க்ரேஸ் பேலி – பெரும் கலக்கங்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

1986 இல் ஒரு உரை நிகழ்த்துகையில் பேலி, “ஒரு எழுத்தாளராக நான் சிந்திக்கத் துவங்கியதற்கு, பெண்கள் நடுவே வாழ ஆரம்பித்ததுதான் காரணம்,” என வாதிட்டார். ஒரு காலத்தில் ஆண்களின் “பரபரப்பான” உலகால் வசீகரிக்கப்பட்டவர், அதன் மீதிருந்த ஈர்ப்பை இழந்தார், தன்னைச் சுற்றி இருந்த பெண்களைப் பார்க்கத் திரும்பினார், “அம்மாக்கள், சகோதரிகள், மேலும் அத்தைகள்/ மாமிகள்.” அவருக்கு வியப்பு எழும் வகையில், அதுவரை அவர் அவர்களைப் பற்றி அதிகம் யோசித்திருக்கவில்லை, அவர்களை அவர் புரிந்து கொண்டதும் இல்லை.  “நான் அவர்களை அறிந்திருக்கவில்லை,” அந்த உரையில் பேலி சொன்னார், “அங்கிருந்துதான் ஏராளமான இலக்கியம் புறப்படுகிறது என்று நினைக்கிறேன்… நாம் எதைப்பற்றி அறிய ஆர்வம் கொள்கிறோமோ, அங்கிருந்துதான் (இலக்கியம்) எழுகிறது.”

மற்றவர்களின் வாழ்க்கைகளைப் பற்றி அறிவதில் ஆர்வம் கொள்வது பெண்களின் தன்னியல்பு என்று பேலி நம்பினார்.  இயற்கையாகவே ஆண்களை விடக் கூடுதலான பரிவுணர்வும், குறைவான வன்முறையும் பெண்களிடம் இருப்பதாக அவர் எண்ணினார். பெரும் கொலைகள் “மனிதரால் உருவாக்கப்பட்டவை” (man made) என்று அவர் ஒரு கவிதையில் எழுதியபோது, அதை ஆண்களை இலக்காகக் கொண்டே எழுதினார்: அவரைச் சுற்றியிருந்த உலகில் எங்கும் காணப்பட்ட வன்முறை அனைத்தும் ஆண்களிடமிருந்து துவங்கியதாகவே தெரிந்தது. பாஸ்டன் ரெவ்யு (பத்திரிகையிடம்) அவர் ஒருமுறை சொன்னபடி, அதனால் பெண்களிடம்- கலை, போராட்டங்களில் கலந்து கொள்ளுதல், மேலும் குழந்தைகளை வளர்த்தல் ஆகிய செயல்கள் மூலம்- ‘இந்தப் பாழாய்ப்போன உலகை மாற்ற வேண்டிய’ பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. “ஒரு கவிஞரை கவிஞராக இருக்க விடுவது ஒரு சமூகத்தின் பொறுப்பு/ ஒரு கவிஞரின் பொறுப்பு பெண்ணாக இருப்பது,” இப்படி பேலி “பொறுப்பு (ரெஸ்பான்ஸிபிலிடி)” என்ற கவிதையின் துவக்கத்தில் அறிவிக்கிறார்.  அந்தப் பொறுப்புள்ள கவிதாயினி பெருமளவும் பேலியைப் போலவே தோற்றமளிக்கிறார்: தெரு முனைகளில் நின்று கொண்டு பிரசுரங்களை விநியோகம் செய்கிறவராகவும், போருக்கான வரிகளைக் கொடுக்க மறுப்பவராகவும், பொருளாதார அநீதிகளைக் கண்டிப்பவராகவும் இருக்கிறார். இந்தக் கவிதை கவிஞருக்கு ஒரு கட்டளை பிறப்பிக்கிறது, “கஸாண்ட்ராவைப் போல உரக்கக் கூவு, ஆனால்/ கேட்கப்படு இம்முறை.”

பெண்கள் நடுவே வாழ்வதற்கும், எழுத்தாளராக ஆவதற்கும் இடையே உள்ள தொடர்பு தத்துவ ரீதியானது என்பதைப் போலவே, நடைமுறையையும் சார்ந்ததே. அவருடைய குழந்தைகள் சிறுவராக இருக்கையில், பேலி அப்பர் வெஸ்ட் நியூயார்க் பகுதியில் இருந்த ஒரு அலுவலகத்தில் செய்த வேலையோடும் – அவர் கொலம்பியா பல்கலையில் ஒரு தட்டச்சாளராக இருந்தார்- நகர மையத்தில் இருந்த பூங்காக்கள், பள்ளிகளோடும்- அங்கு அவர் தன் குழந்தைகளைப் பராமரித்தார்- தன் நேரத்தைப் பங்கிட்டபடி இருந்தார். தன் குழந்தைகளின் பின்னே ஓடுகையில், மற்ற மனிதர்களின் அன்றாட வாழ்க்கைகளைக் கவனித்தபடியே, அவர்களுடைய பலமொழி உரையாடல்களையும் கேட்டபடி இருப்பார். 1992 இல் ஒரு பேட்டியாளரிடம் அவர் சொன்னார், “அந்த விளையாட்டுத் திடல்களில் நான் நேரம் செலவழிக்கவில்லை என்றால், அந்தக் கதைகளில் பலவற்றை நான் எழுதி இருக்கவே மாட்டேன்.” கொலம்பியா பல்கலையில் வேலை செய்தபோது, தன் துவக்க கட்டக் கதைகள் பலவற்றைத் தட்டச்சி இருந்தார், ஆனால் இதர கதைகள் எல்லாம் 11ஆவது தெருவிலிருந்த பெற்றோர்/ஆசிரியர் சங்கத்தின் அலுவலகத்தில்தான் எழுதப்பட்டன. அவருடைய முதல் கதைத் தொகுப்பு அவருடைய அலுவலக வாழ்வு, வீட்டு வாழ்வு ஆகிய இரண்டின் கூட்டு விளைவுதான்.

அவர் புழங்கிய ஆர்வலர் வட்டங்களில், அவர் சந்தித்திருந்த பெண்ணியவாதிகளில் சில இளைஞர்களைப் போல அல்லாது, பேலி தாய் என்னும் நிலையை நசுக்கும் அமைப்பாக ஒரு போதும் பார்த்ததில்லை. குழந்தை வளர்ப்பு என்பதை அவர் ஒரு வகை வேலை என்று புரிந்து கொண்டிருந்தார் – சலிப்பூட்டுவது, ஓய்ச்சலைக் கொணர்வது, நன்றியேதும் கொணராதது, இதை அவருடைய பல கதைகள் வெளிப்படுத்துகின்றன- அவர் தன் குழந்தைகளை 3 வயதிலிருந்தே, இளஞ்சிறார் பராமரிப்புக் கூடங்களுக்கு அனுப்பி இருந்தார். இருப்பினும், குழந்தைகளைப் பராமரிப்பது என்பது கொணர்ந்த உணர்ச்சிகளையும், மனத் தெளிவுகளையும் அவர் பெரிதும் விரும்பினார். அவருடைய புனைவுகளில், குழந்தை வளர்ப்பின் எழிலையும், சாதாரணத் தன்மையையும் எல்லாம் கவனித்தபடியே, அதைப் பெருமையுள்ளதாகவே சித்திரித்தார். தாய் எனும் நிலை, பேலியைப் பொறுத்து, ஒரு கலவையான ஆசீர்வதிப்பு, மகிழ்ச்சியும் பெரும் சினமும் துக்கமும் கலந்து கிட்டும் ஒரு அனுபவம். அது உலக வாழ்வில் குறைகள் கொண்ட, ஆனால் இறுதியில் பயனளிக்கும் இன்னொரு வழி.

ஃபெய்த் எனும் பெண்ணைப் பற்றிய அவர் கதைகள் இந்த உணர்ச்சிகளின் கொந்தளிப்பை மிக அழகாக வெளிப்படுத்துகின்றன. “டூ ஷார்ட் ஸேட் ஸ்டோரீஸ் ஃப்ரம் அ லாங் அண்ட் ஹாப்பி லைஃப்” என்ற கதையில் ஃபெய்த் ஒரு சனிக்கிழமையின் பிற்பகலில் ஒரு பழைய ஆடையைக் கைத்தையலால் செப்பனிட முயல்கிறாள், அவளைச் சுற்றியும் அவளுடைய இரு மகன்களும், இப்போதைய காதலனும் விளையாடியபடி, ரகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் காட்சி சீக்கிரமே குதூகலத்திலிருந்து விபத்தாக மாறி விடுகிறது: அவளுடைய காதலன், க்ளிஃபர்டின் குதிகாலில் அவளுடைய இளைய மகன் கடித்து விடுவதால், காயம்பட்டு விடுகிறது. இரு பையன்களும், “காயங்களோடும், அழுதபடியும்,” சிறு தூக்கம் போட்டு ஓய்வெடுக்க அனுப்பப்படுகிறார்கள். க்ளிஃபர்ட் அவளுடைய வளர்ப்பு முறையை விமர்சித்து, அவள் “மோசமான வேலை” செய்திருப்பதாகக் குறை சொல்கிறான்; அவள் அவன் மீது கண்ணாடியாலான சிகரெட் சாம்பல் குடுவானை வீசி, அவனுடைய “எப்படியுமே பெயரளவுக்குக் காதுமடலாக” இருப்பதைக் கிழித்து விடுகிறாள். “ஒரு பெண்ணிடம் இந்த மாதிரி எல்லாம் நீ பேசக் கூடாது,” என அவள் கீழ்க்குரலில் சொல்கிறாள், கடுங்கோபத்தோடு- அதுவும் இரண்டு குழந்தைகளை “முதுகுக்குப் பின்னே ஒற்றைக் கையால் தட்டச்சு வேலை செய்து பிழைப்புக்கு வழி தேடிக் கொண்டு” வளர்க்கிற ஒரு பெண்ணிடம் கூடவே கூடாது. க்ளிஃபர்ட் தன் ரத்தத்தைச் சுத்தம் செய்து கொண்டு விட்டு, அந்த அடுக்ககத்தை விட்டு நீங்குகிறான். ஃபெய்த் தன் குழந்தைகளைப் போய் சோதித்து விட்டு, பிறகு அவர்களுக்கு சாப்பாடு கொடுக்கிறாள். கதை அவள் தன் இளைய மகனை அணைத்தபடி இருக்கையில் முடிகிறது, அவன்தான் முன்னால் ஒரு காட்சியில் குற்றம் செய்தவன்:

நான் அவனை அணைத்துக் கொண்டு தாலாட்டினேன். என் கண்களை மூடிக் கொண்டேன், அவனுடைய கருமுடித் தலைமீது சாய்ந்து கொண்டேன். ஆனால் நகர்மைய அலுவலகக் கட்டடங்களின் தண்ணீர்த் தொட்டிகளின் நடுவிலிருந்து வெளிப்பட்ட சூரியன் தன் பாதையில் போகிறபோது, திடீரெனப் பளீரென்ற வெண்ணொளியை என் மீது வீசியது. அல்காட்ராஸ் தீவுச் சிறையில் அடைக்கப்பட்டு, கருப்பு வெள்ளைக் கோடுகளிட்ட ஆடையணிந்த அரசனைப் போல, என் மகனின் குட்டையான தடித்த விரல்களின் வழியே, அடக்கம் செய்யப்பட்ட என் இதயம் கோடுகளான ஒளியால் ஒளியூட்டப்பட்டது.

அது மனதைத் தொடும் ஒரு காட்சி, அதில் தாய் அன்பு இறுக்குகிறது, கட்டுப்படுத்துகிறது, அதே நேரம் எழுச்சியூட்டுகிறது, ஒளியூட்டுகிறது: இறந்த ஏசுவின் உடலைச் சுமந்த மரியாளின் நிலையை ஒரு சிறையாகப் பாவிக்கும் இந்தக் காட்சி. பெண்கள் அன்னையராக இருப்பதைப் பற்றி இரு மனநிலை கொண்டவர்களாக இருப்பதைக் கச்சிதமாகக் கைப்பற்றுகிறது- ஒருக்கால் பேலியேகூட இப்படி இருந்திருக்கலாம். ஃபெய்த் பற்றிய இன்னொரு கதை, இது ரீடர் தொகுப்பில் சேர்க்கப்படவில்லை, இரு பையன்களோடு கடற்கரையில் முடிகிறது. இப்போது வளர்ந்தவர்களாகி விட்ட மகன்கள் இருவரும், தம் தாயைக் கடற்கரை மணலில் புதைக்கிறார்கள். ஃபெய்த் அடக்கம் பெறுவது தொடர்கிறது.

எத்தனை விரக்தியூட்டுவதாக அவர்கள் குடும்ப வாழ்க்கைகள் இருந்தாலும், பேலியின் பெண்கள் நம்பிக்கையற்ற நிலைக்கு வருவதென்பது மிக அரிது. வாழ்க்கை எத்தனை மோசமாக ஆனாலும், அவர்களுக்கு வாழ்வு என்பது இன்னமும் கூடுதலாகவே வேண்டி இருக்கிறது. ‘லிவின்’ என்ற கதையில் ஃபெய்த்தும், அவள் தோழி எல்லெனும் ஒரே நேரம் நோய்வசப்படுகிறார்கள். அவர்கள் தொலைபேசியில் பேசிக் கொள்கிறார்கள், ஃபெய்த் எல்லெனுக்குத் தேறுதல் சொல்கிறாள். “வாழ்வு ஒன்றும் அத்தனை பிரமாதமாக இல்லை,” அவள் சொல்கிறாள். “நாம் குப்பையான நாட்களையும், குப்பையான ஆண்களையும் தவிர வேறொன்றும் பெற்றதில்லை, பணமும் இருந்ததே இல்லை, எப்போதும் நொடிப்பும், கரப்புகளும்தான் கிட்டின. ஞாயிறுகளில் செய்வதற்கு எதுவும் இல்லாமல், குழந்தைகளை சென்ட்ரல் பார்க்குக்குத்தான் அழைத்துப் போனோம், அந்த அழுக்கான ஏரியில் படகில் துடுப்பு வலித்தோம். என்ன பெரிதாக இழக்கப் போகிறோம்? இன்னும் சில வருடங்கள் இருக்கலாமே. குழந்தைகளைப் பார்க்கலாம் என்கிற உபயோகமே இல்லாத விஷயம், உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு துளையும் நெருப்பு அலை போன்ற வெப்பத்தில் கரியாகப் போகிறது.” எல்லென் ஒத்துப் போகிறாள். அவள் பதிலளிக்கிறாள், ஆனால், “நான் எல்லாத்தையும் பார்க்கணும்.” இந்தப் பெண்கள் உலகை அதன் எல்லாவற்றோடும் அணைத்துக் கொள்கிறார்கள், கரப்புகளையும், அழுக்கு ஏரிகளையும் சேர்த்துத்தான்.

பேலியின் புனைவு பெண்களின் வேலைகளுக்கும், வாழ்வுகளுக்கும் நிரூபண சாட்சியமாக நிற்கிறது என்று சொல்வது, நன்கு தெரிந்த ஒரு உண்மையைத் திரும்பச் சொல்வதே ஆகும். தனிப்பட்ட வாழ்வின் விஷயங்களையும் கவனித்த எழுத்தாளர் என்றும், அன்றாட வாழ்வில் உள்ள சாதாரண விஷயங்களை, வரலாற்றின் பெருவீச்சில் கவனிக்கப்படாமல் போய் விடுகிறவற்றையும் கவனித்தார் என்றும் அவர் அடிக்கடி புகழப்படுகிறார்.  இந்த வகையில் அவரை அணுகுவதற்குக் காரணத்தை பேலியே கொடுத்திருக்கிறார்- தான் முதலில் எழுதத் துவங்குகையில், தன் எழுத்தின் இலக்கான பொருளைக் குறித்துத் தான் கவலை கொண்டிருந்ததாக ஒத்துக் கொள்வதன் மூலம்.  “நான் எழுதிக் கொண்டிருந்தவை அற்பமானவை, முட்டாள்தனமானவை, சலிப்பூட்டுபவை, ருசியற்றவை,” என “கவிதைகள், பெண்கள் மேலும் உலகைப் பற்றி” என்ற உரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் பேலி வெறும் வீட்டு வாழ்க்கையைப் பற்றி மட்டும் எழுதியவராக நில்லாமல், அதை மீறியவராக இருக்கிறார். ஆம், அவருடைய புனைவுகள் தினசரி வாழ்வின் நடவடிக்கைகளைப் பற்றியே இருந்தன- கடை கண்ணிக்குப் போவது, சமைப்பது, பராமரிப்பது, சச்சரவு செய்வது போன்றன அவை- ஒரு வகைப் பரிவோடும், நுட்ப உணர்வோடும் இருந்த அவை அத்தகைய சாதாரணமான, மிகப் பரிச்சயமான நடவடிக்கைகளைப் புதிதாக, வசீகரமானவையாகக் காட்டின. ஆனால் பேலியின் புனைவுலகில் உண்மையான குடும்ப வெளி என்பது இல்லை. அடுக்ககங்களில் அந்தரங்கம் என்பது அனேகமாக இல்லை: எல்லாருக்கும் கட்டடத்தில் உள்ள எல்லாரையும் தெரியும், தவிர நண்பர்கள், குழந்தைகள், காதலர்கள் மேலும் முந்நாள் கணவர்கள் எனப் பலரும் தொடர்ச்சியாக வந்து போகிறார்கள், குடும்பங்கள் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கின்றன, புது உறுப்பினர்களையும், எதிர்பாரா விருந்தாளிகளையும் சேர்த்துக் கொண்டு இருக்கின்றன. “டூ ஷார்ட் சேட் ஸ்டோரீஸ்” என்றவற்றில் முதல் கதையில், ஃபெய்த் தன் முந்நாள் கணவனுக்கும், தன் புதுக் கணவனுக்கும் காலை உணவு சமைக்கிறாள், குழந்தைகள் அவர்களைச் சுற்றிலும் குழுமியபடி உள்ளார்கள். இரண்டு ஆண்களும் அந்த முட்டைகள் குறித்து அதிருப்தி அடைந்தவர்களாக உள்ளனர்.

குடும்பத்தை பிரித்துக் காட்டுவதை விடுத்து, பேலி தன் புனைவிலுள்ள குடும்பத்தை கூட்டு வாழ்வில் ஓரிடத்தில் பொருத்துகிறார். அவருடைய கதைகளில் பெரும்பாலானவை பொதுவான அல்லது நிறுவனமான வெளிகளிலேயே நடக்கின்றன: பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், பொது மருத்துவமனைகள் மேலும் தனியார் சிகிச்சைத் தலங்களில் நடப்பன. இந்த வெளிகளில், அந்தரங்கம் என்பது ஒரு மாயை. ஒரு தந்தையைப் பார்க்க இந்த மருத்துவ மனைக்குப் போனால், அடுத்த படுக்கையில் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கும்

இன்னொரு நோயாளியிடம் இருந்து நீங்கள் விளக்கங்களைக் கேட்க நேரும். ஒரு தாயை ஒரு சிகிச்சைச் சாலையில் பார்க்கச் சென்றால், அங்கே தங்கி இருக்கும் இன்னொருவர் உங்கள் இருவரின் இணைவில் குறுக்கிடுவார். பேலியின் உலகில் தனிமை/ அந்தரங்கம் என்பதை நாம் காணக் கூடிய இடம் என்றால் அது மான்ஹாட்டனின் நெரிசலான தெருக்கள் வழியே ஒரு வாடகை காரில் பயணம் போகும்போதுதான் ஒருவாறாகக் கிட்டும்: நகரின் கூட்டங்களிலிருந்து பிரிக்கப்படுவீர்கள், ஆனால் அது தற்காலிகமாகத்தான் கிட்டும்.

கிட்டத்தட்ட அவருடைய எல்லாக் கதைகளிலுமே, தனியாக இருக்க முடிவது (தனிமை) மிகவும் விரும்பப்படுகிறது, ஆனால் அது அனேகமாக எப்போதுமே சந்தேகத்துக்குரியதாக இருக்கிறது. தம்மைச் சுற்றியுள்ளவர்களின் தேவைகளிலிருந்து யாரும் தம்மைப் பிரித்துக் கொள்ள முடியும் என்று பேலி நம்பவில்லை, அவர்கள் அப்படிச் செய்ய வேண்டும் என்றும் அவர் நினைக்கவில்லை. இதனாலேயே சிறைகள் நகரங்களில் இருக்க வேண்டும் என்று அவர் கருதினார், இதை அவர் ‘ஆறு நாட்கள் (ஸிக்ஸ் டேஸ்)’ என்ற கட்டுரையில் ஒரு வாதமாக முன்வைத்திருக்கிறார். அக்கட்டுரை நியூயார்க்கில் உள்ள பெண்களைத் தற்காலிகமாகக் கைது செய்து அடைத்திருக்கும் மையத்தில் அவர் கழித்த ஆறு நாட்களைப் பற்றி அவர் எழுதியது. வியத்நாம் போருக்கு எதிராக அவர் கலந்து கொண்ட பொது எதிர்ப்புக் கிளர்ச்சியில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். சிறைகள் சுற்று வட்டாரத்தில் இருக்க வேண்டும், குடும்பம் மேலும் பொதுமக்களின் பார்வையிலிருந்து அகற்றப்பட்டு வசதியாக எங்கோ தூரப் பகுதிகளில் அமைக்கப்படக் கூடாது என்று கருதினார். “அதிர்ஷ்டமில்லாதவர்களுடனும், தன்னைத் தானே துன்பத்தில் சிக்க வைத்துக் கொள்வோருடனும்” தொடர்பு வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் தினசரி அனுபவங்களில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். பேலியின் புனைவு, அவருடைய அரசியல் கட்டுரைகளைப் போலவே, நாம் தூர விலக்கி வைக்க விரும்புவோருக்கு அருகில் நாம் சென்று இருக்க வேண்டும் என்று நமக்குப்  பொறுப்பைக் கொடுக்கிறது.

ஆனாலும், ஒரு ஆழமான, ஏன் நம்பிக்கை கூட அற்றுப் போன தனிமையுணர்வு அவருடைய புனைவில் பதுங்கி நுழைந்து விடுகிறது. “மதர்’ என்ற கதையில், கதையுரைப்பவர் தன் அம்மா பல வருடங்களில், கவனித்தபடி, கவலைப்பட்டபடி, கண்டித்தபடி பல வாயில்களில் நின்றிருந்ததைச் சித்திரங்களாக நினைவு கூர்கிறார். கதையின் கடைசிக் காட்சியில், அவருடைய அம்மா வாயிலருகே மறுபடி நிற்கிறார், இந்த முறை அது வசிக்கும் அறை வாயில், அப்பா ஒரு இருக்கையில் அமர்ந்து பாஹின் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தக் காட்சி ஒரு முந்தைய கணத்தை, பல வருடங்கள் முன்பு நிகழ்ந்ததை, அந்த ஜோடி வசிப்பறையில் மோட்ஸார்ட்டின் இசையை, சேர்ந்து அமர்ந்து கேட்டிருந்ததையும், அந்த இசையையும், தங்கள் அமெரிக்க வாழ்வையும் (பற்றி யோசித்து) “ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்ததையும்” நினைத்துப் பார்க்க வைக்கிறது. ஆனால் இப்போது அந்த குதூகலம்  கலைந்து போய்விட்டது. “என்னோடு கொஞ்சம் பேசுங்கள்” வாயிலருமே நிற்கும் அம்மா இறைஞ்சுகிறார். “நாம் இப்போது அதிகம் ஏதுமே பேசுவதில்லை.” அவருடைய கணவர், ஒரு மருத்துவர், தான் மிகவும் களைத்திருப்பதாகப் பதில் சொல்கிறார். “நான் இன்று முப்பது பேர் போலப் பார்த்தேன். எல்லாரும் நோய்ப்பட்டவர்கள், ஒரே பேச்சு, பேச்சு, பேச்சு. இசையைக் கேள்.” அவள் வந்து அமர்கிறாள், ஆனால் அவர்கள் பேசுவதில்லை. சிறிது கழித்து, அம்மா இறக்கிறார், கதை முடிகிறது. பேலியின் இரைச்சலான உலகில் அது மௌனமானதும், தனிமை நிறைந்ததுமான ஒரு அபூர்வமான கணம்.

பேலியைப் பொருத்தவரை, தனிமையை விட துயரமானது வேறொன்றுமில்லை- தங்களைச் சுற்றிலும் இருப்பவர்களோடு ஈடுபட முடியாதவர்கள், அல்லது அதை விரும்பாதவர்களை விட சோகமானது வேறொன்றும் இல்லை. தன்னுடைய எதிர்ப்புக் கிளர்ச்சிகளிலும், கலையிலும், தன் செயல்திட்டமாக அவர் கொண்டிருந்தது, வாழ்வு எப்படி கூட்டு வாழ்வாக வாழப்பட முடியும், வாழப்பட வேண்டும் என்பதைக் காட்டுவதுதான்: அது மற்றவர்களின் பார்வையில் உலகைப் புரிந்து கொள்ள முயன்றதோடு மட்டுமல்லாமல், இந்த முறையில் கிட்டும் தொடர்பு தீவிர அரசியலுக்கு எத்தனை அத்தியாவசியமானது என்பதையும் வலியுறுத்தியது. கூட்டாக வாழ்வது எப்போதுமே மகிழ்ச்சி தருவதாக இராதுதான் – ஒரு அடுக்ககத்தில் ஏகப்பட்ட பேர்கள் சேர்ந்து விடக் கூடும்- ஆனால் பேலியின் கருத்தில், அது வாழ்வின் மறுக்கப்பட முடியாத உண்மை.

~oOo~

மேகி டோஹெர்ட்டி: இவர் ஹார்வர்ட் பல்கலையில் ஒரு விரிவுரையாளர். இவருடைய எழுத்துகள் நியூ ரிபப்ளிக், டிஸெண்ட், மேலும் என்+1 ஆகிய சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன.

[தமிழாக்கம்: மைத்ரேயன்]

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.