மூன்றாவது சிலுவை

அன்றைக்கு காலையில் தாமஸ், வேதக்கோயிலை விட்டு போகும் போதும் மழை சோவென ஆங்கரித்துக் கொண்டிருந்தது. வேறு வழியில்லை போய்த் தான் ஆகவெண்டும். ராக் கருக்கலிலே செய்தி வந்து விட்டது கிள்ளியாற்றுப் பாலத்துக்கு அந்த பக்கம் வண்டி மாட்டிக் கொண்டது என. ஆறானாலும் ஓடை போலத்தான் அதுவே இந்த மழைக்கு மறுகால் பாய்ந்து நீர்முள்ளியும் கரந்தையும் மண்டிக் கிடந்த வாய்க்காலை நிறைத்துக் கொண்டு போனது. இவ்வளவு நாளும் இல்லாத வகையில் இப்படி பொத்துக் கொண்டு வருவது  நினைத்து கழுத்தில் கிடந்த சிலுவைத் தொட்டு தாமஸ் முத்திக் கொண்டார். புதுக் கோயில் கட்டினதிலிருந்து எல்லாமே நல்லதாகவே நடந்தது. சகரியாவுக்கு வாத்தியார் வேலை கிடைத்தது. ஜோஸ்லினுக்கு நல்ல இடமும் அமைஞ்சது. சகரியாவின் முதல் மாத சம்பளத்தில் அசனம் கொடுக்கவேண்டிக் கொண்டார். சாலமோன் அய்யாவிடம் சொன்ன போது ரொம்பவே சந்தோசப் பட்டார். ஆனால் முதல் அசனம் வேண்டாம்; ராஜசிங்கத்துக் கிட்ட பேச முடியாது கறட்டு வழக்கு பேசுவாருன்னு சொல்லிவிட்டார். முதலா இருந்த என்ன ? கடைசியா இருந்தா என்ன ?. மனதை தேற்றினாலும் சகரியா முகம் தான் வாடலாய் இருந்தது. கோயில் கட்டுமான வேலையெல்லாம் முடிந்துவிட்டது. வர்ணம் பூசுவதற்காக சாரம் கட்டிருயிருந்தார்கள்.  ஊசி போலிருந்த கோபுர நுனியில் சிலுவை மாட்ட வேண்டியதுதான் பாக்கி. அப்புறம் விழாதான். ஆனால் சிலுவை கொண்டு வரும் வண்டிதான் கிள்ளியாற்று வெள்ளத்தில் மாட்டிக் கொண்டது. புதிதாய் வெள்ளையடிக்கப் பட்ட கோவில் சுவர் நனைந்து உள்ளே தெரியும் கருப்பை காட்டிக் கொண்டிருந்தது.

கிள்ளியாறு முழுதும் செம்பு வண்ணத்தில் ஒரே சீராக போய்க் கொண்டிருந்தது. தென்னங்கீத்தும் மட்டையும் கூந்தலும் கூட்ட கூட்டமாய் தெரிந்தன. சூம்பிப் போன குரும்பைகள் இவ்வளவு நாளும் மழை இல்லாததைக் காட்டின. குறுக்கே இறங்கி மறுகரைக்குப் போனால் தான் வண்டிக்குப் போக முடியும். கரடு எதுவும் தட்டுப் படுகிறதா என கரை வழியே நடந்து கிழக்கே போனார். ஆறு குறுகி பெரிய பின்ன மரத்திற்குப் பக்கத்திலிருந்த பாறையில் பட்டு சிவப்பாய் தெறித்து ஒடியது. மறு கரைக்கு போவதற்காகவே அமைந்தது போலவே பாறை நடுவில் தாழ்ந்து சரிவாய் போனது. இறங்கி நடந்தால் வெள்ளம் இழுத்துக் கொண்டு மூங்கில், தாழை மூடுகளில் செம்மிவிட்டுப் போய்விட்டால் என்ன செய்வதென லேசாக அரிச்சல் பட்டுக் கொண்டார். பின்ன மரத்தின் ஒரு பெரிய வேரில் இறங்கி ஒரு காலை பாறை மீது வைத்தார். நினைத்ததை விட ஆழத்தில் பாறை இருந்தது. தண்ணீரின் இழுவை அதிகமாவே இருந்தது. வெற்றுக் கால்களை பாறையின் சொரசொரப்பான பாறைப் பரப்பில் அழுத்தி அழுத்தி அடி வைத்து நடந்தார். முட்டளவு தண்ணீர் வந்து விட்டது. ஒரு முறை மூங்கில் மூட்டைப் பார்த்துக் கொண்டார். வெள்ளத்தின் வேகத்தில் தடுமாறினால் கூரான கட்டைக் கழைகளில் இழுத்துப் போட்டுவிடும். கவனமாக நடந்து மறுகரையை நெருங்கி விட்டார். வேலிக் கொடிகளைப் பிடித்துக் கரையின் களி மண் மேட்டின் மீது கால் வைத்துக் கொண்டார். அடுத்த அடி உந்தி ஏறுவதற்குள் காட்டுக் கொடி வேருடன் பேத்துக் கொண்டுவிட்டது. தடுமாறியவர் வெள்ளத் திற்குள் சரிந்து விழத் தொடங்க கையில் கிடைத்த செடிகளையெல்லாம் பிடித்துக் கொண்டார். விழுந்த வேகத்தில் கரையிலிருந்த கூம்புக் கல்லில் குத்தி இடது கண்ணாம்பட்டை பயங்கரமாக வலித்தது. ஒருவழியாய் சமாளித்து கரையேறினார். கரண்டைக்கும் மேலிருந்த சேற்றுக்குள் பின் பைதா மாட்டிக் கொண்டு, கிறங்கி, வண்டி சகதியை வாரி இறைத்ததுக் கொண்டிருந்தது. பின்னந்தோடு தரைப்பாலம் உடைந்தால் வண்டியினுள் வெள்ளம் போய்விடும் என்று தாமஸ் பயந்து கொண்டார்.

.

“ஏ…. ஏ….பாத்து வையப்பா மரிராசு”

கோபாவேசத்துடன் தாமஸ் சொல்லிக் கொண்டே மரிராசுவைப் பார்த்து மட்டியைக் கடித்த போது மஞ்சளாய் காறைப்பல் தெரிந்தது. வண்டிக்குள் இருந்த மரச் சிலுவயையும் கோபுரத்திற்கான எக்குச் சிலுவையும் இழுத்து வெளியே வைத்தார்கள். வெறும் கூடு போலிருந்த இரும்புசிலுவை கனத்தாலும், மரமளவுக்கு இல்லை.

“என்னணே செய்ய”

இடுப்பில் கை வைத்து ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்த தாமஸைப் பார்த்து மரிராசு கவலையாய் கேட்டான். தாமஸ் அரவமில்லாமல் நின்றுகொண்டிருந்தார்.

“நா வேணுமின்னா பின்னந்தோட்டில போய் ஆள் கூட்டியாரட்டுமா வேற வண்டில ?”

“அங்கருந்து இந்த சவதிக்காட்டுல வண்டிய யாருடே கொண்டாருவா ?”

“ஒம் வண்டி மாரி சவதில மாட்டிக்கிட்டா என்னடே செய்வான் ?”

“ம்ஹூம் அது சரி வராது”

“சரி சரி வண்டிக்குள்ள தண்ணி போது பாரு”

“அது இனி பிரிச்சா தான் வேலைக்காகும் !”

கையை இடுப்பில் வைத்து ஆற்றையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த தாமஸ் உற்சாகமாய் மரிராசுவைப் பார்த்துக் கனைத்தார்.

“ ஏய்………….பெரிய கொச்சம் இருக்குல்லா ?”

“சரி இப்பிடி வா ஒரு கையப் பிடி”

தாமஸ் மரச்சிலுவையில் கொச்சத்தை  குறுக்காக போட்டு முதுகில் எற்றிக் கொண்டார்.

“அண்ணே வாரிட்டுனா தப்பா போயிறும். கொஞ்ச நேரம் பொறுப்போம். வெள்ளம் வடியுமில்லா பெறவு போலாம்”

“கரைய பாத்தியாடே ! பசுங்கொப்பையெல்லாம் வாரிக்கிட்டு வரதப் பாரு. இனிமே கூடத்தாமிடே செய்யும். நீ ஒன்னும் பயப்படாண்டா கேட்டியா. யான் இடுப்புல ஒத்த கயித்த மட்டும் கட்டிகிடுதேன் இந்தா இந்த முனயை அந்த வேம்பில கட்டிட்டு கயித்த நீயும் பிடிச்சுக்டே- ஒரு வேளை வாரிட்டுன்னா!”.

ம் அப்புறம் இதுகள ஒவ்வொன்னா அக்கரைக்கு கடத்திடுதேன். பெறவு இடுப்புக் கயித்த எதுக்க இருக்க பின்ன மூட்டுல கட்டிருவேன். மெதுவா அத பிடிச்சிக்கிட்டு நீயும் வந்திரு என்னா ?” என்று  சொல்லி சிரித்தவரை மரிராசு மருண்டு போய் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்றைக்கு இரவெல்லாம் மழை பெய்து கொண்டிருந்தது.

“இது என்னடே ஒரு வாக்குல பேஞ்சிக்கிட்டேயிருக்கு” என்று தாமஸ் சலித்துக் கொண்டார். அவருடைய மனம் பூரண அமைதியாகி விட்டிருந்தது. ஏதோ ஒரு விதத்தில் கோயிலுக்காக இந்த காரியத்தை செய்ததில் குதூகலமாயும் இருந்தது.  மனதின் பாரங்களையெல்லாம் அந்த சிலுவையோடே கோயிலில் இறக்கி வைத்தது போல் ஒரு திருப்தி.

ஊர்க்காரர்கள் மத்தியில் தாமசைப் பற்றி பெருமையாய் பேசிக்கொண்டார்கள். பேச்சுகுப் பேச்சுக்கு மரிராசு அந்த கதையை மற்றவர்களுடன் பேசி பெருமை அடித்துக் கொண்டிருந்தான். இரும்புச்சிலுவை தாமசின் தோள் பட்டையில் பதிந்து கிழித்ததையும் சொன்னான். மழை ஓய்ந்து இரண்டு நாள் கழித்துப் பார்க்கும் போது வண்டியை பிரட்டி போட்டிருந்தது. உடைந்து போன கரையில் வண்டி முன்பக்கமாய்  தொங்கிக் கொண்டிருந்தது. சாலமோன் அய்யா தாமஸை கோயில் திருவிழாவின் போதே பெருமையாய் சபையோருக்கு முன்னால் சொல்லி வாழ்த்தினார். இதற்கெல்லாம் மேலாக கோயில் கல்வெட்டில் தாமசின் பெயரையும் சேர்த்தார். அப்போதுதான் சாலமோன் அய்யாவுக்கும் ராஜசிங்கத்துக்கும் பெரிய சண்டையே வந்து விட்டது. பெரிய சபையில் சொல்லி சாலமோன் அய்யாவை மாற்றச் சொல்லிவிட்டார். ஒரு ஞாயிற்றுக் கிழமையில் கடைசியாக அவர் சொன்ன உபதேசம் இன்னும் காதில் கேட்டுக் கொண்டிருந்தது.

“ இதோ நீங்கள் கர்த்தருடய ராஜ்ஜியத்தை அடைந்துவிட்டீர்கள் !. அங்கே அன்பேயல்லாமல் வேறே எதுவும் செல்லாது என அவர் சொன்னதை மறவாதிருங்கள் ”

பிறகு சகரியாவின் கல்யாணம் நடந்தேறியது. சாலமோன் அய்யா இல்லாத கல்யாணத்தை தாமசால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கூப்பி மடக்கிய கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. கண்களை மெல்லத் திறந்து மரச்சிலுவையைப் பார்த்தார். தலையை கவிழ்ந்த படி இருந்த தேவனின் கண்கள் கீழே எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

~oOo~

தாமஸ் மரிராசுவை நிறுத்திக் கேட்டார்

“ ஓ………….யாரு இங்க வாடே “

“என்னணே எப்பிடி இருக்கிய பேரமாரு வந்திருந்தாவளோ ஒரே கூப்பாடா கெடந்துச்சே ? இருக்காவாளா போயாச்சா ?”

“ம்…போயிட்டாவ”

“எங்க சாப்பிடுதீரும் இப்ப”

“சேசு வீட்டுலதான்” கையிலிருந்த பிரம்புக் கழியை காற்றில் தூக்கி காட்டி எதிர் வீட்டைக் காண்பித்தார்.

“ம் அது சரி. மவன் வேலைபாக்கான் சமயலுக்கு ஒரு ஆளப்போட்டா என்னணே ?”

“இம்புடுதூரம் ஒருத்தரும் வர மட்டாக்காவடே என்ன செய்ய சொல்லுத ?”

“ஆ அப்ப ஊருக்குள்ள வந்து இருவேன் !”

“போதும்டே ஊரு !. இப்ப ஒரு பய மதிக்க மாட்டக்கான் கேட்டியா !.  எல்லாம் புதுப் பயல்வளா கெடக்கானுவோ. புது பழக்கமெல்லாம் படிக்கானுவோ நீ யாரு ? என்னன்னு ? நம்மல பாத்துக் கேக்கானுவோ ?.  ஆமா ஒருத்தன் உருட்டிக்கிட்டே கெடந்தான்லா அவன் என்னடே செய்தான்”

“யாரு சிங் அண்ணனையா சொல்லுத “

“ஆமா…..அவந்தான் நீ தான் அவன அண்ணன்னு சொல்லுத”

“அவரு இப்ப கோயிலுக்கு ஒரு எடம் வாங்க அலைஞ்சிக்கிட்டுருந்தாரு. மேக்க குன்னிக் குளம் இருக்குல்லா அங்க ஒரு பெரிய எடம் வாங்கியிருக்கார். தெரியுமா”

“ஓஹோ! எதுக்குடே…”

“எதுக்கோ !”.

தாமஸ் யோசனையாய் மேலே பார்த்தார். இரும்புச்சுலுவை சிறிய கரிய கோட்டைப் போல உச்சியில் தெரிந்தது.

~oOo~

பண்டியலுக்காக ஊரே வண்ண  விளக்குகளால் ஒளிமயமாய்த் தெரிந்தது. வேதக் கோயில் கோபுரம் கண்ணைப் பறிக்கும் வெளிச்சத்தில் ஜொலித்தது. சகரியா ஊருக்கு வந்திருந்தான். தாமஸ் பேரப் பிள்ளைகளோடு பேசி பெரியதாய்ச் சிரித்துக் கொண்டிருந்தார். இரவு ஜெபத்திற்கு பிறகு பிள்ளைகளெல்லாம் தூங்கிப் போனார்கள். தாமஸ் படுக்கையில் அசைவற்றுப் யோசனையாய்ப் படுத்திருந்தார்.

மறு நாள்….

“ சகரியா ….இங்க வாப்பா”

“சொல்லுங்கப்பா”

“ஒரு காரியம் செய்யணும் கேட்டியா….கார எடு போலாம்”

பின்னந்தோடு சாலையில் கிள்ளியாற்று பாலத்தின் மீது கார் போய்க் கொண்டிருந்தது. மெல்ல எட்டி கீழே பார்த்தார். சகரியா அப்பாவை பார்த்தும் பார்க்காதது போல் வண்டியை மெதுவாக ஓட்டினான். பத்து இருபது அடிக்கு கீழே நான்கு கல் தூண்களுக்கு நடுவே கிள்ளியாறு ஒடிக்கொண்டிருந்தது.

ப்ச்…..“மின்ன மாரி இல்ல கேட்டியா”

“ஆமா” என்று சகரியா தலையை ஆட்டினான்.

சிறிது நேரம் கழித்து தாமஸ் தலையை மெதுவாக ஆட்டினார். சகரியா அவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“எங்கப்பா போறோம் இவ்வளவு தூரம் வந்தாச்சு”

“ம்…. பொறு ! அன்னா அந்த ரெட்ட பனைக்கு மேக்க வண்டிய விடு”

சுற்றிலும் பனைமரங்கள் சூழ்ந்த அந்த இடத்தில் வண்டி நின்றது. தாமஸ் வண்டியிலிருந்து இறங்கி, மெதுவாக ஒரு குழந்தயைப் போல அடியெடுத்து வைத்துச் சுற்றிப் பார்த்தார். பெரிய மஞ்சணத்தி மரமொன்று வலது பக்க ஒரத்தில் இருந்தது. கிழவரின் முகத்தில் ஒரே புன்சிரிப்பு.

“எடம் நல்லாருக்கா ?” தாமஸ்.

“இவ்ளோ தூரம் வந்து, இங்க எதுக்குப்பா வாங்கணும்”.

தாமஸ் பதில் சொல்லாமல் மெல்ல நடந்து சென்று மஞ்சணத்தி மர நிழலில் ஒதுங்கிக் கொண்டார். சகரியா பின்னாலே போனான்.

“நம்ம விலைக்கு இங்க தான் கெடச்சது. நாளைக்கு யாரும் வீட்டுல சவத்த வெச்சிக்கிட்டு கண்ட நாய்ட்ட கறட்டு வழக்கு பேச கூடாது பாரு – மரிராசுக்கு ஆன மாதிரி !. இத்தனை வருசம் நாயா விசுவாசமா இருந்ததுக்கு இம்பிடு இல்லன்னு ஆயிருச்சு தெரியுமா ?. தோள் துண்டால் வாயைப் பொத்திக் கொண்டார். உடம்பு லேசாக குலுங்கிக் கொண்டிருந்தது.

“நமக்குன்னு ஒரு இடம் வேணும்ப்பா…அதுக்குத்தான் இந்த இடம். ஆனா சகரியா யாரு வந்தாலும் இல்லன்னு மட்டும் சொல்லக் கூடாது கேட்டியா !. நீ யாரு  எவடமுன்னும் கேக்காத சரியா !. இது தேவனோட ராஜ்ஜியம் மாதிரி எல்லாத்துக்கும் எடம் உண்டும் பாத்துக்க. பெறவு இந்த மனுசப்பயல்களோடது மாதிரியில்ல. இங்க யாரும் கீழயும் கிடயாது மேலயும் கிடயாது. ஆமா!”.  கிழவர் பேசி முடித்து விட்டு எங்கோ ஒரு திசையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். மரி ராசு இறந்து போனதைக் கேட்டதும் சகரியா மௌனமாய் கிழவரையே பார்த்துக் கொண்டிருந்தான். வரும் வழியில் ஊரை ஒட்டியிருந்த புது கல்லரைத் தோட்டம் ஞாபகத்துக்கு வந்தது.

“சகரியா” கர கரத்த குரலில் தாமஸ் முனங்கினார். யோசனையாய் இருந்தவன் அவரைப் பார்த்து திரும்பினான்

“கர்த்தர்ட்ட போனதுக்கு அப்புறம் இதே மஞ்சணத்தி நிழல்ல என்ன சேர்த்துரு. பெறவு நீயும் இந்த திச பக்கமே வராத” என்று விரக்தியாய் சொல்லிவிட்டு தாமஸ் ஓவென்று அழ ஆரம்பித்தார்.

அவர் நெஞ்சில் மூன்றாவதாய் ஒரு சிலுவை இன்னும் பாராமாய் அழுத்திக் கொண்டிருந்தது. எந்த பாவத்திற்கு, யாருடைய பாவத்திற்கு இந்தச் சிலுவை என மனதில் வெம்மெறுமலாய் வந்தது. அது எந்த ரத்தத்தாலும் கழுவப்படாமல், இன்னும் பெருஞ்சுமையாய் அழுத்துவது போலிருந்தது. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சரிந்து உட்கார்ந்தார். ஓடி வந்து சகரியா பிடித்துக் கொண்டான். மல்லாந்து கிடந்த தாமசின் நெஞ்சில் வெள்ளி மயிர்களினூடே நெடுநாளாய் கிடந்ததில் கருத்துக் கிடந்தது அந்தச் சிலுவை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.