புதையல்

“ஒருமுறை பார்ப்பதால் என்ன நடந்துவிடும்?” என்ற கேள்வியுடன் படிகளில் இறங்கினேன்.  கால்களில் மெல்லிய நடுக்கமிருந்தது.  வியர்வையில் நனைந்த உள்ளங்கைகளை கைக்குட்டையில் துடைத்துக் கொண்டேன். இருபுறமும் இழுக்கும் மனதின் கடிவாளத்தை இழுப்பதே வேலையாக இருக்கிறது. தமிழ் மேடமை பார்ப்பதற்கே எனக்கு உதறுகிறதே, இவங்க எப்படி அவரை? அதுவும் அவரின் திருமணத்தில் பார்த்துவிட்டு வந்திருப்பார்.

“எரிக்கத்தான் நினைத்தேன்

உன் நினைவுகளை,

புதைப்பதும் விதைப்பதும் புதையலாகுமே,

புதைத்துவிட்டேன்…நீ என் புதையலல்லவா?”

இந்த வரிகளை தமிழ்மேடம் கொடுத்த புத்தகத்தின் பின்புறம் அவரின் விசிறியடிக்கும் கையெழுத்தில் வாசித்ததிலிருந்து மனம் அந்தப் புதையலை அவரின் வார்த்தைகளில், பார்வையில், புன்னகையில் தேடிக்கொண்டேயிருந்தது.

இன்றைக்குப் பார்த்து தாவணியை அணிந்து வந்து,  பாவாடை நான் இறங்க எனக்கு முன்னே விரிந்து போகிறது என்று நினைத்துக் கொண்டே தமிழ்த்துறையின் வாசலில் நின்றேன். ஒருமுறை முகம் பார்த்துவிட்டால் போதும். அதிலென்ன வந்துவிடப்போகிறது? தெரியவில்லை. ஆனால் பார்க்க வேண்டும்.

உள்ளே குரல்கள் கலந்து ஒலித்தன.  “என்னம்மா? யாரைப் பார்க்கனும்?”என்ற சுருட்டைமுடி விரிவுரையாளரை அங்கங்கே பார்த்த நினைவு.

“தமிழ்மேம் பார்க்கனும்.”

“எல்லாரும் கவனிங்க. . தமிழ்மேம் பார்க்கனுமாம்,” என்றதும் அனைவரும் திரும்பிப் புன்னகைத்தார்கள்.

“கொஞ்சம் தள்ளுங்க,” என்ற குரல் வந்த திசையில் பார்த்தேன்.

நாற்காலியில் அமர்ந்தபடி சந்தனசதுரமுகம்,  “நினைச்சேன். என்ன வேணும்?”என்றது. ஒருபக்கமாக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தார். திருமணத்திற்கு சென்றுவந்த களை வெண்பட்டிலும்,  மல்லிகையிலும்,  நெற்றியின் குங்குமத் தீற்றலிலும் தெரிந்தது.

வார்த்தைகள் வெளிவரமுடியாதென்று நின்றுகொண்டன.

“இந்த நேரத்தில வகுப்பில்ல?” என்று சொல்லியபடி முன்நகர்ந்து மேசையில் கைகளை வைத்தார்.

“…. .,” நான் பேசவில்லை.  வித்தாரக் கள்ளி.  வெளஞ்செடுத்த நடைமுறைவாதி. . இதில கவிதை எழுதணுமா?. . இந்தப் பிறவிக்கு உங்களுக்கு கவிதையில்ல என்று என் மனம் பாய்ந்தது.

“என்னன்னு கேளுங்க கோபிகா. . “என்றார் அந்த சுருட்டைமுடிவிரிவுரையாளர்.

“என்னவாயிருந்தா என்ன?” என்ற சங்குகுரல் பின்னால் ஒலிக்க படிகளில் ஏறினேன். தாட்சண்யமில்லா ருத்ரா… கடித்துக் குதறுவதற்குள் தப்பிப்பது சரியான செயல். பாவாடை தடுக்கிக் கொண்டேயிருந்தது.

வகுப்பறையின் முதல் பெஞ்சின் கீழ்கம்பியில் அரையடி உயரத்தில் இடதுகாலை தூக்கிவைத்து, வலதுகாலை கீழேஊன்றி நிமிர்ந்து நின்று, “சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா…,” என்று தன் சங்குக்குரலில் முதல்வகுப்பில் கோபிகா மேடம் கவிதை வாசித்துமுடித்து,  “பாரதி வரிசையா சொல்றத பாத்தீங்கன்னா…ஒருகுழந்தை படுத்திருந்து, எழுந்து, நடந்து, ஓடி வந்து முத்தம் கொடுத்து, பின்னாடி மெல்லச் சிணுங்க, அதைச் சமாதானப்படுத்தி அது வெளிப்படுத்துகிற அன்பில் தெய்வத்தை உணரமுடியும். அதுக்குப் பிறகு கவிதை மறக்காது. அதுவும் உங்களுக்குப் பழக்கமான குழந்தை மனதில வந்திடுச்சுன்னா கவிதை அவ்வளவுதான்,”என்றார்.

அன்றே ஏனோ வகுப்பில் அனைவருக்குமே அவர்மீது பிடிப்பு உண்டாகிவிட்டது.  மூன்றாமாண்டு தொடக்கவிழாவில்,”நீ பெத்த பிள்ளைய இன்னொருத்திக்குன்னு ஊர் சொல்லக் குடுப்பியா? உன் கவிதையே நீயே வாசி,”என்றுதான் கோபிகா மேடம் என்னிடம் தனிப்பட்டமுறையில் முதலில் பேசினார்.

“இந்த வயசில மோகமுள் வாசிக்கலாமே. சும்மா வீரக்கதைகளில் காலத்தை ஓட்டாத”

அடுத்த வாரத்தில், “எப்படி எழுதியிருக்கார் ஜானகிராமன்?”

புன்னகைத்தேன்.

“ஒத்த ரசனை உள்ளவங்கக்கூட பேசலாம். உன்னையப் பேசக்கூடாதுன்னு சொல்லிச் சொல்லி வளத்திருக்காங்க,”என்றார்.  நூலகத்திற்கு வெளியில், விடுதிக்கு வெளியில்,  விடுதியின் அகலப்படிகளில்,  விடுதியின் உள்மைதானத்தில் தேநீர் நேரத்தில், தொலைக் காட்சி அறையில் என்று பார்க்கும் நேரமெல்லாம் பேசிக் கொண்டேயிருப்பார்.

இன்று ஏப்ரல் கோடை. வெயில் முற்றி ஒரு எடையென புறத்தே சூழ்ந்திருக்கிறது. உடல் மென்னீரத்தில் கசகசத்தது. கைக்குட்டையால் கழுத்தைத் துடைத்துக் கொண்டு நடக்கிறேன். யாருமற்ற முதுநிலை இரண்டாமாண்டு வகுப்பறையில் அமர்ந்து வெறுமனே சன்னலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு நேரம் என்று தெரியவில்லை.  ஆய்வகத்திலிருந்து பிள்ளைகள் வந்து பைகளை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்கள்.

“நினக்கு எந்தா ஜோலி? கட் அடிச்சோ ப்ரியே?”

“நல்ல குட்டியானூ. அது கொண்டு நினக்கு யான் அட்டண்டென்ஸ் கொடுத்து”

“தேங்ஸ் ஜெனு,” என்றபடி கிளம்பினேன்.

“விழுந்தது தூசெனில்

வெளிக்கொணர வழிகள் பல உள.

நீயெனில்…. ?!”

மேடமின் புளியமரத்தின் கதையின் பின்புறம் இந்தவரிகளைப் பார்த்த நினைவு. அதை வாசித்த அன்று,  கல்லூரிக் கட்டடத்தின் மையத்தில் மேல்தளங்களின் படிகள் சந்திக்கும் மையநடைப்பாதை,  மழைக் கால ஈரத்தில் மின்னிக் கொண்டிருந்தது.

“பாத்து மேம்,” என்ற எங்கள்குரல்கள் அவரை அடைவதற்குள் கீழே விழுந்துவிட்டிருந்தார். எழமுடியாத வலி அவர்முகத்தின் சுருக்கங்களில் தெரிந்தது. அருகில் செல்லக்கூடாது என்று என் பிரக்ஞை அவர் விழுந்த நொடியே ஆணையிட்டிருந்தது. மாற்றுப் பாதையில் நடக்கத் தொடங்கினேன். அருகில் சென்றவர்களை விலக்கி, மேடம் தானே எழுந்து வருவதை மேலிருந்து பார்த்த பின் வகுப்பிற்கு சென்றேன்.

அடுத்த நாள் விடுதியின் முன்னாலிருந்த சிமெண்ட்கட்டையில் புத்தகத்தை திருப்பிக் கொண்டிருக்கையில் தமிழ்மேம் வந்ததும் எழுந்தேன்.

“லைப்ரரி போறியா? இல்ல பிள்ளைகளோட சேந்து ஆடறியா?”

“போறேன் மேம்,” என்று இயல்பாக அவருடன் நடந்து வேகத்தைக் குறைத்தேன். மஞ்சளாய் பூத்திருந்தன மரங்கள். பூ விழுந்ததும் ஏந்திக்கொள்ள காத்திருந்தது புல்தரை. சிமெண்ட் சாலையில் தேங்கியிருந்த நீரைக் கடந்து செல்ல எத்தனிக்கையில் என் தோளில் விழுந்தது கரம்.  தளிர்நடைக்கு ஈடுகொடுத்து நடந்தேன்.

“உனக்கென்ன நோகாமல்

நோக்கிவிட்டாய்…

இங்கே

வெந்தும் தணியாதது

என் மனக்காடாயிற்றே?”

இது அவரின் கையேட்டில் பார்த்ததாக நினைவு. கோடையில் வயல்வீட்டில் இருப்பதைப் போன்ற நாட்கள் அவை. முளைக்கக் காத்திருக்கும் விதைகள், நனையக் காத்திருக்கும் மண். மழை வருமா?

“கி. ரா தெரியுமா? லைப்ரரியில் இடதுபக்கம் அந்த மூணாவது ரேக்ல தேடிப்பாரு,”என்ற பின், எங்கேயோ பார்த்தபடி நடக்கும் ஒருபார்வை. எதையுமே பார்க்காமல் தன்னுள்ளே அவர் சென்று கொண்டிருந்த நாட்கள் அவை.

“தம்பிய எம். பி. பி. எஸ் சேத்ததுனால கை இறுக்கமா இருக்கு. புதுசா என்ன புத்தகம் வாங்கின?”

“தரேன் மேம்,” என்பதற்குள் அவரின் காரணமில்லாத ஒருசிரிப்பு. குழந்தைகளுக்கானது அல்லது ஞானிகளுக்கானது என்று நினைத்திருந்தேன்.  இந்தக் கணம் தெரிகிறது மையலுக்குமானதென்று.

“இந்த புடவையில என்ன பிழை சொல்லு பாக்கலாம்?”

“…. !”

“இங்க பாரு தெரியுதா? அப்பா நெய்யும்போது இப்ப ஒடைசல் விழுது. அந்த புடவையெல்லாம் எனக்கு வரவு. அது சரி பள்ளி கொண்டபுரம் வாசிச்சாச்சா?”

“ம்.”

“வாய திறக்காம இருக்க?”

“கொஞ்சம் பயம்ன்னு வச்சிக்குங்க.”

“பயமா?! என்ன நினைக்கிறேன்னு சொல்லு.”

“……ம்கூம். புத்தகத்துக்கு பின்னாடி எழுதியிருக்கறத்துக்குப் பேருதான் கவிதையா மேம்? …. மொக்கையா….,”  தலைகுனிந்து சிரிப்பை அடக்கிய என்தோளில் தட்டி,

“நம்ம எழுதறங்கற பேர்ல செய்றது என்னன்னு முதல்லபாக்கனும். அடுத்தவங்களப் பின்னாடி சொல்லாம்.”

“நீங்க நல்ல ஆசிரியர் மட்டும்தான்.”

“உனக்குத் திமிரு அதிகம்,” என்ற பின் கனிந்த ஒருபார்வை. அண்மைக் காலமாக எப்போதும் கனிந்து அதற்கு மேலும் ஒரு சலிப்பைக் காட்டும் தோரணை. இவையனைத்திற்கு மேல் இயல்பாக இருப்பதைப் போன்ற பாவனை. அது சாயமேற்றிய காய்கறிகளைப் போலத் தெரிந்து தொலைத்துச் சிரிப்பை உண்டாக்கும். தன் கீற்று விழும் அனைத்தையும் ஒளிரச்செய்யும் சூரியன் என.

“வயிறுவலின்னு படியிலயே குனிஞ்சு உட்கார்ந்திருந்தா சரியாயிடுமா? தினமும் பேரிச்சப்பழம் சாப்பிடணும். நான் வெந்தயப்பொடி வச்சிருக்கேன். தரேன்.”

“சரி மேம்.”

“என்னாச்சு உனக்கு? எழுதறங்ற  பேர்ல என்ன பண்ணி வச்சிருக்க? இந்த மெதப்பெல்லாம் உதவாது,”என்று தொடர்பேயில்லாமல் வேறொன்றுக்குத் தாவும் நிலையின்மை.

“இவங்களுக்கு முதல்ல எலுமிச்சம்பழம் தரனும்,” என்று மனம் சொல்லும்.

“ஈமெயில் அனுப்பு…

……

கனவு காண்

காதல் செய்

கிழிந்து போ

கீழாயும் இரு

குடை பிடி

கூப்பிடுமுன் ஓடு…. .”

என்ற அவரின்வரிகளை வாசித்த அன்று,”இதெல்லாம் சுத்தப் பயித்தியகாரத்தனம்,”என்றேன்.

“இந்த வரிகளைத்தானே சொல்ற…சும்மா எழுதிப்பாக்கறது தான். நீ எப்பவுமே நெகட்டிவ்வா யோசிக்கற. உன்ன மாத்திக்கனும் ப்ரியா.”

“ம்…,” என்றேன்.

“இதெல்லாம் துப்பறியறது உன் வேலை இல்ல. என்ன? மினுமினுன்னு இருக்க?”

“நீங்க வேற. . ரெக்கார்டெல்லாம் முடிச்சாச்சு. கொஞ்சநாளா நல்ல தூக்கம். நீங்க கூடதான் மழபேஞ்ச நிலம் மாதிரி இருக்கீங்க. நான் ஏதாச்சும் கேக்கறனா? ரசிச்சிட்டு போவீங்களா.”

“வாய் கூடிருச்சு. ஃப்ரண்ட்ஸ் கிட்ட பேசுவியோ!”

“எல்லாரும் ஃப்ரண்ட்ஸ் தான். சுதந்திரமா பேசறது ரெண்டு பேருக்கிட்ட.”

தினமும் கல்லூரி செல்லும் அந்தப் பத்து நிமிடங்கள் எத்தனையோ முகங்களாக,  கதைகளாக, கவிதைகளாக எங்களிருவருக்கும் இன்றுவரை விரிந்து கொண்டிருக்கின்றன.

சிற்றுண்டிச் சாலையின் முன்னிருந்த புல்வெளியின் கருங்கல் பாலத்தில் அமர்ந்தேன். பொறிப்பதும், உண்பதும்,  அரட்டையுமாக நாற்காலி மேசைகள் உராயும் ஒலிகள் காதுகளை குத்தின. எண்ணெய் கரும்தாச்சியில் கொதித்துக் கொண்டிருந்தது.

கோடைகாலத்தின் ஒளி எஞ்சும் அந்தி. அமர்ந்திருந்த இடத்தின் வெப்பத்தை உடல் உணர்த்தியது. ஒரு சுயவன்மம் அங்கிருந்து எழவிடாமல் செய்தது. எதுவும் செய்ய இயலாமலிருப்பதன் ஆற்றாமை.

தோழியோடு பேசியபடி தமிழ்மேடம் விடுதிக்குத் தளிர்நடையில் செல்கிறார். மயிலின் தோகை என அவரின் வெண்பட்டின் அரக்கு முந்தானை,  பிடித்திருந்த கையின் அசைவிற்கேற்ப சுருங்கி விரிகிறது.

கொஞ்சம் பேய் இறங்கியிருக்கிறது. சாந்தினி …சரிதான் இன்னும் கொஞ்சம் காத்திருக்கலாம் என நினைத்து எழுந்து மேற்கே விடுதி நோக்கி நடந்தேன்.

இளநிலையில் முதலிரண்டு ஆண்டுகள் தமிழ்மேம் வட்டத்திற்கு வெளியே தான் நின்றிருந்தேன். வகுப்புக்கு ஆசிரியரல்லாத மூன்றாம் ஆண்டில் தான் வட்டம் மெல்ல மெல்ல என்னை உள்ளிழுத்தது. ஆசிரியரல்லாமலாகும் போது அதற்கு மேலான ஒரு பிணைப்பு பிறக்கிறது.

“அம்மா வந்தாள் வாசிச்சேனியே …எப்படி?”

“தப்பா ஒன்னுமில்ல,”

“என்ன?!” என்ற தொனியில் வேகமிருந்தது பின் தணிந்து, “ம்”என்று புன்னகைத்தார்.

“எதுவுமே சொல்ற விதத்தில சரியா தெரியுது,” என்ற குரலில் இருந்த அவரின் உணர்வைப் புரிந்தபடி தலையாட்டினேன்.

“என்னன்னா…. ”

“என்ன?” என்றார் கோபத்தோடு.

“சரி, தவறு சொல்ல நாம யார்? அது அப்படித்தான்.”

“ம்,” என்றதுக்குப் பிறகு அவர் பேசவில்லை. இந்த ஜனவரியில்,  “காலையில செமினார் ஹாலுக்கு வந்திரு. ஒரு வி. ஐ. பி யோட உரையும் விவாதமும்,” என்றார்.

“மேம். . எனக்கு ப்ராக்டிகல்ஸ் இருக்கு.”

“உங்க டிபார்ட்மெண்டில் சொல்லிட்டேன். அந்த. . . சாண்டல் வித் மெருன் புடவை கட்டிட்டு வா”

“புடவையா?! முடியாது. அதை கவனிக்கவே நேரம் சரியாயிருக்கும். சுடிதாரில் எதுன்னு சொல்லுங்க”

“என்னோட கண்ணம்மால்ல நீ…புடவையில வா,” என்றதும் சிரித்துவிட்டேன்.

நான் காலையில் புடவையை இழுத்துப் பிடித்தபடி படிகளில் ஏறியபோதே,  மேடம் செமினார் ஹாலின் வெளியே பரபரவென்றிருந்தார்.

“ப்ரியா…பூச்செண்டு கொடுத்ததும் அவரை அந்த நாற்காலிக்கு நீ அழைச்சிட்டு போகனும்.”

“சரி மேம்”

“தண்ணி, பேனா, நோட்புக் அவருக்குன்னு…”

“சரி மேம்.”

“சேரோட இடதுபக்ககைப்பிடி சரியா இருக்கான்னு பாரு”

பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கவும் நான்,  “அந்த வாசகம் எப்ப சொல்லறது,” என்று எதையோ சொல்லி அவரின் கையைத் தொட்டுத் தனியே அழைத்து சென்றேன்.

“என்னாச்சு மேம்.”

“ஒன்னுமில்லையே…” என்றவரிடம் “உங்களை இப்படி பரபரன்னு பாத்ததில்லையே! பாத்து மேம்…கால் தவறப்போகுது. . எனக்கு பதட்டமா இருக்கு. என்ன?”என்றேன் ஆழ்குரலில்.

“……” வியர்வையைத் துடைத்துக் கொண்டார்.

“அந்த வி. ஐ. பி கூடவே இருக்கேன்…சரியா?. நீங்க மட்டும் பாத்து நடங்க.”

“ம்,” என்றபடி என் முந்தானையில் ஒரு நுனியை எடுத்து இடதுகையில் கொடுத்து “வேறஎதையும் பிடிச்சுக்கிட்டு திரியாத,” என்று புடவையைச் சிறகாக்கிவிட்டு சென்றார்.

“திருவாரூர் கல்லூரியின் தமிழ் பேராசிரியர் திரு. சங்கர் அவர்களை வரவேற்கிறேன். மேலும் நம் கல்லூரி…. . ” என்று தமிழ்மேடம் வாசிக்கையில் அவரின் வலதுகன்னத்தின் ஓரத்தில் வழிந்த வியர்வையைக் கண்டு அவர்உரையை முடிக்கும் முன் மைக்கை சரிசெய்வதைப் போல மேடை ஏறிக் கூடவே கீழிறங்கினேன். பின் அவரே மழைநின்ற ஓடையைப் போல நிதானத்திற்கு வந்தார்.

செமினார் முடிந்து பேசிக் கொண்டிருக்கையில் சங்கர்,  “இந்த பொண்ணுதான். . உன் கையாளா கோபிகா?”என்றவர் இடதுபுறம் கைப்பிடியில் விரலால் தட்டிக்கொண்டிருந்தார்.

“என்னது கையாளா? சார். . நான் பயாலஜி டிபார்ட்மெண்ட். உங்க உரை கேட்க வந்தேன்.”

“கோபிகாவும் நானும் காலேஜில் ஆறுவருசம் ஒண்ணா படிச்சோம். ஒரே ஊரு,”என்றார். அவரை காரில் ஏற்றிவிட்டு வந்து நாற்காலியில் அமர்ந்து,  “அப்பாடா” என்ற மேடமிடம் “என்னாச்சு மேம்?,”என்றேன்.

“தெரிஞ்சுகிட்டே எத்தன என்னாச்சு போடற நீ. .,” என்று அங்கிருந்த நோட்புக்கை என்மேல் வீசுவதற்காக ஓங்கினார். நான் சிரித்துக் கொண்டே,  “ஐயோ அது வி. ஐ. பி யோடது. உங்களுக்காக நான்தான் எடுத்து வச்சேன்,”என்று வகுப்பிற்கு கிளம்பினேன்.

மெல்ல இரவெழுந்தது. விடுதிப் பிள்ளைகளின் பேச்சொலிகளால், விளையாட்டுகளால் விடுதி சூழ்ந்து,  பறவைகளோடு காற்றில் குலையும் பெரும்வேம்பென இருந்தது. நிலவொளி விடுதியின்மேல் சரிந்துவிழத் தொடங்கியிருந்தது. பல அறைகளில் பிள்ளைகள்  உறங்கினார்கள். பலர் உள்மைதானத்தை நோக்கியிருந்த ஐந்து தளங்களுக்கான படிகளில்,  மைதானத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டோ, பேசிக்கொண்டோ இருந்தார்கள்.

நான்காம் தளத்தில் வராண்டாவில் நின்று நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மரங்கள் அசையாமல் நின்றிருந்தன. காற்று வரும் வரைக்கும்.

நான்காம் தளப் படிகளில் அமர்ந்திருந்த தமிழ்மேமிடம் பேசிக் கொண்டிருந்த அவரின் தோழி பத்மா மேடம் எழுந்து சென்றிருந்தார். தமிழ்மேம் நிலவொளியில் இடைவரை விரித்த கூந்தலுடன் கைப்பிடிச் சுவரில் சாய்ந்து நின்றிருந்தார். மூச்சை இழுத்துவிட்டபடி அவரைப் பார்த்துக்கொண்டு வராண்டாவில் நடந்தேன். வழியில் புத்தகத்தில் முகத்தைப்புதைத்து வித்யா உறங்கிக் கொண்டிருந்தாள்.

அப்போது அவர் அமர்ந்த இடத்தில் நல்ல நிலவொளி.  “என்ன ப்ரியா?” என்ற குரல் தளர்ந்திருந்தது. சக்யை…இனி பேசலாம். குரலைக் கேட்கையிலேயே என் கால்களில் ஒரு நடுக்கத்தை உணர்ந்தேன். மெல்ல படிகளில் இறங்கி அவரைத் தாண்டிச் சென்று நீட்டியிருந்த கால்பாதங்களை வைத்திருந்த படியில் அமர்ந்தேன்.

“இந்த கட்டம்போட்ட பாண்ட்டும், டீ சர்ட்டையும் முதலில் எரிக்கனும்,” என்றார் பத்மா. எண்ண ஓட்டத்தை மாற்றிக் கொள்வதற்காக என்னை இழுக்கிறார் என்று மூவருமே உணர்ந்தோம்.

“ஆமா பத்மா. சோளக்கொல்லைப் பொம்மை மாதிரி,”என்று தமிழ்மேம் புன்னகைத்தார்.

“இப்படி. . குரங்கு தாவுறது மாதிரி தாவனுமில்ல அதுக்குத்தான்…”என்றார் பத்மா.

அவரின் தோழி கொண்டுவந்த ஆறிப்போயிருந்த தக்காளிசாதத்தை உண்ணத் தொடங்கினார்.

விடுதியே உறங்கிக் கொண்டிருந்த விடுமுறை நாளொன்றின் பொன்னொளிர் காலையில்,   நான் வாளியுடன் குளியல் அறைக்குச் செல்கையில்,  கீழே இதே இடத்தில், இடைக்குக் கீழ் விரித்த கருங்குழல் காற்றிலசைய நின்று கொண்டிருந்த இவரைப் பார்த்து,  “பார்த்தசாரதியோட மோகனா மாதிரி இருக்கீங்க”என்ற என்னப் பார்த்துச் சிரித்த,  இந்த சந்தனமுகத்தின் புன்னகைத்த சித்திரம் அழியாதது. பேரியற்கையின் அருளொன்றால் ஒளிர்ந்த முகம். தான்படைத்த உயிரில் தான் நிறைந்து மீண்டும் தான் பிறக்க நெய்யும் ஒன்றின் ஓரிழை. அதைக் கோர்க்க எத்தனிக்கும் பொன்னொளிப் பொழுது. அந்தக் கனவைக் குரல் கலைத்தது.

“காலையில சங்கர் கல்யாணத்துக்குப் போன இடத்தில மண்டபத்துக்கு கொஞ்சதூரம் நடக்கறது மாதிரி ஆயிடுச்சு,” என்றவருக்குக் கால்வலிக்கிறது என்பது குரலில் தெரிந்தது.

“அந்த…” என்று எழுந்த என் மனதைத் தோளில் இருந்த அவர் கையால் உணர்ந்து, “கோபம் குணத்தக் கெடுத்துடும். அதுவும் உனக்கு பழக்கமில்லாத ஒருத்தர் மேல எதுக்கு?”

நிமிர்ந்து பார்க்காமல் பிறையென்றிருந்த சிவந்த பாதத்தின் வளைவை பிடித்து விட்டுக் கொண்டிருந்தேன்.

“எந்த நிலையில இருந்தாலும் அன்பை மட்டும் யாசிக்கக் கூடாது,” என்றவரிடம் பத்மா, “சுயமா முடிவெடுக்கத் தெரியாதவங்கள நேசிக்கவும் கூடாது,” என்றார்.

“எந்த யுகமானாலும் மனிதன் சூழ்நிலைக் கைதி” என்ற தமிழ் மேடமிடம், “மண்ணாங்கட்டி…,”என்றேன்.

“உனக்கு வயசு அப்படி. வாழ்க்கையில இழப்பு எழுத நினைக்கற மனசுக்கு வரவுன்னு வச்சிக்கலாம். உண்மையச் சொல்லனும் ப்ரியா. . . உற்றவனுக்குக் கூடத் தெரியாத கரவுகூட உன்கிட்ட இல்ல?”

“எனக்கென்ன விதியா?”

“அட அகங்காரி! . . . ம். . பெருமரங்கள் வீழும் பெருவெள்ளத்தில் நாணல் நிக்கற மாதிரி இல்லைன்னா தன்னைப் பயந்த நெருஞ்சி”

“இரண்டுமாக் கூட இருக்கலாம்,” என்றேன்.

“இருக்கலாம்ங்கற வார்த்தயைத் தவிர எதை நீ தெளிவாச் சொல்ற. அதைவிடு… எழுதனுங்கற. பின்னாடி எப்படி அகம் எழுதுவ?”

“அதுக்கெல்லாம் குறுக்குவழி வச்சிருக்கேன்.”

“ஐய்யோ . . என்ன அது?”என்று நெஞ்சில் கை வைத்து ஓங்கிச் சிரித்தவரின் முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தேன். கலங்கிச் சிவந்திருந்தன கருவரம்பிற்குள் கண்கள். என் கண்ணாடிக் கண்கள் அப்பட்டமாக வழிந்தன. பத்மா வேறுபக்கம் பார்த்துக் கொண்டு மூக்கைத் தேய்த்துக் கொண்டிருந்தார்.

நான் குரலைச் செறுமிக் கொண்டு, “அத எப்படிச் சொல்றது?ம்ம்ம் …இயல்பிலயே ஒவ்வொரு உயிருக்கும் இணை மேல இருக்கிற அன்புங்கறது பசி போன்ற ஒன்று. இல்லையா? அத உணரமுடியும்…. எப்படிச் சொல்றது?”

“புரியுது சொல்லு.”

“ம். அப்படின்னா அதுக்கான காரணப்பொருள் முன்னாடி இருக்கனுன்னு இல்லயே. நமக்கு தான் ஆறு அறிவு உண்டுல்ல. . ”

“ம்”

“அப்படியிருக்குமா? இப்படியிருக்குமாங்கற தேடல் உள்ள கற்பனை ரொம்ப அழகா இருக்குல்ல? காதல் கூட ஒரு அழகிய கற்பனை தானே. அப்படியே எழுத வேண்டியது தான்.”

“ஆண்டாள்……?”

“பெருமாள் மட்டும் எழுதப் போதுமா?”

“அப்புறம்!!”

“பாகைமானியில் ஒவ்வொரு கோட்டுக்கும் ஒவ்வொரு கோணமுண்டுல்ல. . அந்த மாதிரி.”

கைகளைக் கழுவிவிட்டு அமர்ந்தார்.

“நீ கணக்குன்னாலே தப்பு தப்பாதானே போடுவ ப்ரியா. .,” என்ற பத்மாவிடம்,  “பயாலஜின்னா கொஞ்சம் ஆபத்துதான் பத்மா. எல்லாமே ஹார்மோன் கணக்குதான் அவங்களுக்கு. . ”

“தூக்கம் வரலியா மேம்?” என்றேன்.

“தூக்கம் விட்டுப் போயி நாளாச்சு.”

“எனக்கு புரியல…எதுக்கு நீங்க?” என்ற என்னை இடைமறித்து,  “உனக்கு எதுக்கு புரியனும் ப்ரியா?”என்றவரின் குரல் பிசிரடித்தது. பாதங்களைப் பிடித்துவிடத் தொடங்கினேன்.

“இந்த வளைவை நிமித்தமுடியுமா ப்ரியா?” என்று அவரின் பாதங்களைப் பார்த்தார். பதில் சொல்லாமல் அந்த வளைவை அழுத்திக் கொண்டிருந்தேன்.

“தினமும் காலையில பாரதிய வாசிப்பியே இன்னக்கி என்ன?”

“நோவு வேண்டேன், நூறாண்டு வேண்டினேன்

அச்சம் வேண்டேன், அமைதி வேண்டினேன்

உடைமை வேண்டேன், உன் துணை வேண்டினேன்,”

என்ற என்குரலை இடைமறித்து,

“சிவனொரு பாகத்தாளே…. இந்தக் கண்ணீர் வேண்டேன், தேடிவரும் பேரன்பு வேண்டினேன்,”

என்ற சங்குக்குரல் மெளனித்தது. அப்போது ஏதோஒன்று இயல்பாக மாறியது. காற்று கடந்து சென்றது.  எப்போதும் சூழ்ந்திருக்கும் காற்று கடந்து சென்றுகொண்டேயிருப்பதும் தானே.

கடந்து… கடந்து….  கடந்து….  அந்த மரத்தை,  அதிலுறங்கும் புள்ளை, அடியில்நின்று இருட்டைத் துழாவும் நாய்களைக் கடந்து சென்று புல்வெளியின் தலைகோதி கடந்துகொண்டேயிருந்தது. எதனாலும் தடுக்கவோ,  தவிர்க்கவோ இயலாத காற்று. அது கடந்து செல்வதையும் ஒன்றும் செய்வதற்கில்லை. விடிய நெடுநேரமிருந்தது. தளர்ந்தமர்ந்து பெருமூச்சு விடும் ஒலிகேட்டுக் குனிந்து கால்களைப் பிடித்துக் கொண்டிருந்தேன். இனி, பேச எதுவுமில்லை என எங்கள் மூவருக்கும் தெரிந்திருந்தது.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.