குளக்கரை


[stextbox id=”info” caption=”கரியும் உலகு பச்சையாக முடியுமா?”]

சமீபத்தில் வெளிவந்த இந்தக்கட்டுரை உலகெங்கிலும் காற்றாலைகளும், சூரிய வெளிச்சமும் மின்சாரம் தயாரிக்க உபயோகப்படுத்தப்படும் வழக்கம் அதிகரித்து வந்தாலும், சுற்றுச்சூழலில் கரியமிலவாயுவின் அளவு அந்த அளவுக்கு குறையவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறது. சொல்வனத்தில் இருந்து ஆரம்பித்து பல்வேறு ஊடகங்கள் ராட்சத அளவில் வற்றாத இயற்கை வளங்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுவதைப் பதிவு செய்துவரும்போது, அதன் முக்கிய விளைவாக நாம் எதிர்பார்க்கும் காற்றில் கரியமிலவாயு குறையும் நிகழ்வு இல்லை என்றால் எங்கே ஓட்டை விழுந்திருக்கிறது என்று ஆராய வேண்டியது அவசியமாகிறது.

படிம எரிபொருட்களை தவிர்த்து ’பச்சை’ தொழில்நுட்பங்களை உற்சாகமாய் துரத்தும் ஜெர்மனி போன்ற சில நாடுகள் அணு உலைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் முறைகளை நோக்கி முகம் சுளித்து அணுசக்தி நிலையங்களை ஒட்டு மொத்தமாய் மூடி வருவது இதற்கு ஒரு காரணமாகிறது. நிலக்கரி மின்நிலையங்களை மூடினால்தான் காற்றுவெளியில் கரியமிலவாயு சென்றுசேரும் வேகம் குறையும். அணுமின்நிலையங்களை மூடுவதால் அல்ல.

அதற்கப்புறம் மேலோட்டமாக பார்க்கும்போது கண்ணில் படாமல் ஒளிந்திருக்கும் தடைகள் சிலவும் முக்கியமானவை. அனல் மின் நிலையங்களைப்போல் நினைத்தபோது தேவைக்கேற்ப மின் தயாரிப்பை அதிகப்படுத்துவதும்/குறைப்பதும் ’பச்சை’ தொழில் நுட்பங்களில் இயலாமல் போவது, இத்தகைய மின் தயாரிப்பை சரியாக கையாண்டு நுகர்வோரிடம் கொண்டு சேர்ப்பதில் உள்ள பிரச்சினைகள், காற்றாலை மற்றும் சோலார் பேனல்களின் விலை குறைந்து கொண்டிருந்தாலும், இம்முறைகளில் மின்சாரம் தயாரித்து விநியோகிப்பதற்கு ஆகும் அதிகமான மொத்த செலவு (Total Cost of Delivery) போன்ற விஷயங்கள் அந்தப்பட்டியலில் சேரும்.

சீனாவின் மின் தயாரிப்புக்கான நிலக்கரி உபயோகம் உச்சத்திற்கு போய் இப்போது குறைய ஆரம்பித்திருப்பது ஆறுதல். ஆனால் மின் தயாரிப்பில் இன்னும் வெகு தூரம் போக வேண்டியிருக்கும் இந்தியா, நிலக்கரியை இப்போதைக்கு விட்டுக்கொடுப்பதாய் இல்லை.

திருவாளர். ட்ரம்ப் நிலக்கரியை தூக்கி நிறுத்தத்தான் போகிறேன் என்று பிடிவாதம் பிடித்துக்கொண்டிருப்பது (அதைவிட மலிவான விலையில் இயற்கை எரிவாயு கிடைப்பதால்) பொருளாதாரப்பார்வையில் இருந்து அமெரிக்காவுக்கே சரிவராது என்றாலும், அந்தக்கொள்கை இந்த விவாதங்களைக் கொள்கை அளவில் நிச்சயம் பின்னுக்கிழுக்கிறது. அணுப் பிணைப்பு (Nuclear Fusion) போன்ற ஏதாவதொரு புதிய தொழில்நுட்பம் வந்து உலகை காப்பாற்றினால் நன்றாகத்தான் இருக்கும்!

https://www.nytimes.com/2017/11/07/business/climate-carbon-renewables.html
[/stextbox]


[stextbox id=”info” caption=”ஜனநாயகம் என்ற பெயரில் கொடுங்கோல் ஆட்சி”]

மூன்று செய்திகள் த கார்டியன் செய்தித்தாளில் இருந்து (இடது சாரிப் பத்திரிகை. யு.கே பிரசுரம்.) மூன்றும் உலக நாடுகளில் இன்று நிலவும் பெரும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிய செய்திகள்.

முதல் செய்தி, அமெரிக்காவைப் பற்றியது. உலகில் முதல் நிலையில் இருந்த பொருளாதாரம் படிப்படியாகக் கீழிறங்கி வருகிறது, இது நமக்கு ஓரளவு தெரியும். வெளியில் சரிவதை விட, உள்புறம் சரிவு அதிகம். வெளியிலும் ஒவ்வொரு நிலப்பரப்பாக அமெரிக்க அதிபத்தியம் சுருங்கி வருகிறது என்பதை பிறகு கவனிப்போம். இந்தச் செய்தி உள்புறச் சரிவைப் பற்றியது. ஆனாலும் கடந்த சில வருடங்களில் அமெரிக்கப் பங்கு உலக வளத்தில் கூடித்தான் போயிருக்கிறதே தவிர குறையவில்லை. அதெப்படி, மேலும் செல்வம் குவிந்த நாட்டில், மேன்மேலும் வறுமை பெருகுகிறது உள்நாட்டில் என்ற கேள்விக்குத்தான் கீழே சில விடைகள் சுட்டப்படுகின்றன.

அமெரிக்காவில் சொந்த வீடு இல்லாதவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்த காலம் உண்டு. பல பத்தாண்டுகளாக 30% மக்களே சொந்த வீடில்லாது இருந்தனர். வீடே இல்லாதவர்களைப் பற்றிச் செய்தி பேசினாலும், அவர்களின் எண்ணிக்கை, மொத்த மக்கள் திரளில் அவர்களின் சதவீதம் ஆகியன இந்தச் செய்தியில் பேசப்படவில்லை.

2004 இல் 30% இருந்த சொந்தவீடில்லாதவர்களின் பங்கு இன்று 37% சதவீதத்தை எட்டி வருகிறது. மூன்றில் ஒருவர் வாடகை வீடுகளை நம்பி இருக்கிறார். அது மட்டும் பிரச்சினை இல்லை. இப்படி வாடகை வீடுகளில் இருப்பவர்கள் அனேகமாக பெருநகரங்களில் இருப்பதால், அங்கு குடியிருப்புகளில் குறைவான வருமானம் உள்ளவர்களுக்கான வீடுகள் அதிகம் இல்லை என்பதால், அங்கு வாடகை உயர்ந்து வருகிறது. இந்த வாடகை 1960 இல் சராசரி வருமானத்தில் கால் பங்கு போலச் செலவாக இருந்தது, 2015 இல் இதுவே கிட்டத்தட்ட அரைப் பங்கு போல ஆகி விட்டது.

எனவே இரண்டு வேலைகளைப் பார்த்துக் கொண்டு அடித்தள மக்கள் வாழ்வை எப்படியோ கடக்கிறார்கள். இவர்கள் பார்க்கும் வேலைகள் அனேகமும் நிரந்தர வேலைகள் இல்லை, அன்றாடக் கூலி/ ஊதிய வேலைகள். இவற்றிற்குக் கிட்டும் ஊதியம் பல பத்தாண்டுகளாக மிகவும் மெதுவாகவே உயர்ந்திருக்கிறதால், அங்கும் நெருக்கடி.

இது தவிர, அமெரிக்காவெங்கும் 37 லட்சம் மக்கள் வாடகை கொடுக்க முடியாததால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு தெருக்களில் வீடின்றி வாழ்கிறார்கள்.

இப்படி வெளியேற்றப்படுவோரில் கணிசமான பங்கு பெண்கள். அவர்களில் கணிசமான பங்கு கருப்பினப் பெண்கள். இதற்கு மையக் காரணம், அமெரிக்க சமூக அமைப்பில் பரவி இருக்கும் இனவெறுப்பு. கருப்பினத்து ஆண்களில் கணிசமான பங்கு ஆண்கள் சிறையிலடைக்கப்படுகிறார்கள், அல்லது குற்றம் செய்ததாக அவர்கள் பெயரில் பதிவுகள் இருக்கின்றன. இவர்களுக்கு வேலை கிட்டுவது மிகக் கடினம். இவர்கள் இல்லாத குடும்பங்களைப் பராமரிக்க முயலும் அந்த இனத்துப் பெண்கள் கடும் துன்பங்களில் சிக்கியே வாழ்வை நடத்துகிறார்கள்.

இதை அமெரிக்க அரசு எப்படி எதிர் கொள்கிறது? பிரச்சினையைத் தீர்க்கும் வழிகளை நாடாமல், பிரச்சினைகளை மேன்மேலும் ஆழப்படுத்துவதையே தன் பிரதான நடவடிக்கையாக மேற்கொள்கிறது.

உலகிலேயே பெரும் பணக்காரர்கள் வாழும் இந்த நாட்டில், அவர்கள் கட்டும் வருமான வரியை எக்கச் சக்கமாக வெட்டிக் குறைக்கப் போகிறது. ஆனால் நடுத்தரக் குடும்பங்களின் வரிச் சலுகைகளை ரத்து செய்யப் போகிறது. தாழ் நிலை வருமானம் உள்ள மக்களுக்குக் குறைவான வாடகைக்கு அரசு உதவியுடன் கொடுக்கப்படும் வீடுகளைக் கட்ட ஒதுக்கப்படும் நிதியைப் பெரிய அளவில் வெட்டப் போகிறது. வீடில்லாத மக்களுக்கு என இயங்கும் உதவி மையங்கள், வயதானோருக்கான பராமரிப்பு மையங்கள், குழந்தைப் பராமரிப்பு மையங்கள் என்ற உதவிகளுக்கான நிதியை வெட்டப் போகிறது.

இந்த வரிக் குறைப்பால் அரசுடைய நிதி வரத்தில் சுமார் 150,000 கோடி டாலர்கள் அடுத்த பத்தாண்டுகளில் குறையும். வருடத்துக்கு 1500 கோடி டாலர்கள் குறையும். அதே சமயம் ட்ரம்ப் அரசு ராணுவச் செலவுகளைக் கணிசமாக உயர்த்தப் போகிறது. அதாவது அரசு என்னும் குடை நிழல் பாட்டாளி மக்களுக்கும், ஏழை எளியோருக்கும் சிறிதும் கிட்டி விடக் கூடாது என்பதில் இந்த அரசு (டானல்ட் ட்ரம்ப், மற்றும் அவருடைய பின்புலத்து அரசியல் கட்சியான குடியரசுக் கட்சியினர்) மிகக் கவனமாக இருக்கின்றனர்.

வறியோரை நசுக்கி வீதியில் நிறுத்தினால் பொருளாதாரம் வலுப்பெறும் என்று இந்த அரசாட்சிக்கு யாரெல்லாம் சொல்லிக் கொடுத்தார்களோ அந்தப் பொருளாதார ‘நிபுணர்களை’ என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்? இந்த அரக்கர்களை ஆட்சியில் இருத்தினார்களே அந்த மக்களை என்னவென்று கருதுவது?

https://www.theguardian.com/commentisfree/2017/nov/05/renters-republic-broken-income-inequality
[/stextbox]


[stextbox id=”info” caption=”வைக்கோல் போரின் மீது வீற்றிருக்கும் சுவானங்கள்”]

இரண்டாவது செய்தி அமெரிக்க ஆட்சியாளர்களின் அபிமானத்துக்கு உரிய, அந்த ஆட்சியாளர்களின் எஜமானர்கள் என்றே நாம் கருதக் கூடிய ஒரு கூட்டம் பற்றியது.

உலகின் மொத்தச் சொத்துகளில் பாதியை இந்தச் சிறு கூட்டம் தன் கையில் வைத்திருக்கிறது என்று த க்ரெடிட் ஸ்விஸ் வங்கி கணக்கிடுகிறது. உலகத்தில் சுமார் 36 மிலியன் நபர்களே உள்ள இந்த மிலியனேர்கள் உலக மக்கள் தொகையான சுமார் 7600 மிலியன் மக்களில் அரை சதவீதத்துக்கும் கீழான எண்ணிக்கை உள்ளவர்கள். ஆனால் உலகச் சொத்துகளில் 50% இவர்கள் கைவசம் உள்ளது.

2008 ஆம் வருடம் உலகெங்கும் நிதிச் சந்தைகளில் பெரும் சரிவு ஏற்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போது 42.5% சொத்துக்கள் இவர்களிடம் இருந்தது, இன்று 50.1% என்பது சமீபத்திய அறிக்கையின் கண்டு பிடிப்பு. இவர்களின் மொத்த சொத்து மதிப்பு 140 ஆயிரம் கோடி டாலர்கள் (140 ட்ரில்லியன் டாலர்கள்.)

உலக மக்கள் தொகையில் 35000 மிலியன் மக்கள் (வயதில்) வளர்ந்தவர்கள், இவர்கள் ஏழைகள், இவர்களின் மொத்தச் சொத்து மதிப்பு உலகச் சொத்து வளத்தில் 2.7%தான். இவர்களே உலக உழைப்பாளர்களில் 70%.

உலக மில்லியனேர்களின் எண்ணிக்கை கொஞ்சம் உயர்ந்தாலும், 50 மிலியன் டாலர்களுக்கு மேல் சொத்து வைத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதை விட அதிகம் உயர்ந்திருக்கிறது. அதாவது சொத்துக்குவிப்பு இன்னும் வேகமாக நடக்கிறது.

சமீபத்திய  ‘பாரடைஸ்’ ஆவணங்களில் வெளியான தகவல்களை வைத்துப் பார்த்தால் இந்தப் பெரும் ஏற்றத் தாழ்வுக்குக் காரணம் பெருநிதி குவிப்போர் தாம் கட்ட வேண்டிய வரிகளைக் கொடுக்காமல் அரசுகளை ஏமாற்றிச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பி விடுவதுதான் என்பது இந்த அறிக்கையில் தெரிகிறது.

https://www.theguardian.com/inequality/2017/nov/14/worlds-richest-wealth-credit-suisse

மேற்படி செய்தி அறிக்கை த க்ரெடிட் ஸ்விஸ் வங்கியின் 2017 ஆம் ஆண்டு அறிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது எனினும் அந்த அறிக்கையில் உள்ள ஏராளமான தகவல்களை அது நன்கு ஆராயவில்லை. இந்தியா, சீனா, யூரோப் ஆகிய நிலப்பரப்புகள் பற்றிய தகவல்களுக்கும், அவற்றுக்கு என்ன அர்த்தம் என்று அறிவதற்கும் அந்த வங்கியின் வருடாந்தர அறிக்கையைப் பார்த்தல் உதவும். அந்த அறிக்கை இலவசமாகக் கீழ்க் கண்ட வலை முகவரியில் கிட்டும்.

http://publications.credit-suisse.com/tasks/render/file/index.cfm?fileid=A6E9E182-E39B-0353-6751EB076EF35159
[/stextbox]


[stextbox id=”info” caption=”பயிரை மேயும் வேலிகள்”]

அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மனித நாகரீகம் என்பது என்ன, அதை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று கற்பித்தலே தர்மமாகக் கொண்டவை எனப் பல்கலைகளை நாம் கருதுகிறோம். இந்தியப் பல்கலைகள் அனேகமாக இந்த எதிர்பார்ப்பை வெற்றிகரமாக முற்றிலும் தோற்கடித்து விட்டன. காரணம் பல்கலைகளாகவே அவை இல்லை, அவற்றைக் கட்டுப்படுத்தும் அற்பர்களான அரசியல்வாதிகள்,அவர்களின் பல்லக்குத் தூக்கிகளான அதிகாரிகளும், ஜால்ராக்களும் அவற்றை அரசியல் அதிகாரப் பறிப்புக் களமாகவும், ஊழல் கிடங்குகளாகவும் ஆக்கி விட்டிருப்பதுதான். தீவிரமான இடையூறுகளின் நடுவே, இவற்றிலும் சில பல்கலையாளர்கள் இன்னமும் படைப்பாற்றலோடு இயங்குகிறார்கள் என்பது பாலைவனத்திலும் சோலைகள் எங்காவது இருக்கும் என்ற மனித எதிர்பார்ப்பை உறுதி செய்யும் நிகழ்வுகள்.

உலகளவில் சில பல்கலைகள் பெரும் புகழ் பெற்றன. இந்தியாவிலிருந்து ஆண்டு தோறும் சில லட்சம் மாணவர்கள் இந்தப் பல்கலைகளில் சேர விண்ணப்பிக்கிறார்கள், பல ஆயிரம் பேர்கள் சில நாடுகளில் உள்ள பல பல்கலைகளில் போய்ப் படிக்கவும் செய்கிறார்கள். ஆனால் இந்திய மாணவர்கள் பெருமளவும் பொறியியல், அறிவியல், தொழில் நுட்பம் என்ற துறைகளில் படிக்கவே அங்கு செல்கிறார்கள். மனித ஆய்வுத் துறைகளில் போய்ப் படிப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இருப்பினும் இந்தியப் பல்கலைகளில் இன்றளவும் பாட போதனைக்கு மனித ஆய்வுத் துறைகளில் பயன்படுத்தப்படும் புத்தகங்களில் ஏராளமானவை மேற்படி பல்கலைகளின் அச்சகங்களும், பிரசுர நிலையங்களும் பிரசுரிப்பவைதான்.

இப்படிப் பட்ட பல்கலைகளில் சில ஆக்ஃபோர்ட் பல்கலை, கேம்ப்ரிட்ஜ் பல்கலை, ஹார்வர்ட் பல்கலை, கலிஃபோர்னியாவின் பெர்க்லி நகரில் உள்ள பல்கலை, இத்தியாதிகள். இவை தம் பல நூறாண்டு அல்லது ஒரு நூறாண்டு இயக்கத்தில் உலக கல்வி அரங்கில் பெரும் ஆகிருதியுடன் உலவுபவை.

இத்தகைய பல்கலைகள் மாணவர்களை மேம்பட்ட மனிதர்களாக ஆக்கி வெளி அனுப்புவதன் மூலம் மனித நாகரீகம் மேம்பட வழி உண்டு என நாம் நினைக்கிறோம். அதே நேரம் இப்பல்கலைகள் தம் நடத்தையால் மேம்பட்ட நாகரீகத்தைக் காட்டுகின்றனவா என்றும் நமக்குக் கேள்வி வரும்.

இந்தச் செய்தி அறிக்கையைப் பார்த்தால் அவை அப்படி ஒன்றும் கலங்கரை விளக்கமாக ஒளி வீசும் நடத்தையை நமக்குக் காட்டவில்லை என்பது தெரியும். சமீபத்தில் வெளியான பாரடைஸ் ஆவணங்கள் எனப்படுவன உலகின் பெருந்தனக்காரர்களும் பெரு நிறுவனங்களும் எப்படித் தம் அசாதாரணமான நிதிக்குவைகளைப் பதுக்கி வைத்து அரசுகளுக்கு வரி கொடாமல் ஏய்த்துத் தம்மை மேன்மேலும் செல்வந்தர்களாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன.

அந்தப் பட்டியலில் நமக்கெல்லாம் ஏமாற்றத்தைப் பெருக்கும் விதமாக உலகின் புகழ் பெற்ற பல பல்கலைகளும் உண்டு. குறிப்பாக ஆக்ஸ்ஃபோர்ட், கேம்ப்ரிட்ஜ் பல்கலைகளும், உலகின் வரி தவிர்ப்பு முறை முதலீட்டுக்கு வழி செய்யும் பல சிறு தீவு நாடுகளில் பணத்தைப் பதுக்கி அங்கிருந்து முதலீடுகளைச் செய்கின்றன என்பது தெரிய வந்திருக்கிறது. பல புகழ் பெற்ற அமெரிக்கப் பல்கலைகளும் இந்தப் பட்டியலில் உண்டு.

அவை என்னென்ன விதங்களில் முதலீடு செய்திருக்கின்றன என்பதை ஒரு சுருக்கு அறிக்கையாக இந்தச் செய்தி தருகிறது.

https://www.theguardian.com/news/2017/nov/08/paradise-papers-oxford-cambridge-invest-millions-offshore-funds-oxbridge
[/stextbox]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.