எம். எல். – அத்தியாயம் 10

“உக்காருங்க!… ஆச்சரியமா இருக்கே!… ஏது இவ்வளவு தூரம்?…” என்றார் கோபால் பிள்ளை.

“உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். பதினைஞ்சு வருஷத்துக்கு முந்தி மதுரையிலே பிளினம் நடந்தப்போ வந்திருந்தேன். உங்களைப் பார்த்துப் பேசியிருக்கேன்.. ஞாபகம் இருக்கா?…” என்று கேட்டார் சாரு மஜூம்தார். கோபால் பிள்ளையின் நெற்றி சுருங்கியது. சாறு மஜூம்தாரையே உற்றுப் பார்த்தார். ஞாபகம் வரவில்லை. பாலகிருஷ்ணனும் துரைப்பாண்டியும் அவரைப் பார்த்த ஆச்சரியத்தில் உறைந்து போயிருந்தனர். வியப்பில் அவர்களுடைய கண்கள் அகல விரிந்திருந்தன. கிட்டனையும் உட்காரச் சொன்னார்கள்.

“அப்படியா?… ஞாபகமில்லே… வருஷம் ஆகிட்டுதுல்லா… சரி… என்ன சாப்பிடுறீங்க?” என்று கேட்டார் கோபால் பிள்ளை.

“ஒன்னும் வேண்டாம்… இப்போதான் சாப்பிட்டோம்…”

“சூடா ஏதாவது… காபி… டீ…”

“சாய் குடுங்க” என்றார் மஜூம்தார். மருமகளிடம் டீ சொல்வதற்காக ஈஸி சேரை விட்டு எழுந்திருந்தார் கோபால் பிள்ளை. எழுந்து நிற்கும்போது தடுமாறியது. சாரு மஜூம்தார் அவர் கையைப் பிடித்துக் கொண்டார். “எதுக்கு உங்களுக்குச் சிரமம்,” என்றார்.

“ஒண்ணுமில்ல… உக்காருங்க…” என்று சொல்லிவிட்டு, வீட்டின் உள்வாசல் கதவருகே போய் நின்று, “கஸ்தூரி… கஸ்தூரி…” என்று மருமகளைக் கூப்பிட்டார்.

“என்ன மாமா,” என்று கேட்டுக்கொண்டே கஸ்தூரி உள்ளேயிருந்து வந்தாள். “பால் இருக்காம்மா?…” என்று கேட்டார். “இருக்கு மாமா,” என்று சொல்லிவிட்டு கஸ்தூரி உள்ளே போனாள். துரைப்பாண்டி சட்டென்று எழுந்து சாரு மஜூம்தாரிடம் தன் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான். பாலகிருஷ்ணனும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பாலகிருஷ்ணனைக் காட்டி, “பிஸிக்ஸ் ப்ரொபஸர்,” என்றார் கோபால் பிள்ளை. “துரைப்பாண்டி காலேஜ் முடிச்சிட்டுச் சும்மா இருக்கார்,” என்றார். “ஓ!… ஓ!…” என்று அந்த அறிமுகங்களை கையைக் குலுக்கிக்கொண்டே ஏற்றுக் கொண்டார் சாரு மஜூம்தார்.

கிட்டனைக் காட்டி கோபால் பிள்ளையிடம், “உங்களுக்கு அப்புவைத் தெரியுமா?… அப்புவோட அசிஸ்டெண்ட் கிட்டன். எனக்குத் துணையா அப்பு அனுப்பி வச்சிருக்கார்…” என்றார் சாரு மஜூம்தார். கிட்டன் எழுந்து நின்று எல்லோரையும் பார்த்து கைகூப்பி வணங்கினான். “உக்காரு.. உக்காருப்பா…” என்றார் கோபால் பிள்ளை. சாரு மஜூம்தார் வாயைத் திறந்து பேசும்போது அவரிடமிருந்து அடித்த பீடி வாசனையைத்தான் கோபால் பிள்ளையால் சகிக்க முடியவில்லை. எங்கே பீடியைப் பற்ற வைத்து விடுவாரோ என்று பயந்தார் கோபால் பிள்ளை.

“மூவ்மெண்ட்டெல்லாம் தடபுடலா போயிக்கிட்டு இருக்குது போல…” என்றார் கோபால் பிள்ளை. ‘மூவ்மெண்ட்’ என்ற சொல் மாடிப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த பீட்டரின் காதில் விழுந்ததும், கண்ணை இடுக்கிக் கொண்டு கூர்ந்து கேட்க ஆரம்பித்தான். குழாய்க்கு மாட்ட ரெபேக்காள் நள்ளி வாங்கி வரச் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

“அது சம்பந்தமா உங்களைப் பார்த்துப் பேசத்தான் வந்தேன்…” என்றார் சாரு மஜூம்தார்.

“நான் ஏற்கெனவே பார்ட்டியிலே இருக்கிறேனே…” என்றார் கோபால் பிள்ளை.

“எனக்குத் தெரியும்… எனக்குத் தெரியும்…” என்று அவசர அவரசமாகச் சொன்னார் மஜூம்தார். “உங்களை “மூவ்மெண்ட்லே சேருங்கன்னு சொல்லவில்லை… மேற்கு மாவட்டங்களிலே அப்பு “மூவ்மெண்ட்டுக்கு ஆள் சேர்க்கிறேன்னு சொல்லியிருக்கார்… ஆந்திரா, கேரளாவிலே எல்லாம் டூர் போயிட்டுத்தான் தமிழ்நாட்டுக்கு வந்தேன்… மதுரை பெரிய ஸிட்டி… இங்கே நம்ம “மூவ்மெண்ட் கால் ஊன்றணும்… அதுக்கு உங்களுக்குத் தெரிஞ்சவங்களை அறிமுகப்படுத்தினீங்கன்னா போதும்…” என்று சொன்னார் சாரு மஜூம்தார்.

“மிஸ்டர் மஜூம்தார், எனக்கு உங்களோட “மூவ்மெண்ட்லே நம்பிக்கை இல்லே. நீங்க ஒரு பழைய பார்ட்டி கேடர் என்கிறதாலே என்னோட கெஸ்ட்டா இருக்கிறீங்க… நான் இந்த விஷயத்திலே உங்களுக்கு உதவி செஞ்சா அது கட்சிக்கும், என் நம்பிக்கைகளுக்கும் துரோகம் செய்த மாதிரி ஆகிடும். தயவு செய்து என்னை மன்னியுங்கள். இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவ முடியாதவனா நான் இருக்கேன்…” என்று அழகான ஆங்கிலத்தில் நாகரிகமாக மறுத்தார் பிள்ளை. சாரு மஜூம்தார் ஏமாற்றமடையவில்லை. சிரித்தார். கஸ்தூரி ஒரு தட்டில் எல்லோருக்கும் டீ கொண்டு வந்து கொடுத்தாள். மருமகளைக் காட்டி, “இது என் இரண்டாவது மருமகள்,” என்று சாரு மஜூம்தாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். கஸ்தூரி நாணம் கலந்த சிரிப்புடன் சாரு மஜூம்தாரின் வணக்கத்தை ஏற்றுக்கொண்டு வீட்டினுள் சென்று விட்டாள். ஸ்வீட்லேண்டில் சர்வர் ஆர்டர் சொல்வது கேட்டது.

“என்னோட எய்ட் டாக்குமெண்ட்ஸ் பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்று சொல்லிக் கொண்டே தோளில் தொங்க விட்டிருந்த பையிலிருந்து சில சிறு பிரசுரங்களை எடுத்து கோபால் பிள்ளையிடம் கொடுத்தார். “இதோட இன்னொரு செட் அப்புகிட்டே இருக்கு…” என்றார். அவற்றை வாங்கிப் புரட்டிப் பார்த்தார் கோபால் பிள்ளை.

“கேள்விப்பட்டதில்லை. இது நீங்க எழுதினதா?”

“ஆமா… கனு ஸன்யாலும் உதவி செஞ்சார்,” என்றார் சாரு மஜூம்தார்.

அந்தச் சிறு பிரசுரங்களைப் புரட்டிக் கொண்டே, “நீங்க எதுக்கு சைனா லைன் எடுத்தீங்க?… சைனா நம் நாட்டு மேலே படை எடுத்த நாடு… அதனுடைய நடைமுறை எல்லாம் நமக்கு ஒத்து வருமா?” என்று கேட்டார் கோபால் பிள்ளை.

டீயை உறிஞ்சிக் குடித்துக் கொண்டே “ஆயுதப் புரட்சி ஒண்ணுதான் ஜனங்களோட கஷ்டங்களுக்குத் தீர்வு. சைனா நமக்கு இதிலே நிச்சயம் உதவி செய்யும்…” என்றார்.

“மன்னிக்கணும் மஜூம்தார்… எனக்கு ஆயுதப் புரட்சியிலே எல்லாம் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை. தெலுங்கானாவிலே என்ன நடந்தது?… ஆயுதப் புரட்சி அது இதுன்னு நம்ம ஜனங்களை வீணா பிரச்னையிலே மாட்டி விடாதீங்க…”

“ஏன் இப்போ எங்க நக்ஸல்பாரியிலே நடந்திருக்கே…”

“அது ஆயுதப் புரட்சியா?… நான் நக்ஸல்பாரியிலே நடந்ததை ஏத்துக்கலை. நிலச் சீர்திருத்தம் நடந்தா அங்கே பிரச்னை சரியாகிரும். அங்கே நடந்தது விவசாயிகளுக்கும் நிலச் சொந்தக்காரர்களுக்கும் மத்தியிலே நடந்த குத்தகை தகராறு,” என்றார் கோபால் பிள்ளை. சாரு மஜூம்தார் உரக்கச் சிரித்தார்.

“மிஸ்டர் கோபால் பிள்ளை, அதை அவ்வளவு எளிதா ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. நீங்க பேசறது உங்க பார்ட்டி லைன். ரொம்ப விவாதிக்க வேண்டிய விஷயம் இது. இந்தியக் கம்யூனிஸ்ட்களாலே ஒண்ணும் சாதிக்க முடியாது. நான் உங்க பார்ட்டியிலே இருந்தவன்தான். யூனியன்லே எல்லாம் ரொம்ப வருஷம் இருந்து அடிபட்டவன். ஒரு கூலி உயர்வுகூட யூனியனாலே வாங்கிக் கொடுக்க முடியல… அதெல்லாம் எதுக்கு… பின்னாடி ஒரு நாள் சமயம் கிடைச்சா இதைப் பத்தி விவாதிப்போம்…” என்றார் சாரு மஜூம்தார். சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். பாலகிருஷ்ணனும் துரைப்பாண்டியும் கோபால் பிள்ளையிடமிருந்து சாரு மஜூம்தார் கொடுத்த சிறு பிரசுரங்களை வாங்கிப் புரட்டினார். துரைப்பாண்டி, “நான் உங்களுக்கு உதவலாமா?” என்று கேட்டான். கோபால் பிள்ளை ஆச்சரியத்தோடு அவனைப் பார்த்தார். பாலகிருஷ்ணனும், “ஸார் சொல்றதிலே நியாயம் இல்லைன்னு சொல்ல முடியாது…” என்று சொன்னார். “என்ன உதவி ஸார் வேணும்?” என்று மறுபடியும் கேட்டான் துரைப்பாண்டி.

சாரு மஜூம்தார் அந்தப் பிரசுரங்களைக் காட்டி, “இதுதான் என் கட்சியோட அடிப்படை கொள்கை. இந்த ஆவணங்களை நீங்களே வைத்துக் கொள்ளலாம். இதைப் படித்து இதை நீங்கள் பிரசாரம் செய்யணும். முதலில் ஒரு ஸ்டடி சர்க்கிள் ஆரம்பிக்கணும். இந்த ஆவணங்களை எல்லாரும் படிச்சு விவாதித்து இணையணும். இதுதான் இப்போதைக்குத் தேவை. அப்புவும் உங்களைத் தொடர்பு கொள்வார்… உங்கள் முகவரி வேண்டும்…” என்றார். பாலகிருஷ்ணனும் துரைப்பாண்டியும் அதற்குச் சம்மதித்தனர். தங்கள் முகவரியை எழுதிக் கொடுத்தனர். கோபால் பிள்ளை, “நல்லா யோசிச்சுச் செய்யுங்க…” என்று அவர்களைப் பார்த்துச் சொன்னார்.

“ஸ்டடி சர்க்கிள்தானே ஆரம்பிக்கணும்ன்னு சொல்றார்…” என்றார் பாலகிருஷ்ணன். கோபால் பிள்ளைக்கு அது சரியாகப் படவில்லை.

சாரு மஜூம்தாருக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. அவர்கள் சம்மதத்திற்காக அவர்களுடைய கைகளைக் குலுக்கினார்.

“சரி… கடைசியிலே உங்க கட்சிக்கு ஆளைப் பிடிச்சிட்டீங்க…” என்று கேலியாகச் சொன்னார் கோபால் பிள்ளை. சாரு மஜூம்தார் சிரித்தார்.

“மதுரையிலே எங்கே தங்கியிருக்கீங்க?…” என்று விசாரித்தார் கிட்டனிடம்.

“எங்கேயும் தாங்கலைங்க ஐயா… காலையிலேதான் கோயமுத்தூர்லேருந்து வந்தோம். ஹோட்டல்லே சாப்பிட்டுவிட்டு நேரா இங்கேதான் வர்றோம்…” என்றான் கிட்டன்.

“இங்கே எத்தனை நாள் தங்கப் போறீங்க?…” என்று சாரு மஜூம்தாரிடம் கேட்டார்.

“இன்றைக்கே நான் கல்கத்தா போகணும்… கல்கத்தாவுக்கு இங்கே இருந்து ரயில் இருக்கா?”

“இங்கே இருந்து கல்கத்தாவுக்கு நேரே வண்டி கிடையாது. மெட்ராஸ் போய்த்தான் போகணும்,” என்றார் பாலகிருஷ்ணன்.

“பரவாயில்லே… அப்படியே செய்கிறேன்… உங்களை எல்லாம் சந்தித்ததிலே ரொம்ப சந்தோசம்… நீங்க என்னோட இணைந்ததற்கு நன்றி…” என்று பாலகிருஷ்ணனையும் துரைப்பாண்டியையும் பார்த்துச் சொன்னார் சாரு மஜூம்தார். கோபால் பிள்ளையைப் பார்த்து எழுந்து நின்று கைகூப்பினார். பாலகிருஷ்ணன் சாரு மஜூம்தாரைத் தன் வீட்டுக்கு அழைத்தார். அவர்கள் கிளம்புகிறார்கள் என்றதும் மாடிப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த பீட்டர் வேகமாக எழுந்து பிளாட்பாரத்தில் போய் நின்று கொண்டான்.

பாலகிருஷ்ணனும் துரைப்பாண்டியும் சாரு மஜூம்தாருடன் படியிறங்கி வந்து கொண்டிருந்தனர். சாரு மஜூம்தாரை வழியனுப்ப படிக்கட்டு வாசல் வரை வந்தார். பாலகிருஷ்ணனும் துரைப்பாண்டியும் ஏதோ பெரிய சிக்கலில் மாட்டப் பவது போல் தோன்றியது. நான்கு பேரும் கீழே இறங்கிச் செல்வதைச் சிறிது நேரம் மாடி வாசலில் நின்று பார்த்துக் கொண்டே இருந்தார். பிறகு உள்ள வந்தவர் மேஜை மீது இருந்த டைம் பீஸைப் பார்த்தார். மணி பதினொன்று இருபதாகியிருந்தது. கீழேதேருவில் பஸ் போகிற சத்தம் கேட்டது. ஈஸி சேரில் உட்கார்ந்தார்.

மாடியை விட்டுக் கீழே இறங்கியவர்கள் பிளாட்பாரத்தில் நின்றே பேசிக் கொண்டிருந்தனர். சாரு மஜூம்தார் பாலகிருஷ்ணனிடம், “உங்கள் வீடு எங்கே இருக்கிறது?” என்று கேட்டார். “பக்கத்தில்தான்… உங்களுக்கு நடப்பதற்குச் சிரமமாக இருந்தால் சைக்கிள் ரிஷ்காவிலேயே போய் விடலாம்…” என்றார் பாலகிருஷ்ணன். “ரிக்ஷா வேண்டாம்… நடந்தே போகலாம்… நான் கொஞ்சம் தூங்க வேண்டும். நேற்று இரவு பஸ்ஸில் தூங்கவே முடியவில்லை…” என்றார் சாரு மஜூம்தார்.

“நீங்கள் வாருங்கள்… வீடு பெரிய வீடுதான். சங்கோஜப்படாமல் உங்கள் விருப்பம் போல் வீட்டில் இருக்கலாம். வீட்டில் என் தாயார் சமைத்திருப்பாள். சாப்பிட்டுவிட்டு தூங்கலாம். எனக்கு இன்று விடுமுறைதான். இரவு எட்டு மணிக்கு மெட்ராஸுக்கு ரயில் இருக்கிறது. அதில் உங்களை ஏற்றிவிடும்வரை நீங்கள் என்னுடனே விருந்தாளியாக இருக்க வேண்டும்…” என்றார் பாலகிருஷ்ணன. சாரு மஜூம்தார் சிரித்தார். கையிலிருந்து பீடியை எடுத்துப் பற்ற வைத்தார். “உங்களுக்கு ஆட்சேபணை இல்லையே?…” என்று கேட்டுக்கொண்டே பீடியைப் பற்ற வைத்தார்.

“நீங்கள் புகை பிடிப்பதுண்டா?” என்று பாலகிருஷ்ணனிடமும் துரைப்பாண்டியிடமும் கேட்டார். “நான் வில்ஸ்தான் பிடிப்பேன்… என்றாலும் உங்களுடன் பீடியைப் பகிர்ந்து கொள்கிறேன்…” என்று சொல்லிக்கொண்டே அவரிடமிருந்து பீடியை வாங்கிப் பற்ற வைத்தார். துரைப்பாண்டியும் பீடியைக் கேட்டு வாங்கினான். சாரு மஜூம்தாருக்கு ரொம்பச் சந்தோஷமாக இருந்தது.

கிட்டன் ஊருக்குக் கிளம்பலாம் என்று நினைத்தான். பாலகிருஷ்ணனும் துரைப்பாண்டியும் சாரு மஜூம்தாருக்குத் தேவையானதைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டது அவனுக்கு. அவர்களுடன் நடந்து கொண்டே சாரு மஜூம்தாரிடம், “நான் அப்போ ஊருகுக் கிளம்பறேன்…” என்று கையால் அவரிடம் சைகை செய்து பேசினான். துரைப்பாண்டி சாரு மஜூம்தாரிடம் கிட்டன் கூறியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னான். பாலகிருஷ்ணன் கிட்டனிடம், “வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் போகலாம்…” என்றார். “கோபால் பிள்ளை ஐயா வீட்டில் சாப்பிட்ட டீயே கம்முன்னு இருக்கு..” என்று சொல்லி மறுத்து விட்டுக் கிளம்பினான்.சாரு மஜூம்தார் அவனை பிளாட்பார்த்திலேயே ஆரத் தழுவி விடை கொடுத்தார். இதையெல்லாம் அவர்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த பீட்டர் பார்த்தான்.

(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.