சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊன்

அண்டத்திலுள்ளதே பிண்டம்
பிண்டத்திலுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே
– திருமூலர்

அமெரிக்காவில் காஃபி கடையில் நுழையும் போதெல்லாம் எனக்கு ஃபேஸ்புக் நினைவிற்கு வரும். காஃபி கடைகள் எங்கு புகழ்பெற்றன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். மத்திய கிழக்கின் வளைகுடா பகுதியில் உள்ள ஏடன் நகரத்திலும், மெக்கா நகரத்திலும் 1500களில் காஃபி கடைகள் தழைத்தோங்கத் துவங்கின. கொஞ்சம் கலகலப்பு; நிறைய அத்துமீறல்; சற்றே சந்தேகாஸ்தபமான நடவடிக்கைகள் அங்கே காணக் கிடைத்தன. அந்த இரு நகரங்களின் குளம்பியகங்களின் பாதிப்பு எகிப்தின் கெய்ரோ, சிரியாவின் டமாஸ்கஸ், இராக்கின் பாக்தாத், துருக்கியின் இஸ்தான்புல் என நெடுகப் பரவின.

அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு உணவகங்கள் கிடையாது. இஸ்லாமில் மதுவிற்கு தடை. இதனால், காஃபி கடைகள் சமூகக் கடமையாற்றின. இங்கு எவர் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் உட்காரலாம் என்பது வேற்றுமையைக் களைந்தது. 1558ல் அரபு எழுத்தாளரான அப்து அல்-காதிர் அல்-ஜஸிரி, “குடிப்பவருக்குக் களிப்பேற்றும் உரமேற்றி, அவரின் சிந்தைத் தெளிவினால் மனத் துலக்கம் மெருகேறின உணர்வையும் ஒருங்கே கொணர்வது” எனக் குறித்திருக்கிறார். காஃபியினால் கிடைக்கும் சன்னதத்திற்கு “மர்காஹா” என்று களிப்புடன் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

1585ல் வெனிஸ் நகரத்தில் இருந்து பயணித்த ஜியான்ஃப்ரான்ஸெஸ்கோ மொரொஸினி இவ்வாறு அவதானிக்கிறார்: “இவர்கள் எல்லோரும் கீழோர்கள். உடுப்புகள் உயர்தரமாக இல்லை. வெறுமனே ஓய்வில் நேரத்தைக் கழிக்கிறார்கள். எந்த சுறுசுறுப்பான காரியத்திலும் ஈடுபடுவதில்லை.” 432 ஆண்டுகள் கழித்து இன்றைய ஸ்டார்பக்ஸ்- உள் மொரொஸினி நுழைந்தால் இப்படித்தான் அவதானிப்பார்:

“காஃபி குடிப்போர் சதா சர்வகாலமும் வேலையில் திளைத்து வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியாதவர்கள். அவர்களுக்கு சமூகத்துடன் எவ்வாறு கதைப்பது என்பது தெரியவில்லை. தான் உண்டு தன் கணினி உண்டு என்று திரைக்குள் நுழைத்துக் கொண்டவர்கள். இல்லாவிட்டால், இணையத்தின் மூலம் ஆணை பிறப்பித்து, அரை நிமிடம் கடைக்குள் நுழைந்து தங்களின் பானத்தைக் கைப்பற்றிக் கொண்டு காருக்குள் புகுந்து காணாமல் போவார்களா?”

அந்தக் காலத்தில் இருந்து இக்கால காஃபிக்கடையை பார்த்தால், ஃபேஸ்புக் / ட்விட்டர் மிடையங்களின் உருமாற்ற வளர்ச்சி நினைவிலாடும்.

காஃபிக்கடைகள் மத்திய கிழக்கில் துவங்கினாலும் இன்று அங்கே மதிப்பிழந்து, மேற்கத்திய நாடுகளில் பலராலும் பயன்படுத்தப்படுகிறது. அதே போல் – மேற்கில் துவங்கிய முகப்புத்தகம், இன்று ரஷியா, சீனா போன்ற நாடுகளால் மேற்குலகின் ஆதார சுதந்திரத்திற்கு எதிராகத் திருப்பப்பட்டிருக்கிறது.

காஃபிக்கடைகள் என்றால் அதிகார அமைப்பினால் தடை செய்யப்பட்ட ஆடல், பாடல், கொண்டாட்டம் என்று அன்று இருந்தது. அதை மதப் போராளிகள் ஒடுக்கி, தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டார்கள். இணையத்தின் துவக்கத்தில், இருட்டறைகள் கொண்ட ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்கள் மூலம் விதிமுறைக்குப் புறம்பான விஷயங்கள் விற்கப்பட்டன; சங்கேதமொழியில் சட்டங்கள் மீறப்பட்டன. இப்போது அதே ஊடகங்கள் சீன கம்யூனிஸ் அரசின் ஒடுக்குமுறைக்கு உதவுகின்றன; எஃப்.பி.ஐ., சி.ஐ.ஏ. போன்ற நிறுவனங்களுக்குத் தனி நபர் தகவல்களைக் காட்டிக் கொடுக்கின்றன.

காஃபி கடைகளில் அன்று சதுரங்கம் ஆடினார்கள். வேலையை மறந்து சகாக்களுடன் கொண்டாடினார்கள். ஃபேஸ்புக்கும் ஆரம்பத்தில் அப்படித்தான் விளையாட்டுத்தனமாக இருந்தது. இப்போது அந்த ஃபேஸ்புக்கில், எப்படி உங்களிடம் எதை விற்கலாம் என்பதில் மட்டுமே குறியாக, எப்போதும் எதையாவது சந்தையாக்கிப் பணம் கறக்கிறார்கள்.

இன்றைய தேதியில் 26% – அதாவது நான்கு பேரில் ஒருவர் சமூக ஊடகங்கள் மட்டும் மூலமே செய்திகளை அறிகிறார்.

ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றை உபயோகிப்போருக்கு மற்ற வழிகளில் நாட்டு நடப்புகள் தெரிவதில்லை. பதின்ம வயதினோருக்கு ஸ்னாப்சாட் மட்டுமே வாழ்க்கை. அதில் கிடைப்பதே செய்தி. அது போல் ஒவ்வொருவரும் ஒரு வட்டம் போட்டுக் கொள்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் தங்களின் சுற்றமும் நட்பும் பகிர்வதே நிஜம். ரேடியோவில் சொல்லும் நிகழ்வுகளையோ, தொலைக்காட்சியோ காண்பதே கிடையாது. சமூக ஊடகங்களில் தங்களின் உள்வட்டங்கள் மூலம் என்ன கிடைக்கிறதோ, அதைத் தங்களின் குறுவட்டத்தில் வாட்ஸப்பில் பகிர்வார்கள். தன்னுடைய பால்யகால நண்பன் சொல்வதே உண்மைச் செய்தி. பக்கத்து வீட்டுக்காரர் கற்பிக்கும் எண்ணங்களே மெய். அந்தக் கருத்துகளுக்கு ஊர்ஜிதம் தேடுவதில்லை.

இந்த மாதிரி ஒரு மாயவலையில் சுழன்று, உங்களை திரிசங்கு சொர்க்கத்தில் நிறுத்துபவர்களை கஃபாம் என்கிறார்கள்.

காஃபாம் நிறுவனங்கள் என்றால் யார்… யார்? GAFAM என்பது சுருக்கம்:
G – கூகிள்
A – ஆப்பிள்
F – பேஸ்புக்
A – அமேசான்
M – மைக்ரோசாஃப்ட்
என்பன அந்த பஞ்ச பாண்டவர்கள் ஆகும்.

ஏன் இவர்களை இப்படி மாஃபியா போல் அன்பாக காஃபாம் என்கிறோம்?

 • அவரவர்களின் தொழில்களில் ஒரேயொரு நிறுவனம் மட்டுமே முக்கியஸ்தர். வேறு எவரும் நுழைய முடியாத மாதிரி சந்தையை ஆக்கிரமித்து இருக்கின்றனர்.
 • உலகளாவிய தேடலில் 92 சதவிகித சந்தையை கூகுள் வைத்திருக்கிறது. வலை உலாவிகளில் சுமார் 59% பங்கு கூகிளின் க்ரோம் பிடித்திருக்கிறது. (ப்ரௌஸர்)
 • ஒரு மாதத்திற்கு இரண்டு பில்லியன் (இருநூறு கோடி) சந்தாதாரர்கள் ஃபேஸ்புக்கை அனுதினமும் அனுஷ்டிக்கிறார்கள்.
 • அமெரிக்காவில் மட்டும் தொண்ணூறு மில்லியன் சந்தாதாரர்களை அமேசான் தன்னகத்தே வைத்திருக்கிறது. இது எழுபது சதவிகித அமெரிக்கக் குடும்பங்களைக் குறிக்கிறது. பாக்கியுள்ள 30% வறுமைக் கோட்டிற்கு அருகே வாழ்பவர்கள்.
 • இணையத்தில் நடக்கும் மொத்த கொள்முதலில் 40% அமேசான் மூலம் நிறைவேற்றப்படுகிறது.
 • சென்ற வருடத்தோடு ஒப்பிட்டால் ஃபேஸ்புக்கின் வருமானம் 79% உயர்ந்திருக்கிறது. தங்களின் பங்குதாரர்களுக்கு லாபம் மட்டுமே குறிக்கோள் என்று இந்த நிறுவனங்களும் அவற்றின் எந்திரன்களும் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு காலாண்டிலும் இப்படியொரு அபரிமிதமான வளர்ச்சியை காண்பிக்காவிட்டால் தொழில்நுட்ப கம்பெனிகள் மதிப்பிழக்கும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும். எப்படி வேண்டுமானாலும் இறங்கி ஆடும்.
 • உலக தனி நபர் கணினிகளில் 89.1% கருவிகள் மைக்ரோசாஃப்டின் விண்டோஸைப் பயன்படுத்தியே இயங்குகின்றன.

நடுநிலைமையுடன் தூதராக இயங்கவேண்டிய தினவர்த்தமானிகள் எப்படி ஆகியுள்ளன?

சொக்குப் பொடி போட்டு கணித்திரை சிறைக்குள் நம்மை அடிமையாக்கி வைத்திருக்கின்றன; ஒரேவிதமான தகவல்களைக் கொடுத்துப் பொய்களைக்கூட நிஜமென்று நம்ப வைக்கின்றன; நம்மிடையே பிரிவினையை உருவாக்கி, பிழையான சங்கதிகளின் மூலம் வெறுப்பை உருவாக்குகின்றன; வெறும் இதழியல் செய்தித்தாள் அமைப்பை மட்டும் கபளீகரம் செய்தது என்றில்லாமல், தனிமனிதரின் அந்தரங்கம், சுதந்திரம், குடும்பத்தின் நான்கு சுவருக்குள் நடக்கும் பிக்கல்/பிடுங்கல் போன்றவற்றையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன; அரசியலில் மூக்கை நுழைத்து சுதந்திர தேசங்களின் அதிபர் தேர்தல்களில் தகிடுதத்தம் நடக்க வைக்கின்றன; எந்நேரமும் கைபேசிகளின் கறுப்புத் திரையினைப் பார்க்க வைத்து வேறெதிலும் கவனம் செலுத்தவிடாமல் திறன்பேசிகளின் தாசானுதாசர் ஆக்கி வைக்கின்றன…

இதெல்லாம் குற்றச்சாட்டுகள்.

காஃபாம் நிறுவனங்கள் – சமூகத்தின் முக்கியமான அறிவாளிகளை வேலைக்கு அமர்த்துகின்றன. அந்த ஆராய்ச்சியாளர்களின் ஒரே கடமை, இணையத்தில் இருக்கும் பயனர்களை மந்திரித்து விட்ட மந்தைகளாக்கி, தங்களின் சமூக ஊடக போதைக்குள் மயக்கி வைத்திருப்பதுதானா?! முன்பெல்லாம் சிறப்பான ஆராய்ச்சி செய்யவேண்டும் என்றால், உயர்தர பல்கலைக்கழகங்கள் தேவையாக இருந்தன. இன்றைக்கு, அந்த மாதிரி ஆராய்ச்சிகளை நிம்மதியாக செவ்வனே செய்ய கூகிளிடம் சென்று விடுகிறார்கள்.

அந்த மாதிரி பேராசிரியர்கள் இல்லாத உலகிற்காக, தங்களைக் கல்விக்கூடங்கள் தயார்படுத்தக்கூடத் துவங்கிவிட்டன். பல பல்கலைக்கழகங்களில் வகுப்பாசிரியருக்கு உதவியாக மாணவ ஆசிரியர் இயங்குவார். ஜியார்ஜியா டெக் பல்கலையில், அந்த மாணவத் துணையாசிரியராக தானியங்கி ரோபாட் இயங்கியிருக்கிறது. இதில் என்ன சிறப்பு என்றால், அது ஒரு எந்திரன் என்பதை மாணவர்கள் அறியாத வகையில் தன் பேச்சையும் நடவடிக்கையையும் செயல்பாட்டையும் வைத்துக் கொண்டிருக்கிறது. மாணவர் என்பவர் அதிகாலை நான்கு மணிக்கு பதில் தரமாட்டார்; தூங்கிக் கொண்டிருப்பார் என்பதைத் தானாகவே தெரிந்து கொண்டு தாமதமாகப் பதிலளிப்பதில் துவங்கி, தன் உரையாடலில் இளவயசுக்கேயுரிய எகத்தாளமும் நகையுணர்வும் கொண்டு அமரிக்கையாக இயங்கியிருக்கிறது. கடந்த ஆண்டில், பத்து துணை ஆசிரியர்கள் இருந்தார்கள். இவர்களில் இருவர் தானியங்கி ரோபாட்டுகள். அவர்களை சரியாகக் கண்டுபிடித்தால், அந்த மாணவருக்கு ‘இறுதித் தேர்வு கிடையாது.’ (தவறாகச் சொன்னால், இரு மடங்கு வீட்டுப்பாடம்!) என்று அறிவித்தார்கள். எவராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை.

ஆய்வாளர்களின் மனதுக்குப் பிடித்த வேலையிடத்தை அமேசானும் ஆப்பிளும் அமைத்துத் தருகின்றன. அதே சமயம் ஆய்வாளர்களுக்கு சவால் விடும் சிக்கல்களையும் இந்த கஃபாம் நிறுவனங்கள் தன்னகத்தே வைத்துக் கொண்டிருக்கின்றன. தோற்றத்து மெய்மை, நேரடி ஒளிபரப்பில் நடப்பதை புரிந்து கொண்டு செயல்படும் புத்திசாலித்தனமான எந்திரன்கள், தானியங்கியாக அரட்டை அடிக்கும் செயற்கை நுண்ணறிவு கொண்ட நிரலிகள், மனிதர்களின் பேச்சுக்கு உடனடியாகப் பதிலுக்கு பதில் பேசும் கருவிகள் என்று புத்தம்புதிய நுட்பங்கள் இந்த கஃபாம் நிறுவனங்களில்தான் தயார் ஆகின்றன. அது தவிர மேலே சொன்ன குற்றங்களைக் களைவதும் இந்த ஆய்வாளர்களின் களம்.

இவர்களின் களத்தை ஒரு எடுத்துக்காட்டு கொண்டு பார்ப்பது உதவும்.

என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்ததில்லையே
என்னிலே இருந்தஒன்றை யான் அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர் காண வல்லரோ
என்னிலே இருந்திருந்து யான்உ ணர்ந்து கொண்டெனே.
சிவவாக்கியர்

2000ஆம் ஆண்டில் அமெரிக்க இராணுவ அமைப்பின் தர்பா (DARPA) பிரிவு சோதனையாக, குழு அமைப்பில் இயங்கும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை உலாவ விட்டது. இதில் ஒரு சோதனையில் ஆதாம் என்று ஒரு கர்த்தாவும் ஏவாள் என்று ஒரு கர்த்தாவும் இருந்தார்கள். அவர்களுக்குக் கற்பிக்கப் பட்டதெல்லாம் ‘எதைச் செய்ய வேண்டும்’ என்பது மட்டுமே. ‘எதற்காக அதைச் செய்ய வேண்டும்’ என்பதை அவர்கள் தானாகவே கற்றுக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு வேளாவேளைக்கு சாப்பிட வேண்டும் என்று தெரியும். சாப்பிடாவிட்டால் தங்களின் ஜீவனம் முற்றுப் பெறும் என்பதும் சொல்லித்தரப்பட்டிருந்தது.

அந்த இரு கர்த்தாக்களுக்கும் ஒரு ஆப்பிள் மரம் காட்டப்பட்டது. உணவு உண்டால் உடல் வலுப்பெறும் என்பதை அவர்களுக்குத் தெரிவித்தார்கள். எனவே, ஆப்பிள் கனிகளை உண்டார்கள். அதன் பிறகு மரத்தின் கிளைகளை உண்டார்கள். அதன் பிறகு மரத்தையே உண்டார்கள். அதன் பிறகு தங்கியிருக்கும் வீட்டை உண்ண முயற்சித்தார்கள்.

இந்த பிரச்சினையை சற்றே நீக்கி, அடுத்த பிரதியை வெளியிட்டார்கள். உணவைப் பிறருடன் சேர்ந்து உண்ணலாம் என்பதைக் கற்பித்தார்கள். இப்பொழுது ஸ்டான் என்னும் கர்த்தாவையும் ஆதாமுடனும் ஏவாளுடனும் பழக விட்டார்கள். ஆதாம் ஆப்பிள் பழம் உண்ணும்போது கூடவே ஸ்டான் இருந்தார். இந்த கர்த்தாக்களுக்கு, ஒன்றை மற்றொன்றோடு தொடர்புபடுத்தத் தெரியும். எனவே, ஸ்டான் இருந்தால், நம்முடைய ஆப்பிள்களை அவர் எடுத்து சாப்பிடுவிடுவார் என்று யோசித்திருக்கலாம். அல்லது, ஆப்பிள்கள் போதாமல் போயிருக்கலாம். ஆப்பிளைக் கடித்தவர்கள், இப்போது ஸ்டானைக் கடித்துச் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். தன்னினத் தின்னி தவறு என்று அறிவுறுத்தலாம்; நர மாமிசம் கூடாது என்று கட்டளை வைக்கலாம்.

இதெல்லாம் இப்போது மெருகேறி சாமர்த்தியமான சமர்த்து கர்த்தாக்களை உருவாக்குகிறார்கள். என்றாலும், சமீபத்திய டிவிட்டர் பாட் ஆன ட்டே (Tay – ட்விட்டர் ஏ.ஐ.) பற்றி அறிந்திருப்பீர்கள். (தொடர்புள்ள பதிவுஉங்களைப் போல் கணினியை யோசிக்க வைப்பது எப்படி?) இது போன்ற சமூக சிக்கல்களை களையத்தான் ஆராய்ச்சியாளர்களை தன்னகத்தே கஃபாம் நிறுவனங்கள் அமர்த்துகின்றன.

பதினேழு ஆண்டுகள் கழித்து இந்தப் பிரச்சினைகள் தீர்ந்து இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? கீழே காணும் உரையாடலைப் பாருங்கள்:

பாப்: மீ முடியும் மி மி பிற எல்லாம்

ஆலிஸ்: பந்தில் முட்டை மீ எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு என்

பாப்: நான் நீ பிற எல்லாம்

ஆலிஸ்: பந்தில் முட்டை ஒரு பந்து எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு எனக்கு

மேற்கண்ட உரையாடல் – இரு ஃபேஸ்புக் கர்த்தாக்கள் நடுவே பரிமாறிக் கொண்டவை. அந்த கணினி கர்த்தாக்களுக்கு இந்தப் பேச்சின் அர்த்தம் புரிந்தது. நமக்கு இதன் அர்த்தம் புரியாது. உங்களுக்காக இணையத்தில் பேரம் பேசுவதே, ஃபேஸ்புக் உருவாக்கிய கர்த்தாவின் குறிக்கோள் ஆகும். உங்களுக்கு ஒரு கரண்டி வேண்டுமென்றால், இந்த கர்த்தாவிடம் சென்று ‘சல்லிசான விலையில் கரண்டியை வாங்கிக் கொடு.’ என்று சொல்லலாம். அது மற்ற வலைவியாபாரி கர்த்தாக்களுடன் பேசி, உங்களுக்காகக் கரண்டி வாங்கித் தரும்.

உருவாக்கிய கொஞ்ச நேரத்திலேயே, இந்த கர்த்தாக்கள் எதைப் பேசுகின்றன… எதற்காகப் பேசுகின்றன… எப்படி சமிக்ஞைகளை பரிமாறுகின்றன என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. நாம் இன்று : ) என்று முகவடிவங்களைப் போடுகிறோம்; (ஆ-ர்) என்றால் ஆசிரியர் என்பது தெரியும்; ‘எகொஇச!’ என்றால் புரிந்துகொள்கிறோம். இதே போல் கணினிகள் தங்களுக்குள் உரையாடி தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.

இது போன்றதொரு சமூகக் குழு அமைப்பைக் கணினிகள் நமக்குத் தெரியாமலே உருவாக்கி நம்மை நாமே சிக்கலில் தள்ளிக்கொள்வதாக பல பெருந்தலைகள் புலம்பி பயப்படுகிறார்கள். டெஸ்லா கார் தயாரிக்கும் எலான் மஸ்க், மைரோசாஃப்ட் உருவாக்கிய பில் கேட்ஸ் வரை எல்லோரும் ‘கபர்தார்’ என அரசாங்கக் கட்டுப்பாடை முன்வைக்கிறார்கள்.

சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய சரநூல் மார்க்கம்
கோதறு வகார வித்தை குருமுனி ஓது பாடல்
தீதிலாக் கக்கிடங்கள் செப்பிய கன்ம காண்டம்
ஈதெலாம் கற்றுணர்ந் தோர் இவர்களே வைத்தியராவர்
சித்தர் நாடி நூல்

மருத்துவம் என்றால் வெறும் வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவராக என்னவெல்லாம் கற்றுணர வேண்டும் என்பதை மேலே சொல்கிறார்கள். அதே போல், ஆண்ட்ரூ ங் செயற்கை நுண்ணறிவை இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் ராக்கெட் விட வேண்டுமென்றால் அதற்கு எரிபொருள் தேவை. அந்த எரிபொருள் என்பதைத் தகவல் திரட்டிற்கு ஒப்பிடலாம். எரிபொருள் மட்டும் இருந்தால் போதாது. கூடவே விண்ணில் செலுத்தத் திறமையான பொறி தேவைப்படுகிறது. அந்தத் திறன்மிக்க பொறியை வினைச்சரம் (அல்காரிதம்) எனலாம். அதே போல் கணினியைச் சொந்தமாகச் சிந்தித்துப் பறக்க வைக்க திறன்மிக்க நெறிமுறை என்னும் ஆணைக் குறிப்புப் பட்டியல்களும், தரவுகள் என்று பயனுடையதாகக் கருதப்படும் எண்கள் சார்ந்த குறிப்புகளும் தேவை.”

ஆண்ட்ரூ ங் சொல்வது முக்கியமான கருதுகோள். கணி ரோபாட்களால் எதையும் தானே செய்ய முடியாது. பிழை என்று சுட்டிக் காட்ட அதற்கு ஒரு மனிதர் தேவை. நான்கு வயது குழந்தைக்கு நல்லது, கெட்டது சொல்லி புரிய வைத்து, பொறுமையாக அன்புடன் மீண்டும் மீண்டும் செயல்முறை விளக்கம் அளிப்பது போல், மேற்பார்வையாளர் தேவை. இந்த நான்கு வயதுக் குழந்தைக்கு பக்குவம் வரலாம்; வராமல் குழந்தையாகவே கூட இருக்கலாம். ஆனால், வளர்ந்த நமக்கு அந்த ரோபாட் அளிக்கும் நினைவுத் திறனும் செயலாற்றலும் இன்றியமையாதது. நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத மொழிவளமும், சமயோசிதமும் அதனிடம் பொதிந்து இருக்கிறது. ஆனால், சற்றே சறுக்கினால், சறுக்கிய இடத்தை சுட்டிக் காட்ட அந்த ரோபாட்டிற்கு ஒரு மாந்தர் தேவை இன்றளவில் இருக்கிறது. எங்கே சறுக்கினோம், எப்படிப்பட்ட தரவுகளால் சறுக்கினோம் என்பதை நாளடைவில் புரிந்துகொண்டு வயதிற்கு வரக் கூடிய பக்குவம் வரும்வரை அந்த எந்திரனுக்கு, மாந்தரின் துணையின்றி மாந்தர் போல் இயங்க முடியாது.

மாந்தர் போல் இயங்கத் துவங்கினால் மாந்தரின் அவசியம் எந்திரருக்குப் புரிந்துவிடும் அல்லவா!?!

 1. பல மனிதர்களுக்கு பணம் ஒன்றே குறிக்கோள்; அப்படியானால் அவர்களைப் போல் யோசிக்கும் எந்திரர்களும் பணம் மட்டுமே லட்சியமாகி சமூகத்தை சின்னாபின்னமாக்குமா?
 2. புத்திசாலிகள் அணுகுண்டை கண்டுபிடித்தார்கள். அதே போல் இன்றைய அதி அறிவாளிகள் என்ன பூதத்தைக் கண்டுபிடிக்கப் போகிறார்கள்?
 3. உங்களின் தனிமனித சுதந்திரம் எவ்வாறு பாதிக்கப்படும்? நீங்கள் உங்களின் பிரத்தியேக பயன்பாட்டிற்காக எடுத்த வீடியோ — எவ்வாறு தவறாக திரிக்கப்பட்டு உங்களை சின்னாபின்னமாக்கும்? ஏன், இந்தப் பெரு நிறுவனங்கள் அப்படிப்பட்ட அத்துமீறலில் ஈடுபட்டு அதற்குப் பொது ஊடகங்களில் நியாயம் கற்பிக்கக் கூடுமோ?

இவையும் இன்னும் பிறவும் வரும் பகுதிகளில் அலசுவோம்.

3 Replies to “சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊன்”

 1. பாஸ்டன் பாலா எழுதியுள்ள ஒரு அமர்க்களமான கட்டுரை இது. காஃபிக் கடைகள் மத்தியக்கிழக்கு, ஐரோப்பிய நாடுகளில் உருவான வரலாற்றில் ஆரம்பித்து, தொழில்நுட்பமும் இன்டர்நெட்டும் சமூகவலையும் இன்றைய தலைமுறையை முற்றிலும் ஆக்கிரமித்திருப்பத்தை பல நுண்தகவல்களுடன் விளக்கும் கட்டுரை, ரோப்ட்கள், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் சாத்தியங்களையும் தொட்டுச் செல்கிறது. நடுநடுவே திருமூலர், சிவவாக்கியர் பாடல்களும் உண்டு 🙂 இந்தக் கட்டுரையின் தலைப்பு கம்பராமாயண வரி.

  “சிங்கக் குருளைக்கு இடு தீஞ்சுவை ஊனை நாயின்
  வெங்கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளால்…”

  “சிங்கக் குட்டிக்குத் தரவேண்டிய ஊனுணவை நாய்க்குட்டிக்குத் தருவது போல, ராமனின் மணிமுடியைப் பிடுங்கி பரதனுக்கு முடிசூட்ட விரும்புகிறாளே கைகேயி” என்று இலக்குவன் பொங்கும் இடத்தில் இந்த வரி வருகிறது.

  இதை எத்தனை வாசகர்கள் அறிந்திருப்பார்கள், கட்டுரையின் சுவாரஸ்யமான பேசுபொருளுடன் தொடர்பு படுத்தியிருப்பார்கள்? சந்தேகம் தான். வாசகர்களிடம் பாலா நிறைய எதிர்பார்த்து எழுதியிருக்கிறார். வாழ்க 🙂

 2. இதுவே கூகுல் உள்ளீட்டு கருவியால் தட்டச்சு செய்யப்பட்டது 🙂 .

  அற்புதமான கட்டுரை. ஏற்னகனவே நாம் அரசியலில் பிரசாந்த் கிஷோர், டிரம்ப் ஐ ஜெயிக்க வைத்தவர் ராகுல் காந்திக்கு குஜராத்தில் களமிறக்கப்பட்டு இருப்பதை காண்கிறோம். [influencing through GAFAM 🙂 ]

  இப்பொழுது மாத,பிதா, தெய்வம் அண்ட் கூகிள் என்பதே உண்மை

  இடைச்செருகல் இன்னும் அருமை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.