[stextbox id=”warning” caption=”சொல்வனம் ஆசிரியர் குழுவுக்கு”]
எனது கட்டுரை ‘டாம் ஆல்ட்டர் என்றொரு கலைஞன்’ –ஐ பிரசுரித்தமைக்கு நன்றிகள் பல.
கட்டுரையில் இந்திய சினிமா டைரக்டர் ‘சத்யஜித் ரே’ யின் பெயர் ’சத்யஜித் ராய்’ என இரண்டு இடங்களில் தவறாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளதை சற்றுமுன் பார்க்க நேர்ந்தது. (மூன்றாவது இடத்தில் ‘ரே’ என சரியாக வந்திருக்கிறது). என்னுடைய கட்டுரையில் ‘ரே’ எனவே, சரியாகக் குறிப்பிட்டுள்ளேன்.
சொல்வனத்தில் இது ஒரு ‘typing/editing error-ஆ எனத் தெரியவில்லை. ஒருவேளை, ‘ராய்’ என்பதுதான் சரி என நினைத்து பிரசுரிக்கப்பட்டிருந்தால், அது தவறு என்பதற்கான சிறு விளக்கம்:
Bengali Surname RAY (ரே) : பெரும்பாலும் பெங்காலி காயஸ்த்து (க்ஷத்ரிய) குடும்பங்களின் ஜாதி/குடும்பப் பெயராக வழங்கப்படுகிறது. இத்தகைய குடும்பம் ஒன்றின் கீழ் வருபவர்தான் சத்யஜித் ’ரே’ (Satyajit RAY) (’ராய்’ அல்ல). His father Sukumar RAY was a poet/writer (One of my former colleagues was, one ‘Soman ‘Ray’ (சோமன் ரே) from Bengal).
ஏனைய புகழ்பெற்ற ‘ரே’-க்கள் (RAYs) : சந்தீப் ரே (Sandeep RAY) -பெங்காலி சினிமா தயாரிப்பாளர் , சித்தார்த் ஷங்கர் ரே (Siddarth Shankar RAY) : முன்னாள் மேற்கு வங்க முதல்மந்திரி (His name used to be wrongly pronounced as Rai in some circles in those days). Anand Shankar RAY, Bengali Poet, நிஹரஞ்சன் ரே (Niharranjan RAY), Indian Historian
Surname ROY (Bengali) : இவர்கள் பெங்காலி பிராமணர்கள். உதாரணம்: Indian social reformer Raja Ram Mohan ROY. இவர் ராஜா ராம் மோகன் ‘ராய்’ (ROY). (ஆனால், ’சத்யஜித் ரே’ இந்த ஜாதியில் வருபவர் அல்ல.), Prannoy ROY-media personality, Debashree ROY – a Bengali actress. (Writer Arundhati ROY is ofcourse from Kerala ! (to add to the confusion)
Surname RAI (Kannada): இந்த ‘ராய்’ கர்னாடகாவின் ஜாதி வகைகளில் ஒன்று.
புகழ்பெற்ற கன்னட ‘ராய்’கள் (RAIs): ஐஷ்வர்யா ராய் Aishwarya RAI), நடிகர் பிரகாஷ் ராஜ் (ராய்) (He is originally Prakash RAI from Kannada !)
Another ‘RAI’ : This is a ‘title’ in erstwhile Punjab. Freedom fighter Lala Lajpat RAI is an example. He hailed from Punjabi ‘Hindu Agrawal’ caste.
I think I have clarified enough! சொல்வனம் இதழின் தரம் நன்றாகப் பராமரிக்கப்படுவதால், இயலுமானால், கட்டுரையில் ‘சத்யஜித் ரே’ எனத் திருத்தவும். At this stage, if you cannot do anything, let it go…!
அன்புடன்,
– ஏகாந்தன் 20-11-17.
[/stextbox]
[stextbox id=”alert” caption=”பெயரில் என்ன இருக்கு?”]
ஒரு சினிமா சுவரொட்டியின் படத்தை இணைத்திருக்கிறேன். இது விக்கியிலிருந்து எடுக்கப்பட்ட படம். ராயின் ‘ஜொய்பாபா பேலுநாத்’ என்ற சிறுவர் படத்தின் சுவரொட்டி இது.
இந்தப் படத்தில் ஜொய் பாபா பேலுநாத் என்ற படத்தின் தலைப்புக்கு மேல் சத்யஜித் ராயிர் என்ற சொற்கள் வங்க மொழி எழுத்துகளில் எழுதப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதே படம் சத்யஜித் ராயின் ‘official’ வலைத்தளத்திலும் உள்ளது.
இந்த முகவரியின் பக்கத்தில் இன்னொரு சினிமா சுவரொட்டியின் படமும் உள்ளது. அதிலும், ‘ஸோனார் கெல்லா’ என்ற படத்தலைப்புக்கு மேல் சிறு எழுத்துகளில் சத்யஜித் ராயிர் என்ற சொற்களைக் காண்பீர்கள்.
வங்க மொழியில் அவர் ரே என்ற பெயரைப் பயன்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை. இங்கிலிஷில் நீங்கள் சொல்வது போல இதர ராய்களிடமிருந்து தம் குடும்பத்தை வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள இப்படி அவர் செய்திருக்கலாம். ஆனால் சொல்வனத்தில் ஒரு கொள்கை- பெயர்ச் சொற்களை அந்தந்ந்த மொழிக் குழுவின் உச்சரிப்போடு பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறோம். இது எந்நேரமும் செயல்படாமல் சில சமயம் தோற்கலாம். காரணம் சில பெயர்களைத் தமிழில் எழுதுவது கடும் துன்பம். சத்யஜித் என்பதே சரியில்லை. ஸொத்யஜித் என்பது போல வர வேண்டும். அது ஸொ வும் இல்லை. இடையொலிகள் தமிழில் இல்லை. பற்பல இங்கிலிஷ் பெயர்கள் இடையொலியோடு வருவன, அவற்றைத் தமிழில் எழுத முடிவதில்லை.
தவிர ராயின் குடும்பம் முதலில் தேப் (அல்லது டேப்) என்ற பிற்பெயரைத்தான் கொண்டிருந்தது. அவருடைய மூதாதையர் ஒருவருக்கு கௌரவப்பட்டமாக மொஜும்தார் என்பது கொடுக்கப்பட்டது. அதுவும் பிற்பாடு மாற்றி, ராய் என்பது கொடுக்கப்பட்டிருக்கிறது- கௌரவப் பட்டமாக.
இந்த விவரங்களை நான் கொடுத்த அதே வலைத்தளத்தில் குடும்ப வரலாறு என்ற தலைப்பின் கீழ் உள்ள பக்கத்தில் பார்க்கலாம்.
இது தவிர ராம்காந்தோ மொஜும்தாரின் பேரன் காளிநாத் ராய், ஐந்து வயதில் ஹரிகிஷோர் என்ற உறவினரால் தத்து எடுத்துக் கொள்ளப்பட்டு, அவர் பெயர் உபேந்த்ர கிஷோர் என்று மாற்றப்பட்டு, கௌரவப் பெயராக ராய்சௌத்ரி என்ற அடைமொழி பெயரோடு சேர்க்கப்பட்டதாக வலைப் பக்கம் சொல்கிறது. இவர் ஸொத்யஜித் ராயின் தாத்தா. [ஹரிகிஷோர் என்பதை ஹொரிகிஷோர் என்று வங்காளிகள் உச்சரிப்பார்களா என்று எனக்கு நினைவில்லை.]
நீங்கள் குறிப்பிட்ட ’ரே’ என்ற உச்சரிப்பு பிரபலமாக ஒரு காரணம் இவர் குடும்பம் மரபு இந்துக் குடும்பம் இல்லை. ப்ரம்மோ சமாஜ் என்ற ஒரு கிளைக் குழுவைச் சார்ந்தவர்கள் இவர்கள். இந்த சமாஜிகள் பாதிக் கிருஸ்தவர்கள் போல என்பது என் நினைவு. சோதிக்க வேண்டும். யூரோப்பியப் பண்பாட்டின் தாக்கப்படி இந்து சமுதாயத்தை (மரபுக் குழுக்களை, பழக்க வழக்கங்களை) விமர்சித்து, ஏக இறைத் தத்துவத்தை மெச்சி, பற்பல செமிதிய நம்பிக்கை/ பழக்கங்களைத் தம் பழக்கமாக மாற்றிக் கொண்டு, அதே நேரம் இந்து மரபை முற்றிலும் அழிக்காமலும் வைத்திருந்த கூட்டம் இது என்று படித்த நினைவு. நீங்கள் சுட்டுகிற ரொபீந்த்ரநாத் தாகூரும் இந்த ப்ரம்மோ சமாஜிதான் என்று என் நினைவு. ஆனால் ரொபீந்த்ரநாத் தாகூர் ப்ரம்மோ சமாஜிகளின் பிரிவினை வாதத்தை எதிர்த்து, ஆதி ப்ரம்மோ சமாஜியம் என்பது திருந்திய இந்துவியம்தான் என்று வாதிட்டிருக்கிறார் என்று இன்று தெரிந்து கொண்டேன். இப்போது அவருடைய கோரா புத்தகத்தின் சாராம்ச வாதங்கள் நினைவுக்கு வருகின்றன.
இந்த வரிகளைப் பாருங்கள்:
He singled out Rammohun Roy as one of the greatest men produced in modern India. “But the Brahmo Samaj,” wrote Tagore, “is belittling Rammohun Roy by judging him as a Brahmo minus the Hindu society.” To be sure, because Tagore argued so forcefully for the idea of Hindu Brahmoism against Brahmo sectarianism, one could easily read into the letter the familiar Adi Samaj attitude of cultural nationalism. But in the context of the other letters it seems fairly certain that he aimed to integrate a smaller unit into a larger unit of Hindu society, while at the same time advocating that Hindu society integrate itself into the larger unit of Asian civilizations.
இது ப்ரம்மோ சமாஜின் ஒஃபிஷியல் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.
ஆக ப்ரம்மோ சமாஜிலேயே இந்து அடையாளத்தை வெட்டி விடும் போக்கும், மறுபடி இந்து சமூகத்தில் கலக்கும் போக்கும் ஒன்றுடன் ஒன்று மோதி இருக்கின்றன- போட்டி இட்டிருக்கின்றன. இன்று அந்த அரசியல் எங்கு உள்ளது என்பது இந்தத் தளத்தை மேலும் நுணுகி நோக்கினால் தெரியலாம்.
எனவே ராய் என்று பயன்படுத்தியதில் ஒரு பிழையும் இல்லை. ஆனால் சொல்வனத்துப் பழக்கம், கட்டுரை ஆசிரியரின் விருப்பம் எது என்று கவனித்து அது ஒரு அளவுக்கு ஏற்கக் கூடியதாக இருந்தால் அப்படியே விட்டு விடுவோம். ஷேக்ஸ்பியரை ‘செகப்பிரியர்’ என்றுதான் எழுதுவேன் என்று அடம் பிடித்தால், நம்முடைய அபிமான எழுத்தாளராக இருந்தால் விடுங்க, அவர் சொல்றபடியே போடுவோம் என்று அப்படியே அச்சிடுபவர்களும் இருக்கிறார்கள். 🙂
உங்கள் கடிதத்தின் விளைவாகப் பல புது விஷயங்களை இன்று அறிந்தேன். இந்திய வரலாறு 19-20 ஆம் நூற்றாண்டுகளிலேயே கூட மிகவும் செடுக்கானது. இத்தனைக்கும் நிறைய ஆவணப்படுத்தப்பட்ட காலம் இது. அதைக் கூட ஒழுங்காகப் படித்தறியாமல் என் தலைமுறை செயல்பட்டிருக்கிறார்கள். வருத்தமாகவே இருக்கிறது. தமிழகம் இத்தனை தூரம் பிரிவினை வாதத்துக்கு அடிமைப்பட்டுப் போனது இந்த வரலாற்று அறியாமையால் என்பதை நினைத்தால் வருத்தம் கூடுகிறது.
அன்புடன்,
– மைத்ரேயன்
[/stextbox]
[stextbox id=”info” caption=”அன்புள்ள மைத்ரேயன் அவர்களுக்கு”]
உங்கள் விரிவான கடிதம் நிறைவாக இருக்கிறது.I am happy that you have taken pains to go into the details from your angle, regarding names as they are addressed in the region concerned .
நீங்கள் கொடுத்திருக்கும் லிங்க்குகளுக்குள் போனேன். என்னால் பெங்காலி எழுத்துக்களை படிக்க இயலவில்லை. நான் ரேயின் பதேர் பாஞ்சாலி, மிருணால் சென்னின் பரசுராம், ஏக் தின் ப்ரதி தின் போன்ற வங்காளப்படங்களைப்பார்த்துள்ளேன். பெங்காலி மொழி பேசப்படும் விதம் உச்சரிப்பு போன்றவற்றை கவனித்திருக்கிறேன்.
’ரே’, ‘ராய் சௌத்ரி’ போன்ற பெயர்கள் மிட்டா, மிராஸ்தார்களைப்போல, ’பெரிய மனுஷன்’ என்கிற ரீதியில் ஒரு சமூக ‘டைட்டிலாகவே ஒருகாலத்தில் கொடுக்கப்பட்டு அவையே தொடர்கின்றன என்பதை நான் அறிவேன். எனது Foreign Service colleagues-களில் பெங்காலிகள் பலர் – ரே, ராய்சௌத்ரி, தாஸ்குப்தா, மித்ரா, சௌத்ரி, சென், பர்மன்(Burman) , போஸ், தத்தா (Dutta),போன்றவர்களோடு பானர்ஜி, முகர்ஜி, சாட்டர்ஜிக்களுக்கும் பஞ்சமில்லை. பெங்காலி நண்பர்கள் என்னை விஜய் என அழைப்பதாக நினைத்துக்கொண்டு ‘பிஜோய் (Bijoy) என்றே அழைத்தார்கள்! ‘ரபீந்திர சங்கீத்-ஐ ‘ரொபீந்திரொ ஷொன்கீத்’ என்பார்கள். கிட்டத்தட்ட பெரும்பாலான வார்த்தைகளில் ‘ஒ’ ஒலி ப்ரதானமாக இருக்கும்.
’பெயர்ச்சொற்களை அந்தந்த மொழிக்குழுவின் உச்சரிப்புக்கு ஒத்துவரும்வகையில் குறிப்பிடவே சொல்வனம் விரும்புகிறது’ என அறிவதில் மகிழ்ச்சி. அதன்படி பெங்காலிகள்/ரே/ராய் குடும்பத்தினர் ‘ராய்’ என்றே அவர்களது மொழியில் உச்சரிக்கின்றனர்.
ப்ரம்ம சமாஜ் பற்றியும் உங்கள் மடலில் கூடுதலாக தெரிந்துகொண்டேன்.
நன்றி
– ஏகாந்தன்
[/stextbox]
[stextbox id=”warning” caption=”என்ன படித்தீர்கள்?”]
நான்கு நாட்களாக விட்டு விட்டு மேரிலின் ராபின்ஸனின் ‘லீலா’ என்கிற நாவலைப் படித்து வருகிறேன். இவருடைய எழுத்து என்னை எங்கோ ஆழத்தில் தொட்டு இம்சை செய்கிறது. இது முன்பு ஷெர் வுட் ஆண்டர்ஸன், பிறகு ஷ்டைன்பெக் போன்ற சில அமெரிக்க எழுத்தாளர்கள் ‘பெரும் சரிவு’ காலத்துச் சாதாரண மனிதர்கள் பற்றி எழுதிய கதைகள் என்னை நிறையப் பாதித்தவை. ஃபாக்னரின் கிராமப்புற அமெரிக்காவும் என்னைப் பாதித்திருக்கிறது. [தமிழில் கரிசல் மண் கதைகளெல்லாம் பிற்பாடுதான் எனக்குக் கிட்டின. அதற்கு முன்னர் வங்கக் கிராமப் பசித்த மாந்தர், பிரேம்சந்தின் வறியோர் போன்றார் கதைகள் கிட்டி இருந்தன. ஷாலகோவின் கதைகளும் கிட்டியிருந்தன. ] மேரிலின் கிராமத்து மனிதரைக் கிராமத்து ஆட்களாக உருவகிக்காமல் ஏதோ ஒரு ரசவாதத்தால் உலகத்து மனிதர் போலச் சித்திரித்து விடுகிறார். விவிலிய நூல் பற்றிய ஆழ்ந்த குறிப்புகள், அதிலிருந்து நிறைய நிறைய மேற்கோள்கள், எஸிக்கியெலிலிருந்து நிறைய பகுதிகள் பேசப்படுகின்றன. ஜோப் பின் சில பகுதிகள் பேசப்படுகின்றன. கால்வினின் விரிவுரைகள் பற்றியும் சர்ச்சை நடக்கிறது. காரணம், ஒரு பாத்திரம் கிருஸ்தவ போதகர், இவர் முக்கியப் பாத்திரமும் கூட. லீலாவை மணந்துள்ளவர். லீலா வன்முறையும் அலட்சியமும் நிறைந்த குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஒரு கனிவான பெண்ணின் ஆதரவில் மிக்க வறுமையில் வளரும் உழைப்பாளக் கூட்டத்துக் குழந்தை. வளர்ந்த பின் வேலைகள் கிட்டாமல் அலையும் பாட்டாளிக் கூட்டம். அப்போது ஃபாக்னர்/ ஷ்டைன்பெக் காலத்து பெரும் மண்புயல் அடித்து அமெரிக்க விவசாயப் பகுதிகளை நாசம் செய்யும் வருடங்கள். பெரும் சரிவும் நேர்ந்த வருடங்கள். அதிலிருந்து மீண்டு வந்து போதகரை மணக்கிறாள். அவளுடைய உளநிலையாகவே நாவலின் பெரும்பகுதி செல்கிறது. அங்கு கிருஸ்தவத்தின் சில ஆணி வேர்க் கருத்துகள் சர்ச்சிக்கப்படுகின்றன. அதனால் என்றில்லை, ஆனால் உளநிலை வருணிப்புகள் மூலமும், மனோபாவம் மாறும் விதங்களைச் சித்திரிப்பதன் மூலமும் மேரிலின் இந்த நாவலை அபாரமானதாக்கி விடுகிறார்.
சமீபத்தில் நான் சில வகைக் கதைகளால் அதிகம் பாதிக்கப்படுவதால் இவற்றை ஒரு இருக்கையில் படிக்க முடியாதவனாகி இருக்கிறேன். ஆனால் படித்தது நாள் பூரா தலைக்குள் ஓடுகிறது. வேறெதையும் படிக்கு முன் யோசிக்க வேண்டி இருக்கிறது.
n+1 magazine உடைய இலையுதிர்காலத்து இதழ் நேற்று மாலை கிட்டியது. அது ஒரு இடதுசாரிப் பத்திரிகை. நிகில் சாவல் (சவால்? உச்சரிப்பு என்ன என்று தெரியவில்லை. Saval) இதன் இரு பதிப்பாசிரியர்களில் ஒருவர். இவருடைய ஒரு கட்டுரையை சொல்வனம் வெளியிட்டது நினைவிருக்கலாம். இதில் வந்துள்ள பல கட்டுரைகள், ஆசிரியருக்குக் கடிதங்கள் எல்லாமும் இந்த வறுமை, மறுவினியோகம் போன்றவற்றோடு தொடர்புள்ளன, தவிர இலக்கிய விமர்சனம் பற்றிய புத்தகங்கள் இரண்டின் விமர்சனமும் அர்த்த புஷ்டி உள்ளதாக இருக்கவும், நாம் என்ன செய்கிறோம் என்ற கவலை தீயாகப் பற்றியது. எத்தனை காலம் வீணாகப் போயிருக்கிறது என்று தோன்றியது. இவற்றுக்கிடையில் இன்னொரு கதையைப் படிப்பது கதைக்கு நீதி செய்வதாக இராது என்று படிக்கவில்லை.
ஷ்டைன்பெக்கின் மகன் (இவரும் ஒரு நாவலாசிரியராம்) தன் அப்பாவின் புத்திமதிகள் பற்றிப் பேசியது இது. பேட்டி. படியுங்கள்.
– பஞ்சநதம்
[/stextbox]