். குழாய் இருக்கிறது, அதில் எப்போதும் தண்ணீர் வராது என்றார் பாலகிருஷ்ணன். அவர் முகம் கழுவியதும் துடைத்துக் கொள்ள வீட்டினுள்ளிருந்து வெளுத்த துண்டை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். காம்பவுண்டுச் சுவரையொட்டி நின்றிருந்த முருங்கை மரத்தில் சாட்டை சாட்டையாக முருங்கைக் காய்கள் காய்த்துத் தொங்கின. அந்தக் காய்களை ஆச்சரியத்துடன் பார்த்தார். அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் பாலகிருஷ்ணன்.
அவர்களைத் தேடிக்கொண்டு துரைப்பாண்டியும் வந்தான். “சார், முருங்கை காய்ச்சுத் தொங்குறதை ஆச்சரியமாப் பாக்கிறார்,” என்றார் பாலகிருஷ்ணன்.
“இவ்வளவு நீளமான முருங்கைக்காயை நான் பார்த்ததே இல்லை,” என்றார் சாரு மஜும்தார்.
“இது யாழ்ப்பாணத்துக் காய்… நீளமாகத்தான் இருக்கும்…” என்றார் பாலகிருஷ்ணன்.
“ஒங்க ஊருக்குக் கொண்டு போறீங்களா?” என்று கேட்டான் துரைப்பாண்டி.
“பறிச்சுத் தரவா?” என்றார் பாலகிருஷ்ணன்.
“வேண்டாம்… வேண்டாம்…” என்று மறுத்தார்.
மூவரும் வீட்டினுள் வந்தனர். “வெங்கம்மா, சாப்பிடலாமா?” என்று கேட்டார் பாலகிருஷ்ணன். “எல்லாம் தயாரா இருக்கு… உக்காருங்க…” என்றாள். அடுப்படியிலிருந்த தட்டுக்களை எடுத்து வந்தாள். மூவரும் சாப்பிட உட்கார்ந்தனர். சாப்பிட்டு முடித்த பிறகு, சாரு மஜும்தார் பீடியை எடுத்தார். பீடியையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டு கொல்லைப்புறம் போனார். அவர் பீடி குடித்து முடிப்பதற்குள், அவர் படுப்பதற்கு ஏற்பாடு செய்தார் பாலகிருஷ்ணன். பை, சட்டை எல்லாவற்றையும் கட்டிலிலே தலையணைக்குப் பக்கத்தில் வைத்தார் மஜும்தார். வெறும் பனியனுடன் படுத்தார். சில நிமிடங்களில் தூங்கியும் போனார்.
பாலகிருஷ்ணன் வீட்டிலிருந்த ஃபோனிலிருந்து கடைக்கு ஃபோன் போட்டு அப்பாவிடம் பேசினான் துரைப்பாண்டி. ராத்திரி வீட்டுக்கு வர நேரமாகும் என்று தகவல் சொன்னான். பாலகிருஷ்ணனும், துரைப்பாண்டியும் சாரு மஜும்தார் கொடுத்த துண்டுப் பிரசுரங்களைப் படிக்க ஆரம்பித்தனர்.
பீ ட்டர் வடக்கு மாசிவீதியிலிருந்த ஹார்ட்வேர் ஸ்டோரில் ஞாபகாமக் வீட்டுக்கு அடி பம்புக்குப் போட வாஷர் வாங்கினான். அவசர அவசரமாக வீட்டுக்குப் போய் குளித்து விட்டுச் சாப்பிட்டான். சாப்பிட்டதும் கொட்டாவி கொட்டாவியாக வந்தது. பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவன் வீட்டில் மேஜை இல்லை. நாற்காலியில் கார்ட் போர்ட் அட்டையை வைத்து சிறு ரிப்போர்ட் ஒன்று எழுதினான். எழுதும்போது பேனா கசிந்தது. பெருவிரலிலும், மோதிர விரலிலும் மையாக இருந்தது. ரெபேக்காள் பிள்ளைகளைச் சாப்பிடக் கூப்பிட்டாள். ஆனால், அவர்கள் சாப்பிட வருகிற மாதிரித் தெரியவில்லை. விளையாட்டில் மும்முரமாக இருந்தார்கள்.
“ஒங்களுக்கு ஒங்க வேலைதான் பெருசு. எப்ப பாத்தாலும் வெளியே போயிருதீங்க. இந்தப் பிள்ளைகளை நீங்க கவனிக்கறதே இல்லை.” என்று சத்தம் போட்டாள் ரெபேக்காள்.
“என்னை என்ன செய்யச் சொல்லுதே. என் வேலை அப்படி.. இப்பம் உனக்கு என்ன செய்யணும்?” என்று கேட்டான் பீட்டர்.
“அதுகளைச் சாப்புடச் சொல்லுங்க… நான் சொன்னால் கேட்க மாட்டேங்குதுங்க…காலையில் இருந்து ஒண்ணுமே சாப்பிடாமக் கெடக்குதுக…”
“ஏய் லாசர்… வசந்தா.. ரெண்டு பேரும் சாப்பிடப் போங்க…” என்று, ரெபேக்காள் சொன்னதற்காகப் பேருக்குச் சத்தம் போடுகிற மாதிரிச் சொன்னான். பிள்ளைகள் அவன் சொன்னதைக் காதில் வாங்கின மாதிரித் தெரியவில்லை. பேண்டையும் சட்டையும் எடுத்து அணிந்து கொண்டான். அந்த ரிப்போர்ட்டையும் கையில் எடுத்துக் கொண்டான். “நான் வெளியே போறேன்… வர நேரமாகும்.” என்று சொல்லி விட்டு முன்வாசல் கதவைத் திறந்து கொண்டு தெருவில் இறங்கினான். வீட்டுப் பக்கமிருந்து ஆபிசுக்குச் சரியான பஸ் வசதி கிடையாது. வடக்கு வெளி வீதி போய் பஸ்ஸைப் பிடிக்க வேண்டுமென்றாலும் கொஞ்ச தூரம் நடக்கத்தான் வேண்டும். அதில் யானைக் கல் போய் அங்கிருந்து தெற்குச் சித்திரை வீதி வரை நடந்துதான் போக வேண்டும். ஒரேயடியாக வீட்டிலிருந்து ராமாயணச் சாவடித் தெரு, மொட்டைக் கோபுர வாசல் வழியாக கோவிலுக்குள் நுழைந்து போவதுதான் சரி என்று முடிவு செய்து நடக்க ஆரம்பித்தான்.
வடக்கு மாசி வீதியாவது பரவாயில்லை. அகலமான தெரு. ஆனால் இந்த ராமாயணச் சாவடித் தெருவை, தெரு என்று சொல்வதற்குப் பதிலாகச் சந்து என்றே சொல்லலாம். ரொம்பக் குறுகலான தெரு அது. ஏதோ நினைத்துக் கொண்டே வேகமாக நடந்தான். அது பழக்கமான பாதை. நினைப்பு வேறெங்கோ இருந்தாலும், கால்கள் தானாக நடந்தன. வீட்டிலிருந்து தெற்குக் கோபுர வாசல் பக்கம் இருக்கிற அவனுடைய ஆபிஸுக்கு வந்து சேர முக்கால் மணி நேரமானது.
ஆபிஸின் முன்னால் இரண்டு ஆட்டோக்கள் நின்றிருந்தன. நீளமான வராந்தாவில் வெளி ஆட்கள் நான்கைந்து பேர் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். பொதுவாக ஆபிஸ் ஆட்களைத் தவிர வேறு யாரும் வராந்தா பக்கம் நிற்க மாட்டார்கள். வராந்தாவுக்குள் நுழைந்ததுமே பழைய கட்டடங்களுக்கே உரிய புழுக்கமான வாடையடித்தது. வராந்தா பூராவும் கல்தளம்தான். கீழக் கோடியில் மாடிக்குப் போகிற படிக்கட்டு. மாடிப் படிக்கட்டுகள் செங்குத்தாக இல்லாமல், ரொம்பச் சாய்வாக இருந்தன. படிகளின் விளிம்புகளில் பாதிப்படி அளவுக்கு ஒவ்வொரு படியிலும் அகலமான மரப்பலகை பதித்திருந்தது. மாடியில்தான் அலுவலகம் இயங்கியது. கீழ் தளத்தில் மீட்டிங் ஹால் மட்டும்தான்.
பீட்டர் படியேறினான். மாடியில் வலது புறம் டி.எஸ்.பியுடைய அறை. அவருடைய பி.ஏ. ஊர்க்காவலன் அறைக்கு வெளியே தனது இடத்தில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு எதிரே சிகாமணி உட்கார்ந்திருந்தான். பீட்டர் ஊர்க்காவலனின் முன்னால் போய் நின்று சல்யூட் அடித்தான். ஏறிட்டுப் பார்த்த ஊர்க்காவலன், “ என்னப்பா.. தொரைகள்..ரிப்போர்ட்டெல்லாம் ஒழுங்காக் குடுக்க மாட்டீகளே?.” என்று கேலியாகக் கேட்டார்.
“ஊர்ல இருந்து மச்சினன் வந்திருந்தான்… அதான்..”
“மச்சினன் வந்திருந்தான், மாமன் வந்திருந்தான்னா இங்க சூப்ரெண்டுக்கு யார் பதில் சொல்லுறது? மேலூர் தங்கையா பாண்டியன் ரிப்போர்ட் என்ன ஆச்சு?…”
“ரெண்டு தடவை மேலூருக்குப் போயும் அந்த தினத்தந்தி ரிப்போர்ட்டரைப் பார்க்க முடியல. அவன் கிட்டே பேசித்தான் தகவல் எடுக்கணும்… அடுத்த வாரம் குடுத்திருதேன் சார்…”
“மேலூரை விடு… இந்தத் திடீர் நகர் மதுரைக்குள்ளதானப்பா இருக்கு… மயிராண்டி அந்த ஆளு ரிப்போர்ட்டைக் குடுக்கதுக்கு என்ன?”
“அதைத்தான் கொண்டு வந்திருக்கேன் சார்…”
“எஸ்.பி. நெதசரி என்னைப் புடுங்குதாரு. எப்பம் போன் போட்டாலும்… ஃபோன்ல இந்தா வாரென்.. அந்தா வாரேன்னு போக்குக் காட்டுதே…”
“அதுக்குள்ள இந்தச் சாரு மஜும்தார் அஸைன்மெண்ட் குடுத்துட்டாங்க சார்…”
“அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்லுதே?” என்று சொல்லிக் கொண்டே ஊர்க்காவலன் பீட்டர் நீட்டிய ரிப்போர்ட்டை வாங்கினார்.
அதில் சீல் வைத்து ரிஜிஸ்டரில் எண்ட்ரி எழுதினார். அதுவரை அவருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தவன், சற்று நம்பிக்கையோடு அவருக்கு எதிரில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். இனிமேல் அவருடைய வேகம் தணியும் என்று நினைத்தான். ஊர்க்காவலன் தலைக்கு மேலே பார்த்தான். சூப்பிரண்டு அறையில் ஃபேன் சுற்றிக் கொண்டிருந்தது.
“உனக்கும் எனக்கும் என்ன?… எனக்கு வெள்ளிக்கெழம ஆனா ரிப்போர்ட் வந்துரணும். இல்ல ரெடி பண்ணலைன்னா அதப் போன்லயாவது சொல்லலாமில்லையா? … நீ பாட்டுக்கு மயிரான் மாதிரி இருந்தா, அந்த ஆளு கேட்டா யார் பதில் சொல்லுதது?..”
“இனிமே அப்பிடியே நடந்துக்கிடுதேன்..”
“சரி,… போ… போ..” என்று விரட்டினார். எழுந்து நின்று சல்யூட் அடித்தான் பீட்டர். ஊர்க்காவலன் எதிரே ஒருவன் நிற்கிற மாதிரியே காட்டிக் கொள்ளாமல், எதிரே இருந்த பேப்பர்களுக்குள் மூழ்க ஆரம்பித்தார்.
மா லை வரை சாரு மஜும்தார் நன்றாகத் தூங்கினார். அதற்குள் பாலகிருஷ்ணனும், துரைப்பாண்டியும் அவர் கொடுத்திருந்த பிரசுரங்களைப் படித்து விட்டனர். துரைப்பாண்டி ரொம்ப உற்சாகமாக இருந்தான். பாலகிருஷ்ணன் சாரு மஜும்தார் சொன்னபடி ஸ்டடி சர்க்கிள் அமைக்க எப்படி ஆள் பிடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார். கூடவே ‘இதெல்லாம் எதற்கு’ என்றும் தோன்றியது. அவர் தூர விலகினாலும், துரைப்பாண்டி அதில் மும்முரமாக இறங்கி விடுவான் போலிருந்தது. அவன் அந்தப் பிரசுரங்களைப் படிக்கும் போதே அவர் எழுதியிருந்ததைப் பாராட்டிக் கொண்டிருந்தான். அரைக்காலனி, அரை நிலப்பிரபுத்துவம் என்பதெல்லாம் சரிதான். ஆனால் ரஷ்யா, சீனாவில் நடந்த மாதிரி அவ்வளவு பெரிய நாடு தழுவிய போராட்டத்தைப் பற்றி எங்கோ மூலையிலுள்ள மதுரையிலிருந்து கொண்டு யோசிக்கவே என்னவோ போலிருந்தது. கோபால் பிள்ளை அண்ணாச்சி நினைப்பது சரிதான் என்று தோன்றியது.
“சார் என்ன யோசிச்சுகிட்டு இருக்கீங்க?… இதை நான் வீட்டுக்கு எடுத்துட்டுப் போயி இரண்டு மூன்று கார்பன் காப்பி எடுத்திட்டு வாரேன்” என்றான் துரைப் பாண்டி.
“எதுக்குக் கை வலிக்க எழுதிக் காப்பி எடுக்கணும்? திண்டுக்கல் ரோட்டு இருக்கிற பார்வதி டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்லே ஸைக்லோஸ்டைல் மிஷின் இருக்கு.. அதுல கொடுத்து ஸைக்லோஸ்டைல் பண்ணிரலாம்…ஆனா, இது வேணுமான்னு யோசிக்கேன்…” என்றார் பாலகிருஷ்ணன்.
“எது வேணுமான்னு?..”
“அதான் ஸ்டடி சர்க்கிள் ஆரம்பிக்கிறது….”
“அப்படின்னா?”
“இந்த அட்டெம்ப்ட் வேணுமா வேண்டாமான்னு கொழப்படியா இருக்குப்பா…”
“ஏன் குழம்புறீங்க சார்? … ஆள் சேருவாங்களா மாட்டாங்களான்னு யோசிக்கிறீங்களா? அதுக்கு நான் கியாரண்டி சார்… என் ஃப்ரெண்ட்ஸ்களே நெறையப் பேர் இருக்காங்க சார்… பக்கத்திலேயே நம்ம சோமு இருக்கான்…”
“அவம்லாம் பெரிய வீட்டுப் பையன்.. வர மாட்டான்…”
“சார் ஒங்களுக்குத் தெரியாது. அவன் நெறையப் படிக்கிறவன் சார்… எப்பப் பாத்தாலும் படிச்சுக்கிட்டே இருப்பான். அவன் பிரண்டு சபாபதி கூட வருவான்…”
“நீ சொல்றவங்க எல்லம் பெரிய பணக்கார வீட்டுப் பசங்க…”
“அதுக்கென்ன சார்?… இல்லைன்னா எங்க ஏரியாவுல நெறயப் பையனுக இருக்காங்க..” என்றான் துரைப்பாண்டி.
“சரி… பாப்பம்…” என்றார் பாலகிருஷ்ணன்.
வெங்கம்மா இரண்டு பேருக்கும் காபி கொண்டு வந்தார். அதை வாங்கிக் கொண்டே, “கோலப்பன் மத்தியானம் சாப்பிட வந்தானா வெங்கம்மா?..” என்று கேட்டார்.
“அவுக எப்பயோ வந்து சாப்புட்டுட்டுப் போயிட்டாக. ஒங்க பெரண்டு தூங்கி முழிச்சிட்டாக.. அவுகளுக்குக் காப்பிய எடுத்தாரட்டா?” என்றாள்.
“இரு… அவர் முழிச்சிட்டாரான்னு பாக்கேன்..” என்று, சாரு மஜும்தார் படுத்திருந்த அறைக்குப் போய்ப் பார்த்தார். அவர் எழுந்து உட்கார்ந்து பீடி குடித்துக் கொண்டிருந்தார். இருட்டில், பீடியின் தீக்கங்கு மட்டும் தெரிந்தது. சுவிட்சைப் போட்டார். சாரு மஜும்தார் சிரித்துக் கொண்டே அவரிடம், “நல்ல தூக்கம்” என்றார்.
மூவரும் பேசிக் கொண்டிருந்தனர். வெங்கம்மா சாரு மஜும்தாருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள். அவர், “இது காபியா, டீ தர முடியுமா?” என்று கேட்டார்.
“அதுக்கென்ன? டீ இருக்கு… வெங்கம்மா டீயே கொண்டுட்டு வா…” என்றார் பாலகிருஷ்ணன். அவருடைய அம்மா மாரியம்மா நடை கூடத்துத் திண்ணையிலேயே படுத்துக் கிடந்தாள்.
பாலகிருஷ்ணனும் துரைப்பாண்டியும் அவரது துண்டுப் பிரசுரங்களைப் பாராட்டினார்கள். ‘அதற்குள் படித்து விட்டீர்களா’ என்று சாரு மஜும்தார் ஆச்சரியப்பட்டார். சாயந்தரம் ஆறரை மணிக்கு ஆபீஸ் முடிந்து கோலப்பன் வந்தான். யாரோ அண்ணனுடைய நண்பர் வந்திருக்கிறார் என்று அவன் பின் வாசல் நடையில் காஃபி குடித்து விட்டு, அன்றைய தினசரியைப் படித்துக் கொண்டிருந்தான். அவர்களுடைய மகள் பள்ளிக்கூடம் விட்டு வந்து நடை கூடத்தில் பாட்டிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து வீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்தாள். வெங்கம்மாள் கண்ணாடி முன் நின்று தலை சீவிக் கொண்டிருந்தாள்.
ஏழு, ஏழரைக்கெல்லாம் எல்லாரும் தோசை சாப்பிட்டார்கள். சாரு மஜும்தார் பக்கத்தில் அடித்த பீடி நெடிதான் வெங்கம்மாவுக்குப் பிடிக்கவில்லை. சாப்பிட்ட பிறகு ஸ்டேஷனுக்குப் புறப்பட்டார்கள். சாரு மஜும்தார் வீட்டிலுள்ள எல்லாரிடமும் சொல்லிக் கொண்டார். பாலகிருஷ்ணனும், துரைப்பாண்டியும் அவரை ரயிலேற்றி விட ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்கள்.
** ** **
12
கூத்தியார் குண்டுப் பிள்ளை என்கிற லெட்சுமணப் பிள்ளை, வீட்டுக்கு முன்னால் போட்டிருந்த பெரிய கொட்டகைப் பந்தலில், திண்ணைக்குக் கீழே நார்க்கட்டிலைப் போட்டு உட்கார்ந்திருந்தார். அந்த நார்க்கட்டில் எப்போதும் அந்த இடத்தில்தான் கிடக்கும். மழை வந்தால்தான் அதை எடுத்துத் தார்சாவில் போடுவார்கள். வீடு நல்ல உயரமான மோட்டா வீடு. ஒரு பெரிய கல்யாணத்தையே நடத்தலாம். வீட்டுக்கு வலதுபுறம் வில் வண்டி நின்றிருந்தது. முன்பு அந்த வில் வண்டியில்தான் மதுரைக்கெல்லாம் கூத்தியார் குண்டுப் பிள்ளை போவார். மதுரை நகருக்குள் மாட்டு வண்டி வரக் கூடாது என்று போலீஸ் தடை விதித்த பிறகு அந்த வண்டி சும்மாதான் நிற்கிறது. ஆனால் எப்பொழுதும் பூட்டத் தயாராக இருக்கிற மாதிரி, வேலைக்காரர்கள் அதை அடிக்கடி துடைத்து, சக்கரத்துக்கு மை எல்லாம் போட்டு வைப்பார்கள்.
லெட்சுமண பிள்ளையின் வாய் வெற்றிலையை மென்று கொண்டிருந்தது. நீளமான தலை முடியை முடிந்து கொண்டை போடாமல் கழுத்துக்குக் கீழே அப்படியே தொங்க விட்டிருந்தார். கையில் கட்டியிருந்த ரோமர் வாட்சைத் திருப்பி மணி பார்த்தார். காலை வெயில் அவர் காலடியில் விழுந்தது. அவருக்கு எதிரே நவநீதனும், கந்தனும் கைகளை மார்போடு சேர்த்துக் கட்டியவாறு நின்று கொண்டிருந்தார்கள். வீட்டுக்குள்ளிருந்து அவருடைய இரண்டாவது கடைக்குட்டி மகள் ஒரு சொம்பு நிறைய காபியும் தம்ளர்களும் எடுத்து வந்தாள். அந்தத் தம்ளர்களில் ஒன்றை அப்பாவிடமும், மற்ற இரண்டையும் நவநீதனிடமும், கந்தனிடமும் கொடுத்தாள். அப்பாவின் தம்ளரில் காபியை ஊற்றப் போனவளை லெட்சுமண பிள்ளை கையை நீட்டித் தடுத்து, “அவங்க ரெண்டு பேருக்கும் மொதல்ல கொடும்மா..” என்றார். கந்தன், “இப்ப எதுக்கய்யா காப்பி?” என்றான். “ஏய்..சும்மா குடிப்பா..ரெண்டு பேரும் காலையிலேயே தண்ணி பாச்சக் கெளம்பிப் போயிருப்பீங்கடா… கூச்சப்படாமக் குடியுங்கடா..” என்று சொன்னார். கற்பகம், அப்பா சொன்னதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே அவர்களுடைய தம்ளர்களில் காபியை ஊற்றினாள். அவருக்கும் ஊற்றினாள். கருப்பட்டிக் காப்பி மணத்தது.
“என்னம்மா காலேஜுக்குக் கொண்டு போக வேண்டியதெல்லாம் எடுத்து வச்சிட்டியாம்மா… சரியா எட்டு மணிக்குக் கெளம்பிருவோம்,” என்றார்.
“எல்லாம் நேத்தே எடுத்து வச்சாச்சுப்பா. நான் ரெடியாத்தான் இருக்கேன்.” என்றாள் கற்பகம். காபிச் சொம்புடன் உள்ளே போனாள். நவநீதனும், கந்தனும் சற்றுத் தள்ளி நின்று அண்ணாந்து காபியைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
“சரிடே.. அப்பம் தேங்காய் பறிய ரெண்டு நாள் கழிச்சு வச்சுக்கிடலாம்டே… நான் மதுர வரைக்கியும் போக வேண்டியது இருக்கு. போயிட்டு இன்னைக்கி ராத்திரி இல்லைன்னா நாளை மத்தியானத்துக்குள்ள வந்திருவேன். சின்னவளைக் காலேஜிலே சேக்கணும்.. இப்பம் வீட்டுக்குப் போயிட்டு சரியா எட்டு மணிக்கு யாராவது ஒருத்தன் பஸ் ஏத்தி விட வாங்க…” என்றார்.
“நானே வாரேன் ஐயா…” என்றான் கந்தன்.
“சரி… போயிட்டு வா..” என்றார் கூத்தியார் குண்டுப் பிள்ளை. கூத்தியார் குண்டு ஊர் மெயின் ரோட்டிலிருந்து கால் மைல் தள்ளியிருந்தது. கிழக்குப் பக்கத்திலிருந்து லேசான காற்று நிதானமாக வீசிக் கொண்டிருந்தது. காற்றில் ஈரமான பனை ஓலைகளின் வாசனையும் சேர்ந்து வந்தது. பச்சேரிப் பக்கமிருந்து சேவல் கூவுகிற சத்தம் விட்டு விட்டுக் கேட்டது. கூடவே தெளிவில்லாத பேச்சுக் குரல்களும் கேட்டன.
*** *** ***
மதுரை பஸ்ஸ்டாண்டில் கூத்தியார் குண்டுப் பிள்ளை கற்பகத்துடன் வந்து இறங்கும்போது ஒன்பதரை மணியாகி விட்டது. ஒரு மூட்டையில் புளியும், வெங்காயமும், மிளகாய் வற்றலும் போட்டு எடுத்து வந்திருந்தார். பஸ் ஸ்டாண்டில் இறக்குவதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. பக்கத்து ஸீட்டில் உட்கார்ந்து வந்தவர் மூட்டையை இறக்கிக் கீழே வைக்க உதவினார். கற்பகம் கையில் கொஞ்சம் பெரிய பெட்டியே வைத்திருந்தாள். அவருடைய ஒரு ஸெட் கதர் வேட்டியும், சட்டையும் ஒரு துணிப் பையில் இருந்தது.
“பெட்டியைத் தூக்கிக்கிட்டு ஏன் நிக்கே… அதைக் கீழே வையி.. நான் போய் ரிக்ஷா பாத்துட்டு வாரேன்…” என்றார். கற்பகம் பெட்டியை மூட்டையின் அருகில் வைத்தாள். பஸ் ஸ்டாண்டில் கூட்டம் அவ்வளவாக இல்லை. “நீங்க போயிட்டு வாங்கப்பா… சாமான்கள நான் பாத்துக்கிடுதேன்…” என்றாள் கற்பகம். லெட்சுமணப் பிள்ளை ரிக்ஷாவைத் தேடிப் போக பிளாட்ஃபாரத்தை விட்டுக் கீழே இறங்கியதுமே, தலைப்பாகை கட்டிய ஒருத்தன் அவரிடம் வந்து, “அய்யா, வண்டி வேணுமா?..” என்று கேட்டான்.
“ஆமா.. ரிக்ஷா வேணும்.. மேலமாசி வீதி போகணும்..”
“போகலாமய்யா… நான் வண்டிய எடுத்துட்டு வாரேன்..” என்று நகர்ந்தான்.
“நில்லுப்பா.. கூலி எம்புட்டு?”
“ரெண்டு ரூவா குடுங்கய்யா.. நானும் ஒண்ணும் அதிகமா கேக்கற ஆளு இல்லய்யா…”
“எட்டணா கொறச்சுக்கோ…”
அவன் ஊத்தைப் பற்கள் தெரிய லேசாகச் சிரித்தான். “சரிங்கய்யா.. ஒங்க விருப்பம் போலக் கொடுங்க..” என்று சொல்லி விட்டு ரிக்ஷாவை எடுத்து வரப் போனான்.
கற்பகத்துக்கு அப்பா இரண்டு ரூபாய்க்கே ஒத்துக் கொண்டிருக்கலாம் என்று பட்டது. அவள் கட்டியிருந்த பட்டுப் பாவாடையும், தாவணியும் காற்றில் அசைந்தன. தாவணி தோளை விட்டு நழுவியது. அதை இழுத்துப் போர்த்து முந்தியை பாவாடைக்குள் சொருகிக் கொண்டாள். சிறிது தள்ளி சாதிக்காய்ப் பெட்டியைக் கவிழ்த்துப் போட்டு அதில் கட்டிய பூக்களை வாழை இலை மீது வைத்து விற்றுக் கொண்டிருந்த வயதான பெண்ணிடம் அவள் சுற்றி வைத்திருந்த மல்லிகைப் பூப்பந்தை விலை பேசி லெட்சுமணப் பிள்ளை வாங்கினார். அதில் ஒரு ஐநூறு பூவை நறுக்கித் தரச் சொன்னார். அந்தத் துண்டை கற்பகத்திடம் கொடுத்து, “தலையில் வச்சுக்கோ.” என்றார்.
பூவைத் தலையில் வைத்துக் கொண்டே, “எதுக்குப்பா இம்புட்டுப் பூவு…” என்றாள் கற்பகம். “இருக்கட்டும்மா.. அங்க வீட்டுல எல்லாருக்கும் வேணும்மா..” என்றார். ஒரு பஸ் ஹார்ன் அடித்துக் கொண்டே பஸ் ஸ்டாண்டுக்குள் வளைந்து திரும்பிச் சென்றது. அதற்குள் ரிக்ஷா வந்து விட்டது. ரிக்ஷாக்காரனுடன் சேர்ந்து மூட்டையைத் தூக்கப் போனார் கூத்தியார் குண்டுப் பிள்ளை. அவன், “எதுக்கய்யா? … வேண்டாம். நானே தூக்கி வச்சிருவேன்…” என்றான். கால் வைக்கிற இடத்தில் மூட்டையைப் போட்டான். பெட்டியைத் தூக்கி மூட்டையின் மீது வைத்து விட்டுப் “புடுச்சுக்கிடுங்க..” என்றான். கால் வைக்கச் சங்கடமாகத்தான் இருந்தது. அட்ஜஸ்ட் செய்து ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். டவுன்ஹால் ரோடு வழியாக ரிக்ஷா சென்றது.
சீதா பவனத்தின் முன்னால் ரிக்ஷாவை நிறுத்தச் சொன்னார் கூத்தியார் குண்டுப் பிள்ளை. ரிக்ஷாவை விட்டு இறங்கி, தலைமுடியை அவிழ்த்து இறுக்கமாகக் கொண்டை போட்டார். அவர் அணிந்திருந்த கதர்ச் சட்டையிலிருந்து லேசான வியர்வை வாடை வெளுப்பு வாசனையுடன் கலந்து வந்தது. சாமான்களை எல்லாம் இறக்குவதற்குள்ளேயே கற்பகம் சீதா பவனத்துக்குள் வேகமாக நுழைந்து விட்டாள். அவளுக்கு அக்காவையும், அத்தை, அத்தான், பெரிய அக்காவை எல்லாம் பார்க்கிற அவசரம். ரிக்ஷாக்காரன் சாமான்களை எல்லாம் எடுத்து வந்து கூடத்தில் வைத்து விட்டு, அவரிடம் கூலி வாங்கிக் கொண்டு போனான். சரோஜா உள்ளே இருந்து ஓடி வந்து மூட்டையின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு சிரித்தாள். கூத்தியார் குண்டுப் பிள்ளை அவளுடைய முதுகில் தட்டிக் கொடுத்தார். அவருக்குக் கசகசத்தது. உடனே சட்டையைக் கழற்றிப் போட வேண்டும் போலிருந்தது.
உள்ளேயிருந்து சோமு, மீனாட்சி, ராஜி, சீதா எல்லோரும் வந்து அவரிடம் குசலம் விசாரித்தார்கள். கற்பகம் அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டாள். ஒரே சந்தோஷம் அவளுக்கு. லெட்சுமண பிள்ளையும் எல்லோரையும் விசாரித்தார்.
“அண்ணாச்சி, குளிக்கணும்னா குளிங்க…” என்று அவரிடம் சொன்னாள் சீதா.
“குளியல் எல்லாம் காலையிலேயே ஆயாச்சு.. என்னமா வெயில் அடிக்கி..” என்றார்.
“சரி… அப்பம் கையக் கழுவிட்டு வாங்க.. சாப்பிடலாம்…” என்றாள் சீதா.
“எம்மா… கூத்தியார் குண்டுலய எல்லாம் முடிச்சிடுத்தான் பஸ் ஏறினோம். கொஞ்சம் மோர் இருந்தாக் கொடு…” என்றார்.
“இருக்கு அண்ணாச்சி… ரெண்டு இட்லி சாப்டுட்டு மோர் சாப்பிடுங்க..” என்று உபசாரம் செய்தாள் சீதா. “இல்லம்மா.. மத்தியானம் சாப்பிட்டாப் போச்சு… எங்க போவுது சாப்பாடு? .. இப்ப மோர் மட்டும் கொடு.. போதும்…”
ராஜி, “அத்தைக்கி ஒடம்பு எப்படி இருக்கு?…” என்று விசாரித்தாள். “அப்பா… என்னப்பா திடீர்ன்னு கெளம்பி வந்திருக்கீங்க…” என்று விசாரித்தாள் மீனாட்சி.
“போன் கூடப் பண்ணலையே மாமா…” என்றான் சோமு.
“இன்னும் ரெண்டு மூணு நாள் கழிச்சு வாரத்தான் மொதல்ல ப்ளான். லேட் பண்ண லேட் பண்ண ஒரு வேளை காலேஜ்ல கற்பகத்துக்கு சீட் கெடைக்காமப் போயிடுமோன்னு தோணிச்சு… அதான் கெளம்பி வந்துட்டோம்..” என்றார். ராஜி, பெட்டி, பையை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் இரண்டாம் கட்டில் வைத்தாள்.
“எம்மா, அக்கா ஒத்தையில தூக்கிட்டுப் போறாளே. நீ எடுத்து வச்சா என்ன மீனா?…” என்று மீனாட்சியிடம் சொன்னார் லெட்சுமண பிள்ளை. மீனாட்சி சிரித்தாள். சட்டையைக் கழற்றி மீனாவிடம் கொடுத்து, “இதை உள்ள கொண்டுப் போயி போடு…” என்றார். மீனாட்சி சட்டையை எடுத்துக் கொண்டு உள்ளே போனாள். அவளுடன் கற்பகமும் சென்றாள்.
“சரோஜா… கீழே எறங்கு…” என்று சொல்லி விட்டு மூட்டையைச் சுவரோரமாக நகர்த்தப் போனான் சோமு. சரோஜா தலையை ஆட்டி, ‘முடியாது’ என்றாள். சீதா தம்ளரில் மோர் கொண்டு வந்து கொடுத்தாள். அதை வாங்கிக் குடித்தார் லெட்சுமண பிள்ளை. “அம்மா… இவளைக் கீழே எறங்கச் சொல்லும்மா…” என்றான் சோமு. சீதா அவரிடமிருந்து காலித் தம்ளரை வாங்கிக் கொண்டு, சரோஜாவைக் கூட்டிக் கொண்டு போனாள். சோமுவும் அவருமாக மூட்டையைச் சுவரோரமாகப் புரட்டி வைத்தார்கள். மொத்த வீடுமே சந்தோஷத்தில் நிறைந்திருந்தது.
(தொடரும்…)