வாழ்வின் இறுதிக் காலங்களில் பிறரைச் சார்ந்திருத்தல்

நம் வாழ்க்கைப் பயணம் நீண்டு கொண்டே போகிறது என்பதில் எவருக்கும் சந்தேகம் இராது.   ஆகவே, இப்பயணத்தின் இறுதி நாட்களை எவ்வாறு முதியோர் கடக்கிறார்கள் என்பதை முதியோரும், முதுமையை நெருங்கி கொண்டிருப்போரும், அவர்கள் சார்ந்துள்ள சமுதாயமும் அறிவது அத்தியாவசியமாகவுள்ளது. 95 வயதைத் தொட்டவர்களில் இருவரில் ஒருவர் மேலும் பன்னிரண்டு வருடங்கள் வாழக் கூடும் என்ற புள்ளி விவரத்தை ஒரு மருத்துவ சஞ்சிகையில் சமீபத்தில் கணடு வியந்தேன். நம் முன்னோர்களை விட தற்காலத்தவரின் வாழ்நாட்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருந்தாலும், வாழ்க்கைத் தரம் கூடியுள்ளதா என்ற வினாவிற்கும் விடை தெரிந்தாக வேண்டும்.

எனது நண்பர் இந்தியாவிலிருந்து திரும்பிய பின் கூறியது நினைவுக்கு வருகிறது. அவர் இளமை பருவத்தில் அவருடைய உறவினரில் பலர் அறுபதை எட்டும் முன்னரே அகால மரணத்தைத் தழுவினர். ஆனால் அவர்களுடைய அடுத்த சந்ததியினரோ எண்பதைக் கடந்த பின்னும் திடகாத்திரமாக உள்ளனர் என்று வியந்து கூறினார். மருத்துவம், சுகாதாரம், கல்வி மற்றும் உணவு ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்தான் நம் நீண்ட ஆயுளுக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால் ஆயுள் நீடிக்க நீடிக்க, நோய்களின் எண்ணிக்கையும், அவற்றின் கால அளவும், உக்கிரமும் அதிகரித்து கொண்டே போகிறது என்பதில் சந்தேகமேயில்லை.

இந்நோய்களினால் அவதிப்படும் முதியோர்கள் குடும்பத்தினரைச் சார்ந்திருக்கும் நேரமும் மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும் வாய்ப்புமுள்ளது. மேலை நாடுகளில் குடும்பத்தோடு வாழும் முதியோர்கள் வெகு சிலரே. கீழை நாடுகளிலும் இப்பழக்கம் வேகமாகப் பரவி வருகிறது. தேசியக் காப்பீடுத் திட்டங்கள் உள்ள நாடுகளில் அரசாங்கம், முதியோர்களின் பொது நலத்திற்கும் மருத்துவத்திற்கும் ஒதுக்க வேண்டிய பணத்தைப் பற்றி சிந்திக்க வேண்டியதாகவுள்ளது. காப்பீட்டுத் திட்டங்கள் இல்லாத நாடுகளில் குடும்பச் சார்பற்ற முதியோர்களின் நிலை வருத்தத்திற்குரியதாகும்.

ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் சமீபத்திய பொருளாதார இறக்கத்தினால் முதியோர்களின் தேவைகளை திருப்தி செய்ய இயலாமல் திணறுகின்றன. ஜெர்மனி முதியோர் தேவைக்கான நிதியளவை அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் இதற்கான தேவை 2021ல்   940 மில்லியன் பவுண்டு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணப்புழக்கம் அதிகமாக உள்ள இந்நாடுகளே இப்பகுதியினருக்காக ஒதுக்கும் நிதியளவைப் பற்றிக் கவலைப்படுவதை நினைத்தால் இந்தியா போன்ற ஜனத்தொகை மிகுந்த தேசங்கள் இப் பிரச்சினையை வருங்காலத்தில் எவ்வாறு சமாளிக்கப் போகின்றவோ என்று கேள்வி எழ வேண்டியுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்தில் 65 வயதுக்கு மேலானவர்களின் சார்பு நிலை 1991லிருந்து 2011ல் எந்த அளவிற்கு மாறியுள்ளது என்பதை ஒப்பிட்டு ஓர் ஆராய்ச்சி அறிக்கையை அந்நாடு வெளியிட்டுள்ளது. ஆளுநர்களும் அறிவாளிகளும், முதியோர்களின் நலனுக்காகப் பாடுபடும் நிறுவனங்களும் சிந்தித்து ஒன்று கூடித் திட்டமிடுவதற்கான விவரங்கள் இதில் அடங்கியுள்ளன. இதன முக்கிய சாரத்தைக் கீழே விவரித்துள்ளேன்.

உலகளவில், 85 வயதிற்கும் மேலானவர்களின் ஜனத்தொகைதான் அதிகரித்து கொண்டு வருகிறது. 20 சதவிகிதத்தினர் உடல் நலம் குறைந்திருந்தாலும் மற்றோரைச் சாராமல் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பான்மையோர் அரசாங்கம் அல்லாது உறவினரின் ஆதரவை சீக்கிரமே அண்ட வேண்டி வரும். இதன் காரணம் இவர்களிடையே நிலவும் டிமென்ஷியா என்று கூறப்படும் நினைவு குறைவேயாகும்.

இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் நினைவுக் குறைவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை – முக்கியமாக பெண்களிடையே- குறைந்திருந்தாலும் உடல் வலிமையற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. (கேரள மாநிலத்தில் 65 வயதுக்கு மேலான 1066 நபர்களை 8 வருடங்களுக்கு தொடர்ந்து கவனித்ததில் 104 நபர்கள் டிமென்ஷியாவினால் பாதிக்கப்பட்டனர் என்பது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையின் மூலம் தெரிய வந்துள்ளது.

முதல் கருத்தாய்விற்கு 1989லிருந்து 1994 வரை விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இரண்டாவது கருத்தாய்வு 2008லிருந்து 2011 வரை நடத்தப்பட்டது.  இரண்டிலும் 65 வயதிற்கு மேற்பட்ட 7500 நபர்களின் பட்டியல் பொது மருத்துவர்களிடமிருந்து எடுக்கப்பெற்றது. (இந்தியாவிலும் மருத்துவர்கள் தங்களது நோயாளிகளின் விவரங்களைப் பதிப்பித்தால் இதைப் போன்ற மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு மிக உபயோகமாயிருக்கும்.)

இவர்களனைவரையும் அவரவர் மனையிலோ, பொதுநல மனையிலோ நேர்முக பேட்டி காணப்பட்டது. மறதியினால் பாதிக்கப்பட்டிருந்தால், உறவினர்களையோ அக்கறையாக கவனித்துக் கொள்பவர்களையோ விசாரிப்பதன் மூலம் விவரங்கள் கண்டறியப்பட்டது. அவர்களுடைய அறிவாற்றல், தினசரித் தேவைகளைச் செயலாற்றும் திறன், சிறுநீர் கட்டுப்பாடு ஆகியவையும் கணிக்கப்பட்டது.  இவர்களின் சார்பு நிலை மற்றவர்களைச் சார்ந்திருக்கும் நேரத்தைக் கணிப்பதன் மூலம் நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டது:

அதிக அளவு சார்பு: (நாள் முழுவதும்): சிறுநீர் கழிப்பு, படுக்கை, நாற்காலியிலிருந்து எழுந்திருக்க முடியாதிருத்தல், சுயமாக உண்ணும் திறன் குறைவு, உடை உடுத்தல் இயலாமை, ஞாபக மறதி ஆகிய காரணிகள்.

மித அளவு சார்பு: (தினசரி குறிப்பிட்ட நேரங்களில் உதவி வேண்டியிருத்தல்) உணவு தயாரித்தல், காலணி அணிவித்தல் போன்றவை

குறைந்த அளவு சார்பு: (சில நாட்கள்) குளியல், நகம் வெட்டுதல், கடைக்குச் செல்லுதல், வீட்டு வேலைகள் போன்றவற்றிற்கு உதவி தேவைப்படுதல்

சார்பற்றமை:  சுய தேவைகளுக்கு மற்றவரைச் சார்ந்திராது இருத்தல்

இவ்வாறு பிரித்த பின், ஆண்களும், பெண்டிரும் வெவ்வேறு சார்பு நிலையில் கழிக்கும் வருடங்கள் கணிக்கப்பட்டன.  இந்த கணிப்பின் மூலம், 2035 வரை 65லிருந்து 85வயதுள்ளவர்களின் சார்பு நிலை முற்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. (2011ல் இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 14.9% பெண்களும், 13.6% ஆண்களும் மற்றவர்களைச் சார்ந்திருக்கின்றனர்)

முடிவுகள்

குறைந்த அளவு தேவையுள்ளவர்களின் எண்ணிக்கை 2011ல் 28.7 % லிருந்து 32.4 % மாக உயர்ந்துள்ளது.

அதிக அளவு தேவையுள்ளவர்களின் எண்ணிக்கை 2011ல் 3.9% லிருந்து 5.9% ஆக உயர்ந்துள்ளது.

பொதுநல மனைகளில் வாழும் மித அளவும் அதிக அளவு தேவையுமுள்ளவர்களில் 85 வயதிற்கு மேலானவர்களின் எண்ணிக்கை 73.5% இலிருந்து 51.8% ஆகக் குறைந்துள்ளது.

மொத்தத்தில், மற்றவரைச் சார்ந்திருப்போரின் எண்ணிக்கை 2011ல் அதிகரித்துள்ளது. உணவு தயாரித்தல், குளியல் இவையிரண்டைத் தவிர மற்ற தேவைகளெல்லாம் 2011ல் அதிகரித்து விட்டது.

2011ல் 65 வயதான ஆண்களின் வாழ்நாள் எதிர்பார்ப்பான 17.6 வருடங்களில் 11.2 வருடங்கள் சார்பற்றும், 4 வருடங்கள் குறைந்த அளவு சார்பிலும், 1.1 வருடம் மித அளவு சார்பிலும், 1.3 வருடங்கள் அதிக அளவு சார்பிலும் கழிக்கிறார்கள். பெண்களின் ஆயுட்கால எதிர்பார்ப்பான 20.6 வருடங்களில், 9.7 வருடங்கள் மட்டுமே சார்பற்றும், 7.8 வருடங்கள் குறைந்த அளவு சார்பும் தேவைப்படுகிறது.

இரு பாலரும் மித அளவு சார்பிலும் அதிக அளவு சார்பிலும் கழிக்கும் வருடங்கள் ஒரே அளவாகத்தான் உள்ளன.

2011ல் ஆண்கள் சார்பற்று இருக்கும் வருடங்கள் 1.7 வருடங்கள் அதிகரித்துள்ளன. பெண்கள் சார்பற்று இருக்கும் நிலைமை 3 மாதங்கள் கூட அதிகமாகவில்லை. ஆயுட்கால நீடிப்புடன் ஒப்பிடும்போது சார்பற்று இருக்கும் வருடங்களின் பங்கு இரு பாலரிடமும் குறைந்துள்ளது.

1991க்கு பிறகு 65 வயதை அடைந்த ஆண்கள் அவர்களின் ஆயுட்கால நீட்சியில் மூன்றில் ஒரு பங்கு சார்பற்ற நிலையிலும், மூன்றில் ஒரு பங்கு குறைந்த அளவு சார்புடனும் கழிக்கின்றனர். ஆனால் பெண்கள் ஆயுட்காலம் அதிகரிப்பில், பாதிக்கும் மேல் குறைந்த அளவு சார்பை ஏற்றுக் கொள்ளவேண்டியுள்ளது. சார்பற்று இருப்பவர்கள் 5 % த்திற்கும் குறைவாகும்.  85 வயதைத் தாண்டிய பின்னும் இச்சதவீதங்கள் மாறவில்லை.

மேற்கூறிய சார்புத் தன்மை மாறாமலிருந்தால், 2025ல் மிதமான சார்புள்ளவர்களின் எண்ணிக்கை 190000 ஆகவும் 2035ல் மேலும் 275000 ஆகவும் கூடும். அதிக அளவு சார்புள்ளவர்களின் எண்ணிக்கை 2025ல் 163000 ஆகவும் 2035ல் மேலும் 237000 ஆகவும் கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.  பொது நல மையங்களை நாடும் நபர்களின் சதவீதம் மாறாமலிருந்தால் 2025ல், 71125 புதிய இடங்களும், 2035ல் 189043 இடங்களும் தேவைப்படும்

குறைந்த சார்பு தேவைப்படும் முதியோர்களின் எண்ணிக்கை இவ்வாறு கூடிக்கொண்டே போவது தொடர்ந்தால் இதனுடைய விளைவுகள் இம்முதியோரைப் பேணும் குடும்பத்தினரையும் நண்பர்களையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் நவீன சமுதாயத்தில் முதியோர்களிடையே விவாகரத்தும், வெவ்வேறு இடங்களில் வசிக்கும் குடும்பத்தினரும், வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போவதால் இவர்களைச் சிறிதளவே சார்ந்திருக்கும் முதியோர்களின் நிலைமை எல்லா நாடுகளிலுமே கடினமாகி வருகிறது.  இங்கிலாந்திலும், அரசுவழிச் சமூக நல அளிப்பில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், சிறிய அளவு சார்பினை வேண்டும் முதியோர்களுக்கு போதிய சலுகைகள் கிடைப்பதில்லை.  உறவினரல்லாத, பண வசதியற்ற முதியோர்களின் நிலை மிகவும் கடினமான ஒன்று என்பது மட்டுமல்லாமல் சமுதாய சமத்துவமின்மைக்கு முக்கிய மேற்கோளாகவுமாகிறது. அதே சமயம், முதியோரைப் பேணிக் காக்கும் குடும்பத்தினரின் பொருளாதார நிலைமை பாதிக்கப்படும் வாய்ப்புமுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

முதியோர் மையங்களில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அறிவாற்றல் திறன் குறைந்தவர்கள் எண்ணிக்கையும், அதிகளவு சார்பை வேண்டும் முதியோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முதியோர் இல்லங்கள் எவ்வாறு கட்டமைக்கப்பட்ட வேண்டும்? இவ்விடங்களில் பணி புரிபவர்கள் முதியோர்களின் தேவைகளை அவ்வப்போது பூர்த்தி செய்வதில் விசேஷ பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.  முதியோரின் மருத்துவ நலனை பாதுகாக்க முதியோர் மருத்துவத்தில் பயிற்சி பெற்ற மருத்துவர்களை இருத்திக் கொள்வதும் முக்கியமான அம்சம்.  உடல் வலிவூட்டும் உடற் பயிற்சிகளை உடற் பயிற்சியாளர்கள் மூலம் முதியோர்களுக்கு பயிற்றுவித்தால் அவர்களின் சார்பு நிலை அதிகமாவதை தடுக்க முடியும்.  மேலும் முதியோர்கள் இம்மையங்களில் வன்முறைக்கு ஆட்படாமல் இருக்கிறார்களா என்பதை உறவினர்களும் நண்பர்களும் அரசாங்கமும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

~oOo~

ஆதாரங்கள்: