அகவெளியில் உலவும் குரல் – மௌனி

மணிக்கொடி காலத்திலும் சரி, இன்றும் சரி, மௌனியின் படைப்புகள் குறித்து இரண்டு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அவர் மிகச்சிறந்த எழுத்தாளர் என்றும், மிகச்சாதாரணமான எழுத்தாளர் என்றும் இரு நிலைகளில் பார்க்கப்பட்டு வந்திருக்கிறார். மௌனியின் ஆக்க உலகம் மிகச் சிறியது. அவர் தொட்ட பரப்பும் சிறியது. பார்த்தப் பார்வையும் ஒரு பக்கமானது. மொத்தம் 24 கதைகள்தான் எழுதியிருக்கிறார். அதிலும் அவர் படைப்பாளியாக ஒரு ஆவேச மனநிலையில் இயங்கியது 1936, 1937 இரண்டு ஆண்டுகள்தான். இந்த இரு ஆண்டுகளில் 14 கதைகள் எழுதியிருக்கிறார். பின்பு எழுதியவை நிர்பந்தத்தின் பொருட்டோ, நினைவூட்டலின் பொருட்டோ அந்த இரண்டாண்டில் உண்டாக்கிக் கொண்ட கலைஞன் என்பதின் பொருட்டோ எழுதப்பட்டவை.

மணிக்கொடி இதழைக்கூட மௌனி முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதும் தெரிய வருகிறது. 1938-ல் ஒரு கதை மட்டும் எழுதியிருக்கிறார். மணிக்கொடியில் எழுதிய எழுத்தாளர்களில் புதுமைப்பித்தனின் இடம் சந்தேகத்திற்கு இடமின்றி நிலைபேறு பெற்றுவிட்டது. அந்த இடத்தை கு.ப.ரா.வும் முயன்று பிடிக்கிறார். இளம் வயதில் மரணித்திருந்தாலும் புதுமைப்பித்தன் தொட்ட பரப்பு விசாலமானது. மௌனி நீண்ட காலம் வாழ்ந்திருந்தும் எல்லைகளை விரிக்காதவர்.

மௌனி சமூகச் சிக்கல்களை எந்தக் கதைகளிலும் ஆராயவில்லை. காதலின் வீழ்ச்சியைத்தான் பெரும்பாலான கதைகள் சொல்லுகின்றன. அதற்கான காரணங்கள்கூட இல்லாமலே. ‘மிஸ்டேக்’, ‘மாறாட்டம்’, கதைகளில் புற இயக்கம் பின்னணியாக அமைந்தாலும் தனி மனிதனின் நடத்தைத் தவறாக முடிகிற நகைப்பிற்குரிய விசயத்தைத்தான் சொல்கின்றன. கூட்டிக்கழித்துப் பார்க்கிறபோது தனி மனிதர்களின் அகப் பிரச்சனைகளைப் பேசுபவைதான் மௌனி கதைகள். காதல், குடும்பம், விலைமாதர், இசை என்ற நான்கு பிரிவுகளுக்குள் மொத்தக் கதைகளையும் அடக்கிவிடலாம். இதில் செம்பாதிக் கதைகளின் மையம் காதல்தான். மிக மெல்லிய இழைதான் காதலே தவிர அதன் ரீங்காரம் கற்பனைத் தோற்றங்களில் எழும் பல்வேறு மடிப்புணர்வுகள்.

மணிக்கொடி காலகட்டத்தில் கல்கி, பி.எஸ்.ராமையா, த.நா. குமாரசாமி, எஸ்.வி., ரஸிகன், ந. சிதம்பரசுப்ரமணியம் போன்ற பலர் கதைகள் எழுதியிருந்தாலும் அவர்களை சிறுகதை ஆளுமையாளர்களாகக் கொள்ள முடியாது. பி.எஸ். ராமையா 300 கதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறார் என்றாலும் சிறுகதைத் துறையில் இலக்கியப்பூர்வமான கலைஞன் என்று சொல்ல முடியாது. ‘நட்சத்திரக் குழந்தைகள்’, ‘கார்னிவல்’, இப்படி நான்கைந்து நல்ல கதைகள் தந்திருக்கிறார் என்பதோடு சரி. படைப்பாளியின் தனித்துவ குணமும், படைப்பெழுச்சியும், பார்வையும், வடிவமும், ஒன்றுக்கொன்று கூடி கலந்துதான் உயர்ந்த படைப்புகள் உருவாகின்றன. இந்த வகையில் முன்னும் பின்னுமற்ற தனித்தன்மை கொண்ட படைப்பாற்றலை வெளிப்படுத்தியவராக மௌனியை இனம் காண வேண்டியிருக்கிறது.

பிற்கால கதைகளில் நிதானமும் சற்றுக் கூடுதலான கதைத்தன்மையும் வடிவ நேர்த்தியும் தத்துவச் சாயலும் உண்டு. என்றாலும் ஆரம்பகாலக் கதைகளில் வெளிப்பட்ட மனதின் தறிகெட்ட தன்மை பிற்கால கதைகளில் இல்லை. இந்தத் தறிகெட்ட மனவெளிப்பாடுகளை உளறலாகக் கொட்டாமல் மனத்தின் தவிப்புகளாக தேர்ந்த மொழிக்குள் வெளிப்படுத்தினார். அத்தோடு புதுசான அனுபவங்களைப் புதுசான உணர்வில் கொடுக்கவும் அவரால் முடிந்தது. இந்த இரண்டாண்டு கதைகளில் வெற்றி தோல்வி உண்டு. ஆனால் படைப்பெழுச்சியின் கொந்தளிப்பான மனநிலையை இக்காலக் கதைகளில்தான் காண முடிகிறது.

மௌனி ஒரே சமயத்தில் ஐந்தாறு கதைகளை எழுதி மணிக்கொடிக்கு அனுப்புகிறார். பி.எஸ். ராமையா அதனை ஒவ்வொன்றாக வெளியிடுகிறார். இதில் ‘ஏன்’ என்ற மிக எளிமையான கதையை வெளியீட்டின் அடிப்படையில் முதல் கதையாகக் கொள்கின்றனர் . இந்தக் கதை, பள்ளி பருவத்தில் தோன்றும் காதல் கதை. பத்தாம் வகுப்பு படிக்கும் மாதவனுக்கு எட்டாம் வகுப்பு படிக்கும் சுசீலா மீது விருப்பம் தோன்றுகிறது. அவன் தினமும் நாம் இருவர் சேர்ந்தே பள்ளிக்குச் செல்வோம் என்கிறான். அதற்கு அவள், “ஏன்?” என்கிறாள். சுசீ உன்னை என்றும் மறக்க மாட்டேன், என்கிறான். அதற்கும் அவள், “ஏன்?” என்கிறாள். அதற்கு மேல் இதை அவனால் விளக்க முடியவில்லை. விருப்பத்தை சுசீலா எதிர்கொள்கிற விதத்தில் அந்த அளவில் அந்த விருப்பம் கலைந்து போகிறது. சுசீலாவிற்கு வேறிடத்தில் திருமணம் நடக்கிறது. நான்காண்டுகள் கழிகின்றன. அவன் சுரம் கண்டு இறக்கும் தருவாயில், “ஏன், ஏன்?” என்று புலம்புகிறான். முடிவெடுக்க முடியாத, எதிர்கொள்ளத் தெரியாத பருவம் அது. அவன் காய்ச்சலில் மரணமடைகிறான். தூக்கிச் செல்லும் உடலை சுசீலா காண்கிறாள். கண்ணீர் வருகிறது. “ஏன், இந்தக் கண்ணீர்?” என்று தனக்குள்ளே கேட்கிறாள். இது கதை நிகழ்வு. இந்திய பழக்க வழக்கம் சார்ந்த உளவியல் இந்தக் கதையில் இயங்குகிறது.

இந்தக் கதாமாந்தர்களுக்குள் ஏற்படும் அனுபவத்தை முதலில் வெளிப்படுத்தி, மனதிற்குள் உருவாகும் சிக்கலைக் காட்டி, எல்லா உணர்வுகளும் வேறொரு நியதியில் முடிவடைவதாக மூன்று தளங்களில் இந்தக் கதையை நகர்த்தி முடிக்கிறார்.

1. சுசீலா உரிய பதிலைச் சொல்லாமல் போகிறாள். மாதவன் தொடர்ந்து வரும் நாட்களில் வருத்தத்தோடு இருக்கிறான். இந்தக் காதல் மனநிலையை இப்படி வெளிப்படுத்துகிறார்.

“அவள் அருகில் அவன் நெருங்க நெருங்கத்தான் அவளுக்கு வெகு தூரத்திலிருப்பதாக எண்ணம் ஏற்பட்டது அவனுக்கு.”

“சில சில சமயத்தில் ராஜமய்யரின் வீட்டுத் திண்ணையைப் பார்ப்பான். அங்கு சுசீலாவைப் பார்க்க முடியாததும் அவன் மூளையில் படவில்லை. அதுவும் அர்த்தமில்லாமலும் ஏன் என்று தெரியாமலும் பார்ப்பதுதான்.”

2. நான்காண்டுகளுகுப்ப்ன் அவள் அவனைப் பார்க்கிறாள். பார்த்ததும் அவன் முகத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இந்த மாறுதல் ஏன் என்று தாக்குகிறது. இந்த இக்கட்டை,

“திடீரென்று ஏற்பட்ட சிந்தனை மாறுதலால் அவன் சந்தோஷத்தையும் மன நிம்மதியையும் இழந்தான் என்று சொல்வது அவ்வளவு சரியல்ல. அவள் பார்வையின் கேள்விகுறி அவனைத் தாக்கி அதற்குப்பின் மனதில் தனக்குச் சாதகமாக அளித்துக்கொண்ட விடையும் மற்றொரு கேள்வியின் ஆரம்பம்தானே?”

“அவன் யோசனைகளெல்லாம் ஆரம்பித்த இடமான சுசீலா இடத்திலே முடிவடைந்து, முற்றிலும் முடியாமல், திரும்பவும் ஆரம்பிப்பது போன்று சலிக்க ஆரம்பித்தன,”

என்று மனதில் உருவாகும் சிக்கலைக் காட்டுகிறார்.

3. இந்த நினைப்பிலிருந்து விடுபட மரணம் மட்டுமே சாஸ்வதமளிக்கும் என்ற நிலைக்கு நகர்கிறது கதை.

“அவன் இறக்கும்போது தன் ஜீவியத்தை வெறுக்கும் கசப்பின் வேகத்தை உறுதியுடன் எதிர்ப்பவன் போன்று, “மூட்டைகளைக் கட்டு, இன்று பட்டணத்துக்குப் புறப்பட வேண்டும்,” என்று சொல்லி இறக்கிறான். இந்த மரணம் சுசீலாவிற்குக் கண்ணீர் விழ வைக்கிறது. இந்தக் கண்ணீர் தன்னை மீறி ஏன் வருகிறது என்று தவிக்கிறாள்.

மௌனியின் கதைகளில் மிகச் சாதாரணமான கதை இது. ஆனால் இந்த முதல் கதையிலேயே காதல் உணர்வின் உள்முகப் பாய்ச்சல் விரிகிறது. இந்த வாழ்க்கையை ஒரு தத்துவார்த்த நிலையில் பார்த்திருப்பதும் தெரிய வருகிறது. இதெல்லாம் “ஏன்” என்ற கேள்விக்கு பொருளாழத்தையும் தருகிறது. இத்தனை ஒரு மானிட சோக விளையாட்டாகக் காட்டுகிறார்.

ஒன்று முடிந்தாலும் அதனோடு தொடர்புடைய மற்றொன்று இருக்கிறது. அது நேற்று போல இல்லாமல் ஏன் வேறு விதமாக இருக்கிறது என்பதை சுசீலாவை வைத்து மேலும் மூன்று வரிகள் எழுதுகிறார்.

சுசீலா ஊரிலிருந்து வந்தது முதல், “அவள் கண்கள் என்றுமில்லாத ஒரு மகத்தான சோகம் கலந்த வசீகரத் தோற்றமுடையவையாக ஏன் தோன்றுகின்றன என்று அறிய முடியாமலே, அவளைப் பார்க்குங்கால் ஆனந்தமடைந்து கொண்டு இருந்தான் அவள் கணவன்,” என்கிற வினோத உள்ளத்தையும் காட்டுகிறார். இந்தச் சோகம் ஏன் என்று கணவன் கேட்க மாட்டானா என்று நமக்குத் தோன்றவும் செய்கிறது. சோகத்தை சோக உணர்வில் பார்க்காமல் அதை ஒரு அழகியலாகப் பார்க்கிற மனம் மௌனியிடம் இருக்கிறது.

இந்தக் காதல் என்ற உணர்வு ஏன் மனதாலும் உடலாலும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது, அந்த மாற்றங்களின் வேர்களைக் கண்டடைந்துவிட முடியுமா என்ற தேடலில் விளைகிற தவிப்பில் – சிந்தனையின் தளத்தில் மொழிக்குள் கொண்டு வருகிற எத்தனிப்புத்தான் அவரது தனித்துவமாகத் தெரிகிறது. இதை அவரது முதல் கதையிலேயே இனம் காண முடிகிறது.

பொதுவாக, மௌனியின் கதையை மூன்று நான்கு வரிகளில் சொல்லி விடலாம். அவ்வளவு சன்னமானது. கதை அடர்த்தி இல்லாதது. அக்கதையில் வெளிப்படும் மன உலகம் செறிவானது. எண்ணங்களின் மொழித் தோற்றங்களை அடுக்கடுக்காக வெளிப்படுத்துவது.

இவரது காதல் கதைகள் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளப்பட்டவை அல்ல. புரிந்து கொள்ளப்பட்டவை. பிரிந்தவர்கள் சந்திக்க நேர்கிற தருணத்தில் தாறுமாறாகத் தறிகெட்டு எழும் எண்ணங்களை அப்படியே ‘ராவாக’ கொட்டுவதில்லை. அவ்வெண்ணங்களை வார்த்தெடுக்கிறார். அர்த்தம் தொனிக்கும்படியான படிமக் காட்சிகளாகவோ விவரணைகளாகவோ, இன்ன பிற முறைகளிலோ தீட்டி புதுமையான அனுபவங்களாக மாற்றுகிறார். சில சமயம், பித்தேறிய ஒரு கவிஞன் புனைகதையைக் கையாள்கிற விந்தையாகவும் எழுத்து அமைகிறது. விளக்க முடியாத சில விஷயங்களில் மூழ்கித் தேடி உணர்ந்த ஒளித்தெறிப்புகளின் குடுவைதான் சில கதைகள் என்று எண்ணும்படி இருக்கின்றன. இந்தத் தேடலை வைத்துதான் புதுமைப்பித்தன் இவரைத் தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்று அடையாளப்படுத்துகிறார்.

இவ்விடத்தில் மௌனி எழுத்தின் பலம் பலவீனம் பற்றி சேர்த்து சொல்லிச் செல்வது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. காதல் விவகாரங்களில் ஆண்கள் அதிகம் சஞ்சலமுள்ளவர்களாகவும் பெண்கள் அதனை நிதானமாகக் கையாள்பவர்களாகவும் தெரிய வருகின்றனர். காதலன் அறைக்கு காதலி வந்து பேசிவிட்டுச் செல்ல முடிகிறது. காதலனைத் தன் அறைக்கு அழைத்துச் செல்ல முடிகிறது. காதலன் சாவதற்கு முன் கணவனோடு வந்து பார்க்க முடிகிறது. இப்படி மௌனி காலத்துப் பெண்கள் மௌனி கதைகளில் திடச் சித்தம் கொண்டவர்களாக வருகிறார்கள். இதைவிட, எழுத்தாளனின் கனிந்த பார்வை வெளிப்படும் இடம் இருக்கிறது. இன்று பாலியல் தொழிலாளியின் கதையை எழுதுகிறேன் என்று நெஞ்சை நிமிர்த்தும் பலர் படுக்கையறை லீலைகளைத்தான் அதிகம் எழுதுகின்றனர் (கைபேசியில் இதைவிடவே இன்று பார்க்க முடியும்!). அவர்களின் சிக்கலான வாழ்க்கையைச் சொல்வதில்லை. மௌனி காதலிகளைப் பற்றியும், தேவதாசிகளைப் பற்றியும்தான் அதிகம் எழுதினார். பாலியலுக்கு அப்பாற்பட்டு சீரழிந்த தாசிகளின் நேசத்தைப் பற்றித்தான் எழுதினார். சேர்ந்து வாழ முடியாது போன காதலிகளின் மன ஓலத்தைதான் எழுதினார். இதில் ஒரு ஆணிய பார்வை இருப்பதையும் சேர்த்தே சொல்லி விடுகிறேன்.

கதைகளில் வரும் உணர்வுகளின் தத்தளிப்புகள் கதாமாந்தர்களின் மன வார்ப்பிற்கும் கதையின் அடியிழைக்கும் இயைந்து அமைகிறபோது சிறந்த ஆக்கமாக மாறியிருக்கின்றன. கதாசிரியனின் எண்ணத் தெறிப்புகள் கதையின் இழையிலிருந்து விலகும்போது துருத்தலாக அமைந்து கலையனுபவத்தையே சிதைக்கிறது. ‘மனக்கோலம்’ கதையை உதாரணமாகச் சொல்லலாம். எதிர்வீட்டு சுப்பு ஐயரின் மனைவி மீது கேசவனுக்குக் காதல் ஏற்படுகிறது. விடியற்காலையில் வாசல் முன் அவள் கோலம் இட்டுச் செல்லும்போது திரும்பிப் பார்ப்பாள். சந்திப்பு நிகழும். இதுதான் கதையின் மையம். இது தரும் மோகத்தில் அவன் கொள்ளும் மனச் சஞ்சாரங்கள், கோலமிட வராத நாட்களில் அவன் கொள்ளும் தத்தளிப்புகள் என மனவுலகம் விரிகிறது. இதைவிட்டு விலகி கதைக்குள் பழமை புதுமை பற்றிய, படைக்கப்பட்ட மனிதனின் நிலை பற்றிய தத்துவ வியாக்கியானங்கள் (சுவையான சிந்தனைகள்தான்) என்று எதையெதையோ கொண்டு வந்து சம்பந்தமற்றுக் குவிக்கிறார். இரண்டு பக்க அளவு இந்த சிந்தனை பத்திகள் துருத்தலாக இருக்கின்றன. கேசவனின் மன உலகிற்கு எவ்விதத்திலும் பொருந்தவில்லை. மனதில் தோன்றும் சிந்தனை தெறிப்புகளை மௌனி அவ்வப்போது குறித்து வைப்பார் என்றும், கதை எழுதும்போது இந்தக் குறிப்புகளைப் பொருத்தம் கருதி புகுத்தி விடுவாரென்றும் சிலர் சொல்லி இருக்கின்றனர். இக்கதையில் அப்பகுதி துருத்தலாக இருக்கிறது. அப்பகுதி இல்லாமல் இருந்தால் கதை இன்னும் சிறப்படைந்திருக்கும்.

எனது பதினெட்டாம் வயதில் படித்த மௌனியின் முதல் கதை இது. கெளரி மீது கேசவன் கொள்ளும் காதல் உணர்வும் கோலமிடும் சித்திரமும் இப்போது மறுபடி படிக்கும் முன்பு வரை மங்கலாக நினைவில் இருந்தது. கோலமிடுதல் கதையில் நொடி நிகழ்வாக இல்லை. நினைவு கூறப்படுகிறது. எனது மனதில் நொடி நிகழ்வு போல படிந்திருந்தது. சில பகுதிகளில் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொள்ள முடியாமல்தான் வாசித்த ஞாபகம். அந்தப் பகுதிகள் எவை என இப்போது தெரிகிறது. அவை இந்த சம்பந்தமற்ற செருகல்கள்தான்.

“இவனை முதன் முதல் பார்த்தபோது எங்கோ இதற்கு முன் பார்த்ததாகத் தோன்றும்”, “சிதைந்த கோயில் சுவர்களில் புற்கள் முளைத்திருந்தன. காலம் மேய்ந்து கொண்டிருந்தது”. இப்படியான மனத்தோற்றங்கள் வேறு வேறு கதைகளிலும் வருகின்றன. ஒரு கதைக்கும் மச்ற்றொரு கதைக்கும் நான்கைந்தாண்டுகள் பத்தாண்டுகள் என இடைவெளி விட்டு வந்திருக்கின்றன. அதனால் சில தோற்றங்கள் நிழலாடியபடியே இருந்திருக்கும். திரும்ப எழுதப்பட்டிருக்கலாம். பயன்படுத்திய குறிப்புகளை அடித்திருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம்.

‘மனக்கோட்டை’ கதையில் சங்கரின் மரணத்தைப் பற்றி சங்கரின் நண்பனான சேகரிடம் சொல்கிறவன் அண்ணன் போல் தெரிகிறான். இடையில், “இவன் இறந்த செய்தியைக் கேட்ட தகப்பனார் அங்கேயே இறுதிக் கடன்களை செய்துவிடும்படி அவன் தகப்பனார் தந்தி அனுப்பினார்,” என்று செய்தி சொல்கிறவன் கூறுகிறான். அப்படியென்றால் கூறுபவன் யார்? மருமகனா? மருமகனாக இருக்க முடியாது. முன்பு சேகர் இவ்வீட்டிற்கு வந்ததைப் பற்றி நினைவு வைத்து உளப்படுத்திப் பேசுகிறான். இவ்விடம் தெளிவில்லை. “பூமிக்கு அடியில் இரண்டாயிரம் அடி பாதாளத்தில் உள்ள சுரங்கத்தில் விஷம் தீண்டி இறந்து விட்டான்,” என்கிறார். சுரங்கத்தில் பாம்பு வந்திருக்குமா? விஷ வாயுவா? இதுவும் தெளிவில்லை.

‘எங்கிருந்தோ வந்தான்’ கதையில் அவர் என்று ஆரம்பிப்பவர் பின் அவன் என்று கதையை நடத்துகிறார். இதே கதை இரண்டு வேறு வேறு கதைகளின் இணைப்புகூட. அப்படிச் செய்ததாக மௌனியே சொல்லி இருக்கிறார். முதல் பகுதி கதைசொல்லியின் விநோதக் கற்பனைகளில் நிலைக்கிறது. இரணடாம் பகுதி தங்கும் விடுதியில் சந்தித்த சங்கரன், அவன் காதலி பத்மா, பற்றிய பகுதியாக இருக்கிறது. இரண்டு பகுதிகளின் தொனியும் வேறு வேறாக இருக்கின்றன. ஒருமை கூடிவராத கதை ‘எங்கிருந்தோ வந்தான்’. இப்படி கதைகளில் கோளாறுகள் உண்டு. ஒரு வாசகனாக படிக்கும்போது இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தாண்டி விடலாம். படைப்பாளியாகப் படிக்கும்போது உள்ளத்தில் நம்பிக்கையை இழக்கச் செய்கின்றன. இந்த ஒரு கதையில்தான் பெண்ணின் மன பேதலிப்பை ஓரிடத்தில் சொல்லி இருக்கிறார். இந்தக் கதையின் பிற சிறப்பான வெளிப்பாடுகளைப் பின்னால் பார்க்கலாம்.

பல கதைகளில் மரணம் தேவையில்லை என்றாலும் அதை கதைக்கு ஒரு புள்ளியாகக் கொண்டு வரைகிறார். அதாவது, மரணம் எந்த பரிமாணத்தையும் தருவதில்லை. மாந்தர்களை சந்திக்க வைக்கிற மொண்ணையான உத்தியாகத்தான் இருக்கிறது. கதை நிகழ்வு என்பது பிரிவும் சந்திப்பும்தான். ஆணையும் பெண்ணையும் எந்த பின்னணி-பின்புலமும் இன்றி சந்திக்க வைத்து விடுகிறார். பேச விடுகிறார். இந்த வகையில் சமூக உறவு பலகீனமாக இருக்கிறது. காதல் பிரிவு, மனப்பிளவு, தன்னிலிருந்து தான் பிரிதல், உறவுப் பிரிவு, இசைப் பிரிதல், நினைவிலிருந்து கனவு பிரிதல் என்ற விதமாய் இருக்கின்றன. இதனை ஆதாரமாகக் கொண்டு மனப்பிராந்தியத்திற்குள் புகுந்து சாகசங்களை நிகழ்த்துகிறார். அகப்பிராந்தியம் விரிய விரிய இந்த பலவீனங்கள் மறையவும் செய்கின்றன. யதார்த்த தளமாக இருந்திருந்தால் கதையாகவே நிலைக்காது.

கடுமையான சமூக- குடும்ப நெருக்கடியிலிருந்து இந்த உள்முகப் பாய்ச்சல் வெளிப்பட்டிருந்தால் பெரும்படைப்பாளியாக மாறியிருப்பார். பல கதைகளில் வாழ்க்கை நெருக்கடிகள் இல்லை. இழந்து போன காதலின் மீது வருத்தம் கொள்கின்றன. வாழ்வின் பல்வேறு கோணங்களைச் சமூக பரப்பில் தேடிச் செல்லாமல் தனக்குள்ளேயே தேடினார். உலகில் எதனை எத்தனை விதமான மனிதர்கள், எத்தனை எத்தனை விதமான பிரச்சினைகள், எத்தனை விதமான எண்ணங்கள், எத்தனையோ விதமான புற உலக காட்சிகள், கனவுகள் இருக்கின்றன. அவற்றில் அவர் தன்னை கரைத்துக் கொள்ளவில்லை. வாழ்க்கைப் பரப்பே இல்லை. மாந்தர்களின் தொழில் சார்ந்த உலகம் விரிவு கொள்ளவில்லை.

இதே போல கதை மாந்தர்கள் கொள்ளும் துக்கங்களுக்குக் கடுமையான பகைப்புலம் இல்லை. இறப்பிற்கும் காதல் தோல்விக்கும் எளிய காரணங்கள்கூட இல்லை. கதைக்காக செத்துப் போகிறார்கள். கதைக்காக காதலில் தோல்வியடைகிறார்கள் என்ற அளவில்தான் இருக்கின்றன. திருமணத்திற்கு சிறிதளவு முயன்று தோற்றதாகக் கூட இல்லை. விரும்பியவர்கள் என்று யூகித்துக் கொள்கிற அளவில்தான் இருக்கின்றன.

இவரது கதைகளில் வருகிற உளச்சிக்கல் என்பது வாழ்க்கையை பாதிக்கிற விதத்தைச் சொல்வதில்லை. நிகழ்வுகளின், காட்சிகளின், அக்கண நேரம் மனம் கொள்ளும் சஞ்சலங்களும் பகற்கனவுகளும் கற்பனைகளும்தாம். இந்தப் படைப்பு மனோநிலையின் ஊடே வாழ்வின் சிக்கலைத் தொடக்கூடிய எல்லை இல்லை. இந்தச் சாத்தியப்பாட்டின் ஊடே அதை வென்றெடுத்திருந்தால் மிகச் சிறப்பாக இருந்திருக்கும். எழுதப்பட்ட இந்தக் கதைகளின் வழி பார்வையின் வீச்சு வெளிப்பட்டிருந்தால் மகத்தான படைப்பாளியாக உருவாகி இருப்பார். சமூகம் என்ற புழுதியில் விழுந்து புரள விரும்பியதில்லை. அவரை ஒரு கதை வேதாந்தி என்று கூறலாம். உலக நடவடிக்கைகளில் ஈடுபாடற்று தனக்குப் பிடித்ததை மட்டும் செய்தார்.

இந்தவிதமான பலகீனங்களுக்கு அப்பால் கதைகள் அடர்த்தியான குணரூபத்தைப் பெற்றுவிடுகின்றன. பின்னலான உளத் தவிப்புகளில் மாந்தர்களின் அக உலகம் விரிகிறது. காதல் கதைகளில் சோகங்களை அல்ல, சிக்கலான மனப் பதட்டங்களையே காண்கிறோம். பூவையல்ல அதன் வாசனை குறித்துத்தான் மௌனிக்கு அக்கறை.

இணையாது விலகி நிற்கும் இரு உள்ளங்களின் இருப்பு குறித்த மனநிலைகளைப் பற்றியே அதிகம் பேசுகிறார். இந்த எண்ணங்கள் தத்துவச் சாயலோடு வெளிப்படுகின்றன. இந்திய மனம் அழுத்தமாகவே வெளிப்படுகிறது. கதைமாந்தர் நினைக்கும் நம்பிக்கை சார்ந்த மனநிலையை எழுதுவது சிரமமானதில்லை. இந்த மனநிலைக்குள் ஒருவித தத்துவ நோக்கிக் காண முயல்வது வேறு வகையானது. விசயத்தை சிந்தனை வழி அறிவதற்கு மாறாக உணர்தலின் வழி தெரிந்து கொள்ள முயன்ற விசேச பாதை அவருடையது.

இந்த சுயத்துவமான தேடல் பிற மணிக்கொடி எழுத்தாளர்களிடமும் சரி, அவர்களுக்கு முன்னும் பின்னும் சரி, மற்றவர்களிடம் பொங்கி வரவில்லை. மௌனியிடம் மட்டுமே வெளிப்பட்ட தனித்துவமான கலை வெளிப்பாடாக இருக்கிறது. நகுலன், சுந்தர ராமசாமி, பிரமிள் முதலியோர் மௌனியின் பாதையில் முயன்று பார்த்திருக்கின்றனர். அவர்களின் முயற்சி மனதின் உள் ஆழங்களுக்குள் செல்லாமல் மேல்நிலையிலேயே சுற்றிச் சுற்றி வருவதாக இருக்கின்றன. “நிசப்தத்தில் போடுகிற குருவிகளின் சத்தம்” என்று ஒரு கவிதையில் தேவதச்சன் இந்த மனநிலையைத் தொட்டிருக்கிறார். சு.ரா.வின் ‘கன்னியாகுமரியில்’, நகுலனின் ‘ரயில் நிலையம்’ கவிதைகள் இவரது தெறிப்புகளில் இருந்து உருவானவைதான். மௌனியின் எழுத்து வன்மையைப் புரிந்து கொள்ள இந்த முயற்சிகள் பயன்படலாம்.

மௌனி காஃப்காவுடன் ஒப்பிடத்தக்கவர் என்று விமர்சகர்கள் அறுபதுகளில் சொன்னதுண்டு. உண்மையில் காஃப்காவுக்கு நேர் எதிரானவர் மௌனி. காஃப்காவின் எழுத்து பிடிக்கும் என்பது வேறு விசயம். மௌனியின் எழுத்து தனித்துவமானது. வீடும் சமூகமும் தந்த நெருக்கடியில் பதட்டத்திற்குள்ளானதை படைப்புகளாகத் தந்தவர் காஃப்கா. சமூகத்தை விமர்சனத்திற்கு உள்ளாக்கும் புறவயமான உருவகத்தைக் கைகொண்டார். மௌனி இவ்வகையான நெருக்கடிகளுக்கு உள்ளாகவில்லை. வாழ்க்கையில் கொண்ட விருப்பங்கள் கண்முன் சரிந்து சிதைவது அவரை பாதிக்கிறது. இதுவெல்லாம் தீர்மானிக்கப்பட்ட கோலங்களோ என்ற மனநிலை மோதியபடியே இருக்கிறது அவருள். சாசுவத தன்மைக்காக ஏங்கிய உள்ளம் கண்ட நிச்சயமின்மை, சரிவு, பாழ்பட்டு சிதைவதில் பூதாகரம் உண்டாகும் மனக்குறளியின் கூத்துகள்தான். இவரது படைப்பின் ஆதார சுருதி. இதற்கு அகத்தை உருவகமாகக் கொண்டு மன நிழலில் குரல்களை எதிரொலிக்கச் செய்தார்.

கற்பனையின் பல்வேறு சாத்தியங்களை, எத்தனையோ மன விசித்திரங்களை, மன நெருக்கடிகளை, அனுபவமாக்கித் தெறிக்கிற ஒளி வீச்சுக்களை, வாழ்வின் மாயத்தன்மைகளுக்குள் இருக்கிற ரகசியங்களை, சிக்கலான மனப்பின்னலில் நிரந்தரத்துவத்திற்காகத் தாவும் மனங்கள் அடைகிற நிச்சயமின்மைகளை, ரூபம் அரூபமாகி உண்டாக்கும் சரியலிச தோற்றங்களை, இன்னும் பிற உளவியல் வெளிப்பாடுகளைக் கூர் தீட்டப்பட்ட மொழிக்குள் கொண்டுவந்து அனுபவத்தில் ஒரு புதுமையை வெளிப்படுத்துகிறார். அக உலகின் எண்ணற்ற குகைகளின் வழிச் செல்ல முயன்று மோதிக் கண்ட மனத்தின் எதிரொலிகள்தாம் கதைகளில் எங்கும் எதிரொலிக்கின்றன. கருத்திலும் பொருளிலும் மனித வாழ்க்கையைப் பாதிக்கிறதைத்தான் அதிகம் பேர் எழுதினர். மௌனி நேர் எதிராக அசந்தர்ப்பங்களையும் தறி கெட்டோடும் பதட்டங்களையும் எழுதினார்.

இவ்வகையில் கதைக்குள் விரியும் பல்வேறு அகப்பரிமாணங்களை சில கதைகள் வழி காணலாம்.

மௌனியின் மூன்றாவது கதையாகக் கொள்ளத்தக்க ‘காதல் சாலை’யும் ஒரு காதல் கதைதான். காதலன் – காதலி கதையல்ல. காதல் என்ற உணர்வின் தாத்பர்யம் என்னவென்று கண்டடைய முயல்கிற ஒரு முயற்சிதான் இந்தக் கதை.

காதலி மனைவியாகிறாள். இறந்து போகிறாள். அவள் மறைந்தாலும் காதல் இருந்திருக்க வேண்டும். அது எங்கே எப்படி இருக்கிறது என்ற தேடலில் தீவிரம் கொள்கிறான். இருக்கும்போதும் இறந்த பின்னும் எங்கே தங்கி இருக்கிறது அது? அந்யோன்யத்திலா, உடலிலா, மனதிலா, தோற்றங்களிலா என்று தேடிப் பார்க்கிறான். உடலின் சாயலில், இளம் பருவங்களில், உடல் உறவில் சிக்காது பறந்து விடுகிற அந்தக் காதலைத் தொட்டு உணரும்படியாக -பருப்பொருளாகக் கண்டுவிட பெண்களிடம் தேடிப் பார்க்கிறான். துவைதம், விசிஷ்டாத்வைதம் முதலிய சமயச் சிந்தனைகள் நம்மிடம் உண்டு. மௌனியிடம் இந்திய தத்துவ மரபு சார்ந்த அனுபவம் வேறு விதத்தில் பங்காற்றுகிறது. தத்துவத்திற்கு எதிர்த்திசையில் பயணப்படுவது (ஆண்டாளின் ஞாபகம் வருகிறது). மானிட உணர்வுகளின் இருப்பை அறிந்து கொள்ள முயன்று முயன்று இன்மையில் முடிகிற கோலத்தைக் காட்டுகிறார். காதல் ஒரு தீபச்சுடர் போல் இருக்குமா? என்று பொருள்படுத்தியும் பார்க்கிறார். அப்படி உருவகிக்கும்போதே எண்ணை வற்றி அழிந்து விடுகிற தீபமாகக் காட்டுவதில்தான் போய் நிற்கிறார். எனவே மௌனியின் கதைகள் எளிய அர்த்தத்தில் காதல் கதைகள் அல்ல. காதல் என்ற துருப்புச் சீட்டைக் கொண்டு உளவியலின் பல்வேறு பரிமாணங்களுக்குள், கற்பனைகளுக்குள் நுழைகிறார்.

இந்தக் கதை இப்படித் துவங்குகிறது. “அன்று அவன் மனங்கெட்டுத் திரிந்தான். நடுப்பகல் மேகமூட்டுக் கொண்டு இருண்டிருந்தது. ஆல மரத்தடியில் சிறிது அவன் படுத்து அயர்ந்தான். தன்னெதிரில் அவள் தொங்கிக்கொண்டு தன்னை அழைப்பதைக் கண்டு மருண்டு எழுந்தான். எதிரில் ஆலமர விழுதுகள் தொங்குவதைப் பார்த்தான்.”

கதையை முழுக்கப் படித்துவிட்டு திரும்ப வாசிக்கிறபோதுதான் தொங்குவது போல தோற்றம் தந்தவள் யார் என யூகிக்க முடியும். கனவில் கண்ட பெண் எதற்காக அழைக்கிறாள் என்பதற்கான அர்த்தமும் புலப்படும். இல்லையென்றால் கனவில் கண்ட மாயத் தோற்றத்தைச் சொல்வதாகப் போய்விடும். தொங்குபவள் அவன் இறந்து போன மனைவியாகக் கொள்ள இடம் இருக்கிறது. ஆல மர விழுது அகக் கற்பனையை இப்படி விரிக்கிறது- அவளது அழைப்பு காதல் பிரிவிலிருந்து விடுபட்டு இணைய அழைப்பதாகத் தெரிகிறது. நிரந்தரமாக மேல் உலகத்தில்தான் இணைந்திருக்க முடியும். அதுதான் நிலையான இருப்பு என்ற இந்திய தத்துவ சாயலும் இதில் இருக்கிறது. இந்த எண்ணங்களில் கதை உழல்கிறதே தவிர அவ்வுலகை வற்புறுத்துவதில்லை. முழு கதையின் அறிதலில் இருந்துதான் கதையின் இந்த துவக்கத்தை உணர்ந்து கொள்ள முடியுமே தவிர துவக்கத்திலேயே புரிந்துகொள்ள முடியாது. மனம் கொள்ளும் மாயத் தோற்றங்களை துவக்கத்திலேயே வாசகன் நுகரும்போது ஈர்ப்பான திகைப்பை அடைகிறான். கதாமாந்தனுக்கேகூட திகைப்புத்தான். அதுதான் அவனை அவனது வாழ்க்கைச் சுழலுக்குள் அழைத்துச் செல்கிறது.

எழுந்து நடக்கிறபோது பாதத்தில் ஒரு உணர்வு தோன்றுகிறது. “காலடியினின்றும் மிக வெறுப்புற்றது போன்று பாதை நழுவி நகர்ந்தது. உயிரற்று நடந்தவன் நிற்பதைக் கண்டான். முன்னே தோன்றியது முன்னே போன்றே இருந்தது. பின் கடந்த வழி விடாமல் சுற்றி இவனைச் சூழ்ந்தது.” “உடம்பு ஒரு தரம் குலுங்கியது. வண்டிச்சோடு தோன்றுவதினின்று உதற முடியாது போன்று வெகு ஆழமாகப் பாதையில் பதிந்திருக்கக் கண்டான்.” இந்த வரிகளில் ஒரு குழப்பம் வருகிறது. நடந்தவன் அவன்தான் என்றாலும் தன்னை வேறொருவன் நடப்பதாகக் காண்கிறான். கடந்து வந்த வழி அவனைச் சூழ்ந்து மறிக்கிறது. இப்பொழுது இப்படி நினைத்துப் பார்க்கிறான். “கடந்த காலம் கதைத் தோற்றம் கொண்டது” என்று நமக்கு நடந்த சம்பவங்கள் கதையாக மாறிப் போவதை அவனுக்கான மனநிலையில் வெளிப்படுத்துகிறார். நடந்து முடிந்த நிகழ்விற்குள் திரும்ப புகுந்து செல்வதாகக் கதை விரிகிறது. மேற்பரப்பில் இந்தத் தடயங்கள் வெளிப்படையாக இல்லாததால் அவனது மாய உலகிற்குள் தட்டுத் தடுமாறி பின் செல்வதாக இருக்கிறது. இதன் மர்மம் சாகசத்தோடு மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

வழியில் கூடைக்காரி தனது கூடையைத் தூக்கிவிடச் சொல்கிறாள். இரண்டு முறை கேட்டபின் விழிப்படைகிறான். கூடையைத் தூக்கி விடுகிறான். காதலை இப்படி பருப்பொருளாகத் தூக்கிப் பார்க்க முடியுமா என்று தோன்றுகிறது. அவள் தலையில் ஏறிய கூடையை மிக கவனமாக வெளிப்படுத்துகிறார். “அவள் தன் இரு கைகளையும் மேலே முழுவதும் நீட்டிக் கூடையின் விளிம்பைப் பிடித்துக் கொண்டாள். அவள் கழுத்து சிறிது சிறுத்துப் பெருத்ததைக் கண்டான். மார்பும் சுமையைத் தாங்கி கெட்டியானதைக் கண்டான்”. சுமையைத் தூக்கிச் சுமக்கும்போது மார்பு இறுகுவதைச் சொல்வதுதான் வெகு நுட்பம்.

கூடைக்காரி நன்றிக்கான புன்னகையைச் சிந்திவிட்டு விலகிச் செல்கிறாள். ரவிக்கை இல்லாது திறந்த அவள் முதுகைப் பார்க்கிறான். திடீரென்று வரப்பில் அமர்ந்திருந்த பறவை, “சீ சீ” என்று கூவியபடி பறந்து போகிறது. இப்படியான குறியீடு வருகிறது. காதல் உடலிலா உள்ளத்திலா என்ற விழிப்பு தோன்றுகிறது. மறுபடியும் கூடைக்காரி தன் பளுவை இறக்க வருவதை எதிர்பார்த்திருப்பது போல நினைப்பு ஒன்று தோன்றுகிறது.

இன்னும் நடந்து செல்கிறான். ஒரு ஊர் வருகிறது. பெண்கள் தண்ணீர் எடுக்கப் போகிறார்கள். அவர்களைப் பார்க்கிறான். நாய்கள், “ஏன்? எங்கே?” என்று குரைக்கின்றன. இந்தக் குரைப்புகூட காதல் எங்கே என்று மனதின் குரைப்பாகக் குறியீடாகிறது. “சீ, சீ, நாயே! ஏன் என்கிறாயே- என் காதலி அல்லவா- என் காதல் இருப்பிடம் அல்லவா? தெரிந்தால் ஏன் போகிறேன்?” மறுபடியும் நாய்க் குரைப்பு. “ஏன்? எங்கே?” “சீ, சீ! நாயே அப்பெண்கள் ஜலமெடுக்க, கிணற்றுக்குப் போவது போலவா? காதல் இது மாதிரி அல்ல…” என்று மனக்குறளி பேசுகிறது.

பெண்கள் எதையோ பேசிக்கொண்டு போகிறார்கள். புரியாத பேச்சுச் சத்தத்திலும் தனிப்பட்டு ஒரு சிரிப்பு கேட்கிறது. சிரிப்பவளை இவன் பார்க்கிறான். இந்தப் பார்த்தல் பற்றி உண்டாகும் ஒரு அனுபவத்தை, “அவள் முகத்தோற்றமே இவன் மனதில் பதியவில்லை. ஆனால் அவள் சிரிப்பதைத்தான் இவன் கண்டான்”, என்று எழுதுகிறார். ஆலீஸின் அற்புத உலகத்தில், “பூனை மறைந்த பின்னும் அதன் சிரிப்பு மறையவில்லை”, என்று எழுதியிருப்பதாக நினைவு. நகுலனும் இந்த வரிகளை எழுதியிருக்கிறார். இந்த மௌனத் தோற்றம் உண்டாக்கும் மௌன ஒலியை மௌனி ஒரு அனுபவமாக வெளிப்படுத்துகிறார்.

அறுவடையான வயல் வழியாகப் போகிறான். இந்தப் புற உலகைக் குறைவான வாக்கியங்களில் மிகத் துல்லியமாக வெளிப்படுத்துகிறார். “அறுவடையான வயல்களில் ஒற்றையடிப் பாதை இன்னும் சரியாக ஏற்படவில்லை. சிறு சிறு மேகங்கள். உருவை மாற்றி மாறிக் கொண்டு கிழக்கு நோக்கி ஊர்ந்து சென்று கொண்டிருந்தன. சிறு வெண் மேகம் ஒன்று சூரியனை மெதுவாகக் கடக்கும்போது, வயல் வழியாக நிழல் பாய்ந்தோடியது. நடுநடுவே ஒன்றிரண்டு கெட்டியான கட்டைத்தாள் காலால் மிதிக்கப்பட்டபோது குத்தியது. நன்கு காயாமல் இருக்கும் பரப்பில் சில சில இடங்களில் இவன் குதிகால் அமுங்கும். “அப்படியே பாதாளம் வரையில் நான் அமுங்கிப் போனால்___” என்று புற உலகம் அக உலகில் உண்டாக்கும் வினோத அனுபவங்களையும் கொண்டு வந்து விடுகிறார். புற உலகின் அசைவுகளை மௌனி குறைவாகச் சொன்னாலும் துல்லியத்துடன் சிறப்பாக வெளிப்படுத்துவார். இன்னும் கொஞ்சம் விவரித்திருக்கக்கூடாதா என்ற ஆசை தோன்றுகிறது. விரிக்கிற அந்த புற உலகமும் கதையின் அர்த்தப் பரிமாணத்தை விரிப்பதற்கே வருகிறது. பிற எழுத்தாளர்களின் கண்களுக்கு வாய்க்காத ஒன்று.

இன்னும் நடக்கிறான். ஒரு எருக்கஞ்செடி வருகிறது. காதல் மனைவி ஞாபகம் வருகிறது. “… அவளும் என்னைக் காதலித்தாளே! எங்கே அவள்? அவள் எருக்க மொட்டில்தான் இருக்கிறாள். நசுக்கினால் வெளிப்படுவாள். மறுபடியும் மிஞ்சின மொட்டுக்களை நசுக்கினான். மொட்டுக்கள் இல்லை. சப்தமும் இல்லை. அவளையும் காணோம். கோபம் கொண்டான். வெடுக்கெனப் பிடுங்கினான். கை நிறையக் கசங்கின இலைகள் வந்தன. ஓங்கிக் கீழே அடித்தான். காட்டாமணக்குச் செடியின் மீது மறுபடியும் அக்குருவி இருந்து கத்தியது. “சீ, சீ, அவள் போய் விட்டாள்”. கல் எடுத்து வீச குருவி பறந்து போகிறது. மனக் கற்பனையைத் தொற்றுவித்த புற உலகம் நம்பிக்கையையும் நம்பிக்கை இன்மையையும் தருகிறது. இத்தோடு அரூப கற்பனை ஒன்றும் தோன்றுகிறது. குருவி வந்து காட்டா மணக்குச் செடியில் அமர்கிறது. அப்படி அரூப கற்பனையில் வந்தமர்ந்த குருவி மீது நிஜமாக கல் எடுத்து வீசுகிறான். அது மனதில் பறந்து போகிறது (தேவதச்சனின் கவிதை ஞாபகம் வருகிறது).

சிறிய நகரை அடைகிறான். ஒரு இடைத்தரகன், உயர்ந்த அழகி இருக்கிறாள், என்று தாசியிடம் அழைக்கிறான். அவன் காதல் மயக்கத்தைத் தருபவள் என்கிறான். பின்தொடர்கிறான். ஒரு சந்தில் சிறிய மட்டமான வீட்டிற்குள் நுழைகின்றனர். “மங்கலாக தீபம் ஒன்று. இருக்கும் ஏழ்மையைப் பார்க்க வெட்கமும் வருத்தமும் அடையவது போன்று எழுந்தும் விழுந்தும் அழுதுகொண்டு எரிகிறது”. “கோணலாகத் தலையை வாரிக் கொண்டிருந்தாள். புதுப்புடவை தரித்திருந்தாள். புது வறுமையும் சேர்த்துக் காட்டிக் கொண்டதுபோல் அவள் முகம் தோன்றியது”. அங்கு கண்டதும் ஏற்பட்ட மனச்சித்திரம் இது.

இரவெல்லாம் அவளிடம் காதலை தேடிப் பார்க்கிறான். அது எப்படி? எங்கே? என்று பிதற்றுகிறான். காதல் மனைவி பற்றி, குருவி பற்றி, நாய் பற்றி பிதற்றுகிறான். “காதலுக்காக அவள் ஓடினாளா? நான் ஓடினேனா?” என்று மயக்கம் கொள்கிறான். இரவெல்லாம் விழித்தபடி அவனருகில் தாசி இருக்கிறாள். விடியற்காலை அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். அவள் மனதில் என்னென்ன எண்ணங்கள் விஸ்வரூபம் எடுத்து தற்கொலைக்குத் தூண்டினவோ. தற்கொலை செய்து கொண்ட அந்தப் பெண்ணின் கால்களும் தேகமும் அவன் மனதில் ஊஞ்சலாடுகின்றன. அவள் முகத்தில் காதல் இருக்கிறதா என்று தேடத் தோன்றுகிறது. காதல் மனைவி ராஜீவிக்கு முதன் முதல் முகத்தில் முத்தமிட்டது ஞாபகத்தில் எழுகிறது. கண்முன் தூக்கில் தொங்கும் முகத்தை உற்றுப் பார்த்தான். அந்த முத்தம் நினைவிற்கு வருகிறது. மனைவியிடம் இருந்தது காதலா? இவள் காதல்? கேள்விகள் எழுகின்றன. இவளுக்கும் காதலென்ற ஒன்று இருந்திருக்குமா? என்ற சந்தேகம் வலுவாக நமக்கு எழுகிறது. இவன் காதல் என்று இரவெல்லாம் பிதற்றியது அவளுக்கு தூக்கமற்ற விழிப்பைத் தருகிறது. சொல்லப்படாத காதல் ஒன்று துடிக்கிறது. மரணத்தைத் தழுவுகிறாள். இவளுக்குக் காதல் என்ற ஒன்று கிட்டாததால் மரணத்தை தேர்ந்திருக்கிறாள் என்றும் சொல்லத் தோன்றுகிறது. தேவதாசி குளத்தில் வந்த எத்தனை குமரிகள் இந்த காதலால் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள் என்ற தொனிப் பொருளும் எழுகிறது.

மற்றொரு கோணமும் வெளிப்படுகிறது. அவன் காதலித்ததே தேவதாசி ராஜீவியைத்தான் என்று யூகிக்கும்படி ஒரு கோணமும் வெளிப்படுகிறது. ராஜீவிக்குக் கொடுத்த முதல் முத்தம் நினைவுக்கு வந்ததும் தூக்கில் தொங்குபவளின் முகம்தான் வருகிறது. இவள்தான் அவள் என்று கருதி உறுதிபடச் சொல்ல முடியாதபடியான கதைப்போக்கும் இருக்கிறது. அவளிடம்தான் காதல் இருந்திருக்கிறது, தன்னிடம் இல்லை. இருந்திருந்தால் மரணம் நிகழ்ந்திருக்காது. அவள் உயிர் சென்ற ஆகாயத்தைக் காட்டி அதோ அங்கே என்கிறான்.

கதை வரிசைக்கிரமமாகச் சொல்லப்பட்டது போல் அமைந்து, மாறி மாறி வெளிப்பட்ட துண்டு துண்டான நினைவலைகள் ஓர் உருவத்தில் புரள்வதாக இருக்கிறது. மரணத்தின் வழி கண்ட பெருங்காதலை அவன் தேடி அலைவதாகக் கொள்ளலாம். காதல் மனைவி ராஜீவியும் இந்த தேவதாசியும் வேறு வேறு நபராகக் கொள்வது சரியாக இருக்கும். இந்த கதைமாந்தன் மனபேதலிப்பில் இருவரையும் ஒருவராகக் காணத் தொடங்குகிறான். ராஜீவியின் காதலை இவளிடமும் காண்கிறான். மனபேதலிப்பு கொண்ட ஒருவனின் காதல் உணர்வைச் சொல்லுகின்ற இக்கதையில் வருகின்ற புறவுலகக் காட்சிகள் எல்லாம் குறியீடுகளாக மாறி வெகு இயல்பு கொள்கின்றன. மௌனியின் சிறந்த கதை என்று இதைச் சொல்ல மாட்டேன். இந்த ஆரம்ப கால கதையிலேயே உள்முகப் பாய்ச்சல் எப்படியெல்லாம் வெளிப்பட்டிருக்கிறது என்பதைச் சொல்வதற்காக எடுத்துக் கொண்டேன்.

‘எங்கிருந்தோ வந்தான்’ கதையில் வடிவரீதியாக சிலச் சிக்கல்கள் இருந்தாலும் படைப்பு ரீதியாக முக்கியமான கதை. இன்று பின் நவீனத்துவ எழுச்சியில் கதையாடல்களில் உண்டான வடிவரீதியான நெகிழ்ச்சி இக்கதைக்கு மதிப்பைக் கூட்டுகிறது. கதைசொல்லியின் பயணம் ஒரு திட்டத்திற்குள் அடங்கி விடாது விலகி வேறொன்றைத் தொட்டுச் செல்லலாம் என்ற சுதந்திரம் சில சாத்தியங்களை உண்டாக்கியிருக்கிறது. அவரது படைப்பெழுச்சியின் கொந்தளிப்பான பல வீச்சுகள் இக்கதையில் இருக்கின்றன. கற்பனையின் எல்லைக் கோட்டில் நின்று வார்த்தைகளுக்குள் அடைபட மறுக்கும் அனுபவங்களை வளைத்துக் கொண்டு வந்தவர். தமிழ்ச் சிறுகதையின் திருமூலர் என்றவிதமாய் மௌனியைப் பற்றி புதுமைப்பித்தன் சொன்னதுகூட இந்தக் கதையை அவர் தினமணி ஆண்டு மலரில் வெளியிட்ட பின்புதான். சங்கரரின் தத்துவத்திற்கு கதாரூபம் கொடுக்கப்பட்ட கதையாகவும் கொள்ளலாம். முன்பே சொன்னது போல உணர்ந்ததின் வழி உண்டான மாயத்தவிப்புகள்.

காதலில் தோல்வியுற்ற ஒருவன் சிறு நகரத்தின் விடுதி ஒன்றில் தங்குகிறான். அவன் பெயர் சங்கரன். யாருடனும் பேசாமல் தனிமையில் இருக்கிறான். நல்ல விதமாய் பாடக்கூடியவனும்கூட. நோய்வாய்ப்படுகிறான். அங்கு பக்கத்துக்கு அறையில் தங்கி இருந்தவன் உதவுகிறான். இவனுடைய பார்வையில்தான் கதை விரிகிறது. மருத்துவமனையில் இறந்து போகிறான். அவனது அறையில் இருந்த இரு கடிதங்களைப் படிக்கிறான். அவனது காதலி பத்மா நோயில் இறந்து விட்டது தெரிய வருகிறது. பத்மாவின் மரணமும் இவனது மரணமும் நிகழ்ந்த விதம் பற்றி அவன் ஊர் சென்று அறிந்து வெளிப்படுத்துகிறான்.

இந்தக் கதையில் கண்ட மன உலகின் எதிரொலிகளை மட்டும் எடுத்துத் தரலாம் என்று நினைக்கிறேன்.

பக்கத்து அறையில் இருந்த சங்கரனை கதைசொல்லி நேர்கொண்ட விதம் பற்றி. “அவன் என் பக்கத்தறைக்கு வந்ததிலிருந்து ஏதோ என்னைச் சுற்றி ஒரு கருமேகம் படர்ந்து சூழ்ந்தது போன்ற உணர்ச்சி என்னைப் பீடித்தது… இரண்டொரு தரம் அவனிடம் பேசத் துணிந்து நெருங்கி, முடியாதது கண்டு திரும்பினேன். அவனோவெனில் வருவதும் போவதும் இல்லாதவன் போல அருகில் இருந்தும், அசைந்து வெகு தூரத்தில் போய் விடுவான்…” என்று எழுதுகிறார். பெரும்பாலும் நிகழ்வைச் சொல்வதில் அல்ல, நிகழ்வின் உணர்வை வார்த்தைகளில் கொண்டு வரும் வேலையில்தான் மௌனி ஈடுபடுகிறார்.

கனவா நினைவா என்ற மயக்கத்தில் சங்கரனின் இசை பக்கத்தில் இருந்து வருகிறது. விழித்தவன் அந்த அனுபவத்தை நினைத்துப் பார்க்கிறான். அந்த இசை தனக்குள் உண்டாக்கின கற்பனையை, உலுக்கும் சரியலிச தோற்றங்களை வாழ்வின் அர்த்தபாவங்களை உயர்ந்த தளத்தில் வெளிப்படுத்துகிறார்.

“…நடு இரவில் நான் விழித்துக் கொண்டேன். ஒருக்கால் நான் தூங்காமலேயே விழித்துத்தான் படுத்திருந்தேனோ என்னவோ. பக்கத்து அறையிலிருந்து, கேட்டதும் கேட்காததுமாக, அடித் தொண்டையிலிருந்து அவன் பாடிக் கொண்டிருந்தான்… பாட்டும் கொஞ்சங் கொஞ்சமாக மறைந்து விட்டது. அது மறைந்தவிடத்திற்கு என்னையும் இழுத்துச் சென்றது போலும்… என்னையே, என்னுடைய சவத்தையே- நான் வெகு தூரத்திற்கு அப்பால் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். நானே உணர்ந்த என் இறப்பு! வருத்தம், ஆத்திரம், ஒரு அருவருப்பு, ஒருங்கு கூடின… ஒரு கேலி நகைப்பு எங்கேயோ கேட்டது… மறுபடியும் என் சவத்தையே நான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். இருப்பு…? பிறப்பு…? அடைய ஆவல் கொண்டு, ஒரு ஸ்வரத்தை எட்டி எட்டிப் பிடிக்க மேலிருந்தும் கீழிருந்தும் முயலும் அவன் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு சோகமான கீதம் அவன் பாடிக் கொண்டிருந்தான். என் உணர்வை உயர்த்தி, கனவிற்கும், நினைவிற்கும் உள்ள நுண்ணிய எல்லைக் கோட்டை துடைக்கவல்ல அவனுடைய கானம் சாதாரணமானதல்ல. ஆழித் தண்ணீரில் எல்லை பிரித்துக் கோடிட்டதுதானா நம் வாழ்க்கை…? அசைந்து அசைந்து மிதக்கும் தோணி. (மனம்) எல்லை கடக்க அறியாது கடந்தது போதும்! கனவின் கரையைத் தாண்டி, அவன் பாடிக் கொண்டிருப்பதைத்தான் நான் கேட்டுக் கொண்டிருந்தேன் போலும். நான் கனவு கண்டு கொண்டிருந்தேன் என்றால் எப்போது நான் விழிப்படைந்தேன்?…”

அவனது அறை பூட்டப்பட்டு இருப்பதைக்கூட, “போக்குவரவு அற்ற உலக சஞ்சாரி, பூட்டின் திறவுகோல் உன்னிடம்தான் இருக்கிறதோ,” என்று அவனிடம் அறியப்படாத மர்மம் மறைந்திருப்பதை இக்காட்சியில் சொல்கிறார்.

மருத்துவமனையில் சங்கரனை சேர்க்கிறான். அவனது நிலைமை இறந்து விடுவான் என்பதுதான். மனப்பதட்டம் கொள்கிறான். இந்த நிலைமையைத் தொட்டு உணர்ந்தவிதமாய் வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார்.

“ஒரு கணம் அவன் இறந்து விட்டான் என்று நிச்சயமாகப்பட்டது; ஆனால் அவனைத் தொட்டுப் பார்த்து நிச்சயப்படுத்திக் கொள்ள ஒரு பயம். ஒருக்கால் தொட்டுப் பார்த்தால் சந்தேகம் நிச்சயமாகி, உதறித்தள்ள முடியாது பலப்பட்டு விடுமோ என்ற பயம்.”

அவனது இறப்பையும் சவ அடக்கத்தையும் மறுநாள் கேள்விப்படுகிறான். மரணம் இயற்கையின் இயல்பு. இதனை, “இறந்த காலம் தன் நிர்மாண வேலையைப் பிரியக் கட்டுக்கோப்பில் செய்து வருகிறது,” என்கிறார்.

இரவு அறைக்கு வருகிறான். அவனுக்குத் தூக்கம் வரவில்லை. “ஒருக்கால் தூங்கினால் பக்கத்தறையிலிருந்து அவன் பாட்டு கேட்குமோ?” என்று மனக்குறளி கேட்கிறது. ஜன்னலுக்கு வருகிறான். புறக்காட்சி உயிர்ப்பெற்று அசைகிறது. “துரத்தப்பட்ட சிறு மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பயம் நீங்கி ஊர்ந்து வருகின்றன. நகரத்தில் தூக்கம் உலாவுகிறது. எங்கும் நிசப்தம். துல்லிய வெண்ணிலா, வானத்தில் சிறு ஒளிச் சரிகைகளை மொழுகி மறைத்து வெறிச்சென்று காய்ந்தது. விடியற்காலை வருகிறது. “சூரிய கிரணம் உள் விழுந்து ஒளி கொடுத்தது. உலக இரைச்சலும் ஆரவாரிப்பும் ஆயிரம் வாயிலினின்றும் வெளிப்பட்டு அலறிக் குமைந்தன.” இம்மாதிரி இயற்கை உயிரினங்கள் போல தன்னுணர்வு பெற்று உயிரோட்டமாக நகர்வதை வெவ்வேறு தொனிப் பொருளில் வெவ்வேறு இடங்களில் எழுதியிருக்கிறார். இன்று மேஜிக் கதை எழுதுபவர்களின் நதிமூலம் மௌனி. இதை அவர்கள் சொல்லாமல் கமுக்கமாக இருக்கிறார்கள்.

முதல் கடிதத்தில் பத்மாவிற்கும் அவனிற்குமான சிறு வயது நினைவுகள் வருகின்றன. அந்த நினைவுகள் தரும் பேதைமை சோக நாடகத்தில் கவித்துவ உச்சம் பெறுகின்றன.

“ஒரு காலத்தில் நீ அழகிய சிறு பெண்ணாய் இருந்தாய். ஒல்லியாக, உயரமாக இருந்த நீ உன் குதிங்கால் இடிக்க பாவாடை கட்டிக்கொண்டு, கழுத்தில் ஒரு வடம் சங்கிலி அணிந்து சிறிய டோலக் காதோடு, உன் முகத்தைத் தொங்க விட்டுக் கொண்டு, துவண்டு துவண்டு நடந்து வருவாய்;- என்னோடு பேசுவாய். அப்போது உன்னைப் பார்ப்பது அர்த்தமில்லாத ஆனந்தப் பார்வை. ஆனால் இப்போது, அந்த நினவயு உணர்ச்சி பெற்ற ‘வருத்த-சந்தோசம்'”

“”கூனப் பாட்டி எங்கே?” என்று கேட்டேன். “காணும்” என்றாய். “பத்மா கூனப்பாட்டி செத்துப் போய் விட்டாள்” என்றேன். நீ, “அப்படின்னா?” என்றாய். “திரும்பப் பார்க்க முடியாது. வர மாட்டாள்” என்று உனக்குத் தெளியச் சொன்னேன். குழந்தை நீ. என்ன சொன்னாய் தெரியுமா? “பொய் சொல்கிறாய். பாட்டியைக் காணோம். ஆனால் வருவாள். அதோ பார் – அவள் தடிக்கம்பு இருக்கிறதே, அதை எடுக்க வர மாட்டாளா? எப்போதாவது வருவாள்,” என்றாய். ஆமாம் நீ சொல்லியதைத்தான் இப்பொது உண்மையென உணருகிறேன்…”

பத்மா மோசமான நிலையில் படுத்திருப்பதை சங்கரன் பார்க்கிறான். “தான் நின்று கொண்டிருப்பது, கீழே அவள் படுத்திருப்பது, சுற்றி அவர்கள் நின்றிருப்பது, யாவும் மாயை, சுற்றிச் சூழ்ந்த ஒரு விளங்காத பொருள் என்றே நினைத்தான்”. இப்படியொரு அபத்த மனநிலை தோன்றுவதை குறிப்பிடுகிறார்.

சங்கரரின் மாயாவாத தத்துவத்தை ஒரு சோக விளையாட்டாக வாழ்வின் கதியில் நிகழ்த்திப் பார்க்கிறார். ‘எங்கிருந்தோ வந்தான்’ என்ற தலைப்புகூட இந்த தத்துவத்திற்கு நெருக்கமானதுதான். “எல்லாம் அழிய மறைந்தான்”, என்ற வாசகத்தில் வாழ்வின் மாயத் தன்மையையும் சொல்கிறார். என்றாலும் தத்துவத்திற்கே ஒப்புக் கொடுத்த கதை அல்ல.

பத்மா இறக்கும் தருவாயில் மரணத்திற்கும் உறவின் பந்தத்திற்கும் உள்ள உறவைக் கூறுகிறாள். “நான் இறப்பதில் எனக்குக் கொஞ்சமும் வருத்தமில்லை. இளமையில் இறப்பதால், வாழ்க்கையில் முதிர்ந்து பாழ்படாது, என் ஞாபகம் இளமையாகவே இருக்கும். ஆனால் என் பிறப்பு, வாழ்வு, இறப்பு முதலியவைகளினால் பலருக்குப் பலவிதப் பிடிப்பிற்குக் காரணமானது பற்றி, அவர்கள் வருத்தங்கொள்வதை எப்படி தடுக்க முடியும்? அதனால் என் துக்கத்தை எப்படி அகற்ற முடியும்? ஒருவர் இறக்கும்போது அவர் வாழ்வின் தன்மை அவரோடு முடியுமானால், இறப்பு பிரமாதமாகப் பொருட்படுத்த வேண்டியதொன்றில்லை”. மனிதனின் நினைவுகள் ஒரு இருப்பாகத் தங்கி இருப்பதைக் கூறுகிறாள். இது மாயாவாத தத்துவத்திற்கு எதிர் துருவத்தில் எழுந்து நிற்கிறது.

இகபந்தத்திலிருந்து எல்லாவற்றையும் இழப்பதுதான் மரணம். அது சொல்லி வைத்தது போல நம்மிடத்து எளிதாக விலகிக் கொள்வதில்லை. மரணத் தருவாயிலும் அந்த பந்தம் விடுபட மறுப்பதுதான் மானுட சித்திரமாக இருக்கிறது. தத்துவத்தைவிட பந்தம் ஆடிக் குலைப்பதாக இருக்கிறது. மனபேதலிப்பில் கண் மூடிக்கிடந்த பத்மாவை சங்கரன் அழைக்கிறான். “சீ… சீ… பத்மா என்கிறாயே, ஏ சனியனே, என்னை ஏன் பீடித்து இருக்கிறாய், நீ போ,” என்று வேகத்தொடு திமிறுவது போல சொல்கிறாள். சங்கரன் என்ற காதலனின் நினைவை கடைசி நிமிடம் வரை அவளால் உதற முடிவதில்லை. சங்கரரின் தத்துவத்தின் மீதும் அவளுக்கு கோபம் வருகிறது. பந்த பாசத்தை துறப்பது அவ்வளவு எளிய காரியமல்ல.

எல்லாவற்றிற்கும் காரணம் வருத்தம், அழுகை என்கிற பத்மா, எல்லாம் பிறப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது என்பதைக் கூறுகிறாள். தத்துவார்த்தமாக சொல்ல முடிகிறதே தவிர மரணத்திற்குப் பின்னாக எழும் திகைப்பில்தான் போய் முட்டுகிறாள். தத்துவத்தால் விளக்க முடியாத மர்மமாகத்தான் இருக்கிறது என்பதை பத்மாவின் வழி வெளிப்படுத்துகிறார்.

“சங்கரா, வருத்தத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம். நான் போகிறேன், திரை அருகில் இருந்தாலும், அப்புற என்ன என்று அறியக்கூடவில்லை. நீக்கியும் கண்டு சொல்ல முடியவில்லை. நீ பார்க்கும்போதே மறு பக்கம் போவதை நீ அறிந்து கொள்ள வேண்டின் சிறிது நேரத்தில் தெரிந்து கொள். வருந்தினாலும், கண்ணீர் விட்டாலும் இனி என்னைப் பார்க்க முடியாதவனாகப் போகிறாய்,” என்கிறாள்.

விதிக் கோட்பாட்டைச் சொல்வதில்லை. விதிக் கோட்பாடும் வாழ்க்கைக் கோட்பாடும் மோதிக் கொள்வதைத்தான் இக்கதையில் நிகழ்த்துகிறார். இந்த மோதலை எழுதுவதுதான் தன் வழி எனபதாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.

மரணத்தைப் பற்றிய நமக்கேயான தத்துவ விளக்கங்கள் உண்டு. சுவடற்று மறைதல் என்பது அதன் முக்கிய அம்சம். இதற்கு நேர் எதிரான மரணத்தால் உலவும் நினைவுச் சுவடுகளை அழிக்க முடியுமா என்று மனிதன் முன் வைக்கும் கேள்விக்கான பதில்தான் ‘மனக்கோட்டை’ கதை. ‘எங்கிருந்தோ வந்தான்’ கதையின் சாயலுக்கு நேர் எதிரானது.

நண்பன் சங்கரன் சுரங்க விபத்தில் இறக்கிறான். அவனது தங்கை சுமி இந்த மனவேதனையில் இறக்கிறாள். அவளுக்கு அண்ணனின் நண்பன் மீது இருப்பம் இருந்ததும் சொல்லப்படுகிறது. மரணச் செய்து பற்றி நண்பனிடம் சங்கரனின் குடும்பத்தைச் சேர்ந்தவர் சொல்கிறார். இந்த மரணத்தை என்னுள் நிகழ்த்த முடியாது என்கிறான்.

என் நினைவில் அவனும் அவளும் இருக்கும்போது எப்படி இறக்க முடியும் என்று கேட்கிறான். இன்னும் ஒரு படி கற்பனையை விரித்து என் நினைவின் வழி அவனை கற்பனை கொள்ள வைத்து விரித்துச்செல்ல முடியும். இன்னும் ஒரு படி தாவுகிறார். இறந்ததாக நீங்கள் சொல்லும் சுமியின் கற்பனை வழி அவள் அண்ணனின் வாழ்தலை நான் என் கனவின் வழி விரிக்க முடியும். எப்படி இறந்தார்கள் என்று சொல்ல முடியும் என்கிறான். போர்ஹே, மார்க்யூஸ் போல தமிழில் கற்பனையின் எல்லைகளை விரித்ததில் முதன்மையானவராகிறார்.

மௌனி வெளிப்படுத்தும் கனவின் புனைவுமொழி கீழே-

“நீங்கள் உங்கள் மனைவியைப் பார்ப்பது போல, நானும் சுமியைப் பார்க்கிறேன்- இப்போது பார்க்கிறேன்… சங்கர் இறக்க மடியும், என் வாழ்க்கையை, என்னை, கனவு காணாது இருக்க முடியாது, அவன் கனவில், நனவென வாழ்க்கை கொள்ளும். நான் இருக்குமளவும் அவன்?… அவனை நாடி அவன் கனவை நாடி சுமி போக முடியும் என்னை விட்டு… எப்படி முடியும்?”

வேறு விசயங்களுக்குப் போகலாம். ஒலி உண்டாக்கும் விசித்திர அனுபவங்களை பல கதைகளில் எழுதியிருக்கிறார். இரண்டு கதைகளிலிருந்து தரலாம். இரைச்சலும் அமைதியும் விட்டு விட்டு நேர்கிறது. அமைதியைக் கலைக்கும் ஒரு சப்தம் மரத்தின் வழி நிகழ்கிறது. “உலக அலுப்பே குமுறி முனகுவது போன்று பறவைகள் இடைவிடாது சிறிது நேரம் கத்தின. அவைகளின் இரைச்சல் திடீரென்று நிற்கும்போது, இடையிடையே சீர் இல்லாமல் பொற்றென்று கீழே விழும் முதிர்ந்த ஆலம்பழங்களின் சப்தம் எவ்வித உலக சப்தமும் பிரபஞ்ச பயங்கர நிசப்தத்தைத்தான் உணர்த்தியது” (‘கொஞ்ச தூரம்’).

சேகர் பிடிலில் ஒரு சோக கீதத்தை வாசிக்கிறான். “இரவின் அருள் வெளியில் பயந்த இரு குழந்தைகளின் மௌனமான பிணைப்புப் போல் இருந்தது அந்த வாசிப்பு” (‘நினைவுச் சுழல்’).

மற்றொரு ராகம். சபையோர்களைப் பரவசமாக்குகிறது. காதலி பத்மாவுக்கு இறந்த காலத்தின் எதிரொலி இடைவிடாது அசரீரி போல ஒலித்து அழைப்பதாக உணர்கிறான்.

“கார்த்திகை மாதத்தின் தன் வீட்டு வாயிலிலிருந்து கிழக்கே கண்ணுக்குத் தெரியும் வரையில் பச்சைப் பசேலென்ற நெற்பயிர்க் கடலின் கொந்தளிப்பு- வெட்டுக்கிளியின் இடைவிடாச் சப்தம்- வரப்புகளின் நடுவே, பார்வை மறையும் வரையில், திட்டுதிட்டாகக் குட்டையான கருவேல மரங்கள் படர்ந்து நின்றிருக்கின்றன. எட்டிய சேரிகளின் தூரத் தோற்றம் சாசுவதத்திலே அழுந்தப் புதைந்தன போன்று கண்ணெதிரே நின்றன. ஆகாயம் மேக மறைப்பினால் மந்தமாகத் தோன்றும் – மழை அடிக்கும்போது வீட்டினுள் தன் தாயாரின் குரல், தனக்கு மிகுந்த பிரியமான குஞ்சுப் பாப்பாவின் இனிமையான மழலைச் சொற்கள்…” (‘நினைவுச் சுழல்’)

இசை எண்ணத்தை மலர்த்தி இவ்விதம் இன்பமாக்கிச் சென்ற அனுபவத்தை ‘அவள் கண்களில் பனிப்படலம் போன்று நிச்சயமற்ற நினைவுகளின் ஞாபகம் மிதந்தது’, என்கிறார்.

குழந்தையை இழந்த துக்கத்தை மனைவியின் முகத்திலும் வெறித்த பார்வையிலும் காட்டுகிறார். “ஒன்றும் தெரியாது விழிப்பது போன்று பார்ப்பவளுடைய முகம் சாயையற்றுத் தோன்றியது. இவன் தன்னைப் பார்ப்பதை அறிந்த குஞ்சு தலையைக் குனிந்து கொண்டாள். ஒருக்கால் உருக்கொண்ட உலகத்துக்கம் அவள் பார்வையில்தான் மௌனமாக நிற்கும் போலும்!” சோகத்தின் நுண்ணுணர்வை ஒரு பருப்பொருள் வடிவில் காண்கிறார்.

“குழந்தையைப் பார்க்கத் தாயார் வெற்றுத் தொட்டிலை குனிந்து நோக்குவது போன்று” பார்த்தபடி இருக்கிறாள்.

அவன் விடியற்காலையில் மறைந்த விதத்தையும் பின் வேறு ஒன்றாகத் தெரிவதையும் அப்பா பார்க்கிறார்.

“காலை ஒளியில் கடைசி நக்ஷத்திரம் மறையும் முன்பே குழந்தை ராமு இறந்து விட்டான். மற்றொரு குருவி கூண்டை விட்டுப் பறந்தோடிவிட்டது. ஆகாயத்தில் இன்னும் அநேக நக்ஷத்திரங்கள் தெரிந்து கொண்டிருந்தன” (‘மாபெரும் காவியம்’)

இறப்பின்பின் குழந்தை வானிற்குச் சென்று நட்சத்திரமாக ஜோலிப்பான் என்ற நம்பிக்கையில் ஆறுதலடைகிறது மனது.

இப்படியான அக உலக தத்தளிப்புகளை, சரிவினால் விழுந்த துக்கங்களை, மனவிசித்திரங்களை, அந்நேர மன எழுச்சிகளை மொழியில் நீட்டி ஒளி பெறவோ எதிரொலிக்கவோ செய்கிறார். சிக்கலான விசயத்தையும் எளிய விதத்தில் வெளிப்படுத்தத் தெரிந்த கலைஞன் அவர். மனக் குகையில் நடமாடும் நிழல்களின் ஓலங்களாக இருக்கின்றன. இந்த வாழ்க்கை தரும் நிச்சயமின்மையைக் கண்டு செய்வதறியாது திகைத்து நிற்கிற மனிதர்களைத்தான் எங்கும் காண்கிறோம். யதார்த்தத்தில் கண்ட வீழ்ச்சி, கனவு, பகற்கனவு என எல்லா அகக் கண்களிலும் இன்னும் உக்கிரமான நிம்மதியிழப்பை ஏற்படுத்துகின்றன. மகிழ்வான தருணம் என்பதே இல்லை. இதுதான் அவர் சொல்ல வந்த அகச்சிக்கல்.

தமிழ்ச்சிறுகதை வரலாற்றில் இப்படியான ஒரு கலை வெளிப்பாடு மௌனியிடம் தவிர வேறு ஒருவரிடம் இல்லை. அவர் எழுதிய கதைகள் குறைவு. பாணிகளும் மிக மிகக் குறைவு. இந்த மிகக் குறுகிய எல்லையஈல் தனித்துவமான கதை உலகை வெற்றிகரமாக படைத்துக் காட்டியவர் மௌனி. தமிழ்ச் சிறுகதையின் துவக்க காலத்திலேயே புத்தம் புதிய போக்கை கலை ஆழத்தோடு வெளிப்படுத்தியவர் மௌனி. அவர் காலத்திய சில படைப்பாளிகளை அருகில் நிறுத்திப் பார்க்கும்போது இது தெளிவாகிறது. இந்த வகையில் மௌனி தவிர்க்க முடியாத தனித்த படைப்பாளியாக எழுந்து நிற்கிறார். அவரிடம் உள்ள போதாமைகள், கலைப் பிடிவாதங்கள், அவரது எல்லைகளைக் குறுக்கியிருக்கின்றன. அது பற்றி அவர் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. அவரைத் திட்டினாலும் ‘மர்மக் கலைஞன்’ என்றுதான் சொல்ல வேண்டியதிருக்கிறது.

மௌனியின் கதைகளில் எனக்கு மிகவும் பிடித்தவை ‘குடும்பத்தேர்’, ‘பிரபஞ்சகானம்’, ‘அழியாச்சுடர்’, ‘மாறுதல்’, ‘சாவில் பிறந்த சிருஷ்டி’, ‘மனக்கோட்டை’. ‘அத்துவானவெளி’, ‘தவறு’, முதலியவைகள்.

‘நினைவுச்சுழல்’, ‘இந்நேரம் இந்நேரம்’, ‘எங்கிருந்தோ வந்தான்’, ‘நினைவுச் சுவடு’, ‘உறவு, பந்தம், பாசம்’, இன்னொரு வகையில் முக்கியமான கதைகள்.

‘பிரபஞ்சகானம்’, இசையை முதன்மைப்படுத்துகிற ஒரு காதல் கதை என்று சொல்லலாம். பெயரளவில்தான் இது காதல். அவனிடம் இருந்த இசை ஞானம் பிரபஞ்சத்தில் மகத்தான ஒரு துளியாகக் கரைவதைத்தான் சொல்கிறது. ஆனால் இசை நம் அகத்திற்குள் கிளர்த்தும் மகத்தான அனுபவத்தை ‘நினைவுச்சுழல்’ கதையில்தான் பெற முடிகிறது.

‘தவறு’, வடிவ ரீதியாக வெற்றி பெற்ற கதை. ஒரு நிஜமான சந்திப்பிற்காகக் காத்திருந்தவன், கனவில் தேடி அலைகிறான். இறுதியில் நிஜம் வந்து தட்டுகிறபோது, அதனைக் கனவெனக் கொள்கிறான். சர்யலிசத்தன்மை வெகு இயல்பான முறையில் சாகசத்தோடு வெளிப்பட்டிருக்கிறது. ‘எங்கிருந்தோ வந்தான்’, கதையில் இந்த நிஜம் கொந்தளிப்பான மனநிலையில் தன்னுள்ளிருந்து சர்யலிசத்தன்மையோடு கிளம்பி அர்த்தப்பூர்வமான அனுபவத்தைத் தருகிறது.

புற உலகின் மீது மௌனிக்கு அக்கறை இல்லையே தவிர இரண்டு வரிகள் எழுதினால்கூட மிகத் துல்லியமான காட்சியில் கொண்டு வந்துவிடக் கூடியவர். புற உலகின் அசைவை அக உலகில் சுடரேற்றத்தான் பயன்படுத்துகிறார். புற உலகம் மனிதர்களோடு கொண்டிருக்கும் பிணைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தால் ‘இந்நேரம் இந்நேரம்’ கதையில் கூடுதலான சாதனையை நிகழ்த்தியிருக்க முடியும். அந்தக் கதையில் அந்த வெளி அழகாக வெளிப்பட்டிருக்கிறது. அதை அவர் பயன்படுத்தத் தவறி விட்டார் சமூகச் சிக்கலை நான் பொருட்படுத்த மாட்டேன் என்பதாகத்தான் அவரின் கலை வெளிப்பாடு காட்டுகிறது.

தேவதாசிகள் குறித்து எழுதப்பட்ட கடைகளில் ‘நினைவுச்சுவடு’, ‘உறவு, பந்தம், பாசம்’ கதைகள் முக்கியமானவை. ஆடவர்களால் கைவிடப்பட்ட அவர்களின் துயரப் புன்னகையை எதிர்பாராத விதத்தில் காட்டி விடுகிறார்.

‘சிகிச்சை’ என்றொரு குடும்பக்கதை. பெண்ணின் ஆற்றலை ஒடுக்கும் கதை. ஆணியப்பார்வை ஓங்கித் தெரியும் கதையும்கூட. ‘குடும்பத்தேர்’ குடும்பக் கதைதான். இருள் கவ்வும் குடும்பத்தில் மனைவி ஒளியேற்றும் தருணம் சொல்லப்படாமல் சொல்லப்பட்ட விதம் இந்த அமைப்பை விரும்புபவர்களுக்கு மிகவும் பிடிக்கும். இந்தக் கதையில் நான் குறிப்பிட விரும்புவது அதையல்ல. தாயின் ஆளுமையை இக்கதையில் அணையாத ஜோதியாக்கி இருக்கிறார். கதை முழுக்க இல்லாத அம்மாவின் குரல் அசரீரியாக ஒலித்தபடியே இருக்கிறது. அறிந்தோ அறியாமலோ அவரின் அம்மாவை வெளிப்படுத்திய கதை என்பதால் சாத்தியப்பட்டிருக்கிறது. இக்கதையில் வரும் கிருஷ்ணய்யரின் விட்டேத்தியான குணம் மௌனியின் சாயலைத்தான் வெளிப்படுத்துகிறது. அம்மாவின் மரணத்தை முன்வைத்து எழுதினாரா? வேறொரு மரணம் அம்மாவை வெளிப்படுத்தும்படி தூண்டிற்றா? மௌனியிடம் கேட்டிருக்க வேண்டும். இந்தக் கதையில் மட்டும்தான் மரணத்தின் தோற்றம் கதை முழுக்க வியாபித்திருக்கிறது. இந்தக் கதை என்னுடைய அம்மாவை வெளிப்படுத்துவது போலவே உங்களுடைய அம்மாவையும் கண்முன் காட்டும் என்றே நம்புகிறேன். இந்த அம்மாவும் அவருடைய பாணியில் நினைவுகளில் உலவும் அம்மா.

இசையின் மகத்துவத்தை வரமாகப் பெற்றவளுக்கு இருதயம் பலகீனமானது. பாடக்கூடாது என்று டாக்டர்களின் ஆலோசனைப்படி கடைபிடித்து வருபவள். தன்னை ஏதோ ஒரு கணத்தில் விரும்பிய, விரும்பிக் கொண்டிருக்கிற, ஒருவனின் காத்திருப்பு விநோதமானது. தன்னைப் பார்க்க வேண்டும் என்பதே அவனின் நோக்கம். அவனுக்காக பாடுகிறாள். இறப்பை நாடுகிறாள். அவள் பாடாதபோது இயற்கை குறைவுபட்டதாகத் தோன்றுகிறது. பாடுகிறபோது இயற்கையில் ஒரு அற்புதமான ராகம் கரைந்து பொருளுடையதாக மாறுகிறது. அவள் மரித்துப் போகிறாள். ‘பிரபஞ்சகானம்’ இது. மௌனி கிட்டத்தட்ட இத்தருணங்களைக் காலத்தினால் அழிக்க மடியாது படிமமாக சமைந்து கிடப்பதாகக் காண்கிறார். அதாவது, ‘அழியாச்சுடர்’, ‘மனக்கோட்டை’, ‘எங்கிருந்தோ வந்தான்’, ‘மாறுதல்’, ‘நினைவுச்சுழல்’ போன்ற கதைகளிலும் காலத்தால் அழிக்க முடியாது சமைந்திருக்கும் நினைவுகளாகப் பார்க்கிறார். இவ்விடத்தில் புதுமைப்பித்தன் ஞாபகம் வருகிறார். அவர் “நான் அற்றால் காலமும் அற்றுப் போகும். நான் ஓடினால் காலமும் ஓடும்,” என்று ‘கயிற்றரவு’ கதைகளில் அபாரமான ஞானத்தை முன் வைக்கிறார். மௌனயின் கதைகள் வெளிப்படுத்தும் உணர்விற்கு மாற்றான கோணம் இது. மனிதனின் இறப்பிற்கு அப்பால் ஒன்றுமில்லை என்பதைக் காட்டுகிறது புதுமைப்பித்தன் கதை. மௌனி, நினைவுகளின் சித்திரத்தை அவனின் காலத்தில் அழிக்க முடிவதில்லை என்று காட்டுகிறார்.

மரபின் தளைகள் உண்டாகும் மனப்பதட்டங்கள் ‘அழியாச்சுடர்’ கதையில் அழுத்தமாக பதிந்திருக்கின்றன. கோயில், அதன் பிரகாரத்தில் வைத்து விருப்பத்தை சொல்ல முனைவது, அவள் வேண்டாம் என்று பார்வையால் கெஞ்சுவது, சந்நிதானத்தில் இப்படிப்பட்ட கூத்தைக் கேட்ட யாளி எழுந்தாடுவது, அவனை கைபிடிக்க முடியாத காதலின் கொடுமையை அவள் வெளிப்படுத்துவது, கோவிலுக்கும் மனிதர்களுக்கும் உள்ள கருத்தியல் உறவு, சந்நிதானத்தின் மௌனத்தைக் கலைக்கும் அவளின் கொலுசு ஒலி, நடமாடும் பக்தர்களின் நிழல்கள் வேறொரு சாயைகளாக நகர்வது, காதல் கொண்டவள் நீண்ட நாளாக வந்து வந்து அவனைப் பார்க்காமலே காதலின் உக்கிரம் பெற்றாள் என்று தொனி எழும்படியாக ஒரு சந்திப்பு, கவித்துவமான சூழல் எல்லாம் ஒருங்கே கூடி, ‘அழியாச்சுடராக’ அசைகிறது.

“ஆகாயத்தில் இல்லாத பொருளைக் கண்மூடி, கைவிரித்து தேடத் துளாவுவதைப் பார்த்தாயா?”, “என் அழகு இளமையிலேயே முடிவடைந்து விட்டது போலும். ஆனால் என் வாழ்க்கை இளமையில் முடியவில்லையே”, காலம் அவள் உருவில் அந்த சந்நிதியில் சமைந்து நின்றுவிட்டது”, “கொத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும், அதன் பிரகாரத்தில் நடமாடும் பக்தர்களுக்கும், அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காணக்கூடாத நினைப்பைக் கொடுக்கும் அச்சந்நிதானம், எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது? நாம் சாயைகள்தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” என்ற வரிகளில் நம் இருப்பை தெளித்து வைத்து ஆட்டும் அப்பாலான சக்தி என்பதான மரபான கோணம்கூட கதைக்கு அற்புதமாகப் பொருந்தி பெரும் மனக்கிளர்ச்சிக்கும் விடை காண முடியாத அவஸ்தைக்கும் உள்ளாக்குகிறது.

சாதாரண சொற்களைக் கொண்டு அசாதாரணமான, திகைப்பிற்குரிய சந்திப்பை நிகழ்த்துவதுதான் மௌனியின் எழுத்துக்கலையாக இருக்கிறது. காரண காரியங்களால் நிரூபிக்க முடியாத ஒரு உலகு கைக்குச் சிக்காமல் இயங்குவதைக் காட்டுகிறார். “மாறி மாறித்தானோ, நான் என்னுடைய என்பதெல்லாம் மறுப்பில் மறுதலையாக உண்மையெனத் தோன்றும்”, “இருளில் உடலை விட்டகன்ற நிழல், ஒளி கண்டவுடன் சரியெனத்தானா, பிரிந்த தன்னுடல் எனக்கண்டு மறுபடியும் உடலுடன் ஒட்டிக் கொள்கிறது? சுசிலா பெயரெனத் தன்னைக் களைந்து கொண்டதில், சேகரன் மனைவி சுசீலா எனவா மனதில் உருக்கொண்டாள்?” (‘பிரக்ஞை வெளியில்’).

‘அழியாச் சுடர்’ போல பின்னணியும், இயற்கையின் விநோதங்களும் காகத்தின் கரைதலும், கன்று பிறத்தலும் உருமாற்றமாகப் பார்க்கிற ‘மாறுதல்’ கதை சிறப்பானது. மரணத்தின் வழி மனைவி வேறொன்றாக மாறி உலவுவதைச் சொல்லும் அக்கதை பிரபஞ்சத்தைத் தழுவுகிறது. இயற்கை மீது, இயற்கையின் இயக்கத்தின் மீது, பந்தத்தை ஏற்படுத்துகிறது. இயற்கையின் வடிவங்களை தனது உடன்பிறப்பாக, தாயாக, மனைவியாக, குழந்தையாகப் பார்க்கிற பார்வையை உண்டாக்குகிறது. மரபினை ஒரு செழுமையான தரிசனமாக காட்டுகிறது.

மௌனியின் கலைக்கோட்பாடு என்பது அல்லது கலை எழுச்சி என்பது சாதாரண நிகழ்வுகளைப் புறந்தள்ளிவிட்டு அசாதாரண தருணங்களையே கதையாக்க முனைந்துள்ளார். யதார்த்த உலகில் எப்போதாவது நேரும் விலகளை எடுத்துக்கொண்டு படைப்பு சஞ்சாரத்திற்குள் நுழைகிறார். அவை முழுக்க முழுக்க கணத்தின் கற்பனைகளை, இச்சைகளை, பயங்களை, குழப்பங்களை, கொண்டு பின்னப்படுகின்றன. பெரும்பாலும் மரபு உண்டாக்கி இருக்கும் கருத்தியல்களுக்கு காட்சி ரூபங்களாகவும், அதன் வழி உண்டாகும் பதட்டங்களாகவும் மொழிவழிப்படுத்தப்பட்டிருக்கின்றன. திரும்பவும் புது மாதிரியான தத்துவ சாயல் பார்வையால் எடுத்தியம்பப்படுகின்றன. அவை வாசகனைப் பரவசம் அடையச் செய்கின்றன. யதார்த்தமான கதைகளிலும் மன இயக்கமே தலைதூக்கி நிற்கின்றது.

தாசிகள் பற்றிய கதைகளில் அவர்களின் கொண்டாட்டமோ அற்பத்தனங்களோ கொடூரமான சிக்கல்களோ இல்லை. மௌனி என்ற படைப்பாளி மறைந்த ஒரு கதையும் இல்லை. மௌனி கதைகளில் வரும் காதல் உணர்வு, பரிமாற்றம், வெளிப்படையாக சொல்ல முடியாத தவிப்பு, உன்னதத் தனிமையாகப் பாவித்தல், மனதிலேயே கட்டி அழகு பார்க்கும் காதல் கோட்டைச் செயல், எல்லாமே சென்ற தலைமுறை காலத்தோடு மறைந்து விட்டது. சென்ற காலத்தில்கூட காதலின் மற்றொரு பக்கமான கசப்பும் வெறுப்பும் இருந்திருக்கும். அதனை மௌனி தொடவில்லை. செல்லிடபேசி வந்துவிட்டபின் காதல் ஒரு உன்னதத்தன்மையை இழந்து விட்டது. இந்த தகவல் பரிமாற்றத்தில் அறியப்படாத பேருண்மைகள் இன்று பெண்களிடமிருந்து கிளம்புகின்றன. மனத்தின் அத்தனை வக்கிரங்களும் கொட்டப்படுகின்றன. இக்காலத்தின் முன் மௌனி கதைகள் கொண்டிருக்கும் காதல் உணர்வு என்பது ஒரு கனவு மட்டுமே. அல்லது கற்பனை வடிவம் மட்டுமே.

மௌனி என்ற படைப்பாளிக்கும் சமூக இயக்கத்திற்கும் உள்ள தொடர்பு என்று பார்த்தால் கிட்டத்தட்ட ஒன்றுமில்லை. இளமை காலத்து அகச்சலனங்களுக்குப் பொருள் இருக்கிறதா என்று தேடிப் பார்க்கிறார். அந்தச் சலனங்கள் அவருக்கு வசீகரமாக இருக்கின்றன. அக்கொந்தளிப்பை சொற்களால் வடித்தெடுக்க பிரயத்தனப்படுகிறார். பிரிந்து போனவர்களின் காலங்கடந்த சந்திப்பில் நேரும் வேதனைகளை அழிக்க முடியாத சொற்களில் மீட்டப் பார்க்கிறார். புற உலகோடு ஒரு மோதலை இவர் கதைகள் நிகழ்த்தவில்லை. காமத்தின் ஆழ அகலங்களிலும் பயணப்படவில்லை. காமத்தின் தகிப்பை சொன்ன ஒரே கதை ‘மனக்கோலம்’ மட்டும்தான். மௌனி கண்டடைந்தது நிரந்தரமற்றுப் போன உறவுகளுக்கு சொற்களில் நிரந்தரத்தன்மையைக் கொண்டு வந்தது. இளையவர்களின் ஆசைகளை ஏன் காலம் இபப்டி பறித்து நிராதரவாக நிறுத்துகின்றது என்ற தத்துவசாயல்தான் அது. இதனை ஆரம்ப காலத்தில் கதையின் மையப் போக்குடனும் பிற்காலத்தில் இவராக வைத்துக் கொண்ட ஒரு மையத்திற்கு வலிந்தும் செய்திருக்கிறார். மௌனியைப் படித்து முடித்துவிட்டு நினைத்துப் பார்த்தால் மாந்தர்கள் கதையிலிருந்து எழுந்து வருவதில்லை. சிறுசிறு காட்சிகளை தத்துவசாயலுடன் வெளிப்படுத்த முனைந்த சொற்றொடர்கள்தான் நினைவிற்கு வருகின்றன.

“விதியையா மாற்றி எழுதப் போகிறேன், விதியைத்தான் எழுதப்போகிறேன்,” என்ற வரிகள் இரண்டு கதைகளின் (‘மாறுதல்’, ‘எங்கிருந்தோ வந்தான்’) முடிவு வரிகளாக வருகின்றன. கிட்டத்தட்ட எல்லா கதைகளின் அடிநாதமாக இம்மனநிலை ஓடுகிறது. மிக எளிய சமூகவியல் காரணங்களின் அடிப்படையில் இக்கதைகளை அவர் எழுத முற்படவில்லை. எனக்கு இவ்விடத்தில் டால்ஸ்டாயின் ‘அன்னா கரீனினா’ நாவலில் வரும் ‘அன்னா’ என்ற பாத்திரமும் ‘புத்துயிர்ப்பு’ நாவலில் அரும் ‘மாஸ்வாலா’ என்ற பாத்திரமும் ஞாபகம் வருகின்றன. டால்ஸ்டாய் என்ற ஆணினால் உருவாக்கப்பட்டவைதான். ஆனால் இரு பெண்களுக்குள் இயங்கும் மன இயக்கம் மிக்க அசலாக இருக்கின்றன. அவர்களின் சுதந்திர உணர்விற்கு நேர்கிற கொடூர நெருக்கடிகளைத்தான் எழுதுகிறார். ஆண்களால் ஒருபோதும் ஒப்பற்ற காதல் உணர்வைத் தர முடியாது. அவர்கள் தர முனைவதேல்லாம் காமம் ஒன்றை என்பதை அன்னா உணர்கிறாள். அவளின் விருப்பங்களுக்கு இல்லை ஆண்களின் உலகம். ஆண்களின் அதிகாரங்களுக்குச் சேவை செய்யக்கூடிய பெண்ணாகவே இயங்க வேண்டியதை கண்டுணர்ந்து மரணத்தைத் தேர்கிறாள்.

‘புத்துயிர்ப்பு’ நாவலில் வரும் மாஸ்வாலா பிரபு குடும்பத்தில் பணியாளராக வந்தவள். பிரபுவின் காதலுக்கு ஆட்பட்டு கைவிடப்பட்டவள். விபச்சாரியாக மாறுகிறாள். பிரபு மீண்டும் அவளை நெருங்குகிறான், தன்னால் கெடுக்கப்பட்டவள் என்ற ரகசியத்தைத் தெரிவிக்காமலே. மாஸ்வாலா ஆண்களை- அவர்களின் வாக்குறுதிகளைப் பொருட்படுத்தாத, எள்ளி நகையாடுபவளாகவே, இறுதி வரை காணப்படுகிறாள். வாழ்க்கைப்பட்ட அடி. எதையும் அவள் நம்பத் தயாராக இல்லை.

மனத்தடங்கலை ஒதுக்கி வைத்துவிட்டு பெண்களை அணுகிய படைப்பியக்கிய அணுகுமுறை மௌனி காலத்திற்கு முன்பே வந்து விட்டது எனபதை சொல்லத்தான். மிக அருகில் புதுமைப்பித்தனே மௌனி கண்முன் செய்திருக்கிறார். மௌனி எழுதவந்த காலத்திற்கு முன்பே எழுதியிருக்கிறார் (‘பொன்னகரம்’, ‘வழி’, ‘இரண்டு உலகங்கள்’, ‘குப்பனின் கதை’, ‘கலியாணி’, என்று 20 கதைகளை 1936க்குள் அடையாளம் காட்டலாம்). கு.ப.ரா. (‘விடியுமா?’, ‘ஆற்றாமை’, ‘நூருன்னிஷா’, ‘கனகாம்பரம்’, ‘சிறிது வெளிச்சம்’…) என்று பெண்ணின் மன உணர்வுகளை எழுதியிருக்கிறார். மௌனி, பெண்களின், ஆண்களின் பாத்திரங்களைப் பின்தொடர்ந்து வெளிப்படுத்தவில்லை. அவர் புற உலகில் நின்றபடி நிகழ்ந்த நிகழ்விற்கு, நிகழாத நிகழ்விற்கு பகற்கனவாகத் தோன்றும் எண்ணங்களை வடித்தெடுக்கிறார். இந்த சந்திப்பு இவ்விதம் சேர்ந்தால் என்ற புள்ளியிலிருந்து தொடங்குகிறார். அது தேடலாக இல்லாமல் விதி கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு நகர்வதாக இருக்கிறது. மனங்களின் விசித்திர எண்ணங்கள் எங்கும் வெளிப்படுவதில்லை. மாறாக, புற உலகினை விசித்திர அனுபவங்களாக மாற்றிக் காட்ட முனைகிறார். அதற்கு அவர் உண்டாக்கும் மொழி கவித்துவ செறிவு மிக்கதாக இருக்கிறது. இது ஒரு வகையான உழைப்பு. இதை இலக்கிய அனுபவமாக மாற்றித் தந்திருக்கிறார்.

மௌனியின் படைபெழுச்சி என்பது கவிமனத்தால் ஆனது. அவரது படைப்பியக்கம் கற்பனை வீச்சுக்களால் நிரம்பி இருப்பது. தமிழின் முதல் நவீன கவி என்றுகூட மௌனியைச் சொல்லலாம். புனைவு என்ற மெல்லிய இழைகளில் கவித்தோற்றங்களையும் எண்ணங்களையும் தொடுப்பதில் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த் அளவு புனைவின் சாத்தியப்பாடுகள் மீது அவர் ஆர்வம் கொள்ளவில்லை. தமிழ்ச்சமூகம் எத்தனையோ சிக்கல்களால் பிணைக்கப்பட்டு இருக்கிறது. அரசியல், சாதி, மதம், பொருளியல், வர்க்கம் என பல்வேறு கயிறுகள் மானுடத்தை வீழ்த்தியபடி இருக்கின்றன. புனைகதையாளன் இவற்றின் மீது விசாரணையைத் தொடுக்கிறான். இந்தச் சிக்கல்களுக்கான காரணங்களைப் புனைவின் வழித் தேடிச் செல்கிறான். வாழ்க்கை சிக்கலுக்குள்ளாகும்போது எண்ணங்களும் சிக்கலுக்குள்ளாகின்றன. எண்ணங்கள் சிக்கலுக்குள் உள்ளாகும்போது உளவியல் நெருக்கடிகள் ஏற்படுகின்றன. புனைகதையாளன் இவற்றை சவாலாக ஏற்றுக் கொண்டு புனைவின் சாத்தியப்பாடுகளுக்குள் நுழைகிறான், இதை ஒரு திட்டமாக எண்ணம் கொண்டு அல்ல. நேரடியாகவும் அல்ல. ஆழ்மனங்களில் பாய்ந்திருக்கும் இதன் பாதிப்புகள் காரியமாற்றுகின்றன. சமூகத்தின் முன் வல்லமை மிக்க படைப்புகளாக அவை எழுந்து நிற்கின்றன. வாழ்க்கை பல்வேறு கோலங்களால் தத்தளித்துக் கொண்டு இருப்பது. அவ்வளவையும் விரிந்த மனதுடன் அணுக முயல்பவனுக்கு புனைவின் சாத்தியப்பாடுகள் நிகழ்கின்றன. மௌனியிடம் இந்தப் பார்வை இல்லை. மௌனிக்கு நேர்ந்த வாழ்க்கை ஒரு உலகைத் தந்திருக்கிறது. பெரிய நெருக்கடியற்ற உலகம் என்றும் சொல்லலாம். அவரும் கண்முன் சில வீழ்ச்சிகளைக் காண்கிறார். அந்த வீழ்ச்சிகள் அவரை பாதிக்கின்றன. தத்துவத்தின் மீது இருந்த ஈடுபாடு இந்த வாழ்க்கையை வேறொன்றாகப் பார்க்க வைக்கிறது. அவரிடம் இருந்த தனித்துவமான படைப்பு மனம் கவித்துவமான புனைகதைகளைத் தந்திருக்கின்றது. இதில் வெற்றியும் உண்டு. தோல்வியும் உண்டு. அவருக்கே உரித்தான தனித்த பாதையில் தமிழ்ச் சிறுகதையின் உலகை இன்னும் விஸ்தரிக்க முடிந்திருக்கும். அவர் பாரதி போல் தன் அக வாழ்வை உடைத்தெறிந்து புற வாழ்க்கைக்குள் நுழைந்திருந்தால் நிகழ்ந்திருக்கும். இதில் மௌனிக்கு துளிகூட ஆர்வமில்லை. எனவே விளைச்சலும் மிகக் குறைவு. மௌனியின் படைப்புலகம் மலையடுக்கின் விரிந்த பரப்பைக் காட்டவில்லை என்றாலும் சமவெளியில் குன்றுகள் போல நிற்கின்றன சில.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.