மூளை, தண்டுவடம், நரம்புப் பகுதிகளை தூண்டும் மருத்துவ முறைகள் 50 வருடங்களுக்கும் மேலாக உபயோகத்தில் இருந்தாலும், அவை குறிப்பாகக் கடந்த 20 வருடங்களில், தொழில் நுட்ப முன்னேற்றம் கொணர்ந்த மருத்துவ சாதனங்களால், மருந்துகளால் மட்டும் குணப்படுத்த முடியாத பல நரம்பு வியாதிகளையும் மனோவியாதிகளையும் கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கிய இடத்தை அடைந்துள்ளன.
நரம்புத் தூண்டல் என்பது உடலின் வெளியிலிருந்தோ உள்ளிருந்தோ மின் காந்த சக்தியை ஒரு குறிப்பிட்ட பகுதியினுள் செலுத்துவதின் மூலம் சரியாக வேலை செய்யாத நரம்பு சுற்றுகளை (நியூரல் சர்க்யூட்) சரிப்படுத்துவதாகும். உட்தூண்டல் வெளித்தூண்டலை விட மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளதால் சமீப காலத்தில் மருந்திற்குக் கட்டுப்படாத நரம்பு மற்றும் மனோவியாதி சிகிச்சையில் அது பிரபலமடைந்துள்ளது. நரம்புத் தூண்டலுக்கு வேண்டிய மூன்று பாகங்கள் தூண்டும் மின் முனை (எலெக்ட்ரோட்), மின்னாக்கியும் (ஜெனெரேட்டர்) மின்கலமும்(பேட்டரி) சேர்ந்த தொகுப்பு, இவ்விரண்டையும் இணைக்கும் மின்சாரக் கம்பி ஆகியவையாகும். தூண்டல் வகைகளையும் அதன் மருத்துவ உபயோகங்களையும் இனி காண்போம்.
ஆழ் மூளை தூண்டல் (டீப் பிரெய்ன் ஸ்டிமுலேஷன்)
மூளைப் பகுதியில் நரம்புச் சுற்றுகளை மாற்றியமைக்கும் சிகிச்சையின் முதற் கட்டத்தில், இச்சுற்றுகளைத் தூண்டுவதற்குப் பதிலாக அவற்றைத் துண்டிப்பதைத்தான் நரம்பியல் நிபுணர்கள் மேற்கொண்டார்கள். அது மனோ வியாதிகளுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத 20ம் நூற்றாண்டின் முதற் பாதி காலம். நோயாளிகளாலும் அவர்களது உறவினர்களாலும் தாங்கவொண்ணாத அளவு முற்றிய மனோவியாதியினரை ஏதாவதொரு சிகிச்சைக்கு உட்படுத்தவேண்டிய நிர்ப்பந்தம். மருத்துவர்களும் கை விரிக்க இயலாமல் கையை பிசைந்து கொண்டிருந்த காலம். ’எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற பழமொழிக்கு இது ஒரு சரியான உதாரணமாகும்.
குரங்கைப் போன்ற உயர் விலங்குகளின் பதட்ட நிலையை முன் மூளையின் மேற்பகுதியில் சேதத்தை உண்டுபண்ணுவதின் மூலம் குறைக்கலாம் என்பது தெரிய வந்த பின் போர்ச்சுக்கல் நரம்பு நிபுணர் ஒருவர், கட்டுப்படுத்தமுடியாத மனோ வியாதியுடையவர்களுக்கு இச்சிகிச்சையைச் செய்ய ஆரம்பித்தார். இதற்காக 1949ன் நோபெல் பரிசையும் பெற்றார். 1950களில், அமெரிக்காவில் பத்து வருடங்களுக்கும் மேல் பத்தாயிரக் கணக்கானவர் ஸ்கிட்ஸஃப்ரீனியா போன்ற உக்கிரமான மனோவியாதிகளுக்காக, இச்சிகிச்சைக்கு ஆளாயினர். இச்சிகிச்சையின் பின் விளைவுகள் வியாதியை காட்டிலும் மோசமாக இருப்பது தெரிய வந்தும், குணப்படுத்தும் மருந்து ஒன்றும் இல்லாததால், இதுவே தொடர்ந்து செய்யப்பட்டு வந்தது. 1975ல் வெளி வந்த ‘ஒன் ஃப்ளூ ஓவர் த குக்கூஸ் நெஸ்ட்’ (One flew over the Cuckoo’s nest – குக்கூ என்ற சொல்லுக்கு பித்தன் என்ற பொருள் இங்கிலிஷில் உண்டு. இப்படம், கென் கேஸி என்ற அமெரிக்க எழுத்தாளர் 1962- இல் எழுதிய நாவலின் திரையாக்கம்) என்ற படத்தில் இப்பின் விளைவுகள் தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன. 1952ல் குளோர்ப்ரோமஸீன் என்ற மருந்து உபயோகத்தில் வந்தபின், இச்சிகிச்சை முறை மெதுவாகப் பின் வாங்கியது. 1960ன் கடைசி வருடங்களில் முழுவதாக நின்றுவிட்டது. இதே சமயத்தில் ஹொஸே மானுவெல் ரொட்ரீகஸ் டெல்காடோ என்னும் நரம்பியல் நிபுணர் மின்முனைகளை மூளையின் உட்பாகங்களின் பதிப்பதின் மூலம் வலிப்பு, ஸ்கிட்ஸஃப்ரீனியா போன்ற வியாதிகளை கண்டறியவும் சிகிச்சையளிக்கவும் உதவும் என்றறிவித்தார். இவ்வாராய்ச்சியின்போது சில மூளைபகுதிகளைத் தூண்டினால் வலியுணர்வைத் துண்டிக்கலாம் என்பது தற்செயலாக தெரிய வந்தது. அதன் பின் தலாமஸ் எனும் மூளைப் பகுதியின் பல பாகங்களில் மின் நுனியை பொருத்துவதின் மூலம் மருந்தினால் கட்டுப்படுத்த முடியாத, நீண்ட காலமாகத் தொடரும் வலியைக் குறைக்க முடியும் என்பது தெரிந்தது.
இதே சமயம், நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மூளையின் மேல்பாகத்திலிருந்து கீழ்ப்பாகத்திற்கு இறங்கினர். பார்க்கின்சன் வியாதியினால் ஏற்படும் நடுக்கத்தை செரிப்ரல் பெடன்க்குள் எனும் கீழ்ப்பாகத்தை வெட்டுவதின் மூலம் குறைக்க முடியும் என்று கண்டறிந்ததால் நரம்பியல் மருத்துவம் இவ்வறுவை சிகிச்சையை ஏற்றுக்கொண்டது. ஒரு சமயம் இவ்வறுவை சிகிச்சையை கூப்பர் எனும் அமெரிக்க நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் செய்து கொண்டிருக்கும்போது சிக்கலேற்பட்டு தலாமஸ் பகுதி பாதிக்கப்பட்டது. அதனால் சிகிச்சை முடியுமுன்னரே நிறுத்தப்பட்டது. மயக்கம் தெளிந்த பின் அப்பிணியாளரின் கை நடுக்கமும் இறுக்கமும் முற்றிலும் குணமானது தெரிய வந்தது. முன் சொன்னது போல் இச்சிகிச்சையும் ஒரு தற்செயலான கண்டுபிடிப்பேயாகும்.
1969ல் லீவோடோபா எனும் மருந்து புழக்கத்திற்கு வரும் வரை இச்சிகிச்சை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இம்மருந்தின் நீண்ட கால பின்விளைவுகள் சில சமயம் வியாதியை விடக் கொடூரமாக இருப்பது தெரிய வந்தது. அறுவை சிகிச்சை மருத்துவர் கூப்பர், அறுவை சிகிச்சையை நிறுத்திய பின்னும் தனது ஆராய்ச்சியை நிறுத்தவில்லை. மெட்ரானிக்ஸ் எனும் வர்த்தக நிறுவனம் தயாரித்த மின்முனைகளை, முன்பு சிக்கலேற்பட்ட பாகங்களில் பொருத்தி அப்பாகங்களைத் தூண்டுவதின் மூலம் நடுக்கத்தை குறைக்கமுடியும் என்பதை அவர் ஆராய்ந்தறிந்தார். 1990ல், மூளையைச் சேதப்படுத்தும் அறுவை சிகிச்சையினால் ஏற்படும் மாற்றமுடியாத விளைவுகளைப் பற்றிய அக்கறையும் கவலைகளும் அதிகரித்ததால் இச்சிகிச்சை முழுவதுமாகக் கைவிடப்பட்டது.
நரம்பியல் அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட முன்னேற்றங்களினாலும், புதிய கதிரியல் சாதன கண்டுபிடிப்புகளாலும், மூளையின் நுண்ணிய பகுதிகளில் மின் நுனியை பொருத்துவதும், அப்பகுதிகளை அடையும் வழிகளை முன்கூட்டியே முடிவு செய்வதும் சுலபமாயின. அதுமட்டுமல்லாமல், மூளையின் மின்சார அலைகளை அதே சமயத்தில் பதிவு செய்வதும் சாத்தியமானதால் மின்நுனிகளை தகுந்த இடங்களில் பொருத்துவதும் சுலபமாயிற்று. தலாமஸைத் தவிர இம்மூளைப்பகுதியின் இதர பாகங்களை அதிவேகமாகத் தூண்டுவதின் மூலம் பார்க்கின்சன் வியாதியின் இதர விளைவுகளை மட்டுமல்லாது லீவோடோபாவினால் ஏற்படும் தீய விளைவுகளையும் குணப்படுத்த முடிகிறது. இச்சிகிச்சையும் பின்விளைவுகளற்றதல்ல. இச்சிகிச்சையை மேற்கொண்ட சில நோயாளிகளி ன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது பின் தெரிய வந்தது. இதனால் மருத்துவர்களின் மனநலம் பாதிக்கப்படவில்லை. மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் பாதிக்கப்பட்ட மூளைப்பகுதிகளைத் தூணடுவதின் மூலம் ஏற்கனவே மனோவியாதிகளால் பீடிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்க முடியும் என்பது தெரிய வந்தாது.
தலாமஸுடன் சம்பந்தப்பட்ட மூளையின் சில பகுதிகள் பார்க்கின்சன் வியாதி போன்ற வியாதிகளுக்குக் காரணமாயுள்ளன; மற்றும் சில பகுதிகள் மனோவியாதிகளுக்குக் காரணமாயுள்ளன. வியாதியினால் பாதிக்கப்பட்ட பகுதியைக் கண்டறிந்து அப்பகுதியைத் தொடர்ந்து தூண்டினால் கட்டுப்படுத்தலாம் என்பதில் சந்தேகமேயில்லை.
தற்சமயம், பார்க்கின்சன் வியாதியல்லாத, மருந்தினால் கட்டுப்படுத்த முடியாத உடல் நடுக்கம் (எசென்ஷியல் ட்ரெமர்), தசை பிடிப்பினால் ஏற்படும் உடல் தோரணை மாற்றங்கள் (டிஸ்டோனியா), கட்டுக்கடங்காத வலுக்கட்டாயமான நடத்தை (அப்ஸஸிவ்-கம்பல்ஸிவ் டிஸார்டர்) ஆகியவைகளுக்கு இச்சிகிச்சை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
பெருமூளைப்புறணி தூண்டல் (கார்டெக்ஸ் ஸ்டிமுலேஷன்)
பெருமூளைப்புறணி இயக்கப்புறணி (மோட்டர் கார்டெக்ஸ்) உணர்வுப்புறணி என இருவகைப்படும். சுபோகாவா எனும் மருத்துவர் உணர்வுப்புறணியைத் தூண்டுவதின் மூலம் மூளைப் பாதிப்பால் ஏற்படும் தீராத வலியைக் குணப்படுத்தலாம் என்று அனுமானித்து அதைப்பற்றி எழுதினார். ஆனால் மின்நுனிகளை உணர்வுப்புறணியின் மேல் பொருத்தியபோது வலி அதிகமானது. ஆனால் இயக்கப்புறணியின் மேல் இருந்த மின்நுனிகளை தூண்டியபோது வலி நின்றது. இதை தொடர்ந்து பல கட்டுரைகள் இதை ஊர்ஜிதம் செய்தன.
இச்சிகிச்சைக்கு தகுந்த மின்முனைகள் தயாரிக்கப்படாததால் தண்டுவடப்பகுதியில் உபயோகப்படுத்தப்படும் மின்துடுப்புகளே பயன்படுத்தப்படுகிறது. இத்துடுப்பை மண்டையோட்டில் ஒரு துவாரத்தின் வழியாக செலுத்தி மூளையுறையின் (ட்யூராமாட்டேர்) மேலோ கீழோ தைத்த பின் மண்டையோட்டுத் துவாரம் அடைக்கப்படுகிறது. துடுப்பில் இணைக்கப்பட்ட மின்சாரக் கம்பிகள் கழுத்தின் வழியாகக் கொண்டுவரப்பட்டு மார்புத் தோலின் கீழ் பொருத்தப்பட்ட மின்கலனுடன் இணைக்கப்படுகிறது. அமெரிக்கர்களில் 5 சதவீதம் தாங்கவொண்ணாத, மருந்தினால் கட்டுப்படுத்தமுடியாத அளவிற்கு வலியினால் அவதிப்படுகிறார்கள் என்பது ஒரு கணிப்பு. பல வருடங்களாக உபயோகத்தில் இருக்கும் இச்சிகிச்சை ஒரு சிறந்த நிவாரணமாக உள்ளது என்பதில் ஐயமில்லை. முக்கியமாக, நரம்புத் தளர்ச்சியினால் முகத்தில் ஏற்படும் வலியையும், பக்கவாதத்தினால் ஏற்படும் வலியையும் கணிசமாக இது குறைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
பதிலடி கொடுக்கும் நரம்பு தூண்டல் (ரெஸ்பான்சிவ் நெர்வ் ஸ்டிமுலேஷன்)
வலிப்பு நோய் உள்ளவரிடையே 30 சதவீதத்தினர் மருந்தினால் குணமடைவதில்லை. அறுவை சிகிச்சை மூலம்தான் இவர்களுடைய வலிப்பு நோயை கட்டுப்படுத்த வேண்டியதாயிருந்தது. அதாவது, வலிப்பு ஏற்படும் மூளைப்பகுதியை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டும், அல்லது வலிப்பு பரவாமல் தடுத்து நிறுத்தவேண்டும்.
20ம் நூற்றாண்டின் இடையிலேயே மின்நுனிகளை மண்டையோட்டினுள்ளே பொருத்தி அதிவேகமாக தூண்டினால் வலிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்று தெரிய வந்தது. மேலும் நரம்பியல் சாதன முன்னேற்றங்களினால் வலிப்பு ஆரம்பிக்கும் முன்னரே மூளைப்பகுதியில் மின்சார சமிக்ஞைகள் உண்டாவது தெரிந்தது. இச்சமிக்ஞைகளைத் தடுத்து நிறுத்தினால் வலிப்பு ஏற்படுவதை நிறுத்தலாம் என்பதும் தெரிய வந்தது. 2013ல் நியூரோபேஸ் நிறுவனத்தின் தயாரிப்பு உபயோகத்திற்கு வந்தது. நரம்பு தூண்டற் கருவி அறுவை சிகிச்சை மூலம் மண்டையோட்டினுள்ளே பொருத்தப்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் 4 மின் நுனிகள் வலிப்பை ஏற்படுத்தும் மூளை பகுதிகளில் பொருத்தப்படுகின்றன. இக்கருவியின் முழுப் பயனையும் பெற 2 வருடங்கள் தேவைப்படுகிறது. 6 வருடங்களில் 66 சதவீதம் வலிப்பு ஏற்படுவது குறைகிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. அது மட்டுமல்லாமல், அவர்களது வாழ்வின் தரமும், அறிவாற்றலும் உயர்வாக இருப்பதாகவும் தெரிகின்றது.
தண்டுவடத் தூண்டல் (ஸ்பைனல் கார்ட் ஸ்டிமுலேஷன்)
தண்டுவடத்தின் ஒரு பாகம் பின் கொம்பு (டார்சல் ஹார்ண்) எனப்படும். இதுதான் நரம்பு மண்டலத்தின் வெளிப்பகுதியிலிருந்து வரும் உணர்வுகளை மையப் பகுதியுடன் இணைக்கும் அல்லது பிரிக்கும் கதவாகும். வெளியிலிருந்து வரும் எல்லா உணர்ச்சிகளும் இவ்வழியாகத்தான் மையமான நரம்பு மண்டலத்திற்குச் செல்ல வேண்டும். 1965ல் ரானல்ட் மெல்ஸாக், பாட்ரிக் வால் (Melzack and Wall) என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தொடுதல், அழுத்தல்,அதிர்வு போன்ற உணர்ச்சியலைகளைப் பின்கொம்பிற்குக் கொண்டு செல்லும் நரம்பு நார்களைச் (Nerve fibers) செயற்படுத்தினால் பின்கொம்பு வலியுணர்ச்சியை மைய நரம்பு மண்டலத்திற்குச் செல்ல விடாமல் தடுத்து விடும் என்ற ஒரு கோட்பாட்டை முன்மொழிந்தனர். இதற்குக் ’கதவு கோட்பாடு’ என்று பெயரிட்டனர். இதற்காகவே காத்திருந்தது போல், தீராத வலியை தீர்க்கும் முயற்சியில் இருந்த பெருமூளை தூண்டல் நிபுணர் சமூகம் கீழே தண்டுவடத்திற்கு இறங்கியது. அமெரிக்காவின் பல பெரிய மருத்துவ வணிக நிறுவனங்கள் இதற்கு வேண்டிய சாதனங்களைத் தயாரிக்கின்றன. இக்கருவிகளைப் பதிக்கும் முன்னர் உடலுக்கு வெளியிலிருந்து தண்டுவடம் 3 முதல் 7 நாட்கள் வரை தூண்டப்படும். இதன் மூலம் சிறந்த அளவு வலி நிவாரணம் கிடைத்தால், மின்நுனிகள் அறுவை சிகிச்சை மூலம் தண்டுவடத்தைச் சூழ்ந்துள்ள உறையின் கீழ்ப்பக்கத்தில் பொருத்தப்படும். பிறகு மின்கம்பிகள் மூலம் அடிமுதுகிலோ, வயிற்றின் கீழோ பொருத்தப்பட்டுள்ள மின்கலத்துடன் இணைக்கப்படும். இச்சிகிச்சை, முதுகில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையினால் வலி நிவாரணம் பெறாதவர்கள், தீராத மார்வலியினால் அவதிப்படுபவர்கள், போதிய ரத்த ஓட்டம் இல்லாமல் கால் வலி தாங்காமல் கஷ்டப்படுபவர்கள், தீராத வயிற்று வலியினால் வாடுபவர்கள் போன்றவர்களுக்கு உபயோகமாயுள்ளது. நீண்ட நாளாகத் தீராத வலியுடனிருப்பவர்களில் 68 சதவீதத்தினருக்கு இச்சிகிச்சை நீண்ட கால நிவாரணம் தருகிறது என்றும், அறுவை சிகிச்சையினால் குணமடையாத முதுகு வலிக்கு 2 வருடங்கள் தொடர்ந்து நிவாரணம் கிடைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இச்சிகிச்சை முறையால் தண்டுவடக் காயத்தினால் காலில் செயலிழந்தவர்களுக்கு மீண்டும் வலிமை கூட்ட முடியும் எனும் ஓரிரு மருத்துவ அறிவிப்புகள் கால் செயலற்றிருக்கும் பல்லாயிர கணக்கான மக்களுக்கு உற்சாகமளிக்கும் செயதியாகும்.
வேகஸ் நரம்பு தூண்டல்: (வேகஸ் நெர்வ் ஸ்டிமுலேஷன்)
பன்னிரண்டு நரம்புகள் (க்ரேனியல் நெர்வ்ஸ்) வெவேறு மூளைப் பகுதிகளிலிருந்து கிளம்பி மண்டையோட்டிலுள்ள துளைகளின் மூலம் உடலின் வெவ்வேறு பாகங்களுக்கு செல்கின்றன. பத்தாவது நரம்பான வேகஸ் நரம்பின் தூண்டல் வலிப்பு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்பது 1990ல் தெரிந்தது. இதற்கான சாதனக் கருவியை 1997ல் சைபரானிக்ஸ் (தற்போது லிவானோவா) எனும் நிறுவனம் வெளிக் கொணர்ந்தது. இதற்குத் தேவையான மின்னாக்கி மார்பில் காரையெலும்பின் (காலர் போன்) கீழ்ப்புறத்தில் பொருத்தப்படும். இதனுடன் இணைக்கப்பட்ட மின்சார கம்பிகள் கழுத்தின் கீழே கொண்டு செல்லப்பட்டு வேகஸ் நரம்புடன் இணைக்கப்படுகிறது. இச்சிகிச்சை மருந்திற்கு கட்டுப்படாத வலிப்பு நோய்க்கும், மனச்சோர்விற்கும் அளிக்கப்படுகிறது. எவ்வாறு வலிப்பு நோய் கட்டுப்பாட்டில் இது செயல்படுகிறது என்பதோ மனச்சோர்வு எந்த அளவிற்கு நிவாரணமடைகிறது என்பதோ இன்னும் தெரியவில்லை என்றே சொல்ல வேண்டும்.
ஆதாரக் கட்டுரை: Christine A.Edwards,MS et al; Mayo Clinic Proceedings; September 2017;92(9);1427-1444.