தானோட்டிக் கார்கள் – போக்குகள் மற்றும் எதிர்காலம்

காரை ஓட்டிச் செல்லும் பொழுது நமது மனம் கார் ஓட்டுவதைப் பற்றி மட்டுமே சிந்தனை செய்வதில்லை.

“அலுவலகத்தில் வீட்டுச் சாவியை விட்டு விட்டேனே” என்று மனம் அங்கலாய்க்கிறது.

”அடுப்பில் கொதிக்கும் ரசத்தைப் பார்த்தேன். ஆனால், அடுப்பை அணைத்தேனா?” என்று சந்தேகம் வருகிறது.

”இப்படி வியாபாரத்தில் காலை வாரி விடுவான் என்று ஏன் நான் எதிர்பார்க்கவில்லை?” என்று கோபம் வருகிறது.

“குழந்தை இப்படி விழுந்து விட்டதே. எத்தனை அடியோ!” என்று பதைபதைக்கிறது.

இப்படிக் கார் ஓட்டும் பொழுது மனம் அலை பாய்ந்தால். சாலை விதிகளை மீறி நம்மை விபத்திற்கு அருகே கொண்டு செல்கிறது. சில சமயம் விபத்தில் சிக்குகிறோம். தானோட்டிக் காருக்கு இந்த வகை கவனச் சிதறல்கள் இல்லை. சாலை மற்றும் அதன் விதிகள் மீதே குறியாய் இருக்கும் தானோட்டிக் கார் மனிதரைப் போல சிந்தனைச் சிக்கல்களில் மாட்டிக் கொள்வதில்லை. பிரச்னை என்னவென்றால், எப்படி மனிதர்களுடன் சாலைகளைப் பகிர்ந்து கொள்வது என்பது. அத்துடன், எத்தனைதான் சோதனைகளில் வெற்றி பெற்றாலும், மனித ஓட்டுனர்களை விடப் பல மடங்கு நல்ல காரோட்டியாக இருக்க வேண்டும். மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட சாலை விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டும்.

உலகின் பல நாடுகள்/நிறுவனங்கள்,  இந்தத் தொழில்நுட்பத்தின் நல்முகத்தைக் கண்டு, பல கோடி டாலர்கள் முதலீட்டில், ஆராய்ச்சி மற்றும் சோதனைகளில் கொட்டியுள்ளார்கள். ஆனால், இந்தத் தொழில்நுட்பம் எப்படி நம் சமூகங்களைப் பாதிக்கும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஆயினும், இன்று நமக்குத் தெரிந்த போக்குகள், சவால்களை வைத்துச், சில யூகங்களை முன் வைக்க முடியும். இதில் எத்தனை யூகங்கள் உண்மையாகும் என்று சொல்வது கடினம்.

நம்முடைய இந்தப் போக்கு பற்றிய யூகங்களைச் சில ஐந்து ஆண்டுகள் வாரியாகப் பிரித்துப் பார்த்தால், சற்று தெளிவு பிறக்கலாம். இதில் சொல்லியுள்ள யூகங்கள் ஒரு ஐந்து ஆண்டு இடைவெளியிலிருந்து அடுத்த ஐந்தோ அல்லது பத்தாண்டு இடைவெளிக்கோ நடைமுறை பிரச்னைகளைச் சார்ந்து மாறலாம். நம்முடைய இந்த அலசல் ஒரு 20 ஆண்டுகளை மட்டுமே கருத்தில் கொள்ளும். அதன் பின் என்ன நடக்கும் என்பதை யூகிப்பதும் கடினம்.

முதல் 5 ஆண்டுகள் (2017 – 2021)

 1. பல புதிய சோதனைத் தானோட்டிக் கார்களைச், சில பகுதிகளில் அறிமுகப் படுத்த கார் நிறுவனங்கள் முயற்சிக்கலாம். அதுவும் பெரிய ஊபர் போன்ற இணையக் கார் வாடகை அமைப்புகளுடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படலாம். இதில் சிக்கல்களும் உருவாகலாம். சமீபத்தில் (டிசம்பர் 2016) ஊபர் நிறுவனத்தை, இவ்வகைச் சேவைகளை கலிஃபோர்னியாவில் நிறுத்தச் சொல்லி அரசாங்கம் கட்டளையிட்டது நினைவிருக்காலாம்
 2. சோதனைகள், இரண்டு விதத்தில் முன்னேறலாம். முதலில் Otto போன்ற ஊபரின் லாரி சேவைகள் அதிக மழை மற்றும் பனிப் பொழிவு அற்ற அமெரிக்க மாநிலங்களில் சரக்குப் போக்குவரத்திற்குச் சோதிக்கப்படலாம். லாரி டிரைவர்கள் பற்றாக்குறை என்பது பெரிய சாக்காக முன் வைக்கப் படலாம். இந்தச் சோதனைகளின் வெற்றி மிகவும் முக்கியமானது. இதுவே பல்வேறு லாரி நிறுவனங்களுக்கும், இவ்வகைத் தானோட்டி லாரிகள் ஒரு சரியான தீர்வா என்று முடிவு செய்ய உதவும்
 3. தானோட்டிக் கார்கள், பலத்த மழை மற்றும் பனிப்பொழிவில் பயணம் செய்யும் சோதனைகள் ஆரம்பிக்கப்படும். பனிப் பொழிவில் பிர்த்யேகமான டயர்கள் கொண்டு இயங்குவதற்கும், அனைத்து சீசன் டயர்களுடன் இயங்குவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மழையில் டயர்களின் சாலைப் பிடிப்பு வேறுபடும். ஆனால், இவை மிக முக்கிய பிரச்னைகள் என்பதால், இதில் அதிக முதலீடு இருக்கும். கனடாவின் Blackberry இந்த ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. கனடாவை விட இதற்கு ஏதுவான நாடு எதுவாக இருக்க முடியும்?
 4. கூகிள் தன்னுடைய வழக்கமான வியாபார அணுகுமுறையைத் துறந்து தன்னுடைய தானோட்டிக் கார்த் தொழில்நுட்பத்தை Waymo  என்ற நிறுவனம் மூலம் பல்வேறு கார் தயாரிப்பாளர்களுக்கு விற்கத் தயாராகி வருகிறது, தன்னுடைய ஆண்ட்ராய்டு செல்பேசி இயக்க மென்பொருள் போலல்லாமல் இதை விற்பனைப் பொருளாக்குவது கூகிளுக்கு இது முதல் முறை. ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் கூகிளுடன் பேச்சுவார்த்தை நிகழ்த்தி வருகிறது
 5. போக்குவரத்து விதிகள், சில அமெரிக்க மாநிலங்களில் தளர்த்தப் படலாம். டெஸ்லாவின் ஆட்டோ பைலட் என்பது இக்காரின் தானியக்க வசதியின் பெயர். டெஸ்லாவைத் தொடர்ந்து மற்ற கார் நிறுவனங்களும், இது போன்ற முறையைப் பின்பற்றலாம். அதாவது, 4 நிமிடம் வரை, ஒரு ஓட்டுனர், இருக்கையில் இருக்கையில், தானோட்டி முறையில் கார் பயணிக்கலாம். அதற்கு மேல், பல வித எச்சரிக்கைகளுடன் ஓட்டுனரிடம் காரைக் கட்டுப்படுத்தத் தானோட்டிக் கார் விட்டுவிடும்

இரண்டாம் 5 ஆண்டுகள் (2022 – 2027)

 1. சாலை விதிகள் தானோட்டி வாகனங்களுக்குத் தோதாகச் சற்றுத் தளர்த்தப்படலாம். அதிலும், மிக முக்கியமாக, நெடுஞ்சாலை விதிகள் முதலில் தளர்த்தப்படலாம்
 2. நெடுஞ்சாலையில் உள்ள டீசல் பம்புகள் தானோட்டி லாரிகளுக்குத் தக்கவாறு சில பம்புகளை மாற்றலாம். இவை ரோபோ கரங்களால் இயங்கும் பம்புகள்
 3. சில அமெரிக்கத் தென் மாநிலங்கள், பெரிய நகரங்களில், தானோட்டிக் கார்களுக்குத் தனியான வரைபாதைகளை உருவாக்கலாம். சாலைப் பராமரிப்பிற்கு, இணையக் கார் வாடகை நிறுவனங்கள் பணம் கட்டுவதற்கு ஒப்புக்கொள்ள வேண்டும்
 4. இப்படித் தனியான வரைபாதைகள் உருவாக்கும் நகரங்கள், ஊருக்கு வெளியே தானோட்டிக் கார்களை நிறுத்த இடம் தரவேண்டும். இது மிகப் பெரிய தகராறான விஷயம். இதில் நெடு நாள் குத்தகை என்று பல புதிய விஷயங்களும் அடங்கும். நகர மைய கார் நிறுத்தும் வாடகை வசூலை ஈடுகட்ட நகரங்கள் முயற்சிக்கும். இந்த இழுபறியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று சொல்வது கடினம். அத்துடன், இந்தக் கால கட்டத்திலா, அல்லது அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேறுமா என்றும் சொல்வது கடினம்
 5. ஊபர் போன்ற நிறுவனங்கள், சில பகுதிகளில் மனித ஓட்டுனர்கள், மற்றும் சில பகுதிகளில் தானோட்டிக் கார்களை இயக்குவதால், பல தொழிலாளர் பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி வரும்
 6. இணையக் கார் வாடகை நிறுவனங்கள், தாங்கள் இயக்கும் தானோட்டிக் கார்களை, அரசாங்கப்  போக்குவரத்து அமைப்புடன் முன் பதிவு செய்து கொள்ள வேண்டி வரும். இதில் உள்ள காப்புப்பிணை விஷயங்களும் தீர்க்கப்பட வேண்டும். நிறுவனக் காப்புப்பிணைப் பிரச்னை தனியார் காப்புப்பிணையை விட முதலில் தீர்க்கப்படும்
 7. தானோட்டிக் கார் என்பது பரவலாக, 40,000 டாலர் கார் வரை ஒரு அம்சமாக இருக்கும். டெஸ்லாவின் ஆட்டோ பைலட் போன்ற அமைப்பே இன்னும் நிலவும் என்பது என் எண்ணம். சாலை விதிகள் மாறாதவரை ஒரு வினோத அம்சமாகவே இவை இருக்கும்
 8. தானோட்டிக் கார் நிறுவனங்கள், நீதி மன்றங்களை நாடி பல்வேறு ஓட்டுனர் சார்ந்த சட்ட விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டி வரும். இவை மிக சீரியஸாக, ஒரு நுகர்வோர் பிரச்னையாக முன் வைக்கப்படும். தானோட்டிக் கார் நிறுவனங்கள் எத்தனை காப்புப்பிணையை ஏற்றுக் கொள்ளும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறி. என் பார்வையில், இந்தப் பிரச்னை எளிதில் இந்த ஐந்தாண்டு காலத்தில் தீர்க்கப்படாது
 9. வளரும் நாடுகள் பொருள் காப்புப்பிணைச் சட்டங்களை விவாதிக்கத் தொடங்கும். பல வளரும் நாடுகள் புதிதாக இவ்வகைச் சட்டங்களை முன் வைக்கும். இதனால், தானோட்டிக் கார் அல்லாத மனித ஓட்டுனர் கார்களும் பயன் பெறும்
 10. சரக்குப் போக்குவரத்துப் பாதிக்குப் பாதித் தானோட்டி லாரிகளுக்கு மாறிவிடும்
 11. மழை மற்றும் பனிப்பொழிவில் தானோட்டிக் கார்கள் மனிதர்களைவிட ஒழுங்காக ஓட்டுவது ஒரு பெரிய தானோட்டி கார் டெமோவாக மாறும்

மூன்றாம் 5 ஆண்டுகள் (2028 – 2032)

 1. வரண்ட, மழை மற்றும் பனிப்பொழிவு உள்ள சாலைகளில் எளிதாகக் காரோட்டும் முறைகளை மாற்றிக் கொள்ளும் தானோட்டிக் கார்கள் அறிமுகமாகும்
 2. எல்லாக் கார் தயாரிப்பாளர்களும் தானோட்டிக் கார் அம்சங்களை அறிமுகப்படுத்துவார்கள். இவ்வகை அம்சமற்ற கார்கள் மற்றும் லாரிகளை விற்பது கடினமாகிவிடும்
 3. கார், பஸ் மற்றும் லாரிகளின் உடல் பகுதிகள், தானோட்டலுக்குத்  தேவையான உணர்விகளுடன் உருவாக்கப்படும். குறிப்பாக, காமிராக்கள், கேளா ஒலி உணர்விகள், மற்றும் ராடார்கள் இதில் அடங்கும்
 4. பொதுப் போக்குவரத்தில் தானோட்டிப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும். இவற்றுக்காக தனியான வரைபாதையும் உருவாக்கப்படும். பொதுப் போக்குவரத்துப் பேருந்துகள், நுகர்வோரின் தானோட்டித் தொழில்நுட்பம் பற்றிய பயங்களை அகற்ற மிகவும் பயன்படும்
 5. அதிகமாகத் தானோட்டி அம்சங்கள் உள்ள கார்கள் விற்பனை, பொதுச் சாலைச் சட்டங்களை மாற்ற அரசுக்கு அழுத்தம் ஏற்படும். பல சட்ட ஆரம்பச் சறுக்கல்களை இந்த ஐந்தாண்டில் பார்க்கலாம். ஏனென்றால், முழுவதும், மனிதக் கார்கள் சாலையிலிருந்து நீங்கியிருக்காது. சட்டம் இரு தரப்பினருக்கும் – அதாவது, மனிதர் மற்றும் தானோட்டிக் கார்களுக்கும் நடுநிலையாக உருவாக்கப்பட வேண்டும். இது ஒரு இமாலயப் பிரச்னை. அத்துடன், எல்லாச் சிக்கல்களையும் யாருமே முன்கூட்டியே அறிய முடியாது. மனிதக் காரோட்டிகளுக்கான சட்டங்கள் ஓரளவிற்கு முதிரவே ஒரு 50 முதல் 60 ஆண்டுகள் பிடித்தன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்
 6. நகர அரசாங்கங்கள் கையைப் பிசையும் முதல் ஐந்தாண்டாக இதுவே இருக்கக்கூடும். ஏனென்னில், இவற்றின் கார் நிறுத்தும் வருமானம் ஏராளமாகக் குறைந்துவிடும். அத்துடன், புதிய புறநகர் பகுதிகளில், கார் கராஜ் மற்றும் கார் செலுத்தும் வழி இரண்டும் தேவையற்று போய்விடும். அதாவது, வளரும் நாடுகளில் உள்ளது போல, 800 சதுர அடி வாழுமிடம் என்றால், 1,000 சதுர அடி நிலம் போதுமானது. இன்றைய புறநகர் அரசாங்கங்கள், இதே 800 சதுர அடி வாழுமிடத்திற்கு, குறைந்தபட்சம், 2,000 சதுர அடி நிலம் என்று விற்கப்படுகிறது. எஞ்சியுள்ள 1,200 சதுர அடிக்கு கார் கராஜ், கார் செலுத்தும் வழி மற்றும் ஒரு சிறிய புல்தரை என்று விற்கப்படுகிறது. வரி என்னமோ 2,000 சதுர அடிக்கு என்று கணக்கிடப்படுகிறது. இதுவே 1,000 சதுர அடியானால், உள்ளூர் அரசாங்கத்திற்கு வரி வருமானம் இடிக்கும். புதிய வரிகளைத் தானோட்டி கார் நிறுவனங்களிடம் வசூலிப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல
 7. கார் வாங்குவதும் குறையத் தொடங்கலாம். இன்று சென்னையில் பல இடங்களுக்கு வருவதில்லை என்று அடம்பிடிக்கும் ஆட்டோக்களைப் போல இருந்தால், மேற்குலகில் சரிப்படாது. நுகர்வோர் இவ்வகைத் தானோட்டிக் கார்/பஸ் சேவைகளை, ஒரு அடிப்படை உரிமையாக மாற்றக் கோரலாம்!
 8. தானோட்டி வாடகைக் கார் நிறுவனங்கள், பல புதிய சேவைகளை உருவாக்கலாம். அதாவது, ஒரு வாரத்தில், ஒரு பயணியின் பல்வேறு தேவைகளை இணையம் மூலம் தானோட்டிக் கார் நிறுவனம் பூர்த்தி செய்யலாம். ஐந்து வேலை நாட்களில் காலையும், மாலையும் ஒரு நுகர்வோரின் தேவைக்கேற்றபடி, அவரது வீட்டிலிருந்தும், அலுவலகம்/ தொழிற்சாலையிலிருந்தும், அழைத்துச் செல்வது, வாரக் கடைசியில் குறிப்பிட்ட கடைகளுக்குச் செல்வது என்று பல விதத் தனிப்பட்ட வசீகரப் ’பேக்கேஜ்’ சேவைகள் வரத் தொடங்கும்
 9. தானோட்டி வாடகைக் கார் நிறுவனங்கள், நகர அரசாங்கங்களின் வருமான அழுத்தத்திலிருந்து வாடுவதற்கு பதில், தன்னுடைய கார்களில், விளம்பரங்களைச் சேர்த்து, புதிய வருமானம் ஈட்ட முயற்சிக்கலாம். பயணிகளின் எரிச்சலுக்கும் இதனால் ஆளாகலாம்
 10. சிக்கலான வளரும் நாடுகளில் உள்ள போக்குவரத்து சவால்களையும் – உதாரணம், பழைய டில்லியில் உள்ள சாந்தினி செளக், சென்னை பாரி முனை, கல்கத்தாவின் மைய சாலைகள், மும்பையின் க்ராஃபோர்ட் மார்கெட் – சமாளிக்கக்கூடிய தானோட்டிக் கார்கள் சோதனைக்கு வரும். இன்றே இவற்றைப் பற்றிய சிந்தனை பல செயற்கை நுண்ணறிவு பற்றிய கருத்தரங்குகளில் பேசப்படுகிறது
 11. மேற்குலகில், ஒரு மாபெரும் தானோட்டிச் சாலை ஒழுங்குமுறைக் கல்வித் திட்டம், காவலர்களுக்குப் தொடங்கப்படலாம்

நான்காம் 5 ஆண்டுகள் (2033 – 2037)

 1. பல பொதுச்சாலை விதிகள் கடந்த 10 ஆண்டு அனுபவத்தைக் கொண்டு மாற்றி அமைக்கப்படலாம். மேற்குலகில், கார்களின் சொந்தக்காரர்கள் குறைந்து கொண்டே வரலாம். பழைய, மனிதக் கார்கள் ஒரு 40% -க்கு தள்ளப்படலாம். மனிதக் கார்களைப் பராமரிப்பதும் ஒரு பெரும் செலவான விஷயமாகலாம்
 2. வளரும் நாடுகளில், சாலை விதிகள் மாறத் தொடங்கலாம். அத்துடன், தானோட்டிக் கார்கள் மற்றும் லாரிகள் சோதனை கட்டத்திலிருந்து, பொதுப் பயன்பாட்டிற்கு மாறலாம்
 3. மேற்குலகில், தானோட்டிச் சாலை ஒழுங்குமுறைக் கல்வித் திட்டம், காவலர்களுக்குப் பயணளிக்கத் தொடங்கலாம். புதியக் காவலர்கள், இவ்வகைக் கார்கள் எங்கு எல்லை மீறுகின்றன என்பதைப் பழைய காவலர்களை விடச் சுட்டியாகக் கண்டுபிடிக்கக்கூடும்
 4. தானோட்டிக் கார்களின் விலை 30,000 டாலர்களை விடக் குறையத் தொடங்கலாம். அத்துடன், சூரிய ஒளி மற்றும் மின்கலத்தால், இவை இயங்கத் தொடங்கலாம். இந்த விலைக்குக் கார் வேண்டுமானால், தொல்லெச்ச எரிபொருளை மற்றும் எண்ணெய்களைத் துறக்க வேண்டும்
 5. வளரும் நாடுகளின் சிக்கலான சாலைகள், யூரோப்பின் பழைய நகரப் போக்குவரத்துச் சவால்களைத் தானோட்டிக் கார்கள் சமாளிக்கத் தொடங்கிவிடும்
 6. லாரி மற்றும் பஸ் டிரைவர் என்பது ஒரு மிகச் சிலரே மேற்குலகில் ஒரு தொழிலாக வைத்திருக்கக்கூடும்
 7. வீட்டிற்கு மளிகை சாமான்களை டெலிவரி செய்வது போன்ற வேலைகளைத் தானோட்டிக் கார்களே செய்யும் சேவை உருவாகும். இதே போல, குழந்தைகளைப் பாதுகாப்பாக வாரக்கடைசி வகுப்புகளுக்குச் செல்வது, வீட்டிற்குத் திரும்புவது போன்ற வேலைகளையும் தானோட்டிக் கார்களே செய்யும்
 8. நகர விரிவாக்கம் 2017 –ல் இருப்பதை விட இன்னும் அதிகமாகலாம். நகர மையங்களில் கார்களை நிறுத்துமிடம் என்பது சரித்திரம் ஆகலாம்
 9. போக்குவரத்து நெரிசல் விஷயத்தில் தானோட்டிக் கார்கள் உதவிதா இல்லையா என்ற பட்டி மன்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும்
 10. பல கார் நிறுவனங்கள் மூடப்படலாம். ராட்சச இணையத் தானோட்டி வாடகைக் கார் நிறுவனங்களுக்கு விற்று அதிக லாபமில்லாமல், சில நிறுவனங்களே கார் தொழிலில் ஈடுபடலாம்

இந்த 40 யூகங்களில் 20 யூகங்கள் நிச்சயமாக நடக்கும் என்பது என் எண்ணம். சற்று இந்த ஐந்தாண்டோ அடுத்த ஐந்தாண்டோ அல்லது பத்தாண்டோ என்பது மட்டுமே திட்டவட்டமாகச் சொல்ல முடியாதது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.