தெலுங்குச் சோழர்கள்

தென்னிந்திய வரலாற்றைப் பொருத்தவரை, ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களாகத் தெலுங்குச் சோழர்களைச் சொல்லலாம். இருப்பினும் , அவர்களைப் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. பெரும் பேரரசுகளின் வரலாறுகள் குறிப்பிடப்படும் போது போகிற போக்கில் தெலுங்குச் சோழர்களும் இடம்பெறுவதே வழக்கம். இவர்கள் சோழர்களின் வம்சாவளியினர் என்பது தெரிந்த செய்தியாக இருந்தாலும், இவர்களுடைய ஆட்சி எந்தக் காலத்தில் ஆந்திராவில் உருவானது? சோழர்களுக்கும் இவர்களுக்குமான உறவுமுறை எத்தகையது என்பது பற்றியெல்லாம் அதிகம் ஆராயப்படவில்லை.

தெலுங்குச் சோழர்களின் தோற்றத்தைப் பற்றியே பல விதமான கருத்துகள் உள்ளன. சோழர்கள் என்று இவர்கள் தங்களைக் கூறிக்கொள்வதினால் தமிழகச் சோழர்களின் வம்சாவளி என்று பெரும்பாலானோர் கருதினாலும், சிலர் இவர்களை ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்த பல்லவர்களின் வழித்தோன்றல்கள் என்றும், சிலர் சாளுக்கியர்கள் வழிவந்தவர்கள் என்றும் கூறுவது உண்டு. ஆனால், இவர்கள் சோழர்கள் வம்சாவளியினர்தான் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் கல்வெட்டு ஆதாரங்களும் இலக்கிய ஆதாரங்களும் அடங்கும். சோழன் என்பதின் தெலுங்கு வடிவம்தான் சோடன் என்பது.

பல பிரிவுகளாக ஆந்திராவின் தென்பகுதியை ஆண்ட தெலுங்குச் சோழர்களின் கல்வெட்டுகள் பெரும்பாலும் இந்த வரிகளோடுதான் துவங்குகின்றன.

“சரண சரோருஹ விஹித விலோசன த்ரிலோசன ப்ரமுகாகில ப்ரித்விஸ்வர காரித காவேரிதீர கரிகால குல ரத்ன ப்ரதீப”

அதாவது காவிரி நதியின் கரைகளை உயர்த்திக்கட்டிய பணியில் பங்குபெற்ற திரிலோசனனும் மற்ற அரசர்களும் அடிபணிந்த கரிகாலன் குல விளக்குகள் என்றே அவர்கள் தங்களைக் கூறிக்கொள்கிறார்கள். இதிலிருந்து அவர்கள் முற்காலச் சோழர் வம்சாவளியினர் என்பது தெளிவாகிறது. இதில் குறிப்பிடப்படுகின்ற திரிலோசனன், கரிகாலனின் சமகாலத்தில் ஆந்திராவின் தென்பகுதியை ஆண்ட திரிலோசன பல்லவன் என்று கூறுவார் உண்டு. இந்தத் திரிலோசன பல்லவனைக் கரிகாலன் தோற்கடித்தது பற்றி இலக்கிய ஆதாரங்கள் பல உள்ளன. கரிகாலன் தனது வட இந்தியப் படையெடுப்பின் போது இந்தப் பல்லவனைத் தோற்கடித்து அங்கு தனது மகன்களில் ஒருவனை ஆட்சிக்கு அமர்த்தியதாகவும், அவனுடைய வம்சாவளிதான் தெலுங்குச் சோழர்கள் என்று கூறப்படுகிறது. தங்களது முன்னோர்களைப் பற்றிக் கூறும் தெலுங்குச் சோழர்கள், தமிழ்நாட்டுச் சோழர்களைப் போலவே சூரியனிடமிருந்து தங்கள் வம்சம் தோன்றியதாகக் குறிப்பிடுகின்றனர். சோழர் கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் வரும் சூரிய வம்ச மூதாதைகள் இவர்களின் கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றனர். அதன்பின் ‘ஜடசோடன்’ என்ற அரசன் தங்கள் வம்சத்தில் தோன்றியதாகக்கூறும் அவர்கள், அவன் மகனாக காவிரிக்குக் கரை எடுப்பித்த கரிகாலன் தோன்றினான் என்று கூறுகின்றனர். இந்த ஜடசோடன் என்பவன் கரிகாலனின் தந்தையான இளஞ்சேட்சென்னியின் மருவிய சொல்லாக இருக்கக்கூடும். கரிகாலனுக்கு மஹிமான சோடன், தொண்டமானா, தசவர்மன் என்ற மூன்று மகன்கள் இருந்ததாகவும், தசவர்மனே ஆந்திராவின் குண்டூர் பகுதியான ரேணாடுவின் அரசனாக நியமிக்கப்பட்டான் என்றும் இவர்களின் கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. குறிப்பாக பொப்புடி என்ற இடத்தில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டு கூறுவது போல் கரிகாலனால் வடபகுதியை ஆள அவன் மகன்களின் ஒருவன் நியமிக்கப்பட்டிருக்கலாம் அல்லது களப்பிரரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட சோழ மன்னன் ஒருவன் வடபுறம் சென்று இந்த வம்சத்தை உருவாக்கியிருக்கலாம் என்பதே ஆராய்ச்சியாளர்களின் கருத்து. கிட்டத்தட்ட பொது யுகம் 1ம் நூற்றாண்டின் முடிவில் தோன்றிய இவர்கள் ஆட்சியைப் பற்றிய தகவல்கள் பொயு 10ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் அதிகமாகத் தென்படவில்லை. அதுவரையான காலகட்டத்தில் இவர்கள் வம்சத்தில் வந்த அரசர்கள் யாவர்? அவர்கள் எந்தப் பேரரசின் சிற்றரசர்களாக இருந்தனர் என்பது பற்றி எந்தவிதமான செய்தியும் கிடைக்கவில்லை. தெற்கில் பல்லவர்கள், மேற்கில் சாளுக்கியர்கள், வடக்கில் கலிங்கர்கள் என்று வலுவான அரசுகளின் இடையில் சிறிய பகுதிகளை இவர்கள் ஆண்டிருக்கக்கூடும். பிற்காலச்சோழர்களின் வம்சம் தலையெடுத்ததும், தெலுங்குச் சோழர்களைப் பற்றிய செய்திகளும் கிடைக்க ஆரம்பிக்கின்றன. குறிப்பாக, சாளுக்கிய சோழனான முதலாம் குலோத்துங்கன் அரியணை ஏறிய காலம் முதல் தெலுங்குச் சோழர்களின் பங்கு ஆந்திர அரசியலில் கணிசமாக உயர்ந்தது.

ரேணாடு சோழர்கள்

தெலுங்குச் சோழர்களின் மூத்தவர்களாக (அதாவது நமக்குக் கிடைக்கும் ஆதாரங்கள் மூலம்) அறியவருபவர்கள் கம்மநாடு பகுதியை ஆட்சி செய்த ரேணாடு சோழர்கள். இவர்கள் தசவர்மனின் வழி வந்தவர்களாகக் தங்களைக் குறிப்பிடுகிறார்கள். இவர்களில் ஒரு பிரிவினர் கோனிதேனா சோழர்கள் பத்தாம் நூற்றாண்டில் கிடைக்கும் சில கல்வெட்டுகள் பல்லிய சோழன் என்ற அரசனைப் பற்றிப் பேசுகின்றன. பல்லிய சோழன் காலத்தில் இவர்கள் இந்தப் பகுதியை விட்டு அகன்று குண்டூர் பகுதிக்கு இடம் பெயர்ந்தார்கள் என்று தெரிகிறது. இதற்கு வேங்கியைத் தலைநகராகக் கொண்ட கீழைச் சாளுக்கியர்களின் கை ஓங்கியதும், அவர்கள் தமிழகச் சோழர்களுடன் மண உறவு கொண்டு தங்கள் ஆட்சிப் பகுதியை விரிவாக்க முனைந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். பல்லிய சோழனுக்கு அடுத்து வந்த சோடபல்லி (பொயு 1000) கல்யாணிச் சாளுக்கியர்களுக்குத் தன் ஆதரவை அளித்ததை வைத்து இதை ஊகிக்க முடிகிறது. இந்தப் பிரிவில் அடுத்து வந்த அரசன் நன்னி சோழன் அல்லது சோடன். ஆந்திர வரலாற்றில் பல நன்னி சோடர்கள் உண்டு. அதனால் எவர் எப்போது ஆட்சி செய்தார் என்பதைப் பற்றி பல குழப்பங்களும் உண்டு. இந்த நன்னி சோடனைப் பற்றி நமக்குத் தெளிவாகத் தெரியவருவது, இவன் முதல் ராஜேந்திர சோழனின் மைந்தனான ராஜாதிராஜ சோழனின் சமகாலத்தவன் என்பதை வைத்து இவன் ஆட்சியின் ஆரம்ப காலத்தை பொயு 1050 என்று வரலாற்றாசிரியர்கள் கணிக்கிறார்கள். நன்னி சோடனை அடுத்து பதவிக்கு வந்தவர் பொத்தப்பி காமதேவன்(பொயு 1106-1115). இவருக்கும் நன்னி சோடருக்கும் உள்ள உறவுமுறை சரியாகத் தெரியவில்லை. முதலாம் குலோத்துங்க சோழருடைய சமகாலத்தவரான இவர், அவருடைய ஆட்சியை தாம் ஏற்றுக்கொண்டதாக பல கல்வெட்டுகளில் தெரிவிக்கிறார். அதுமட்டுமல்லாமல், குலோத்துங்கருடைய கலிங்கப்போரிலும், சாளுக்கியர்களுக்கு எதிரான போரிலும் அவருடன் சேர்ந்து போரிட்டிருக்கிறார். இதன் பின் இந்தப் பகுதியை ஆண்டவர் கன்னர சோழர். விக்ரம சோழன் மற்றும் இரண்டாம் குலோத்துங்க சோழனின் சமகாலத்தவரான இவர், சோழர்களின் சிற்றரசர் என்று ஆரம்ப காலத்தில் தம்மைக் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால், பின்னாளில் மேலைச் சாளுக்கியர்களுடன் இவர் சேர்ந்து கொண்டதாக த்ராக்ஷாராமம் கல்வெட்டு குறிப்பிடுகிறது. பொயு 1127 வாக்கில் சோழர்கள் மீண்டும் வேங்கியை வெற்றி கொண்டதை அடுத்து தனது நிலையை மாற்றிக் கொண்ட இவர் மீண்டும் சோழர்களுடன் சேர்ந்து கொண்டார். இவருடைய கல்வெட்டுகள் காளஹஸ்தி வரை கிடைப்பதிலிருந்து இவருடைய ஆட்சி ஆந்திராவின் தென்பகுதி வரை விஸ்தரிக்கப்பட்டிருந்தது என்று நாம் அறிந்து கொள்ளலாம். இவரை அடுத்து திரிபுவனமல்லன், இரண்டாம் நன்னிசோடன், கம்மண்ண சோழன், பல்லி சோழன் ஆகியோர் ஆட்சி புரிந்தனர். பொயு 1249ல், இந்த வம்சத்தைச் சேர்ந்த கன்னரதேவன் ஆட்சிக்கு வந்தார். காகதீய கணபதியின் சமகாலத்தவர் இவர். அவரால் தோற்கடிக்கப்பட்டு காகதீயப் பேரரசின் சிற்றரசராக கோனிதேனா சோழர்கள் ஆட்சி புரிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இவருக்குப் பின் தெலுங்குச் சோழர்களின் இந்தக் கிளையில் அரசர்கள் எவரும் காணப்படவில்லை.

பொத்தப்பி சோழர்கள்

ரேணாடு சோழர்களின் மற்றொரு பிரிவினர் பொத்தப்பி சோழர்கள். கடப்பை மாவட்டத்தில் உள்ள பொத்தப்பியைத் தலைநகராகக் கொண்டு இவர்கள் ஆட்சி புரிந்ததால், இவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டனர். இந்தக் கிளையில் ஆறு முக்கிய அரசர்களைப் பற்றி நமக்குத் தெரியவருகிறது. இவர்களும் கரிகாலனின் வழிவந்தவர்கள் என்றே தங்களைக் கூறிக்கொள்கின்றனர். சோடபீஜண்ணா என்பவர் கரிகாலனின் வம்சாவளி என்றும், பல போர்களில் ஈடுபட்டு எதிரிகளின் தலைகளைக் கொய்தவர் அவர் என்றும் அதனால் ஜெயதோபகண்டா, கண்டாரகண்டா ஆகிய விருதுப் பெயர்களைக் கொண்டவர் என்றும் இவர்களது ஆவணங்கள் கூறுகின்றன. இவர் எக்காலத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை. இந்தக் கிளையில் அறியப்படும் முதலாவது அரசர் பெத்தராசா. பொயு 1121லிருந்து 1125ம் ஆண்டு வரை பொத்தப்பி நாட்டை அரசாண்டவர். சோழர்களின் சிற்றரசராக இவர் பணிபுரிந்து சாளுக்கியர்களுக்கு எதிரான போர்களில் ஈடுபட்டதற்கான குறிப்புகள் கிடைக்கின்றன. இவருக்கு அடுத்து மகாமண்டலேஸ்வரர் விமலாதித்த ஆட்சிபீடம் ஏறினார். விக்ரம சோழருக்கும், அதன் பின் வந்த இரண்டாம் ராஜராஜருக்கும் தனது ஆதரவைத் தெரிவித்துக்கொண்டதாக தனது கல்வெட்டுகளில் குறிப்பிடுகிறார். சோழர்களின் வம்சாவளியைப் பெருமையுடன் குறிப்பிடுவதாலும், கல்வெட்டுகளைத் தமிழில் பொறித்ததாலும் பொத்தப்பி சோழர்களுக்கும் தமிழகச் சோழர்களுக்கும் உள்ள நெருங்கிய உறவை அறிந்துகொள்ளலாம். இவரை அடுத்து திரிலோக்யமல்ல மல்லிதேவர், முதலாம் மல்லிதேவர், பொத்தப்பி சித்தி ஆகியோர் ஆட்சிசெய்தனர். அடுத்து சித்தியின் இரு மகன்களான சோமேஸ்வரரும் மூன்றாம் மல்லிதேவரும் இணைந்து ஆட்சிபீடம் ஏறினர் என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கும் மற்றொரு தெலுங்குச் சோழர் வம்சாவளியினரான நெல்லூர்ச் சோழர்களுக்கும் கடும் பகை நிலவியதாகத் தெரிகிறது. நெல்லூர் அரசரான நல்லசித்தி மல்ல சோமேஸ்வரரை பெண்ணாற்றங்கரையில் தோற்கடித்ததாக தொங்கலாசனி கல்வெட்டுத் தெரிவிக்கிறது. இதை அடுத்து பொத்தப்பியை ஆட்சிசெய்ய தனது பிரதிநிதியை நல்லசித்தி நியமித்ததாகவும், இந்த வெற்றியைக் குறிக்கும் வகையில் நல்லசித்தியின் மைந்தன் ஶ்ரீசைலம் கோவில் விழாக்களுக்கு நிவந்தம் அளித்ததாகவும் கல்வெட்டு கூறுகிறது. பொத்தப்பிச் சோழர்களின் வரிசையில் பொயு 1224ல் அரியணை ஏறிய ஒப்பிலிசித்தி. சோழகுல ஆபரணம், கண்டகோபாலன், கீர்த்திநாரயணன் என்ற விருதுப் பெயர்களைக்கொண்டவர் இவர். இவர் கம்மநாடுவின் மேல் படையெடுத்து அங்கிருந்த கொனிதேன சோழர்களை வெற்றிகொண்டார். காகதீய கணபதியின் சிற்றரசராக பொத்தப்பி, கம்மநாடு, வேலநாடு போன்ற பகுதிகளை ஆண்டிருக்கிறார். தவிர தெக்காணச் சக்கரவர்த்தியின் தளபதி என்றும் தம்மைக் கூறிக்கொள்கிறார். இந்தத் தெக்காணச் சக்கரவர்த்தி என்பது மூன்றாம் ராஜராஜ சோழரைக் குறிக்கும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. அப்படியானால், அவர் சோழர்களுக்கும் அடங்கி ஆட்சி செய்திருக்கிறார் என்பது தெளிவு. ஆனால், இது தவறு, முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனையே இது குறிக்கிறது என்று சொல்வோரும் உண்டு. சுந்தரபாண்டியனின் ஆட்சி நெல்லூர் வரை நீண்டிருந்ததையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். பொத்தப்பி அரசில் இருந்த நந்தலூர், அட்டிராலா ஆகிய இடங்களில் பாண்டியர் கல்வெட்டுகள் கிடைக்கப்பெறுகின்றன. எனவே பாண்டியனால் தோற்கடிக்கப்பட்டு அவனது ஆட்சியை ஒப்பிலிசித்தி ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். ஒப்பிலிசித்திக்குப் பிறகு பொத்தப்பிச் சோழர்களின் வம்சாவழியைப் பற்றிய தகவல்கள் காணப்படவில்லை.

நெல்லூர்ச் சோழர்கள்

தெலுங்குச் சோழர்களில் பிரதான இடத்தைப் பெறுபவர்கள் நெல்லூர்ச் சோழர்கள். ஆந்திராவின் தென்பகுதி முழுவதையும், கிழக்குக் கர்நாடகாவையும் இவர்கள் ஆட்சி செய்தனர். ஆரம்பத்தில் சோழர்களின் சிற்றரசர்களாகவும், பின்னாளில் காகதீயப்பேரரசின் கீழும் இவர்களின் ஆட்சி இருந்தது. இவர்களுடைய ஆட்சியைப் பற்றி கல்வெட்டுகள் மூலமும், செப்பேடுகள் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது. தெலுங்கு, தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தங்கள் கல்வெட்டுகளைப் பொறித்திருக்கின்றனர் இவர்கள். கரிகாலனின் வழிவந்தவர்களாகவே தங்களையும் கூறிக்கொள்ளும் இவர்கள், அவன் வழிவந்த மதுராந்தக பொத்தப்பிச் சோழனே தங்கள் முன்னோர்களில் ஒருவன் என்றும் கூறுகின்றனர். இவர்கள் வம்சத்தில் நமக்குக் கிடைக்கின்ற ஆதாரங்களின் படி முதலாவது அரசன் மனுமசித்தி (பொயு 1175-1192). இரண்டாம் ராஜாதிராஜனின் சமகாலத்தவரான இவரின் கல்வெட்டுகள் காளஹஸ்தியில் கிடைக்கப்பெறுகின்றன. சோழ சக்கரவர்த்திகளின் ஆட்சிக்கு அடங்கியவராகவே தம்மை அதில் குறிப்பிட்டுக்கொள்கிறார் இவர். இருப்பினும் அரசின் வடக்கில் இருந்த காகதீயர்களோடு இவர் போர் புரிந்ததற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை. ஜெயங்கொண்டசோழ மண்டலத்தின் பகுதியான சேதிகுலவளநாட்டின் தலைவனாக இவரைக் கல்வெட்டுகள் தெரிவிப்பதைக் கொண்டு சோழர் நிர்வாகத்தை எவ்வளவு தூரம் இவர் கடைப்பிடித்தார் என்பது தெளிவாகிறது. சித்திக்கு மைந்தர்கள் ஏதும் இல்லாததால், அவர் சகோதரின் மகன்களான தயபீமாவும் நல்லசித்தியும் அடுத்து ஆட்சிப் பொறுப்பை இணைந்து ஏற்றனர். ஆந்திராவின் தென்பகுதிகளில் பல போர்களை வென்றதாகவும், காஞ்சி வரை இவர்கள் ஆட்சி நீடித்ததாகவும் இவர்களின் கல்வெட்டுகள் குறிக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கரின் சமகாலத்தவர்கள் இந்த அரசர்கள். மூன்றாம் குலோத்துங்கன் காஞ்சியை மீண்டும் கைப்பற்றிக்கொண்டதன் மூலம் நல்லசித்தி பின்வாங்க நேரிட்டது. காஞ்சியின் ஆட்சியும் இவர்கள் கைவிட்டுச் சென்றது. அடுத்து இந்த அரசர்களின் சகோதரரான எர்ரசித்தா ஆட்சிக்கு வந்தார். சுமார் 22 ஆண்டுக்காலம் இவரது ஆட்சி நடைபெற்றது. மூன்றாம் குலோத்துங்கரின் ஆட்சியை ஏற்றுக்கொண்டதாகவே இவருடைய கல்வெட்டுகளும் தெரிவிக்கின்றன. எர்ரசித்தாவின் மூன்று மகன்களான மனுமசித்தி, பெத்தா, தம்முசித்தா ஆகியோர் இவரது மூன்று கண்களைப் போல் இருந்தனர் என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. அவர்களது துணை கொண்டு பல வெற்றிகளை இவர் ஈட்டியதாகத் தெரிகிறது.

எர்ரசித்தாவிற்குப் பிறகு அவரது மகன் இரண்டாம் மனுமசித்தி ஆட்சிப்பொறுப்பேற்றார். மூன்றாம் குலோத்துங்கன் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் எதிர்ப்பைச் சமாளித்துக்கொண்டிருந்த வேளையில், காஞ்சியைக் கைப்பற்றி மனுமசித்தி ஆட்சி புரிந்ததாக இவர் காலத்துக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இவருக்கு அடுத்து மனுமசித்தியின் மகனும் திருக்காளத்தி என்ற இயற்பெயருடைய முதலாம் திக்கன் பொயு 1209ல் ஆட்சிபீடம் ஏறினான். தெலுங்குச் சோழர்களில் மிகச்சிறந்த அரசனாக திக்கனைச் சொல்லலாம். இவருடைய கல்வெட்டுகள் காஞ்சி, தென் ஆற்காடு, மணிமங்கலம் ஆகிய இடங்கள் வரை கிடைக்கின்றன. இதைக்கொண்டு நெல்லூர், தெற்கில் செங்கல்பட்டு, வடக்கில் கடப்பா வரை இவரது ஆட்சி பரந்து விரிந்திருந்ததை அறியலாம். கிட்டத்தட்ட 40 ஆண்டுக்காலம் ஆட்சிசெய்தவர் இவர். கண்டகோபாலன் மடை என்ற பெயரில் நாணயங்களை வெளியிட்டார். இருப்பினும் இவரது ஆட்சிக்காலத்தின் ஆரம்பத்தில் சோழர்களின் பலம் முற்றிலும் குன்றவில்லையாதலால், சோழர்களின் சிற்றரசாகவே இவர் இருந்தார். மூன்றாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டுகளில் கண்டகோபாலன் என்ற பெயரில் இவரும் இவரது மனைவிகளும் இடம்பெறுகின்றனர். திக்கண்ண சோமயாஜி, அவர் எழுதிய நிர்வாசனோத்தவ ராமாயணத்தில் திக்கன், கர்நாடக சோமேஸ்வரனையும், சம்புராஜுவையும் மற்ற சோழகுல எதிரிகளையும் தோற்கடித்து ‘சோழஸ்தாபனாச்சார்யா’ என்ற பட்டப்பெயரையும் பெற்றதாகக் குறிப்பிடுகிறார். மாறவர்மன் சுந்தரபாண்டியனின் சோழர்களுக்கு எதிரான படையெடுப்பில் ஹொய்சாள சோமேஸ்வரனும் திக்கனும் சோழர்கள் பக்கம் நின்று போரிட்டாலும், என்ன காரணத்தாலோ சோமேஸ்வரனுக்கும் திக்கனுக்கும் இடையில் பகைமை மூண்டதாகத் தெரிகிறது. பின்னாளில் சோமேஸ்வரன் பாண்டியர் பக்கம் சாய்ந்தபோது சோழர்களுக்கு உறுதுணையாக திக்கன் நின்று, அவனோடு போரிட்டிருக்கலாம். சோழர் பேரரசு பலவீனமடைந்த அந்தக் காலத்தில், பாண்டியர்கள், காடவராயர்கள், ஹொய்சாளர்கள் என்ற பல எதிரிகளுக்கு இடையில் திக்கன் சோழர்களுக்கு உதவி புரிந்ததால் இந்தப் பெயர் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். திக்கனின் முதுமைக்காலத்தில் அவர் மகனான மூன்றாம் மனுமசித்தனும் மருகனான அல்லுதிக்கனும் ஆட்சிப்பொறுப்பைக் கவனித்தனர். அதன்பின் அல்லுதிக்கனும் மூன்றாம் மனுமசித்தனும் ஒருவர்பின் ஒருவராக ஆண்டனர். மனுமசித்தனின் மகனான இரண்டாம் திக்கனின் காலத்தில் வடக்கில் காகதீயப் பேரரசி ருத்ரமாதேவியையும் தெற்கில் பாண்டியர்களையும் அவர் சமாளிக்க வேண்டியிருந்தது. அதன்பின் வடக்கிலிருந்து வந்த தொடர்ச்சியான இஸ்லாமியப் படையெடுப்புகளின் காரணமாக பொயு 1325ம் ஆண்டு வாக்கில் தெலுங்குச்சோழர்களின் வம்சம் மறைந்தது.

மேற்குறிப்பிட்டவர்களைத் தவிர இன்னும் சில சிறிய அரசர்கள் தங்களைச் சோழர் வம்சாவளியினர் என்று கூறிக்கொண்டு ஆந்திராவை ஆட்சி செய்திருக்கின்றனர். மேலும், வேலநாடு சோழர்கள் என்ற ஒரு பிரிவினரும் உண்டு. ஆனால், சோழர்களின் சிற்றரசர்களாக இவர்கள் இருந்தாலும், தங்களைச் சூரிய வம்சத்தினர் என்று கூறிக்கொள்வதில்லை.

தெலுங்குச் சோழர்களின் வரலாற்றைத் தொகுத்துப் பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் பிற்காலச் சோழர்களின் சிற்றரசர்களாகவே இருந்து ஆந்திர மாநிலத்தை ஆட்சி செய்துவந்தது தெரிகிறது. குறிப்பாக வேங்கிச் சாளுக்கியர்களின் வம்சமும் பிற்காலச்சோழர் வம்சமும் ஒன்றுபட்ட பிறகு, ஆந்திரா இவர்களது தன்னாட்சியின் கீழ் வந்துவிட்டது. சோழர் வம்சம் வலிமை குன்றிய போது, இவர்களும் தங்கள் வலிமையை இழந்து வரலாற்றில் இருந்து மறைந்திருக்கின்றனர்.

உசாத்துணைகள் :

1) The History of Andhra Country 1000 AD – 1500 AD, Yashoda Devi, Gyan Publishing House, New Delhi

2) Trilochana Pallava and Karikala Chola – N Venkata Ramayya, V Ramaswamy Sastri & Sons, Chennai

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.