புலன் விசாரணை

இன்று புரட்டாசியின் மழை அதிகாலை. மெல்லிய குளிர் மாறி விடியவிடிய புழுக்கம் ஏறிவருகிறது. மென்குளிர் காற்று. வாசலில் மண்ணோடு குழைந்த நீரின் மணம் உணர்ந்து புன்னகைத்தேன்.கோலம் வரையும்வரை வேறுமணத்தை எதிர்பார்த்து ஏமாந்தேன். வெந்நீரா?தண் நீரா? என்று மனம் சோழி போட்டு பார்த்துக் கொண்டிருந்தது. நீராவி வெண்புகையாக எழுந்து மேற்கே கொல்லிமலைக் குன்றுகளை பார்வையிலிருந்து மறைத்துக் கொண்டிருந்தது. கிழக்கே பச்சைமலைக்குன்றுகளுக்கு மேல ஒளியெழ இன்னும் நேரமிருக்கிறது.

இருளில் அமைதியிலிருக்கிறது ஊர். பக்கத்து வீடுகளில் மெதுவான அரவங்கள் கேட்டாலும் யாரும் அமைதியை கலைக்கத் துணியாமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். கொல்லிமலையின் ஒரு குன்றடியில் பறந்து விழுந்த பசும் ஆலிழை போன்ற பசும்மணமும், உள்ளங்கையளவுமான ஊர்.தெருவில் நடந்து செல்லும் பசுக்களின் குளம்போசையும்,செருமலும்,மணியோசையும், தெருமுக்கில் அவை செல்லும் பாதையை ஒலியால் மனதில் வரைந்தன.

ஏதோ ஒருபசு அப்போதுதான் இட்ட சாணியிலிருந்து எழும் நீராவி தெருவிளக்கு வெளிச்சத்தில் கண்களுக்கு புலப்பட்டது. கழுநீர்ப்பானையில் நீர் ஊற்றிவிட்டு அருகிலிருந்த நித்யமல்லிச் செடியின் வெண்மலர்களின் செறிவைப் பார்த்துநின்றேன். எதிர்வீட்டு பொற்கிளியம்மா சாணியை உருட்டிக் கையிலெடுத்து நடக்கையில் புல்நொதித்த மணமும் உடன் சென்றது.

சட்டியில் பாசிப்பருப்பு வேகும் மணம் முட்டைக் கோசைச் சேர்த்தவுடன் அவ்வளவு இனிமையாக இல்லை. யாரோ ஒரு பக்திமான் பாடலை ஏழுவீட்டிற்கு கேட்க ஒலிக்கவிட்ட நொடியில் அமைதி வேறிடம் தேடி ஓடிப்போனது.

குளிக்கையில் சோப்பின் மணத்தை விட வேம்பு மஞ்சள் பொடியின் மணம் மூக்கை திணரடித்தது.பவுடர் மணம் ஏற்றுக் கொள்ளக்கூடியது.இளஞ்சிவப்பு சுடிதாரை எடுக்கையில் நிறத்திற்கு மணமுண்டா, கவனிக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

பேருந்து நிறுத்தத்திற்கு நடக்கையில் அம்மா, “என்னத்த நெனச்சுக்கிட்டு இருப்பியோ?பாதையில பாத்துக் கால வையி,”என்றார். ஊர்முழுக்க மண்நனைந்த மெல்லிய உவக்காத மணம். மழை துவங்கிய நாட்களில் நன்றாகத்தான் இருந்தது.நாட்கள் செல்லச் செல்ல இப்படியாகிவிட்டது. உயிர் குறைகையில் எல்லா மணமும் உவக்காமல் ஆகுமாக இருக்கும். இல்லை நுண்ணுயிர் பெருகுவதாலா? எனில் உயிர்மணங்கள் எப்போதும் உவக்காதவைகள் தானா?!

பேருந்து நிற்கும் அரசமரத்தடிவேலுக்கு பின்புறம், பாசனவாய்க்காலின் மேட்டில் தன்ஒற்றைக் குஞ்சுடன், கறுத்த குண்டுக் கோழி மண்ணைக் கொத்திக் கொண்டிருந்தது. குஞ்சு குடுகுடு வென்று நிற்காமல் சுழன்று கொண்டிப்பதைப் பார்க்க அலையில் மிதக்கும் மென்மலர் என்றிருந்தது.வாய்க்கால் தண்ணீரின் மணம் வயிற்றைச் சங்கடப்படுத்தியதை உணர்ந்து துப்பட்டாவை மூக்கில் வைத்த நேரத்தில் பேருந்து வந்துவிட்டது. உயிர்மணம் கெடும் மணம்.

உள்ளே சன்னலோரத்தில் அமர்ந்ததும் யாரோ சட்டென்று அடித்ததைப் போல ஒரு மணம் மூக்கை அடைத்தது.பேருந்து நகரத் தொடங்கியதும் அப்பாடா என்றிருந்தது. வயல்களைக் கடந்து கள்ளுக்கடை திருப்பத்தில் வயல்களின் பின்னால் வெயிலவன் எழுந்து கொண்டிருந்தான்.விசுவையைக் கடந்ததும், தேவாலய கோபுரத்தின் பக்கவாட்டில் வெயிலவன் ஏறியிருந்தான்.

காணும் அனைத்திலும் மழையின் ஈரம் ஏறிய ஔியின் மினுமினுப்பு. ஔிக்கு மினுங்கும் ஈரம் ஏனோ காற்றுக்கு சுணங்குகுகிறது எனத் தோன்றுகிறது. எந்த உயிருக்கு நாள்பட்ட காற்றும் ஈரமும் உயிர்தரும்? பூஞ்சைக்குத் தானே.   அவைகளுக்கும் அதே நாள்பட்ட மணம்.அம்மா பயணச் சீட்டு வாங்கி என்னிடம் தோள்பையில் வைக்கத் தந்தார். நாள்பட்டவைகளுக்கு இனிய மணமில்லை எனில் திராட்சை ரசம் எப்படியிருக்கும்?எனில் மணம் என்பது மனம் சார்ந்ததா? எனில் மணத்திற்கு சுயகுணம் என்பது?

வயல் வெளிப்பாதையில் மணம் ஒன்று எழத் துவங்கியது. என்ன மணம்? அது உடன் வந்து கொண்டேயிருந்தது.

பேருந்தில் பாடல் ஒலிக்கத் துவங்கியது.பேருந்தில் ஆட்களின் எண்ணிக்கை அதிகமானதும் சலசலப்புத் துவங்கியது. அனைத்தையும் பாடல் சப்தம் இல்லையென்றாக்கிக் கொண்டிருந்தது. அதிக வீச்சு கொண்ட குணத்திற்கான புலனைக் கவனம் தேர்ந்தெடுக்குமெனில் குணம்தான் புலன்களைத் தீர்மானிக்கிறதா?எனில் சூழலுக்கென உருவாகி வந்தவை புலன்களெனில் உணரப்படாத குணங்கள் வியாபித்த வெளியில் அதிக வீச்சு பெற்ற ஐந்தைத் தேர்ந்தடுக்கிறோமா?.இந்த ஐந்து உயிர் வாழ்தலுக்கான அவசியமெனில் ….இது வரை என்னுடன் மணமிருந்ததா? இல்லை இயற்கையை விட்டு விலகியதால் தேவையற்றதாகி விட்டதா? வரும்காலங்களில் புலன்கள் உருவாகாமல் போகலாம் இல்லையா? எப்போதோ வாசித்த புத்தகம் இந்த மணத்தோடு சேர்ந்து உடனெழுகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

அடுத்த நிறுத்தத்தில் கல்லூரிக் கும்பல். மாநில நெடுஞ்சாலையில் பேருந்தின் ஆட்டம் குறைந்தது. பச்சைமலையோரக் காடுகளின் முடிவில் மரங்கள், நீண்ட கோடைக்குப் பின் பசுமை கொண்டு எழுந்திருக்கின்றன. மீண்டும் அதே மணம்..மெல்லிய எரியும்,தண்மையும்,உயிர்மையும் கலந்த மணம்.

சன்னலின் வெளியே கீழ்ப்பார்வைக்கு தார்சாலையின் ஈரக்கருமைக்குப் பக்கத்தில் நெருஞ்சி பச்சையாய் நீண்டு மஞ்சளாய்ப் பூத்து விரிந்திருந்தது. ஊடே கால்தடப் பாதைக்கு அடுத்தும் நெருஞ்சி பூத்த நீள்வெளி. சில வயல்களில் பசும்புல் விரிந்த பரப்பில் அங்கங்கே சிறுசிறுகுப்பல்களாக ஏரிமண் குவிந்திருந்தது. உடலே மணமாக ஆகியதைப் போல அந்த ஒற்றை மணமே உணர்வாக இருந்தது.

துறையூரில் நுழைந்ததும் மெல்ல இயல்பானேன். சிறுநகருக்குள் சந்தடி துவங்கி மழைக் காலத்தில் மெல்லிய சோம்பலுடன் இருக்கிறது.பேருந்து நிறுத்தத்தின் இடபுறம் சிறுகடலென விரிந்திருக்கும் சின்ன ஏரி தென்பட்டது. நீ்ர் நிறைந்து தழும்பிக் கொண்டிருந்தது. சற்றுத் தொலைவில் கொக்கு, நாரைகளின் கூட்டம். பார்க்கையிலெல்லாம் கிளர்ச்சி தரும் காட்சி. சிற்றலைகள் கண்களுக்கு புலப்படும் அதே நேரத்தில்,காலையில் கழிவறையில் உணரும் மணமும்,பாத்திரம் கழுவுகையில் எழும் பழைய உணவின் மணமும், பின் இன்னும் என்நாசியும், மனமும் வகைப்படுத்தாத கடுமையான ஒருமணம். முகத்தை சுழித்துக் கொண்டு திரும்புகையில் சிற்றலைகளால் மின்னிக்கொண்டிருந்தது ஏரி. ஏரி அழகானதாய் தோன்றாததற்கு காரணம் என்ன? மனம் பீதியடையத் தொடங்கியது.

திருச்சியின் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து விரைந்து கொண்டிருக்கையில் புழுக்கம் அதிகரித்து வானம் இருண்டு கொண்டிருந்தது. ஒவ்வொரு முகமும் எரிச்சல் கொண்டிருந்தது. முன்னிருக்கை கைக்குழந்தை சிணுங்கிக் கொண்டிருந்தது.பாடல் மனதை ஒருமுகப்படுத்திவிட்டு எங்கோ சென்றுவிட்டது. பேருந்து கல்லூரிப்பிள்ளைகளால் உயிர்த்துக் கொண்டிருந்தது.

பேருந்து இயல்பானது.மெல்லிய காற்று வந்தது தான் காரணம். மறுபடி அந்த மணம்.வெளியில் பார்த்தேன். புலிவலம் காடு. இது பசுமை வெயிலில் கலந்து காற்றில் பரவும்மணம். ஆமாம்… தழைமணம் என்று கண்டு கொண்டதும் புன்னகைத்தேன். காடு மழைகுடித்துச் செழித்திருந்தது. பசுமையை அள்ளி விரித்தும்,ஓங்கி வளர்ந்தும்,அடர்ந்து செறிந்துமிருந்தது. பசுமையால் தீட்டிய ஓவியம்.சென்ற பயணத்தில் பாதையோரம் கண்ட மான்களும், குரங்குகளும் காணவில்லை. மயில்கள் அகவி அலைவது தெரிந்தது. மணம் உணர்தல் என்பது புன்னகைக்க வைத்துக் கொண்டேயிருந்தது. தவறு எதுவுமில்லை, பீதி தேவையில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

முன்னிருந்து, “ட்ரீம் அடிக்குதுடா?” என்ற குரலால் கலைந்தேன். புன்னகைத்துக் கொண்டிருப்பதை உணர்ந்து முகத்தை மாற்றினேன். எரிச்சலாக வந்தது. திருவெள்ளறை மொட்டைக் கோபுரத்தைக் கடக்கையில் மனம் இயல்பாகியிருந்தது. சற்றுத் தொலைவில் வெண்சுண்ணப்பாறைகள் கலைந்து கிடக்கும் வெளி. மழைநனைத்த ஈரம். மணம் எப்படியிருக்கும்?.

நாசியை நிரப்பி உடன் வந்து கொண்டிருந்தது மணம். மண்ணச்சநல்லூர் வந்ததும் தழைமணம் சூழ்ந்து நிறைந்தது.கொடிகள் பின்னிப் படர்ந்து மறைத்த மரங்கள். கொடிப்பந்தல்கள் காற்றிலசைந்தன.

இரட்டைப் பாசன வாய்க்கால் நிறைந்து ஓடிக் கொண்டிருந்தது. அருகில் காந்திப் பூங்காவில் தரை பாசி பூக்கத் தொடங்கியிருந்தது.வீட்டுமனைகளாக வகுந்திருந்த பரப்பெங்கும் ஓடைநீர் திமிறி ஏறிக் கொண்டிருந்தது. பாசிமணம் எப்படியிருக்கும்? முன்னப் பின்ன தழை மணம் போலவா? பேருந்து விரைந்தது.

தொலைவில் அரங்கத்தின் கோபுரம் கண்களுக்கு புலப்படுகிறது. பின்னே வெள்ளை கோபுரம். அடுத்து கோபுரங்கள் வரிசையாக கண்களில் தென்படத்துவங்கின. ஒரு திருப்பத்தில் மலைக்கோட்டை கண்களில் விரிந்து நகர்ந்தது.

கொள்ளிடப் பாலத்தில் பேருந்து ஊர்ந்தது. காவிரி புஷ்கரத்திற்கான கூட்டம் அந்த நிறுத்தத்தில் இறங்கினார்கள். கரும்நாவல்பழத்தின் கண்ணாடிப் பரப்பென நீர் மெல்ல ஒழுகிச் சென்றது.மீண்டும் உற்றுப் பார்த்தேன். அதேநிறம் தான். மணம் பற்றி நினைப்பதைத் தவிர்த்தேன்.

சற்று நேரத்தில் காவிரிப் பாலம் வந்தது. சற்று வேகமான நடை நீராட்டம்.நீரும் அதிகம். காவிரி நிறைந்து பெருக்கெடுத்து பார்த்ததுண்டா என நினைவுகளைத் தேடினேன். இந்தக்கரை பாலையாய் நீள பேருந்து நகர, நரக நீரோட்டம் கண்களுக்கு அருகில் வந்தது. பக்கவாட்டில் நீரோட்டம் தெளிய இடையே மணற்குன்றுகளில் மரங்கள், நாணல்புதர்கள் தலையசத்தபடி கடந்து சென்றன.உடைந்த, பழைய, ஆளற்ற படித்துறையில் ஒரு அம்மா துணிகளை துவைத்துக் கொண்டிருந்தாள்.எல்லாம் ஒருநாள் நிறைவதும், வழிவதும், வற்றுவதும் தான்.காவிரி எத்தனை சித்திரங்களை வரைந்திருக்கிறது மனதில். அருகில் சென்றால் அனைத்தும் மாறுமா? ஆம் என்ற தோன்றுகிறது. சட்டென்று உணர்ந்தேன், எங்குமே மணமில்லை! இப்படித்தான்..எப்போது உணர்திறன் நிற்குமென்று எது தீர்மானிக்கிறதென்று தெரியவில்லை. மீண்டும் எப்போது உணரும் என்றும் சொல்வதற்கில்லை.

ஆமாம் மணம் என்று நினைத்தது கண்களைப் போலவோ,தொடுகையைப் போலவோ, கேட்டலைப் போலவோ அல்ல. அது கணம்தோறும் சூழலுக்கும், நினைவிற்கும், மனத்திற்கும் தன்னை ஒப்புக்கொடுத்து மாயஓட்டம் நடத்தும் மாயம்.

கண்களும்,நாசியும் முரண்பட்டு நிற்கிறது. கண்கள் தொகுத்த காவிரி வேறு.

மருத்துவரிடம் சொல்ல வேண்டும். சிலநாட்களாக மணம் தெரிகிறது.ஆனால் அதனால் மற்ற புலன்கள் இந்நாள் வரை வரைந்த மனதின் சித்திரங்கள் மாறுவதை எங்ஙனம் மாற்றி வரைவதென்று?

இக்கணம் பழைய நான். காட்சிகளெல்லாம் இயல்பாக எப்போதும் போல. கண்முன்னே திருச்சி விரிகிறது என் நான்கு புலன்களுக்குமான திருச்சி. ஐந்துபுலன்களுக்குமான திருச்சி எந்தகணமும் தோன்றலாம்.கடலை விற்கும் பையனை அழைத்தேன். அவன் என்ன நோக்கி டிங்டிங் சத்தத்தோடு வந்து கொண்டிருக்கிறான்.

அருகில் வருகையில் ஓசை கூர் கொள்கிறது. நிமிர்கையில் தூயவளனார் தேவாலயம் மந்த ஒளியில் விண்ணோக்கி எழுந்திருந்தது. கண்களை மூடித்திறந்து நோக்குகையில் தெளிந்த ஒளியில் வேறொன்றாய் மாறியிருந்தது. அண்ணாந்து பார்க்கையில் வெயிலவன் மேகங்கள் விலக்கி ஒளி கொண்டிருந்தான்.புன்னகைத்தேன். அம்மா, “பாதையப் பாத்து…” என்று சொல்லி நடந்தார்.கைகளில் கூம்பு வடிவ கடலைச் சுருளுடன், “ஐந்து புலன்களும் மாயம் தான்” என்றேன். அம்மா, “பசியில எல்லாம் மந்தமா இருக்கு” என்றார். பார்த்துத் தீராத மலைக்கோட்டையைப் பார்த்தபடி நடந்தேன்.

4 Replies to “புலன் விசாரணை”

  1. நீங்கள் பயணித்த பாதையில் நானும் பல்லாண்டுகள் பயணித்திருக்கிறேன்.உங்கள் அற்புதமான புலன் விசாரணை,என்னை அடுத்த பயணத்துக்கு ஏங்க வைத்தது.நன்றி…கோரா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.