எம். எல். – அத்தியாயம் 8

கோபாலக் கொத்தன் சந்தும், மேலக்கோபுர வீதியும் சந்திக்கும் முனையிலிருந்த உலகநாதன் லாட்டரி சீட்டுக் கடையில் அந்த நேரத்திலேயே நாலைந்து பேர் நின்று லாட்டரிச் சீட்டுக்களை வாங்கிக் கொண்டிருந்தனர். சாயந்திரமானால் லாட்டரி வாங்க கூட்டம் குவியும். எந்தெந்த சீரியலில் லாட்டரிச் சீட்டு வெளியாகியிருக்கிறது என்கிற போஸ்டரை ஒரு தட்டியில் ஒட்டி வைத்திருந்தது. அந்த விளம்பரத் தட்டியையும் சிலர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உலகநாதனின் லாட்டரிச் சீட்டுக் கடை ரொம்பச் சிறியதுதான். ஆனால் சென்னை மாநிலம் பூராவும் அந்தக் கடை பிரபலமாகி விட்டது.

1968ல் லாட்டரிச் சீட்டை மாநில அரசு துவங்கியபோது முதல் குலுக்கலிலேயே அந்தக் கடையில் வாங்கப்பட்டிருந்த பரிசுச் சீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் விழுந்திருந்தது. இது தவிர 10,000 ரூபாய், 1000 ரூபாய் பரிசுகளும் அங்கு வாங்கிய நம்பர்களுக்கு விழுந்திருந்தன. இரண்டு மாதத்தில் இன்னொரு ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுந்தது. உலகநாதன் பேட்டி எல்லாம் கொடுத்திருந்தார். உலகநாதனின் கடை ராசியான கடை ஆகிவிட்டது. வெளியூர்களிலிருந்தெல்லாம் அவர் கடை லாட்டரிச் சீட்டுக்களை வாங்கிச் செல்ல ஆரம்பித்தனர். உள்ளூர் சினிமா தியேட்டர்களில் உலகநாதன் சிலைடுகள் போட்டு விளம்பரப்படுத்தினார். மதுரையில் அவர் ஒரு பிரமுகராகி விட்டார்.

‘லட்சாதிபதிகளை உருவாக்குகிறவர்’ என்ற பெயர் அவருக்கு ஏற்பட்டு விட்டது. சபாபதி வீட்டிலிருந்து திரும்பும்போது சோமு, அவனையறியாமலேயே அந்தக் கடையில் நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

பிரப்பம் தட்டியில் ஒட்டியிருந்த லாட்டரிச் சீட்டு விளம்பர போஸ்டர்களை சோமு பார்த்துக் கொண்டிருந்தபோது, அவன் தோளில் கை வைத்து, “என்ன மருமகனே, லாட்டரிச் சீட்டு வாங்க வந்தியா?…” என்று கிட்டு கேட்டான். சட்டெனத் திரும்பி, “என்ன மாமா… நீ எங்க இங்க வந்தே?” என்று கேட்டான் சோமு.

“நீ சீட்டு வாங்கப் போறியா?…” என்று கிட்டு கேட்டான்.

“இல்லை… சும்மா வேடிக்கை பார்க்கத்தான்…”

“ஒனக்கு என்னப்பா… நீ பெரிய எடம்…” என்று கிட்டு சொன்னதை சோமு விரும்பவில்லை. ஏன் மாமா இப்படியெல்லாம் யாரோ வேற்று மனுஷன் மாதிரிப் பேசுகிறான்?

“லாட்டரிச் சீட்டு வாங்கலைன்னா பெரிய எடமா?…”

“இல்ல மருமகனே… ஒனக்கெல்லாம் லாட்டரிச் சீட்டு தேவையில்லைன்னு சொல்ல வந்தேன்… நானுந்தான் கெடைக்கிற துட்டுக்கெல்லாம் லாட்டிரி வாங்கித்தான் பாக்கேன். நூறு ரூவாயிக்கி மேலே விழ மாட்டேங்குது…”

“இதுல போட்டு எதுக்கு மாமா காச வீணாக்குதே?…”

“ஏதாவது பெரிய தொகை விழுந்திராதான்னுதான்…”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… பேசாமே வீட்டைக் கவனி மாமா… சரி… நீ என்ன கடைக்குப் போகலையா?”

“கடைக்கித்தான் போய்க்கிட்டு இருக்கேன். போற வழியிலே புது சீரியல் ஏதாவது வந்திருக்குதான்னு பாத்துட்டு போலாம்னுதான்…”

“இதுல எல்லாம் காசப் போட்டு கரியாக்காத… பேசாம் கடைக்கிப் போ…”

“நீ வரலியா சோமு?…”

“அப்புறமா வாரேன்… நான் வரட்டுமா மாமா…” என்று சொல்லிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் சோமு. கிட்டு மாமாவையும் பாக்கியத்து அத்தையையும் நினைத்தபோது ரொம்பச் சங்கடமாக இருந்தது.

கிட்டு மாமாவுக்கு கடையில் அப்பா என்ன பெரிய சம்பளம் கொடுத்து விடுவார். அவரால் அந்தக் கடையில் அவ்வளவுதான் கொடுக்க முடியும். “ஹாஜிசோ” மாதிரி அப்பாவுடைய ஜவுளிக் கடை ஒன்றும் பிரம்மாண்டமான ஜவுளிக் கடையல்ல. அந்தக் காலத்திலிருந்தே, ‘ராசியான கடை’ என்று சுற்றுக் கிராமங்களிலிருந்து சில குடும்பங்கள் வந்து இன்னமும் அவர்களுடைய கடையில் ஜவுளி வாங்கிக் கொண்டு போகின்றன. அதுவும் அவர்கள் எந்த ஜவுளியை எடுத்தாலும், எல்லாவற்றையும் மனம் போனபடிக் குறைத்துக் கேட்பார்கள். ரொம்பவும் கறாராக அவர்களிடம் நடந்து கொள்ள முடியாது. நீக்குப் போக்காக நடந்து கொள்ளவில்லையென்றால் வாங்க மாட்டார்கள்.

பாக்கியத்து அத்தை எப்படியோ கிட்டு மாமா சீட்டாடியது, லாட்டரிச் சீட்டு வாங்கியது போக வீட்டுக்குத் தரும் பணத்தில் சமாளிக்கிற மாதிரித்தான் அப்பாவும், குத்தாலத்து அண்ணனும் சேர்ந்து, வருகிற கடை வருமானத்தில் குடும்பத்தையும், வியாபாரத்தையும் சமாளிக்கிறார்கள். அம்மா பாக்கியத்து அத்தை வீட்டுக்குக் கண்டும் காணாமலும் ஏதாவது உதவி செய்யத்தான் செய்கிறாள். ஆனால், அதெல்லாம் அந்தக் குடும்பத்துக்குப் போதுமா? தங்கம் பள்ளிக்கூடம் போகிறாள். அவளுடைய படிப்புச்செலவு வேறு இருக்கிறது. அவனுடைய குடும்பம் மட்டுமா கஷ்டப்படுகிறது? எத்தனையோ குடும்பங்கள் இப்படித்தான் அல்லாடிக் கொண்டிருக்கின்றன. ஊர் பூராவும், நாடு பூராவும்.

சுதந்திரம் வந்து இத்தனை வருடங்களாகி விட்டன. யாரும் பெரிய முன்னேற்றமடைந்த மாதிரித் தெரியவில்லை. ஜனங்கள் எதையாவது விற்பனை செய்து வாழ்க்கை நடத்துகிறார்கள். இல்லையென்றால் மாதச் சம்பளத்துக்கு வேலை செய்து காலத்தை ஓட்டுகிறார்கள். யாருக்கும் போதுமான வருமானம்கூட இல்லை. அதனால்தான், ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுகிறோம் என்று வாக்குறுதி கொடுத்த கட்சிக்கு, அதை நம்பி ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தார்கள். காங்கிரஸ் போய் தி.மு.க. வந்தும் ஜனங்களுடைய வாழ்க்கையில் எந்தப் பெரிய மாற்றமும் இல்லை. சர்க்கார் இலவசமாகப் பள்ளிக்கூடங்களை நடத்துகிறது, ஆஸ்பத்திரிகளை நடத்துகிறது, இவை மட்டும் போதுமா? துணிமணி, வீடு, சாப்பாடு எல்லாம் அவர்களேதான் தேடிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

மேல மாசி வீதியும் மேலக் கோபுரத் தெருவும் சந்திக்கிற முனையில் பிருந்தாவன் ஹோட்டல் வாசலில் இருந்த எலெக்ட்ரிக் கம்பத்தில், தி.மு.க. பொதுக்கூட்ட விளம்பரத் தட்டிகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்துக் கொண்டே இடது புறம் திரும்பி வீட்டைப் பார்க்க சோமு நடந்தான். எத்தனை கட்சிகள். காங்கிரஸ், தி.மு.க., சுதந்திரா, முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட், சோஷலிஸ்ட் என்று எத்தனை கட்சிகள். கம்யூனிஸ்ட் கட்சியிலேயே இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி, வலது-இடது என்று. எத்தனை பேச்சு. பேச்சு, பேச்சு ஓயாத பேச்சு.

பத்திரிக்கைகளுக்கும் குறைவில்லை. வார, மாத, தினசரிப் பத்திரிக்கைகள் என்று கணக்கெடுத்தால் தமிழ்நாட்டில் ஒரு நூறு பத்திரிகையாவது வெளி வரும். சுதந்திரம் இருக்கிறது. ஆனால், சுதந்திரம் சோறு போடவில்லை. சபாபதியிடம் இதைச் சொன்னால், மனிதனுடைய வாழ்க்கையில் சோறு மட்டுமே முக்கியம் என்பார். சௌராஷ்டிரா சந்தில் திரும்பியதுமே மீனாட்சி பதற்றத்தோடு வந்து கொண்டிருந்ததைப் பார்த்தான். சற்றுத் தள்ளி வந்து கொண்டிருக்கும்போதே மீனாட்சி அவனைப் பார்த்து, “நீங்க எங்க போயிட்டு வாறீங்க. சரோஜாவைக் காணலை…” என்றாள்.

“சரோஜாவைக் காணலையா? நான் வெளியே கிளம்பும்போதுகூட மச்சுப்படியிலே உக்காந்து இருந்தாளே… எங்க போயிட்டா…” என்றான் சோமு.

“எங்க போயிருக்கான்னு தெரியலை… வாங்க தேடுவோம்…” என்று அவன் கையைப் பிடித்து இழுத்தாள் மீனாட்சி.

“நான் கோபால் பிள்ளை தாத்தா வீட்டுக்குப் போயிட்டுத்தான் வாரேன்… வழியிலே எங்கியும் அவளப் பாக்கல…”

“நீங்க எதையாவது யோசிச்சுக்கிட்டே வந்திருப்பீங்க… கவனிச்சிருக்க மாட்டீங்க. கோவில் பக்கம் கண்டா போயிருப்பாளோ என்னவோ…”

சோமு அவளுடன் நடந்தான். திரும்பவும் அவளுடன் மேலமாசி வீதிக்கு வந்தான்.

அவனுக்கு எரிச்சலாக இருந்தது. வயிறு பசித்தது. வீட்டுக்குப் போய்ச் சாப்பிடலாம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தான். அதற்குள் இந்த சரோஜா களேபரம் வந்துவிட்டது.

“நீங்க பாட்டுக்கு நீங்க மூணு பெரும் அடுக்களையே கதின்னு இருந்திருப்பீங்க. அவ மேல ஒரு கண்ணு இருக்க வேண்டாம்?…” என்றான். மீனாட்சி அவனுக்குப் பதில் சொல்லவில்லை. அவள் பதற்றத்தில் இருந்தாள்.

“ஒரு ஆளைத் தேடுததுக்கு ரெண்டு பேர் எதுக்கு?…” என்றான் சோமு.

“தங்கச்சியக் காணலையேன்னு ஒங்களுக்குப் பதறலையா?”…” அவர்களுக்கு எதிரே வந்து கொண்டிருந்தவர்கள் சோமுவையும் மீனாட்சியையும் ஒரு மாதிரியாகப் பார்த்தவாறு கடந்து போனார்கள். மீனாட்சிக்கு நெற்றி, கழுத்தெல்லாம் வியர்த்திருந்தது. மேலக்கோபுர வாசல் தெருவும் மேலமாசி வீதியும் சந்திக்கிற இடத்தில் நடைபாதையில் இருந்த பூக்காரி மீனாட்சியைப் பார்த்து, “என்ன தாயி பூ வாங்கலியா?…” என்று கேட்டாள். “அப்புறம் வாங்கறேன்… எங்க வீட்டு சரோஜாவைப் பாத்தியா கமலம்?…” என்று கேட்டாள் மீனாட்சி.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதேன் இப்பிடியே போச்சுது…” என்று கையை நீட்டிக் காண்பித்தாள் கமலம். அவள் காட்டிய திசையில் கோபால் பிள்ளை தாத்தாவுடைய வீடுதான் இருக்கிறது. அவர் வீட்டுக்கு முன்னால் ஒரு சந்து போகிறது. அதில் போனால் பாக்கியத்துச் சித்தி வீட்டுக்குப் போய் விடலாம். ஒருவேளை அங்கே போயிருப்பாளோ என்று மீனாட்சி நினைத்தாள். மீனாட்சிக்கு கண் கலங்கி விட்டது.

மனதுக்குள் கடவுளை வேண்டிக் கொண்டாள். “ஏங்க, பாக்கியத்துச் சித்தி வீட்டுக்குப் போயிருப்பாளோ?” என்று சோமுவிடம் கேட்டாள்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாலேதான் கிட்டு மாமாவைப் பாத்தேன். அவன்கூட ஒன்னும் சொல்லலியே?…”

“எங்க பாத்தீங்க?”

“லாட்டரிச் சீட்டு கடை முன்னாலே”

“ஒரு வேளை கிட்டுச் சித்தப்பா கெளம்பினதுக்கு அப்புறமா அவங்க வீட்டுக்குப் போயிருப்பாளோ?…” என்று சொல்லிக்கொண்டே பாக்கியத்தின் வீட்டை நோக்கிச் செல்ல ஆரம்பித்தாள். சோமுவுக்கு தங்கச்சியைக் காணவில்லை என்றதும் எந்தப் பதற்றமும் ஏற்படவில்லை. இதற்கு முன்பும் சில முறை அவள் காணாமல் போய் திரும்பக் கிடைத்திருக்கிறாள். அது மாதிரித்தான் இப்போதும் நடக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. “கடனே” என்று மீனாட்சியுடன் அவனும் நடந்தான்.

மாவு மில்லைத் தாண்டியபோது சந்து முனையில் பாக்கியம் சரோஜாவின் கையைப் பிடித்துக்கொண்டு வந்து கொண்டிருந்தாள். அவர்களைப் பார்த்ததும் மீனாட்சி ஓடோடிச் சென்று சரோஜாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள். சரோஜாவின் திறந்த வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது.

“சித்தி ஒங்க வீட்டுக்குத்தான் தேடி வந்துக்கிட்டு இருக்கோம்… நல்ல வேளை…” என்றாள் மீனாட்சி.

“தங்கத்தைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிட்டு வாசல்ல நின்னு தெருவடி வீட்டம்மாவோட பேசிக்கிட்டு இருக்கேன்… இவ வந்து நிக்கா… நல்லவேள, வேற எங்கியும் போகாம இங்க வந்தாளே. நீ தனியாவாட்டி வந்தேன்னு கேட்டேன். பேப்பர் ரோஸ் பூ ஒங்க வீட்டுல இருக்குல்லா… அதப் பாக்கனும்னு சொன்னா. ஏட்டி, அம்ம கிட்டச் சொல்லிட்டு வந்தியான்னு கேட்டா, ஒண்ணுஞ் சொல்லாம பேப்பர் ரோஸ் கொடிக்குக் கீழே போயி நின்னுக்கிட்டு கையத் தட்டிச் சிரிக்கா… சரி இவ எப்பிடியும் சொல்லாமத்தான் வந்திருப்பா… நீங்க தேடக் கூடாதேன்னு கதவப் பூட்டிக் கூட்டிக்கிட்டு வாரேன்.. அதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் வந்துட்டிய…” என்றாள் பாக்கியம். மீனாட்சியின் பதற்றம் இன்னும் தணியவில்லை. சரோஜாவை நெஞ்சோடு நெஞ்சாக அணைத்துக் கொண்டிருந்தாள். சோமு, “வேற எங்க போயிரப் போறா?” என்றான்.

“சித்தி, வீட்டுக்கு வாங்களேன்.”

“அதான், சரோஜாவை ஒன்கிட்ட ஒப்படைச்சிட்டேனே. தென்னமரத்தாச்சி வீட்டுல போயி தொசக்கி அறைச்சிக் குடுக்கணும். சாயந்தரமா தங்கம் பள்ளிக்கூடம் விட்டு வந்த பொறவு வாரேன்… பிள்ளையப் பத்திரமா கூட்டிட்டுப் போங்க,” என்றாள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.