பிறந்த நாள்

மகரத்தின் எட்டாவது தினம் – இன்று எனது பிறந்தநாள். வழக்கத்திற்கு மாறாக நான் விடியற்காலையிலேயே எழுந்து குளித்து,காலைவேலைகளை முடித்து விட்டு கதர்ச்சட்டை,வேட்டி ,வெள்ளை கேன்வாஸ் அணிந்துகொண்டு கனத்த மனதோடு சாய்வுநாற்காலியில் உட்கார்ந்திருந்தேன். வெகு சீக்கிரமாக நான் எழுந்து உட்கார்ந்திருப்பதைப் பார்த்து பி. ஏ படிக்கும் பக்கத்துஅறை நண்பன் மேத்யூ ஆச்சர்யப்பட்டான். சிரிப்புடன்”ஹலோ! காலை வணக்கம் !” என்றான் ஆங்கிலத்தில்.

“காலை வணக்கம்”என்று நானும் சொன்னேன்.

“ஏன் இன்று இவ்வளவு சீக்கிரம் எழுந்து விட்டீர்கள்?எங்கேயாவது போகிறீர் களா?” என்று கேட்டான்.

“இல்லை . இன்று என்னுடைய பிறந்தநாள்” என்றேன்.

“உங்கள்  பிறந்தநாளா?” என்று கேட்டான் ஆங்கிலத்தில்.

“ஆமாம்”

“ஓ, பிறந்தநாள் வாழ்த்துக்கள்!”

“நன்றி.”

மேத்யூ பல்தேய்க்கும்  பிரஷை பற்களுக்கிடையே வைத்துக்கொண்டு குளியலறைக்குள் போனான். சுற்றிலும் இரைச்சலும், ஆரவாரமுமாக காதல்பாடல்கள். மாணவர்களும், அலுவலகப் பணியாளர்களும் அங்கிருக்கின்றனர். அவர்களில் யாருக்காவது ஏதாவது கவலையிருக்கிறதா?அவர்களுக்கு வாழ்க்கை மிக ரம்யமானது. ஆனால் நான் ஒரு கப்காப்பிக்கு என்ன செய்வது என்று  நினைத்துக் கொண்டிருந்தேன். மதிய உணவு என்பது ஊர்ஜிதமாகி விட்டது; நேற்று நான் மார்க்கெட்டுக்குப் போயிருந்தபோது எந்தக் காரணமுமில்லாமல் ஹமித் என்னை மதிய உணவுக்கு அழைத்தான். பெரிய பணக்காரனான அவன் ஒரு சின்னக் கவிஞனும். ஆனால் ஒரு டீ இல்லாமல் மதிய உணவுநேரம் வரை என்னால் காத்திருக்கமுடியாது. மேத்யூவின் வேலைக்காரன் அவனுக்கு டீ தயாரித்துக் கொண்டிருப்பதை என் அறையில் உட்கார்ந்திருந்தபடியே என்னால் உணரமுடிந்தது. மேத்யூவின் சமையலறையின் ஸ்டோர்ரூம்தான் என் அறை. வீட்டுச் சொந்தக்காரர் எட்டணா மாத வாடகைக்கு எனக்கு விட்டிருந்தார் அதுதான் அந்தக் கட்டிடத்திலேயே மிகச்சிறிய அறை, சாய்வு நாற்காலி,மேஜை,ஷெல்ஃப், படுக்கை என்று என் சாமான்களோடு மூச்சு விடக் கூட இடமில்லாமல் அறையிருந்தது. மூன்று கட்டிடங்களின் எல்லா அறைகளிலும் மாணவர்களும், அலுவலகர்களும் குடியிருந்தனர். சொந்தக்காரருக்கு என்னை மட்டும் பிடிக்காது. காரணம் வாடகையை ஒழுங்காக என்னால் கொடுக்க முடியாததுதான். வேறு இரு தரப்பினருக்கும் என்னைப் பிடிக்காது. ஒன்று ஹோட்டல்காரர், மற்றொன்று அரசாங்கம். ஹோட்டல்காரருக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். ஆனால் அரசாங்கத்திற்கு கடன்படவில்லை. இருப்பினும் அரசால் என்னைப் பொறுத்துக் கொள்ளமுடியாது. என் வீடு, உணவு, நாடு என்று நான் எல்லாவற்றையும் பேசிவிட்டேன். இப்போது என் உடைகள்,  விளக்குகள், செருப்பு என்பதுபற்றி நான் சொல்ல வேண்டும். [மேலே வேறு எதுவும் எழுதுவதற்கு முன்பு ஒரு கருத்தை தெளிவாகச் சொல்லியாக வேண்டும். இது நடு நிசி கடந்து விட்ட நேரம். நகரத்தில் நீண்ட நேரம் கையில் பேனாவுடனும், பேப்பருடனும் அலைந்தேன். இதற்கு எந்தவித விசேஷ காரணமுமில்லை இந்த நாளுக்கான விஷயங்களைத் தொடக்கத்திலிருந்து முடிவு வரை டைரியில் எழுதி விடவேண்டும் என்பது தவிர வேறு காரணமில்லை. ஓர் அசாதாரணமான சிறுகதைக்கான களம் அதிலிருக்கிறது. என் அறையிலுள்ள விளக்கில் எண்ணெயில்லை; நிறைய எழுதுவதற்கிருக்கிறது. அதனால்தான் படுக்கையிலிருந்து எழுந்து புத்துணர்ச்சியோடிருக்கும் போதே எழுதிவிடவேண்டுமென்று ஏரியருகேயுள்ள தனி விளக்கின் கீழ் உட்கார்ந்தேன்.] கொட்டத் துடிக்கும் கனமான மேகங்கள் போல அந்த நாளின் நிகழ்வுகள் எல்லாம் வெடித்து விடத் தயாரானவையாக மனதில் கனத்துக் கிடந்தன. இன்று எதுவும் வழக்கத்திற்கு மாறாக இல்லை: ஆனால் இன்று என்னுடைய பிறந்தநாள். நான் வீட்டிலிருந்து வெகு தொலைவிலிருக்கிறேன். என்னிடம் பணம் எதுவுமில்லை. கடன் வாங்கவும் வழியில்லை. நான் அணியும் உடைகள் பல நண்பர்களுடையது. எனக்குச் சொந்தமானதென்று எதுவுமில்லை மேத்யூ இது போன்ற பல பிறந்தநாட்கள் வரட்டும் என்று  என்னை வாழ்த்தியபோது நெஞ்சில் லேசாக வலித்தது.

எனக்கு ஞாபகமிருக்கிறது:

காலை ஏழுமணி. சாய்வு நாற்காலியில் உட்கார்ந்தபடி என்னைப்பற்றி நினைத்தேன்; இந்த நாளிலாவது எனக்கு எதிராக எந்தச் செயலும் நடக்காதவாறு  பார்த்துக் கொள்ளவேண்டும். இன்று யாரிடமும் எதையும் கடனாக வாங்கக் கூடாது. எதுவும் இன்று தவறாக நடந்து விடக்கூடாது. இன்று என்னுடைய”நான் ’என்பது கடந்துபோன நாட்களில் இருந்த மாறுபாடுகள் கொண்ட”என்”ஆகிவிடக் கூடாது. எனக்கு இன்று எத்தனை வயது? போன வருடத்தை விட ஒரு வயது கூடுதல். . . போன வருடம்?. .  இருபத்தியாறு. இல்லை, முப்பத்திரண்டு; அல்லது நாற்பத்தியேழா?

மனம் வேதனையடைந்தது. எழுந்து கண்ணாடியில் பார்த்தேன். அவ்வளவு மோசமில்லை. ஒரு தெளிவான முகம். அகலமான முன்நெற்றி; உறுதியான கண்கள்;வளைவான வாள் போன்ற மீசை. மொத்தத்தில் மோசமில்லை. . . இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஓர் அதிர்ச்சி. ஒரு நரைமுடி. காதிற்கு மேல் கருப்பு முடிகளினூடே. கடும் முயற்சி செய்து அதைப் பிடுங் கினேன். பிறகு என் தலையை வருடிக்கொண்டேன்;பின்புறத்தில் மிக மிருதுவாக இருந்தது. லேசாகத் தலைவலிப்பது போலிருந்தது. டீ குடிக்காததால் வலி வந்திருக்குமோ?

ஒன்பது மணி: ஹோட்டல்காரர் என்னைப் பார்த்து விட்டு கடுப்பாக முகத்தை உள்ளிழுத்துக் கொண்டார். டீ போடுபவன் காசு கேட்டான்.

“நாளை தருகிறேன்”என்றேன்.

அவன் என்னை நம்பவில்லை.”நேற்றும் இதையேதான் சொன்னீர்கள்,”என்றான்

“இன்று ஏதாவது பணம் கிடைக்குமென்று நினைத்தேன்”

“பழைய பாக்கியை நீங்கள் தரும்வரை டீ தரக் கூடாதென்று எனக்குக் உத்தரவு.”

“ஓ?”

பத்துமணி; ஈரப்பதமின்றி  உதடுகள் காய்ந்து விட்டன. உஷ்ணத்தின் கொடுமை. எனக்குள் சோர்வு பெருகியது. அப்போது எட்டு அல்லது பத்து வயதிருக்கும் வற்றிய தோற்றமுடைய இரண்டு கிருத்தவச் சிறுவர்கள் என் அறைக் கதவருகே வந்து நின்றனர். கையில் இரண்டு மரக் காலணிகள் வைத்திருந்தனர். ஒரு ஜோடி  மூன்றணாதான்.

“எனக்கு அவை வேண்டாம் குழந்தைகளே.”

“ஆனால், ஐயா, உங்களைப் போன்றவர்கள் வாங்காவிட்டால் யார் வாங்குவார்கள்?’

“குழந்தைகளே, எனக்கு வேண்டாம். . . என்னிடம் பணமில்லை.”

“ஓ!”

அவர்களின் முகத்தில் நம்பிக்கையின்மை தெரிந்தது. தோற்றத்திற்குப் பின்னாலிருக்கிற உண்மை நிலவரங்களை அறியாத அப்பாவிகள். என் ஆடைகள், சாய்வு நாற்காலி ஆகியவைகளால் நான் ‘ஐயா’என்றழைக்கப்பட்டேன். ஆனால் சாய்வு நாற்காலி, சட்டைகள், வேட்டி, செருப்புகள்–ஆகிய எதுவும் என்னுடையவையல்ல. எனக்கு என்று எதுவுமில்லை. என்னுடைய ஒளிவற்ற  மனதாவது என்னுடையதாகுமா?இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும்,ஒவ்வொரு இடத்திலும் என்னென்ன உருவங்களோடு நான் வாழ்ந்திருக்கிறேன். என் இரத்தம்,சதை,என் எலும்புகள் எல்லாமும் இந்தியாவிற்குச் சொந்தம். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை கராச்சியிலிருந்து கல்கத்தா வரை –இந்தியாவின் எல்லா இடங்களிலும் எனக்கு நண்பர்களுண்டு. இன்று என் ஆண்,பெண் சிநேகிதர்கள் ஒவ்வொருவரையும் நினைத்துப் பார்த்தேன். நிலாவின் பரவும் ஒளி போல என் அன்பு இந்தியா முழுவதும் பரவட்டும். அன்பு! என்னைத் தெரிந்தவர்கள் யாராவது என் மீது அன்பு காட்டுகிறார்களா?

அறிவு, மர்மங்களின் முகத்திரையைக் கிழிக்கக் கூடியது என்பது என் அபிப்ராயம். ஒருவரின் குறைகளும்,பலவீனங்களும் நீக்கப்பட்டு விட்டால் மிஞ்சுவது என்ன? காதலிக்கவும், காதலிக்கப்படவும் ஒருவருக்கு ஏதாவது கவர்ச்சி இருக்க வேண்டும். காலம் எவ்வளவு வேகமாகக் கழிகிறது; நான், அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பிடிக்க  குழந்தைத்தனமாக எம்பிக்கொண்டு, நான், அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டு”ம்மா, பசிக்கிறது” என்று சொல்லிக் கொண்டு. இன்று நான். . . காலம் எவ்வளவு கொடுமையாகக் கடக்கிறது. எத்தனை கொள்கைகள் என் நெஞ்சில் வெடித்திருக்கும். மனம் மிகப் பெரிய போராட்டக் களம். இன்று நான் யார்?புரட்சிக்காரன், கலகக்காரன், கம்யூனிஸ்ட்–நான் எல்லாம் கலந்தவன். ஆனால் உண்மையாக நான் யார்?ஓ, எவ்வளவு மோசமாக நான் உணர்கிறேன். பிளந்து விடுவது போலத் தலை வலித்தது. டீ கூடக் குடிக்கவில்லை என்பதாலா?என்னால் தலையைத் தூக்கவே முடிய வில்லை. ஏதாவது சாப்பிடவேண்டும். இந்தத் தலைவலியோடு ஒரு மைல் தூரம் நடக்க வேண்டும். ஆனால் முழுச்சாப்பாடு சாப்பிடமுடியும்.

பதினொரு மணி; ஹமீத் தன் கடையிலில்லை. வீட்டிற்குப் போய் விட்டானா? என்னைத் தன்னோடு அவன் அழைத்துப் போயிருந்தால் நன்றாக இருக்கும். ஒருவேளை அவன் மறந்திருக்கலாம். நான் அவன் வீட்டிற்குப் போனால்?

பதினொன்றரை மணி: இரண்டு மாடிக் கட்டிடங்களைக் கொண்ட ஹமித் வீட்டின் கேட்டுகள் மூடப்பட்டிருந்தன.  ”ஹமித்,” நான் கதவைத் தட்டினேன்.

பதிலெதுவுமில்லை.

“ஹமீ. . . . .  த்!”

“அவன் இங்கு இல்லை!” ஒரு பெண்ணின் கோபமான குரல் கேட்டது.

“அவன் எங்கே போயிருக்கிறான்?”

அமைதி. சோர்வடைந்த நிலையில் திரும்பிப் போவதற்குத் தயாரான நான் மீண்டும் கதவைத் தட்டினேன். . அப்போது  யாரோவரும் காலடியோசை கேட்டது. கைவளையல்களின் ஒலியும். கதவு லேசாகத் திறந்தது ஒரு இளம் பெண்!

“ஹமீத் எங்கே போயிருக்கிறான்?” நான் கேட்டேன்.

“அவசரமாக அவன் எங்கோ போக வேண்டியிருந்தது,”

“அவன் எப்போது திரும்பி வருவான்?’

“மாலைதான் வருவான்.”மாலையில்தான்!

“நான் வந்து விட்டுப் போனதாக அவனிடம் சொல்கிறீர்களா?”

“யாரென்று சொல்வது?”

“நான் யார்?”

“நான். . ஓ. . யாருமில்லை. எதுவும் சொல்ல வேண்டியதில்லை.”

நான் திரும்பி நடந்தேன். சூடான வரண்ட சர்க்கரை மாதிரி மணல் இருந்தது. ஏரித் தண்ணீர் மின்னும் கண்ணாடி கோப்பையாகத் தெரிந்தது. என் தலைக்குள்ளும், கண்களுக்குள்ளும் இருட்டு தெரிந்தது; நான் மிகச் சோகத்திலிருந்தேன். என் எலும்புகள் எரிந்தன. தாகம், பசி. களைத்துப் போனேன். பூமியையே விழுங்கும் அளவுக்கு களைத்திருந்தேன். உணவு எதுவும் கிடைக்க வழியில்லை என்று அறிவு சொன்னது. உணவுக்கான வாய்ப்புகளின்றி  முடிவற்ற இரவுகளும், பகல் பொழுதுகளும் முன்னாலிருக்கின்றன. சோர்வில் மயங்கியும் விழலாம்.

பன்னிரண்டரை மணி; எனக்கு அறிமுகமானவர்கள் என்னைப் பார்க்காதது போல கடந்து போனார்கள். ”நண்பர்களே, இன்று என் பிறந்தநாள். என்னை மகிழ்ச்சியாக இருக்கச் சொல்லி வாழ்த்துங்கள்.”என் மனதிற்குள்ளேயே நான் முனகிக் கொண்டேன். நிழல்கள் என்னைக் கடந்தன. என்னைப் பார்த்தும் நண்பர்கள் ஏன் பேசாமல் போகிறார்கள்?

ஒரு சி. ஐ. டி. மனிதன் என் பின்னால். அதனால்தான்.

ஒருமணி: நான் திரு. பி . என்பவரிடம் போனேன். அவர் முன்னாள் பத்திரிகை ஆசிரியர். இப்போது ஒரு கடை வைத்து நடத்துகிறார். என்னால் சரியாகப் பார்க்கக் கூடமுடியவில்லை. நான் மிகக் களைத்திருந்தேன்.”புரட்சி எவ்வளவு தொலைவிலிருக்கிறது?”என்று பி. கேட்டார்.

“அது மிக அருகில்தானிருக்கிறது.”

“ஹா-ஹா!எங்கிருந்து வருகிறீர்கள்?உங்களைச் சில நாட்களாகப் பார்க்கவில்லை.”

“ஹா-ஹா!”

“ஏதாவது விசேஷமா?”

“ஒன்றுமில்லை; சும்மாதான்.”

நான் அவர் அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். என்னுடைய பல கட்டுரைகள் அவர் பெயரில் வெளியாகியுள்ளன. அவர் தன்னுடைய முன்னாள் பெருமையைக் காட்டும் வகையில் பல பழைய பத்திரிக்கைகளை பைண்ட் செய்து வைத்திருந்தார். அதை நான் எடுத்துப் பார்த்தேன். என் தலை சுற்றிக் கொண்டிருந்தது. இதயம் வேகமாகக் துடித்தபடி,“எனக்கு ஒரு கப் டீ வேண்டும்; மிகக் களைத்துப் போயிருக்கிறேன்.” என்று சொன்னது. ஏன் பி. என்னிடம் கேட்கவில்லை?அவரால் என் களைப்பைப் பார்க்க முடியவில்லையா? அவர் பணப்பெட்டியின் அருகே உட்கார்ந்திருந்தார். நான் தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு பிச்சைக்காரச் சிறுவர்கள் குப்பைக் குவியலில் கிடந்த தோசைக்காக மல்லுக் கட்டிக் கொண்டிருந்தனர். என் மனம்”ஒரு கப் டீ” என்று ஏங்கியது.

பி. தன் பெட்டியைத் திறந்தார். பணத்தினிடையே கிடந்த காசுகளில் ஓரணாவை எடுத்து ஒரு சிறுவனிடம் கொடுத்தார்.

“டீ வாங்கி வா,” கட்டளையிட்டார்.

சிறுவன் ஓடினான். என் மனம் அமைதியாகத் தொடங்கியது. சிறுவன் கொண்டு  வந்த டீயை வாங்கிக் கொண்ட பி. என் பக்கம் திரும்பி”உங்களுக்கு டீ வேண்டுமா?”என்று கேட்டார்.

“வேண்டாம்”என்றேன் நான். குனிந்து என் ஸூலேசைப் பார்ப்பது போல பாவனை செய்தேன், அவர் என் முகத்தையும், மனப்போராட்டத்தையும் பார்க்காதபடி.

“உங்களுடைய புத்தகங்களில் எதையும் நீங்கள் எனக்குத் தரவில்லையே,”பி. புகார் போலச் சொன்னார்.

“தருகிறேன்.”

“நான் அவை பற்றிய விமர்சனங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.”

“நல்லது.”நான் சிரிக்க முயற்சித்தேன். ஆனால் மனதில் ஒளியில்லாதபோது முகம் எப்படிப் புன்னகைக்கும்?

நான் எழுந்து தெருவில் இறங்கினேன்.

அந்த சி. ஐ. டி என்னைத் தொடர்ந்தார்.

இரண்டுமணி; நான் என் அறையின் சாய்வு நாற்காலியில் களைத்துக் கையற்றவனாக உட்கார்ந்திருந்தேன். நறுமணமுடைய நல்ல ஆடையணிந்திருந்த ஒரு பெண்மணி என் கதவருகே வந்தாள். அவள் வேறு பிராந்தியத்திலிருந்து வந்தவள். அவள் நகரம் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு விட்டது. அவளுக்கு ஏதோ உதவி வேண்டும். மார்பு கதவோடு அழுந்தியிருக்க அவள் என்னை லேசாகச் சிரித்தபடி பார்த்தாள். எனக்குள் லேசான ஆசை எழுந்தது. மற்ற அறைகளில் யாருமில்லை. அந்த ஆசை என் நரம்புகளிலும்,தசைகளிலும் பரவி யது. என் இதயத் துடிப்பை என்னால் கேட்க முடிந்தது. அது அபாயத்தின் கணம்.

“சகோதரியே,என்னிடம் எதுவுமில்லை. வேறு யாரிடமாவது போய்க் கேளுங்கள். என்னிடம் எதுவுமில்லை?”

“ஓ!”அவள் ஏமாற்றமடைந்தவளாக திரும்பிப் போனாள். அவளுடைய நறு மணம் அங்கிருந்தது.

மூன்று மணி: நான் யாரிடமாவது கடன் வாங்கினாலென்ன?சோர்வு எல்லை கடந்தது. ஆதரவற்ற கொடுமையான நிலை. யாரை நான் அணுகுவது?பல பெயர்கள் நினைவிற்கு வந்தன. ஆனால் கடன் வாங்குவது ஒருவனின் சுய கௌரவத்தை  காயப்படுத்தும். . . . என்னையே அழித்துக் கொள்ளவா?சாவு எப்படியிருக்கும்?

மூன்றரை மணி: வாய்க்குள் என்  நாக்கு மூழ்கியது. குளிர்ச்சியான கடலில் என்னைக் கரைத்துக் கொள்ள முயன்றால். அப்படியான ஒரு நிலையில் நான் படுத்துக் கிடந்த போது  சில பத்திரிகை ஆசிரியர்களிடமிருந்து கடிதங்கள் வந்தன. அவர்களுக்கு கதைகள் வேண்டுமாம்! கடிதங்களைத் தூக்கியெறிந்து விட்டு, கையற்றவனாகப் படுத்திருந்தேன். வங்கி கிளார்க் கிருஷ்ணபிள்ளையின் வேலைக்காரப் பையன்  நெருப்புப் பெட்டி கேட்டு வந்தான். அவனைத் தண்ணீர் கொண்டு வரச் சொல்லிக் குடித்தேன்.

“ஐயா உங்களுக்கு உடல் நலமில்லையா?” அந்தப் பையன் கேட்டான்.

“நான் நலமாக இருக்கிறேன்.”

“ஐயா சாப்பிடவில்லையா?”

“இல்லை.”

“ஏன் ?ஏன் சாப்பிடவில்லை?”

அந்தச் சிறிய முகம்,அந்தக் கருமையான கண்கள், அவனைச் சுற்றியிருந்த கருப்பு ஆடை; அவன் தெரிந்து கொள்ளக் காத்திருந்தான். நான் கண்களை மூடிக் கொண்டேன். மிக மென்மையாகக் கூப்பிட்டான், ”ஐயா!”

“உம்ம்.” நான் கண்களைத் திறந்தேன்.

“என்னிடம் இரண்டு அணாக்கள் இருக்கின்றன.”

“அதனால்?”

“நீங்கள் அதை நான் அடுத்த மாதம் ஊருக்கு போவதற்கு முன்பு  திருப்பித் தந்தால் போதும்” அவன் தவிப்போடு சொன்னான்.

நான் நெகிழ்ந்து போனேன்.”கொண்டு வா” என்றேன். சொல்வது காதில் விழுவதற்கு முன்பாகவே ஓடினான்.

அப்போது என் நண்பன் கங்காதர் உள்ளே வந்தான். கதர் வெள்ளை வேட்டி, ஜிப்பா போட்டிருந்தான். தோளைச் சுற்றி நீலநிறச் சாலவை போர்த்தியிருந்தான். முகம் உறுதியாக இருந்தது. சாய்வு நாற்காலியில் நான் படுத்திருப்பதைப் பார்த்து தலைவனான அவன்,“நீ மிகவும் முதலாளித்துவம் சார்ந்தவனாகி  வருகிறாய்,”என்றான்.

தலை சுற்றியபோதும் நான் சிரித்தேன். இந்தத் தலைவன் அணிந்திருக்கும் உடைக்குச் சொந்தக்காரன் யார் என்று நான் வியந்தேன். ஒவ்வொரு தேசிய ஊழியனின் தோற்றமும் கண் முன் வந்து போனது.

“நீ ஏன் சிரிக்கிறாய்?”கங்காதர் கேட்டான்.

“ஒன்றுமில்லை. உன் தோற்றத்தைப் பார்த்துத்தான் சிரித்தேன்.”

“நகைச்சுவையாகப் பேசுவதை நிறுத்தி விட்டு நான் சொல்வதைக் கேள். பெரிய துன்பம் வந்து விட்டது. மூவாயிரம் வேலையாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கி விட்டனர். ஒன்றரை வாரத்திற்கும் மேலாக அவர்கள் உணவின்றி இருக்கின்றனர். பெரிய துன்பம் வரலாம்.”

“நான் இதை எப்படிச் செய்தித்தாள்களில் படிக்காமல் போனேன்?”

“செய்தித்தாள்கள் இதை வெளியிடக் கூடாதென்று கட்டளை.”

“சரி! நான் இதற்கு என்ன செய்ய வேண்டுமென்று நீ நினைக்கிறாய்?”

“இது தொடர்பாக ஒரு பொதுக் கூட்டமிருக்கிறது. நான்தான் அதற்குத் தலைவன். நான் அங்கே போவதற்கு படகுச் செலவிற்கு எனக்கு ஓரணா தேவைப் படுகிறது. இன்று நான் எதுவும் சாப்பிடவில்லை. நீ என்னுடன் வரவேண்டும்.”

“எல்லாம் சரிதான். ஆனால் என்னிடம் சல்லிக் காசில்லை. ஒரு கவளம் சாப்பிட்டே சில நாட்களாகி விட்டன. இன்று என்னுடைய பிறந்தநாள். நான் இதுவரை எதுவும் சாப்பிடவில்லை. இருந்தாலும் பார்க்கலாம்; கொஞ்சம் காத்திரு.”

அரசாங்கம்,வேலையாட்கள், தேசிய பணியாளர்கள் என்று எல்லாவற்றையும் பற்றி கங்காதர் பேசினான். செய்தித்தாள்கள்,பத்திரிகை ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் பற்றி நான் பேசினேன். அதற்குள் அந்தப் பையன் வந்து விட்டான். நான் அவனிடமிருந்து ஓரணாவை எடுத்துக் கொண்டு, மற்றொரு அணாவில் டீ, பீடி, தோசை வாங்கி வரச்சொன்னேன். சிறிய அப்பளம் போல ஒரு தோசையும்,இரண்டு அவுன்ஸ் டீயும், சில பீடிகளும் வாங்கி வந்தான். தோசை சுற்றப்பட்டு வந்த அமெரிக்கச் செய்தித்தாளில் ஒரு படம் என்னைக் கவர்ந் தது. கங்காதரும் நானும் அந்த தோசையைச் சாப்பிட்டோம். ஆளுக்கொரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டுப் பிறகு டீ குடித்தோம். பிறகு நான் பீடியைப் பற்ற வைத்துக் கொண்டு கங்காதரிடம் ஓரணாவைக் கொடுத்தேன். ”இன்று உன் பிறந்த நாள் இல்லையா? உலகத்திற்கு ஏதாவது செய்தி சொல்வாயா?” என்று நகைச்சுவையாகக் கேட்டபடி விடை பெறத் தயாரானான்.

“ஆமாம். புரட்சியோடு தொடர்புடைய ஒரு செய்தி,”என்றேன்.

“சொல். நானும் கேட்கிறேன்.”

“புரட்சியின் ஜூவாலைகள் எங்கும் எழட்டும்; நடப்பு சமூக ஆணைகள் அழியட்டும். புதிய உலகம் பிறக்கட்டும்!”

”நல்லது. நான் இந்தச் செய்தியை உழைப்பாளர்களுக்குச் சொல்கிறேன்.”

கங்காதர் சுறுசுறுப்பாக நடந்தான். நான் பல தேசிய உழைப்பாளர்களையும் , எழுத்தாளர்களைப் பற்றியும் யோசித்தேன். அவர்கள் எல்லாரும் எப்படி வாழ்ந்தனர்? படுத்துக் கொண்டு அதைப்பற்றி யோசித்துக் கொண்டே, தோசை சுற்றி வந்த தாளை எடுத்தேன். அப்போது வீட்டுச் சொந்தக்காரர் என்னை நோக்கிக் கோபமான முகத்தோடு வந்தார். அவருக்கு என்ன சமாதானம் சொல்வது என்ற யோசனையோடு, நான் அந்தப்  படத்தைப் பார்த்தேன். உயர்ந்த மாடிகளுடன் கூடிய ஒரு பெரிய நகரம்; அதனூடே தலைநிமிர்ந்து நின்ற மனிதன். அவர் இரும்புக் கம்பிகளோடு பிணைத்து பூமியில் கட்டப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் பார்வை சங்கிலியையோ அல்லது பூமியை நோக்கியோ இல்லை. எல்லையற்ற பரந்த பெருவெளியில் ஒளிதரும் வான்கோள்கள் மீது அவர் பார்வையிருந்தது. அவர் காலடியில் ஒரு திறந்த புத்தகமிருந்தது. அதன் இரண்டு பக்கங்களில் அவருடைய, இன்னும் சொல்லப்போனால் ஆண் சமூகத்தின் வரலாறே எழுதப்பட்டிருந்தது. அது கீழ் வருமாறு:

“பூமியோடு சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தாலும் அவர் பார்வை காலத்தையும், இடத்தையும் கடந்த அபாரமான  வளர்ச்சி குறித்தது”.

“இன்று வாடகை தருகிறீர்களா?என்று கேட்டபடி வீட்டுக்காரர் வந்தார்.

“இன்னும் எனக்குப் பணம் கிடைக்கவில்லை; வருகிற நாட்களில் கொடுத்து விடுகிறேன்.” என்றேன்.

ஆனால் அவர் மேலும் எந்த விளக்கத்தையும் கேட்கத் தயாராக இல்லை.

“இப்படி வாழ்வதால் என்ன பயன்?”என்று கேட்டார்.

அது உண்மைதான். இம்மாதிரி வாழ்வதால் என்ன பயன்?இந்த இடத்திற்கு வந்து மூன்று வருடங்களாகி விட்டன. நான் மூன்று சமையலறைகளைப் பழுது பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றிலிருந்தும் நல்ல வாடகை வருகிறது. இப்போது இந்த நான்காவது ஸ்டோர் ரூமையும் புழக்கத்தில் இருக்குமாறு செய்து விட்டேன். இதற்கு அதிக வாடகை கொடுக்க ஜனங்கள் தயாராக இருக்கிறார்கள் என்று அவர் சொல்கிறார். பெரிய அளவு வாடகை என்னால் கொடுக்க முடியாவிட்டால் நான் காலி செய்ய வேண்டும்!

இல்லை, அறையை நான் காலி செய்யத் தயாராக இல்லை.

நான்கு மணி; எனக்கு இந்த நாடு வெறுத்துப் போனது. இந்த நகரில் எதுவும் என்னைக் கவரும்படியாக இல்லை. அதே சாலைகள், அதே கடைகள்,அதே முகங்கள், அதே விஷயங்களைத்தான் பார்க்கிறேன். எவ்வளவு வெறுத்துப் போயிருக்கிறேன். . . என்னால் ஒரு வார்த்தை கூட எழுதமுடியாது.

ஆறுமணி; ஓர் அழகான மாலைப் பொழுது.  கடலால் விழுங்கப்படும் இரத்தக் குமிழ் போல சூரியாஸ்தமனம் இருந்தது. . . மேற்குவானம் தங்க மேகங்களால் நிரம்பியிருந்தது. கடல் கரையே இல்லாதது போலத் தெரிந்தது. அருகே, சிற்றலைகளுடனான  உப்பங் கழி. கரை அமைதியாக இருந்தது. இளைஞர்கள் சிகரெட் பிடித்தபடி உலா வந்து கொண்டிருந்தனர்; இளம்பெண்கள் அருமையான புடவைகள்  உடுத்தியிருந்தனர். முகங்களில் வெட்கப் புன்னகையோடு அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அங்கு ஒலி பரப்பப்படும் மனதை மயக்கும் உணர்ச்சிகரமான சினிமா பாடல்களைக் ஒருவரால் கேட்க முடி யும். மென்மையான காற்று மலர்களின் வாசனையை சுமந்து வந்தது. . . ஆனால் நான் மயங்கி விழும் நிலைக்கே வந்து விட்டேன்.

ஏழுமணி; ஒரு போலீஸ்காரர் என்னிடத்திற்கு வந்து  திரும்பவும் தன்னோடு அழைத்துப் போனார். நான் பெட்ரோமாக்ஸ் விளக்கின் அருகே உட்கார்த்தி வைக்கப்பட்டேன். என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொன்ன போது உதவிக்கமிஷனர் குறுக்கும், நெடுக்கும் நடந்தபடி என் முகபாவனைகளைக் கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தார். என் முகத்திலிருந்து அவர் பார்வையை விலக்கவில்லை. என்ன ஓர் இறுமாப்பு! நான் ஒரு பெரிய குற்றம் செய்துவிட்டது போல. ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது; யார் எனது நண்பர்கள்?எங்கிருந்து எனக்குக் கடிதங்கள் வருகின்றன?அரசாங்கத்தை கவிழ்க்கக் கூடிய நிறுவனத்தின் உறுப்பினனா நான்?புதியதாக என்ன எழுதுகிறேன்?நான் முழு உண்மையையும் சொல்லவேண்டும்.

”உன்னை நாடு கடத்தும் உரிமை எனக்கிருக்கிறது. தெரியுமா?”

“எனக்குத் தெரியும். நான் கையற்ற நிலையிலிருக்கிறேன். ஒரு சாதாரண போலீஸ்காரர் கூட என்னைக் கைது செய்து சிறையில் வைக்கமுடியும்.”

ஏழரை மணி:நான் என் அறைக்குத் திரும்பி விட்டேன். இருட்டில் உட்கார்ந்த போது வியர்த்துக் கொட்டியது. இன்று என் அறையில் விளக்கில்லை. எப்படி எனக்கு மண்ணெண்ணெய் கிடைக்கும்?என் பசியைத் தணிக்க நான் ஏதாவது சாப்பிட்டாக வேண்டும். யார் எனக்கு உணவு கொடுப்பார்கள்? நான் யாரிடமும் கடன் வாங்கமுடியாது. மேத்யூவிடம் கேட்டால்? இல்லை. அடுத்த கட்டிடத்தில் இருக்கும் கண்ணாடியணிந்த மாணவனிடம்  ஒரு ரூபாய் வாங்குவேன். அவனுக்கு உடல் நலமில்லாமலிருந்த போது ஊசிகளுக்கு அவன் நிறையப் பணம் செலவழித்தான்; ஆனால் கடைசியில் என்னுடைய நாலணா பெறுமான மருந்துதான் அவன் குணமாக உதவியது. எனக்கு நன்றி சொல்லும் வகையில் அவன் என்னைச் சினிமாவுக்கு அழைத்துப் போனான். அவனிடம் போய் ஒரு ரூபாய் கடன் கேட்டால் மறுப்பானா?

எட்டேமுக்கால்: போகும் வழியில் நான் மேத்யூவைப் பற்றி விசாரித்தேன். அவன் சினிமாவுக்குப் போயிருந்தான். சிரிப்பும் கும்மாளச் சத்தமும் கேட்டு நான் அடுத்த கட்டிடத்தின் மேல்மாடிக்குப் போனேன். சிகரெட் புகை மணம். லாந்தர் விளக்கின் ஒளி.

கையற்றவனாக அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன். அவர்கள் தங்கள் பேச்சைத் தொடர்ந்தனர்;சினிமா, கல்லூரி மாணவிகள் பற்றி வர்ணனை,ஒரு நாளைக்கு இரண்டு புடவைகள் மாற்றும் பெண்களின் பெயர்கள், இன்ன பிற. நான் அவர்களோடு சேர்ந்து கொண்டு என் அபிபிராயங்களைச் சொன்னேன். இடையே ஒரு துண்டுக் காகிதத்தில்  “அவசரமாக ஒரு ரூபாய் தேவை;இரண்டு மூன்று நாட்களில் தந்து விடுகிறேன்.”என்று ஒரு குறிப்பு எழுதினேன். கண்ணாடியணிந்த மாணவன் சிரித்தான். ”என்ன கிறுக்குகிறீர்கள், சிறுகதையின் கருவா அல்லது வேறு ஏதாவதா?”

“இல்லை.” நான் சொன்னேன்.

இந்த உரையாடலை அடுத்துப் பேச்சு கதை எழுதும் கலை பக்கம் திரும்பியது.

’நம் மொழியில் நல்ல சிறுகதையேயில்லை,” என்று மெல்லிய மீசைக்கார அழகிய இளைஞன் சொன்னான்.

“நீங்கள் எந்த  எழுத்தாளர்களின் கதைகளைப் படித்திருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்.

பல எழுத்தாளர்களின் கதைகளை  அவர் படித்ததில்லை. மலையாளம் படிப்பதென்பது ஒரு நாகரிகம் இல்லாத செயல் என்ற  எண்ணம்.

நான் சில மலையாளச் சிறுகதை எழுத்தாளர்களின் பெயர்களைச் சொன்னேன்.  அவர்கள் பலரின் பெயர்கள் இளைஞர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை!

“இன்று மலையாளச் சிறுகதைகள் ஆங்கில மொழிக்கு மட்டுமின்றி பல உலக மொழிகளுக்கும் போட்டியாக இருக்கின்றன. ஏன் அவைகளை நீங்கள் படிக்கக் கூடாது?” என்றேன்.

ஓ, அவர்கள் சிலவற்றைப் படித்திருக்கின்றனர்.

“பெரும்பான்மையான சிறுகதைகள் வறுமையைப் பற்றிப் பேசுகின்றன. ஏன் அது மாதிரியாக எழுதவேண்டும்?”

நான் எதுவும் சொல்லவில்லை.

“எல்லாக் கதைகளையும் படிக்கும் ஒருவர் உலகில் ஏதோ தவறாக உள்ளது என்று தான் நினைக்க முடியும்,” தங்க பிரேம் அணிந்த நாகரிகமான இளைஞன் சொன்னான்.

இந்த உலகில் என்ன தவறு இருக்கிறது?பெற்றோர்கள் மாதாமாதம் பணம் அனுப்புகின்றனர். அதை வைத்துக் கொண்டு இளையவர்கள் படிப்பது, சிகரெட், டீ,காப்பி, ஐஸ்கிரீம், சினிமா, குட்டிக்குரா பவுடர், வாஸ்லைன், விலையுயர்வான ஆடைகள், நல்ல சாப்பாடு, மேகவெட்டை போன்றவைகளுக்கு செலவழிக்கின்றனர். அவர்கள் தான் எதிர்கால சந்ததியினர். எதிர்கால ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள்! இந்த உலகத்தில் என்ன தவறு இருக்கிறது?

நான் ஒரு கடும் உரை நிகழ்த்திவிட வேண்டுமென நினைத்தேன்.

“இன்றைய உலகம். . .” தொடங்கினேன்.

“உங்களுக்கு மரக் காலணி  வேண்டுமா, மரக் காலணி!” கீழேயிருந்து ஒரு குரல் வந்த்து.

“அவர்களை மேலே கூட்டி வாருங்கள்,”சிரிப்புடன் கண்ணாடியணிந்தவன் கட்டளையிட்டான். அதனால் பேச்சு திசை திரும்பியது. மேலே வந்த சிறுவர்கள் காலையில் நான் பார்த்தவர்கள்தான். அவர்கள் நடுங்கிக் கொண்டிருந்தனர். கண்கள் களையிழந்து,முகம் வாடி, உதடுகள் வரண்டிருந்தன. .”ஐயா, இரண்டரை அணாதான்” என்று முன்னாலிருந்த சிறுவன் கஷ்டப்பட்டுப் பேசினான்.”காலையில் அது மூன்று அணாவாக இருந்தது.

“இரண்டரை அணாவா?’ செருப்பை பார்த்துக் கொண்டே கண்ணாடியணிந்தவன் சந்தே கத்தோடு கேட்டான்.” இது கரிஞ்ஜோட்டா மரமா?”

“ஆமாம் ஐயா, இது கரிஞ்ஜோட்டா.”

“உங்கள் வீடு எங்கேயிருக்கிறது?” என்ற என்னுடைய கேள்விக்கு மூத்தவன் பதில் சொன்னான். அது மூன்று மைல் தூரம்.

“இரண்டணா” கண்ணாடியணிந்தவன் கேட்டான்.”ஐயா, தயவு செய்து இரண்டரை அணா தாருங்கள்.”

“இல்லை!”

“ஓ!”

சோகமாக அந்தச் சிறுவர்கள் கீழே இறங்கினர். ”கொண்டு வாருங்கள்”கண்ணாடியணிந் தவன் சொன்னான்.

அவர்கள் மீண்டும் மேலே வந்தனர். அவன் நல்ல ஜோடி ஒன்றை எடுத்துக் கொண்டு பத்து ரூபாய் நோட்டை எடுத்தான். அந்தச் சிறுவர்களிடம் சல்லிக் காசு கூட இல்லை. அவர்களுக்கு இதுவரை எதுவும் விற்பனையாகவில்லை. காலையிலிருந்தே சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்தச் சிறுவர்களின் வருகையை எதிர்நோக்கி மூன்று மைல் தொலைவில் அடுப்பில் பானை யோடு காத்திருக்கும் பெற்றோரின்  தோற்றம் என் மனதில் எழுந்தது.

கண்ணாடியணிந்தவன் இரண்டு அணாக்களை யாரிடமிருந்தோ வாங்கிச் சிறுவனிடம் கொடுத்தான்.

“இன்னும் அரையணா ஐயா?”

“என்னிடம் அவ்வளவுதானிருக்கிறது; இல்லையென்றால் அதை எடுத்துக் கொண்டு போ!”

சிறுவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு எதுவும் பேசாமல் போய் விட்டனர் அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த கண்ணாடியணிந்த இளைஞன் சிரித்தபடி”உங்களுக்குத் தெரியுமா?நான் கொடுத்த காசில் ஒன்று செல்லாதது”

“ஹா, ஹா, ஹா!” அவர்கள் அனைவரும் சிரித்தனர். அவர்கள் மாணவர்கள். என்ன சொல்ல முடியும். நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். வறுமை, அதன் கொடுமை ஆகியவை அவர்களுக்கு இன்னும் புரியவில்லை. யாரும் பார்க்காத போது நான்  அந்தத் துண்டுக் காகிதத்தை கண்ணாடியணிந்த இளைஞனிடம் கொடுத்தேன். அவன் அதைப் படித்துக் கொண்டிருந்த போது ஆவி பறக்கும் சாதம் மற்றும் பிற உணவு வகைகளுடன் நான் ஹோட்டலில் உட்கார்ந்திருப்பதாக என் மனம் மிதந்தது. “மன்னிக்கவும். என்னிடம் சில்லறையில்லை,”என்று அவன் சொன்னது காதில் விழுந்த்து.

அதைக் கேட்டவுடன் என் உடலிலிருந்து உஷ்ணக் காற்று எழுந்தது. வியர்வையைத் துடைத்துக் கொண்டு  என் அறைக்குப் போனேன்

ஒன்பது மணி; படுக்கையை விரித்து படுத்தேன். ஆனால் கண்கள் மூட வில்லை. தலை வலித்தது. உலகில் வாழும் கோடிக்கணக்கான கையற்ற மனிதர்களை, பசியுடன் தவிப்பவர்களை  நினைத்துப் பார்த்தேன். நான் அவர் களில் ஒருவன். எனக்கென்று என்ன சிறப்பிருக்கிறது?நானும் ஏழை மனிதன்தான். அவ்வளவுதான். இப்படி நினைத்து நான் படுத்துக் கொண்டிருந்தபோது . .  நாவில் நீருறியது. மேத்யூவின் சமையலறையிலிருந்து கடுகு தாளிக்கும் மணம் அது. . . புழுங்கலரிசிச் சாதத்தின் மணம்.

ஒன்பதரை: நான்  அறையை விட்டு வெளியே வந்தேன். யாராவது என்னைப் பார்த்து விட்டால் இதயம் வெடித்து விடும் போல துடித்தது. வியர்வையில் குளித்துக் கொண்டி ருந்தேன். . . நான் முற்றத்தில் காத்திருந்தேன். அதிர்ஷ்டம்! அந்த முதிய வேலைக்காரர் விளக்கோடும் பானையோடும் வந்தார். குழாயை நோக்கிப் போனார். அவர் பத்து நிமிடங்களாவது எடுத்துக் கொள்வார். சத்தமின்றி, நான் கதவைத் திறந்து கொண்டு சமையலறைக்குள் போய் விட்டேன்.

பத்துமணி: எனக்கு வியர்த்தது. ஆனால் வயிறு நிரம்பியிருந்தது. அந்த முதியவர் திரும்பிய பிறகு நான் குழாயடிக்குப் போனேன். தண்ணீர் குடித்தேன். முகம்கை கால் கழுவினேன். அறைக்குத் திரும்பி விட்டேன். பீடியை எடுத்துப் புகைத்தேன். களைப்பாக இருந்தது. படுத்தேன். தூங்குவதற்கு முன்னால் என்னைப் பற்றி நினைத்தேன்; அந்த முதியவர் கண்டுபிடித்திருப்பாரா? கண்டு பிடித்திருந்தால் மேத்யூவிற்கும் தெரிந்து விடும். மற்ற மாணவர்கள், அலுவலகப் பணியாளர்களுக்குத்  தெரிந்துவிடும். அது அசிங்கமாக இருக்கும். ஆனால் என் பிறந்த நாளில் என்ன ஆனாலும் ஆகட்டும். நான் நிம்மதியாகத் தூங்க வேண்டும். கொட்டாவி விட்டேன். அப்போது என் அறைக்கு யாரோ வந்தனர்.

“ஹலோ!” மேத்யூவின் குரல். எனக்கு வியர்க்கத் தொடங்கியது. தூக்கம் தொலைந்தது. நான் சாப்பிட்டது முழுவதும் செரித்து விட்டது. மேத்யூவிற்கு தெரிந்து விட்டது என்று புரிந்தது. முதியவர் கண்டுபிடித்திருக்க வேண்டும். நான் கதவைத் திறந்தேன். ஒரு மின்னல் வெளிச்சம், மனதின் இருட்டிலிருந்து வெளியே வருவது போல.  நான் வெளிச்சத்தில் அகப்பட்டுக் கொண்டேன். மேத்யூ  என்ன கேட்கப் போகிறான்?

பயத்தில் என் நெஞ்சு வெடித்து விடுமென்று நினைத்தேன்.

“நான் சினிமாவிற்குப் போனேன் என்று சொல்ல வந்தேன். விக்டர் ஹூகோவின் ’ஏழைபடும்பாடு” நீ அந்தப் படம் பார்க்க வேண்டும்.”

“ஹூ. . ஹூ.”

“நீ சாப்பிட்டாயா? எனக்குப் பசியேயில்லை. திரும்பும் வழியில் நாங்கள் மாடர்ன் ஹோடடலில் சாப்பிட்டு விட்டோம்.”

’நான் சாப்பிட்டாயிற்று. நன்றி.”

“ஓ, போய்த் தூங்கலாம். குட்நைட்!”

“உம். குட்நைட்!”

~oOo~

இங்கிலிஷ் வடிவிலிருந்து தமிழாக்கம்: தி.இரா.மீனா

(மலையாள மூலத்திலிருந்து இங்கிலிஷ் மொழியாக்கம்: சாமுவெல் மத்தாய்)

நன்றி : Contemporary Indian Short Stories Series II / Sahitya Akademi Publication

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.