[stextbox id=”info” caption=”பாக்டீரியாவின் சக்தித் தாண்டவம்”]
ஒரு வாதத்தின்படி மனித இனமே எழுந்ததற்குக் காரணம் நுண்கிருமிகள்தான். அவைதான் கிரியா ஊக்கியாக இருந்து, சிவனே என்று கிடந்த பேரண்டத்தில் சக்தித் தாண்டவம் ஆட வழி வகுத்தன என்றும் வாதிடுகிறார்கள்.
இங்கே கொடுக்கப்படும் செய்தியில் ஊழித்தீ போன்ற அழிப்பைக் கொணரும் சில நோய்களையும் இந்த நுண்கிருமிகள் – பாக்டீரியா என்று இவற்றை மேற்கில் அழைக்கிறார்கள்- தொடர்ந்து பல ஜீவராசிகளிடையே பரப்பி அவற்றின் பெரும் பிரவாஹத்தை மட்டுப்படுத்துகின்றன என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக மனிதரிடையே சமீப காலங்களில் பரவலாகக் காணப்படத் துவங்கி இருக்கும் குடல் புற்றுக் கட்டிகளில் நுண்கிருமிகளில் ஒரு வகை இருப்பதை ஆய்வாளர்கள் கண்டிருக்கிறார்கள்.
குடலிலிருந்து உடலின் பிற பகுதிகளுக்கு இந்தப் புற்று நோய் பரவும்போது இந்தக் கிருமிகளும் அங்கெல்லாம் பரவுவதாகக் கண்டு பிடித்திருப்பது ஒரே நேரம் அச்சத்தையும், நம்பிக்கையையும் கொணர்கின்றதாக இந்த ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கணையத்தில் எழும் இன்னொரு வகைப் புற்று நோயிலும் வேறொரு வகைக் கிருமிகள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. இரண்டிலும் கட்டிகளில் இந்தப் பாக்டீரியாக்கள் வசிக்கின்றன.
இந்தப் புற்று நோயை நல்ல தாக்கம் உள்ள ஆண்டிபயாடிக் மருந்துகள் குணப்படுத்துமா என்று யோசிக்கத் துவங்கியுள்ளார்கள். ஆண்டிபயாடிக் மருந்துகளின் ஒரு பிரச்சினை என்னவென்றால் அவை சகட்டு மேனிக்கு எல்லா நுண்கிருமிகளையும் கொல்வன. நல்ல பாக்டீரியாக்களின் துணயோடுதான் நாம் உணவையே ஜீரணிக்கிறோம். அதிலிருந்து சக்தியைப் பெற நமக்கு உதவுவன பாக்டீரியாக்களில் நல்ல வகைதான். குடலில் உள்ள நுண் பாக்டீரியாக்களை இப்படி குண்டு போட்டுத் தாக்குவது நல் விளைவைத் தராது என்பது சில மருத்துவர்களின் கருத்து. மேலும் இந்த பாக்டீரியா எங்கும் உள்ளதால், இது தொடர்ந்து குடலுக்கு வந்து சேர்ந்த வண்ணம் இருக்கும். எல்லா உணவுவகைகளிலும் இது இருக்கும் வாய்ப்பு அதிகம். அப்போது நோயாளி தொடர்ந்து வாழ்நாள் பூராவும் இந்த ஆண்டிபயாடிக் மருந்தை எடுத்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்படலாம்.
மேலும் தெளிவான தகவல்களுக்கு இந்தச் சுட்டியைப் பார்க்கவும்.
https://www.nytimes.com/2017/11/23/health/bacteria-colon-cancer.html
[/stextbox]
[stextbox id=”info” caption=”அமெரிக்காவுக்கு இந்தியா கைகொடுத்துத் தூக்கி விடுமா?”]
அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் உள்ள பெரும் தொழிற்பேட்டைகள் துருப்பிடித்து வீழ ஆரம்பித்துப் பல பத்தாண்டுகள் ஆகி விட்டன. அந்த நசிவுடைய மூல காரணங்களான கட்டற்ற, அளவுக்குள் இயங்கவொண்ணாத முதலியத்துப் பேராசை என்பதும், அமெரிக்க அரசு, சமூகம், பொருளாதாரம் ஆகிய பேரமைப்புகளில் உள்ளூறப் பொதிந்திருக்கும் இனவெறுப்பும், எளிய, வறிய, உடலுழைப்பை மட்டும் நம்பியிருக்கும் மக்கள் மீதான இழிவுணர்வும் என்னென்ன விதங்களில் இந்த நசிவை ஊக்குவித்தன என்பதைப் பற்றி பல நூலகங்களை நிரப்புமளவு புத்தகங்களை அமெரிக்கப் பல்கலையில் என்ன காரணத்தாலோ இன்னமும் ஒட்டிக் கொண்டு அதை நிரப்பியும் இருக்கும் பல இடது சாரி, நடுச்சாரி ஆய்வாளர்கள் எழுதித் தள்ளி விட்டார்கள்.
யார் என்ன சொன்னாலும் கேட்காத தடித்தனமே முதலியத்தின் அரும்பெரும் குணாதிசயம் என்பதால் இந்த அடுக்கடுக்கான விமர்சனங்களை அமெரிக்க முதலியர்களும், அவர்களின் கூட்டாளிகளான பன்னாட்டு நிதிக் குவிப்பாளர்களுமாக அந்த தொழில் மய நிலப்பரப்பைக் கிட்டத் தட்ட துருப் பரப்பாக்கி விட்டனர். அங்கிருந்து ஏராளமான உழைப்பாளர்கள் அமெரிக்காவின் தென்மாநிலங்களுக்குக் குடி போக நேர்ந்தது- இத்தனைக்கும் இப்படிக் குடி பெயர்ந்தவர்களில் கணிசமானவர்கள் கருப்பின மக்கள். முன் சில தலைமுறைகளில் அதே தென் மாநிலங்களில் இருந்து வட, மைய மாநிலங்களுக்குக் குடி பெயர்ந்தவர்கள் இந்தக் கூட்டத்தில் பெரும்பகுதியினர். 18-19 ஆம் நூற்றாண்டுகளில் அடிமை முறையை பெரும் ஆர்ப்பரிப்புடன், கிருஸ்தவத்தின் நம்பிக்கையோடும் கைக் கொண்டிருந்த தென் மாநிலங்கள் இந்தக் கருப்பின மக்கள் தம் இரும்புப் பிடியிலிருந்து தப்பி தொழில் பேட்டைகளுக்கு வட/ மத்திய மாநிலங்களுக்குப் போனதை இன்னமும் பெரும் நஷ்டமாகக் கருதுகிற அரசியலையே தம் மாநிலங்களில் ஆட்சியில் அமர்த்துகிறார்கள். தெற்கு மாநிலங்கள் மைய அரசுக்கு எதிராகப் பிடித்த கொடி (கான்ஃபெடரேட் கொடி என்று அழைக்கப்படுவது) இன்னமும் ஏராளமான தென் மாநிலங்களில் கொண்டாடப்படும் சின்னம்,, தனியார் மட்டுமல்ல மாநில அரசுகளே கூட இந்தக் கொடியை பற்பல நகரங்களில், தலை நகரங்களில், ஏன் நீதி மன்றங்களில் கூட ஏற்றிப் பறக்க விடுவதைத் தம் பெரும் சாகசமாகக் கருதும் அவலம் இன்னும் தொடர்கிறது.
அப்படி இருக்க இந்த மாநிலங்களுக்கு முன்னாள் அடிமை முறையிலிருந்து தப்பிய கருப்பினத்தவர் மறுபடி திரும்பும் அவலம் நேரக்காரணம் உலக முதலியமும், அமெரிக்க முதலியமும் தம் நலனை மட்டுமே கருதும் அற்பத்தனம்தான். இன்று பல தென் மாநிலங்களில் நகரங்களில் கருப்பின மக்கள் பெருகி விட்டது அம்மாநிலத்து அரசியலில் சில சிக்கல்களையாவது ஏற்படுத்துகிறது.
இந்தச் சிக்கலின் இன்னொரு பகுதி வட/ மத்திய மாநிலங்களில் பலவற்றில் உள்ள பெருநகரங்களின் சமூக வாழ்வு சீரழிவதில் காணப்படும். 80களில் மிஷிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரைப் பார்த்தவர்களுக்குத் தெரியும், எப்படி ஒரு பெரு நகரம் படிப்படியாகத் தன் முழங்காலில் தண்டனிடும் அவல நிலைக்குக் கொண்டு வரப்பட்டது என்பது. 20ஆம் நூற்றாண்டில் உலகத்தின் ஆட்டோமொடிவ் தலைநகரம் என்று கருதப்பட்ட டெட்ராய்ட்டிலும் பல மிஷிகன் மாநில நகரங்களிலும் அண்டை மாநிலமான ஒஹையோ மாநிலத்தில் பல நகரங்களிலும் இந்த கார், ட்ரக் மற்றும் பலவகை ஊர்திகளின் தயாரிப்பு பெரும் தொழிற்சாலைகளில் நடந்து பல்லாயிரக்கணக்கானோருக்கு அங்கு வேலை வாய்ப்புகள் கிட்டி இருந்தன. அமெரிக்க தொழிலாளிகளில் ஒரு கணிசமான எண்ணிக்கையினர் நடுத்தர வாழ்வுக்கு எட்டியது இந்தத் தொழில் மயமாக்கலால்தான் என்று நாம் சொல்ல முடியும்.
இந்த ஏணி ஏறல் 80களில் தடுத்து நிறுத்தப்பட்டு, அமெரிக்க கார்/ ட்ரக் உற்பத்தித் துறை கடும் சரிவைச் சந்தித்தது. ஜப்பானின் கார் உற்பத்தித் துறை பெரும் ஏற்றம் பெற்றது. பிறகு கொரியா, பிறகு யூரோப்பில் பல நாடுகள், ஏன் மெக்ஸிகோ கூட இப்படி ஏற்றம் பெற்றன. இந்த அணியில் மிகச் சமீபத்துப் பத்தாண்டுகளில் சேர்ந்தது இந்தியா.
80-90களில் கீழ் நிலைக்கு வந்து விட்ட டெட்ராய்ட், சமீபத்துப் பத்தாண்டுகளில் விவசாய நகரமாகவே கூட மாறும் நிலைக்கு வந்து கொண்டிருந்தது. அருகில் பெரும் நன்னீர் ஏரிகள் உண்டு என்பதும், ஏராளமான நிலம் சும்மாக் கிடந்தது என்பதும் காரணங்கள். இருப்பினும் வருடத்தில் ஐந்து மாதங்களைப் போல கடும் குளிர் இங்கு நிலவும் என்பதால் முழு விவசாயமும் இங்கு பரவ வாய்ப்பில்லை. இது கலிஃபோர்னியாவாகவோ, ஃப்ளாரிடாவாகவோ மாற வாய்ப்பில்லை. ஆனால் பல மையத்து மாநிலங்களை ஒத்த விவசாயம் இங்கு செய்யப்பட முடியும்.
ஆனால் 2010க்குப் பிறகு டெட்ராய்ட் மற்றும் அருகாமையில் உள்ள சில பல்கலை மைய நகரங்களில் கார் மற்றும் ட்ரக் உற்பத்தி சம்பந்தப்பட்ட தொழில் நுட்ப ஆராய்ச்சிகள் மேலெழத் துவங்கின. இவை கணினிகளும், அவை சார் தொழில் துறைகளும் மேலெழுந்ததால் ஏற்பட்ட மாறுதல்கள். இதன் பயனாக நிறைய தொழில் நுட்பத் திறன் உள்ள ஒரு நிபுணர் கூட்டம் இந்தப் பகுதியில் கிட்டுகிறது. அந்த வளத்தை இன்று புதிதாக இந்தத் துறைகளில் நுழைந்திருக்கிற பல தொழிலதிபர்களும், நிறுவனங்களும் பயன்படுத்த முனைகிறார்கள்.
அந்த முனைப்பில் ஒரு சிறு பகுதியாக இந்தியாவின் மஹிந்த்ரா கார் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் டெட்ராய்ட் நகரில் ஒரு தொழிற்சாலையில் பலவகை எந்திரங்கள், ஊர்திகளைத் தயாரிக்க முன் வந்து முதலீடு செய்திருக்கிறது. மஹிந்த்ரா நிறுவனம் இந்தியாவிலும், தென் கொரியாவிலும் பல வகை ஊர்திகளை உற்பத்தி செய்து, நன்கு ஸ்தாபிக்கப்பட்டு விட்ட ஒரு நிறுவனம். இப்போது மின்சார ஊர்திகள், இரு சக்கர வண்டிகள் ஆகியனவற்றைத் தயாரிக்க அமெரிக்காவின் முன்னாள் ஊர்தித் தலை நகரமான டெட்ராய்ட்டுக்கு வந்திருக்கிறது.
அளவில் சிறு முயற்சியாகவே கருதப்படும் இந்த முதலீடு சுமார் 230 மிலியன் டாலர் மதிப்பு கொண்டது. அமெரிக்காவில் ட்ராக்டர்களை ஏற்கனவே உற்பத்தி செய்யும் மஹிந்த்ரா நிறுவனம் சுமார் 3000 தொழிலாளிகளை வேலைக்கு அமர்த்தி அந்த உற்பத்தியைச் செய்கிறது.
இந்தச் செய்தி நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையிலிருந்து பெறப்பட்டது.
மேலும் தகவல்களுக்கு இந்தச் சுட்டியைத் திறந்து படிக்கலாம்.
https://www.nytimes.com/2017/11/20/business/detroit-indian-automaker.html [/stextbox]
[stextbox id=”info” caption=”பெண்ணுடல்”]
இந்தியாவின் கிராமப்புறங்களில் சர்வசாதாரணமாகக் கண்ணில் படக்கூடிய கருத்தடைச் சாதனம் ‘காப்பர்-டி’. தமிழகத்தின் பல சுவர்களில் இதற்கான விளம்பரங்களைப் பார்க்கமுடியும். மக்கள் பெருக்கம் அதிகமாக உள்ள இந்தியா போன்ற நாடுகளில் இது போன்று பலவிதமான கருத்தடைச் சாதனங்கள் பல ஆண்டுகள் முன்பு அறிமுகப்படுத்தப்பட்டு புழக்கத்தில் உள்ளன. சமூகப் படிக்கட்டில் எல்லா நிலையிலும் உள்ள மக்கள் பயன்படுத்தும் ஒரு சாதனமாக இது உள்ளது. இதற்கு மாற்றாக, பல காரணங்களால் குழந்தை பெற விரும்பாத / குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட விரும்பும் தம்பதிகள், குறிப்பாக பெண் மாத்திரைகளை ஒரு கருத்தடைச் சாதனமாகப் பயன்படுத்துவதும் வழக்கத்தில் உள்ளது. சங்கடமில்லாத, எளிய கருத்தடைச் சாதனமாக இது இருந்தாலும் பொதுவாக, மாத்திரைகளுக்கு உள்ள பக்க விளைவுகளின் காரணமாக அதிகமாக அவற்றை உட்கொள்ளுவது தவறு என்றே வலியுறுத்தப்படுகிறது. உடலியல் ரீதியாக பல விளைவுகளை நீண்டகால நோக்கில் இந்த மாத்திரைகள் விளைவிக்கக்கூடும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தக் காரணங்களால், பலர் காப்பர் -டி போன்ற கருத்தடை சாதனங்களுக்கு மாறுவதும் வழக்கம். ஆனால் இந்த உபகரணத்திற்கு பக்க விளைவுகள் இல்லையா? இது ஒரு பாதுகாப்பான சாதனம்தானா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. உடல் எடை அதிகரிப்பு, சுரப்பிகளில் மாறுதல் அதனால் உணர்வுபூர்வமான பாதிப்புகள், தோலில் பிரச்சனைகள், சரியாகப் பொருத்தப்படாமலிருந்தால் கருத்தரித்தல் என்ற பல பிரச்சனைகள் இந்தக் கருத்தடைச் சாதனத்திலும் உள்ளன. மாத்திரைகளைத் தவிர்த்து காப்பர் டி (காப்பர் ஐயூடி என்று இங்கே குறிப்பிடப்படும்) பயன்படுத்தத் தொடங்கிய ஒரு பெண்ணின் பிரச்சனைகளை விளக்குகிறது இந்தக் கட்டுரை.
https://medium.com/clued-in/one-size-does-not-fit-all-my-copper-iud-experience-ef4e06f6eecd
[/stextbox]