புதரை அடுக்கும் கலை (இறுதி பாகம்)

(சென்ற இதழின் தொடர்ச்சி)

ஆனால் இப்போது, அப்படி நம்பியதை இத்தனை மோசடி செய்தார்கள் என்பதால் அவருடைய நம்பிக்கை இப்போது அசட்டுத்தனமாக அவருக்கே தெரிந்தது. அவருக்கே தான் முட்டாளாகத் தெரிந்தார். அவரை வளர்த்தவர்கள், அவர்களுடைய ஆவிகள் அவருடனே இப்போது உலவுகின்றனவே, எச்சரிக்கையாக இருப்பது பற்றி, பொறுப்பு என்பதைப் பற்றி, “எல்லாவற்றிலும் கண்ணாக இருப்பது”, மேலும் “வேலையைக் கவனிப்பது” எத்தனை முக்கியம் என்று அவரிடம் நிறையச் சொல்லி இருந்தார்கள். நிஜத்தைச் சொன்னால், கொட்டகையின் கதவுக்குப் பதில் புதுக் கதவு போட வந்த ஒருவனை வேலையிலிருந்து நீக்குமளவு கூட ஒரு தடவை அவர் போய் விட்டிருந்தார். இப்போது நப்பும் சகாக்களும் முடிவு செய்தது போல, இந்த இடம் வெளிப்படையாகவே மிக சல்லிசான இடம் போலத் தெரிந்திருக்கிறது, சாலையிலிருந்து எல்லாம் அத்தனை தூரத்திலும், நவீன உலகத்திலிருந்து ரொம்பவே விலகிய மாதிரியும் இந்த பழைய ஹார்ஃபோர்ட் பண்ணை இருப்பதால், அதற்கு அப்படி ஒன்றும் மிக அருமையாக வேலை செய்யத் தேவை இல்லை என்று அவனும் முடிவு கட்டி இருந்தான் போல.

ஆனால் அந்த நபரை வேலையை விட்டு நீக்க ஆன்டி எடுத்த அந்த நடவடிக்கையோ, அவருக்கு முதலில் ஏற்பட்ட கோபமோ, அவருக்கு எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை, அது மட்டுமல்ல, இத்தனை காலம் ஆகியும் அவருக்கு அப்போது தோன்றிய கசப்பு இன்னும் மறையவும் இல்லை. ஆனால் இப்போது அவற்றைச் செய்திருக்க வேண்டுவது அவசியமாக இருந்த போதும், நப்பைச் சரியாக மேற்பார்வை செய்யாததற்கும், அல்லது வேலையை விட்டு நீக்காததற்கும், தன்னைத் தானே அவர் நொந்து கொள்ளும்போது, அவருக்கு ஒன்று புலப்பட்டது, தன் துவக்க வருடங்களில் தான் அறிந்திருந்த பண்ணை வாழ்விலிருந்து யாரையும் மேற்பார்வை பார்த்ததாகவோ, அல்லது வேலையை விட்டு நீக்கியதாகவோ தனக்கு ஒரு நினைவும் இல்லை என்பது அது. அவருடைய பாட்டனார் காட்லெட், உதாரணமாக, ஒரே ஒரு உதவி ஆளைத்தான் வைத்துக் கொண்டிருந்தார்: டிக் வாட்ஸன், என்ற கருப்பர் அவர், குழந்தையாக இருக்கையில் ஆன்டி அவரைத்தான் தன் வழிகாட்டியாகக் கொண்டிருந்தார், அவரையே மிகவும் நேசித்தார். அவரிடம் இப்போதும் ஆன்டி அன்பு கொண்டிருக்கிறார். நூற்றுக் கணக்கான மணி நேரங்களை ஆன்டி தன் தாத்தா காட்லெட்டுடனும், டிக் வாட்ஸனுடனும் செலவிட்டிருக்கிறார். வேலை செய்யப்பட வேண்டிய ஒழுங்குவரிசையை தாத்தா காட்லெட்தான் தீர்மானித்தார் என்ற போதும், டிக்கிடம் எதை எப்படிச் செய்ய வேண்டும் என்றோ, மேற்பார்வையிடும் தோரணையிலோ அவர் ஏதும் சொல்லி ஆன்டி கேட்டதில்லை. காட்லெட் தாத்தா அனேகமாகப் பார்த்துக் கொண்டிருப்பார், ஆனால் ஆன்டியிடம் அவர் டிக்கின் வேலையைப் பாராட்டித்தான் பேசி இருக்கிறார், டிக்கை ஆன்டி ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு கற்றுக் கொள்ள வேண்டும் என்றுதான் பேசி இருக்கிறார். “அங்கே பார், நம்ம டிக் எப்படி முன்னேற்பாட்டோடு, அவரோட கோவேறுகழுதைகளைப் பற்றிக் கொள்கிறார்!”

நினைத்துப் பார்க்கையில், ஆன்டியால் தன் தாத்தா காட்லெட் டிக் வாட்ஸன் நல்லபடியாக வேலை செய்வார் என்று நம்பிக்கை கொண்டிருந்ததற்கு, டிக் திறமையாக வேலை செய்யத் தெரிந்தவர் என்பதோடு, அப்படி வேலை செய்ய விருப்பமும் டிக்கிற்கு இருந்தது என்பதும், தன் வேலை மீது அவருக்குப் பெருமை இருந்தது, மேலும் தாத்தா தன் வேலையை அப்படி மதித்துப் பார்ப்பார் என்ற நம்பிக்கை டிக்கிற்கு இருந்தது என்பனவும் காரணங்கள் என்பது ஆன்டிக்குப் புரிந்தது.  பரஸ்பர நம்பிக்கை இருந்ததால், அவர்கள் இருவரும் ஒருவர் மற்றவரிடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றிருந்தனர்- சுதந்திரம் என்றால், கொட்டகையின் வாயிலில் கவிழ்த்து வைக்கப்பட்ட வாளிகளின் மீது அமர்ந்து, வெளியில் பெய்யும் மழையைப் பார்த்தபடி பேசிக் கொண்டிருக்குமளவு உரிமை கொண்டிருப்பது. அந்த நம்பிக்கையிலும் சுதந்திரத்திலும், அவை வரம்புக்குட்பட்டன என்றாலும், யுத்தங்களின் ஊடாகக் கடந்து போகும் வரலாற்றால் கவனிக்கப் படாமலும், மதிக்கப் படாமலும் போகும் சமாதானத்துக்கான ஒரு வாக்குறுதி, மூத்தோரும் அவர்களின் தலைமுறைகளும் இறந்ததைக் கடந்து, ஒரே இனத்தைச் சேர்ந்த இருவர் கூட இப்படித் கொட்டகையின் வாயிலில் மழையைப் பார்த்தபடி அமர்ந்து பேசமுடியாத காலத்திற்கும் நீளும் என்பது போல இருந்தது.

தன் முதல் இருபது வருடங்களில் போல, கருப்பரும் வெள்ளையருமான பலரோடு சேர்ந்து விளையாடி இருந்தார், பிறகு உழைத்திருந்தார். அவர்கள், முழு நேரமாகவோ, அல்லது அறுவடைக் காலத்தில் தற்காலிகமாகவோ, நாள் முழுதும் உழைத்தார்கள். அவர்களின் வேலைத் தரத்தில் நிறைய வேறுபாடுகள் இருந்தன, ஆனாலும் சிலரைத் தவிர, மற்றெல்லாரும் அனேகமாக டிக் வாட்ஸனைப் போலவே வேலை செய்தனர், வேலி போட வந்த ஷாட் ஹார்பிஸன் குழுவினரைப் போல அல்ல. வெகு காலத்துக்கு முன்னர், நன்கு வேலை செய்யக் கூடியவர்கள், விவசாயக் குடும்பங்களில் வளர்க்கப்பட்டு, தம்மை மதிக்கத் தெரிந்தவர்கள், ஒன்று இறந்து போயிருந்தார்கள், அல்லது தொழிற்சாலைகளில் வேலை பார்க்கப் போயிருந்தார்கள். அவர்களுக்குப் பதிலாக இப்போது வேலை செய்யக் கிடைப்பவை எந்திரங்கள், ரசாயனப் பொருட்கள், மற்றும் உடனே கிட்டுவோர் எப்படி என்றால், கொஞ்சமாகவே தூக்கத்திலிருந்து விடுபெற்றிருக்கிற, போதையிலிருந்து சிறிதே தெளிவு பெற்றிருக்கிற, விழிப்புணர்வு மிகக் குறைவாகவே கொண்ட, வேலைத் திறனே இல்லாத, எதையும் பொருட்படுத்தாத மேலும் விபத்துகளின் மூலம் எதையும் அழிப்புக்குக் கொணரக் கூடியவர்கள்தான்.

ஒருவழியாக, நிஜத்தில் வெகு சீக்கிரமாகவே, ஹார்பிஸன் குழு கன்னாபின்னாவென்று, தப்பும் தவறுமாக வேலை செய்து ஏதோ வேலி என்று சொல்லப்படக் கூடிய ஒன்றை நிறுவினார்கள். அது முந்தைய பழைய வேலியை விடப் புதியதாக, பளபளப்பாக, இறுகலாக இருந்தது. ஏற்கனவே ஒத்துக் கொண்ட மிக அதிகமான தொகைக்கான காசோலையை ஆன்டி எழுதிக் கொடுத்தார். அதுவோ இப்போது மிக அதிகம் என்பதையெல்லாம் தாண்டி எக்கச் சக்கமான தொகை போல ஆகி விட்டிருந்தது. ஷாட் கருணையோடு அந்தக் காசோலையை வாங்கிக் கொண்டு, ஆன்டிக்கு வரும் நாட்களில் ஏதும் வேலி நிறுவும் தேவை எழுந்தால் தன்னிடம் தெரிவிப்பார் என்று நம்புவதாகச் சொன்னார்.

“நன்றி,” என்றார் ஆன்டி, அவர்களின் ஊர்திகள் அந்தச் சிறு பாதைவழியே போய்க் கண் பார்வையிலிருந்து மறையும் வரை, ஒருபோதும் அவர்களை மறுபடி பார்க்கத் தேவை இராது என்று நம்பியபடி, பார்த்திருந்தார்.

III

ஆக, தன்னுடைய ஆத்திரத்தை காலப் போக்கில் அடங்க விட வேண்டிய நிலையில் இருந்தார், தான் இறப்பதற்குள், வேலி போட வந்த உதவாக்கரைக் குழுவினருக்கும், தனக்கும் ஏதோ ஒரு வகை மன்னிப்பை அளிக்கும் நிலைக்குத் தான் வந்து சேரவேண்டும் என்று நம்பிக்கையும், பிரார்த்தனையுமாக இருந்தார்.

பார்க்கத் தவற முடியாதபடி, வேலிக்குழுவினர் விட்டுச் சென்ற அலங்கோலம் நிலமெங்கும் கிடந்தது: தாறுமாறாகவும், கொத்துக் கொத்தாகவும் புதர்களும், சிறு மரத்துண்டுகளும், கன்னாபின்னாவென்று விசிறப்பட்டிருந்த சுருள்கள், உருண்டைகள், துண்டு துக்கடாக்களாகக் கிடந்த பழைய கம்பிகளும், அவர் ஐம்பதாண்டுகளாக அத்தனை கர்மசிரத்தையோடும் பாசத்தோடும் பராமரித்து வந்த அழகான நிலப்பரப்பை அலங்கோலமாக ஆக்கி இருந்தன. ஒரு காலத்தில் அவரிடம் இருந்த தெம்புக்கு, இதைச் சுத்தம் செய்வதை ஒரு வேலையாகவே அவர் பொருட்படுத்தி இருக்க மாட்டார். சில மணி நேரத்தில் அவரே அனைத்தையும் செய்து முடித்திருப்பார். இப்போதோ அவர் அதனால் குறைக்கப்பட்டும், மன அழுத்தத்துக்கு ஆட்பட்டும் இருந்தார். அது செய்ய முடியாத வேலை போலத் தெரிந்தது.

தன் மகனைக் கூப்பிட்டு உதவ வரச் சொல்லலாமா என்று யோசித்தார், ஆனால் அந்த யோசனை வந்ததுமே அதை ஒதுக்கி விட்டார். மார்ஸிடம் உதவி கேட்கும் காலம் தாண்டி விட்டிருந்தது. அவர் கேட்டிருக்க வேண்டிய நேரத்தில் கேட்டிருந்தால், இருவருமாகச் சேர்ந்து உழைத்து, குப்பை கூளமில்லாமல், குறுக்கு வழியெல்லாம் தேடாமல், நல்ல வேலி ஒன்றைக் கட்டி இருக்கலாம். தவிர, சேர்ந்து உழைப்பதில் இருவருக்கும் சந்தோஷம் கிட்டி இருக்கும்.

இப்போதோ, தன் இழப்பால் வருத்தப்பட்டும், இறுதி விளைவால் மனத் தளர்ச்சி பெற்றுமிருந்த அவர், சங்கடப்பட்டும் இருந்தார். மார்ஸ் இந்த அலங்கோலத்தைப் பார்த்து விடுவார் என்ற நினைப்பே அவரால் தாள முடியாததாக இருந்தது. மார்ஸ் எதுவும் சொல்ல மாட்டார் என்று அவருக்குத் தெரியும், ஆனால் மார்ஸ் என்ன நினைப்பார் என்பதை யோசிக்கக் கூட அவருக்கு அச்சமாக இருந்தது.  “பாருங்க, நீங்க முதல்லெ அந்த நாசமாப் போகிற உதவாக்கரைகளோட சங்காத்த்மே வச்சுகிட்டிருக்கக் கூடாது.”

ஆன்டிக்கு அந்தக் குழுவோடு தான் ஏன் பழக்கம் வைத்துக் கொண்டோம் என்பது நன்கு தெரிந்திருந்தது, அவருக்கு யோசனை இருக்கவில்லை, அது அவருக்கே தெரிந்திருந்தது, அவருக்கு அவசரம் வேறு, அதனால் எப்படியானாலும் இருக்கட்டுமென்று மேலே நடவடிக்கை எடுத்திருந்தார். அவர் மார்ஸைக் கூப்பிடவும் இல்லை.

ஆனால் அவருக்கு வேறு ஒரு வழி இருக்கலாம் என்பது தோன்றியது. அங்கே ஹார்க்ரேவில் ஒரு நல்ல இளைஞன் இருந்தான், ஆஸ்டின் பேஜ்.  விவசாயத்தில் வளர்க்கப்படவில்லை, ஆனால் அதில் ஈடுபாடு கொண்டவன், உயர்நிலைப்பள்ளியில் படித்த போது ஆன்டியிடம் வேலை கேட்டிருந்தான். ஆன்டியும் அவனை வேலைக்கு வைத்துக் கொள்வதை விரும்பி இருந்தார், அவனுடைய உதவியும், அவனுடைய துணையும் இருப்பது அவருக்குப் பிடித்திருந்தன. அவருக்கு ஆஸ்டினைப் பிடிக்கும், அவன் புத்திசாலியாக இருந்தான், கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவனாக இருந்தான், திருத்தங்களைப் பெறும்போது அவற்றை நகைச்சுவை உணர்வோடு எடுத்துக் கொண்டான். ஆன்டி அவனைப் பல முறை சோதித்திருந்தார், ஆஸ்டின் எப்போதும் அவற்றில் தேறி இருந்தான். ஆன்டியின் பயிற்சி முறையோடும், சில சமயம் அவரின் பொறுமையின்மையோடும், வேலை செய்ய ஆஸ்டின் கற்றுத் தேர்ந்திருந்தான். இப்போது எங்கே போக வேண்டும் என்பது அவனுக்குத் தெரிந்திருந்ததோடு, அடுத்தது என்ன நடக்கப் போகிறது என்பதை அவனால் எதிர்பார்க்க முடிந்தது. அவன் இப்போது கல்லூரியில் சேர்ந்திருந்தான், இசையில் பட்டம் பெறப் படிக்கிறான், அதில் அவனுக்கு இயல்பான திறமை இருப்பதாகத் தெரிந்தது. ஆன்டிக்கு வயது ஏற ஏற, அவர் மேலும் வலிமை குறைந்தவராக ஆகையில், ஆஸ்டினுக்கு வயது முதிர்ச்சியும், வலிமையும் கூடி வந்தன. அவன் இப்போது பெரிய ஆளாக வளர்ந்திருந்தான், நல்ல தசைப் பற்றும், தோலில் தவிட்டுப் பொன்னிறப் புள்ளிகளோடும், புது பென்னிக் காசைப் போன்ற நிறமுள்ள இறுகிய சுருள் முடியோடும் இருந்தான். சுலபமாகவே சங்கோஜம் கொள்பவனாகவும், பளீரெனறு முகம் சிவப்பவனாகவும் இருந்தான் என்பது அவன் மீது ஆன்டியை மேலும் மதிப்புக் கொள்ள வைத்தன.

“அந்தப் பையனை லைட் பல்பைப் போல என்னால் ஸ்விட்ச் ஆன் அல்லது ஆஃப் செய்ய முடியும்,” என்று ஆஸ்டினின் அம்மா, டெய்ஸி பேஜிடம் ஆன்டி சொன்னார். ஆன்டி அளவுக்கு மீறி மெச்சி நோக்கிய ஒரு பெண், டெய்ஸி பேஜ். அந்த மெச்சுதல் இன்னமும் கூடியது, டெய்ஸியின் பதிலைக் கேட்டபோது, “மிஸ்டர்.காட்லெட். உங்களுக்கு ஆன வயசுக்கு இப்படி எல்லாம் தெரிந்தவர் போல இருப்பது பொருந்தாது.”

இதைச் சொல்லிவிட்டு, அடுத்து அவர் கேட்க வந்தது, ஆஸ்டினுக்கு கோடைக் கால வகுப்புகள் முடியப் போகின்றன, இலையுதிர் காலத்து வகுப்புகளுக்காக அவன் கல்லூரிக்குத் திரும்புமுன் செய்ய, ஆன்டியிடம் ஏதும் வேலை வாய்ப்பு இருக்குமா? ஆன்டி இருக்கலாம் என்று சொல்லி இருந்தார்.

ஹார்பிஸன் குழு வெளியேறி மூன்று நாட்கள் கழித்து, ஆன்டிக்கு அவன் வருவது மிக அவசியம் என்று தோன்ற ஆரம்பித்தபோது, ஆஸ்டின் தொலைபேசியில் அழைத்தான்.

“மிஸ்டர். காட்லெட், இது ஆஸ்டின். உங்களுக்கு ஏதும் உதவி தேவையா?”

“நான் உதவியில்லாமல் கிடக்கிறேன்னு சொல்றியா?”

“இல்லை சார். நான் சொல்றது என்னன்னா, உங்க கிட்டே நான் ஏதாவது உதவக் கூடிய வேலை இருக்கான்னுதான்.”

“ஆமாம், மிஸ்டர். ஆஸ்டின், என் நண்பனே, என்னிடம் இருக்கு. காலையில வா.”

 

ஆன்டியிடம் உயரம் மட்டாக இருக்கும் சக்கரங்கள் கொண்ட ஒரு வண்டி இருந்தது, அதில் சுமை ஏற்றுவது எளிது. அது அத்தனை பயன்படுத்தப்படாமலிருந்த ஒன்று, அவரும், ஆஸ்டினும் கிடப்பில் போடப்பட்டிருந்த பல கருவிகளிடையே இருந்த அந்த வண்டியை வெளியே தள்ளி வர கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருந்தது. அதை விடுவித்து விட்டு, வெளியே கொணர்ந்த பின், ஆன்டியின் பழைய ஜோடிக் குதிரைகளைக் கொணர்ந்தனர், ஒன்று வெள்ளை இன்னொன்று கருப்பு, அவற்றை அந்த வண்டியில் பூட்டினர். இதற்குள்ளேயே ஆன்டிக்குத் தான் விடுதலை பெறும் கட்டத்திற்கு வந்து விட்டதாகத் தோன்றியது. வேலி போட்டவர்களும், அவர்கள் விட்டுச் சென்ற அலங்கோலமும் அவரிடமிருந்து ஒரு மேகம் போல பிரிந்து உயரே போயிருந்தன.

அவருடைய புதுத் தெளிவில், அன்று காலை அவர்களின் வேலை துவங்குமுன் தானும், ஆஸ்டினும் அந்த ஜோடிக் குதிரைகளோடும் வண்டியோடும் இருந்த நிலை பற்றி ஒரு மனத் தோற்றம் அவருக்குக் கிட்டி இருந்தது: காலாவதி ஆன கர்வமும், எதிர்பார்ப்புகளும் கொண்ட, தனது இழப்புகளைக் கணக்கிட்டபடி இருக்கும், பழைய போர்ட் வில்லியம் நகரின் அனைத்து கைவினைஞர்களின் கருவிகளும் குவித்து வைக்கப்பட்டு, ஏலம் விடப்படுவதாகவும், அவற்றின் பயன் பற்றி எதுவும் தெரியாது (காட்சிப் பொருளாக) அவற்றைச்   “சேமிக்கும்” ஆர்வலர்களுக்கு அவை விற்கப்படுவதாகவும் தான் கண்ட கனவால் இன்னமும் துன்புற்றிருக்கும் ஒரு கிழவர், அவரருகே அவனுடைய புத்தி சுடர் விட்டெரிய, அவனுடைய தலை முடி அவனுடைய தலைக் குல்லாயை மீறி ஒளிர, அவனது கோடை வகுப்புகளிலிருந்து மீண்டு புத்துணர்ச்சியோடு, ஆன்டியோடு வெளிப்புறத்து வேலைகளைச் செய்ய வந்திருப்பதில் கொண்ட மகிழ்ச்சி தெளிவாகத் தெரியும்படி பளீரென்று நிற்கும் இந்த இளைஞன், இந்த ஆஸ்டின் பேஜ், எனும் காட்சி அது.

ஆன்டி கடிவாளக் கயிறுகளை ஆஸ்டினிடம் கொடுத்தார், ஆஸ்டின் அவற்றை எதார்த்தமாக வாங்கிக் கொண்டு அந்தக் குதிரை ஜோடியிடம் பேசியதைப் பார்த்து உற்சாகம் பெற்றார், மேலும் மகிழ்ச்சியுமடைந்தார்.

அவர்கள் வேலி வரிசைக்கருகே சென்றனர். துவக்கத்துக்கு வந்த போது ஆன்டி ‘ஓவ்’ என்றார், அவரும், ஆஸ்டினும் வண்டியை விட்டுக் கீழிறங்கினர்.

ஆன்டி சொன்னார், ‘நீயே பார், நாம் என்ன செய்யணும்னு. இது ஒரே குழப்பம்.”

ஆஸ்டின் அவரையே மேற்கோள் காட்டி, இந்த வருணிப்பைத் திருத்துவது போல, ‘நாசமாப் போன குழப்பம்,” என்று சொல்லவும், ஆன்டி வாய் விட்டுச் சிரித்தார்.

“நாம முதல்ல இந்தப் புதரை எடுத்துடுவோம்,’ என்றார் அவர், ‘கம்பியைப் பார்க்கிற இடத்தில் குவிச்சு வைக்கலாம். அது எங்க பார்த்தாலும் கெடக்கு. அதைக் கடைசியில எடுத்துக்கலாம். அதெல்லாத்தையும் இப்பவே கண்டு பிடிக்கறது கஷ்டம்.” கடைசியில் அவர்களால் எல்லாக் கம்பிகளையும் அன்றைக்கே கண்டு பிடிக்க முடிந்திருக்கவில்லை. அவர் எதிர்பார்த்தபடியே, சிறு சிறு துண்டுகளைத் தற்செயலாக நிறைய நாட்களில் அவர் கண்டு பிடித்தபடி இருந்தார். ஒரு தடவை புல்வெட்டும் எந்திரத்தில் சிக்கி வெட்டுப் பட்டபோதுதான் தலைமறைவாகி இருந்த மிக்க கனமான வகைக் கம்பிச் சுருள் ஒன்றைக் கண்டு பிடித்தார்.

அவர் முதல் கிளை ஒன்றைப் பொறுக்கி எடுத்து வண்டியில் வைத்தார். பிறகு ஆஸ்டின் இன்னும் பெரிய கிளை ஒன்றை எடுத்தான், சுமாராக ஒரு டஜன் அடி தூரத்திலிருந்து, விளையாட்டு வீரன் ஒருவனின் அலட்சியமான அமைதியோடு, ஆன்டி ஏற்கனவே ஏற்றி இருந்த கிளை மீது தூக்கிப் போட்டான்.

“இருப்பா, இரு!” என்றார் ஆன்டி. “ஒரு நிமிஷம் பொறு.” யோசனை ஏதும் தோன்றுவதற்கு முன்னரே அப்படிப் பேசி இருந்தார்.

ஆஸ்டின் உதவ வந்தது குறித்த அவரது மகிழ்ச்சியில், ஆன்டிக்குத் தான் ஒரே நேரம் அந்தக் கணத்தின் உள்ளே இருப்பது போலவும், வெளியே இருந்து பார்த்துக் கொண்டிருப்பது போலவும் இருந்தது. இப்போது தன் புத்தியின் பல்லாண்டு கால அடுக்குகள் எல்லாம் தூண்டப்பட்ட உணர்வுடன், அதே நேரம் அதை விடப் பழமையான ஒரு கணத்தில் வசிப்பதாக உணர்ந்தார். அவருக்குப் பதினான்கு வயதிருக்கையில், அவர் முறையாக வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார், கடைசியில் அவர் அப்பாவால் அல்ல, ஆனால் எல்டன் பென்னால். புகையிலை அறுவடைக்கு உதவ அழைக்கப்பட்ட அவர், தன் வயதுக்கு உருச் சிறியவனாக இருந்த போதும், ஒரு வேலையாள் என்ற தகுதிக்கும், மரியாதைக்கும் உரிய நிலையை எட்டி இருந்தார். ஆனால் அவர் எல்டனிடம் ஒரு புகையிலைக் குச்சியை அப்போது கொடுத்திருந்தார், எல்டன் அதை வாங்கிய உடன் தன் பக்கத்தைக் கையிலிருந்து விடுவித்திருந்தார், அது எல்டனின் பளுவை அதிகரித்திருந்தது.

“இருப்பா, ஒரு நிமிஷம்!” எல்டனின் சிரிப்பு அடித்து நிறுத்துவதாக இருந்தது, ஆன்டி அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தார், அந்தக் கணம் தன் நிலை இன்னும் மோசமாக ஆகக் கூடும் என்பதை அறிந்தவராக.

“நீ இந்தக் குச்சியைக் கொடுத்த விதம் தப்பு. இப்ப நான் அதை உன் கிட்டச் சரியான முறையில கொடுக்கப் போகிறேன். நீ அதைச் சரியான விதமா என் கிட்டத் திரும்பக் கொடு. ஆ, அதுதான் சரியான முறை. இப்பத்திலேருந்து இப்பிடித்தான் என் கிட்ட நீ அதைக் கொடுக்கணும்னு நான் விரும்பறேன் .”

ஆன்டி சொன்னார், “ஆஸ்டின், நல்ல பையனப்பா நீ, இதென்னது, கொஞ்சம் இரு. இந்தக் கந்தரக் கோளத்தைச் சுத்தம் செய்யறோம்னு சொல்லி நாம மறுபடி குப்பையாக்கலாமா? நீ என்ன செய்யலாம்னு இருக்கே, ஒரு வண்டிச் சுமையை மூணு வண்டிச் சுமையாக்கப் போறியா, இல்லை ஒரே வண்டிச் சுமையாவா?”

ஆஸ்டின் பதில் சொல்கிற வரையிலும் அவர் ஆஸ்டினையே பார்த்தபடி இருந்தார், “அது சரி. தெரியாதா? ஒரு சுமையை ஒரே ஒரு சுமையாப் போடத்தான் நானும் நெனைப்பேன்.”

ஆஸ்டினின் காதுகள் சிவந்து போயின என்பதை ஆன்டி கவனித்தார், அவருக்குச் சிரிப்பாக இருந்தது, ஆனால் ஓரளவு கண்டிப்போடே சொன்னார், “அப்ப, நீ இங்க வா, நீ தூக்கிப் போட்ட அந்தக் கிளையை எடுத்து, அது குறைச்சலான இடத்தை அடைக்கிற மாதிரி மறுபடி வையி. அதோட அடிப் பக்கத்தை வண்டியோட தலைக் கட்டை கிட்ட நெருக்கி அடைச்சு வை.

“ஆ, அதுதான் சரி,” அவர் சொன்னார். “அப்படித்தான் நாம செய்வோம். ஒவ்வொரு துண்டையும் எடுத்துப் பார்த்து, அந்தச் சுமை மேல எங்க அது பொருந்துமுன்னு பார்த்து வைக்கணும். ஒவ்வொரு கிளையோட உருவையும் கவனிச்சு, அதோட கணு, தடிமன், குச்சிகள், எல்லாத்தையும் நாம யோசிக்கணும், அப்படித்தான் நாம இந்தச் சுமையோட வடிவத்தை அமைக்கணும்.

“அது புத்தியைப் பயன்படுத்தற வேலை,” அவர் சொன்னார், “படிக்கிற இடத்தில இதைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும்.”

ஆன்டியும், அவருடைய சகோதரர் ஹென்ரியும், முதியவர் ஜாக் பீச்சம் இறந்த பின் சில நாட்களே ஆயிருக்கையில் ஒரு நாள் எல்டனைப் பார்க்கப் போயிருந்தனர். எல்டன் பீச்சமுடைய நிலத்தை வாங்கி இருந்தார். பெரியவர் ஜாக் தான் வயதால் நலிய ஆரம்பித்த பின் வருடங்களில், கூலி ஆட்களையும், குத்தகைக்காரர்களையும் நம்பி இருக்க வேண்டிய நிலையில் இருந்தார். அவர்களில் சிலர் பெரியவர் ஜாக்கின் எதிர்பார்ப்புகளுக்கேற்ற தரத்தை எட்டாதவர்களாக இருந்தனர் அல்லது அதற்கு முயற்சியும் செய்யாதவர்களாக இருந்தனர். அவர்கள் அங்கு அதிக நாட்கள் தங்கவில்லை, ஒவ்வொருவரும் வீட்டுக் குப்பைகளையும், உடைந்த பொம்மைகள், உதிரி மரச் சாமான்கள், போட்டது போட்டபடியே விடப்பட்டவை என்று குப்பைகளைப் பின்னே விட்டுச் சென்றிருந்தனர். இப்போது, எல்டன் அவற்றைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார், அந்த இடத்தை, அந்தப் பெரியவருக்குச் செய்ய வேண்டிய கடமையாகவும், தனக்காகவும், இருவரின் கூட்டு உடமை என்பதற்காகவும் சீர்ப்படுத்திக் கொண்டிருந்தார். காட்லெட் சகோதரர்கள் அன்று வீட்டில் யாரையும் காணவில்லை, ஆனால் அந்தக் கொட்டகை இருந்த களத்தில், மனிதர்களின் பொறுப்பின்மை விட்டுச் சென்ற சிதைவுகளும், பழைய மரத் துண்டங்களும், எல்டன் போகிற வழியில் சிதறியிருந்த கற்பாறைகளுமாக ஏற்றப்பட்டிருந்த சுமையோடு ஒரு பார வண்டி நின்றிருந்தது. ஹென்ரி காரை நிறுத்தினான், அவனும் ஆன்டி யும் சில நிமிடங்கள் அந்த பாரச் சுமையைப் பார்த்து வியந்து கொண்டிருந்தனர், அது ஒரு ஆசானின் வேலை. ஒவ்வொரு துண்டும், ஒவ்வொரு துக்கடாவும் தத்தமக்குப் பொருத்தமான இடத்தில் அமர்த்தப்பட்டதன் மகிழ்ச்சியை அந்தச் சுமைமீது அணிவித்தன.

“தன் உசிரைக் காப்பாத்தறத்துக்குக் கூட அவரால் ஒரு வேலையை மோசமாகச் செய்ய முடியாது,” என்றான் ஹென்ரி.

இப்ப நீ உரக்கக் கூவறே,” ஆஸ்டினிடம் ஆன்டி சொன்னார். “இப்பத்தான் நீ சரியாச் செய்திருக்கே.

“இப்பப் பாரு,” அவர் சொன்னார், “நாம புதரை அடுக்கற கலையைப் பயில்கிறோம். அது ஒரு அடிப்படையான கலை. தவிர்க்கவியலாத கலையும் கூட. உன்னோட ‘அருங்கலைகள்,’ உன்னோட இசை, இலக்கியம் எல்லாத்தயும் பத்தி எனக்குத் தெரியும்- நானும் படிக்கப் போயிருக்கேன் – உன் கிட்ட நான் சொல்றேன், அதெல்லாம் அவசியம் இல்லை, விருப்பப் பாடங்கள். புதரை அடுக்கற கலை இருக்கே, அது விருப்பப் பாடமில்லை.”

“நீங்க ஸிம்ஃபனி இசையைப் பத்திச் சொல்றீங்களா?” ஆஸ்டின் நிறுத்தி இருந்தான், அவனுக்கு ஸிம்ஃபனி இசை என்பது எத்தனை முக்கியம் என்பதைக் குறித்துக் காட்டுவது போல அசைவற்று நின்றான்.

“ஸிம்ஃபனிகளா! பாழாப் போச்சுது, ஆமாம்!” ஆன்டி சொன்னார். “ஸிம்ஃபனிகளை எழுதவும், அதை எல்லாம் நடத்தவும், இசைக்கவும் தெரிஞ்ச ஒரு சமூகத்தை எடுத்துக்க, அதுக்குப் பாங்கா ஒரு சுமை புதரை அடுக்கத் தெரியல்லைன்னா, அவங்களுக்கு ஒரு மண்ணும் கெடைக்கப் போகிறதில்லை.”

ஆஸ்டினோட முகம், காதிலிருந்து துவங்கி, ஆச்சரியப்படும் வகையில் முழுவதும் சிவந்து போயிருந்தது, ஆன்டிக்குக் குதூகலமாக இருந்தது. அவர் இப்போது நிறையத் தெரிந்திருப்பதன் பாரத்தை மகிழ்ச்சியோடு சுமந்து கொண்டிருந்தார். அந்த அரூபமான அறிவுத் திரட்டை இன்னொருவருக்குக் கொடுப்பதன் மூலம் ஆஸ்டினுக்குத் தான் செய்ய வேண்டிய கடமையை அவர் பூர்த்தி செய்கிறாரோ என்னவோ. ஒரு பையனை வேலைக்கு அமர்த்தும் நபர், அந்தப் பையனை மேம்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வது கடமை என்பது பற்றி அவருக்கு நிச்சயமாக இருந்தது. ஆனால் இப்போது அவருடைய சிந்தனையில், ஸிம்ஃபனிகளாலும், இன்னும் வேறெவற்றாலுமோ, அது கடவுளுக்கே தெரியும், தூண்டப்பட்டு கிளர்வோடு தன் புத்தி கொழுந்து விட்டெரிய நிற்கும் இந்தப் பையன், ஆஸ்டினைப் பற்றி பெற்றோருக்கு எழும் அச்சம் போன்ற உணர்வே எழுந்திருந்தது. ஆன்டிக்கு அந்தக் கொழுந்து விட்டெரியும் சுடர் பற்றி நன்றாகவே தெரிந்திருந்தது. புத்தி என்று ஒன்று இருக்கும் எந்த எளியோனுமே கூட, ஏதோ ஒரு சமயம் இல்லை என்றால் இன்னொன்றில், இப்படிச் சுடர் விடும் தருணத்தை உணர்ந்திருப்பான், அந்தத் தருணம், அந்த புத்தியின் சொந்தக்காரனான மனிதனையே எரிக்கலாம் அல்லது உலகத்தை எரிக்கலாம். எங்கும் எப்போதும் இருக்கும் பழமையான ஒரு நம்பிக்கையை , அதாவது அந்த உஷ்ணத்தை  ஒரு கெட்டிலையோ அல்லது சமையலுக்கான அடுப்பையோ மட்டும் வெப்பமூட்டும் விதமாக, கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம், வீட்டை எரித்து விடாமல் தடுக்கலாம் என்ற அந்த நம்பிக்கையை ஒவ்வொரு வளர்ந்த பையனும் உணர்ந்தே இருப்பான். ஆகவே ஒரு முதிய மனிதன், ஓர் இளைஞனைச் சார்ந்து நிற்பது, அந்த அனைத்தையும் எரிக்க முயலும் நெருப்பைச் சிறிது மட்டுப்படுத்தக் கூடும். அம்மனிதன் அதே நேரம் தன் கைகளையும் சூடுபடுத்திக் கொள்ள முடியலாம். அவர் ஆஸ்டின் தன் வாழ்வில் ஒரு துவக்கத்தைப் பெற உதவினாரென்றால், தன் வாழ்விலும் ஒரு புதுத் துவக்கத்தைப் பெறவே செய்தார். இறந்தவர்கள் நடுவே பழகிய ஒன்றாகப் பொதிந்திருந்த அவரின் இதயத்தில், வாழ்வோர் நடுவே அன்னியமாக உணர்ந்த அந்த இதயத்தில், ஒரு புது மாதிரியான உற்சாகம் அதில் பெருகுவதாக அவர் உணர்ந்தார். அவர் மேலும் ஏதும் சொல்வதாக இல்லை, ஆனால் அப்போதைக்கு அவர் தான் எடுத்த நிலையில் உறுதியாக நின்றார்.

“அன்பானவனே ஆஸ்டின், தங்கமான பையன் நீ, ஒரு வேளை எல்லாவற்றையும் வெடி வைத்துத் தகர்ப்பதும், எரிப்பதும், கிழித்தெறிவதும், வீசி எறிந்து விடுவதும் செய்து கொண்டே இசையை உருவாக்குவதையும் ஒரே நேரம் செய்ய முடியலாம். சில பேர், உன்னைப் போலவே, அது சாத்தியம் என்று நினைக்கிறார்கள் போல இருக்கிறது. ஆனால், தாம் எதை எடுத்தாலும் அவற்றில் ஒழுங்கைக் கொணரக் கூடிய கைகள் கொண்டவர்கள், அதுவும் ஏராளமான அப்படிப்பட்ட மனிதர்கள், அவர்கள் உன்னிடம் இல்லை என்றால், நீ அதிர்ஷ்டம் என்பதைப் பார்ப்பது கூட அரிதாகி விடும். என் கருத்தில் புதரை அடுக்கும் கலை என்பது இல்லாமல் போனால், இசை என்பதை உருவாக்கும் கலையும் கடைசியில் மடிந்து விடும். நீ திரும்பிப் போகும்போது, உன் பேராசிரியர்களிடம் சொல்லிவை, நீ ஒரு கிராமத்து ஆளைப் பார்த்ததாகவும், பழைய காலத்தின் எஞ்சிய ஆள் அவர், அவர் உன்னிடம் இப்படிச் சொன்னதாகவும் தெரிவி: தாழ் நிலையில் பண்பாடு இல்லையெனில் உயர் நிலைப் பண்பாடும் இராது, எப்போது தாழ் நிலைப் பண்பாடு கிடைப்பதே அரிதாகி விடுகிறதோ அதுதான் அப்போது மிக உயர்வான பண்பாடாக இருக்கும். அதை அவர்களிடம் சொல்லு. அப்புறம் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை என்னிடம் சொல்லு.”

இந்த முறை அவன் முகம் சிவப்பதற்குப் பதிலாக, ஆஸ்டின் யோசித்துக் கொண்டிருந்தான். அவன் முகம், நின்ற விதம், அவனுடைய அசைவுகள் எல்லாம் சிந்தனையின் பாதிப்பையே காட்டின.

இறுதியாக அவன் சொன்னான், “இசையை மையப்பாடமாகப் படிக்கிறவங்களுக்கு, புதரை அடுக்கறத்தை ஒரு அவசியப் பாடமா வச்சுடுவீங்கன்னு எனக்குத் தோணுது.”

ஆன்டி சிரித்தார், கொஞ்ச நாட்களாக அப்படிச் செய்ய வேண்டுமென்று அவர் ஆசைப்பட்டிருந்தார். “என் கிட்ட கேட்டுச் செய்வாங்கன்னா, அப்படியும் செய்யச் சொல்வேனோ என்னவோ. ஆனாப் பாரு ஆஸ்டின், நான் நிஜமாத்தான் சொன்னேன்.”

“எனக்குத் தெரியும்.”

“இதை எல்லாம் ஏன் சொல்றேன்னு கேட்டா, நா உன்னோட நண்பன்ங்கிறதால.”

“அது எனக்குத் தெரியும்.”

 

அவர்கள் அந்தப் பாரச் சுமையை ஏற்றி முடித்தார்கள். இந்தத் தடவை ஆன்டி கடிவாளங்களைத் தானே கையில் எடுத்துக் கொண்டார். அவர் நின்றபடி ஓட்டத் தயாரானார், ஆஸ்டின் சுமை மீது அத்தனை வசதியில்லாமல் அமர்ந்து கொண்டான்.

“புதரை அடுக்கும் கலை துவங்குவதும் முடிவதும்,”ஆன்டி சொன்னார், “அதை எங்கே அடுக்குவது என்று தெரிந்து கொள்வதில்தான்.”

அவர் சிறிது தூரம் ஓட்டிச் சென்றார், அங்கு புல் அடர்ந்த சரிவு இறங்கி, மரங்களடர்ந்த உயர்ந்த கரை ஒன்றில் முடிகிற இடம் வரை போனார். பாசி படர்ந்த குட்டை ஒன்று மேய்ச்சல் நிலத்தில் இருந்தது. அது முன்னர் நீரோடிப் பள்ளமாக அரிக்கப்பட்டு இருந்த இடம், இப்போது தேறி, புற்றரையாக இருந்தது, “முடியடர்ந்து மூடிவிட்டது,” என்று அவருடைய அப்பா சொல்லி இருப்பார். அந்த நீரறுப்புப் பள்ளம் ஆழச் சரிந்த இடங்களில், தோப்புக்குள் ஓடிய இடங்களில் இன்னும் திறந்த அரிப்புப் பள்ளமாகவே இருந்தது. ஆன்டி தன் வண்டியை அந்த இடத்திற்கு நேர் மேலே பொருத்தி நிறுத்தினார்.

அவருக்கு ஒரு ஊக முடிவு இருந்தது, இருநூறு வருடம் காலதாமதமாகி விட்டதால் நிரூபணம் தேட முடியாத முடிவு அது. இந்த மாதிரி நீரால் அறுக்கப்பட்ட பள்ளங்கள் முன்பு உழப்பட்ட சரிவுகளில் பயிர் செய்ததால் ஏற்பட்டவை என்று அவர் ஊகித்தார். அதற்கு முன்பு இந்த நிலப்பரப்பு இன்னமும் ஆழமான, ஊமைத் தசும்பாக இருந்த (நுண் துளைகள் நிறைந்த) வேர்களால் இறுகப் பிணைக்கப்பட்ட கன்னி நிலமாக இருந்தது, அந்த இடங்கள் வழியே ஓடிச் செல்வதை விட ஊறிப் போவதுதான் நீருக்கு வாகாக இருந்திருக்கும். சரிவுகள் அத்தனை செங்குத்தாக இல்லாத இடங்களில் புல் முளைத்து அந்தப் பள்ளங்கள் தேறி இருக்கும். ஆனால் நெடும் சரிவுகளில், மரங்கள் திரும்ப முளைத்த பின்னரும், நிலம் தேறி வருவது , அப்படி ஒருக்கால் நடந்தால் கூட, மனிதர் வாழும் கால இடைவெளிக்குள் அது நடந்தால், மெதுவாகத்தான் இருக்கும்.  அவை கீழ்ப் பகுதியிலிருந்து தேறி வருவது சாத்தியமில்லை என்பது தெரிந்திருந்தது, ஏனெனில் அங்கு நீரோட்டம் மிக விசையோடு இருந்திருக்கும். ஆனால் ஒரு சோதனை முயற்சியாக, இதை அவர் கொஞ்சகாலமாகவே யோசித்திருந்தார், புதர்க் குப்பையை குவித்து அடுக்குவதன் மூலம் நீர் ஓட்டத்தைக் கொஞ்சம் மெதுவாக்கி புல் வெளி முடியும் விளிம்புக்குச் சற்றுக் கீழே திருப்பி விட்டால், அந்தப் பகுதி நிலத்தை மேலிருந்து துவங்கி ஆற வைத்துத் தேற்ற முடியும் என்று நினைத்தார். இந்த யோசனையை அவர் ஆஸ்டினிடம் தெரிவித்து, அவர் என்ன யோசித்தார் என்பதை அவனுக்குக் காட்டினார், பிறகு அந்த நீரறுத்த பள்ளத்தின் முகப்பில் அவர்கள் புதரை அடுக்கும் கலையைப் பிரயோகித்தனர்.

இப்படியே அன்று காலைப் பொழுது பூராவும் அவர்கள் வேலை செய்தனர். மதியம் தாண்டி மாலை நேரத்தின் நடுப்பொழுது வரையிலும் தம் வேலையில் ஆழ்ந்திருந்தனர். அதற்குள் ஆன்டி சளைத்திருந்தார். இந்நேரமோ ஆஸ்டினே அனேக வேலைகளைச் செய்து கொண்டிருந்தான், அதுவும் மிகக் கடினமான பகுதிகளை அவனே செய்தான். ஆன்டி அவனுடைய வேலையில் தலையிடாமல் ஒதுங்கி நின்றார், தன்னால் இயன்ற வரை அவனுக்கு உதவிகள் செய்தார், மேலும் பார்வையிட்டு நின்றார். ஆஸ்டினோ தன் வாலிபத்தின் வலு கொடுக்கும் சந்தோஷத்தோடு அந்த வேலைக்குள் இறங்கி இருந்தான். ஆன்டியின் வாழ்நாளுக்குள் எத்தனை செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து, அந்த வேலி போட்ட குழுவினரின் சேதங்களை அவர்கள் செப்பனிட்டிருந்தனர். ஒருக்கால் புண்பட்ட இயற்கை உலகு ஆறித் தேறுவதற்கு அவர்கள் சிறிதாவது உதவி இருக்கலாம். அவர் அந்த இளைஞனைப் பற்றிப் பெருமிதம் பூண்டார்.

~oOo~

வெண்டெல் பெர்ரி, அமெரிக்க நாட்டின் கென்டகி மாநிலத்தில் உள்ள போர்ட் ராயல் என்ற ஊரில் இருக்கும் ஒரு பண்ணையில் வாழ்கிறார், அதில் வேலை செய்கிறார். இதர பல வேலைகளூடே அவர் ஒரு கவிஞராக, புனைவெழுத்தாளராக, கட்டுரையாளராக, மேலும் சூழல் பாதுகாப்பு ஆர்வலராக இயங்குகிறார்.

தமிழாக்கம்: மைத்ரேயன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.