என்ன நடக்கிறது ஹெராக்ளிட்டஸ் நதியில்?

காமம்

கிளர்ந்து கிளர்ந்து
அடங்க மறுக்கிறது
தீ.

தீ
மையல் கொள்கிறது
தீயின் மேல்.

தீயின்
உயிர் விறகா
தேகம்?

தேகம் பற்றி
உள்ளங் காலிலிருந்து உச்சித் தலை வரை தீ கனல
உயிர் ஒளிர்கிறது..

இல்லை
உயிர் வளர்க்கிறது
தீயை.

தீயில்
ஜனனம்.

தீயில்
முடிவு.

தீ
அணைவதில்லை..

தீயை
அணைக்க முடியாது.

தீயின்
கங்கு
கடவுளின் கண்.

~oOo~

என்ன நடக்கிறது ஹெராக்ளிட்டஸ் நதியில்?

ஓடும் நதியோடு கூடப் போகாது கரையில் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு என்ன செய்கிறது இந்த மரம்?
எதை அறியக்
கடுந்தவம் நோற்கிறது?
தன்னை அறியவா?
தான் இருக்கும் விதம் ஓடும் நதியில் தேடித் தேடி இன்னும் தெளிவாகவில்லையா?
ஒரு தடவையாவது ஓடும் நதியில் இறங்கிப் பார்த்தாலென்ன?
நதியில் வைக்கும் முதல் எட்டுக்கும் இரண்டாம் எட்டுக்கும் இடையில் உண்மை இருக்கலாம் என்று ஊகிக்க முடியவில்லையா?
ஏனிந்தத் தயக்கம்?
ஏன் பிடித்த பிடிப்பின் மேலேயே விடாத பிடிப்பு?
ஓடி ஓடி நதி ஒரு மீனை அதே மீனாய்ப் பிடிக்கப் பார்த்தும்
நழுவி ஓடும்
மீனைப் பார்த்தும் புரியவில்லையா?
உண்மையறிந்த மீன் அதனால் தான் நதியை விட்டு
வீணாய்க் காத்திருக்கும் கரை ஒதுங்குவதில்லை என்பது தெரியவில்லையா?
உண்மை தேடிக் காடு போனாலும்
மரம்
கடுந்தவம் தான் நோற்க முடியும்?
கடைத்தேறும் வழி அறியுமா?
மனம் போன படி நிலம் நடக்கும் நதிக்கு கிறுக்கு பிடித்திருக்கிறதென்று நின்ற இடத்திலேயே
கொக்கு போல் நிற்கும் மரம்
எதைக் கொத்தியது?
யோசித்து யோசித்து திகைத்துக் கிளை விட்டது தான் மிச்சம்.
கூப்பிட்டுப் பார்த்தும் கூட வராத நெட்டை மரத்திற்கா கவலைப்படப் போகிறது நதி?
யார் யாரோ மூழ்கி எழுகிறார்கள் நதியில்.
யாரை நினைவு வைத்திருக்கும்
நதி?
யார் தான் நினைவு வைத்திருக்க முடியும் ஒரே நதியானாலும் அதே நதியில்லாத நதியை?
எதையும் வேடிக்கை பார்த்துச் செல்லும் நதியை என்னைப் போல் தான் ஒரு வேளை மரமும் நின்று வேடிக்கை பார்க்கிறதோ?
என்ன நடக்கிறது இந்த ஹெராக்ளிட்டஸ் நதியில்?

One Reply to “என்ன நடக்கிறது ஹெராக்ளிட்டஸ் நதியில்?”

Comments are closed.