புதரை அடுக்கும் கலை

 

1

இப்போது அவர் எண்பது வயதைத் தாண்டி விட்டதால், பூமியில் நடக்கும் மனிதனாக இருப்பதன் அதிசயம் பற்றிய புரிதலை முழுமையாக  எட்டி இருக்கும் ஆன்டி காட்லெட், ஒற்றைக் கை கொண்ட முதிய ஆண் ஒருவன் எப்படி வேலை செய்வானோ, அந்த முறையில் இன்னமும் வேலை செய்து கொண்டிருந்தார். அவருடைய எண்ணங்களில் ரைலி ஹார்ஃபர்ட் பண்ணை என்று அவர் பல நேரம் அழைக்கும் இடத்தில்தான் அந்த வேலைகள் நடந்தன. அந்தப் பண்ணைக்கு குறைந்தது நூற்றைம்பது ஆண்டுகளாக அந்தப் பெயர் உண்டு. ஒரு பண்ணையாக அது ஒரு போதும் விளிம்பு நிலைக்கு மேல் எழுந்ததில்லை. அதன் காலத்தில் அது கொடுமைகள், அலட்சியம் ஆகியனவற்றைச் சந்தித்திருக்கிறது. அவர் வேலை செய்த போது, அவருடைய பராமரிப்பில், அது தேறி வரும் நிலையைப் பெற்று, நன்னலத்தையும், வர வரப் பெருகி வரும் எழிலையும் பெற்றிருப்பதாக, அவர் பெருமிதத்தோடு நினைக்கிறார்.

அவரும், ஃப்ளோராவும் இந்த இடத்தை வாங்கி, அங்கே குடியேறிய போது, அது சகலமும் கிட்டுகிற இடங்களிலிருந்தெல்லாம் வெகு தூரத்தில் இருந்தது, மிகவுமே ஏழ்மைப்பட்டிருந்தது; அதனால் போர்ட் வில்லியமில் இருந்த சில அக்கம் பக்கத்தார்களும், சுற்று வட்டாரத்தில் இருந்தவர்களும் அவர்கள் அங்கு வெகுநாள் தாக்குப் பிடிக்க மாட்டார்கள் எனவே நினைத்தனர் என்பது தனக்கு நன்கு தெரிந்திருந்ததாக அவர் நினைவு. அதனால் ஆன்டிக்கு அங்கு தங்கள் வாசம் பல பத்தாண்டுகளாக இருந்ததை- 60கள், 70கள், 80கள் மற்றும் 90கள் -என்று கணக்கிடுவது, குதூகலமாக இருந்ததோடு, அது மற்றவர்கள் எதிர்பார்த்ததைப் பொய்யாக்கவும், அவர்களுக்கு எதிரானதை மெய்யாக்கவும் உதவியது. இப்போது அங்கு அரை நூறாண்டுக்கு மேல் வசித்தபின், தாங்கள் அங்கே தாக்குப் பிடிக்க முடியாது என்று சந்தேகித்தவர்களையும், அப்படிப் பட்ட சந்தேகங்களையும் கடந்து நிறைய காலம் ஆகி விட்டது. இப்போது அவர்களுடைய இடம்தான் அது என்பது சந்தேகத்துக்கிடமின்றி நிறுவப்பட்டு விட்டது, அவர்கள் அதன் மக்களாகியும் விட்டார்கள். அதற்கு அவர்கள் தம் வாழ்வையே கொடுத்திருக்கிறார்கள், அது அவர்கள் வாழ்வில் வாழ்ந்து விட்டது.

தன் சுற்றத்தாரிடையே ஆன்டிதான் இப்போது மூத்தவராகி இருக்கிறார். பழைய போர்ட் வில்லியம் என்று அவர் அழைக்கும் ஊரை, அதைச் சுற்றி இருந்த நிலப்பகுதிகள் இன்னும் குலையாமல் இருந்த போது அது எப்படி இருந்தது என்றும், உலகப்போரில் வென்ற தினத்துக்கும், நாடெங்கும் தொழில் மயமாதல் பெருகுவதற்கும், அதன்பின் வந்து சேர்ந்த மக்களுக்கும் முன்னாலிருந்த வருடங்களில் அந்த ஊரின் சுய நினைவும் சுய அறிவும் எப்படி இருந்தன என்பதையும் நினைவு வைத்திருக்கும் கடைசிச் சிலரில் அவர் ஒருவராகி இருக்கிறார். எத்தனையோ கஷ்டங்கள் நடுவேயும் உறுதியான நம்பிக்கையோடு வயல்களை நன்கு பராமரிப்பதற்கும், அடிப்படை நிலைக் கைக்கருவிகளோடு ஒரு நாள் மொத்தமும் நல்ல வேலை செய்வதற்கும், ஒரு கோவேறு கழுதையின் குணத்தையும், அதன் நிலைப்பாட்டையும் தாமும் கடைப்பிடிப்பதற்கும் உச்ச நிலை முக்கியத்துவம் அளித்த அவருடைய பாட்டனார் காட்லெட்டின் தலைமுறையில் ஆகச் சிறந்த மனிதர்களிடம் வளரும் வாய்ப்பு நேரடியாகக் கிட்டும் வகையில் பிறந்தவர்களில், இன்னும் எஞ்சியிருக்கும் கடைசிச் சிலரில் ஒருவராக இருக்கிறார். இந்தப் பாரம்பரியச் சொத்து ஆன்டியை இன்றைய உலகில் சிறிதும் பொருந்தாதவராக ஆக்கி விட்டிருக்கிறது.

ஒரு காலத்தில் அவரின் பாட்டனார்கள் என்றென்றும் கிழவர்களாகவே இருந்தது போல ஆன்டி உணர்ந்திருந்திருக்கிறார், அப்படிப்பட்ட தன் பாட்டனார்களைப் போல அவ்வளவு கிழவராக தானும் ஆனது குறித்து ஆச்சரியமடைந்திருக்கும் ஆன்டி, சில நேரம் தரையில் தன் நிழலைப் பார்க்கையில் அது தன்னுடைய பாட்டனார் மார்ஸ் காட்லெட்டின் உருவைப் போலவோ, அல்லது தன் அப்பா, வீலர் காட்லெட்டின் உருப் போலவோ இருப்பதாகத் தவறாக நினைக்கிறார். பாட்டனாரைக் கொஞ்ச காலமே அறியும் வகையிலும், அப்பாவை இன்னமும் நடுவயதில் இளமையோடு இருக்கும் ஆணாக அறியும்படியும் அவர் பிறந்திருந்தார். பேரனும், மகனுமாக இருந்தவர் இப்போது அவர்களோடு சகோதரத்துவம் கிட்டும் நிலைக்கு வந்து இருக்கிறார்.

தன் வேலைகளையும், வாழ்வையும் பகிர்ந்து கொண்டவர்களும், தன்னோடு கூட இருந்து தன் பாதையைச் சுலபமாக்கியவர்களுமான நண்பர்கள், மேலும் அக்கம்பக்கத்தார்களிலும் ஆன்டி இன்னும் உயிரோடு இருக்கும் மூத்தவர்களில் கடைசியானவர். கிட்டத்தட்ட காணாமல் போய்விட்ட தொடர்புகளில், இன்னும் அருகே இருக்கும் இளையவர்களில் அவருக்கும் ஃப்ளோராவுக்கும் பிறந்த வாரிசுகளும், லிடாவுக்கும் டானி ப்ரான்ஞ்சுக்கும் பிறந்த வாரிசுகளும்தான் மீதமிருப்பவர்கள்.

இது வரை டானிதான் போய்விட்டவர்களில் கடைசியானவர். மற்றவர்கள் எல்லாம் இல்லாத ஊரில், இளைய தலைமுறைக்குத் தாம் அத்தனை தேவைப்படாத நிலையில், அவரும் ஆன்டியும் தங்களது வயதான காலத்திலும் அனேக நேரம் வேலை செய்து கொண்டிருந்தனர்.  “குப்பை கொட்டறோம்,” என்று அதைச் சொல்லிக் கொண்டனர், ஏனெனில் அவர்கள் ஒருபோதும் அவசரப்படவில்லை, களைப்பானால் வேலை செய்வதை நிறுத்தி விடுவார்கள், ஆனால் அது வேலைதான், அவர்கள் அதை நன்றாகவே செய்தார்கள். இளம்வயதிலிருந்தே சேர்ந்து வேலை செய்தவர்கள் அவர்கள். ஒருவருக்கொருவரிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. டானி சொன்னது போல, எங்கேயிருந்து பெறுவது, என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது, அங்கேதான் அவர்கள் அதைப் பெற்றார்கள். உதாரணமாக, ஆன்டிக்குத் தெரியும் முன்னரே, டானிக்குத் தெரிந்திருந்தது, ஆன்டிக்கு எப்போது இரண்டாவது கை உதவிக்கு வேண்டும் என. சில சமயம், ஆன்டிக்கு இப்படித் தோன்றியது, அவர்கள் ஒரு புத்தி, மூன்று கைகள், நான்கு கால்களோடு இயங்கும் ஒரு பிராணிபோல வேலை செய்தார்கள் என்று.

டானி கொஞ்ச நாள் நோய்ப்பட்டிருந்தார். ஒரு நாள் காலை உணவுண்ணும் நேரம், முன் வாயில் கதவு சிறிது தயக்கத்தோடு தட்டப்பட்டதால் திறந்த போது, ஃபௌண்ட் மேலும் கௌல்டர் ப்ராஞ்சு (சகோதரர்கள்) கதவிலிருந்து சிறிது தள்ளி, அங்கு முன் தாழ்வாரத்தில் நின்றிருப்பதைப் பார்த்து ஆன்டி சற்றுத் திகைப்படைந்தார். முறைப்படியும், சிறிது அசௌகரியத்தோடும் நிற்பதாகத் தெரிந்தது. இதற்கு முன் ஒரு போதும் அவர்கள் வாழ்வில் முன் கதவுப்புறம் அவர்கள் வந்ததில்லை. அவர்கள் எல்லாம் எப்போதும் பழைய பழக்கத்தையே கடைப்பிடித்தனர்: வீட்டுக்குப் பழகியவர்கள் பின் கதவுக்குப் போவார்கள் என்பது அது. ஆனால் இப்போது உலகம் மாறி விட்டிருந்தது. அது மறுபடியும் துவக்க நிலைக்குப் போக வேண்டி இருந்தது. ஃபௌண்டும் கௌல்டரும் அதற்காகத்தான் வந்திருந்தனர்.

ஆன்டி திறந்த கதவடியில் நின்றார், சகோதரர்கள் அவரைப் பார்த்தபடி இருந்தனர், ஏதும் சொல்லவில்லை- ஏனெனில், ஆன்டி இதைக் கவனித்திருந்தார், அவர்களால் எதையும் சொல்ல முடியவில்லை.

அதனால் அவர்களுக்காக அவரே பேசினார். “நல்லது, பசங்களா. அவர் பத்திரமா போய்ச் சேர்ந்து விட்டாரா?”

அப்போதுதான் ஃபௌண்ட் தன் தொண்டையைச் சரி செய்து கொண்டான், ஒரு முறை விழுங்கினான், தன் தொண்டையை மறுபடி சரி செய்து கொண்டான். “ஆன்டி, உங்களுக்கு ஒருக்கால் தயக்கம் எதுவும் இல்லைன்னா, உங்களால அவரைப் பத்திச் சில வார்த்தைகள் பேசறத்துக்கு முடியுமான்னு நாங்க யோசிச்சோம்.”

அவருடைய கையை அவர்கள் எட்டிப் பிடித்தார்கள், குலுக்கினார்கள், போய் விட்டார்கள்.

 

ஆகவே, இறுதிச் சடங்கு நடக்கும் இடத்தில் ஆன்டி உரை மேசையின் பின்னே நின்று டானியைப் பற்றிப் பேசினார், வரலாற்றையும், தாம் இருவரும் சேர்ந்து பணியாற்றிய ராணுவ அணியைப் பற்றியும், அவர்கள் இருவரும் சேர்ந்து செய்த வேலைகள் பற்றியும், அண்டை வீட்டுக்காரர்களாகவும், நண்பர்களாகவும் அவர்களை இருக்க வைத்த பரஸ்பர அன்பு பற்றியும், அவர்கள் இருவருக்கும் தெரிந்திருந்தவையும், அவர்கள் சுதந்திரமாகக் கடைப்பிடித்தவையுமான  நட்பின் வழிமுறைகளைப் பற்றியும், அவை அனேகமாக எப்படி இயல்பாகவே அவர்களுள்ளிருந்தன, அவை எப்படி ஒருபோதும் வார்த்தைகளால் வெளிப்படுத்தத் தேவை இல்லாதவையாக இருந்தன என்றும் பேசினார். ஆன்டி அந்த விதிகளைப் பேசினார்: “உங்கள் அண்டை வீட்டுக்காரருக்கு உதவி தேவையாக இருக்கையில், போய் உதவுங்கள். அண்டை வீட்டுக்காரர்கள் சேர்ந்து வேலை செய்கையில், எல்லாரும் முடிக்கும் வரை, யாரும் முடித்து விட்டதாக ஆகாது.” தன்னுடைய மற்றும் டானியுடைய வாரிசுகளில் இளைஞர்களைப் பார்த்துக் கொண்டு, அவர்கள் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அவர் முந்நாளைய உறுப்பினர்களைப் பற்றி, இறந்தவர்களையும், இன்னும் உயிரோடு இருப்பவர்களையும் பெயர் சொல்லி, அவர்களின் சகவாசத்தினிடையேதான் இளைஞர்கள் பிறந்து வளர்ந்தார்கள் என்று குறிப்பிட்டார். அவர்களுடைய தாங்கும் தன்மை பற்றியும், வியர்வை சிந்திய உழைப்பு பற்றியும் அவர்களின் மகிழ்ச்சியைக் காட்டும் பெரும் சிரிப்பு பற்றியும் பேசினார். “இது உங்கள் வரலாறு,” அவர் சொன்னார். “இதுதான் நீங்கள், இங்கே நீங்கள் இருக்கும் வரை, உங்கள் விருப்பம் நீடிக்கும் வரை. உங்களுக்கு விருப்பம் இருந்தால், இதெல்லாம்தான் நீங்கள் பாரம்பரியமாக அடைவீர்கள், அதைத் தொடர்வீர்கள்.”

 

அவ்வளவு பேருக்கும் அப்புறம் வாழ்வதாலும், இந்த உலகில் எத்தனையோ இனிமேல் மறுபடியும் யாருக்கும் தெரியாமல் போய் விட்டது என்பதாலும், மனிதர்கள், இடங்கள், காலம் ஆகியனவற்றின் இழப்புகளைத் தன் உடலிலும் மனதிலும் திடீர் சோகத் தாக்குதல்களாக ஆன்டி உணரத் துவங்கி இருந்தார். தன் வாழ்வின் முக்கிய கணங்களை அவர் கடந்து விட்டிருந்தார், இப்போது அவர் புது நண்பர்களை அடைவதை விட அதிக வேகத்தில் பழைய நண்பர்களை இழந்து கொண்டிருந்தார். இப்போது அவர் போர்ட் விலியத்தில் வாழும் நகரத்தை விட இடுகாட்டில்தான் நிறைய நட்புகளைக் கொண்டவராக இருக்கிறார். ஆக, அவர் இப்போது குறைக்கப்பட்டு விட்டார், ஆனாலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார், அவர் மனது அதனுள் வசிக்கும் சிரஞ்சீவிகளின் சமூகத்தால் மேன்மேலும் வளமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அடிக்கடி என்ன கொடுக்கப்பட்டிருக்கிறது, என்ன எடுக்கப்பட்டிருக்கிறது, என்ன மீதம் இருக்கிறது என்று பார்க்கும் கழித்தல் கணக்குச் சிந்தனைக்கு ஆட்படுகிறார். தனியாக இருக்கையில், நன்றி தெரிவிக்கும் ஒரு பிரார்த்தனையையோ அல்லது வாழ்த்தையோ தான் உரக்கச் சொல்வதைக் கேட்டு இப்போது அவர் ஆச்சரியப்படுவதில்லை.

ஆனால் முந்நாள் தோழர்கள் இப்போது இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு விதத்தில், முன்பு அவர்கள் வாழ்ந்திருக்கையில் இருந்ததை விட இப்போது அதிகமாக அவருக்கு நெருங்கியவர்களாகி விட்டார்கள். தன் வாழ்க்கையை அவர் வாழ்ந்தபடி இருக்கும்போது, அதில் அவர்கள் நெருக்கமாக ஈடுபடுகிறது போலத் தெரிகிறது. அவருடைய யோசனைகளே அடிக்கடி அவர்களின் சொற்களிலும், குரலிலும் இப்போது அவருக்கு வந்து சேர்கின்றன.

மேற்கிலிருந்து தொடர்ந்த மென்காற்று வீசுகிற, உஷ்ணமான ஒருவகைக் கோடை மாலையில், எல்டன் பென் அவரிடம் மறுபடி சொல்வார், அது எல்டன் சிறுவனாக இருக்கையில் அவரிடம் சொன்னது போலவே இருக்கும், “காற்று எத்தனை மென்மையாக இருக்கு பாத்தியா? இன்னக்கி மழை பெய்யப் போறது.”

அல்லது சில நேரம், தன்னுடைய மிகச் சரிவான மேய்ச்சல் நிலங்கள் இப்போது குணமாகி, புல்வெளியான ‘முடியால்’ மூடப்பட்டிருப்பதை திருப்தியோடு அவர் பார்த்திருக்கையில், தன் அப்பா அவரிடம் சொன்னதை அவர் கேட்பார், “இந்த நிலம் நல்ல சிகிச்சைக்குப் பலன் கொடுக்கிறது.”

அல்லது அவருக்குப் பலமிருந்த காலங்களின் உண்டான பழக்கம் இன்னும் உடைக்க முடியாமல் இருப்பதால், தான் மிக அதிகமாக வேலை செய்வதைச் சில நாள் ஆன்டி அறியும்போது, முன்பு ஒரு சமயம் அவருடைய வாலிபத்தின் அதிக உற்சாகத்தைக் கண்ட மாட் ரோவன்பெர்ரி ஒரு தினுசான இளக்காரத்தோடு சொன்னாரே, அதே போல இப்போதும் சொல்வார்: “இப்படியேதான் நாள் முழுக்கச் செய்யப் போறியா?”

அல்லது அந்த நாளையின் மற்றும் அவரது நீண்ட வருடங்களின் களைப்பும் அவரை முழுக்காட்டுகையில், அவருடைய பாட்டனார் காட்லெட் தன் ஞானத்தின் வெற்றியையும், அதன் சோகத்தையும் ஒரே வாக்கியத்தில், “கடவுளே ஆமாம், ஒரு மனிதன் ஒரு நாளில் எத்தனை செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும்.” என்று அவரிடம் சொன்னதை ஒரு மாலையில் சில சமயம் அவர் நினைவு கூர்வார்.

அல்லது தன் இன்னொரு பாட்டனாரான ஃபெல்ட்னர் ஒன்றல்ல பல நேரங்களில் தேவைக்கு மேற்பட்ட தடவைகள் சொன்னதைக் கேட்பார்: “மாற்ற முடியாததை, சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.”

அல்லது பேச ஆரம்பித்து விட்டு, நிறுத்த முடியாமல் இருக்கும் யாரையாவது கேட்கும்படி நேர்ந்தால், ஆர்ட் ரோவான்பெர்ரியின் தீர்ப்பை நினைவு கூர்ந்து கேட்பார்: “இவர் ரொம்ப புத்திசாலின்னுதான் நான் நினைக்கறேன், ஆனா இவருக்கு என்ன தெரியுமோ அதெல்லாம் தங்கிட்டயேதான் கத்துக்கிட்டிருக்கிறார் போல.”

இப்படி உறவுகளையும் நட்புகளையும் பற்றியும், தான் நேசித்தவர்களையும், தன்னை நேசித்தவர்களையும் பற்றியும், முன்னொரு நாளில் நலிந்து போய், நசிந்து கிடந்த பண்ணையைத் தான் பராமரித்தது பற்றியும், அது தன்னுடைய கவனிப்பின் கீழ் ஆரோக்கியமாகவும், அழகாகவும் பொலிவது பற்றியும் திரும்பிப் பார்த்து நோக்குகையில் தன்னைப்பற்றி நல்லபடியாக அவரால் கருத முடிகிறது. ஆயினும் அவருக்கு இன்னமும் புத்தியும், நினைவு சக்தியும் வேலை செய்கின்றன, அவருடைய இளமைப் பருவத்தில் இருந்ததை விட இப்போது மேலாகவே செயல்படுகின்றன, ஆனால் இப்போதோ, இங்கு அவர் தன் பாட்டி ஃபெல்ட்னரின் குரலைக் கேட்க முடிகிறது, “நான் சொல்றதைக் கேளு. உன்னோட பாட்டி உங்கிட்டேயிருந்து இன்னும் உயர்வானதா எதிர்பார்க்கிறேன்.” மேலும் பாட்டியுடைய உறுத்தும் நோக்கின் முன் இவர் குறுகி நிற்கையில், தன்னிடமிருந்து இன்னும் மேம்பட்டதாக எதிர்பார்க்கும்படி, அவர் சொல்லிக் கொடுத்தார். மேலும், உயர் நிலைகளில் இருந்து மன்னிப்பதைப் பரிந்துரைத்தவர்களையும், மன்னிப்பையும் அவர் நன்றியுணர்வோடு நினைக்கிறார்.

எல்டன் பென்னுடைய அகால மரணத்திலிருந்து துவங்கிப் பிறகு வந்த முதியோர்களின் மரணங்கள் வரை, ஆண்டியும் அவர் வாரிசுகளும், ரோவன்பெர்ரி குடும்பத்தாரும், ஸொவர்ஸ் குடும்பத்தாரும், கௌல்டர்களும், ப்ராஞ்சு குடும்பத்தினரும் பலநேரமும் உழைப்பில் ஈடுபட்டிருந்தாலோ, அல்லது ஓய்வில் இருந்தாலுமே, சேர்ந்தே இருப்பார்கள். அவர்கள் எல்லாருக்கும் ஒருவரை ஒருவர் நன்கு தெரியும். நூற்றுக் கணக்கான மணிகள் பேசியிருந்திருப்பார்கள். எவ்வளவு குறைவான நேரம் பொதுப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசியிருந்தார்கள் என்பதை இப்போது யோசித்தால் அது குறிப்பிடத் தக்கதாகத் தெரிகிறது. தட்ப வெப்பநிலை பற்றியும், தங்கள் வேலைகள் பற்றியும், தாம் நினைவு கூர்வன பற்றியும்தான் அவர்கள் பேசியிருந்தார்கள். கதைகளையும், ஜோக்குகளையும் சொன்னார்கள். தாம் இப்போது என்ன செய்கிறார்களோ அதையே வேறு வருடங்களில் இருந்த கால மாறுதல்களின் போது தாம் செய்திருந்ததைப் பற்றிப் பேசினார்கள். அவர்கள் எல்லாம் இருந்த கதைகளைச் சொன்னார்கள், அவை எல்லாருக்கும் ஏற்கனவே தெரிந்தவைதான், அவற்றை அவர்கள் முன்னரே சொல்லி இருந்தனர், கேட்டிருந்தனர், சிரித்திருந்தனர், கதைகளைத் திருத்தி மறுபடியும் பலதடவைகள் சொல்லி இருந்தனர். உள்ளூர் வம்புகளைச் சொல்லி, அவை குறித்து வியப்பு தெரிவித்தனர். வாழ்வுச் சரிதங்களைப் பற்றிப் பேசினர், குணாதிசயங்களைப் பற்றி கருத்து சொன்னார்கள், தமக்குத் தெரிந்திருந்த அபூர்வ மனிதர்களைப் பற்றியும், அவர்களின் வளர்ப்பு பற்றியும் பேசி விவரங்களைப் பூர்த்தி செய்திருந்தனர். மிக அரிதாகவே அவர்கள் பத்திரிகை விவாதங்கள் பற்றிப் பேசினர், அல்லது வானொலியில் கேட்ட அல்லது பத்திரிகையில் படித்த செய்திகள் பற்றிப் பேசினர். அனேகமாக ஒருபோதுமே அரசியல் பற்றிப் பேசியதில்லை.

அந்தக் கூட்டமான ஆட்களில் ஒரு நபரிடமிருந்து மட்டும், அத்தனை வருடங்களிலிருந்தும் ஒரே ஒரு முறை தெரிவிக்கப்பட்ட ஒரு அரசியல் கருத்தைத்தான், ஆன்டியால் நினைவு கூர முடிந்தது. அது ரோவன்பெர்ரி குடும்பத்தாரின் வருடாந்தரக் கூட்டு நிகழ்ச்சி ஒன்றில் நேர்ந்தது. பாஸ்கல், சூடி ரோவன்பெர்ரி தம்பதியாரின் தாழ்பகுதி நிலம் ஒன்றில் மூலையில் இருந்த ஹிக்கரி மரத் தோப்பில் அந்த வருடம் கூடியிருந்தார்கள். கணிசமான கூட்டத்தினராக அவர்கள் இருந்தனர்: உள்ளூரில் இருக்கும் ரோவன்பெர்ரிகள், நிகழ்ச்சிக்காக ஊருக்கு வந்திருந்த ரோவன்பெர்ரிகள், திருமணம் மூலம் ரோவன்பெர்ரியானவர்கள், கௌரவ ரோவன்பெர்ரிகள், மேலும் சில சுயமாகத் தம்மை ரோவன்பெர்ரி என வரித்துக் கொண்டு மற்றவர்களைப் போலவே பாத்திரங்கள், கெட்டில்கள், கூடைகள் எனச் சுமந்து கொண்டு வந்து, பிறரைப் போலவே விருந்துக்குத் தம்மால் இயன்றதை அளித்த சிலர்.

ஆன்டி வெளியூர்களிலிருந்து வந்த சில ஆண்களோடு சேர்ந்து ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்தார், அவர்கள் எல்லாமே போர்ட் வில்லியத்திற்கு அருகிலும், சுற்றுப்புறத்திலிருந்தும் பழகிய இடங்களிலிருந்து வந்திருந்தனர். ஆனால் இப்போது தூரத்திலிருந்து வந்திருந்த மனிதர்களைப் போலவே ஓரளவு விலகிப் போனவர்களின் குணத்தைக் காட்டியிருந்தனர். ஆன்டிக்குச் சிறிது வியப்பு தரும் வகையில், ஒரு பிரபல அரசியல்வாதிக்கு நேர்ந்த சமீபத்திய அவமானத்தைப் பற்றிப் பேசத் தொடங்கினர்.

பெஞ்சுக்குச் சற்று முன்பக்க வாக்கில் இருந்த ஒரு மரத்தில் ஒரு தோளைச் சாய்த்தபடி நின்றிருந்த பாஸ்கல், சில நேரம் அவர் தோற்றமளிப்பதைப் போலவே, இப்போதும் தன் தொப்பிக்கடியில் மறைந்து விட்டது போலத் தெரிந்தார். ஆனால் அவர் கேட்டுக்கொண்டிருந்தார் என்பது ஆன்டிக்குத் தெரிந்திருந்தது.  அந்தப் பெரிய அரசியல்வாதியின் வீழ்ச்சி பற்றிய பேச்சு, ஒருவழியாக அங்கு பேசியவர்கள் மீது கொணர்ந்த நிர்ப்பந்தத்தால் ஒருவர் ஒத்துக் கொண்டார், தான் தேர்தலில் அவருக்கே வாக்களித்திருந்ததாக, அப்போது இன்னொருவர் அடக்கத்தோடு தான் வாக்களிக்கவில்லை என்று ஒத்துக் கொண்டார்.

பாஸ்கல் அப்போது தன் தொப்பியின் நிழலிலிருந்து முகம் வெளிப்படும் வகையில் தலையை உயர்த்தினார். அவர் சொன்னார், “நான் யாருக்கு வாக்களித்தேன் என்று உங்களுக்குச் சொல்லப் போவதில்லை. ஆனால் இந்த மட்டும் உங்களிடம் சொல்வேன்: அந்த நாய் மகனுக்கு நான் மறுபடி ஒருபோதும் வாக்களிக்க மாட்டேன்.”

(தொடரும்)

குறிப்புகள்: இந்தக் குறுநாவலின் படைப்பாளர், வெண்டெல் பெர்ரி ஒரு கவிஞர், சூழலியலாளர், விவசாயி, புதினங்கள் எழுதும் நாவலாசிரியர், முன்னாள் கல்லூரிப் பேராசிரியர். 1934 இல் பிறந்த வெண்டெல் பெர்ரி அமெரிக்காவின் கெண்டகி மாநிலத்தில் ‘போர்ட் ராயல்’ என்கிற நகரில் வசிக்கிறார். இவர் பற்பல பிரபல பல்கலைகளில் போதித்திருக்கிறார், நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறார். 40க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி இருக்கிறார். பெரும்பாலும் ‘போர்ட் வில்லியம்’ என்ற ஒரு கற்பனையான ஊரைச் சுற்றி நடப்பதாக எழுதப்பட்ட கதைகளும், நாவல்களும்தான். இவர் எழுதிய புத்தகங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தச் சுட்டியில் சுண்டவும்.

http://www.wendellberrybooks.com/books.html

இவருடைய கதைப் பாத்திரங்கள் நிஜ மாந்தரே போல முழு வாழ்வுள்ளவர்களாக அமெரிக்க இலக்கிய உலகில் உலவுவதால் சில வாசகர்கள் இந்த உலகைப் பூரணமாக வடிவெடுக்க முயன்றிருக்கின்றனர். ஒருவரின் முயற்சியில் போர்ட் வில்லியம் ஊரில் வாழ்ந்த பல குடும்பத்து உறுப்பினர்களின் பட்டியல் இங்கே கிட்டுகிறது. இதைப் பார்த்தால், மேலே மொழி பெயர்க்கப்பட்ட கதையில் வரும் பற்பல பாத்திரங்கள் யாரார், அவர்களிடையே இருக்கும் உறவுகள் என்ன என்பன தெளிவாகும். அந்தப் பட்டியலைக் காண இந்தச் சுட்டி உதவும்:

http://brtom.typepad.com/wberry/port-william-the-people.html

 

அங்கீகரிப்பு: இந்தக் கதை ஒரு குறுநாவலை ஒத்த நீளம் கொண்டது. த த்ரீ பென்னி ரெவ்யு என்ற அமெரிக்க சஞ்சிகையில், இந்த வருடத்து இலையுதிர்காலத்து இதழில் (Fall 2017) வெளி வந்த கதையின் மொழி பெயர்ப்பு இது. த ஆர்ட் ஆஃப் லோடிங் புஷ் என்பது இதன் மூலத் தலைப்பு.

நன்றி: திருவாளர் வெண்டெல் பெர்ரிக்கும். த த்ரீ பென்னி ரெவ்யூ பத்திரிகைக்கும்.

மூலக் கதையை இங்கே காணலாம்: Fiction: The Art of Loading Brush

தமிழாக்கம்: மைத்ரேயன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.