முகப்பு » அரசியல், குளக்கரை- குறிப்புகள்

குளக்கரை


ஆர் கே நகர் தேர்தல் முடிவுகள்

ஆர் கே நகர் தேர்தல் முடிவுகள் பற்றி பல காட்டமான விமரிசனங்கள் எழுகின்றன. அவற்றில் முக்கியமானது, ஆர் கே நகர் மக்கள் பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்து விட்டார்கள், இதனால் ஜனநாயகம் தோற்றுப் போய் விட்டது என்பது.

இனவெறி, மொழிவெறி, மதவெறி, சாதிவெறி என்று பல வெறிகளைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்தி பல கட்சிகள் வெற்றி பெறும்போது தோற்காத ஜனநாயகம் இப்போது தோற்றுப் போய் விட்டதா? குறிப்பிட்ட சாதிகளைக் குறி வைத்து, கல்வியிலும் வேலையிலும் அரசு ஒதுக்கீடு பெற்றுத் தருகிறோம், என்று வாக்குறுதி அளித்து சில கட்சிகள் வெற்றி பெற்றபோது தோற்காத ஜனநாயகம் இப்போது தோற்றுப் போய் விட்டதா? அல்லது, இல்லாத பொல்லாத வாக்குறுதிகளை அளித்து வேறு கட்சிகள் வெற்றி பெற்றபோது தோற்காத ஜனநாயகம் இப்போது தோற்றுப் போய் விட்டதா? ஒரே ஒரு முறை பணம் பெற்று வாக்களித்த ஆர் கே நகர் மக்களுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். பல தலைமுறைகளை பாதிக்கக்கூடிய கொள்கைகளுக்காக வாக்களித்த மக்கள் செய்யாத எதையும் இவர்கள் செய்யவில்லை.

ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கி அடைக்க முடியாதவர்கள், அடுத்த நாள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுபவர்கள், ஏழ்மையைத் தவிர வேறெதையும் அறியாதவர்கள், இவர்கள்தான் பணம் வாங்கினார்கள் என்பது போல ஒரு கருத்து பொதுவில் இருக்கிறது. உண்மையில் நடுத்தர வாழ்வில் இருக்கும் மக்கள் எல்லாருமே இந்த மாதிரிப் பணம் வாங்குவதைத் தவிர்ப்பதில்லை.  முன்பு உயிருடன் இருந்த ஒரு முதல் மந்திரி, யானைப் பசிக்குப் போட்ட சோளப் பொரி போலக் கொடுத்த மிக்ஸி, க்ரைண்டர், டிவி, மின்விசிறி போன்றவற்றை நாம் நடுத்தர மக்கள் வீட்டில் பார்த்திருக்கிறோம்.  சிலர் அவற்றை நேரடியாகவே வாங்கிக் கொண்டிருந்தனர். சிலர் வாங்கிய ஏழைபாழைகளிடம் இருந்து மலிவு விலைக்கு அவற்றை வாங்கித் தாம் பயன்படுத்தினர். அவற்றை அரசுக்கு விற்ற நிறுவனங்கள் பல தரமற்ற எந்திரங்களைத் ‘தள்ளி’ விட்டிருந்ததால் அவை சீக்கிரமே பழுதுபட்டு, காயலான் கடைக்கு வந்து சேர்ந்தன. இப்படிப் பொது நிதி ஏராளமாக விரயம் ஆகிறதை நாம் அறிவோம். அவற்றைப் பற்றிக் குறை சொல்கிறோம், ஆனால் தடுப்பதற்கு ஏதும் செய்யாமல், செய்ய முடியாமல் கூட இருக்கிறோம். இவற்றை விட தேர்தலுக்குப் பணம் வாங்கி வாக்களித்தது பெரிய ஊழலா, நெறிப் பிறழ்வா என்பது எளிதில் விடை காண முடியாத முடிச்சு.

இந்த அடித்தள மக்கள்தான் பிறர் ஐயாயிரம், பத்தாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு வாக்களிப்பதைக் கண்டிக்க முடியும்.

உண்மையில், அரசியல்வாதிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள் என்று கூட்டணி வைத்துக் கொண்டு, நேர் வழியில் ஈட்டக்கூடியது போதாமல் குறுக்கு வழியில் பணம் பண்ணுபவர்களிடம் இல்லாத நேர்மையை ஏழை எளிய மக்களிடம் எதிர்பார்க்கிறோம். ஆர் கே நகர் மக்களுக்கு இருக்கும் நேர்மை இவர்களுக்கு இருந்திருந்தால் இந்தியா எப்போதோ வல்லரசு ஆகியிருக்கும். வாங்கிய பணத்திற்கு வஞ்சம் செய்யாமல் வாக்களித்து வெற்றி பெறச் செய்திருக்கின்றனர். வாங்குகிற சம்பளத்துக்கு வஞ்சம் இல்லாமல் பணியாற்றும் அரசு/ தனியார் நிறுவனத்தினர் எத்தனை சதவீதம்?

ஆர் கே நகரில் ஜனநாயகம் தோற்கவில்லை, தம் அத்தியாவசியத் தேவையை உலகறிய அம்மக்கள் அறிவித்திருக்கிறார்கள். வாக்களித்துவிட்டு கைகூப்பி சாமி கும்பிடுபவர்கள் இவர்கள் என்பதை இன்றும் நேரில் காணலாம். இவர்கள் ஊழலுக்கு உடந்தையாகி விட்டார்கள் என்று நாக்கூசாமல் சொல்ல நமக்கு ஒரு தகுதியும் இல்லை.

தவிர எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று தேர்ந்தெடுப்பார்கள் மக்கள்? குறைந்த பட்சம் சமைக்க அடுப்பு பற்ற வைக்க உதவும் என்று கொள்ளியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆடம்பரமாகப் பிரச்சாரம் செய்ய வரும் அரசியலாளர்கள் அல்லவா நெறியோ, நீதியோ, நாணயமோ இல்லாத மக்கள்? வாக்களித்த பின் தொகுதி மக்களை வந்து பார்க்கக் கூட முடியாதவர்கள் அல்லவா பெரும்பாலான அரசியலாளர்கள்?

இந்தியாவில், வாக்களிக்கும்போதுதான் ஏழை எளிய மக்கள் அதிகாரத்திலும் ஆட்சியமைப்பிலும் பங்கேற்கிறார்கள். உண்மையில் இங்கு தேர்தல் நாளன்று மட்டுமே ஜனநாயகம் மலர்கிறது. அன்றல்ல, வாக்குப்பெட்டிக்கு சீல் வைத்த மறுநாள் முதலே, அரசியல்வாதிகளாலும் அதிகாரிகளாலும் தொழிலதிபர்களாலும் ஜனநாயகம் தோற்கடிக்கப்படுகிறது, அது போதாதென்று மக்களாட்சியின் உடனடி பயன் பெற வேண்டிய அவசர தேவையில் இருப்பவர்கள் நம் போன்றவர்களால் இரக்கமின்றி கொச்சைப்படுத்தப்படுகிறார்கள்.


விவசாயிகள் தற்கொலை

புது வருடம் பிறக்கவிருக்கிறது, நிறைய கொண்டாட்டங்கள், வாண வேடிக்கைகள். உலகெங்கும் ஏராளமான நகரங்களில் மக்கள் ஏதோ பெரிதாக மாறப்போகிறது என்பது போல ஆர்ப்பரிப்புடன் புது வருடத்தை வரவேற்பார்கள். எதிர்பார்ப்பிலேயே உலகம் ஓடிக் கொண்டிருக்கிறது எனலாமா? ஆமாம். ஆனால் கடனிலும் உலகம் ஓடுகிறது. சிலர் சொல்லலாம் பணத்தால் உலகம் ஓடுகிறது என்று.

பணம் என்பதோ சில இடங்களில் மட்டும் குவியும் அசுர சக்தி. அது எல்லாருக்கும் கிட்டும், உழைப்பாலோ, புத்திக் கூர்மையாலோ, அதிர்ஷ்டத்தாலோ யாருக்கும் கிட்டி விடும் என்ற கனவைச் சாதாரண மக்களிடம் போதிப்பது அனேக சமூகங்களின் பண்பாடுகள். பண்பாடுகளின் பின்னிருந்து இயக்கும் சக்திகள் மேற்சொன்ன அசுர சக்திகள். [அவை கனவுத் தொழிற்சாலைகள் என்று இன்றைய சொல் பயன்பாடு குறிக்கும்.]

நிஜத்தில் அனேக மக்களிடம் சேர்வது இப்படி இதோ கிட்டப் போகிறதாகத் தெரியும் பணத்தைத் தேடிச் செல்வதால் ஏற்படும் கடன் மட்டும்தான். அந்தக் கடனைப் பற்றியதுதான் இந்தக் குறிப்பின் முடிவில் கிட்டும் ஒரு கட்டுரைக்கான சுட்டி.

உலகின் செல்வச் செழிப்பு மிக்க நாடெனக் கருதப்படும் அமெரிக்காவில் இந்தக் கட்டுரையின் ‘கதை’ துவங்குகிறது. முதலில் சொன்னபடியே செல்வம் என்பது சில இடங்களில் மட்டுமே குவிகிறது. தானாக ஓடித் தாழ்வான இடத்தை அடையும் நீரைப் போன்றதல்ல செல்வம். அந்த நீரையே கூட மனித எத்தனம் என்னும் நடவடிக்கையின் சில அபத்தங்கள் திசை திருப்பி உயரமான இடங்களுக்கு அனுப்புகின்றன. அப்படி ஒரு மனித சமூகத்தில் மனிதக் கருவியாக வாழ்வைத் துவக்கி, மனிதருக்கு எதிரியாக மாறுவதைத் தன் லக்ஷணமாகவே கொண்டு விட்ட செல்வமென்னும் பதிலி, வாழ்வை அழிக்கும் பேராயுதமாக மாறுவதில் ஆச்சரியம் என்னவிருக்கும்?

இப்படிப்பட்ட எண்ணங்கள் தோன்றக் காரணம் இந்தக் கட்டுரைதான். இந்தக் கட்டுரையில் அமெரிக்காவின் விவசாயிகள் நாயகர்கள். ஆனால் இது இன்பியல் நாடகம் அல்ல, துன்பியல். இவர்கள் சோக நாயகர்கள் என்று சொல்வதை விட சோகமான பலியாடுகள் என்று சொல்வதே சரியாக இருக்கும். இந்தப் பலியாடுகளில் பெரும்பாலானவர்கள் ட்ரம்ப் போன்ற பேரசுர சக்தியைத் தம் நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதி அந்த அசுரத்தனத்துக்குத் தம் மெலிவான வாக்குகளைக் கொடுத்து விட்டு, அசுரரின் வெற்றியைத் தம் வெற்றி என்று நினைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது இன்னொரு மனித நடத்தையின் அபத்த வெளிப்பாடுதான்.

இக்கட்டுரையில் அந்த வகை அபத்தங்களைக் கட்டுரையாசிரியர் கருதவும் இல்லை, அவை அவருடைய நோக்கமும் அல்ல. அவருடைய இலக்கு, அமெரிக்காவின் மையம் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு, இலக்கியம், கலை ஆகியவற்றில் கொண்டாடப்பட்ட விவசாயிகளின் உலகைப் பற்றியது. அந்த விவசாயிகளின் உலகு குரூரமாகச் சிதைக்கப்படுவதைப் பற்றியது. உலகப் புற்று நோய்களில் ஒன்றான பெருநிறுவனங்கள் என்ற அமைப்பு முறை, இந்த விவசாயிகளை அப்பளம், பப்படம் போலத் தினம் நொறுக்கி உண்டு வருவதைப் பற்றியது. ஆனால் டெப்பி வெயின்கார்ட்டென், கட்டுரையாசிரியர், முன்னாள் விவசாயி, கடன்பட்டோரின் நெஞ்சத்தை, இலங்கை அரசனின் உள்ளம் போல நிலை குலைந்து நிற்கும் அவர்களின் உலகை நன்கறிந்த ஒருவர், ஏனோ அமெரிக்க விவசாயிகளின் உலகைப் பற்றிப் பேசுகையில் கடினமான தகவல்களை நேராகச் சொல்லாமல் சுற்றிச் சுற்றி வலை பின்னி வாசகர்களை நோவிலிருந்து அப்புறப்படுத்திக் கதை சொல்கிறார்.

அமெரிக்க விவசாயிகளின் தற்கொலை பெருகி வருகிறது. பல பத்தாண்டுகளாகவே இது பெருகி வருகிறது. இன்று அமெரிக்க விவசாயத் துறையில் பணி புரிபவர்கள் – இந்த விவரணையில் சொத்துள்ள விவசாயிகள், விவசாயக் கூலிகள், மாட்டுப் பண்ணையாளர்கள், மீனவர்கள், மர வெட்டிகள் போன்றாரும் சேர்க்கப்படுகிறார்கள், இதுவும் அமெரிக்காவின் பல விசித்திரங்களில் ஒன்று- வேறெந்தத் தொழிலிலும் இருப்பவர்களை விட இரட்டை மடங்கு அதிகமாகத் தற்கொலை புரிகிறார்களாம். இதை அமெரிக்காவின் வியாதித் தடுப்பு மையத்தின் ஒரு கணக்கெடுப்பு 2016 இல் கண்டு பிடித்திருக்கிறது. குடியானவர்களின் தற்கொலை வீதம் ராணுவத்திலிருந்து திரும்பியவர்களின் தற்கொலை வீதத்தை விட இரட்டை மடங்கு என்று நியூஸ்வீக் பத்திரிகை சொன்னதாம். இதுவுமே குறைவான கணக்குதான் என்கிறார் டெப்பி.

ஏதோ அமெரிக்க விவசாயிகள்தான் இப்படிச் சாகிறார்களா என்றால் இல்லை. ஆஸ்திரேலியாவில் நான்கு நாட்களுக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். பிரிட்டனில் வாரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்து கொள்கிறார். ஃப்ரான்ஸில் இரண்டு நாட்களுக்கு ஒரு விவசாயி. இந்தியாவிலோ, இது உலகத் தற்கொலைத் தலைநாடாகியே தீரும் போலிருக்கிறது. 1995 இலிருந்து இது வரை சுமார் 270,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அதாவது சராசரியாக, ஆண்டொன்றுக்கு 12,275 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 34 விவசாயிகள் இந்தியாவில் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

டெப்பி கட்டுரையில் தற்கொலைக்கான பல காரணங்களைப் பேசுகிறார். அவை எல்லாம் நமக்குத் தெரிந்தவைதான் என்றாலும் அவர் கவனப்படுத்துவது, இந்தத் தற்கொலைகளை எப்படி சிகிச்சைகள் மூலம் வெகுவாக மட்டுப்படுத்த முடியும் என்பதே. உலகப் பொருளாதார அமைப்பையோ, நாட்டுப் பொருளாதார அமைப்பையோ சீர் திருத்துவதைப் பற்றி அவர் பேசுவதில்லை. சில நேரம் மலையைப் புரட்டுவதைப் பற்றியே யோசிக்காமல், மலையைச் சுற்றி மறுபுறம் போவதைப் பற்றி யோசிப்பது மேலான வழியாக இருக்கலாம். டெப்பி அதைச் செய்து பார்க்கிறார்.

மனநோய் மருத்துவர்களில் சிலராவது விவசாயப் புறங்களில் பயிற்சி உள்ளவர்கள், அவர்களின் தலையீடு ஏராளமான விவசாயிகளின் சாவைத் தடுத்திருக்கிறது. ஆனால் நாட்டின் உயிர் நாடி விவசாயிகளே என்று வெத்தாகக் கோஷம் போட்டு வாக்குகளை அள்ளிப் போகும் அரசியல்வாதிகள், விவசாயிகளின் மனநலன் காக்கும் எந்த முயற்சிக்கும் நிதி ஒதுக்க வாக்களிக்கவில்லை என்பதைச் சுட்டுகிறார்.

இன்னும் பல அரிய சுட்டல்கள் இந்தக் கட்டுரையில் உண்டு. இவற்றைப் படித்து விட்டு, இந்த வகை மனநல சிகிச்சை உதவி கூட ஏதுமே இல்லாத இந்திய விவசாயிகளின் நிலை இன்னமும் எத்தனை கூடுதலான கொடுமை நிலையில் இருக்கும் என்று நாம் கற்பனை செய்யாமலே உடனே புரிந்து கொள்வது சாத்தியம். மாறாக நம் நாடு செய்வதெல்லாம், கடன்களைத் தள்ளுபடி செய்வது ஒன்றுதான். அதையும் நூற்றுக்கணக்கானோர் தற்கொலைக்கு அருகில் வந்த பின்னர்தான் அரசு செய்கிறது. கடன் தள்ளுபடி என்பது மறுபடி கடனில் விவசாயிகள் சிக்குவதற்கு வழி வகுத்துக் கொடுக்கிறதே அன்றி அவர்களுக்கு நல் வாழ்வை எப்படி அடைவது என்பதைக் காட்டித் தருவதில்லை. விவசாயிகளுக்கு எந்த நாட்டிலும் நல்வாழ்வு இல்லை என்பதுதான் உலகத்து நிதர்சனம் போலிருக்கிறது. திருவள்ளுவரின் சொற்களைப் பொய்யாமொழி என்கிறார்கள். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று அவர் சொன்னதை நினைத்தால், உழுது விட்டு உண்பவர்களை மட்டும்தான் சொல்கிறார். உழுது விட்டுப் பட்டினி கிடப்பவர்களைச் சொல்லவில்லை என்று குயுக்தியாக நாம் பொருள் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. மற்றேல்லாம் தொழுது பின் சென்று உண்கிறவர்கள் என்றும் என்ன ஒரு நம்பிக்கையோடு சொல்கிறார்! மற்றெல்லாரும் உழவர்களைத் தம்மைத் தொழும்படி செய்திருக்கிற உலகம் இது. இதைத்தான் நம் புராணக்கதைகள் தெரிந்த, ஏற்கப்பட்ட, நியாயமான உண்மைகள் அனைத்தையும் புரட்டிப் போடும், புரட்டலாக்கும் யுகம் இது, கலி யுகம் என்று சொல்கின்றனவோ?

படிக்கும்படி தூண்டவே இந்தச் சுட்டி

https://www.theguardian.com/us-news/2017/dec/06/why-are-americas-farmers-killing-themselves-in-record-numbers

One Comment »

  • சொ பிரபாகரன் said:

    ஆர் கே நகர் தேர்தல் முடிவுகள் குறித்த குளக்கதை பதிப்புரை மிகவும் அற்புதமாகவும் நேர்மையாகவும் இருந்தது

    சொ பிரபாகரன்

    # 28 December 2017 at 2:53 am

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.

CAPTCHA * Time limit is exhausted. Please reload CAPTCHA.