வாசகர் மறுவினை


[stextbox id=”warning” caption=”புலன் வர்ணனை?”]

கமல தேவியின் புலன் விசாரணை சிறுகதையைக் குறித்து:

ஆசிரியர் மறைமுகமாகச் சொல்வது ஒன்று இருக்கிறது. அது உணர்வுத் திறன்கள் நம் உடலில் இயங்கும்போது கலவையாக இயங்குகின்றன. ஆனால் மனித உடலில் வேறு சில பிரச்சினைகள் உண்டு. அது எந்திரத் தயாரிப்பு இல்லை. எந்திரத் தயாரிப்பிலும் தயாரிப்புப் பிழைகள் என்று எழும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. உலோகப் பொருள் தயாரிப்பில் கூட, உலோகத் துண்டுகள் எல்லாம் ஒரே போல இரா. எங்கோ ஒரு இழை ஒரு புள்ளி ஒரு கூறில் மாறுதல் இருக்கும்/ அது தேவைக்கு மேலான வலுவோடு இருக்கலாம், குறைவான வலுவோடு இருக்கலாம், அல்லது மேல் பூச்சு (க்ரோமியம், வெள்ளி, அலுமினம் ஏதோ ஒரு பூச்சு) இரு மில்லிகிராம் கூடுதலாகக் குறைவாக இருக்கலாம். பலன் இறுதிப் பொருளில் குறை எழும். அந்தக் குறை பயன்பாட்டின் இயல்பைப் பொறுத்து பிரச்சினை இல்லாத குறையாக இருக்கலாம்.

உதாரணத்திற்கு என் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பிரஷர் குக்கரில் (இந்தியா தயாரிப்பு) உள்புறத்தில் ஒரு கட்டைவிரல் தலை அளவுக்கு க்ரோமியப் பூச்சு போயிருக்கிறது. இதனால் எஃகின் நிறத்துக்கு அருகில் ஒரு கரும் சிவப்புக் கறை தெரிகிறது. அதைப் பாலிஷ் போட்டால் போக்கலாம், அல்லது போக்க முடியாமல் இருக்கலாம். பாலிஷ் போட பிரஷர் குக்கரைத் திரும்ப இந்தியாவுக்குக் கொணர வேண்டி இருக்கும். இங்கு அந்த வேலைகள் செய்ய யார் உண்டு என்றுகூட எனக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கறை இருப்பதால் பயன்பாட்டுக்கு ஏதும் பிரச்சினை இல்லை என்று தோன்றுகிறது.

சில சிறு குறைகள் வாழ்வா சாவா என்று தீர்மானிக்கும் பிரச்சினைகளாக ஆகி விடும். விண்வெளிப் பயணத்துக்குச் செலுத்தப்பட்ட ஒரு விண்கலத்தில் ஒரு 10 செண்ட் விலை உள்ள வாஷர் போன்ற ஏதோ ஒன்று அதன் தயாரிப்பு எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முடியாமல் தோற்ற போது மொத்தக் கலத்தையே காவு வாங்கும் மெலிவாக மாறிப் பல உயிர்களைப் பலியாக்கியது. சமிபத்தில் ஒரு டெஸ்லா காரின் பாட்டரியின் ஒரு பரப்புப் புள்ளியை ஒரு உலோகத் துண்டு சாலையிலிருந்து தெறித்து வந்தது, ஊடுருவியதால் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்து ஒரு நபரைக் கொல்லப் பார்த்தது. அவர் தப்பித்தார் என்று நினைவு. டெஸ்லா இப்போது அந்த பாட்டரியின் அமைப்புப் பகுதியைத் திடப்படுத்தும் கட்டமைப்பைப் பயன்படுத்த வேண்டி ஆயிற்று.

இத்தகைய கட்டமைப்பு மாறுதல்களை நாம் தயாரிக்கும் பொருட்களில் செய்வதைப் படிப்படியாக உயர்த்தித்தான் 16 ஆம் நூற்றாண்டின் உலகிலிருந்து இன்று க்வாண்டம் கணினிகள் இன்னும் ஐந்தாண்டுகளில் செய்ய முடியும் என்று பல டெக் நிறுவனங்கள் அறிவிக்கும் கட்டத்துக்கு நாம் வந்திருக்கிறோம்.
இதை எல்லாம் செய்யக்கூடிய நாம் இன்னும் நம் உடல்களின் தயாரிப்புக்கு நம் மொத்த குலம்/ இனம் தோன்றுவதற்குப் பல மிலியன் வருடங்கள் முன்பே இதைச் செய்யத் துவங்கிய ஒரு அருவச் சக்தியை நம்பி இருக்கிறோம். அதன் கட்டமைப்புத் திறனோ, செயல் முறையோ, அதன் கட்டமைப்பு வேலையின் ஆழங்களோ நமக்கு இன்னமுமே மிகச் சிறு அளவுதான் புலப்பட்டிருக்கின்றன என்று பல அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் தெரிந்ததை வைத்துக் கொண்டே நம் உடலமைப்பில் பல விஷயங்களை, அம்சங்களை மாற்றக் கூடிய திறனாளர்களாக நாம் ஆகிக் கொண்டிருக்கிறோம். இருப்பினும் நாம் இன்னமும் பழங்குடி மக்கள் இயற்கையைக் கையாண்ட அளவுக்குத்தான் நம் உடல் அமைப்பை மாற்றக் கூடியவர்களாக இருக்கிறோம்.

ஆகவே நம் உடல் திறன்களில் பலதும் பல வேறு மக்களிடம் பற்பல அமைப்பு வேறுபாடுகளோடு அமைகின்றன. தயாரிப்பாளர்களின் கூட்டுக் குடும்பங்களின் உயிரணுக் கூறுகளின் கலவையில் என்ன ரசவாத விடை கிட்டுகிறதோ அது சூழலின் பல தற்செயல்/ திட்டமிட்ட அமைவுகளின் தாக்கத்தால் ஓரளவு பாதிக்கப்பட்டு இறுதியில் கிட்டும் பலன் எதிர்பாராத வகைகளில் எல்லாம் அமைகிறது. இந்தப் புள்ளி விவர வகைப்பாட்டின்படி பற்பல வேறுபாடுகளோடு உள்ள மனிதர், முழுத் தோல்வி உள்ள உடற்கூறிலிருந்து, கிட்டத்தட்ட முழுத் திறன் கொண்ட உடற்கூறு வரை விரிகற்றையாக அமைகிறார்கள், இல்லையா? சில குழந்தைகளை, தலை அசைவைத் தவிர வேறெதுவும் இல்லாத குழந்தைகளிலிருந்து- கண் பார்வை கூட என்ன தருகிறது என்று சொல்ல முடியாத குழந்தைகள் இவை- ட்ரைஅதலான் போட்டியில் கலந்து கொண்டு உடலைக் கடும் சோதனைகளுக்கு உட்படுத்தக் கூடியவர்களாகவோ, ரப்பர் போல உடலை வளைக்கக் கூடிய ஜிம்நாஸ்டுகளாகவோ, அசாதாரணமான அறிவுச் சிக்கல்களை விடுவிக்கக் கூடிய அறிவுக் கூர்மையும், மாரதான்களில் முதல் பத்திருபதில் வரக் கூடிய உடல் வலுவும், கடும் குளிரிலும் சாதாரணமாக இயங்கக் கூடிய உடல் கூறும் கொண்ட அறிவியலாளர்களாகவும் இருப்பவர்களையும் நாம் பார்க்கிறோம், கேட்கிறோம், அவர்கள் பற்றிப் படிக்கிறோம்.

சுருங்கச் சொன்னால் இது லாட்டரி போலவே கூட இருக்கிறது. இந்த லாட்டரியில் சிலருக்கு அபாரமான நுகர்திறன் கிட்டும், ஆனால் வேறேதோ பிரச்சினைகள் இருக்கலாம். சிலருக்குக் கேட்ட மாத்திரத்தில் பல பத்தாண்டுகளுக்கு நினைவு வைத்திருக்கக் கூடிய அருவத் தகவல்கள் எல்லாம் சுலபமான விஷயங்களாகத் தெரியும், என் போன்றாருக்கு இன்று காலை கேட்ட பெயர்கள், எண்களெல்லாம் நான்கு மணி நேரம் கழித்து மறந்து விட்டிருக்கும். என் நண்பர் ஒருவர் தனக்கு இயல்பாகக் கிட்டிய நினைவுத் திறனைக் கவனமாகத் தீட்டி அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படும் ஸ்கால்பெல் கத்தி போல ஆக்கி வைத்திருக்கிறார். தன் நினைவுத் திறன் எப்படி இயங்குகிறது. எத்தனை நாள் பதிவுகள் அதில் மேல்நிலையில் கிட்டும், பிறகு எத்தனை நாள் பதிவுகள் ஆழ்நிலையிலிருந்து கிட்டும் என்பன அவருக்குத் தெரிந்திருக்கிறது, ஏனெனில் அவர் அவற்றைக் கவனித்துக் கற்றிருக்கிறார்.

அவர் சென்ற ஆகஸ்ட் மாதம் அவரோடு மலைப் பாதைகளில் ஏறி இறங்கிய நாட்களிரண்டில் இந்தத் திறன் எப்படி அமைந்திருக்கிறது, அதைத் தான் எப்படிப் பயன்படுத்துகிறார் என்பதை எல்லாம் விளக்கினார். அதை நிரூபணங்களோடு நிறுவினார். அதில் பிழைகள் எப்படி ஏற்படலாம், அந்தப் பிழைகளைத் தடுக்க, அகற்றத் தான் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது என்பனவற்றையும் சொன்னார்.

ஒலிவர் ஸாக்ஸ் என்னும் எழுத்தாளருக்கு இருந்த சில வேறுபாடுகளால் அவர் ஒலிகளைச் சுவை போல அறிய முடிந்தது என்று நாம் படித்திருப்போம். ஸினஸ்தீஸியா என்ற சொல்லால் அதை வருணிக்கிறோம் என என் நினைவு.

இவை உணர்வுத் திறன்கள் வேலை செய்யுமுன் அவற்றின் தகவல் கடத்தல் முறையில், ஏதோ குளறுபடி ஏற்பட்டு புத்தியின் (மூளையின்) தக்க பகுதிக்குத் தகவல் சென்று சேராமல் இடையே ஏதோ கலப்படம் ஆகி புத்தியின் சில பகுதிகளில் தகவல் விநியோகம் ஆகிறது என்பது தற்கால அறிவியல் சாய்வுகளுக்கேற்ற விவரணை. எல்லாம் தகவல் மையமாக இப்போது யோசிக்கிறோம். [நூறாண்டு முன்பு எந்திரப் பொறியியல் வழியே இதை உருவகித்திருப்போம். ] ஆனால் இறுதிப் புரிதலில் பிரச்சினை இல்லை. உருவகம் நம்மை அங்கு இட்டுச் செல்ல உதவுகிறது அவ்வளவுதான். இருவகை உணர்வுத் திறன்களின் கலப்பால் புரிதல் இனம் மாறி இரட்டைப் புரிதலாக அவருக்குக் கிட்டுகிறது. இசையை இசையாகவும் அறிகிறார், அதோடு சுவையாகவும் அறிகிறார். இது அவருக்கு சாதகமாக இருக்கிறது. சிலருக்கு இந்தக் கலப்பு பாதகமாக அமையலாம். அப்படி அமையும் உடற்கூறு உள்ளவர்களுக்கு அந்தப் பாடு பற்றி நன்கு தெரியும்.

உதா: மின்னி மின்னி மறையும் ஒளித் துண்டுகள் அனேகருக்கு மகிழ்ச்சியாகவோ, உற்சாகம் தருவதாகவோ இருக்கலாம். அதனால் இரவு விடுதிகளில் நடனங்கள் இப்படி மின்னி மின்னி மாறும் ஒளி வீச்சுடன் நடத்தப்படுகின்றன. சிலருக்கோ இந்தக் கலப்பு அறிதலால், இந்த மின்னி மறையும் ஒளி வீச்சு கடும் நரம்புக் கிளர்ச்சியைக் கொடுத்து அவர்களுக்கு வலிப்பு போன்ற ஒரு நிலை ஏற்படும். இதை அவர்கள் கட்டுப்படுத்த இயலாதவர்களாக ஆகிறார்கள். கட்டுப்படுத்த ஒரே வழிதான் உண்டு- கண்ணை மூடிக் கொள்வது, அல்லது அந்த இடத்திலிருந்து அகல்வது.

கதையில் உள்ள பாத்திரத்துக்கு அன்று ஏதோ காரணத்தால் அவருடைய மணமுணரும் திறன் தூண்டப்பட்டு உச்சநிலையில் உள்ளது. இது அவருக்குமே புதிதாக இருக்கிறது. ஆனால் காட்சித் திறன் போலவோ அல்லது தொடுகைத் திறன் போலவோ அகல்வது மூலம் அவரால் இந்தக் கிளர்ச்சியில் இருந்து தப்ப முடியாத நிலை. அத்தோடு இல்லாமல் மணத்தின் நினைவு வேறு நின்று தொடர்ந்து தொல்லை செய்கிறது. மணத் தூண்டல் தரும் சூழலிலிருந்து அகன்ற போதும் சில துண்டு மணங்கள் கூடவே தொடர்கின்றன. அந்தக் கிளர்ச்சி நிலையில் உலகு எப்படி அதன் வழக்கமான அர்த்தங்களிலிருந்து வேறுபட்டு, சில திடீரென்று தொல்லைகளாக ஆகித் தெரிகின்றன. அர்த்தங்களின் சமநிலை பழுதாகி அடுக்கு நிலை பூடகமாக இருப்பது போய், இப்போது வெளிப்படையாகப் புலப்பட்டு, தன் முந்நாளைய அர்த்தங்களின் கூட்டு நிலையைக் கேள்விக்குள்ளாக்க வேண்டிய நிலையில் அவர் வந்து சேர்கிறார்.

ஆக வருணனைக்கு ஒரு அவசியம் ஏற்படுகிறது கதையில். ஆனால் பாத்திரத்தின் இயல்பு விசாரிப்பது, விசாரித்தே எதையும் ஏற்பது. ஆக புலன் விசாரணையாக வருணனையின் கூட்டுத் தாக்கம் கவனிக்கப்படுகிறது. அந்த விசாரணையின் பல முடிவுகள் அவருக்கே புத்தம் புதிதாகத் தெரிகின்றன. இந்த உடலை எத்தனை நம்பலாம் கூடாது என்றே கூட விசாரத்துக்கு அவர் வந்து சேர்கிறார்.

இதெல்லாம் அந்த எழுத்தாளர் விளக்கினதால் எனக்குத் தெரிந்ததா? இல்லை. எனக்கே இத்தகைய அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதால் கதை உடனே புரிந்தது.

பஞ்சநதம்

[/stextbox]


[stextbox id=”alert” caption=”நெல்லிக்கனி”]

குளக்கரை குறிப்பைப் படித்தவுடன் நேற்று இங்கு பாஸ்டன் நகரில் நடக்கிற துருக்கியின் குறும்பட விழாவில் இரண்டு காட்சிகளுக்குப் போனது பற்றிப் பகிரத் தோன்றியது. அடுத்தடுத்த காட்சிகள்.

நான்கு சற்றே நீண்ட படங்கள், நான்கு மிகக் குறும் படங்கள். இருப்பதில் சிறியது 4 நிமிடம். தண்டம். ட்விட்டர் குறிப்பு போல விடலைத்தனமாக இருந்தது.

கம்பானியன் என்று ஒரு நீண்ட படம். சுமார் 50 நிமிடங்கள். போனதே தெரியவில்லை. இது தகவல் குறிப்புப் படம். துருக்கியின் சட்டப்படி, குற்றவாளிகள் (பெண்கள்) 0-6 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் உள்ளவராகவும், குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வேறு யாரும் சொந்தக்காரர்கள் இல்லை என்றும் ஆனால், அந்தக் குழந்தைகள் தாயோடு சிறையிலேயே பராமரிக்கப்படலாம். அவரவர் தகுதிக்கேற்ப (ஸ்டேடஸ் என்ற சொல் பயன்படுத்துகிறார்கள்- இதற்கு துருக்கிய மொழியில் என்ன பொருளோ யார் கண்டது?) வசதிகள் கொடுக்கப்படும். இதன்படி சுமார் 500 பேர்கள் சிறையில் குழந்தைகளோடு இருக்கிறார்கள். துருக்கியின் ஜனத்தொகை அத்தனை அதிகம் இல்லை என்று நினைக்கிறேன். 80 million தான் இருக்கிறது. (2016 எஸ்டிமேட்) ஜெர்மனியும் ஈரானும் கிட்டத்தட்ட அதே ஜனத்தொகைதான்.

தமிழநாட்டின் மக்கள்தொகை 79 மில்லியன் எனக் கணிக்கப்படுகிறது. தமிழ் நாடுடைய சிறையில் 655 பெண்களே இருக்கிறார்கள். அவர்களில் தண்டிக்கப்பட்டவர்கள் 150 பேர்தான். துருக்கியில் 500 பேர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்றால் அங்குள்ள நிலை நம் ஊரோடு ஒப்பிடத் தக்கதாகவே உள்ளது.

அந்த சிறை நிலைகளையும், குழந்தைகள் வளரும் விதத்தையும் அரசியல்படுத்தாமல், விமர்சனங்கள் இல்லாமல், மனிதப் பிரச்சினையாக மட்டும் அணுகி எடுக்கப்பட்டிருக்கும் படம். இது எதார்த்த அணுகலில் ஒரு வழி என்று தெரிந்தது. நன்றாக இருந்தது.

பல படங்களில் ஒரு படம் கடைசிப் படம்- அதில் தொழில் வல்லுநர்களின் பட்டியலில் திடீரென்று கவனம் ஈர்த்த ஒரு பெயர் அதியமான். (ஒரு நபரின் கடைசிப் பெயர். நன்கு கவனிப்பதற்குள் ஓடி விட்டது. ஆனால் adiyaman என்பது தெளிவாகக் கவனித்தேன். அட நம் ஊர் அதியமான் ஒரு துருக்கி தேசத்து ஆளா என்று யோசித்தேன்! : ) அவர் நிறைய போருக்குப் போன நபர் என்பதால் இப்படி ஒரு குயுக்தியான யோசனை.

பிறகு வீட்டுக்கு வந்து கூகிளில் தேடினால் அதியமான் என்று ஒரு பகுதியே இருக்கிறது துருக்கியில்.

மைத்ரேயன்

[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.