கருங்குயில் கீதம், ககன வெளி நடனம்

அது மெல்லிய ஓசைதான்; ஓசை என்பதைவிட புலனுணர் அதிர்வுகள் எனச் சொல்லலாம். சுமார் நூறு கோடி முப்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதவனைப் போல் இருபத்தியொன்பது மடங்கு பெரிதான ஒரு கருந்துளையும் (black hole), ஆதவனைப் போல் முப்பத்தாறு மடங்கு பெரிதான ஒரு கருந்துளையும், ஒன்றை நோக்கி மற்றொன்று ஈர்க்கப்பட்டு ஒன்று மற்றொன்றாக சூரியனை விட அறுபத்தியிரண்டு மடங்கு எடையுடன் ஒரே கருந்துளையாக மாறி இங்கே புவியில் ரெய்னர் வெய்ஸ், கிப் ஸ்டீஃபன், பேரி சி பாரிஷ் மூவருக்கும், 2017ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசினை பெற்றுத் தந்தது. பரிசு கருந்துளையைப் பற்றியதல்ல; அவை ஈர்க்கப்பட்டு அதிவேகமாக மோதி இணைகையில் விண்ணில் நிகழ்ந்த அந்தப் பேரோசை பறவையின் ஒலி என புவி வந்தடைந்ததை அறிந்து சொன்னதற்காக! அதன் மூலம் ஐன்ஸ்டைனின் ஈர்ப்பு பொது சார்பியல் கோட்பாட்டை நிரூபித்ததற்காக.(General Relativity Theory of Gravitation)

நாம் இருக்கும் பால்வெளி மண்டலம் (Milky way Galaxy) பிரபஞ்சத்திலிருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ள சுமார் 125 கோடி விண்மீன் மண்டலத்தின் (Star Galaxies) ஒரு சிறு பகுதியே ஆகும். பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டிருப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. ஆனாலும், அகிலத்தின் ஆற்றல் நிரந்தரமான ஒன்றாக உள்ளது; அதாவது அது உருவாக்கப்படுவதுமில்லை, அழிக்கப்படுவதுமில்லை, ஆனால் ஆற்றலை ஓர் நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாற்ற இயலும். இதைத்தான் நம் வேதாந்தமும் சொல்கிறது.

அப்படியென்றால், இவ்வகிலம் எவ்வாறுதான் தோன்றியது? மெய் ஞானிகளும், விஞ்ஞானிகளும் இதைப்பற்றி ஆராய்ந்து கொண்டேயிருக்கிறார்கள், அறிக்கைகளைக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள் .

அறிவியல் ஆய்வாளர்கள் பெரு வெடிப்பு (Big Bang) நிகழ்ந்து, மிகப் பெரும் தீப்பிழம்புகளாகி, அவை குளிர்ந்த பின்னரே இந்த மண்டலங்கள் தோன்றியிருக்கக் கூடும் என சொல்கிறார்கள் பெரு வெடிப்பிற்குப் பிறகு அதில் ஈடுபட்டவை சுருங்குகின்றன; அவற்றின் ஈர்ப்பு விசை மிகப் பலம் பொருந்தியதாக, மிகுந்த ஆற்றல் மிக்கதாக இருக்கும். அவை ஒளியையும் அனுமதிக்காத கருந்துளைகளென நிலவுகின்றன. அவற்றின் அருகே இருக்கும் தோழமை விண்மீன்களைக் கொண்டே நாம் கருந்துளைகளை அனுமானிக்க முடியும். கருந்துளைகள் தம் ஈர்ப்பு விசையால் அருகிருக்கும் நட்சத்திரத்தின் வாயுவை விரைவாக இழுத்து தன்னைச் சுற்றி அதி வேகமாக சுழலச் செய்யவும், ஈர்த்து ஒரே கருந்துளையாகச் செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த ககன வெளி நடனத்தில் அவை சுற்றிச் சுழன்றாடி, ஒன்றோடொன்று மோதும்போது ஏற்படும் நடுக்கங்கள் காலவெளியின் அதிர்வலைகளென அறியப்படுகின்றன. ஆனால், அவற்றை எப்படிக் கணக்கிடுவது?


நன்றி: “The Nobel Prize in Physics 2017”. Nobelprize.org. Nobel Media AB 2014. Web. 29 Oct 2017.

LIGO (Laser Interferometer Gravitational Wave Observatory-LIGO) செப்டம்பர் 14, 2015-ல் நாம் இக்கட்டுரையில் முன்கண்ட இரு கருந்துளைகளின் மோதலால் நிகழ்ந்த ஈர்ப்பு அலைகளை பதிவு செய்தது. அதை முதலில் பார்த்தவர் ஜெர்மனியில் உள்ள ஹன்னோவர் நகரில் மார்கொ ட்ரெகொ என்ற இளம் இயற்பியலாளர். அமெரிக்காவில் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ஹான்ஃபோர்ட் நகரிலும், லூயிசியானா மாநிலத்தில் உள்ள லிவிங்ஸ்டனிலும் பதிவான அவ்வொலி 2017-ல் ‘விர்கோ’ மையத்தில் இத்தாலியிலும் அறியப்பட்டது. சுமார் நூறு கோடி எண்பது இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னரான மோதலையும் அதன் விளைவான அதிர்வினையையும் ‘விர்கோ’ பதிவிட்டது.

தென்வானிலே இருந்து இவ்வதிர்வலைகள் வந்ததாக ஹான்ஃபோர்ட் மையம் சொன்னது. வடக்கு வானை விட தென்வானிலே நட்சத்திரக் கூட்டம் அதிகம் என்ற உண்மையை இது நினைவூட்டுகிறது.

ஒன்றை நோக்கி ஒன்று செல்கையில் அவற்றின் தீவிரம், அவை வெளிப்படுத்தும் ஆற்றல், இயற்பியலுக்கு (Physics), அதிலும் முக்கியமாக தூலத்தைக் கடந்ததின் (Metaphysics) ஒரு பகுதியான பேரண்டத்தின் பிறப்பை அறிய ஒரு வழி. மொத்தமான எடையில், அதாவது, ஆதவனைப் போல சுமார் 29 மடங்கு மற்றும் 36 மடங்கு எடை கொண்ட அவை, ஒரே கருந்துளையாக இணைந்து ஆதவனைப் போல் 62 மடங்கு எடையாகி 3 மடங்கு ஈர்ப்பு அலைகள் கொண்டு மிகுந்தன. காலவெளியில் ஈர்ப்பு அலைகள் என்பவை ஒலி அலைகள் அல்ல; அவை நடுக்கங்கள்-நில நடுக்கங்களைப் போல் ஓரிடத்திலிருந்து வேறிடம் கடக்கும் போது மெலிதாகி விடுகின்றன.

நான்கு பரிமாணமுள்ள காலவெளியைப் பற்றி கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஐன்ஸ்டைன் சொன்னது – ஈர்ப்பு என்பது வளிமண்டலத்தில் நுழையும் கதிரொளியைப் போல் கோணமற்ற வளையும் (curvature) தன்மையொத்தது என்றும், அவைகள் ஆற்றல் மிக்கவை என்றும் அவர் சொன்னார் – அந்தக்கோட்பாடு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மிகுந்த ஆற்றலை வெளிப்படுத்திச் சுழலும் கருந்துளைகளாடும் நடனம் பல கோடி வருடங்களாக நடைபெறுகிறது. அதை அளவிட முடியவில்லை எனவும், ஒரு கணிதக் கோட்பாடாக அதை ஏற்றுக் கொள்ளலாம் எனவும் ஐன்ஸ்டைன் தெரிவித்தார்.

பரிசு பெற்ற மூவரும் ஈர்ப்பு அலைகளை அளவிட அமைத்ததுதான் ஊடொளி குறுக்கீட்டுமானி (Laser Interferometer), இன்னமும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் காலவெளியில் நிகழும் இழுபடல்களை, விரிவியல்புகளை, மோதல்களை(drags, expansion & collision) அளந்தால்தான் பேரண்டத்தின் பிறப்பைப் பற்றி சரியாகச் சொல்ல முடியும். அவ்வதிர்வுகள் புவியில் வந்து சேரும் பொழுது, அவை ஒரு அணுவின் மையக்கருவில் ஆயிரத்தில் ஒரு பங்குதான் இருக்கும் என்ற நிலையில் அதை அவதானிப்பதும், பதிவு செய்வதும், பின்னர் பகுத்துக் கொள்வதும் உண்மையிலேயே ஒரு சவாலான காரியமாகும்..

ஆங்கில எழுத்தான ‘எல்’(L) வடிவத்தில் அமைக்கப்படுள்ள அந்த ‘இன்டர்ஃபெரோமீட்டரின்’ இரு முனைகளிலும், மூலையிலும் அதி நுட்ப முறையில் உருவாக்கிய மிகப் பெரிய கண்ணாடிகள், புவியின் எந்த அசைவுகளாலும் அதிர்வடையாத வகையில் தொங்கவிடப்பட்டுள்ளன. ஈர்ப்பு அலைகள் இருமுனைகளிலும் ஒன்று சுருங்கியும், ஒன்று விரிந்தும் என இருவிதமாகச் செயல்படும். இரு முனைகளிலும் பயணிக்கும் லேசர் கற்றை (laser beam) ஒரே நீளமாக இருந்தால் அவைகளில் அளவிட ஒன்றுமில்லை. சமிக்ஞை ஏற்படுகையில் ஒளியின் நீள அளவு மாறுபடுகிறது இருளே உமிழ்ந்த சிறு ஒளி. அக்குறுக்கீட்டுமானியின் கரங்களில் ஒன்றில் ஒளியின் நீளம் மாறுபட்டால், அது ஈர்ப்பின் அலைகளால் நிகழ்த்தப்படுகிறது. அவ்வொளியலைகளின் செறிவும் மாறுபடும். இதன் மூலம் பிரபஞ்சத்தின் தோற்றம் அறிவியல் பூர்வமாக நிறுவப்படும்.

இச்சோதனைக்கு மிகத் துல்லியமான வெற்றிடம் தேவைப்படுகிறது. இந்தியாவில் அஹமதாபாத்தில் உள்ள ‘ப்ளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனம் தற்பொழுது மிகக் குறைந்த ஹைட்ரஜன் அணுக்கள் உள்ள மாசற்ற குழாய்கள் அமைத்து ஊடொளி செலுத்துவதில் சிறப்பு பெற்றுள்ளது என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். மேலும் ‘லிகோ’வின் கட்டமைப்பில், தொழில் நுட்பத்தில் பாலா அய்யர் போன்ற பல அறிவியலாளர்கள் சிறந்த பங்காற்றியிருக்கின்றனர்.

ஜெனிவாவில் உள்ள ‘செர்ன்’ என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் நம் நடராஜருடைய சிலை நிறுவப்பட்டுள்ளது. அடிப்படையில் அவரது நடனம் பிரபஞ்சத்தின் நடனம் என நாம் அறிவோம். அணுவின் நடனம் ஆனந்தக் கூத்தனின் நடனமே! பேரண்டத்தின் உருண்டை வடிவ அமைப்பிற்குள் அவர் ஆடுகிறார்; 7.83 ஹெர்ட்ஸ் அந்த உடுக்கின் ஒலி, ஒலி அதிர்வுகளாக உணரப் படுகிறது. பரந்த வான் வெளி, அவருடன் பர நடனம் செய்கிறது. ஐந்து பூதங்களுக்கும் அடிப்படை ஆகாயம். ஹாகின்ஸின் ‘ஸ்டிரிங்க் தியரி’ நடராஜரின் நடன நிலையில் அவரது சிரம் முதல் பாதம் வரை புலப்படுகிறது. மிகச் சீரான அந்த நடனம் அகிலம் முழுதும் சன்னமான அதிர்வுகள் எனத் தான் அறியப்படுகிறது. குறியீட்டளவில் அவர் ககன வெளியின் கூத்தன். நிஷா காந்தன். நக்ஷத்ர விக்ரஹமதயே என ஒரு திரு நாமம் அவருக்கு உண்டு.

நம்முடைய வேதங்களை ‘சப்தப் ப்ரமாணம்’ என்றே அறிகிறோம். இந்த உலகம் கணிதத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. மெடாஃபிஸிக்ஸ் சிவ நடனத்தின் உட்பொருளை தர்க்க ரீதியில் விளக்க உதவும்.

தலையில் நீர், கரத்தில் நெருப்பு, உடுக்கில் ஒலி-காற்று, நிலத்தில் அண்டங்கள், நீல நிற ஆகாயம், அணுக்களின் சுழல் பாதையைக் காட்டும் நடனம், தலையிலிருந்து கால் வரை ஒரு கோட்டில் பார்க்கும் நம் பார்வையில் புலப்படும் ‘ஸ்டிரிங்க்’ வடிவம், குண்டலினி சக்தியைக் குறிக்கும் பாம்பு – உயிர், உயிராற்றல்; அணு, அணுத்துகள், பரமாணுத்துகள், இறைத்துகள் (God Particle)!

எல்லைகளற்றும், எல்லைகளுக்கு உட்பட்டும் ஆடும் அரசன்; எப்படி என்பதற்கும், என்ன என்பதற்கும் அவரே கேள்வி, அவரே பதில். எழிலோடும் ஆடும் நடனம், சினத்தோடும் ஆடும் நடனம் இரண்டிலுமே சக்தி வெளிப்படுகிறது. இயங்கும், இயக்கும், இலங்கும் புதிர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.