(பிற கொடூரங்கள் உட்பட, 1995ஆம் ஆண்டு நிகழ்ந்த ஸ்ரெப்ரெனிட்ஸா படுகொலையில் பங்காற்றிய காரணத்தால் போஸ்னிய செர்ப் ராணுவ தலைவர் ராட்கோ மாடிச் இனப்படுகொலை குற்றவாளி என்று தீர்மானித்து முன்னாள் யூகோஸ்லாவியாவுக்காக அமைக்கப்பட்டிருந்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தண்டனை வழங்கியுள்ளது. போஸ்னிய போரின் துவக்க நாட்களில் எடுக்கப்பட்ட ஓர் ஒளிப்படம் குறித்தும், தீமையின் தன்மை குறித்து அது என்ன சொல்கிறது என்பது குறித்தும், ஸ்லவன்கா த்ராகுவிச் தன் எண்ணங்களை இங்கு பதிவு செய்கிறார். நவம்பர் 18, 2017 அன்று ப்ராதிஸ்லாவாவில், மத்திய ஐரோப்பிய பொதுமன்றத்தில், அவர் அளித்த உரையின் அடிப்படையில் இக்கட்டுரை அமைந்துள்ளது).
தீமை என்றால் என்னவென்பதும் அது எப்படி இருக்கும் என்பதும் நமக்கு தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். போதுமான முன்னுதாரணங்களை வரலாறு, அண்மைய வரலாறும் இன்றைய வரலாறும்கூட, அளிக்கிறது. ஆனால் இன்று நாம் எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சித்தரிக்க, அதன் மீது மீண்டும் ஒரு முறை நாம் நம் பார்வையைச் செலுத்துவது பயனுள்ளதாய் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது- பார்ப்பது என்ற சொல்லை உள்ளபடியே அதன் நேரடிப் பொருளில் இங்கு பயன்படுத்துகிறேன்.
தீமை என்பது குறித்த சிந்தனை தொன்மையானது, சமயங்கள் எல்லாவற்றின் முதல் சில அடிப்படை விதிகளில் தீமையை எவ்வாறு எதிர்ப்பது என்பது அடக்கம். இது குறித்து மேலும் உயர்ந்த, மேலும் பொருத்தமான சிந்தனையை இன்று வரை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.
இங்கு நாம் ரான் ஹவீவ் எடுத்துள்ள இந்த ஒளிப்படத்தைப் பார்க்கலாம்: நாம் எதைக் காண்கிறோம்?
(Photo: Ron Haviv. Source: Courtesy of Ron Haviv/Biography of a Photo)
இறந்த, அல்லது இறந்து கொண்டிருக்கும் பொதுமக்களின் உடல்களை ஒரு போர் வீரன் உதைத்துக் கொண்டிருக்கிறான். இந்த போர் வீரனின் இலச்சினையையோ தேசத்தையோ இந்த புகைப்படத்தைக் கொண்டு அறிவது முதலில் கடினமாக இருக்கிறது, ஆனால் ஏப்ரல் 2, 1992 அன்று போஸ்னியாவில் உள்ள பியேயினாவில் இது எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியும். சீருடை தரித்திருப்பவர்கள் அச் சிறிய நகரின் முஸ்லிம் குடிமக்களைக் கொலை வேட்டையாடிக் கொண்டிருக்கும் செர்பிய சீரணிப்படையினர், அர்கானின் ‘புலிகள்’, பின்னரே இது ‘இனப்படுகொலை’ என அறியப்பட்டது. இவர்களின் நோக்கம் வெற்றியும் கண்டது: இங்கு வாழ்ந்திருந்த முஸ்லிம் மக்கள் தொகையில் பத்து சதவிகிதம் மட்டுமே போருக்குப் பின் இப்பகுதியில் எஞ்சிமிருந்தார்கள்.
இந்தப் படத்தை நான் முதலில் பார்த்தது எப்போது என்பது எனக்கு நினைவில்லை- வெளிநாட்டுச் செய்தித்தாளா, அல்லது யாராவது எனக்கு இதைச் சுட்டிக் காட்டினார்களா என்பது தெரியவில்லை- ஆனால் இது என்னோடு இருந்தது, என்னில் இருந்தது. 2003ஆம் ஆண்டு, ப்ரெத்ராக் லூகிச், க்ரோவேஷியாவில் உள்ள ஒரு சிறு பதிப்பகமான ஃபீரல் ட்ரிப்யூனின் பதிப்பாசிரியர், போர்க் குற்றவாளிகள் பற்றிய, ‘அவர்கள் ஒரு பூச்சிக்குக்கூட கெடுதல் செய்ய மாட்டார்கள்’ (‘They Would Never Hurt a Fly’), என்ற என் புத்தகத்தின் முன் அட்டையில் இந்த ஒளிப்படத்தைச் சேர்க்கலாம் என்று சொன்னபோது, இப்படி ஒரு அட்டை கொண்ட புத்தகத்தை வாங்கிப் படிக்க என் தேசத்தில் உள்ள வாசகர்களில் பலருக்கும் ஆர்வமிருக்காது என்பது எனக்கு நன்றாகவே தெரிந்திருந்த போதிலும், நான் உடனே ஒப்புக் கொண்டேன். ஆம், பின்னர் இது மொழிபெயர்க்கப்பட்டு பதினைந்து தேசங்களில் பதிப்பிக்கப்பட்டபோது பதிப்பகத்தினர் எவரும் இதை அட்டைப்படமாக ஏற்றுக் கொள்ளவில்லை. அந்த எண்ணமே அவர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத அதிர்ச்சி அளித்தது.
என்றாலும் இதே படம், டைம் இதழாலும் சர்வதேச தேர்வுக்குழுவினராலும் எக்காலத்திலும் மிகுந்த தாக்கம் செலுத்திய நூறு ஒளிப்படங்களில் ஒன்று என்று தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்தப் படத்தை முதல் முறை பார்த்தபோது என் உள்ளத்தில் தோன்றிய உணர்வுகள் நினைவிருக்கின்றன: ஒரு கணம் மூச்சு விட மறந்து விட்டது போல் திடீரென்று தோன்றிய காற்றின்மை; அதனால் என் இதயத்தில் தோன்றிய வெற்றிடம்; சிமெண்ட் தரையில், தங்களுக்குக் கீழ் ரத்தம் ஒழுகக் கிடந்த இரு பெண்களையும் ஆணையும் என் கண்கள் எதிர்கொண்டபோது மனதில் தோன்றிய துயரம்.
ஒரு வேளை இது அந்தப் பெண்ணால் இருக்கலாம். கைகளால் பின்னப்பட்ட வெண்ணிற ஸ்வெட்டர் அணிந்திருக்கும் பெண்ணை கவனியுங்கள். அவளை அந்த போர் வீரன் உதைக்கப் போகிறான். அவளது கரங்கள் தலைக்கு மேல் மடிந்திருக்கின்றன; கவனமாய் காணத் தவறினால், அச்செய்கையை நீங்கள் தவற விடக்கூடும். அல்லது முட்டாள்தனமாக, அவள் செத்திருப்பது போல் நடிக்கிறாள் என்றோ முகத்தை மறைத்துக் கொள்கிறாள் என்றோ நினைத்துக் கொள்ளக்கூடும். ஆனால் மீண்டும் பார்க்கும்போது, கவனம் செலுத்தும்போது, தன்னருகே உள்ள பெண்ணின் கதி தனக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பயனற்ற முயற்சியாகத்தான் அது இருந்திருக்கும் என்பதை நீங்கள் காண இயலும். அவளுக்கு அருகில் இருப்பவளின் தலை உடைந்திருக்கிறது, அவளது காதுக்கு மேல் உள்ள வெளிக்காயத்தை உங்களால் பார்க்க முடியும்; அவளுக்கு அடியில் உள்ள மண்ணில் ரத்தத்தின் ஈரம் இன்னும் காயவில்லை.
இப்போது ஒளிப்படத்தின் இடப்புறம் நோக்கி ஒரு கணம் திரும்புவோம்: வலப்புறம் என்ன நடக்கிறதோ அதற்கு எந்த தொடர்பும் இல்லாதது போல் இடப்புறம் இருக்கிறது. சீரணி உடுப்புகள் அணிந்த போர் வீரர்கள் இருவர் தரையில் கிடக்கும் உடல்களைக் கடந்து செல்கின்றனர். அவர்கள் முன்னோக்கி பார்த்துக் கொண்டிருக்கின்றனர், தங்கள் சகா என்ன செய்கிறார் என்பதில் சிறிதும் கவனம் செலுத்தாமல். போர் வீரர்களில் ஒருவர் இறந்து கிடப்பவனின் கால் தடுக்கி கிட்டத்தட்ட தடுமாறுகிறார் என்றாலும் கூட- அவ்வளவு நெருக்கமாக அவர்கள் இருக்கிறார்கள்-, ஒரே புகைப்படத்தின் இந்த இரு பகுதிகளும் தம்மளவிலேயே தனித்து முழுமையாய் இருக்கக்கூடும். அவர்கள் துப்பாக்கிகளை வைத்திருப்பதைப் பார்க்கும்போது கொலை செய்வதற்கு இன்னும் பல பொதுமக்களைத் தேடுகிறார்கள் என்பது போல் தோன்றுகிறது. அன்று ஒரு நாள் மட்டும் இவர்கள் 48 முதல் 78 முஸ்லிம் பொதுமக்களைக் கொன்றார்கள் என்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் கூறுகிறது, குற்றம் சாட்டிய வழக்கறிஞர்களால் அங்கு இந்த ஒளிப்படம் சான்றாவணமாய் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்னும் பலர் அன்று கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது: 250 முதல் 1000 பேர் செத்திருக்கலாம்.
சரி, உண்மையில், அவர்கள் ஏன் ஏற்கனவே கொல்லப்பட்டு விட்டவர்களைக் கண்டு கொள்ள வேண்டும்?
இந்தச் சமநிலையின்மைதான்- அவர்களது விலக்கமும் தொடர்பும்-, தன் வலது காலணியால் அந்தப் பெண்ணை உதைக்க இருக்கும் போர் வீரனை நோக்கி நம் கவனத்தைச் செலுத்துகிறது.
அவன், அல்லது அவனது செய்கை, பல்வகைப்பட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. அவற்றை வாசிப்பது சுலபமாய் இருக்கிறது: உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்கூட இந்த ஒளிப்படத்தைக் காணும்போது அவனது தாக்குதலில் கோபத்தையும் ஆத்திரத்தையும் இகழ்ச்சியையும் வெறுப்பையும் கண்டு கொள்கின்றனர் (பிறர் தன் படத்தில் எதைக் காண்கிறார்கள் என்பதை அறியும் வகையில் ‘பயோக்ரபி ஆப் எ போட்டோ‘ என்ற ஆவணப்படத்தின் ஒரு பகுதியாக இந்த ஒளிப்படக்கலைஞரும் சக-இயக்குனர் லாரன் வால்ஷும் மாணவர்களைப் படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்).
ஆனால், நாம் காணக்கூடியது அவை மட்டுமல்ல.
ஏனெனில்- இங்கு நீங்கள் மீண்டும் கவனமாய்க் காண வேண்டும்- இதன் மத்தியில் எங்கோ, ஒரு சிறு நுண்விபரம் இருக்கிறது. அதுதான் இருப்பது அனைத்திலும் மிக முக்கியமானது, இந்தக் காட்சியின் திறவுகோல் அது. அவனது இடக்கரத்தில், உதைத்துக் கொண்டிருக்கும் போர் வீரன் ஒரு சிகரெட் துண்டம் வைத்துக் கொண்டிருக்கிறான். அது கிட்டத்தட்ட கண்ணுக்குத் தெரிவதில்லை, ஆனால் இருக்கவே செய்கிறது.
அந்த சிகரெட் துண்டம் நம்மிடம், பார்வையாளர்களிடம், பின்னணியின் கதையொன்றைச் சொல்கிறது. அது சொல்வது இதுதான்- அந்தப் போர் வீரன், புகை பிடித்தபடி நடந்து செல்லும்போது- அவன் கொலை செய்வதிலிருந்து சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கலாம் (தொடர்ந்து கொன்று கொண்டிருக்க முடியாது; சிறிது ஓய்வு தேவைப்படுகிறது)-, தரையில் கிடக்கும் இந்த மனிதர்களை உதைப்பதற்காக தாமதித்து தன் பாதையிலிருந்து விலகி வந்திருக்கலாம். நன்றாகவே தெரிகிறது, இந்த ஓய்விலும்கூட, வேலை முடிந்தது என்றாலும்- அவர்கள் இறந்து விட்டவர்கள்- பிற உடல்களைத் தாக்கும் உந்துதலை அவனால் கட்டுப்படுத்திக் கொள்ள முடிவதில்லை.
அவனது கூடுதல் யத்தனத்தை நம்மால் பார்க்க முடிகிறது, அவன் இன்னும் சிறிது அதிக வன்முறையில் ஈடுபடுகிறான். ஏன்? எதிரி இறந்தது போதாது என்பதாலா? இல்லை, எதிரி இறந்தால் மட்டும் போதாது (அது இப்போது மனிதனில்லை); மரணத்திலும் அவர்கள் சிறுமைப் படுத்தப்பட்டாக வேண்டும். மிருகமொன்று தன்னை நோக்கிக் குலைத்ததால் அல்லது தன்னைக் கடித்ததால் கோபப்படுவது போல், இறந்து கிடக்கும் நாயை உதைப்பது போல், அவன் இறந்து கிடக்கும் மனிதனை உதைத்தாக வேண்டும்.
இங்கே அப்படித்தான் நடக்கிறது, அவர்களை அவன் உதைத்துக் கொண்டிருக்கிறான். அந்த மிகை வன்முறைச் செயலால் அவர்களை நாய்களாய், குப்பையாய், ஒன்றுமில்லாததாய்ச் செய்து கொண்டிருக்கிறான்.
அவன் கையிலிருக்கும் சிகரெட்தான் அவனைக் காட்டிக் கொடுக்கிறது; அவன் ‘சும்மா இருக்கும் நேரத்தில்’ அவர்களைச் சிறுமைப்படுத்தி, நிந்திக்கப் போகிறான், இதுதான் அவனது நடத்தையை மேலும் அதிர்ச்சியளிப்பதாய்ச் செய்கிறது.
இதுதான் முடிவா? இல்லை, சிகரெட் துண்டம் இன்னும் பலவற்றை வெளிப்படுத்துகிறது, பிரேதங்களை அவன் எப்படி எடுத்துக் கொள்கிறான் என்பதில் அவன் கொண்டுள்ள தனிப்பட்ட உணர்வுகளைச் சொல்கிறது. அந்தப் போர் வீரன், இறந்து கிடப்பவர்கள் தனக்குத் தெரிந்தவர்கள் என்பது போல் நடந்து கொள்கிறான்.
ஒரு வகையில், அவனுக்குத் தெரிந்தவர்கள்தான். அவர்களும் அதே மொழி பேசுகிறார்கள், அதே தேசத்தில் வாழ்ந்திருக்கிறார்கள், அவர்கள் உணவை அவன் விரும்புகிறான், அவர்களது பழக்க வழக்கங்களை, அவர்கள் வாழும் வகையை அவன் நன்றாக அறிந்திருக்கிறான். தன் ஊரில் அவன் சில முஸ்லிம்களுடன் பள்ளி சென்றிருக்கலாம். அவர்களில் சிலர் அவனது நண்பர்களாய் இருந்தவர்கள். ஒரு வகையில், அலட்சியமாய் இருக்க முடியாது, தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாது என்ற வகையில், அவர்கள் மிக நெருக்கமாய் உள்ளவர்கள்.
இந்த உண்மைதான் அவனை மேலும் வன்மமும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிறது.
ஆனால் கையால் பின்னப்பட்ட ஸ்வெட்டர் அணிந்திருக்கும் பெண் இறந்தது போல் நடித்துக் கொண்டிருக்கிறாள் என்றால்? தரையில் கிடக்கும் பொதுமக்கள் அவனை முட்டாளாக்க முயற்சி செய்கிறார்களா என்று அந்தப் போர் வீரன் சோதித்துப் பார்க்கிறான் என்றால்? எப்படிப் பார்த்தாலும், அவன் உறுதி செய்து கொண்டாக வேண்டும். வழக்கமான ஒரு சோதனையின் ஒளிப்படமாய் இது இருந்திருந்தால், இதன் பயங்கரம் இன்னும் குறைவாய் இருக்குமா?
ரான் ஹவீவின் ஒளிப்படம் போர்ச் சித்திரம், எந்தப் போருக்கும் உரியதாய் இருக்கலாம். போருக்குரியவை அனைத்தும் இங்கு இருக்கின்றன. ஆனால் இது உள்நாட்டு யுத்தமும்கூட. உணர்ச்சிகள் இல்லாமல் ஒருவரையொருவர் கொன்று கொள்ள முடியாது என்ற அளவுக்கு நெருக்கமாய் வாழ்ந்தவர்களுக்கு இடையிலான போர்.
அந்தப் போர் வீரன் மற்ற இருவர்களையும் போல் கடந்து சென்றிருக்கலாம். ஆனால் அவன் அப்படிச் செல்லவில்லை. மாறாய், தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தத் தீர்மானித்தான். யாருக்குத் தெரியும், மற்றுமொரு மிகப்பெரிய சமூகவிலக்கை மீறுவதைக் கொண்டு, இறந்துவிட்ட மனித உடலைக் கீழ்மைப்படுத்தக்கூடாது என்ற சமூகவிலக்கை மீறுவதைக் கொண்டு, தானே அறியாத தன் விரக்தியை அவன் வெளிப்படுத்தியிருக்கலாம்.
ஸ்டான்போர்டு சிறைக்கூட ஆய்வு செய்த பிலிப் ஜிம்பார்டோவின் பார்வையில், ‘கூட்டு அடையாளத்தின்’ செய்கையாய், இது தீதின் சித்திரம் என்பதில் சந்தேகமில்லை.
அல்லது, நல்லவையும் அல்லவையும் சாத்தியப்படும் மானுட இயல்பின், மானுட சாத்தியத்தின் மறுபக்கமாக இருக்கலாம்.
இந்த உரையாடலில் நாம் எதை எதிர்கொள்கிறோம் என்பதன் சித்திரம் இது.
இங்குதான் நாம் மாற்றத்தை உருவாக்க வேண்டும்.