மாரி மைனி

படப்பிடிப்பு இல்லாத ஒருநா காலம்பர நேரம்.  அதிகாலை மூணு மணி வரைக்கும் முழிச்சிட்டு இருந்தும் ஏழு மணிக்கெல்லாம் அலாரம் அடிச்சி எழுப்பின மாதிரி ஒறக்கம் கலஞ்சி போச்சு. ஸ்டீல் தம்ளருல மெலிசா பழுப்பு நிறத்துல ஆடை படிஞ்சி ஆறிப் போன காப்பியை உறிஞ்சிக்கிட்டு இருந்தேன். குளிச்சிட்டு சாப்பிடலாமுன்னுத் தோணுச்சு ஆனா என்ன சாப்பிடுறது? இப்பவெல்லாம் அவசியத்துக்கு மட்டுதான் சாப்பிடனுமுன்னு ஆகி போச்சு. ஆசைப்பட்டு எதையும் சாப்பிடுறதில்லை. அந்தக் காலம் மலையேறிப் போச்சு.

யார்ட்டயாவது பேசலாம். யார்ட்ட பேச? யாராவது எனக்கு கால் பண்ணினா நல்லதுன்னு தோணுச்சு. இந்த வலுவான யோசன உடையுறதுக்கு முன்னே என் கைப்பேசி கிடந்து துடிச்சுது.. கடிகார அலாரம் மாதிரி மணியும் அடிச்சுச்சு.  புதுசா ஒரு நம்பரு. யாராயிருக்குமிங்கிற  யோசனையோட ‘ஹலோ’ சொன்னேன். அந்தப்பக்கத்துல இருந்து ‘ யய்யா மதியா?’ ன்னு ஒரு கொரலு கேட்டுச்சு. இந்தக் கொரல நான் இதுக்கு முன்னாடி கேட்ட மாதிரியும் இருந்துச்சு. ‘ ஆமா மதிதான் பேசுதேன், நீங்க யாரு?ன்னு கேட்டேன். கால் கட் ஆயிட்டு.. நான் ‘ஹலோ.. ஹலோ’ன்னு கத்திட்டு கைப்பேசித் திரையைப் பார்த்தேன் கால் கட்டாயிட்டுன்னு தெரிஞ்சுச்சு. திரும்பவும் கால் வருமுன்னு கொஞ்ச நேரம் பொருத்துப் பார்த்தேன். கால் வரலை. அப்புறம் நானே கால் பண்ணினேன். ரிங்கு போய் யாரோ கால் எடுத்து ‘ அதே நம்பர்ல இருந்து தான் கால் வந்திருக்கு, பேசுங்கம்ம’ன்னு ஒரு எளம்பொண்ணோட கொரல் மட்டும் தெளிவு இல்லாம கேட்டுச்சு. என்னோட ஆர்வம் அதிகமாயிட்டு.

‘ஹலோ, யாரு பேசுறது? அப்படின்னு நான் இரண்டு மொற கேட்டதுக்கப்புறம் மீண்டும் அதே கொரல் ‘யய்யா மதியா?ன்னு அதே கேள்விய திருப்பி கேட்டுச்சு. ‘ஆமா நான் மதிதான் பேசுதேன், நீங்க யாரு?’ன்னு கேட்டேன். ‘நான்தான்ய்யா மைனி பேசுதேன், சாந்தி மைனி.. மறந்திட்டியா?’ன்னு அந்த கொரல கேட்டதும் தண்ணிக்குள்ள குதிச்சதும் வருமில்லையா அப்படியொரு அமைதி எனக்குள்ள வந்துச்சு. காது ரெண்டையும் பொத்திக்கிட்டா எப்படியிருக்கும் அப்படி இருந்துச்சு ‘ எப்படி இருக்கீங்க மைனி’ உங்கள் எப்படி மைனி நான் மறப்பேன்’ன்னு சொன்னேன். என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ’நல்லா இருக்கேன் மதி.. அத்த எப்படி இருக்கு.. பாஸ்கர் எப்படி இருக்கான், செல்விக்கு எத்தனை பிள்ளையளு?’ என்று மைனியின் கொரல் என் காதெல்லாம் நிரம்பிப்போச்சு. ‘எல்லாரும் நல்லா இருக்காங்க மைனி?, நீங்க குமாரண்ணன், பிள்ளையளு எல்லாம் எப்படி இருக்கிய?ன்னு நான் கேட்டாளும் எனக்கு மைனியத் தாண்டி யாரப் பத்தியும் விசாரிக்கனுமுன்னு தோணலை.

’எல்லாரும் நல்லா இருக்காவ மதி, யப்பு நீ கல்யாணம் முடிச்சிட்டியா? உனக்கு எத்தனை பிள்ளைய?ன்னு மைனி பதிலுக்கு ஆவலாக இருந்தார்கள். ‘இன்னும் முடிக்கல மைனி, ஒரு படம் பண்ணிட்டு முடிக்கலாமுன்னு இருக்கேன்’ன்னு சொன்னேன். ‘ அட என்னப்ப, இப்ப உனக்கு வயசு நாப்பது இருக்குமாய்யா?’ ‘இல்ல மைனி முப்பத்தஞ்சு நடக்கு’ ‘ என்னய்யா, வயசு கடந்து போச்சுல்ல, சீக்கிரம் பண்ணுடே, அத்த உனக்கு பொண்ணு பாக்கலையாக்கும், இல்ல நீ எதாவது இலவ்வு கிவ்வுன்னு அலையுறியா’ ‘ இல்ல மைனி அப்படி ஒண்ணுமில்ல, அம்ம பார்த்தாவ ஒண்ணும் அமையல, சீக்கிரம் பண்ணுவேன், பிள்ளைய எப்படி இருக்கு?’ ‘ நல்ல இருக்கு, உங்கண்ணனுக்குத்தான் சக்கர வியாதி அதிகமாச்சு, வீட்ல தான் இருக்காவ, மூத்தவன் வேலைக்குப் போறன், சேகருக்கு இந்த வருஷம் தான் கடைசி வருஷம், கடக்குட்டி மல்லிகா இப்பத்தான் பண்ணெண்டாப்பு படிக்கா, அவதான் மதி சித்தப்பாவ பாக்கனும் பாக்கனுமுன்னு கேட்டுட்டே இருக்கா, ஒரு எட்டு வந்துட்டுப் போயேன்’ மைனியோட கொரலு இன்னும் மாறலை. ’ இப்ப கொஞ்ச நாளைக்கு வேலை இல்லதான், அடுத்த வாரம் ஊருக்கு வாரன் மைனி’ ‘ ஏ நிசமாவா சொல்லுத, கண்டிப்பா வரணும் என்ன, ஏமாத்தா மதி’ மைனியோட கொரலுல என்னப் பார்க்கனுமுன்னு இருந்த ஆவல் அப்படியே அப்பட்டமா தெரிஞ்சுச்சு. ‘ கண்டிப்பா வாரன், பாஸ்கர் வந்தாமுன்னா அவனையும் கூட்டிட்டு வாரன், இல்லா நான் எப்படியாவது வந்துடுறேன்’ ‘ சரிய்யா, வரதுக்கு முன்ன போன் பண்ணு, இது மல்லிகா போனுதான்.. அவகிட்ட சொன்ன எங்கிட்ட சொல்லிடுவா?’ ‘ சரி மைனி, அண்ணன எங்க?’ ‘ உங்கண்ணன் ஆஸ்பத்திரிக்கு ஊசி போட்டுக்க போயிருக்குப்போ, வந்ததும் சொல்றேன், நீ சாயங்காலம் கூப்பிடு. உனக்கு ரொம்ப துட்டு போயிருக்கும், வைக்கேன்ய்யா, கண்டிப்பா ஊருக்கு வா’ன்ன சொல்லிட்டே போனை வைச்சிட்டாங்க. நான் சரின்னு சொன்னது கூட கேட்டிருக்குமான்னு தெரியல. இன்னும் நிறைய பேசனும் போல இருந்துச்சு ஆனா முடியலை.

உடனடியா அடுத்தது எப்ப ரிஜர்வேஷன் கிடைச்சாலும் ஊருக்கு கிளம்பிப் போயிடலாமுன்னு முடிவு பண்ணிட்டேன்.

~oOo~

1989, மும்பை. அப்போ நான் ஆறாப்பு படிச்சிட்டு இருந்தேன். குமார் அண்ணன், முத்துராஜ் அண்ணன், பாண்டி அண்ணன்  எல்லாரும் எங்க வீட்ல தான் சாப்பிட்டுட்டு இருந்தாங்க. குமார் அண்ணன் அம்மாவும் எங்க அம்மாவும் ஒண்ணப் பொறந்தவங்க. குமார் அண்ணன் வீட்ல தான் எங்கம்ம வளந்துச்சாம். எங்கத் தாத்தா சிலோனுக்கு வேலைக்குப் போயிட்டாராம்.

பெரியம்மைக்கு சீரியஸுன்னு தந்தி வந்துச்சு. குமாரண்ணன் கன்யாகுமரி வண்டி சுத்திப் போவுமுன்னு மெட்ராஸ் வண்டிய பிடிச்சி போச்சு. மெட்ராஸ்ல இருந்து திருநெல்வேலிக்கு வண்டி மாறிப் போகுமாம். அண்ணன் போய் ஒரு மாசத்துல திரும்பி வந்துச்சு. அண்ணன் வர்ரதுக்கு முன்ன மலாடு வீட்ட ரெண்ட தடுத்து அதுல ஒண்ணுல நாங்க இருந்தோம். பக்கத்துல அண்ணன்மார் எல்லாம் படுப்பாவ. இப்ப அத காலி பண்ணிட்டு அண்ணமார் எல்லா கம்பெனியில படுக்கப் போவனுமுன்னு பேசிட்டு இருந்தாவ.  எனக்கு ஒண்ணும் புரியலை.

ஒரு நாளு முத்துராஜி அண்ணன் ‘ குமாரு வராம்ல, ஸ்டேஷனுக்கு போவம்மான்னு கேட்டுச்சு’ எனக்கு லோகல் ரயிலு வண்டியில போவ ரொம்ப பிடிக்கும். அதில்லாம எல்லா அண்ணனுவலும் சிகரெட் குடிப்பாங்க, சிகரெட் வாங்கும் போதெல்லாம் எனக்கு எதாவது திங்க வாங்கி கொடுப்பாங்க. சரின்னு சொல்லிட்டேன்.

அம்ம சீக்கிரம் சமைச்சிச்சு. ஒன்பதற மணிக்கு ஊர் ரயில் வருமாம். வி.டி ஸ்டேஷன்ல ஒன்பதாம் நம்பர் பிளாட்பாரத்துல வருமுன்னு எழுதியிருந்தத அண்னன் காட்டுச்சு. நீ தான் இந்தி மராட்டி பட்டிப்பல்ல, படிடே’ன்னும் சொல்லிச்சி. நான், முத்துராஜி அண்ணன் அப்புறம் பாண்டியண்ணேன் மூணு பேரும் போயிருந்தோம்.

பாண்டியண்ணேன் சமோசாவும் சாயாவும் வாங்கித் தந்துச்சு. இப்படி எப்போவாவது கிடைக்கும் பண்டமெல்லாம் மனசுல மட்டுமில்ல மூளையிலயும் போய் பதிஞ்சி போவுது. சாப்பிட ரொம்ப நல்லா இருந்துச்சு. ரெண்டையும் சாப்ட்டதுக்கப்புறம் இன்னும் நாலஞ்சி சாப்டலாம் போல ஆசையா இருந்துச்சு.

’கல்யாணம் முடிஞ்சதும் ரிசர்வேஷன்ல வாரம்டே நம்ம லெப்ட்டு’ என்று குமாரு அண்ணனைப் பத்தி கிண்டலா பேசிட்டு இருந்தாங்க இந்த ரெண்டு அண்ணங்களும். இப்பொ அண்ணன் கூட யாரோ வாரங்கன்னு தெளிவாயி போச்சு.

ரயிலு வந்து நின்னுச்சு. ரயில்ல இருந்து எறங்குனவங்க மேல ஒருமாதிரி வீச்சம் வந்துச்சு. குமாரு அண்ணனும் எறங்குணாங்க. கையில் ரெண்டு பெரிய பெட்டி இருந்துச்சு. சீட் நம்பரு 55-56ன்னு சொல்ல, மத்த ரெண்டு அண்ணனும் இன்னொரு பக்கமா உள்ளப் போனாங்க. அவங்க கையிலயும் தோள்லயும் பையையும் மூட்டையையும் தூக்கிட்டு வந்தாங்க. அவங்க பின்னாடியே ஒரு சின்னப் பைய தூக்கிக் கிட்டு வந்துச்சு ஒரு பொண்ணு. ‘ இதான் உன் கொழுந்தன் மதி, இவன் தான் உனக்கு இந்திச் சொல்லித் தரப் போறாம்’ன்னு சொல்லிட்டு சாமான்களை சரி பார்த்துக் கொண்டிருதாங்க அண்ணன்.

‘என்ன கொழுந்தனாரே, எப்படி இருக்கீங்க?’ என்றபடி தாடையில ஒரு கையையும் பின்மண்டையில ஒரு கையையும் வைச்சு மார்போட அணைச்சிக்கிட்டாங்க. எனக்கு அந்த தொடுக புதுசாவும் சந்தோஷமாவும் இருந்துச்சு. ‘ இவங்கள எப்படிக் கூப்டனும்?’ அண்ணன்மாரப் பார்த்து நான் கேட்டேன். ‘ அது உங்க பாபில, மைனின்னு கூப்பிடு’ன்னு முத்துராஜி அண்ணன் சிரிச்சான்.

எல்லோரும்  ஆளுக்கொரு சாமானைத் தூக்கிக் கொண்டு லோகல் ரயில் வண்டியப் பிடிக்க நடக்க, நான் மட்டும் அண்ணியுடன் வந்து கொண்டிருந்தேன். லோகல் ரயில் வண்டிப் பிடிச்சதும் எனக்குத் தூக்கம் தூக்கமா வந்துச்சு.. நான் தூங்கிப் போயிட்டேன். மலாடு வந்ததும் எழுப்பினாங்க. ஆட்டோவுலயும் அரைத்தூக்கத்துலதான் இருந்தேன். எப்படி வீட்டுக்குப் போனேன், தூங்கினேன்னு தெரியலை.

மறு நாள். மைனி குளிச்சிட்டு வந்திருந்தாங்க. பச்சையில வெள்ளைப் பூப்போட்ட சேலை. பச்சை கலருல ஜாக்கெட்டு. தலைமுடி கொஞ்சம்தான். நெத்தியில முடி சுருண்டு இருந்துச்சு. மைனிக்கு மூக்குக்கு கீழயும் கழுத்துலயும் வேர்த்து இருந்துச்சு. அவங்க உடம்பு நல்ல வாசனையா இருந்துச்சு. எப்பவும் அப்படித்தான் இருக்கும். அவங்க கையும் உடம்பும் குளிர்ச்சியா இருக்கும். அவங்க என்னத் தொட்டுப் பேசுறது ரொம்பப் பிடிச்சிருந்துச்சு.

நான் மதியம் ஸ்கூலுக்கு கிளம்பும் போது தலைசீவி விட்டாங்க.. இடது கையில பவுடர கொஞ்சம் தட்டிக்கிட்டு வலது கையால தன் சேலைத்தலைப்பை வைச்சு முகத்துல பூசி விட்டாங்க. பூசினாங்களோ தொடைச்சாங்களோ தெரியலை எனக்கே என் முகம் பார்க்க நல்ல இருந்துச்சு. அதுவொரு உற்சாகமான நாள இருந்துச்சு. அதுல இருந்து எல்லா நாளும் அப்படித்தான்.

மொத ஒரு வாரம் மைனி எங்க வீட்ல சமைச்சாங்க. எல்லாரும் இங்க வந்து சாப்பிட்டுட்டு அண்ணனும் மைனியும் பக்கத்து ரூம்க்கு படுக்கப் போயிடுவாங்க. ஒரு வாரமும் நான் நல்லாச் சாப்பிட்டேன். மைனியோட கைப்பக்குவம் அவங்க தண்ணியக் கோரி கொடுத்த கூட அது ருசியாத்தான் இருந்துச்சு.

ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு ஓட்டமும் நடையுமா ஆவலாக போவேன். சாயங்காலம் மைனி எதையாவது சாப்பிடக் கொடுப்பாங்க. சாயா போட்டாக் கூட மைனி போடுற மாதிரி அம்ம போட மாட்டா.  மைனிக்குத்தான் தேயிலைய எவ்வளவு நேரம் அவிச்சி பாலச் சேர்க்கனுமுங்குற பக்குவம் தெரியும்.

நான் மைனி வீடே கதின்னு கிடப்பேன். அம்ம ரொம்ப திட்டுவா. அப்புறம் பரிட்சை நெருங்கினதும் ரொம்ப நேரம் அங்க இருந்து படிப்பேன். மைனி கேள்வி கேட்கும் நான் பதில் சொல்லுவேன். எழுதிக் காட்டுவேன். அப்புறம் சாப்பாடு. அப்புறம் அங்கேயே தூங்கிடுவேன். நான் எப்படி பக்கத்துல எங்க வீட்லவந்து படுப்பேன்னு தெரியலை. யாரு தூக்கிக் கொண்டு வந்து போடுவாங்கன்னும் தெரியாது. எல்லாம் மாயமா இருக்கும்.

மைனி சாயங்காலம் ஆயிட்ட நல்ல குளிச்சி ஒரு சின்ன அலங்காரத்தோட இருப்பாங்க. பாண்ட்ஸ் பவுர ஒரு கிண்ணத்துல தட்டி ஒரு பஞ்சு வச்சு கழுத்துல, முகத்துல பூசிக்குவாங்க. பார்க்க ரொம்ப அழகா ஆயிடுவாங்க. அவங்களை விட்டு போகவே மனசு வராது.

அண்ணன் மைனிய வெளியக் கூட்டிட்டுப் போவும் போதெல்லாம் மைனி என்னை கூட கூட்டிட்டுப் போகும். மட்டுங்கா சிட்டிலைட் தேட்டர்ல நாங்க பாக்யராஜ் படம் பார்க்க போணோம். அண்ணன் அண்ணிக்கிட்ட பெரிசா அன்பா எல்லாம் இருக்காது. அதிகம் பேசவும் செய்யாது. தேவையான மட்டும் பேசும் ஆன மைனி தான் எப்பவும் கலகலன்னு பேசிட்டே இருப்பாங்க.

கடைக்குப் போன எதையாவது வாங்கிட்டு வந்து கொடுக்கும்.  தங்கச்சிக்கு மைனிய பிடிக்காது. மைனிக்கு அப்படி இல்லை எல்லாரையும் பிடிக்கும் ரொம்ப அன்பா பேசும் பழகும் சாப்பாடு செஞ்ஜி கொடுக்கும்.

ஒரு ஞாயித்துக் கிழமை அண்ணன் மைனியையும் என்னையும் மலாடு நியூரா டால்க்கிஸ்ல தமிழ் படம் பார்க்க கூட்டிட்டுப் போச்சு. காலையில் ஒன்பது மணி ஷோ. எனக்கு ஒரே கொண்டாட்டம். நான் மைனியின் கையைப் பிடிச்சிட்டே நடந்தேன். ஆட்டோல மைனி பக்கத்துல உட்காந்துட்டு அவங்க கையை இருக்கிப்பிடிச்சிட்டு இருந்தேன்.

தேட்டர் வாசல்ல மாணிக்கம் மச்சான் வடாபாவ் கடை போட்டிருந்தார். அவரை ஏன் எல்லாரும் மச்சான் என்று கூப்பிடுகிறார்கள் என்றுத் தெரியவில்லை ஆனால் பொடுபொடுன்னு பேசிட்டே இருப்பார். உருளைக்கிழங்கு மசாலா உருண்டையை கடலை மாவில் முக்கி எண்ணெயில் போட்டுக் கொண்டிருந்தார். அண்ணி கொஞ்சம் தொலைவுல ஓரமா நின்னுட்டு இருந்துச்சு. நான் வடாபாவ் வாங்க வந்தேன். ஏண்டே உனக்கு பொண்ணா கிடைக்கல, இவ அக்காளப் பாத்தல்ல.. நாலு புள்ள பெத்து வச்சிருக்கா.. ஒண்ணாவது அவன் புருஷன் முக ஜாடையில இருக்காடே… பொம்பளைன்னா போதுமே இப்படி போய் மாட்டிக்கிட்டியேடே என்று பேசினார். அவர் மைனியைப் பத்தி அண்ணனிடம் எதோ தப்பா பேசுறது புரிஞ்சது.

மாணிக்கம் மச்சான் தங்கச்சிய குமார் அண்ணன் கட்டலன்னு தான் இப்படி தப்பா திட்டிட்டு இருந்துச்சுன்னு வீட்ல அம்மையும் அண்ணனுக் பேசிட்டு இருந்தது ஞாபகம் வந்துச்சு. சரி விடும் மச்சான். படம் போட்டுருவான். வடபாவா கொடும்வே என்று அண்ணன் சிரித்துக் கொண்டான். எனக்கு அண்ணன் இப்படி இளிக்கிறது பிடிக்கவே இல்லை. மைனி நிற்பதைப் பார்த்தேன். சைகையால் மைனி என்னக் கூப்பிட்டாங்க. நான் ஓடிப் போனேன். அப்புறம் அண்ணன் தான் வடாபாவ் வாங்கிட்டு வந்துச்சு.

படம் பார்த்துட்டு வரும்போது ஹோட்டல்ல அண்ணன் மிஷல் பாவ் நாஸ்ட்டா வாங்கித் தந்துச்சு. உஷல்ல மிச்சர போட்டு ஊர வைச்சி பாவ் தொட்டு சாப்பிடும் போது அப்பா அந்த சுவைய சொல்லவே முடியாது. மைனிக்கு முழுசா சாப்பிட முடியலை எங்கிட்ட பாதிய தந்துட்டாங்க. உஷல்ல ஊறிப் போன மிச்சர் சாப்பிட ரொம்ப ருசியா இருந்துச்சு.

அம்மையும் மைனியும் நல்லாத்தான் அன்பா இருந்தாங்க. ஆனா ஒரு நா நான் ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வந்தேன். மைனிக்கும் அம்மைக்கும் சண்டை. அம்ம மைனிய ரொம்ப திட்டிட்டு இருந்துச்சு. யார் கூடவோ மைனி பல்ல இளிச்சிக்கிட்டு பேசிக்கிட்டு இருந்தான்னு சொல்லுச்சு. எனக்கு கஷ்டமா போச்சு. அண்ணனும் வேலைய விட்டு சீக்கிரமா வந்திருந்துச்சு. என்ன நடந்துச்சுன்னே தெரியலை. அவங்க பேசுரது எதுவும் எனக்கு புரியவும் இல்ல. ஆனா அண்ணனும் மைனியும் வீட்ட காலி பண்ணனுமுன்னு அம்ம உறுதியா சொல்லிடுச்சு. மைனிதான் பாவம் ரொம்ப அழுதுச்சு “ இந்த இந்தி தெரியாத ஊர்ல நான் என்ன அத்த பண்ணுவேன், இங்க இருந்தேமுன்னா உங்களுக்கும் ஒத்தாசையா இருப்பேன்… எனக்கும் பயம் இருக்காதுல்லன்னு” சொல்லி அழுதுச்சு. ஆனா அம்ம ரொம்ப கண்டிப்பா “ ஏலா குமாரு, இனிமே நீயாச்சு உன் பொஞ்ஜாதியாச்சு. கிளம்புன்னு” சொல்லிட்டு போச்சு. நான் எல்லாரையும் பார்த்துட்டு நின்னுட்டு இருந்தேன்.

மைனி வீட்டுக்கு போகப் பிடாதுன்னு அம்ம என்னைய மிரட்டுச்சு. மைனிய அசிங்கம் அசிங்கமா திட்டிட்டே இருந்துச்சு. அந்த மாசக் கடைசியில குமார் அண்ணனும் மாரி மைனியும் வீட்ட காலி பண்ணிட்டு பக்கத்து கல்லியில வாடகைக்கு இருக்கப் போயிட்டாவ. எனக்கு ரொம்ப கவலையாப் போச்சு. மைனிய பார்க்காம இருக்க முடியலை.

மதியம் ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி அங்க போயிடுவேன். அப்புறம் சாயங்காலம் ஸ்கூல் முடிச்சி வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் கிளம்பிப் போயிடுவேன். ஒரு அம்ம என்னயத் தேடி மைனி வீட்டுக்கே வந்துடுச்சி. கையில் தோசைப்பிறட்டி இருந்துச்சு. அத வைச்சு.. முதுகுல ஓங்கி அடிச்சிச்சு. நான் மைனி பின்னால போய் நின்னேன் அம்ம அவன விடு விடுன்னு சொல்லி இழுத்து அடிச்சிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுச்சி.  அதுக்கு அப்புறம் மைனி வீட்டுக்கு அம்மைக்கு தெரியாமத்தான் போவேன் வருவேன்.

முட்டை பொறிச்சா மைனி எனக்கு தனியா எடுத்து அரிசி டப்பாவுல வைச்சிடுவாவ.  பொங்கல் அன்னைக்கு மைனி வீட்ல இருந்து பாயாசம் கொண்டு வந்துச்சு குமார் அண்ணன். ‘ஏல், உன் மைனி சாப்பிட கூப்பிடுதா போ” என்று அண்ணன் சொல்ல அம்மாவும் “போயம்ல” என்று அதட்ட சந்தோஷத்தில் ஓடிப் போனேன்.

வீட்டு வாசல்ல மைக்கேல் நின்னுட்டு இருந்தான். அவன எனக்கு மட்டுமில்ல இந்த ஏரியாவுல யாருக்கும் பிடிக்காது. அவன் ஏன் மைனி வீட்டு வாசல்ல இருக்கான்னு ஒருவித கோபம். அவன் கையில் ஒரு சின்ன கிளாசில் பாயசம் கொடுக்கப்பட்டிருந்தது. குடித்துக் கொண்டிருந்தான்.

வாசலில் இருந்த மைக்கேலை தாண்டி நான் உள்ளே போனேன். “ ஏண்டா உங்க அம்ம பொங்கல் பண்ணலியா?” கேட்டான். “ பண்ணிச்சி.. அதுக்கென்ன?” என்று அலட்சியமாக பதில் சொல்லிட்டு உள்ளே போனேன். மைனி உள்ளே தேவதைப் போல் இருந்தாங்க. மாம்பழக் கலரில் பட்டுச் சேலை. தலை நிறைய மல்லிகைப் பூ. பட்டு ஜாக்கெட். அடுப்பில் எல்லா வகை காய்கறிகளையும் போட்டு குழம்பு தயாராகிக் கொண்டிருந்தது. கதவை ஒருக்களித்து வைத்தபடி மைனி தேங்காய் திருவிக்கிட்டு இருந்தாங்க. எனக்கு மைனியைப் பார்க்க பார்க்க ஆசையாய் இருந்தது. அவ்வளவு அழகு. “ என்னல அப்படி பார்க்குற” கேட்டுச்சு. “ நீங்க அழகா இருக்கிய மைனி” என்றேன். அப்படியா, அப்ப சீக்கிரம் வயசுக்கு வா உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லி என் கன்னத்தைக் கில்லினாங்க.

பாயசம் கொடுத்தாங்க. அமிர்தம் மாதிரி இருந்துச்சு. நான் வாசலைப் பார்த்தேன் மைக்கேலின் முதுகு தெரிஞ்சுச்சு. அவன் கிட்ட போய் கிளாஸ் வாங்கிட்டு வான்னு மைனி சொல்லிச்சு. நான் போய் கேட்டேன் கொடுத்தான். குமார எங்கல? என்றான் கரகரப்பான குரலில். தெரியாது என்று சொல்லிவிட்டு நான் உள்ளே வந்து விட்டேன். அவன் ஏதோவொரு சினிமாப் பாடலை முனுமுனுத்துக் கொண்டு போய் விட்டான்.

இவன் ஏன் மைனி இங்க வந்தான். தெரிலைப்பு. பாயசம் கேட்டான் அதான் கொடுத்தேன். வாய்விட்டு கேட்கிறவனுக்கு இல்லைன்னா சொல்ல முடியும் என்று மென்மையாய் பேசிச்சி மைனி. அவனப் பத்தி ரொம்ப தப்பா சொல்லுதாவ சொன்னேன். நமக்கு எதுக்குள்ள வம்பு. எங்கிட்ட வாலாட்டுனாமுன்னா ஆஞ்சிட்டு வுட்டுருவேன் என்று மைனி கோபம் காட்டிச்சி. ஆஞ்சிட்டு வுடுவேன்னா என்ன மைனி, நான் கேட்டேன். மைனி குளுங்கி குளுங்கி சிரிச்சிக்கிட்டே உங்க அண்ணன் கிட்ட கேளு என்று என்னை மீண்டும் கன்னத்தில் கிள்ளிச்சி.

அவன் போயிட்டானா என்று வெளியே பார்த்தபடி.. யப்பு இந்த கொக்கிய மாட்டி விடுல என்று முதுகைக் காட்டி உட்காந்துச்சு மைனி. எனக்கு ஒண்ணும் புரியலை. கழுத்தில் செயின் கொக்கிகளை தேடிட்டு இருந்தேன். அதுக்குள்ள ஏழ கீழ பாடி கொக்கிய மாட்டுப்புன்னு சொன்னாங்க. நான் கொஞ்சம் வெட்கப் பட்டேன். அவங்க ஜாக்கெட்டுக்கு வெளிய ரெண்டு வாரு மாதிரி தொங்கிட்டு இருந்துச்சு. நான் ஒரு முனையப் பிடிச்சி இழுத்து இன்னொரு முனையில் கொக்கிய மாட்டி விடப் பார்த்தேன். அம்மைக்கு நான் அப்படி மாட்டி விட்டிருக்கேன். ஆனா எந்த ஓட்டையில் மாட்டுறதுன்னு தெரியலை.. இழுக்கவும் முடியலை. என் தடுமாற்றத்தைப் புரிந்து கொண்ட மைனி கடைசி ஓட்டையில மாட்டி விடுப்பு என்று சொல்லவும் செய்தேன். சேலையையும் ரவிக்கையையும் சரி செஞ்சிக்கிட்டே கதவைத் திறந்து வைச்சாங்க.

அப்புறம் நான் மைனி விட்டுக்கு அடிக்கடி போய்ட்டு தான் இருந்தேன். ஒரு நா கதவு ஒருக்களிச்சி இருந்துச்சு. மைனின்னு கூப்பிட்டுக்கிட்டே பட்டுன்னு கதவ தொறந்துட்டேன். குமார் அண்ணன் பக்கத்துல மைனி பொத்துன்னு விழுற மாதிரி இருந்துச்சு.  நான் அண்ணன்கிட்ட போய் உட்கார்ந்தேன். சாயா குடிக்கியால என்று கேட்டுக் கொண்டு ஸ்டவ் பக்கம் திரும்பிய மைனியின் முதுகைப் பார்த்தேன் பாடியின் வார்கள் திறந்து கிடந்துச்சு

அன்னைக்கு எனக்கு எதோ மாதிரி இருந்துச்சு. மைனிக்கு என் மேல் ஆர்வமும் அன்பும் குறைந்தது போல உணர்ந்தேன். இப்பவெல்லாம் மைனி என்ன சினிமாவுக்கு கூப்பிடுறது இல்லை. வீட்டுப் பக்கம் வர்றதும் இல்ல. வருஷக் கடைசி ஆச்சு. எனக்கும் பரிட்சை முடிஞ்சி போச்சு. எப்பவும் மைதானவே கதின்னு கிடந்தேன். மைனி ஞாபகமெல்லாம் இப்ப இல்லை.

ஆனால் மைனி வீட்டுப் பக்கமா போனாக் கூட வேகமா கடந்து போய்டுவேன். வீட்டுக் கதவு எப்பவும் ஒருக்களிச்சி தான் சாத்தியிருக்கும். அன்னைக்கு ஒருக்களிச்சி சாத்தியிருந்த கதவைத் திறந்ததில இருந்து மைனிகிட்ட இருந்து ஒருவித விலகல் ஆரம்பிச்சது இல்லையா. அதனால இப்பவெல்லாம் கதவ தொறக்குறதே இல்ல.

ஒரு நா, அப்படிப் போவும் போது மைனி வீட்டு வாசல்ல மைக்கெல் உட்கார்ந்து சாயா குடிச்சிட்டு இருந்தான். கதவு ஒருக்களிச்சி சாத்தியிருந்துச்சு.  எனக்கு கோபமும் அழுகையுமா வந்துச்சு. மைனி மேல கோவம் கோவமா வந்துச்சு. அம்ம திட்டுனது சரிதான். செறுக்கி மவ. என்று மனசு அடித்துக் கொண்டது. மைனாதனத்தில் எந்த விளையாட்டிலும் மனசு லயிச்ச மாதிரி இல்ல. ஓரமா உட்காந்து இருந்தேன். மைனி வீட்டு கல்லி வழியா போறதையே நிறுத்திட்டேன்.

அம்மயும் குமாரு அண்ணனும் அமைதியா உட்காந்துட்டு இருந்தாங்க. நான் போய் பேட்ட வைச்சிட்டு மோரியில கை கால் கழுவிவேன். அண்ணன் ஒருமாதிரி கண்ணு கலங்கி இருந்துச்சு. இப்ப கொஞ்ச நாள மதியக் கூட வீட்டுப் பக்கம் வர வுடுறது இல்லை. அவ திட்டம் போட்டுத்தான் இப்படி பண்ணிருப்பா அண்ணேன் அமைதியா பேசினான். கையில் இருந்த துண்டு பேப்பரை சுக்கு நூறாய் கிழித்துக் கொண்டிருந்தான்.

’மாணிக்கம் மச்சான் அன்னைக்கே சொன்னாரு அவ குடும்பத்த பத்தி’ ‘… மாணிக்கம் அவ தங்கச்சிய கட்டலன்னு உன்ன தூண்டி விடுவாம்ல. அவன் சொல்றத கேக்காத. மாரி தங்கமான புள்ள. நீ மனச போட்டு குழப்பாத. போ. வேணுமுன்னா அவள கொஞ்ச நாளைக்கு ஊருக்கு அனுப்பி வை’

’ஊர்ல அவன் கண்ணன் பண்ணின வேலை இந்த செறிக்கிய பிடிச்சி என் தலையில் கட்டிட்டாரு’ அண்ணன் கொரலு மாறுச்சு. ’கொஞ்சம் பொறுப்பே எல்லாம் சந்தேகமாத்தான் இருக்கும் ஆனா பொம்பளை விஷயத்துல எதையும் தீர விசாரிக்காம சொல்ல முடியாதுடே. அவ புள்ள நல்ல புள்ளதான்’ .

’ஏல மதி, மைனி எவங்கிட்டயாவது பேசிட்டு இருக்குறத நீ பாத்தியாள?’ என்று அண்ணன் கேட்டான். ’ச்சீ சின்னப்பய கிட்ட என்ன கேக்குற.. போ குமாரு.. ’என்று அம்மா அண்ணனை அதட்டியது. அண்ணன் மீண்டும் ’சொல்லுல’ என்றான். ’ஆமா’ நாம் சொன்ன ஒற்றை வார்த்தை வீட்டிலிருந்த அமைதியை இன்னும் அமைதியாக்குச்சு.

பொங்கலன்னைக்கு மைக்கேல் அண்ணன் வீட்டு வாசல்ல இருந்து பாயசம் குடிச்சிட்டு இருந்தான். மைனிக்கு நான் தான் பாடில கொக்கி மாட்டி விட்டேன். அவனுக்கு மைனி சாயா எல்லாம் போட்டுக் கொடுக்கும்  என்று சொன்னதும் அண்ணன் காய்கறி வெட்டும் கத்தியை தூக்கிக் கொண்டு ஓடினான். அம்மை பின்னால கத்திக் கொண்டு ஓடினாள். கல்லியில் பலர் நின்று வேடிக்கைப் பார்த்தார்கள்.

நானும் அழுது கொண்டே ஓடினேன். மைனி வீட்டிற்குள் அண்ணன் மைனியை அடித்து உதைக்கும் சத்தம் கேட்டுச்சி. பாத்திரமெல்லாம் விழுந்து சத்தா இருந்துச்சு. அண்டா தண்ணி சிந்தி வீடு பூராவும் ஈரமா ஆச்சு.

மைனி வாயெல்லாம் இரத்தம்.தலை முடியைப் பிடித்து அண்ணன் அடித்திருக்க வேண்டும். மைனி முகம் முழுசும் வலிய பார்க்க முடிஞ்சிச்சு. ”யய்யா… நான் அந்த அண்ணன் கூட பேசினதா பார்த்தேன் அண்ணன்கிட்ட சொன்னியாப்போ” என்று மைனி அழுது கொண்டே உடல் நடுங்க கேட்டுச்சு. ”ஆமா” என்பது போல் அழுதுகொண்டே தலையை ஆட்டினேன். அண்ணன் மைனிய உதைத்தான். என் கை கால்கள் நடுங்கியது. அம்மை என்னை வெளியே இழுத்துப் போட்டு முதுகில் குத்தினாள். நான் வீட்டுக்கு ஓடி வந்து ரொம்ப நேரம் அழுதேன்.

அதற்கு மறுநாள் அண்ணனும் மைனியும் ஊருக்கு போயிட்டாங்க. அதுக்கப்புறம் நான் ஊர் பக்கம் போனது இல்ல. மைனியப் பார்த்ததும் இல்லை. குமார் அண்ணன் மட்டும் மும்பைக்கு எப்போவாவது வருவாங்க. எங்கிட்ட அதிகம் பேசாது.

மைக்கேல் பல பெண்கள் விஷயத்தில் இப்படி விளையாடியிருக்கிறான் என்பது நான் கல்லூரி முடித்த காலகட்டத்தில் தெரிய வந்தது. இப்பொழுதும் என் பள்ளித்தோழன் முத்துராஜின் அம்மாவுடன் தொடர்பில் இருப்பதாக ஏரியாவில் பேசிக் கொள்வார்கள் ஆனால் அவனுடைய அம்மா அப்படியொரு தங்கம் எனக்கு அவர்களை நன்றாகத் தெரியும். அவனுக்குப் பிடிச்ச பொம்பளைங்களோட உறவு வைச்சிக்க நினைப்பான் இல்ல அவங்களோட தனக்கு தொடர்பு இருக்குன்னு கதை கட்டி விடுவான். ஏரியா முழுசும் அவன் இப்படி பல பொண்ணுங்களோட தனக்கு தொடர்பு இருக்குன்னு தானே சொல்லிக்கிட்டு அலைவான்.

ஓர்லம் மார்க்கெட்டுக்குப் பின்னாடி நாவப்பழம் மரத்துக்குக் கீழ இருந்த பெரிய கிணத்துல யாரோ செத்துக் கிடக்காங்கன்னு எல்லாம் ஓடுனாங்க, முனிசிபால்டி காரங்க வந்து கயிறு கட்டித் தூக்கினாங்க, ரெண்டு பொணமுன்னு நினைச்சாங்க, ஆனா மைக்கேல் பொணந்தான் ரெண்டு துண்டா கிடந்துச்சு. அன்னையில இருந்து அந்தக் கிணத்த மூடிட்டாங்க..

~oOo~

இத்தனை வருஷம் கழிச்சி, நான் மைனியைப் பார்த்து என்ன பேசுறது எப்படி மன்னிப்பு கேட்குறதுன்னு யோசிக்கல. மைனியை நினைக்க நினைக்க அழுகையாக வந்துச்சு.  நாகர்கோயில் எக்ஸ்பிரஸில டிக்கட் புக் பண்ணிட்டு வந்தேன். மைனிக்கும் மைனி பிள்ளையளுக்கும் துணிமணி வாங்க மார்க்கெட் கிளம்பிட்டிருந்தேன். மனசு கொஞ்சம் லேசாக இருந்துச்சு. மார்க்கெட்டில பார்த்த பொண்ணுங்கள எல்லாம் ஒரு மெல்லியப் புன்னகையோட பார்த்தேன். எல்லா பொண்ணுங்க முகத்துலயும் மாரி மைனியோட சாயல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.