புது தில்லியின் மைனா

ஒரு கோணத்தில் உலகம் சுருங்கித்தான் போயிருக்கிறது. மொத்த உலகிலும் வெப்ப தட்ப நிலை காலச் சுழற்சியோடு நம்பத்தக்க விதங்களில் மாறி வருவது என்பது கேள்விக்குரியதாகி இருக்கிறது. இது மனிதரின் பற்பல செயல்களின் கூட்டுத் தாக்கத்தால் மாறியது என்று ஒரு சாராரும், இல்லை இதுவும் தற்செயல்/ இயற்கையான மாறுதல்தான் என்றும் கச்சம் கட்டிக் கொண்டு சண்டைக்கு நிற்கிறார்கள். அறிவியலாளர்களோ இந்த மாறுதல் மனிதர் நடவடிக்கைகளின் கூட்டுத் தாக்கமே என்று அனேகமாக ஒரு கட்சியாக நிற்பதாகவும் தெரிகிறது. இந்தக் கட்சி கட்டலில் உண்மை எது, பொய் எது என்பதெல்லாம் சரியாகப் புலப்படாத மசமசப்பாக ஆகிறது. புது தில்லியின் குடிமக்களுக்கு எது நல்ல காற்று எது வாழத்தக்க சூழல் என்பதே தெரியாத மாதிரி ஆகி விட்டதே, அதே போல கருத்துலகிலும் எது மாசு, எது தெளிவு என்பது தெரியாத குழப்படி நிலவுகிறது.

குழப்படிக்குப் பல காரணங்கள். உலகை வெறும் உற்பத்தி சாலை, நுகர்வுக் களம் என்று ஆக்கிப் பெரும் நிதியைக் குவித்துக் கொள்ளத் துடிக்கும் நிறுவனங்களும், அவற்றின் மேலாளர்களும் ஒரு புறமும், தம் வாழ்வை நல்ல முறையில் வாழ்ந்து ஆரோக்கியமாக இருந்து முடிக்க விரும்பும் சாதாரண மக்கள் மறுபுறமும், மூன்றாவது புறம் நட்சத்திரங்களுக்கே பயணம் போகுமளவு மனிதரின் அறிவு விகாசம், சமூகக் கட்டுப்பாடு, வாழ்வு முறை ஆகியனவற்றை அடியோடு மாற்றி பெரும் கனவுச் சமுதாயமாக ஆக்க விரும்பும் கருத்தியல் போராளிகளுமாக இந்தப் போர் பல தளங்களில் நடக்கிறது.

சமீபத்திய களம் அரசியல் அதிகாரப் பரப்பிலும், அந்த அரசியல் அதிகாரத்தை இத்தனை காலம் நம்பி இருந்த அறிவியலாளர்களின் கருத்துப் பரப்பிலும் உள்ள கருத்து வேறுபாடுகள். இந்தக் களத்தின் இன்னொரு பரிமாணம் சமூக ஊடகங்களும், கருத்து ஊடகங்களுமாக பொதுஜன அபிப்பிராயத்தை உருவாக்கும் பரப்பு.

இணைத்திருக்கும் ஒரு செய்தியில் இந்த குறுக்கு வெட்டுப் பரப்புகளின் மோதலும், கருத்துத் தாக்குதல்களும், அதிகாரப் பறிப்புக்கான முயற்சிகளும், அதிகாரத்தைத் தம் விருப்பத்துக்கு வளைக்கும் முயற்சிகளும் என்று பல கோணங்கள் புலப்படுகின்றன. தில்லியில் காற்று மாசுபட்டிருக்கிறதா இல்லையா என்றால் அதை யாரும் மறுப்பதில்லை. ஆனால் இந்த மாசுபடலால் மக்களின் வாழ்வு அழிக்கப்படுமா, இல்லை மனிதர் இதையும் சகித்து வாழக் கற்று விடுவார்களா என்பது ஒரு கேள்வி. இன்னொரு கேள்வி, இந்த வகை மாசுபடலை நாம் சகிக்க வேண்டுமா, ஏன் என்பது. மேலும் சில கேள்விகள், இந்த மாசுபடலால் யாருக்கு என்ன பயன்? இது இல்லாமலே பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாதா? அந்த சாத்தியக் கூறுகளைப் பற்றிப் பேசாமல் இதைத் தவிர்க்க முடியாது என்றே ஏன் அதிகாரத்தில் உள்ளவர்கள் சாதிக்கிறார்கள் என்ற கேள்வி. இன்று பெரும் வளத்தை அடைந்துள்ள நாடுகள் இப்போது சுற்றுப்புறத் தூய்மை பற்றிப் பேசுவது பயங்கரமான பொய்மை, அவை ஒவ்வொன்றும் தம் வளர்ச்சி வேகம் மிகையாக இருந்த காலங்களில் இப்படிப்பட்ட மாசுபடல் கட்டத்தில் ஆழ்ந்து வளர்ந்த பிறகுதான் இன்று தூய்மையைப் பெற்றன, அதையே இன்று வளர முயலும் நாடுகள் சந்திக்கும்போது அவர்களுக்கு உபதேசம் செய்ய இந்த நாடுகளுக்கு ஒரு அருகதையும் இல்லை என்று ஒரு கட்சி பேசுகிறது.

எது உண்மை? எது பொய்? நாம் ஏராளமான தகவல்களைச் சேகரிப்பதும், அவற்றை கட்சி கட்டிக் கொண்டு நிற்பதை முயலாமல், மக்களின் நலம், வாழ்க்கைக்கான ஆதாயம் ஆகியனவற்றை மட்டுமே கணக்கில் கொண்டு அலசுவதுமே நம்மை இந்தக் குழப்பப் புகையிலிருந்து வெளியே இட்டுச் செல்லும். அதைச் செய்யக் கூடியவர்களும், அப்படி நம்பகமான நிலையில் இருப்பவர்களும் யார் என்பதுதான் கேள்வி.

புகைப்படத் தொகுப்பு: The week in wildlife – in pictures | Environment | The Guardian
செய்தி: ‘Modern air is too clean’: the rise of air pollution denial