தேனீக்களும் நம்மைப் போன்றவையே

தேனீக்களை பற்றிய இந்த இடுகை முந்தைய மே 2015 இல் lastwordonnothing.com (LWON) வலைத்தளத்தில் பிரசுரமானது. தேனீக்களை அறிவதில்  நான் ஆர்வமாயிருக்கிறேன், அவை இன்னமும் அபாயத்திலிருக்கின்றன, அதனால் அவை எவ்வளவு அற்புதமானவை என்பதை திரும்பவும் கவனப்படுத்த விரும்புகிறேன். இதோ உங்களுக்கான இன்றைய தினத்தின் பெரும் கிளர்வு இங்கே உள்ளது. களிப்படையுங்கள்!

முன்பு ஒருநாள் அதிகாலையில், ஒரு வித்தியாசமான ரீங்காரவொலி கேட்டு நான் எழுந்து கொண்டேன். முதலில் அவ்வொலி மின்விசிறி மோட்டார் நிற்கப் போகிறது என்று  நினைத்தேன், ஆனால் அவ்வொலி வீட்டுக்கு வெளியிருந்து வந்தது எனத் தெரிந்தது. அதனால் நான் அதை என்னவென்று பார்க்கவும், கேட்கவும் பால்கனிக்குச் சென்றேன். ரீங்காரம் இன்னும் உரத்துக் கேட்டது. கண் முன்னே நிகழ்வதைப் புரிந்து கொள்ள எனக்கு சில நொடிகள் ஆனது, பின்பு திடீரென நான் அவற்றைக் கவனித்தேன். தேனீக்கள். ஆயிரக்கணக்கில் தேனீக்கள். ஒருவேளை அதற்கும் அதிகமாக, பல்லாயிரக்கணக்கில் கூட இருந்திருக்கலாம். அங்கு மையங்கொண்டிருந்த ஒரு மிகப்பெரிய திரள் என் முகத்துக்கு மிக அருகிலிருந்தது, பூச்சிக்களின் வலிமையான சூறாவளி.

அது மிகவும் அற்புதமான ஒரு காட்சியாக இருந்தது.

அது எதிர்பாராத ஆச்சரியமாக இல்லை. எனது அண்டை வீட்டுக்காரர் தன் பண்ணையில் மூன்று தேன்கூடுகள் வைத்திருக்கிறார், ( அவற்றின் விளைவை அக்கம்பக்கத்தாரோடு பகிர்ந்து கொள்ளவும் செய்தார், ஒருவேளை குறை கூறத் தயாராக உள்ளவர்களின் வாயை மூடவைக்கும் உத்தியாக இருக்கலாம்)., தெளிவாகத் தெரிந்தது, அந்த மூன்றில் ஒரு கூட்டில் ஏதோ ராணுவப் புரட்சி நடந்திருக்கிறது: எப்போதாவது, ஒரு கூட்டில் அரைவாசி உழைப்பாளித் தேனீக்கள் ராணியைக் கடத்தி, புதிய அரண்மனையைக் கண்டுபிடித்துக்  கொண்டு விட்டு, வெளியே போகும்போது வாயிற்கதவை அறைந்து சாத்தி விட்டுப் போய்விடுகின்றன.

பத்தாயிரம் உறுப்பினர்களின் கருத்துக்களின் பேரில் ரியல் எஸ்டேட் பற்றி முடிவெடுப்பதைப் போன்ற ஒரு நிலையைக் கற்பனை செய்து பாருங்களேன். அதிர்ஷ்டவசமாக, தேனீக்கள் மிகவும் தனிப்பட்டுச் செயல்படுவதில்லை. அதை நிரூபிக்கும் விதத்தில்,  அந்த மொத்தத் திரளும் ஒருப் போல நகர்ந்தது. கூட்டத்தின் வடிவ அமைப்பு கலையாமல் உயர்ந்து தாழ்ந்து நகர்ந்தது. உள்புறம் பார்க்கையில் அது நிச்சயமாக கலவரமான இயக்கத்தோடுதான் இருந்தது, பொரிகலனில் பாப்கார்ன் பொரிந்து துள்ளுவதைப் போல அத்தேனீக்கள் குறுக்கும் நெடுக்குமாக அலைந்துகொண்டிருந்தன. ஆனால் அவையனைத்தும் மிகவும் அழகாகத் தம்மை ஓரமைப்பாக வைத்திருந்தன. .

முடிவில் என் தோட்டம் அவற்றிற்கு வீடு போன்றொரு உணர்வைத் தரவில்லையெனத் தீர்மானித்து விட்டது போல. அவை மொத்தமும் பெரியதொரு பலூன் போல உயர்ந்து மரங்களின் மேலாகச் சென்றுவிட்டன. அவற்றின் ரீங்காரமும்  புல் வெட்டும் எந்திரம் நிறுத்தப்படும்போது ஒலி அடங்குவதைப் போல குறைந்தடங்கயது.  . புல்வெட்டும் எந்திரம் போன்ற சப்தத்திற்கு சனிக்கிழமை அதிகாலை என்பது சற்று அபரவேளைதான் என்றாலும் அது தேனீக்களின் ரீங்காரமென்பதால் என்னால் மன்னிக்க முடியும்.

ஏறத்தாழ பன்னிரண்டு வருடங்களாக நான் தேனீக்கள் (மற்றும் பிற மகரந்திகள்) குறித்து எழுதிக் கொண்டிருக்கிறேன், முதற் சுற்றில் எழுதிய காலனி நசிவுப் பிரச்சினை (காலனி கொலாப்ஸ் டிஸார்டர்) குறித்த கட்டுரை நாம் நம் உணவுக்காகத் தேனீக்களை எந்தளவு சார்ந்திருக்கிறோம் என்பதைப் பற்றி நம்மை  யோசிக்க வைத்தது. ஆனால் இது மகரந்தச் சிக்கல் அல்ல. உங்களுக்குத் தெரியுமா, இந்நிகழ்வுக்கு முன்வரை நான் தேனீக்கள் திரள் பற்றிய அனுபவமில்லாமலிருந்தேன். இந்நிகழ்வோ ஒரு பாடப் புத்தக விளக்கத்துக்கேற்றது போன்ற கச்சிதமான திரளாக அமைந்திருந்தது. அவை நகர்ந்துகொண்டே இருந்தாலும் முழுமையாக ஒருங்கிணைந்திருந்தது என்னைச் சிந்திக்க வைத்தது. தேனீக்கள் திரள் பாலூட்டிவகையைச் சார்ந்ததாகத்தான் இருக்கவேண்டும் என்று நான் அப்பொழுதே முடிவுக்கு வந்துவிட்டேன். ஏறக்குறைய மனிதனைப் போலவேதான்! இது கொஞ்சம் மிகைப்படுத்தலாக இருந்தாலும், எனக்கும் கொஞ்சம் இடம் கொடுத்து,  நான் சொல்வதைக் கேட்டுத்தான் பாருங்களேன். .

அனைத்திலும் முதலாக, தேனீக்கள் உரோமம் நிறைந்தவையாகும். அவற்றின் உரோமங்கள் கெராடின் புரதத்தால் அல்லாமல் கைட்டின் என்ற உயிர் பொருளாலானவை, ஆனாலும்கூட, மெல்லிய உரோமம் கொண்டவை. ஆம், தேனீக்கள் சூழல் வெப்பக் குருதி வகையைச் சார்ந்தவை, இருப்பினும் மொத்தத் தேன்கூடாகப் பார்த்தால் அது முற்றிலும் வெப்பத்தை சமன நிலைப்படுத்துவதாக இருக்கிறது. இக்கூடுகள் தனிப்பட்ட தேனீக்களின் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகள் மற்றும் நடுக்கத்தையொத்தத் தசைச்சுருக்கங்களின் அடிப்படையில் வெதுப்புத் தருகின்றன. எனவே வெப்பம் உள்ளேயிருந்தே வருகிறது. அதாவது அகவெப்பம் போல, அப்படித்தானே? (இன்னொன்று தெரியுமா, ஆராய்ச்சியாளர்கள் இப்போதுதான் வெப்பக் குருதி கொண்ட மீன் வகையொன்றை முதன்முதலாகக் கண்டுபிடித்துள்ளனர். அபாரம்.)

தேனீக்கள் முட்டைகள் இடுவன என்பது என்னவோ உண்மையே. அப்படியிருந்தும் அவை தம் சிசுக்களைப் பராமரிக்கின்றன. தாய் தேனீக்கள் (ராணி) தாதிகளின் முழுக் கிராமத்தையே உருவாக்கி வைத்திருக்கும். தாதிகள் பாப்பாக்களுக்கு ஒருவகைப் பாலை ஊட்டும் (உயர்தரப் பாகு). தாய் மற்றும் ட்ரோன் (இனப்பெருக்கத்துக்கு உதவும் ஆண்) வகை ஈக்களின் கலவி நம்மைப் போலவே இருக்கும், அது நடுவானில் நிகழ்வது என்றாலும். தாய் ஈக்கள் கொஞ்சம் சிறுமை நிறைந்தவை, சராமாரியாய் நிறைய கலவித்துணைகளை இணைத்துக் கொள்ளும், பொதுவாக நம் குடியிருப்புகளில் இது புதிதல்ல.

முழு ஒப்புதல்: ட்ரோன் ஈயின் ஆண்குறி முனை பிய்த்துக் கொண்டு ராணித் தேனீயின் யோனிக்குள் வீழ்கிறது. மனித இனத்தில் இவ்வாறு நிகழ்வதில்லை.  இருப்பினும் ஒரு சில ஒற்றுமைகள் உள்ளன. கலவிக்கென மட்டுமே தயாராகவிருந்து,வேறு வேலை வெட்டியேதுமின்றி, டீவி பார்த்துக்கொண்டு, வானைத் தொடும் உச்சக்கணத்திற்காக காத்திருக்கும் ஒரு சில ஆண்களைப் போலவே. கலவிக்குப் பிறகு ஆண் தேனீக்கள் இறந்து போகின்றன. (ஆண்குறி விபத்து பற்றி மேற்கூறியுள்ளதைப் பாருங்கள்).

மேலும் குடும்பத்தின் மீதான விசுவாசத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம்! தாய் தேனீயின் ஆர்ப்பாட்டமான அந்த ஒரு இரவுக்குப் பிறகு, காலனி மொத்தமும் அவளை ராஜ மரியாதையோடு நடத்தும். சந்தேகமேயின்றி, நம்மில் பலர் தம் தாயார்களை நடத்துவதைக் காட்டிலும் சிறப்பாகவே கவனிக்கும். அவளின் குழந்தைகள் வீட்டு வேலைகளில் உதவி செய்வதும், கழிவுகளைச் சுத்தம் செய்வதும் என அவளையே சுற்றிச் சுற்றி வரும். ஒருவேளை அவை சலிப்பூட்டும் தினசரி வேலைகள் பற்றியும் நூற்றுக்கணக்கான சகோதரர்களுடன் தம் அறைகளைப் பகிர்வது குறித்தும் புலம்பக்கூடும். அவற்றில் சிலவை அடக்கிவைக்கவும் படலாம். யாருக்குத் தெரியும்?

ஆனால்பெரும்பாலானவை உண்மையாக வேலை செய்யவே வளர்கின்றன, சிலது செவிலியாகவும், சில உணவுப் பட்டுவாடாவிலும், கட்டுமானப் பணியிலும், வாயிற்காப்பிலும், சவ அடக்க வேலைகளிலும் ஈடுபடுகின்றன. ஒரு சில தேவைக்கேற்ப, சோபாக்களில் உருண்டு கொண்டும், பாலை பாக்கெட்டுகளில் இருந்து நேரடியாகக் குடித்துக் கொண்டும், கலவிக்காக காத்துக்கொண்டும் … (கலவிக்கான) ட்ரோன்கள் ஆகின்றன. இவையெல்லாமே..நமக்கும் பழக்கமானதுதானே.

இறுதியில், வீடு நிறைந்து குடும்பம் பெருத்ததும், ராணி பராமரிப்பு வேலையால் ஓய்ச்சலடைந்து, மேல்கைகள் தளர்ந்து போகிற நிலை வந்ததும், தனக்கும் குடும்பத்துக்கு விசுவாசமாயிருக்கும் சில ஈக்களுக்கும் புதிய வீட்டைக் கண்டுபிடித்தாக வேண்டியதாகிறது. அது நகரில் இருப்பதிலேயே மிகச் சிறந்த அடுக்ககமாக இருக்க வேண்டுமே. அப்போது மீதமுள்ள மற்றவர்களுக்கு? அவர்கள் அந்தப் பழைய கழிசடைக் கூட்டிலேயே பின்தங்க வேண்டியதுதான். மேலும் புதிதாய் ஒரு இளம் ராணி பழைய ராணியின் படுக்கையைக் கைப்பற்றிவிடுவதைப் பற்றி யார் கவலைப்படப் போகிறார்கள்? கிராதகி!

இதுதான்… தேனீக்கள். ஒவ்வொரு ரீங்காரத்துக்கும் ஒரு கதை உண்டு.

மூலம்: ஜெனிஃபர் எஸ். ஹாலந்த் | ஏப்ரல் 21, 2017 | லாஸ்ட் வோர்ட் ஆன் நத்திங்.காம்

Source: Jennifer S. Holland| Redux: Bees are Us| April 21, 2017 from

http://www.lastwordonnothing.com /2017/04/21/redux-bees-are-us/

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.