புதரை அடுக்கும் கலை – (பாகம்-2)

என்றுமே அப்போதைய காலத்தின் உலகத்துக்குப் பொருத்தமில்லாதவராகவே இருக்கிறவர், நாளாவட்டத்தில் இன்னும் கூடுதலாகவே பொருத்தமில்லாது ஆகிக் கொண்டும் வருகிறவர் என்றாலும், ஆன்டி ஓரளவும், தவிர்க்கவியலாதபடியும், அப்போதைய காலத்தின் பிராணிதான். அதை எதிர்த்து நிற்கிற அவருடைய குணத்தாலேயே கூட, அதனால் கைப்பற்றப்பட்டுள்ள அவர், காலத்தின் எளிமைப்படுத்தப்பட்ட அரசியலின் கடும் விஷத்தால் மிக அதிகமாக இடமாகவோ, வலமாகவோ இழுக்கப்பட்டு, அதன் வசீகரங்கள் கொண்ட பொருளாதாரத்தால் மிக அதிகமாக மயக்கப்பட்ட்டு, அத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறவர். அனேக தடவைகள், தான் வைத்துக் கொண்டிருக்க வேண்டிய பணத்தைச் செலவழித்து விட்டதாக அவர் உணர்ந்திருக்கிறார். அனேகத் தடவைகள் தனக்குத் தேவை இல்லை என்று அவருக்கே தெரிந்த பொருட்களைக் கூட வாங்கும்படி அவர் தூண்டப்பட்டிருக்கிறார்; கட்டளைக்கு உடனே படியும் பயிற்சி பெற்ற நாயைப் போல, எதெல்லாம் புதிதோ அவற்றை அளவு கடந்த விலை கொடுத்து வாங்கும் இதர நுகர்வோரோடு சேராமல் தடுத்து, அவரை விலகி நிற்கச் செய்தது அவர் ஒரு தடவைக்கு இருதடவையாக யோசித்ததுதான். எந்த முன்காலத்து ஆவிகளுக்குத் தான் தெரியும்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ, அவர்களுக்குத் தெரியாதபடி, அந்தத் திரண்ட கும்பல்களில் கலந்தால் மறைந்து விடுவோம் என்பது அவருக்குத் தெரியும். விழிப்புணர்வைக் கொண்டும், பயத்தாலும் தன்னை அவர் மீட்டுக் கொள்கிறார். மேலும் அப்போது தவிர்க்க முடியாதபடி, கொஞ்ச காலம் வாலிப வேகத்தோடும், கட்டு மீறியபடி செலவழிக்க முனைந்தவனுமாக இருந்த தன் மகன் ரூபெனுக்கு டானி ப்ராஞ்ச் கண்டிப்போடு அறிவுறுத்தியதைக் கேட்பார், “செல்லப் பையா, கடைசில உனக்குப் புரியும். அந்த நாய்ப்பயல்கள் உன்னோட பணத்தைப் பறிக்காமப் பாத்துக்கணும்.”

இப்படி நினைவு கூர்வதில் பல நேரம் அவர் குதூகலம் கொள்வார். வாய் விட்டுச் சிரிப்பார். அந்தச் சிரிப்போ, இறந்தவர்களுக்கே உரிய முழுமையும், உயர் மதிப்பும் குறித்த மரியாதையுணர்வும், அவர்களை இழந்தது பற்றிய புரிதலோடு வரும் வருத்தமும் கலந்து, சிக்கலானதாக இருக்கும்.

2

நம் நண்பர்களை விட அதிகம் வாழ்ந்திருப்பது, சிறிதும் மகிழ்ச்சி தராதது, அதனளவில் அப்படி ஒன்றும் அதிகச் சிக்கலானதல்ல அது. கால ஓட்டம் இழப்புகளைக் கொணர்கிறது, மேலும் நாம் காலத்துடன் இருக்கையில், அதுவே அதிர்ச்சியையும், வியப்பையும் களைந்து விடுகிறது, புது இழப்புகளையும் தினசரி வாழ்வின் அமைப்புகளில் கொணர்ந்து இணைத்து விடுகிறது, நம்மை அவற்றைத் தாண்டிச் சுமந்து செல்கிறது. ஆனால் ஆன்டி தன் வேலிகளின் வாழ்நாளையும் தாண்டி வாழத் தொடங்கி இருக்கிறார், இந்த உலகின் இன்றைய காலகட்டத்தில் அது நிஜமாக ஒரு குழப்படிதான்.

கற்களாலான வேலிகளின் காலத்தை அவர் தன் வாழ்நாள் மொத்தத்திலும் பார்க்கவில்லை. அவர் பிறக்கும்போது ஒன்றிரண்டு இன்னமும் பயன்பாட்டில் இருந்தன, ஆனால் அவை தரையடிப் பனியால் உப்பி மேலெழுந்த மண்ணால் மூடப்பட்டும், சிதிலமடைந்தும் காணப்பட்டன.  அவற்றைச் செப்பனிடுவதற்கான திறமையோ, அதற்கான நேரமோ யாரிடமும் இப்போது இல்லை. அவற்றுக்குப் பதிலாக கம்பிகள் வேலி போடப் பயன்பட்டன. உதிர்ந்த பாறைகள் அப்படியே விடப்பட்டன, அல்லது வழியை விட்டு விலக்கி ஒரு குவியலாகக் குவித்து வைக்கப்பட்டும் அல்லது தட்டையாக உடைக்கப்பட்டு சாலை போடவும் பயன்படுத்தப்பட்டன. அதனால் வளர்ந்த பிறகு அவர் கம்பிகளால் வேலி போடக் கற்றுக் கொண்டார்.

ஃப்ளோராவும் அவரும் ஹார்ஃபோர்ட் இடத்தில் குடியமர்ந்த பின், அவர் எல்லாப் பழைய வேலிகளையும் புதுப்பித்தார், சிலவற்றைப் புதிதாகச் சேர்த்தார், இதற்குச் சில நேரம் பிறர் உதவி இருந்தது, ஆனால் அனேகமாகத் தனியாகவே செய்தார். பின் வருடங்கள் கடக்கையில், அவர் வேலிகளைச் செப்பனிட்டார், தான் நிறுவிய சிலவற்றையே மறுபடி நிறுவினார். ஆனால் அப்போது அவருக்கு இன்னமும் உடல் வலு இருந்தது, பின்னர் வெகு காலம் அவருக்கு உதவி தேவைப்பட்ட போது, நண்பர்களோ, அவருடைய வாரிசுகளோ உதவிக்கு இருந்தனர்.

ஆனால் இப்போது தன் முதுமைக் காலத்தில், அவருக்கு ஒரு வேலியை எப்படி நிறுவுவது என்பது என்னவோ தெரிந்துதான் இருந்தது, ஆனால் அதைச் செய்ய அவசியமாயிருக்கிற நாள் பூராவும் நீடிக்கும் வலுவோ, ஊக்கமோ இப்போது இல்லை. போர்ட் வில்லியத்தில் ஒரு வேலியை நிறுவத் தெரிந்த, அல்லது நிறுவுவதில் உதவி செய்யத் தெரிந்த தலைமுறையினர் எல்லாருமே இப்போது அவரைப் போலவே க்ஷீணிப்பு நிலையில் இருக்கின்றார் அல்லது மரித்துப் போய் விட்டனர். ஆன்டிக்குத் தெரிந்த எல்லாரிலும் ஒரே ஒருவரைத்தான் வேலியைக் கட்ட, அவர் உரிமையோடு உதவிக்கு அழைக்க முடியும், அவர் ஆன்டியின் மகன், மார்ஸ். ஆனால் மார்ஸிற்கே அவருடைய பண்ணையைப் பராமரிக்க வேண்டி இருக்கிறது, அதற்கு வேண்டிய உதவியாளர்கள் அவருக்கே கிட்டுவதில்லை. அவர் அருகில்தான் குடியிருக்கிறார், கவனித்துக் கொள்கிறார், எல்லாம் செய்யத் தெரிந்தவர், தேவைப்பட்டபோது வந்து உதவவும் செய்கிறார் என்ற போதும், ஆன்டிக்கு ஒரு பெரிய வேலைத் திட்டமான வேலி நிறுவுதலைச் செய்ய அவரைக் கூப்பிட மனதில்லை. ப்ராஞ்சு குடும்பத்தினர் எவரையும் கூப்பிடுவதில் அவருக்கு இன்னமுமே கூடுதலாகத் தயக்கம் இருக்கிறது. அவர் கேட்டால் வந்து உதவ வேண்டிய நிலை அவர்களுக்கு எழும் என்பதும், அவர்களுக்கு வசதிப்பட்டதோ இல்லையோ அவர்கள் வந்து உதவுவார்கள் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது.

அதனால், சற்று நீண்ட தூரத்துக்கு கட்டப்பட்டிருந்த பழைய முள்கம்பியை, வெட்டி, இறுக்கி, மறுபடி கட்டைகளைக் கொடுத்து நிறுத்தியபின், அதனுடைய வலுவும், அவருடைய வலுவும் கிட்டத் தட்ட முடிகிற நிலைக்கு வந்திருந்தன. அப்போது சுற்றுவட்டாரத்தில் இந்த வேலியை மறுபடி நிறுவ யாராவது வேலையாட்கள் கிடைப்பார்களா அமர்த்த முடியுமா என்று கேட்கத் தொடங்கினார். அவருடைய ஒரு நண்பர், தன் நண்பர் ஒருவரின் பெயரைக் கொடுத்திருந்தார், அந்த நபர் ஒரு பெயரைக் கொடுத்தார். ஷாட், ஷாட்ராக் என்ற பெயரின் சுருக்கம், கடைசிப் பெயர் ஹார்பிஸன்.

ஷாட் ஹார்பிஸன், எல்வில் என்ற ஊரிலிருந்து வருகிற சுயத் தொழில் முனைபவர். கொஞ்சம் விவசாயம், கொஞ்சம் தச்சு வேலை, அப்புறம் யார் என்ன வேலை செய்யச் சொன்னாலும் செய்து கொடுக்க வருவார், வேலி நிறுவுவதும் உண்டு, அவரிடம் வேலையாட்கள் குழு ஒன்று இருந்தது, இந்த வேலையைச் செய்யத் தேவையான கருவிகளும் இருந்தன. ஆன்டி மிஸ்டர் ஹார்பிஸனைத் தொலைபேசியில் அழைத்தார், தனக்கு என்ன தேவை என்று தெரிவித்தார். அவருக்கு விருப்பம் இருந்ததா?

“நிச்சயமாச் செய்வேன்,” மிஸ்டர் ஹார்பிஸன் சொன்னார். “நாளைக் காலைல பதினோரு மணிக்கு வந்துர்றேன். நீங்க எங்கே இருக்கீங்க?”

ஆன்டி அவரிடம் சொன்னார், தன் இடத்தை எப்படிக் கண்டு பிடிப்பது என்றும் விளக்கினார்.

அடுத்த நாள் காலை பதினோரு மணிக்கு மிஸ்டர் ஹார்பிஸனின் பணி வண்டி ஆன்டியின் வீட்டு முன் இருந்த கார் நிறுத்துமிடத்தில் நின்றிருந்தது. அவர் தாமதமாக வந்திருந்தாலோ, அல்லது வராமலே இருந்தாலோ கூட ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார், ஆனால் நிமிஷக் கணக்கில் கூட மிகச் சரியாகச் சொன்ன நேரத்துக்கு அவர் வந்திருந்தார். அவருடைய நேரம் தவறாமைக்கு ஆன்டி நன்றி சொன்னார், அப்போதிலிருந்து அவர்களின் தொடர்பு முடிவுக்கு வரும் வரையில் அவருக்கு நன்றி சொல்ல வேறு எந்தக் காரணமும் எழவில்லை. மிஸ்டர் ஹார்பிஸன் மரியாதையோடு தன் கார் ஹார்னை ஒரு தடவை மெலிதாக ஒலித்தார். அவர்கள் இருவரும் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டனர், கை குலுக்கினர்.

மிஸ்டர் ஹார்பிஸன் ஆன்டியின் வலது கை இல்லை என்பதை அதிகம் உற்று நோக்காமல், தன் இடது கையை அவரிடம் நீட்டி இருந்தார். “என்னை ஷாட் என்று அழையுங்கள்.”

“சரிதான். அப்ப நான் ஆன்டி.”

அவர்கள் வேலியைப் பார்வையிட நடந்து போனார்கள். ஷாடுக்கு அது எங்கே துவங்குகிறது, எங்கே முடிகிறது என்று ஆன்டி காட்டினார். பழைய மரத் தூண்கள் எங்கெல்லாம் இன்னும் நல்ல நிலையில் இருக்கின்றன, எதெல்லாம் மாற்றப்பட வேண்டும் என்று ஆன்டி சுட்டினார். பழைய வேலியை எடுத்து விட்டு, புது வேலி நிறுவப்படுமுன்னர், எக்கச் சக்கமாகச் சேர்ந்திருந்த புதர், மேலும் பல மரங்களை அகற்ற வேண்டி இருக்கும் என்பதை அவர்கள் கவனித்துக் கொண்டனர். அரை டஜன் இளம் கருவாலி மற்றும் வாதுமை மரங்கள் வெட்டப்படக் கூடாதவை என்பதைக் கவனித்தபோது ஷாட் தலையசைத்து ஏற்றார். ஷாட்டிடம் புதர்களும், வெட்டப்படும் மரக்கிளைகளும் சீரான குவியல்களாக அடுக்கப்பட வேண்டும் என்றும், அவை அடிப்புறங்கள் ஒரு சேர்த்துக் கட்டப்பட்டு எடுப்பதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்றும் ஆன்டி தெரிவித்தார். பழைய கம்பிகள் சுருட்டப்பட்டு, சுருள்கள் அடுக்கி வைக்கப்பட வேண்டும். ஆன்டி தான் விரும்புகிற வகை வேலியை வருணித்தார்: ஐந்து இழைகள் முள் கம்பிகள், ஆடுகளைத் திருப்பும் அளவுதான் இடைவெளி இருக்க வேண்டும். அங்கு மூலையில் ஒரு புதுத் தூண் இருக்க வேண்டும், அது எப்படி முட்டுக் கொடுத்து நிறுவப்பட வேண்டும் என்று ஆன்டி சொன்னார்.

ஷாட் இவற்றைப் புரிந்து கொண்டதாகவும், மெச்சுவதாகவுமே காட்டிக் கொண்டார்:

“ஆஹாங்.. தெரிஞ்சுகிட்டேன்.”

“சரி சார், நீங்க என்ன சொல்றீங்கன்னு பார்த்துகிட்டேன்.”

“ஆமா.. அதான்… இதொண்ணும் தொந்தரவு இல்லெ.”

என்ன விலை என்று ஒரு உடன்படிக்கைக்கு வந்தார்கள். ரொம்ப அதிகம், என்று ஆன்டி நினைத்தார். ஆனால் அவர் இதை எதிர்பார்த்திருந்தார். அதை அதிகம் பொருட்படுத்தக் கூடாது என்று ஏற்கனவே தீர்மானித்திருந்தார்.

“வேணுங்கற கம்பி, அப்புறம் என்னவெல்லாம் வேணுமோ அதை எல்லாம் போர்ட் வில்லியம்ல மெல் ஹண்ட்லி கடைல வாங்கிக்கிடுங்க. உங்களை அவர் எதிர்பார்த்திருப்பார், என்ன செலவாகுறதோ அதை என் கிட்டேருந்து வாங்கிக்கிடுவார்.”

ஷாட் அப்போது கணக்குப் போட்டுக் கொண்டு, சட்டைப் பையிலிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பென்ஸிலையும் எடுத்தார், என்னென்ன பொருட்கள் வாங்க வேண்டுமென்று ஒரு பட்டியல் போட்டார். அந்தப் பட்டியலை ஆன்டியிடம் படித்துக் காட்டினார், அவரைப் பார்த்தார்.

“எல்லாம் சரிதான்.” என்றார் ஆன்டி.

உடனே, பழைய நாட்களின் ஆவிகளின் கூட்டுக் குழுவினரால் அறிவுறுத்தப்பட்டு, ஷாட்டின் கண்ணை நேராக நோக்கியபடி சொன்னார், “நான் உங்களை இதைச் செய்ய அழைத்திருக்கிறேன் என்றால் அது நீங்க இதைச் சரியாச் செய்வீங்கங்கிற எண்ணத்தாலெதான். எனக்கு மோசமான குழப்படியா ஏதாவது பார்த்தால் வெறுப்பு வரும், உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்னு நான் நம்பறேன்.”

“ஆமா, நீங்க சொல்றதுல எனக்கும் உடன்பாடுதான். ஒண்ணைச் சரியாச் செய்ய அதிகக் கஷ்டமிராது, தப்பாச் செய்யறதுதான் பெரிய கஷ்டம்.”

அவர்கள் கை குலுக்கினார்கள்.

“செவ்வாய்க்கிழமை அடுத்த வாரம்,” என்றார் ஷாட். “சீக்கிரமாவே.”

“நான் உங்களை எதிர்பார்க்கிறேன்.”

 

செவ்வாய்க் கிழமை, சீக்கிரமாக ஒன்றுமில்லை, சக்தி வாய்ந்ததொரு பெரிய சிவப்பு பிக் அப் ட்ரக், பின்புறத்துத் திறந்த பகுதியில் கருவிகளைக் கொள்ளக் கூடிய பெரியதொரு உலோகப் பெட்டியோடு, அந்தச் சிறு பாதையில் உறுமியபடி வந்து அவருடைய வண்டிகளை நிறுத்தும் பாதையில் நின்றது. அந்த ட்ரக்கின் பின்னால் “குட்டைப் பையன்” என்று அழைக்கப்படும் பெரிய இழுவண்டி இணைக்கப்பட்டிருந்தது, அதில் ஒரு பெரிய சிவப்பு ட்ராக்டர் நின்று கொண்டிருந்தது.

பெரிய உருவுள்ள, மென்மையாகப் பேசுகிற, கொஞ்சம் தூக்கக் கலக்கத்தொடு இருப்பதாகத் தெரிந்த ஓர் இளைஞன் ட்ரக்கின் ஓட்டுநர் இருக்கையிலிருந்து இறங்கி, ஆன்டியைப் பார்க்கத் திரும்பினான்.

ஆன்டி அந்த இளைஞனின் தோற்றத்தில் தனக்கிருந்த அதிருப்தியைக் காட்டிக் கொள்ளாமல் இருக்க பெரிய புன்னகை ஒன்று புரிந்தார். “நீங்க ஆன்டி காட்லெட்டைத் தேடறீங்கன்னா, அது நான் தான்.” அவர் தன் கையை நீட்டினார்.

அதை என்ன செய்வது என்று தீர்மானிப்பதில் சில சங்கடமான கணங்களைக் கழித்த அந்த இளைஞன், மேலும் சில கணங்கள் கழித்து, பிறகு தன் வலது கையை ஒரு வாறாக மேல்புறம் கீழாகத் திருப்பியபடி நீட்டினான், ஆன்டியை அதைக் குலுக்க அனுமதித்தான்.

“என் பெயர் நப்,” இளைஞன் சொன்னான்.

“ஷாட் ஹார்பிஸனோட மகனா நீங்க?”

“அப்படித்தான் இருக்கணும்!” நப் சொன்னான், அது தெளிவாகத் தெரிகிற ஒன்று என்பதைப் போல.

அந்த சமயம், ட்ரக்கின் முன்புறத்திலிருந்து வேறு மூன்று நபர்கள் வெளியே வந்தனர். நப்பின் உடலில் இருந்த அதிக பட்ச சதையை அவர்களிடையே சமமாகப் பிரித்துக் கொடுத்தால் அவர்களின் தோற்றம் நிறைய முன்னேறி இருக்கும். தேய்மானத்தால் மெலிந்து போயிருப்பதாகத் தெரிகிற அளவு ஒல்லியாக இருந்தார்கள். வாரத்தில் நான்கைந்து நாட்களைச் சனிக்கிழமை போலப் பாவித்துப் பல வாரங்களாக அப்படிக் கழித்தவர்களாகத் தெரிந்தார்கள். அவர்களிடையே பற்கள் முழுதாக இருந்தவர்களோ, சரியாக இணைந்து இருந்த கண்களும் கொண்டவர்கள் யாரும் இல்லை.

ஆன்டி தன் கையைப் பைக்குள் இட்டுக் கொண்டார். “எல்லாருக்கும், நான் ஆன்டி காட்லெட்.”

“நான் ஜூனியர்,” என்றார் முதல் நபர்.

“நான் ஜூனியர்,” என்றார் இரண்டாம் நபர், இந்த உடன் நிகழ்வைக் கவனித்து ஆன்டியிடம் எழப் போகிற வியப்பை நிச்சயமாக எதிர்பார்த்தவரெனத் தெரிந்தது.

“இரட்டையர்கள்!” ஆன்டி சொன்னார், அந்த ஜூனியர்கள் இதைக் கேட்டுச் சிரித்தார்கள்.

மூன்றாம் நபர் சிரிக்கவும் இல்லை, புன்னகைக்கவும் இல்லை. அவர் சொன்னார், “க்ளே.”

ஆன்டி நப்பை நோக்கித் திரும்பினார். “உங்க அப்பா எங்கே?”

“கம்பியயும் மத்ததையும் கொண்டு வர்றார்.”

அவர்கள் ட்ராக்டரைக் கீழிறக்கினார்கள், அந்த பின் தொடர் வண்டியை எங்கே நிறுத்துவது என்று நப்பிடம் ஆன்டி காட்டினார். ஆன்டி கதவுகளைத் திறந்து வழியைச் சுட்டியதும், நப் ட்ரக்கை ஓட்டியபடியும், க்ளே ட்ராக்டரை ஓட்டியபடியும், அவர்கள் மேட்டின் மேலேறி வேலையைத் துவக்கப் போனார்கள்.

கனரக எந்திரங்களைப் பார்த்து ஆன்டிக்கு வெறுப்பு உண்டு. பெரிய ட்ரக்கோ, ட்ராக்டரோ அவருடைய இடத்துக்கு வரும்போது, அந்த வெறுப்பு அவருக்குள் எங்கேயோ அவிழ்ந்த வலியாகவோ அல்லது அவரைச் சுற்றிய காற்றிலோ இருந்தது. அந்த ட்ரக்கையும், ட்ராக்டரையும் அவர் எதிர்பார்த்திருந்தார், அதனால் அவற்றைப் பொறுத்துக் கொண்டிருந்தார், ஆனால் அவை செயல்திறமை உள்ள வேலையாட்களுடன் வரும் என்று எதிர்பார்ப்புக்கு அவர் ஆட்பட்டிருந்தார்.

அவர்கள் வேலியோரம் போய் கீழிறங்கியதும், நப்பிடம் அவர் சொன்னார், “உங்க அப்பா நாம் இங்கே என்ன செய்யப் போகிறோம் என்று சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன்!”

“அப்படித்தான் இருக்கும்!”

ஆனால் ஒருவேளை செயல்திறன் உள்ளவராக இருக்கக் கூடிய ஷாட், இன்னமும் வரவில்லை. இது வரையும் அது ஒரு பிரச்சினையாக ஆகவில்லை, ஏனெனில் அந்த வேலி வரம்பு சுத்தப்படுத்தப்பட வேண்டும், பழைய கம்பிகள் அகற்றப்பட வேண்டும், அதன் பிறகுதான் புதுப் பொருட்கள் தேவைப்படும்.

ஆன்டி நப்பிடம் அவருடைய அப்பாவிடம் காட்டிய எல்லாவற்றையும் காட்டினார். “இப்ப பாத்தீங்க இல்லை, என்னென்ன செய்யணுமின்னு?”

“அப்படித்தான் வச்சுக்கிடணும்!”

இப்படி கொளகொளத்த உடலைக் கொண்ட இந்த இளைஞனின் சொல் வீச்சு அப்படி மூன்றே சொற்களுடன் நின்றிருந்தாலும், அதில் தவிர்க்கவியலாதபடி அறிவுத் திறனில் மேம்பட்டது போன்ற வாடை இருந்தததைக் கண்டு தனக்கு எழும் வெறுப்பை இதற்குள் ஆன்டி கவனமாகக் கட்டுப்படுத்தி வைக்க ஆரம்பித்திருந்தார்.

அந்த இரண்டு ஜூனியர்களும், க்ளேயும் ட்ரக்கிலிருந்து கருவிகளைக் கீழிறக்கத் துவங்கி இருந்தனர்.

ஆன்டிக்கு அன்று காலை அவருடைய வேலை காத்திருந்தது. தீர்மானத்தோடு, வேலிக்கான வேலையை நப்பிடமும் அவருடைய குழுவினரிடமும் முற்றிலும் விட்டு விட்டு அவர் நடந்து அப்பால் போய் விட்டார். ஆனால் ஏதோ அச்சானியமாக நடக்கப் போகிறதென்ற உள்ளுணர்வைச் சிறு வலி போலத் தன்னோடு சுமந்து சென்றார், அந்தச் சரிவில் அவருடைய காலடிகள் நிச்சயமில்லாதிருந்தன, ஏதோ சேற்றின் மீது நடப்பது போல.

அவர் திரும்பிப் போன போது, ஷாட் பொருட்களோடு வந்திருந்தார், அவை இன்னும் கீழிறக்கப்படவில்லை, அவரும் அவருடைய குழுவினரும், வேலி வரிசையில் நடு தூரத்தில் இருந்த மரத்து நிழலில் அமர்ந்து பகலுணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அங்கிருந்து அன்று காலையில் அவர்கள் செய்திருந்த வேலைகளின் பலன் ஆன்டிக்குத் தெரிந்தது. புதரெல்லாம், அவர் கேட்டுக் கொண்டபடி சீராக அடுக்கப்படாமல், தாறுமாறாக வீசப்பட்டிருந்தது. பழைய கம்பிகளையும் அவர்கள் சுருட்டியோ அல்லது கையளவு உருண்டைகளாகக் கசக்கியோ வீசி எறிந்திருந்தனர். பழைய முள் கம்பிகளை மட்டுமல்லாது, அதற்கப்பால் சுமார் இரு நூறு அடி போலிருந்த நல்ல நிலையிலிருந்த பின்னலான கம்பிகளையும் கோணல்மாணலாகப் பிய்த்து இருந்தனர், இனி அவை மறுபடி பொருத்தப்பட முடியாத நிலையில் இருந்தன. எல்லாமே தெரிந்தவனான நப் வேலையைத் துவங்குமுன் அவர்களிடம் என்ன செய்ய வேண்டுமெனத் தெரிவிக்க மறந்து விட்டிருந்தானா? அவன் தூங்கி விட்டிருந்தானா? அவனுடைய அற்புதமான பிக் அப் ட்ரக்கை ஓட்டும்போதுதான் விழித்துக் கொண்டிருப்பானா?

தன் கண்களை நம்ப வேண்டிய நிலைக்கு வந்த ஆன்டி, திரும்பி ஷாட்டை நோக்கினார், ஷாட் முற்றிலும் கபடற்று அவரைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஏதாவது சொல்ல வேண்டுமென்று மிக்க உந்தலில் இருந்த ஆன்டியால் எதையும் யோசிக்க முடியவில்லை.

நுட்பத்தை ஆள்பவனான நப்தான் முதலில் பேசினான். “அந்த நல்ல கம்பியை எல்லாம் பிய்ப்பது புத்திசாலித்தனம் இல்லை.” அவனுடைய தொனி திருத்தும் நோக்கம் கொண்டிருந்தது, சொல்லிக் கொடுப்பது போலக் கூட இருந்தது, அந்த புத்தியில்லாத்தனம் ஆன்டியுடையது என்று சுட்டுவது போல இருந்தது, அப்படிச் செய்ய அவர்களுக்குக் கட்டளை ஏதும் கொடுக்கப்படாமல் இருந்தால், அவர்கள் அப்படி ஒரு வேலையைத் தாமே யோசித்தே இருக்க மாட்டார்கள் என்பது போல இருந்தது.

அந்த கணத்தில் ஆன்டியால் யோசிக்க முடிந்ததெல்லாம், தான் மெதுவாக யோசிக்கும் ஒரு நபர், தான் தோற்கடிக்கப்பட்டு விட்டோம் என்பதே. எத்தனை மோசடியாக இருந்தாலும், அவர்கள் அவரைப் பிணைக் கைதியாகப் பிடித்துக் கொண்டு விட்டார்கள். அவருடைய பழைய வேலி இப்போது அழிந்து விட்டது, அவருக்கு வேலி தேவை, அதைத் திரும்ப நிறுவுவதற்குக் கிட்டுபவர்கள் அனேகமாக அவர்கள் மட்டும்தான். மேலும் யோசனைகள், அவருக்கு இது தெரியும், அதை நினைத்து அவர் அச்சப்பட்டார், பிற்பாடுதான் வரும். ஆனால் பதிலளிக்கும்போது அவருடைய குரல் அமைதியாகவே இருந்தது.

“ஆமாம், அது அறிவில்லாத செயல்தான். இனிமேலும் எதையும் பிய்க்காதீங்க.”

அவர் ஷாட்டைப் பார்த்தார். “இவங்க முடிக்கிற வரைக்கும் நீங்க இவங்களோட இருக்கப்போறீங்கன்னு நான் நம்பலாம் இல்லையா?”

“ஆமாமாம், நான் இங்கேயே இருப்பேன்.”

“இழைகளுக்கு எத்தனை இடைவெளி விடணுமுன்னு உங்களுக்கு நினைவிருக்கா?”

ஷாட் அந்த அளவுகளை ஒப்பித்தார், அது ஆன்டிக்குக் கொஞ்சம் உற்சாகத்தைக் கொடுத்தது.

அவர் சொன்னார், “சரி, நடக்கட்டும்.”

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்கவும், தன் நம்பிக்கையின்மையைக் குறிப்பிடும்படிக் காட்டவும் என அவர் சில முறை திரும்பிப் போனார். ஆனால் அவர்களைப் பற்றிய அவருடைய தீர்மானம் மேலும் இறுகியது, தன்னையே கட்டாயப்படுத்திக் கொண்டுதான் அவர்களருகே அவரால் செல்ல முடிந்தது. இப்போது அவர்களை வெளியேற்றும் தருணத்தை அவர் எதிர்பார்க்கத் தொடங்கி இருந்தார்.

பேசும் சக்தியின் முழு வலுவும் அவருக்குத் திரும்பி இருந்ததால், தன் யோசனைகளில் அவர்களுடைய அறியாமை, முட்டாள்தனம், சோம்பேறித்தனம், வன்முறை மேலும் அவசரம் ஆகியவற்றுக்காக அவர்களை அவர் திட்டிக் கொண்டிருந்தார். எங்கெல்லாம் மாற்றுகள் இருந்தனவோ அங்கெல்லாம் சரியான வழிக்குப் பதிலாக சுலபமான வழியையே அவர்கள் தேர்ந்தெடுத்ததைப் பார்த்தார். தன்னை நிரப்பும் எரிச்சலுணர்வு தன் அப்பாவுடையதைப் போல இருந்ததைக் கவனித்தார்: “கடவுளே, விழுங்கத் தேவையான அளவே புத்தி இருக்கிறது.” அவர்களுடைய மோசமான வேலையின் விளைவுகளைத் தாண்டியும் தான் உயிரோடு இருப்போம் என்று அவருக்குத் தெரிந்தது. தன் இருப்பிடத்துக்கும், தனக்கும், வரலாற்றுக்கும், தன் முன்னோர்களும், நண்பர்களும் அங்கு செய்து விட்டுப் போன சிறப்பான உழைப்பின் பாரம்பரியத்துக்கும் அவர்கள் இழைத்த இழிவைத் தன் உடலிலேயே உணர்ந்ததால் ஏதோ நோய் ஒன்று தன்னைப் பீடித்தது போல உணர்ந்தார். முன்பு ஒரு காலகட்டத்தில், கூலிக்கு அமர்த்தப்பட்ட வேலைக்காரர்கள், தமக்கென ஒரு சதுர அங்குலம் நிலம் கூட இல்லாதவர்கள், கருப்பரோ, வெள்ளையரோ யாரானாலும், தம் பண்பாட்டாலும், தம் வளர்ப்பாலும் தமக்கு இருக்கும் பொது அறிவால், இப்படிப்பட்ட மோசமான வேலை என்ன விதமானது என்பதை உடனே கவனித்திருப்பார்கள், அதை வெறுத்திருப்பார்கள் என்று தான் அறிந்திருந்ததை தனக்கே நினைவுபடுத்திக் கொண்டார்.

ஆனால் அவர் தன்னையே கடிந்து கொள்ளும் செயல் திட்டம் ஒன்றைத் துவங்கி விட்டிருந்தார், அது அவரோடே கொஞ்ச காலம் தங்கியிருக்கவே செய்யும். நப்பை பொதுவான கொள்கையடிப்படையிலும், சந்தேகத்தின் பேரிலும், அவன் வேலையைத் துவங்கு முன்னரே ஏன் விலக்கி அனுப்பவில்லை? ஏன் ஷாட் வரும் வரையாவது நப்போடும், மற்றவர்களோடும் இருந்து கண்காணித்து, மேற்பார்வையிடவில்லை?  அவர் தன்னை அறிவதில் உள்ள துன்பத்தை அனுபவிக்கத் துவங்கினார்.

பிறரை நம்புவது என்ற தன் இயல்பைப் பற்றி அவருக்கே நன்கு தெரியும், அந்த இயலாமையை ஒரு கொள்கை போலத் தான் ஆக்கிக் கொண்டிருப்பதையும் அவர் அறிந்திருந்தார், ஆனால் நம்பிக்கை இல்லாது போனால், அவநம்பிக்கை என்பதில் அடங்கியுள்ள உழைப்பும், பெரும் செலவும் எப்படி இருக்கும் என்பது குறித்து அவருக்குப் போதுமான சான்றுகள் இருந்தன. ஆனால் இந்த முறை அவருடைய நம்பிக்கை அத்தனை மோசமாக இழிவு செய்யப்பட்டிருந்ததைப் பார்க்கையில் அவருடைய நம்பும் குணம் முட்டாள்தனமாகத் தெரிந்தது அவருக்கு. தனக்கே ஒரு முட்டாளாகத் தெரிந்தார் அவர்.


(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.