மதிநுட்ப எந்திரம் – வரமா? சாபமா?

Stephen Hawking and Elon Musk are worried. Could machine intelligence really lead to the extinction of humans?

செயற்கை நுண்ணறிவின் எழுச்சி குறித்து  அண்மையில் முன்னிலை அறிவியலாளர்களும் தொழில்நுட்ப வல்லுனர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.  இயற்பியல் வல்லுனரான ஸ்டிபன் ஹாக்கிங் (Stephan Hawking)  செயற்கை நுண்ணறிவு மனித இனத்தையே  முடிவுக்குக் கொண்டுவரக் கூடும் என்று  கவலைப்படுகிறார். ‘இது  ஒரு மாபெரும் இருத்தலிய அச்சுறுத்தல்,’ என்கிறார் டெஸ்லா (Tesla)நிறுவனர் ஈலான் மஸ்க் (Elon Musk). எதிர்காலத்தில் மதிநுட்ப  எந்திரங்கள்  உலக மேலாண்மையைக் கையகப் படுத்திக்கொண்டு நம்மை ஆளப்போகின்றன என்னும் கவலை தரும்  தகவலைக் கடந்த சில ஆண்டுகளாக அறிவியல் புனைவுகளும் திரைப்படங்களும் பொது வெளியில் வைத்து வருகின்றன. உதாரணமாக 1984-ஆம் ஆண்டின் ”தி  டெர்மினேட்டர்” என்ற அறிவியல்-புனைவுத்  திரைப்படம், மனித இனத்தின் பேரழிவை நாடும் ஸ்கைநெட்  என்னும்  செயற்கை நுண்ணறிவு நெட்ஒர்க்கைச்  சித்தரித்தது.

மதிநுட்ப எந்திரக் கனவு விரைவில் நனவாகும் என்ற புதிய தகவல், மக்களை அதன் தொடர்விளைவுகள் குறித்த பலத்த யோசனையில் ஆழ்ந்திருக்க வைத்திருக்கிறது.

நம் கவலைகள் நியாயமானவையா? டெர்மினேட்டர் திரைப் படச் சித்திரிப்பு  சாத்தியமா? மதிநுட்ப எந்திரங்கள் உண்மையாகவே  மனித இனத்தை முழு அழிவுக்கு வழிநடத்தி விடுமா? அவற்றால் கிடைக்கக்கூடிய   நற்பயன்களைப் பேரிடர் சாத்தியங்களுக்கு எதிராக சீர் தூக்கிப் பார்ப்பது எப்படி?

ஒரு புதிய தொழில் நுட்பத்தின் இறுதித் தாக்கம் என்னவாக இருக்கும் என்று முன்னுரைப்பது மிகமிகக் கடினம் என்று  சரித்திரம் போதிக்கிறது. பொதுவாக, புதிய தொழில் நுட்பம்  நமக்குப் பரிச்சயமான  பிரச்னைகளிலும்  காரியங்களிலும் மட்டுமே  பயன்படுத்தப்படும்  என்று கற்பனை செய்துகொள்ளும் மனோபாவம் கொண்டவர்கள் நாம். ஆனால் புதிய, முற்றிலும்  எதிர்பாராத, எவரும்  கற்பனையிலும் கண்டிராத  பயன்பாடுகள் தவிர்க்கமுடியாத விதத்தில் வெளிவரலாம். எழுதிக் கணக்கிடும் மனிதக் கணினிகளுக்கு மாற்றாக டிஜிட்டல் கணினிகள் உருவாக்கப்பட்டன. 1940-களில் எவரும் ஸ்மார்ட் ஃபோன், இன்டர்நெட், GPS, செயற்கைக்கோள் ஆகியனவற்றைக்  கற்பனை செய்யவில்லை.

அதேபோல இன்று, மதிநுட்ப எந்திரங்கள் மனிதர்களைப் போன்றே தோற்றமளிக்கும்; மனிதர் செய்யும் வேலைகளைச் செய்யும்; மனிதரைப்போல ஆசையும் பிற மனஉணர்வுகளும் கொண்டிருக்கும் என்ற கற்பனைகள் நம்மை வசீகரிக்கின்றன. நம்மைப் போன்றேயிருந்தாலும் நம்மைவிட துடிப்பாகச் செயல்படவல்லவை இந்த  மதிநுட்ப எந்திரங்கள் என்று நீங்கள் நம்பியிருக்கையில், அவை முன்கூட்டியே அறியமுடியாத  வழிகளில் விருத்தியாகி  நம்மைக் கொடுமைப் படுத்தக்  கூடும்.  அவை  தன்னினப் பாதுகாப்பைக்கருதியோ அல்லது தனித்தியங்கும் ஆவலாலோ அல்லது அவநம்பிக்கையாலோ உந்தப்பட்டு, அறிந்தோ அறியாமலோ, மனித இனத்துக்குப்  பெரும்தீங்கு விளைவிக்கக் கூடும்.

இவ்வகை விசாரங்கள்  அனைத்துமே மூன்று தவறான புரிதலின் விளைவுகள் என நான் கருதுகிறேன். எனக்கு இந்த விசாரங்களில் உடன்பாடில்லை. மூன்று   தவறான கருத்துகளையே விவாதப் பொருளாக ஏற்று, வரும் பத்திகளில் ஒவ்வொன்றிற்கும் விளக்கம் அளித்துள்ளேன்.

தவறான கருத்து #1: மதிநுட்ப எந்திரங்களால் சுயப் பிரதி எடுத்துக்கொள்ள முடியும்  அல்லது பின்னாளில்  அத்திறன் பெற்ற மதிநுட்ப எந்திரங்கள் உருவாகக் கூடும்

சுயப் பிரதி எடுத்துக் கொள்ளக் கூடியவை(self-replicate) அனைத்துமே அபாயகரமானவை. கடந்த காலங்களில் மனித மடிவின் பெருங்காரணிகள்  சுயப் பிரதி எடுக்கவல்ல நச்சுயிரி (Virus) மற்றும் நுண்ணுயிரிகள்  (Bacteria) என்பது ஏற்கக்  கூடியதே.  இன்றும் அவை மனித குலத்தைத் துடைத்தெறியும் வலுவுடன் வலம் வந்துகொண்டிருக்கின்றன.உதாரணமாக 1918- ஆம் ஆண்டின் ஸ்பானிஷ் ஃப்ளு உலக ஜனத்தொகையில் மூன்று முதல் ஐந்து விழுக்காடு மக்களைக் கொன்று குவித்திருக்கலாம்  என்று மதிப்பிடப் பட்டுள்ளது.சுயப் பிரதி எடுக்கும் கம்ப்யூட்டர் வைரஸ்களும் அபாயகரமானவையே. அவை போக்குவரத்து, தொலைத்தொடர்பு  மற்றும் நெருக்கடி நிலைக்கு மறுவினை தரும் வலைத் தொடர்புகளைச்  (emergency response networks) சீர்குலைப்பதால் விபத்துகள் நிகழ்ந்து பல மரணங்கள் சம்பவிக்கலாம். எனினும்  கம்ப்யூட்டர் வைரஸ்களால்  கணினி வலைச்சுற்றுகளில் மட்டுமே நகல் எடுத்துக்கொள்ள முடியும். கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதலால் கொடிய விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என்றாலும் அவற்றால் உயிரிய (biological) வைரஸ்கள் போல மனித குலத்தை அழிக்கும் அளவுக்கு வன்மத்துடன் செயல்பட முடியும் என்று கற்பித்துக் கொள்வது அபத்தம்.

மனிதக் கட்டுப்பாடுகளை மீறி,நுண்ணறிவு எந்திரங்கள் சுயமாக இனப் பெருக்கம்(reproduce) செய்து கொள்ளக் கூடும்  என்ற  அடிப்படைக் கருத்தின் தாக்கமே  எந்திர நுண்ணறிவு சார்ந்த இறுதிநாள் (doomsday) காட்சிகளைக்  கற்பனை செய்ய வைக்கிறது.ஆனால் நுண்ணறிவுள்ள எந்திரத்தை உருவாக்குவதும் சுய இனப்பெருக்கம் செய்யும்  எந்திரங்களை உருவாக்குவதும் வெவ்வேறு முயற்சிகள். நுண்ணறிவு எந்திரத்தைப் பின்தொடரப் போவது சுயமாக இனப்பெருக்கம் செய்து கொள்ளும் எந்திரங்கள் என்று யூகிப்பது தவறு.

நுண்ணறிவு எந்திரம் சுயமாக இனப்பெருக்கம் செய்யக் கூடுமா? சில நுண்ணறிவு எந்திரங்கள்,கம்ப்யூட்டர் நெட்ஒர்க்களுக்குள்ளிருந்து செயல்படும் மெய்நிகர்(virtual) எந்திரங்கள். உதாரணமாக இன்றைய வலை ஊர்திகள் (net crawlers) இன்டர்நெட்டில் சுற்றித் திரிந்து சுயமாகக் கற்று,புத்திசாலித்தனத்துடன் செயல்படக்கூடிய  நுண்ணறிவு கொண்டவையாகத் திகழ்கின்றன. இவ்வகை எந்திர நுண்ணறிவு, பூத உடல் தேவைப்படாத  மென்பொருள் மெமரித்  தொகுப்பாக விளங்கும்.  கம்ப்யூட்டர் வைரஸ்களை  உருவாக்குவதற்கு  இணையான சுலப வழிகளில் மனிதரால்  மெய்நிகர் எந்திரங்களுக்கும் சுய இனப்பெருக்கம் செய்துகொள்ளும் திறன் வழங்க முடியும். இது அபாயகரமானதாகத் தெரிந்தாலும், நகல் எடுத்துக்கொள்ளும் திறன் பெற்ற மெய்நிகர்  நுண்ணறிவு எந்திரம் கம்ப்யூட்டர் நெட்ஒர்க்கினுள் செயல்படுகையில் நேரக்கூடிய அழிவு வரம்புக்குட்பட்டதாகவே இருக்கும். பெருந்தீங்கு நேரலாம். ஆனால் அது மனித இனம் அழியும் அளவிலல்ல. வேதனையைப் பொருட்படுத்தாமல் எப்போது வேண்டுமானாலும்  கம்ப்யூட்டர் நெட்ஒர்க்கை அணைத்து விட முடியும்.

இயற்கைச் சூழலில் சுய இனப்பெருக்கம் செய்ய வல்ல (பெயரிடப்படாத) ஒன்றே  மனித குல உய்த்தலை அச்சுறுத்தக் கூடும். எங்கும் நிறைந்துள்ள சக்தி மற்றும்  வஸ்துக்களைப் பயன் படுத்தி பூமியின் மேற்பரப்பில் பெருகவல்லதான  அது மனிதகுலம் உட்பட்ட எல்லா ஜீவராசிகளையும் பயமுறுத்தக் கூடும். இன்றைய சூழலில் DNA /RNA அடிப்படையிலான உயிர்கள்  மட்டுமே சுயமாக இனப்பெருக்கம் செய்துகொள்பவை.  நுண்ணுட்ப (nano) எந்திரங்கள்(gray goo  என்றும் அழைக்கப்படுகிறது) உருவாகும் சாத்தியம் உண்டு என்ற கருத்தையும் சிலர்  முன்மொழிகிறார்கள்.  நானோ எந்திரங்கள் அதிவேகமாகப்  பெருகினால் அவை மற்ற உயிரினங்களின் இயற்கை வாழிடங்களை   விரைவாக அழித்து விடும்..

ஒருவேளை இந்த அச்சுறுத்தல் மெய்ப்படக் கூடும். ஆனால் இயல்பாக சுயப்பிரதி எடுத்துக்கொள்ளும்  திறன் நுண்ணறிவு எந்திரங்களுக்குக் கிடையாது. மிகக் கடுமையாக  முயற்சி செய்தால்  இத்திறனை அவற்றிற்குத்  தர  முடியலாம். தற்போது அதை எப்படிச் செய்வது என்று நாமறியோம். ஒரு நுண்ணறிவு எந்திரம், மனித உதவியின்றி நுண்ணறிவு எந்திர நகல்களைத் (clones) தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவ முடியுமா? அது சாத்தியமில்லை என்றே நினைக்கிறேன். தம்மை அடிமைப்படுத்தப் போகின்ற எந்திரன்களை உற்பத்தி செய்யும் மூடர்கள்  ஹாலிவுட் படங்களில் தான் வருவார்கள். அவர்களைச்   சோதனைக்கூடங்களில் பார்க்க முடியாது. இயற்கைச் சூழலில் சுயப் பிரதி எடுப்பது மிக மிகக் கடினம்.

ஏற்கனவே சுயப் பிரதி எடுத்துக்கொள்ளும் வஸ்துவில் மென்மேலும் நுண்ணறிவைத் திணிப்பது ஒரு மோசமான நிலைமையிலிருந்து  மிகமிக மோசமான நிலைக்கு தள்ளிவிடக் கூடும். மாறாக நுண்ணறிவே   சுயப் பிரதியெடுப்புக்கு வழி நடத்தி விடாது.

தவறான கருத்து #2: நுண்ணறிவு எந்திரங்கள் மனித வடிவில்  மனித வேட்கைகள் கொண்டவையாக இருக்கும்.

நுண்ணறிவு எந்திரங்கள் மனிதரைப் போன்ற  அபிலாஷைகள்   கொண்டிருக்கும் ; எனவே அவை  தம்  சுயப் பிரதிக்கான வழிவகைகளை ஆய்ந்து கொள்ளவும்  அல்லது  தம்மை  உருவாக்கிய மனித படைப்பாளிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடவும் அல்லது மனிதர்களைப் பொருட்படுத்தாமல் தம் இச்சைப்படி நடந்து கொள்ளவும்   திட்டமிடக்கூடும்  என்று நினைப்பது இரண்டாவது தவறான கருத்து.

இத்தகைய சூழ்நிலை உருவாக வாய்ப்பில்லை. மனிதனில்  இரு பகுதிகள் அடங்கி இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள். முதலாவது பகுதி பெருமூளைப் புறணி என்னும் நுண்ணறிவு உறுப்பு என்றும் அது தவிர மற்றவை  இரண்டாவது  பகுதி என்றும் எண்ணிக் கொள்ளுங்கள். மனிதரின் பெருமூளைப் புறணி பிற பாலூட்டிகளின் புறணிகளை விட ஒப்பளவில் பெரியது. அதுவே மனிதனைப் பிற பாலூட்டிகளை விட அதிக துடிப்புடன்(smart) செயல்படச் செய்கிறது. பெருமூளைப் புறணி ஒரு கற்றல் அமைப்பு (learning system).  அது தனக்கே உரிய உணர்ச்சிவயப்படாத வகையில் உலக மாடலையும், உலகிலுள்ள ஒவ்வொன்றும்   எவ்விதம் நடந்து கொள்கின்றன என்றும் கற்றுக் கொள்கிறது. மூளையின் பிற பகுதிகளான தண்டுவடம், மூளைத்தண்டு மற்றும் அடித்தள நரம்பு செல் தொகுதிகள் (basal ganglia) ஆகியன பரிணாமத்தின் முந்தைய காலகட்டத்தில் உருவானவை.  உள்ளுணர்வு சார்ந்த நடத்தைகளுக்கும்  பசி,கோபம்,இச்சை, பேராசை போன்ற உணர்ச்சிகளுக்கும் பழைய மூளையின் பகுதிகளே பொறுப்பேற்கின்றன.

மூளையின் பிற பகுதிகளை  விலக்கி, பெருமூளைப் புறணியை மட்டுமே  மாடலாக ஏற்று  நுண்ணறிவு எந்திரங்கள் உருவாக்க முடியும். நுண்ணறிவு எந்திரங்களில்   நாம்  வேண்டுவது நெகிழ்தன்மையுடன்  அநேகமாக எல்லாவற்றையும்  கற்கக்கூடிய ஆற்றல் மட்டுமே. இனம் பெருக்கி நிலைத்து நிற்கும்  திறன்  தேவையில்லை. எனவே அவை மனிதர்களையோ விலங்கினங்களையோ  எவ்விதத்திலும் ஒத்திருக்கமாட்டா.

மனிதர் போல் ஆசைகளும் உணர்ச்சிகளும் கொண்ட எந்திரங்களை உருவாக்க சிலர் முயற்சி மேற்கொள்ளலாம். அது சாத்தியமா, அதை அனுமதிக்கலாமா என்பது கேள்விக்குட்பட வேண்டியது. இன்று அத்தகைய எந்திரத்தை எப்படி உருவாக்குவது என்றறிந்தவர் எவருமிலர். அதை உருவாக்க  நுண்ணறிவு எந்திர உருவாக்கத்துக்கு நிகரான தனிப் பெரும் முயற்சி தேவைப்படும்.

தவறான கருத்து #3: மனிதரை விடத் துடிப்பான நுண்ணறிவு எந்திரங்கள் நுண்ணறிவுப் பெருவெடிப்புக்கு வழி வகுக்கும்.

மனிதரை விடத் துடிப்பான எந்திரங்கள் தம்மை விடத் துடிப்பான எந்திரங்களை உருவாக்கி அவை மேலும் துடிப்பான எந்திரங்களை உருவாக்கி இவ்வாறாக  படிப்படியாக எந்திரங்களின்  துடிப்பு அம்சம் உயர்ந்துகொண்டே போவது நுண்ணறிவுப் பெரு வெடிப்புக்கோ(intelligence explosion)   அல்லது ஒருமைத் தன்மைக்கோ (singularity) இட்டுச் செல்லும் என்று சிலர் கலக்கம் அடைகிறார்கள். நுண்ணறிவு எந்திரங்கள் வெகு விரைவில் மேன்மேலும் சூட்டிகையாக ஆகி  அவற்றின் மொத்த அறிவுத் தொகுப்பு மனிதர்களால் புரிந்து கொள்ள முடிகிற சக்திக்கு மீறியதாகிவிடும்  என்று அஞ்சுகிறார்கள்.  மேம்பட்ட அறிவும் தொழில் நுட்பமும் கொண்ட எந்திரங்களின் ஆதிக்கத்தில் மனித இனம் அற்ப ஜீவிகளாகி ஒடுங்கி நிற்கும் நிலை வரக் கூடும் என்கிறார்கள்.

இது போன்ற  இறுதிநாள் காட்சிகள் அரங்கேறப்  போவதில்லை. கற்றலின் பலன் தான் நுண்ணறிவு. எவ்வளவு   பெரிய மின்னல் வேக மூளையாய் இருப்பினும்,  கற்ற பின்னரே அது நுண்ணறிவு பெறும். மனித குலத்தைப் பொறுத்தவரை  கற்றல் என்பது படிப்பு, பயிற்சி, திரும்பவும் படிப்பு என்ற சுழற்சியில் பல்லாண்டு தொடரும் மந்தமான நடைமுறை. மனிதரைப் போலன்றி, நுண்ணறிவு  எந்திரம்  படியெடுப்பு செய்து முன்பே கற்றவற்றை புதிய எந்திரத்திற்கு மாற்றிக்  கொள்ள முடிவதால், கற்கும் நேரச் செலவைத் தவிர்க்க முடியும். இருப்பினும் புதிய உண்மைகளைக் கண்டறியவும், புதிய செயல்திறன்களைக்  கற்கவும்,  குறையறிவை மேற்கொண்டு நீட்டித்துக் கொள்ளவும் நுண்ணறிவு எந்திரங்கள் மனிதர் மேற்கொள்ளும் கடினமானதும், நிதானமாகச் செயல்பட வேண்டியதுமான கண்டுபிடிப்பு நடைமுறைகளையே பின்பற்ற வேண்டியிருக்கும். ஒரு நுண்ணறிவு எந்திரத்தால் உயிரிய (biological) மூளையைவிடப்  பலமடங்கு துரிதமாக சிந்திக்க முடியும். ஆனால் அதன் கண்டுபிடிப்பு செயல்முறைகள் மந்த கதியில் தான் நடக்கும்.

பெரும்பாலான பிரச்னைகளைக் கையாளும்போது, அதிவேக நுண்ணறிவு எந்திரங்களும் கள ஆய்வு திட்டமிடல், தரவுகளைச் சேகரித்தல், கற்பிதக் கொள்கைகள் உருவாக்குதல்,திருத்தி அமைத்தல், மீண்டும் செய்தல் என்ற வழிமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும்.  பேரண்டம் பற்றிய அறிவை மேம்படுத்திக்கொள்ள விரும்பும் நுண்ணறிவு எந்திரம், புதிய துடிப்பான தொலைநோக்கிகளையும் கோளிடை(interplanetary) ஆய்வு உபகரணங்களையும்  உருவாக்கி, விண்வெளிக்கு அனுப்பி முடிவுகளுக்குக் காத்திருக்கவேண்டும்.  வானிலை மாற்றங்களைப் பற்றி மேலதிகமாக அறிந்துகொள்ள விரும்பினால்,  அண்டார்டிகாவின் உறைபனி உள்ளகங்களை(cores) துளையிடவும் சமுத்திரங்களில் புதிய அளவீடு  கருவிகளை நிறுவதற்கும் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும்.

நுண்ணறிவு என்பது எளிதில் ஒரு குமிழைத் திருகியோ அல்லது நுண்ணறிவு நுண்மங்களை(bits) அதிகரித்தோ பெறக்கூடிய சரக்கல்ல. நுண்ணறிவு பெருக   அளவிற் பெரிய மூளை மட்டுமல்லாது   சாதுர்யமான  மறுசெய்கை(iterative manipulation)  மற்றும் ஸ்தூல வஸ்துக்களை அளத்தல் (measurement of physical things) போன்றவையும் தேவைப்படும். இந்த நடைமுறைகளை ஓரளவுக்குத்தான் துரிதப் படுத்த முடியும்.

நுண்ணறிவு எந்திர உருவாக்க முயற்சிக்கு நான்  வலிந்து ஈர்க்கப்படுவதின்  காரணங்களில் ஒன்று அவை  பேரண்டத்தின் ரகசியங்களை கண்டு பிடிக்க  உதவக் கூடும் என்பதே. தரவுகளில் தோற்றங்களின் தன்மைகளைக்(pattern) காண்பதிலும், கற்பிதக்  கொள்கைகளை(hypotheses) ஆராய்வதிலும் மனிதரை விட ஓராயிரம் மடங்கு துரிதமாகச் செயல்படக்கூடிய நுண்ணறிவு எந்திரங்களை நம்மால் உருவாக்க முடியும். பிற கோள்களையும், பிற சூரியக் குடும்பங்களையும் ஆராய  நுண்ணறிவு இயந்திரன்களை(robots) அனுப்ப நம்மால் முடியும். புரதங்களைப் (ப்ரோடீன்ஸ்) பற்றி நேரடியாக அறிந்து ஆலோசிக்கக் கூடிய, களைப்பின்றி மனித மரபணுத் தொகுதிகளை (human genome) ஆராய்ந்து நோய்களின் அடிப்படைகளைக் கண்டுபிடிக்கக்கூடிய, நுண்ணறிவு எந்திரங்களையும் உருவாக்க முடியும்.

இத்தகைய சாத்தியங்கள் எனக்கு உற்சாகமளிக்கின்றன. இருப்பினும் இந்த அளவுக்கே அறிவு கையகப் படுத்துகையை(acquisition) நம்மால் முடுக்கி விட முடியும்.  நுண்ணறிவுப் பெருவெடிப்போ,ஒற்றைப் படைத் தன்மையோ ஏற்பட வாய்ப்பில்லை.

~oOo~

இங்கிலிஷ் மூலம்: ஜெஃப் ஹாகின்ஸ் 

தமிழாக்கம்: கோ.ரா.

பின் குறிப்பு :ஆங்கில மூலக் கட்டுரையின் மையக் கருத்தை விவரிக்கும் பகுதிகள் மட்டுமே  மொழி பெயர்க்கப் பட்டுள்ளன.

சொல் விளக்கம் :

ஒருமைத் தன்மை (singularity): is the hypothesis that the invention of artificial superintelligence will abruptly trigger runaway technological growth, resulting in unfathomable changes to human civilization.(wikipedia)

ஆங்கில மூலம்: “The Terminator Is Not Coming.The Future Will Thank Us