[stextbox id=”info” caption=”நூலகங்களை நடத்தும் வங்கிகள்!”]
இந்தச் செய்தி நமக்குப் பிடித்தமான இடங்களைப் பற்றியது- நூலகங்கள்!! மறுபடி மறுபடி யூரோப்பிய, அமெரிக்க நூலகங்களையே பற்றிப் பேசிக் கொண்டிராமல், ஒரு மாறுதலுக்கு இந்த முறை நாம் துருக்கி நாட்டின் நூலகங்களைப் பார்க்கிறோம். துருக்கியில் கடந்த வருடம் வாசகர் உறுப்பினர் எண்ணிக்கை 24% போல அதிகரித்தது என்று துவங்கும் அறிக்கை, துருக்கியின் சிறப்பான நூலகங்களில் பலவும் அந்நாட்டு வங்கிகளின் நிதி உதவியால் இயங்குகின்றன, அவற்றாலேயே நிறுவவும் பட்டன என்று தகவலைக் கொடுத்து நமக்கு வியப்பு தருகிறது.
அட இந்த முறையை இந்தியாவின் பெரும் வங்கிகள் பயன்படுத்தலாமே? பல்லாயிரம் கோடி ரூபாய்களைத் திருப்பித் தராமல் ஏமாற்றும் இந்தியாவின் மோசடிப் பேர்வழிகளான பெரும் பணக்காரர்கள், பல தொழில் நிறுவனங்களிடம் கொடுத்து ஏமாறுவதை விட இப்படி ஒவ்வொரு ஊரிலும் சில நூலகங்களை நிறுவச் செலவிட்டால் இந்திய மக்களின் அறிவுத் துலக்கம் படுவேகமாக நடக்கும், தவிர மக்கள் வங்கிகளிடம் அபிமானமும் கொள்வர் என்று தோன்றியது. இந்திய வங்கிகளே, கவனியுங்கள், நூலகங்களில் முதலீடு செய்யுங்கள்!!
அதே அறிக்கை நியுயார்க் மாநிலத்தின் பல பொது நூலகங்களும் க்ஷீணித்து வருகின்றன, அமெரிக்க மாநில மற்றும் மைய அரசுகள் நூலகங்களில் முதலீடு செய்வதை அலட்சியம் செய்யத் துவங்கி இருக்கின்றன, இது மிகக் கவலை தருவது என்றும் சொல்கிறது.
அறிக்கையின் தயாரிப்பாளர் தானும், தன் மார்க்சிய நண்பர்களும் துருக்கியின் வங்கிகளைப் பற்றி இப்போது நல்லபிப்பிராயம் கொள்ளத் துவங்கி இருப்பது வினோதமானது ஆனால் துருக்கியின் இன்றைய நிலைமை எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டிருக்கிறது என்று எழுதுகிறார். [ஆனால் நமக்குத் தெரியுமே, மார்க்சியம்= இஸ்லாமிசம் என்கையில் இந்த மார்க்சியர்கள் துருக்கியில் எதையும் எதிர்க்க மாட்டார்களே!]
http://blog.lareviewofbooks.org/essays/istanbuls-libraries-refuge-uncertain-times/
[/stextbox]
[stextbox id=”info” caption=”என்னது, கன்ஃபூசியஸ் இறந்து விட்டாரா?”]
கதைகள் மூலம் சமூக ஆய்வுகளை நடத்துவது என்பது ஒரு அளவில் ஆபத்தான அணுகல். உண்மையே போன்றன கதைகள் என்றாலும் அவை பெருந்திரளளவில் எவை நம்பகமான தகவல்கள் என்று சொல்லத் தக்க காத்திரம் இல்லாதவை. எனவே இந்தச் சுட்டியில் காணும் கட்டுரை தகவல் போலத் தெரிந்தாலும், ஒரு புனைவுக்கான அணுகலையே கொண்டிருக்கிறது என்பது இதன் வழியே சீன, அமெரிக்க, மற்றும் ஜப்பானிய சமூகச் சூழலைக் கணிக்க முயல்வது அத்தனை பலனுள்ள செயலாக இருக்குமா என்பது ஐயம்தான்.
அதே நேரம் பல பண்பாடுகளின் உள்புறத்து இயக்கங்கள், அமைப்புகள் பற்றி இந்தக் கட்டுரை ஒரு கோடி காட்டும் என்று நாம் எடுத்துக் கொள்வது பலனளிக்கலாம்.
இங்கு கலிஃபோர்னியாவின் பெர்க்லி நகரில் உள்ள பல்கலையில் ஒரு வகுப்புக்குப் பாடம் நடத்தும் பேராசிரியர் ஒருவர் தன் அனுபவங்களைக் கதை போலவும், நடப்புக் குறிப்பு போலவும் உருவமைத்து எழுதி இருக்கிறார்.
ஆசிய அமெரிக்கர்கள் திரளாகக் குழுமும் பல அமெரிக்கப் பல்கலைகளில் பெர்க்லி நகரப் பல்கலை ஒரு முக்கிய ஸ்தானம். இங்கு ‘Desire, Sexuality and Gender in Asian American literature’ என்ற தலைப்போடு ஒரு வகுப்பை நடத்துகிறார் இவர். தலைப்பு சுட்டுவது போல வகுப்பு ஆசிய அமெரிக்க இலக்கியத்தில் பால் விருப்பம், பாலடையாளம், பால் பாகுபாடு ஆகியன எப்படிக் கையாளப்படுகின்றன என்பதை விவாதிக்கிறது.
இப்படித் தலைப்பு வைத்தாலே வகுப்பில் படிக்க வருபவர்களில் நிறையப் பேர் தற்பால் விழைவு உள்ளவர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. இவருடைய வகுப்பில் பெருமளவு மாணவர்கள் சீனர். அவர்களில் சீனாவிலிருந்து வரும் ஆசியர்கள் சிலர், அமெரிக்காவில் வளர்ந்த ஆசிய வம்சாவளி மாணவர்கள் சிலர். தவிர ஜப்பானியர், வியத்நாமியர், கொரியர், அரபு அமெரிக்கர் ஆகியோரும் உண்டு. சிறு வகுப்புதான். ஆனால் உலகின் ஒரு குறுக்கு வெட்டுத் துண்டு இங்கு இருக்கிறது. அதே நேரம் கவனக் குவி மையம் ஆசியர்களின் பால் உறவு விருப்பங்களைப் பற்றியதாக இருக்கிறது.
அமெரிக்காவில் வளர்ந்த ஆசியர்களுக்கு சீனாவிலிருந்து வந்த மாணவர்கள்/ ஆசிய மாணவர்கள் போல அல்லாது குடும்பத்தளை அத்தனை சக்தி வாய்ந்ததாக இல்லை. எனினும் எல்லாருக்கும் பொது இடமாக குடும்பங்கள் அவர்களிடம் இருந்து தோல்வியைத் தகர்த்த சாதனை நிறைந்த வாழ்க்கையை எதிர்பார்க்கின்றன என்பது. தவிர அவர்கள் அமெரிக்க மண்ணில் தொடர்ந்து தம் ஆசிய அடையாளத்தையோ, தம் பாலடையாளத்தையோ, தம் பால் உறவு விருப்பங்களையோ அடக்கி வைக்க வேண்டிய நிலையில் இருப்பது போன்றன இதர கட்டுப்பாடுகள்.
பேராசிரியரின் ஒரு முக்கிய உத்தி. மாணவர்களைத் தமது எதிர்காலத் துணை பற்றி அவர்களுக்கு என்ன எதிர்பார்ப்புகள் உண்டு என்று ஒரு பட்டியல் தயாரிக்கச் சொல்கிறார். அவற்றை அவர்களிடமிருந்து வாங்கிக் கொள்கிறார். பிறகு அவர்களின் பெற்றோர்களைத் தொலைபேசியில் அழைத்து பெற்றோர்களின் எதிர்பார்ப்பின் படி மாணவர்களின் துணைகள் எப்படி இருப்பது நல்லது என்று அறியச் சொல்கிறார். அந்தக் குணாம்சங்களைப் பட்டியலிட்டு வாங்கிக் கொள்கிறார். இந்த இரு பட்டியல்கள் பற்றிய தம் கருத்துகளை மாணவர்கள் வகுப்பில் பகிர்கின்றனர்.
மேலும் சில உத்திகள் நிறைந்த நிகழ்வுகளுக்குப் பிறகு அம்மாணவர்கள் தம் பெற்றோர்களையும் பேராசிரியரையும் நேரில் சந்திக்க ஒரு அழைப்பைத் தயார் செய்து தர வேண்டும் என்பதுதான் அந்த வகுப்பின் இறுதிப் பரீட்சை போன்றது. அந்தக் கடிதம் எத்தனை நேர்த்தியான அழைப்பாக இருக்கிறது என்று பார்ப்பது பேராசிரியரின் நோக்கம்.
இந்த இறுதி அழைப்பின் தயாரிப்பு நிலை உருவமைப்புகளை மாணவர்கள் பேராசிரியரிடம் கலந்தாலோசிக்கலாம். அவர்கள் அதைச் செய்கிறார்கள். அது குறித்த தன் உரையாடல்களில் சிலவற்றை நமக்குக் காட்டுகிறார்.
கட்டுரை எளிதில் படிக்கக் கூடியது, கதை போன்றது. படிப்பது பயன் தரும்.
http://blog.lareviewofbooks.org/essays/confucius-dead/
[/stextbox]
[stextbox id=”info” caption=”நில், கவனிக்காதே, பராக்குப் பார்”]
அவதானித்தல் என்ற சொல்லை இலங்கைத் தமிழர் நிறையப் பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் அவர்களின் அரசியல் தாக்கம் அதிகரிக்கவும் அந்தச் சொல் நிறைய தமிழகத்தின் இலக்கியாளர்கள் நடுவே பரவி இருக்கிறது. அவதானித்தல் என்பது ஏனோ கவனித்தல் என்ற சொல்லை விடக் கூர்மையானதாகவும், முழு விழிப்புணர்வு கொண்டதாகவும் பாவிக்கப்படுகிறது. (பாவித்தலும் இலங்கைத் தமிழ் மூலம் தமிழகத்தில் நிறையப் பரவி இருக்கிறது என்றும் தோன்றுகிறது. 🙂 )
அடுத்துக் கொடுக்கப்படும் சுட்டி ஒரு கட்டுரையில் இந்த அவதானிப்பு என்பதை நாம் ஏன் இப்படி கோவில் கட்டிக் கும்பிடுகிறோம் என்று கேட்கிறது? ஏதோ கொஞ்சம் கவனித்து நடந்தால்தான் வாழ்க்கை சீராகச் செல்லும் என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை. ஆனால் ஒவ்வொரு கணத்தையும் இப்படியே முழு அவதானிப்போடு, முழு விழிப்போடு நடத்தணும் என்று அடம் பிடித்தால் அது போகிற ஊருக்கு வழியா? என்று கேட்கிறது கட்டுரை.
மைண்ட்ஃபுல்னெஸ் என்பதை ஒரு வியாபாரப் பொருளாக ஆக்கி அதை வெற்றிகரமாக வாழ்விலக்கு என்று விற்றுக் கொண்டிருக்கிறது மேற்குலகு. எந்த உலகில் எப்படி எல்லாம் மக்களை எதையும் கவனிக்க விடாமல் தொடர்ந்து பிடுங்கி எடுத்து மேன்மேலும் ஜகஜ்ஜாலமாய் நுகர் பொருட்களை உருவாக்கி கொஞ்ச நஞ்சம் சேமிப்பு கூட மக்களிடம் இல்லாதபடி அவர்களைத் தொடர்ந்து நுகர்வாளராக்குவதையே பொருளாதாரத்தின் அச்சாணியாக ஆக்கி இருப்பது இந்த மேற்குலகு. அதே மேற்குலகு, இன்னொரு புறம் மக்களுக்கு இப்படித் தொடர்ந்து வினாடிக்கு வினாடி கவனத்தைச் சிதற விட்டுக் கொண்டே இருந்தால் நீங்கள் உருப்படவே மாட்டீர்கள் என்ற ஒரு பீதியையும் புகட்டி, அந்த ஆபத்திலிருந்து மக்களைத் தானே காப்பாற்றுவதாகவும் நடித்து, அதற்காக மேற்குக்கு எதிரான சமூக/ பண்பாட்டு/ தத்துவ மதிப்பீடுகள் கொண்டதாக அதுவே உருவாக்கி வைத்திருக்கும் ஒரு வைக்கோல் பொம்மை ஆசிய/ யூரோப்பியரல்லாதவர்களின் கருத்துலகிலிருந்து சில முக்கியமான, மிக மிக முக்கியமான, மிகப் பெரிய, ஹ்யூஜான, ஒரு பழக்கத்தை, மனப்பயிற்சியை அவர்களுக்குக் காட்டப் போகிறது என்று பெரும் எதிர்பார்ப்பை எங்கும் கிளப்பி விட்டு, இந்த அவதானிப்பதை அவர்களுக்கு விற்றுக் கொண்டிருக்கிறது.
தன்னை அறி என்று கிழக்கின் தத்துவாள/ யோகிகள் சொன்னாலும் சொன்னார்கள், இந்தத் தன்னை அறிதல் என்பதன் பல வடிவங்களில் மைண்ட்ஃபுல்னெஸ் என்ற ஒரு ‘பயிற்சி’ மேற்கில் சில பத்தாண்டுகளாக ஒரு நுகர் பொருளாக விற்கப்பட்டு வருகிறதா? அதை எப்படி எந்த எதிர்ப்பும் இல்லாது ஏற்றுக் கொண்டே இருக்க முடியும், இல்லையா? அதனால் இப்போது மைண்ட்ஃபுல்னெஸ் என்பது சும்மா உதார், வாழ்வில் நிறைய படைப்பு சக்தியே இப்படி எந்நேரமும் கவனிப்போடு இருப்பதை இலக்காகக் கொள்ளாமல், சுதந்திரமாக மனதை அலைய விடுவதில்தான் வளர்கிறது என்றொரு வாதத்தை முன்வைக்கக் கிளம்பி இருக்கிறார்கள். அதைச் செய்பவர்களுக்கு கவிதை என்ற பத்திரிகை (பொயட்ரி மாகஸீன்) இடம் கொடுத்திருக்கிறது.
அந்தக் கட்டுரை மனதை அலைய விடுங்கள் என்று வாதிடுகிறது. கண்ணதாசனின் பாட்டைப் போல அலையும் மனதை அவரிடம் சொன்னேன் என்று ரொமான்ஸ் செய்யாமல் நேராகவே பேசுகிறது. படித்துப் பாருங்கள்.
https://www.poetryfoundation.org/poetrymagazine/articles/144656/in-search-of-distraction
[/stextbox]
[stextbox id=”info” caption=”சுதந்திரமும் ஒற்றுமையும்”]
மேற்கு என்று ஒரு திசை உண்டு. அது இந்தியாவின் நிலப்பரப்பைத் தாண்டி விட்டாலே வேறு ஏதேதோ குணாதிசயங்களெல்லாம் கொண்டதாக ஆகி விடுகிறது. குளிர் கூடக் கூட அங்கு வாழும் மக்களுக்கும் நமக்கும் நிறைய நிறைய வேறுபாடுகள் வந்து விடுகிறதா என்று நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது. இதை நிலப்பரப்பு அடிப்படை வாதம் என்று நம்ம ஊர் இடதுசாரிகள் தர்ம அடி போட ஓடி வருவார்கள். (Geographical determinism?) தர்ம அடி போடுவதைத் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர்களின் தொழில் நேர்த்தி நமக்கு வராது என்பதால் அதற்கு மேல் அந்த யோசனையைத் தொடரவில்லை.
இப்படி ஏன் யோசனை வந்தது என்றால், காடலோனியா என்ற நிலப்பகுதியின் மக்கள் சமீபத்தில் பெரீய்ய குழப்பத்தில் தாமும் ஆழ்ந்து, பிற யூரோப்பியர்களையும் ஆழ்த்தியதைப் பார்த்ததும் அப்படி யோசிக்கத் தோன்றியது. கொஞ்ச பத்தாண்டுகள் முன்பு இந்தியாவை உடைத்து, பாகிஸ்தானாக உருவாக்க ரொம்பவே மகிழ்ச்சியோடு திரும்பிப் போனார்கள் பிரிட்டிஷ்காரர்கள். அதற்கப்புறம் கிருஸ்தவ முகமூடியோடு இந்தியாவுக்குள் எத்தனையோ வழிகளில் பிரிவினை வாதம் பரப்பப்படுகிறது. வடகிழக்குப் பகுதிகளில் எத்தனைக்குக் கிருஸ்தவம் பரவியதோ அத்தனைக்குப் பிரிவினை வாதமும் வளர்ந்தது. அவர்களின் ‘தலைவர்கள்’ வழக்கமாகப் பதுங்கும் இடம் லண்டனாகவோ, டொராண்டோவாகவோ இருக்கும். இல்லை நார்வேயில் பதுங்குவார்கள். இந்திய அரசு அந்தப் பிரிவினை வாதப் பிரச்சாரத்தை அந்நாடுகள் தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டால், கருத்து சுதந்திரத்தை நாங்கள் கட்டுப்படுத்தவியலாது என்று பெரிய நாடகமே போடுவார்கள் வெள்ளை நாடுகள்.
அங்கிருந்து பறந்த விமானங்களில் குண்டு வைத்து பல நூறு பேரைக் கொன்ற பிரிவினை வாதிகளைக் கூட இந்தியாவுக்கு அனுப்ப மறுத்தது கானடா. மேற்குக்குள் தாக்குதல்கள் நடக்கத் துவங்கிய பிறகு சுருதி மாறுகிறது. பற்பல மேலை நகரங்களில் இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் கொலைகாரர்கள் வருடந்தோறும் நடத்தும் பற்பல தாக்குதல்களுக்குப் பிறகு இப்போது மேற்கின் ‘மனித நேயமும்’ , ‘மனித உரிமைப் பாதுகாவலன்’ என்ற முகமூடியும் கிழிந்து சிதைந்து தொங்குகின்றன. அகதிகளை உள்ளே விட முடியாது என்று பற்பல நாடுகள் தீர்மானம் போடுகின்றன, சட்டங்கள் நிறைவேற்ற பாராளுமன்றங்களில் பெருமுயற்சி நடக்கிறது. படகுகளில் வந்து குவியும் அகதிகளைத் திரும்பக் கடலுக்கே அனுப்பவும் முயற்சிகள் உண்டு.
நாகாக்கள், மீஸோக்கள், சீக்கியர் என்று சில பிரிவினை வாதக் குழுக்களுக்கு லண்டனில் பல பத்தாண்டுகள் அங்கீகாரமும், இடமும் இருந்தது நம்மில் பலருக்கு நினைவிருக்கலாம்.
https://www.thedailybeast.com/from-the-confederacy-to-catalonia-the-arrogance-of-secession
[/stextbox]